செம்புலம் 20
மேதினூர்:
எடுத்து வைத்ததையெல்லாம் மீண்டும் ஒரு முறை கயல் செக் பண்ண, "மாமா போகலாமா?" என்றவாறு மாறன் வந்தான். "கிளம்ப வேண்டியதுதான் மாப்பிள்ளை" என்றவர், "கயலு..." என்கவும், "இதோங்கப்பா" என வெளியே வந்தவள் பேச்சியாத்தாளின் முன்பு கண்மூடி வணங்கினாள்.
மரகதம் அப்பாயியோ, "ஆத்தா! நீதான் எம் புள்ளைகூட துணைக்கு இருக்கணும்" என்றபடி கயலின் நெற்றியில் விபூதி, குங்குமத்தைப் பூசி விட்டார்.
பின்னர் கண்களைத் திறந்தவள், "போயிட்டு வரேன் அப்பாயி" என்க, "சரி கண்ணு. பார்த்துச் சூதானமா இருக்கணும்" என்றார். "ம்ம்" என்றவள், "மாமா - அத்தை" என்றவாறு சேகர் - கலா காலில் விழ, "மகராசியாகப் போயிட்டு வா கண்ணு" என்றவரோ பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்க, சிரித்துக்கொண்டே வாங்கிக் கொண்டாள்.
லக்கேஜை கொண்டு போய் மாறன் டிக்கியில் வைக்க, வள்ளி - கயல் இருவரும் பின்னாடி உட்கார, மாறனுக்குப் பக்கத்தில் மணி உட்காரவும், காரும் பஸ் ஸ்டாண்ட் நோக்கிச் சென்றது. அரைமணி நேரத்தில் அங்கு வந்து சேர, பஸ்சும் தயாராக இருக்கவும் மாறனிடம் சொல்லிக்கொண்டு உள்ளே போனவர்கள் அவர்கள் பர்த்தில் போய் உட்கார்ந்த சிறிது நிமிடத்தில், பஸ்சும் அங்கிருந்து மேதினூரை நோக்கிப் புறப்பட்டது.
மேதினூர் - அந்தப் பெயரிலேயே ஒரு சிலிர்ப்பு இருந்தது கயல்விழிக்கு.அதிகாலையில் தூக்கம் கலைந்து எழுந்தவள் பேருந்து அந்த மலை வளைவுகளில் மெல்ல ஏறித் திரும்பியபோது, ஜன்னல் வழியே தெரிந்த காட்சியோ மெய்மறக்கச் செய்தது. அரசுப் பணியில் சேர்ந்த பிறகு அவளுக்குக் கிடைத்த முதல் ஊர் இது. ஒரு இளம் பெண்ணாக, அதிகாரியாகப் பொறுப்பேற்க வரும் அவளுக்கு அந்த ஊர் ஒரு மாயாஜால உலகம் போலத் தெரிந்தது.
மலைகளின் ராட்சத நிழல் ஊர் முழுக்கப் படிந்திருக்க, மேகங்கள் மலையோடு முட்டி மோதி விளையாடிக்கொண்டிருந்தன. பேருந்து நிறுத்தத்தில் தனது பெற்றோர்களோடு இறங்கியதும், அவளை முதலில் வரவேற்றது சில்லென்ற மலைக் காற்றுதான்.
பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வந்தவர்கள் அங்கிருந்த ஆட்டோ நிறுத்தத்தைப் பார்க்க, "நீங்க ரெண்டு பேரும் இங்கே இருங்க, நான் போய் கூப்பிட்டு வரேன்" என்று மணியும் சிறிது நிமிடத்தில் ஒரு ஆட்டோவோடு வர, அதிலிருந்த ஆட்டோ ஓட்டுநரோ இவளைப் பார்த்து அதிரவும், அதைக் கவனிக்கும் மனநிலையில் அவள் இல்லை.
