• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செம்புலப் பெயல் நீர் - 2

Vishakini

Moderator
Staff member

செம்புலம் 2

தேனூர்:

தனது போனிலிருந்து மேதினூருக்குப் போக டிக்கெட் புக் பண்ணிய கதிர், அங்கே வயலில் நடக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவனது சிந்தனையெல்லாம் தன் உடன்பிறந்தவளின் மேலேதான் இருந்தது. 'ஆத்தா பேச்சி... எதுக்கு அவளுக்கு இப்படி ஒரு சோதனையை கொடுத்த? நினைவு தெரிந்த நாளிலிருந்து உன்னைத்தானே சுத்தி சுத்தி வந்தாள். அதற்காகவா இந்தத் தண்டனை?' என்று புலம்பிக் கொண்டிருக்க, நேரமும் கடந்து சென்றது.

வேலை செய்த ஆட்களும் கலைந்து செல்வது தெரிந்தது. பின்னர் தனது நினைவுகளிலிருந்து வெளியே வந்தவன், பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்துவிட்டு, வரப்பில் நடந்து போனவன் "மாமா!" என்று கூப்பிட, "சொல்லு மாப்பிள்ளை," என்றார் சேகர்.

"இந்தா மாமா... ரெண்டு நாள் சம்பளத்தோடு நாளைக்கு டீ, வடை வாங்கச் சேர்த்து இருக்கிறது. ராத்திரிக்கு நான் கிளம்புறேன், நீ பார்த்துக்கோ," என்று சொல்ல, "சரி அப்பு. ஒன்றும் பிரச்சினை இல்லையேடா?" என்றார்.

"இல்லை மாமா. தங்கச்சிக்குப் பிரசவம் ஆகிடுச்சாம். மருமகள் பிறந்திருக்கான்னு அப்பா சொல்லுச்சு," என்றான்.

"அடி சக்கை! மகாலட்சுமி வந்தாச்சா? நல்லது, நல்லது. பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க. அதிர்ஷ்டக்காரிதானே!" என்றவர், "புள்ளை பிறந்த நேரம் என் தங்கச்சி மகளுக்கு நல்லது நடக்கட்டும்," என்று கண் கலங்கினார்.

அப்பொழுது வேலையாட்கள் சிலர் அவர்களை நோக்கி வருவது தெரிந்து "சரி மாமா," என்கவும் அவரும் சுதாரித்துக் கண்களை துடைத்தார்.

பின்னர் ஆள்களுக்கான சம்பளத்தை அவர்களிடம் பிரித்துக் கொடுத்தவர், கதிரோடு பேசிக்கொண்டு வீட்டை நோக்கிச் சென்றார்.

"சரி மாமா, நான் வீட்டுக்குப் போறேன்," என கதிர் சொல்ல, "ம்ம்... உன் அத்தையை நேரத்தோட சோறு எடுத்துட்டு வரச் சொல்றேன். அங்க எப்படி இருக்குன்னு பார்த்துட்டு போன் போடுயா," என்றார்.

ஹம் மாமாயென தனது பார்வைக்காக ஏங்கியபடி ஜன்னலில் தெரியும் உருவத்தைக் கண்டும் காணாமல் அங்கிருந்து சென்றுவிட்டான் கதிர்.

தன்னவனின் பின்தோற்றத்தைப் பார்த்துக் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தாள் கதிரின் மாமன் மகளும் ஆருயிர் காதலியுமான மீனாட்சி.

இருவரும் சேர்ந்து சிரித்த நாட்களும், திருட்டுத்தனமாகச் சந்தித்த நாட்களும் இருவருக்கும் நினைவிற்கு வர, மீனாட்சியோ வாயை மூடி கதறி அழுதாள். 'உன் தங்கச்சி எவன் கூடயாவது கெட்டுப்போய் புள்ளை வாங்கிட்டு வந்துட்டே இருப்பாள், நம்ம கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருங்கள்' என்ற வார்த்தை கதிரின் காதுக்குள் ஒலிக்க, இரும்பு போல இறுக்கமானவன் வேகமாக அங்கிருந்து போனான்.

"கலா!" என்றவாறு உள்ளே வந்த சேகர் மனைவியைத் தேட, தந்தையின் குரலில் கலைந்த மீனாட்சி, கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

எங்கத்தா அம்மா?.

