செம்புலம் 34
லண்டனில் இருக்கும்
தனது மேனேஜரிடமிருந்து கால் வந்ததால் வெளியே வந்து பேசிக்கொண்டிருந்த விக்ரமை நோக்கி வந்த சேயோன், அவன் பேசும் வரைக்கும் அமைதியாக அங்கிருந்த சேரில் உட்கார்ந்தவரின் முகத்தில் சந்தோஷம் நிரம்பி வழிந்தது.
மகனின் வாழ்க்கை எங்கே இப்படி தனிமரமாகவே போய்விடுமோ என்று அவர் வருத்தப்படாத நிமிடங்களே இல்லை. எத்தனையோ முறை இன்னொரு கல்யாணம் பற்றி பேசலாமென்று அவர் முயற்சி செய்து தோற்று விட்டார். ஆனால் இதோ தன் மகன் மீண்டும் குடும்பஸ்தன் ஆகியதை பார்த்து அவரது உள்ளம் பூரித்து போயிருந்தது.
விக்ரமும் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவன் அப்புறம் மாம்ஸ்... முகத்தில் பயங்கரமான ஒளிவட்டம் தெரியுதே என்ன சங்கதி என்றான்.
அது வந்து விக்கி... எப்படி சொல்றதுனா என்று சேயோன் தடுமாற, யோவ் மாமா... என்ன தண்ணி அடிச்சிருக்கியா? என்னமோ திக்குவாயன் போல இப்போ தான் பேச இழுக்குற என்கவும், அடேய் நான் உன் மாமனார் டா என்று சேயோன் முறைக்க, ஆமா..பொல்லாத மாமனாரு.
அந்த நார் இல்லைனு யார் சொன்னால்?. என்ன சங்கதி அதை சொல்லும் என்கவும், விக்கி... இன்னைக்கு நம்ப பாரிக்கு சடங்கு ஏற்பாடு பண்ணனும் டா. நீதான் அவன் கிட்ட சொல்லணும். அப்படியே நீயும் தாரணியும் அந்த ரூமை அலங்காரம் பண்ணிடுங்க.
அலங்காரம் பண்ண தேவையான பூவெல்லாம் வரவச்சாச்சு என்றார்.
அதைக்கேட்டவன் எதே என்க, ம்ம்ம். நீ அவனுக்கு மச்சான் மட்டும் இல்லை. அவருடைய ஆருயிர் நண்பன். இருண்டு கிடந்த அலவன் வாழ்க்கையில் இப்போது தான் ஒரு பிரகாசம் வந்திருக்கிறது. அதை அணைய விடாமல் பார்த்துக்க வேண்டியது நம்ப பொறுப்பு தானே விக்கி என்கவும், ரொம்ப நெஞ்சை நக்காதைய்யா.
என்னமோ இவர் தேடி திரிந்து கண்டுபிடித்து கட்டி வச்சப்போல பகுமானம் வேற... சரி சரி நான் பார்த்துக்குறேன் என்பவனின் தோளை தட்டியவர், கொஞ்சமாவது மாமானார் என்ற பயம் இருக்காடா என்கவும், திரும்பவுமா?.
முதலில் த கிரேட் பிசினஸ்மேன் சேயோனுக்கு இந்த விக்ரம் அவருடைய ஆருயிர் நண்பனுடை மகன். அதன் பிறகு தான் மருமகன் என்றான்.
சரி விக்கி...என்று சிரித்துக்கொண்டே சேயோனும் அங்கிருந்து சென்றுவிட, இந்த ஐயனார் என்ன சொல்ல போறான்னு தெரியலையே?.
எதுக்கும் முதலில் ரூம் டெக்ரேஷனை முடித்துவிட்டு பிறகு மச்சான் கிட்ட சொல்லிக்கலாம் என்றவனோ வீட்டிற்குள் போய் மனைவியை தேட, அவள் அங்கு இருப்பது போல தெரியவில்லை.
எங்கே போனாள்?.
அப்பன் வீட்டுக்கு வந்தாலும் வந்தாள் புருஷன்காரன் ஒருத்தன் இருப்பதையே மறந்துட்டாள் என்று புலம்பிக்கொண்டே மாடிக்கு வர, தாரணி அங்கே பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது.
புருஷன் கூட விளையாட வேண்டிய வயசுல, புள்ளைங்க கூட விளையாண்டுகிட்டு இருக்காளே என்று தனது தலையில் தட்டி கொண்டே போனவன் பிள்ளைகள் துரத்துவதில் எதிரில் ஓடி வந்த மனைவியை எட்டிப்பிடித்தவன், ஏன் டி,என் கூட விளையாண்டாலும் ஒரு புண்ணியம் உண்டு.
