• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செம்புலப் பெயல் நீர் - 27

Vishakini

Moderator
Staff member

செம்புலம் 27

மேதினூர்:



மெடிக்கல் ஷாப்பில் பிரக்னன்சி டெஸ்ட் கிட் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தவள், கைகள் நடுங்கச் சோதித்துப் பார்த்தாள். சிறிது நொடிகளில் அதில் இரண்டு கோடுகள் வரவும், தனது வயிற்றில் கையை வைத்துக்கொண்டு சுவற்றில் சாய்ந்து அழுதாள். அதைப் பார்த்த காமாட்சி பாட்டிக்கும் வேதனையாகத்தான் இருந்தது.



காமாட்சி பாட்டி, தன் மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவளைப் பார்க்கச் சென்றிருந்தார். அதனால் அன்று கயல் மட்டும் வீட்டில் தனியாக இருந்தது. ஒரு மாதம் கழித்துத் திரும்பி வந்தவர் விஷயத்தைக் கேள்விப்பட்டு, நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.



இதில் ஒரு விஷயம் என்னவென்றால், ஊரிலிருந்து கிளம்புவதற்கு முன்பு பேச்சியம்மன் கோயிலுக்குப் போன கயல், "என் வாழ்க்கையில் விளையாடி முடித்தது போதுமா? இன்னும் இருக்கா? 'கெட்டுப்போனவள்' என்ற பெயரை வாங்கிக் கொடுத்துட்டியே! நினைவு தெரிந்த நாளிலிருந்து 'ஆத்தா ஆத்தா' என்று உன்னைத் தேடி வந்தேனே, அதற்கு இதுதான் நீ கொடுத்த தண்டனையா?" என்று கேட்டவள் அங்கிருந்த வேப்ப மரத்திலிருந்து ஒரு மஞ்சள் கயிற்றை எடுத்துத் தன் கழுத்தில் முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்த மகளைப் பார்த்த பெற்றோருக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.



"கடவுள் அவள் தலையில் என்ன எழுதியிருக்கிறாரோ? " என்று கண்ணீர் வடித்தனர்.



தற்போது அவள் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்து, புறப்பட்டு வந்தவர்கள் அதைச் கலைக்கச் சொன்னதற்கு அவள் "முடியவே முடியாது" என்று சொல்லிவிட்டாள். இதில் கோபப்பட்ட கதிர், தன் தங்கையை கண்மண் தெரியாமல் அடித்துவிட்டான்.



"அண்ணா, நீ என்னை எவ்வளவு அடித்தாலும் பரவாயில்லை. நான் எந்தத் தப்பும் பண்ணல. அதேபோல என் வயிற்றில் வளரும் இந்தச் சிசு என்ன பண்ணுச்சு? அதைத் தயவுசெய்து கலைக்கச் சொல்லாதே அண்ணா" என்று அவள் அழவும், "எப்படியோ போய்த் தொலை?" என்றவன், வேலையை விட்டுவிட்டு ஊரிலேயே தங்கிவிட்டான்.



சரி கடைசியாக ஒருமுறை பேசி பார்க்கலாம் என்று முடிவு பண்ணிய கயல், அன்று மாலை பாரியின் எஸ்டேட்டிற்கு வர, கதவைத் தட்டி உள்ளே வந்த பி. ஏ, சார் நம்ப ஊர் வி.ஏ.ஓ மேடம் உங்களை பார்க்க காத்திருக்கிறார்கள் என்கவும் இதை எதிர்பார்க்காத பாரி ஒரு நிமிடம் யோசித்து விட்டு உள்ளே வர சொல்லுங்கள் என்றான்.



சிறிது நொடியில் கதவை திறந்து உள்ளே வந்தவளோ, அவளின் வருகையைக் கண்டும் காணாதது போல் இருந்தவனிடம், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள்.



”எனக்குள்ள இப்போ ஒரு உயிர் வளருது. அதுக்கு நீங்கதான் அப்பா..." என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் பாரியின் கண்கள் சிவக்கவும், கையில் இருந்த பேனாவை மேசையில் ஓங்கி அடித்தவன், யாரோ ஒருத்தனோட குழந்தைக்கு என்னை இனிஷியல் அப்பனா இருக்கச் சொல்றியா?"



"நான் கொலைகாரனாக மாறுவதற்குள் இங்கிருந்து வெளியே போடி தரங்கெட்டவளே?" என்று கத்தினான்.



ஆனால் கயல் அசையவில்லை. கயலின் விழிகளில் இப்போது கண்ணீர் இல்லை; மாறாக, ஒரு தாயின் ஆக்ரோஷமும், வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் நெருப்பும் சுடர்விட்டன. பாரி அவளை "தரம் கெட்டவள்" என்று சொன்ன அந்த வார்த்தை, அவளுக்குள் இருந்த மென்மையான கயலைச் சுட்டெரித்துவிட்டது. மெதுவாகத் தன் வயிற்றைத் தடவிக்கொண்டே நிமிர்ந்து நின்றாள்.