"பவி அத்தையோட அம்மா இறந்துட்டாங்கன்னு சாவுக்குப் போயிருக்காங்கப்பா. குளிக்க வெந்நீர் வச்சிருக்கேன் பா," என்றாள்.

"அப்படியாத்தா? கதிர் ஊருக்குக் கிளம்புறான், சீக்கிரம் சோத்தைப் போட்டு வை. அதுக்குள்ள நான் குளிச்சிட்டு வந்துடுறேன்," என்றவாறு தோட்டத்திற்குப் போனார்.

'என்னாஆஆஆ... மாமா ஊருக்குப் போறாங்களா? என்னவா இருக்கும்? ஒருவேளை அப்படி இருக்குமோ?' என்ற யோசனையோடு சமையற்கட்டிற்குள் சென்றவள், சமைத்த உணவுகளை வாளியில் வைத்து மூடியவள், பின்னர் ஆறிப்போயிருந்த டீயை மீண்டும் சூடு பண்ணி எடுத்து வர, சேகரும் குளித்துவிட்டு வந்தார்.

"இந்தாங்கப்பா," என டம்ளரை நீட்ட, அதை வாங்கும் போது "சேகரு... சேகரு..." என்னும் குரல் கேட்க, "என்ன பாலு குரல் போல இருக்கிறது?" என்றவாறு எட்டிப் பார்க்க, அங்கு, பக்கத்து ஊரிலிருந்த அவரது நண்பர் பாலுதான் வந்து கொண்டிருந்தார்.

"அடேய், வாடா பட்டாளத்தான்! எப்போடா வந்த?" என்க, "காலையில்தான்டா," என்றார்.

"வாங்க மாமா," என மீனாட்சி சொல்ல, "வந்துட்டேன் மருமகளே," எனச் சிரித்தவர், "இந்தாத்தா," எனத் கையிலிருந்த பையை நீட்டினார். அதை வாங்கிக் கொண்டு உள்ளே போனவள், மீதமிருந்த டீயைக் கொண்டு வந்து பாலுக்குக் கொடுத்தாள்.

"கலா எங்கேடா?" என பாலு கேட்க, நண்பனிடம் விஷயத்தைச் சொன்ன சேகர், "யம்மாடி, உன் மாமன் ரெண்டு வருஷம் கழிச்சு இப்போதான் வந்துருக்கான். நாங்கள் பேசிட்டு இருக்கிறோம். நீ போய் கதிருக்குச் சோத்தைக் கொடுத்துட்டு வா," என்றவாறு நண்பனோடு அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு பேசலானார் சேகர்.

பெருமூச்சு விட்டுத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள், வேகமாகத் தனது அறைக்குள் போய் அங்கிருந்த கண்ணாடியில் ஒருமுறை தன்னைப் பார்த்துக் கொண்டாள்.

எல்லாம் சரியாக இருந்ததும் என்ன புண்ணியம்?, அவன்தான் உன் நிழலை கூட பார்க்க மாட்டானேனு மனசாட்சி சொல்லவும் உள்ளுக்குள் வலித்தது. என்ன செய்ய என் தலைவிதியென கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டவள் பின்னர் தூக்குவாளியை எடுத்துக்கொண்டு, அப்பாவிடம் சொல்லிக்கொண்டு பக்கத்துத் தெருவிலிருக்கும் அத்தை வீட்டை நோக்கிப் போகவும், "எங்கடியம்மா போற?" என்று சிலர் கேட்க, "கதிர் மாமாவுக்குச் சாப்பாடு," என்றவாறு சென்றாள்.

திண்ணையில் உட்கார்ந்துகொண்டு வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த மரகதமோ, அங்கே வருபவளைப் பார்த்து, "என்னடி, தாலி கட்டுறதுக்கு முன்னாடியே என் பேரனை மயக்கப் பார்க்கிறாயோ?" எனக் கேட்க, "ஆமாம், உன் பேரனை மயக்கி இந்த இடுப்புல சொருகிக்கப் போறேன்," என்று முறுக்கி காட்டினாள் மீனாட்சி.