பின்னர் மூவரும் ஆட்டோவில் ஏறிக்கொண்டனர். டிரைவர் அவ்வப்போது கண்ணாடி வழியாகக் கயலைப் பார்த்துச் சிந்தனையானான்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்னை மரங்களும், பாக்குத் தோப்புகளும் பச்சை கம்பளம் விரித்தது போல இருக்க, ஒரு பக்கம் மலையிலிருந்து வழிந்தோடி வரும் சிற்றோடைகளின் சலசலப்புச் சத்தம், ஒரு மெல்லிய இசை போல அவளுக்குக் கேட்டுக் கொண்டிருந்தது. முதல் நாள் பெய்த மழையில் நனைந்த செம்மண்ணின் வாசம், அவளுக்குள் ஒரு புதுத் தெம்பைக் கொடுத்தது.
ஆட்டோ தெருவுக்குள் வரவும் வீடுகள் எல்லாம் ஓடு வேய்ந்தவையாக இருந்தன. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அழகிய கோலங்களும், மலை அடிவாரத்துக்கே உரிய அந்த அமைதியும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. "இவ்வளவு அழகான ஊருக்குச் சேவை செய்யக் கொடுத்து வச்சிருக்கணும். இந்தப் பசுமையும், மலையும் எனக்கு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கு," என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
தெருவின் கடைசியாக இருக்கும் கூரை வீட்டின் முன்பு வந்து ஆட்டோவை நிறுத்தியவர், "இந்த ரோடு வழியா போனாக்க பெரியவர் ராஜவேலு ஐயா வீடு இருக்கு" என்கவும், லக்கேஜோடு மூவரும் கீழே இறங்கினர். பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்த காமாட்சி பாட்டி மட்டுமில்லை, தெருவிற்குள் ஆட்டோ வந்ததைப் பார்த்து யாரு என்று எட்டிப் பார்த்தவர்களும் கயலைப் பார்த்து அதிர்ந்தனர்.
"தாயி நீ..." என்றவாறு வந்த காமாட்சி பாட்டி கேட்க, "வணக்கம்ங்க அம்மா. நாங்கள் தேனூரில் இருந்து வரோம். இது என் பொண்ணு கயல்விழி, இந்த ஊருக்குப் புதுசா வந்திருக்கிற வி.ஏ.ஓ" என்று மணி சொல்ல, "அப்படியா... உள்ளே வாங்கப்பா" என்று தனது வீட்டிற்கு அழைத்துப் போனவர் அடுப்பில் இருந்த வரகாப்பியை வடிகட்டி எடுத்து வந்து மூவருக்கும் கொடுத்த பாட்டியின் பார்வை கயல் மேல் தான் இருந்தது.
"ரொம்ப நன்றிங்க அம்மா. இந்த பெட்டிகள் இங்கு இருக்கட்டும், நாங்கள் போய் பெரியவரைப் பார்த்துவிட்டு வருகிறோம்" என்று மணி எந்திரிக்க, "அப்பா... நீங்களும் அம்மாவும் இங்கு இருங்கள், நான் போயிட்டு வருகிறேன்" என்றாள் கயல். "தாயி..." என்ற காமாட்சி பாட்டி பின்னர் மலரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல, "சரிங்க பாட்டி, நான் பார்த்துக்கிறேன்" என்றவளோ, ஊர் முக்கியஸ்தரான ராஜவேலுவின் வீட்டை நோக்கிச் சென்றாள்.
முன்னூறு மீட்டர் தொலைவிலிருக்கும் அந்தப் பெரிய மாளிகை போன்ற வீட்டை ரசனையோடு பார்த்துக்கொண்டே, இளமைத் துடிப்புடன் ஒரு அரசு அதிகாரிக்கே உரிய மிடுக்கோடு உள்ளே நுழைய, கயல்விழியைப் பார்த்த ராஜவேலு கையில் இருந்த பேப்பரை அப்படியே நழுவ விட்டார். அவர் கண்கள் விரிந்தன; உடல் நடுக்கமுற்றது. நான்கு வருடங்களுக்கு முன்னால் இறந்து போன தனது பேரன் பாரியின் மனைவி 'மலர்விழி' உயிர் பெற்று நேரில் வந்து நிற்பது போல அவருக்குத் தோன்றியது. அதே நெற்றி, அதே கண்கள், அதே தீர்க்கமான பார்வை!