பாரியின் கண்கள் அவளைப் பார்க்க ஒரு நொடி அஞ்சியது என்பதே உண்மை..



"இவ்வளவுதானா நீங்க? அன்னைக்கு அந்த இருட்டுல ஒரு மிருகமா என்கிட்ட நடந்துகிட்டப்போ இருந்த தைரியம், இன்னைக்கு உண்மையை ஏத்துக்கறதுல இல்லையா?"



இருட்டுல நடந்ததை இருட்டே மறைச்சுடும்னு நினைக்காதீங்க. காலத்தை விடப் பெரிய சாட்சி எதுவுமே இல்லை. என்றைக்காவது ஒருநாள் உண்மை வெளியே வரும்.



"அன்னைக்கு, நீங்க கதறி அழுதுக்கிட்டு என்கிட்ட வருவீங்க. உங்க வாரிசை ஒரு தடவை பார்க்க மாட்டோமான்னு தவிப்பீங்க. ஆனா, அன்னைக்கு இந்த கயல் உங்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டா. என் குழந்தைக்குத் தகப்பனா உங்களைச் சொல்லிக்கவே நான் அருவருப்பப்படுவேன் என்றவளோ தலையை நிமிர்த்தி அந்த அறையை விட்டு வெளியேறினாள்.



நாட்கள் நகர, வயிறும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பித்தது. அவள் வேலைக்குப் போயிட்டு வரும்போதெல்லாம் காரில் செல்லும் பாரிக்கு அவளைப் பார்த்தால் கொலைவெறி வந்தது. 'என் ஆசைநாயகியாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் என்னிடமே சொல்லியிருக்கலாமே? இப்படி எவன்கிட்டயோ கெட்டுப்போயிட்டு, எதுக்குடி என்னை இதற்குக் காரணமாக்கினாய்?' என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.



தற்போது கயலுக்கு ஏழாவது மாதம் நடந்து கொண்டிருந்தது. பெற்ற மனம் கேட்காமல், தனது அண்ணா - அண்ணியை அழைத்துக்கொண்டு மேதினூருக்கு வந்த வள்ளி, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களைக் கூப்பிட்டு வளைகாப்பு நடத்தி வளையல் போட்டுவிட்டார்.



"மாமா, நான் கயலோடு இங்கேயே இருக்கிறேன்" என்று வள்ளி சொல்ல, "நான் இருக்கிறேன், நீ ஏன் கவலைப்படுற? நம்ம பிள்ளையைப் பார்த்துக்க வள்ளி" என்று கலா சொல்லவும், "அண்ணி!" என்று அவர் கையைப் பிடித்துக்கொண்டு அழுதார். "அழாதே... கடவுள் எல்லாத்துக்கும் ஒரு விடிவு காலம் வச்சிருப்பார். அதுவரைக்கும் நாம பொறுமை காத்துதான் ஆகவேண்டும்" என்று சொல்லிவிட்டு அவர்கள் ஊருக்குப் போய்விட்டனர். காமாட்சி பாட்டியும் வள்ளியும் கயலைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டனர்.



தற்போது கயலுக்கு ஒன்பதாவது மாதம் ஆரம்பித்திருந்தது. வயிறும் பெரிதாகத் தெரியவும், "மகாலட்சுமிதான் பிறக்கப்போறான்னு நினைக்கிறேன்" என்று பாட்டி சொல்ல, "கடவுள் சித்தம்மா" என்றார் வள்ளி. திடீரென கலெக்டர் ஆய்வுக்கு வந்ததால், கயலுக்கு அன்று வேலை முடிந்து வீட்டிற்கு வர வழக்கத்தை விடத் தாமதமானது. அவ்வப்போது வாசலுக்கு வந்து வள்ளி எட்டிப் பார்க்க, "பிள்ளை வந்துடும் வள்ளி, பதறாதே" என்றாலும் பாட்டிக்கும் கவலை இல்லாமல் இல்லை.



எஸ்டேட்டில் இருந்த பாரிக்கு வெளிநாட்டிலிருந்து அழைப்பு வந்தது. வழக்கம் போல நலம் விசாரிக்கத்தான் என்று நினைத்து அட்டெண்ட் செய்தவனுக்கு, அந்தப் பக்கம் சொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியாக இருந்தது. "தாரணி அழாதே, நான் உடனே கிளம்பி வரேன்" என்றவன், ஏர்போர்ட்டில் இருக்கும் தனது நண்பனுக்குக் கால் செய்து லண்டன் போக டிக்கெட் கேட்டான். அவன் செக் பண்ணிப் பார்த்துவிட்டு, "நேரடி பிளைட் இல்லை, கேரளா போயிட்டு அங்கிருந்து போவது போல் இருக்கிறது" என்று சொல்ல, "சரி மச்சி, நீ டிக்கெட் போடு" என்றான்.