"ஆமாடி, அதிலென்ன சந்தேகம்?" என்றார் மரகதம். "இங்க பாரு அப்பத்தா, என் வாயைக் கிளறாதே. அம்மா ஊர்ல இல்லை, அதான் நான் சோறு எடுத்து வந்தேன்," என்கவும், "ஆம்பளை மனசுல இடம் பிடிக்க முதல் அஸ்திவாரம் இந்தச் சோறுதான்டி. பார்த்துச் சூதானமாக நடந்துக்கோ, போ," என்றவர், வாயிலிருந்த வெற்றிலைச்சாரை சற்றுத் தள்ளிப் போய் துப்பிவிட்டு வந்தார்.

"ஆத்தா பேச்சி!" என்றவாறு வீட்டிற்குள் போனாள் மீனாட்சி. அது அந்தக்காலத்து உள்முற்றம் வைத்த ஓட்டு வீடுதான், ஆனால் இரண்டு அடுக்கு கொண்டது. ஒவ்வொரு தூணிலிருக்கும் ஓவியங்களைப் பார்க்கவே பசியெடுக்காது. இன்றும் அதைப்பார்த்து வியந்தவாறு டைனிங் டேபிளின் மேல் வாளியை வைத்துவிட்டுத் தன்னவனைத் தேட, "அப்பாயி... அப்பாயி..." என்னும் குரல் கேட்டது. உள்ளே இருக்கும் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், "ஆத்தா வெளியே இருக்காங்க," என்றாள் மீனாட்சி.

'என்ன இவள் குரல் போலக் கேட்குது?' என வெளியே வந்தான் கதிர். அப்பொழுதுதான் குளித்திருந்ததால், உழைப்பில் முறுக்கேறிய தேகத்தில் அங்கங்கே நீர் திவலைகள் பூத்திருக்க, மடித்துக் கட்டிய கால்களில் சுருண்ட முடிகள் தெரிய, வெறுமையான மார்பைப் பார்த்தவளோ, "அய்யோ!" என்றவாறு திரும்பிக் கொண்டாள். திரும்பி நிற்பவளை ஒரு பார்வை பார்த்தவன், பின்னர் அறைக்குள் போய்விட்டான்.

சிறிது நிமிடங்கள் கடந்திருக்க, ஊருக்குப் போகத் தயாராகி வந்தவன், டைனிங் டேபிளுக்கு வந்து உட்கார்ந்து தட்டை எடுத்துத் தட்ட, அந்தச் சத்தத்தில் திடுக்கிட்டு நிகழ்வுக்கு வந்தவளோ நிமிர்ந்து பார்க்க, கதிர் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

வேகமாகப் போய்க் கையை கழுவிட்டு வந்தவள், வாளியைத் திறந்து அதிலிருந்த உணவைப் பரிமாறினாள். சில மீட்டர் தொலைவில் நிற்பவளின் தலையிலிருக்கும் மல்லிகைப்பூ வாசமோ கதிரின் மனதை அசைத்துப் பார்த்தது. எதுவும் சொல்லாமல் இடது கையைத் தூக்கிச் சைகை காட்டியவன், ஒரு வாய் பிசைந்து வாயில் வைக்கும்போதே சமைத்தது யார் என்று தெரிந்துவிட்டது.

பின்னர் சாப்பிட்டு எழுந்தவன் "அப்பாயி!" எனக் கூப்பிட, மரகதமோ தோட்டத்திலிருக்கும் மாடுகளுக்கு வைக்கோல் அள்ளிப் போட்டுக் கொண்டிருந்ததால் பேரன் கூப்பிட்டது காதில் விழவில்லை.

முந்தானையின் நுனியால் விரல்களைப் பிசைந்தவாறு கீழே குனிந்து நிற்பவளைப் பார்த்துவிட்டு அவளை நோக்கி வந்தான். அவனது நீண்ட கால்களின் வேகத்தைப் பார்த்தவளோ பின்னாடியே நகர்ந்து போனாள். அவள் நின்ற இடமோ கதிர் அறைக்குப் போகும் வழி என்பதால், பின்னாடியே நகர்ந்து வந்தவள் அங்கிருந்த சோபாவில் இடித்துக் கீழே விழப்போக, எட்டி அவளின் கையைப் பிடித்தவன், பயத்தில் துடித்துக் கொண்டிருக்கும் தன்னவளின் இதழ்களைச் சிறைபிடித்தான்.