"மலர்... நீயா? நீ எப்படிமா? செத்துப்போனவ எப்படித் திரும்ப வந்த?" என்று வாய் உளறி, பதறிப்போய் எழுந்தவர், "பானுமதி!" என்று கத்தினார். அவரது இந்த நிலையைப் பார்த்த கயல்விழி பின் சுதாரித்துக் கொண்டவள், "ஐயா... பதறாதீங்க. என் பேரு கயல்விழி. இந்த ஊருக்குப் புது வி.ஏ.ஓ-வா வந்திருக்கேன். நீங்க யாரை நினைச்சு இப்படிப் பதறுறீங்கன்னு எனக்குத் புரியுது..." என்றாள்.
கணவரின் பதற்றமான குரலைக் கேட்டு ரூமிலிருந்து வேகமாக வந்த பானுமதியும், உள்ளே நிற்பவளைப் பார்த்து அதிர்ந்து போனார்.
இருவரையும் பார்த்தவள், “நீங்கள் யாரை நினைத்து இப்படிச் சொல்கிறீர்கள் என்று தெரிகிறது. இந்த ஊருக்குள் வந்த உடனேயே 'உன்ன மாதிரியே ஒருத்தங்க இந்த ஊர்ல இருந்தாங்க'ன்னு காமாட்சி பாட்டி சொல்லி கேள்விப்பட்டேன்.
உலகத்துல ஒரே ஜாடையில ஏழு பேர் இருப்பாங்கன்னு சொல்லுவாங்க இல்லையா? அது நிஜம்தான்னு இப்போ உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது. எனக்கும் அவங்களுக்கும் எந்த உறவுமுறைத் தொடர்பும் இல்லை. இது வெறும் முகச்சாயல் ஒற்றுமை மட்டும்தான் ஐயா" என்றாள்.
அவள் நிதானமாகச் சொன்னதைக் கேட்ட ராஜவேலு மெல்லத் தணிந்தார். ஆனாலும், மலரே அதிகாரியாகத் திரும்பி வந்து தங்களிடம் பேசுவது போன்ற பிரமை அவர்களுக்கு இன்னும் விலகவில்லை. "என்னதான் சம்பந்தம் இல்லைன்னு நீ சொன்னாலும், அந்த முகமே இங்க அதிகாரமா வந்து நிக்கிறது ஏதோ ஒரு கணக்குதான் தாயி..." என்று பெருமூச்சு விட்டார்.
"ஐயா, பழைய நினைவுகள் உங்களை வருத்தப்பட வச்சிருந்தா மன்னிச்சுடுங்க. நான் இந்த ஊரோட நிர்வாகப் பொறுப்பை ஏத்துக்கிட்டிருக்கேன். மேதினூர் பத்தி நீங்க சொல்லித்தான் நான் முழுசா தெரிஞ்சுக்கணும்," என்று பணிவாகவும் அதே சமயம் உறுதியாகவும் கேட்டாள். வேகமாக அவளின் அருகில் வந்த பானுமதி, "நீ எந்த ஊரிலிருந்து வந்திருக்கம்மா?" என்க, "தேனூர்" என்றாள்.
எப்படி இது சாத்தியம்? உருவ ஒற்றுமை அப்படியே இருக்கிறது. ஆனால் மலருக்குக் கொஞ்சம் சுருட்டை முடி; கயலுக்கு நீளமான நேர் முடி இடுப்பைத் தாண்டி இருந்தது. கலர் என்று பார்த்தால் ஒரே நிறம். இது மலர் இல்லை என்று நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இதே நிலைதான் வீட்டில் இருந்த வேலைக்காரர்களுக்கும்.