இந்த வாண்டுகள் கூட விளையாடுறியேடி என்கவும், மாம்ஸ் என்று பல்லைக் கடித்த தாரணி, கொஞ்சம் கூட வெக்கமா இல்லையா?.சின்ன பிள்ளைங்க இருக்கும் போது என்ன பேசுறீங்க என்று முறைத்தாள்.
செல்ல குட்டிங்களா உங்க தாத்தா ஐஸ்கிரீம் வாங்கி வச்சிருக்காங்களாம். உங்களை கூப்பிடுறாங்க போங்க என்று சொல்ல, ஹேய் என்று குத்திக்கொண்டு வாண்டுகள் மூவரும் கீழே ஓடிவிட, ஒரு முக்கியமான வேலை இருக்கு வாடி என்று மனைவியை அழைத்துக்கொண்டு வலது பக்கமிருக்கும் ரூமிற்குப்போனவன் மனைவியிடம் விஷயத்தை சொல்ல, ம்ம்..
அத்தை என்கிட்டயும் சொல்லி அண்ணிக்கிட்ட சொல்ல சொல்லிருக்காங்க மாம்ஸ். சரி வாங்க வந்த வேலையை பார்க்கலாம் என்றவள் கவரில் இருக்கும் பூக்களை பிரித்து எடுத்தவள் முதலில் ரோஜா பூக்களால் பெட்டில் ஹார்டின் வடிவத்தை உருவாக்கி அதனுள் பூக்களை நிரப்பிவிட்டு மற்றதை பண்ணிக்கொண்டிருந்தாள்.
வட்ட கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவாம்...லண்டன்ல எவ்வளவு பெரிய பிசினஸ் மேன் நான்?எத்தனை ஆயிரம் பேரு எனக்கு கீழே வேலை செய்றாங்க?அப்படிப்பட்ட என்னை இப்படி முதலிரவு அறைய ஜோடிக்க விட்டுட்டாங்களே இந்த குடும்பம்?.இது என்னடா விக்ரமுக்கு வந்த சோதனை?
ஏற்கனவே மூணு புள்ள பெத்தவனுக்கு திரும்பவும் முதலிரவு ஏற்பாடு பண்றாங்களே இதெல்லாம் எங்கே அடுக்கும்.
இவ்வளவு பெரிய வீட்டுக்கு நான் ஒரே ஒரு செல்ல மாப்பிள்ளை. எனக்கும் கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆகுதே...இந்த வீட்டில் இருக்கும் யாருக்காவது எனக்கு ஒரு முதலிரவு ஏற்பாடு பண்ணனும்னு தோணிச்சா இல்லையே...
கட்டுன பொண்டாட்டிக்கே உன்ன பத்தி கவலை இல்லையே விக்ரம் இதில் மத்தவங்கள பத்தி என்ன சொல்றது என்றவாறு கட்டிலில் மல்லிகை பூவை தூவியவன், பைலையும் கம்ப்யூட்டரையும் பிடித்த கை இன்னைக்கு மல்லிகை பூ தூவுதே...
வெட்கம் அவமானம் வேதனை என்று கணவன் புலம்பிக் கொண்டிருப்பதை அங்கிருந்த தாரணியும் கேட்டு சத்தமாக சிரித்தாள்.
மனைவியின் சிரிப்பு சத்தத்தில் திரும்பி முறைத்தவன் உனக்கு சிரிப்பா தாண்டி இருக்கும். உனக்கு ஏன் சிரிப்பு வராது சொல்லு? கொஞ்சமாச்சும் புருஷனை பற்றி உனக்கு அக்கறை இருக்கா?.
நமக்கு ஒரு பையன் இருக்கிறானே அவனுக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ வேணுமே...அதுக்கு ஏதாச்சும் ஏற்பாடு பண்ணனும்னு தோணுதா என்று பல்லைக் கடித்தான்.
ம்கும்...மூணு நாளாக பொண்டாட்டி முகத்தில் இருக்கிற மாற்றத்தை கண்டுபிடிக்க துப்பு இல்லை இதில் பெரிய பிசினஸ்மேன்னு பீத்தாலம் வேற கேடு என்றாள்.
இது சரியாக விக்ரமின் காதில் விழவும் என்னடி சொன்ன என்று வேகமாக திரும்ப, தாரணியின் வெட்கம் கலந்த முகமோ அவனுக்கு ஏதோ ஒரு விஷயத்தை சொல்லாமல் சொல்லவும், வேகமாக வந்து மனைவியின் கன்னத்தை ஏந்தியவன் என்னடி விஷயம்? எனக் கேட்க, அவன் கைகளைப் பிடித்தவள், "மாம்ஸ்... ஆரியனுக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ வரப்போறாங்க," என்று மெல்லிய குரலில் கூறினாள்.