ஆத்திரத்தையெல்லாம் வன்மையாகக் காட்டிவிட்டு நிதானமாக விலகியவன், "இதுக்காகத்தானே வந்தாய்? சந்தோஷமா? இல்லை அதுவும் வேண்டுமா?" என அங்கிருந்த கட்டிலைக் காட்டிக் கேட்க, தன்னவனிடமிருந்து ஒரு வருடத்திற்குப் பின்னர் கிடைத்த முத்தத்தில் வெட்கத்தோடு நின்றவளின் தலையில் நெருப்பைக் கொட்டியது போலிருக்க, வந்த அழுகையை முந்தானையால் மறைத்துக் கொண்டு அங்கிருந்து போய்விட்டாள் மீனாட்சி.

பின்னல்கள் ஆட வேகமாகப் போகுபவளைச் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தவனின் வலது கைகளோ, அங்கிருந்த சுவரில் குத்திக் கொண்டிருந்தது.

மேதினூர்:

"நம்ம பேத்திக்கு நம்ம வாங்கிக் கொடுக்கணும், நீங்க போங்க," என்றவர் தனது மகளின் தலையில் தடவிக் கொடுத்தாலும், கண்களிலிருந்து கண்ணீர் வராமல் இல்லை.

குழந்தையோ தனது கோழிக்குண்டு கண்களைச் சுருக்கிச் சுருக்கிப் பார்த்தவாறு படுத்திருக்க, பேத்தியைப் பார்க்கப் பார்க்க வள்ளிக்கு ஆசை தாங்கவில்லை. 'தனது மகள் குழந்தையாக இருக்கும்போது பேத்தியைப் போலவேதானே இருந்தாள்' என்று நினைத்துக் கொண்டவருக்கு, உள்ளுக்குள் ஒரு வலி வந்தது.

"அம்மாடி வள்ளி!" என்று பானுமதி கூப்பிடவும், தனது கண்களைத் துடைத்துக்கொண்டு திரும்பியவர், "சொல்லுங்கம்மா," என்க, "நாம கொஞ்சம் வெளியில இருக்கலாமா?" என்று வாசலில் நிற்கும் பேரனைப் பார்த்துக்கொண்டே சொல்லவும், வள்ளியும் எதுவும் பேசாமல் அவர்கள் பின்னாடியே வெளியே சென்றார்.

"பாரி, நாங்க வெளியே வெயிட் பண்றோம்," என்று தனது பேரனின் தோளைத் தட்டிச் சொல்லிய ராஜவேலு அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சற்று தள்ளிப் போனார்.

சிறிது நேரம் வாசலில் நின்றவன், பின்னர் உள்ளே வர, கால்களோ தடுமாறின. எதற்குமே இதுவரை அவன் பயந்ததில்லை; ஆனால் தற்போது அந்தப் பத்துக்குப் பத்து அறையில் நுழைவதற்கு அவ்வளவு தடுமாற்றம்.

தயக்கத்தோடு அங்கே படுத்திருப்பவளின் அருகில் போனவன், மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருப்பவளின் கன்னத்தைத் தொடப் போகும் போது, குழந்தை சிணுங்கியது. அதில் பட்டென்று கையை எடுத்துக்கொண்டவனுக்கு, தனது மகளின் அழுகையை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் முழித்தவன் பின்னர் தொட்டிலை ஆட்டிக் கொடுக்கவும், அந்தச் சுகத்தில் குழந்தையும் தூங்க ஆரம்பித்தது.

அப்பொழுது அவனது போனுக்கு அழைப்பு வரவும், அந்தச் சத்தத்தில் குழந்தை அழுமோ என்ற பயத்தில் வேகமாகத் தனது பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து யார் என்று பார்க்காமல் சுவிட்ச் ஆஃப் பண்ணி வைத்தவன், "ஹூப்" என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு அங்கே படுத்திருப்பவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே வந்து தனது தாத்தா பாட்டியைப் பார்க்க,சற்றுத் தூரத்தில் இருக்கும் நாற்காலியில் நால்வரும் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

செம்புலம் தொடரும்..

 
Top Bottom