டீ எடுத்து வந்து வேலைக்காரர் கொடுக்க, அப்போதுதான் அவளை நிற்க வைத்துப் பேசிக்கொண்டிருப்பது புரிந்து, "உட்காருமா" என்றனர்.
"நன்றிங்க ஐயா" என்றவள் டீ வேண்டாம் என்று சொல்லிவிட, ராஜவேலு அந்த ஊரின் நிலப்பரப்பை விளக்கத் தொடங்கினார். "இது மலை அடிவாரம்ங்கிறதால ராத்திரி நேரத்துல காட்டுப்பன்றி, சிறுத்தை நடமாட்டம் அதிகமா இருக்கும். விவசாயிங்க ராத்திரியில நிலத்துக்குப் போகவே பயப்படுறாங்க. மலையில மழை பெய்ஞ்சா, அந்தத் தண்ணி மொத்தமும் எங்க ஊர் வழியாத்தான் ஓடும். ஆனா, ஓடைகள்ல ஆக்கிரமிப்பு அதிகமா இருக்கிறதால தண்ணி ஊருக்குள்ள புகுந்துடுது. மலையடிவாரத்துல இருக்குற சுனைகள்தான் எங்களுக்குத் தண்ணி. முறையான குழாய் வசதி இல்லாததால மேட்டுப்பகுதி ஜனங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க."
"ஐயா, மலை அடிவாரத்துல இருக்கிற ஊர்னா அது ஒரு வரப்பிரசாதம். ஆனா, இயற்கையையும் மக்களையும் இணைக்கிற அந்தப் பாலம்தான் இப்போ உடைஞ்சு போயிருக்கு. முதல்ல அந்த ஓடைகளைச் சீரமைக்கணும். விலங்குகள் ஊருக்குள்ள வராம இருக்கிறதைப் பத்தி வனத்துறையோட பேசறேன்," என்று உறுதியாகச் சொன்னவள், வி.ஏ.ஓ தங்குவதற்காக ராஜவேலு தனது சொந்தச் செலவில் கட்டியிருந்த வீட்டின் சாவியை வாங்கிக் கொண்டாள்.
"எந்த உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளும்மா" என்க, "கண்டிப்பாகங்க ஐயா" என்றவள் மேலும் சிறிது நிமிடங்கள் பேசிவிட்டு வீட்டிற்கு வந்தாள்.
அங்கு காமாட்சி பாட்டியின் வீட்டில் பேசிக் கொண்டிருந்த வள்ளி - மணி இருவரும் மகளைப் பார்த்துவிட்டு எழுந்தனர். பக்கத்தில் இருக்கும் கேட்டைத் திறந்து உள்ளே போக, பல வண்ண மலர்கள் பூத்துக்குலுங்க, ஓங்கி வளர்ந்த மரங்களுடன் இருக்கும் அந்த வீட்டைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.
பின்னர் வீட்டிற்குள் போய் பார்க்க, வீடு சுத்தமாகத்தான் இருந்தது. சமையலுக்குத் தேவையான அடுப்பு, சிலிண்டர், அத்தியாவசியப் பாத்திரங்களும் இருக்கவும், மூவரும் மீண்டும் ஒரு முறை வீட்டைச் சுத்தம் செய்தனர். அப்போது காமாட்சி பாட்டியும் அங்கு வந்தார்.
அவரிடம் பொதுவாகப் பேசிக்கொண்டே வேலையை முடித்துவிட்டு, நல்ல நேரத்தில் பால் காய்ச்சி சாமி கும்பிட்டுவிட்டு, பாட்டிக்கு ஒரு கிளாஸில் பால் கொடுத்தாள் கயல்.
"நீங்கள் எதுவும் வெசனப்படாமல் இருங்க. நான் என் பேத்தியைப் பார்த்துக் கொள்கிறேன்" என்கவும், "அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்குதுங்க அம்மா" என்றனர்.
செம்புலம் தொடரும்...
Author: Vishakini
Article Title: செம்புலப் பெயல் நீர் - 20
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: செம்புலப் பெயல் நீர் - 20
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.