மனைவி சொன்னதை கேட்டு ஒரு நிமிடம் விக்ரம் அப்படியே சிலையாக நின்றான். லண்டனில் அவர்கள் திட்டமிட்டிருந்த பல வேலைகளுக்கு நடுவில், இது ஒரு அழகான எதிர்பாராத திருப்பம்.
பின்னர் சுதாரித்தவனின் முகம் பிரகாசமாகவும், யாகூ என்று கத்தியவாறு அவளை இறுக்க அணைத்துக் கொண்டான். "தேங்க்ஸ் தாரணி... இதைவிட ஒரு சந்தோஷமான செய்தியை இந்தத் திருமண வீட்ல நான் கேட்டிருக்க முடியாது," என்று அவள் காதோரம் முணுமுணுத்தான்.
பின்னர் அடுத்த கணமே அவனது அக்கறை மேலோங்கியது. "நீ ஏன் ஓடி ஓடி வேலை செஞ்ச? இனிமே நீ ஒரு இடத்துல அமைதியா உட்காரணும். லண்டன் போற வரைக்கும் உன்னை நான் ரொம்பப் பத்திரமா பாத்துக்கணும்," என்று அதிகாரமும் அன்பும் கலந்த குரலில் சொல்லியவன், ஆமாம், எப்போ கன்ஃபார்ம் பண்ணின?.
மூன்று நாள் ஆகுது என்று கீழே குனிந்து கொண்டே சொன்னாள்.
அதைக் கேட்டவன் என்ன என்று அதிர, ஆமா,அப்பவே சொன்னா எங்க அண்ணன் கல்யாணத்தில் என்னை ஒரு வேலையும் பார்க்க விட மாட்டீங்க. அதனால்தான் இன்னைக்கு சொல்லிக்கலாமென்று அமைதியாக இருந்தேன் என்றாள்.
ஓஹோ... மாஸ்டர் பிளான்...என்றவாறு தனது மனைவியின் வயிற்றில் தன் கையை வைத்தவன் அம்மு குட்டி, அப்பா கிட்ட பத்திரமாக வந்துடனும் என்றவாறு மனைவியை தூக்கி சுத்த,யோவ் கூறுகெட்ட மாம்ஸ் கீழ இறக்கி விடுயா.
ஏற்கனவே உன் புள்ளை வாந்தியா வரவச்சி என்னை படுத்துது என்கவும், விக்ரம் பிள்ளை என்றால் சும்மாவா என்று சிரித்தவன், மனைவியை இறுக அணைத்துக் கொண்டவனுக்கு, லண்டன் திரும்பும்போது அவர்கள் மூவராகப் போகவில்லை, ஒரு குட்டி தேவதையையோ தேவனையோ சுமந்துகொண்டு நான்காகப் போகிறார்கள் என்ற எண்ணமே விக்ரமின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.
ஒருவழியாக அலங்காரம் பண்ணிய அறையை பார்த்தவர்கள் எல்லாம் சரியா இருக்கு என்று கீழே வந்து விட்டனர்.
நேரமும் கடந்து செல்ல கயல் இருக்கும் ரூமிற்கு வந்த தாரணி விஷயத்தை சொல்லவும் எதுக்குங்க அண்ணி இதெல்லாம் என்று தயக்கத்துடன் கேட்க, ஒரு சம்பிரதாயம்தான்.மத்தபடி ஒன்னும் இல்லை என்று சிரித்தவள், குளிச்சிட்டு ரெடியாகுங்க என்று புடவை நகை இருக்கும் தாம்பாளத்தை அவளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றாள்.
மச்சான் ஒரு விஷயம் என்று விக்ரம் சிரிக்க, என்னடா பஸ்ட்நைட் ஏற்பாடோனு பாரி முறைக்க, அதே தான் மச்சான். பத்து மணிக்கு நல்லநேரமாம் என்கவும், ஏன் டா கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா?. இப்போது இது ரொம்ப அவசியமா என்று பல்லை கடிக்க, ஓஓஓஓ... தொரை மனசுல இந்த நினைப்பு வேறையா?.
மூஞ்சு மொகரைய பேத்துடுவேன். சும்மா ஒரு பார்மாலிட்டிஸ்கு தான் இந்த சடங்கு. ஏற்கனவே மூன்று பெத்துவச்சிருக்க இதில் இன்னொரு ஆளுக்கு எண்ணம்...படவா ராஸ்கல்...
இருவரும் மனசு விட்டு பேசுவதுக்கு தான் இந்த இரவு...அதை விட்டு ஓவரா கற்பனையில் குதிக்காத. எட்டி மிதித்தேன் குருத்தெலும்பு நொருங்கிடும். ஒழுங்கா போய் ரெடியாகுடா என்றவாறு அங்கிருந்து போன விக்ரமின் முகத்தில் சிரிப்புக்கு பஞ்சமில்லை.
செம்புலம் தொடரும்...