பின்னர் வேகமாகக் காரை எடுத்துக்கொண்டு வரும்போது, சற்று தூரத்தில் பெரிய வயிற்றைச் சுமந்துகொண்டு கயல் போவதைப் பார்த்தவனுக்கு முதல் முறையாக அவளை நினைத்துப் பாவமாக இருந்தது. இருந்தாலும் அவசரமான சூழல் என்பதால் வேகமாக அவளைக் கடந்து சென்றவன், அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் பயப்படும்படி ஒன்றுமில்லை என்று தனது தாத்தா பாட்டியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றான்.



ஏர்போர்ட்டில் இருந்து நேராக மருத்துவமனைக்குச் சென்றவனோ அங்கு பெட்டில் படுத்திருந்த தந்தையைப் பார்த்தவன், "அப்பா" என்று போய் அவர் கையைப் பிடித்தான்.



"அலவா... எனக்கு ஒன்னும் இல்லைடா. வெறும் மயக்கம்தான். உன் அம்மாதான் ரொம்பப் பயந்துட்டாள்" என்றார் சேயோன். "எப்ப பார்த்தாலும் பிசினஸ் பிசினஸ்னு, கொஞ்சம் கூட உங்க அப்பா உடம்பைக் கவனிக்கிறது இல்லை" என்று அங்கிருந்த காஞ்சனா அழ, "அம்மா!" என்று அதட்டினான் பாரி.



எல்லாச் சோதனைகளும் முடிந்த பிறகு, "ஒன்றுமில்லை, உடலுக்கு ஓய்வு தேவை. வேளா வேளைக்குச் சாப்பிட வேண்டும்" என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.



மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்த பிறகுதான் கபிலன் மற்றும் முகிலனை அழைத்துக்கொண்டு பவதாரணியும் வர, பிள்ளைகளைத் தூக்கிப் பாரி முத்தமிட்டான்.



பாரி வந்து இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. "அலவா" என்று சேயோன் கூப்பிட, லேப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவன், "சொல்லுங்கப்பா" என்றான்.



"அந்தப் பொண்ணு கயல்விழி இன்னும் அங்கேயே இருக்காளா?" என அவர் கேட்க, "ஆமாம்பா, எங்கேயோ கெட்டுப்போயிட்டு இப்போ வயிற்றைத் தள்ளிக்கிட்டு இருக்கிறாள். நாளைக்கு நான் கிளம்புறேன்" என்றான்.



தேனூர்:



மீனாட்சி தனது டீச்சர் டிரைனிங் கோர்ஸை முடித்துவிட, அவளுக்கு அதே ஊரில் இருக்கும் அரசாங்கப் பள்ளியில் வேலை கிடைத்துவிட்டது.



தெரிந்தவர்கள் எல்லாரும், "ஏன் இன்னும் உன் கல்யாணப் பேச்சை எடுக்காமல் இருக்கிறார்கள்? ஏற்கனவே பேசி முடித்தது தானே?" என்று கேட்டுக்கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் கோபம் வந்த மீனாட்சி, எப்போதும் தனது மாமனை சந்திக்கும் இடத்தில் அவனுக்காகக் காத்திருந்தாள்.



அன்று கதிர் வயலில் கடுமையான வேலை செய்ததால் சோர்வாக வந்தான். இருந்தும் மீனாட்சியைப் பார்த்ததும் அவன் நிற்க, அவள் அவன் சட்டையைப் பிடித்தவள் "இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மாமா இப்படி அமைதியாக இருக்கப் போறீங்க? இப்படி எவன்கிட்டயோ கெட்டுப்போயிட்டு உன் தங்கச்சி பிள்ளை தாங்கிட்டு வருவா... அதற்காக நம்ம கல்யாணத்தைத் தள்ளிப் போடணுமா? என்ன பண்ணுவீங்களோ தெரியாது, அடுத்த முகூர்த்தத்தில் எனக்குத் தாலி கட்டியாகணும். இல்லனா நான் உயிரோடு இருக்க மாட்டேன்" என்றாள். மீனாட்சியின் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தையைக் கேட்டதும் கதிர் அந்த நிமிஷமே நொறுங்கிப் போனான்.



"சொல்லுங்க மாமா, இன்னும் எத்தனை நாளைக்கு வாயை மூடிட்டு இருக்கப் போறீங்க?" என்று அவள் சட்டையைப் பிடித்து உலுக்க, 'பட்' என்று அவள் கையைத் தட்டிவிட்டவன், எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றான். அவன் போன பிறகுதான், தான் என்ன பேசினோம் என்பதை யோசித்த மீனாட்சி தலையில் அடித்துக்கொண்டாள்.



அதன் பின்னர் வந்த நாட்களில், மீனாட்சி இருக்கும் திசைப் பக்கமே கதிர் திரும்பிப் பார்க்கவில்லை. எத்தனையோ முறை அவனிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டாள், ஆனால் அவள் நிழலைக்கூட அவன் பார்க்க மறுத்துவிட்டான்.



செம்புலம் தொடரும்...

 
Top Bottom