செம்புலம் 4
மேதினூர்:
ஹாஸ்பிடலில் இருக்கும் மகளுக்கும், கணவருக்கும் சமைப்பதற்காக வீட்டிற்கு வந்த வள்ளியோ, வீட்டைக் கூட்டி முடித்து வேகவேகமாக குளித்துவிட்டு துவைத்த துணிகளை காய வைப்பதற்காக கதவை திறந்து வெளியே வர, "அம்மாடி!" என்றவாறு வாசலில் இருக்கும் இரும்பு கதவை திறந்து வந்து கொண்டிருந்தார் பக்கத்து வீட்டிலிருக்கும் பவுனு பாட்டி.
"வாங்கம்மா," என்றவர், துணியை காய வைத்து விட்டு அவரோடு உள்ளே போனவர் ஒரு அடுப்பில் சாதத்திற்கான உலையையும் இன்னொரு அடுப்பில் டீயையும் வைக்க, "என்னாச்சு ஆத்தா?" என்றார் பாட்டி.
"அந்தப் பேச்சி புண்ணியத்தில் நல்லபடியாகப் பிரசவம் ஆகிட்டுங்கம்மா. பேத்தி பிறந்திருக்கா," என்கவும், "மலையாத்தா!" என்றவர், "சுகப்பிரசவம் தானே?" எனக் கேட்டார்.
"ஆமாங்கம்மா," அந்த ஆத்தா தயவில் நல்லபடியாக ஆகிட்டு என்றவர், தயாரான டீயை இரண்டு டம்ளர்களில் ஊற்றி, அவருக்கு ஒன்றைக் கொடுத்துவிட்டுத் தானும் குடித்து விட்டு அவரிடம் பொதுவாக பேசிக் கொண்டே சமையலையும் செய்து முடித்தவர், மூவருக்கும் தேவையான சாப்பாட்டை எடுத்து மூடி வைத்தார்.
பின்னர் பாட்டிக்கும் ஒரு பாத்திரத்தில் கொடுக்கவும், "நல்லாரு தாயி... புள்ளையை விசாரித்தேன்னு சொல்லுத்தா," என்று அவர் வாழ்த்திச் சென்ற பின்னர், வீட்டைப் பூட்டிக்கொண்டு மெயின் ரோட்டிற்கு வந்து நிற்கவும் சிறிது நிமிடத்தில் ஷேர் ஆட்டோ வர, அதில் ஏறி மருத்துவமனைக்கு வந்தார்.
சாப்பாட்டுக் கூடையோடு வேகமாக உள்ளே போக, அங்கே மணியோ தனது பேத்தியோடு வராண்டாவில் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.
வேகமாகப் போனவர், "என்ன மாமா, வெளியே வச்சுட்டு நிக்கிறீங்க? நமக்கே இந்த சாரல் ஆகாது... பிறந்த குழந்தை என்ன பண்ணும்?" என்று கோபமாகக் கேட்க, "ம்ம்... எனக்கு வேண்டுதல்டி," என்றவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
கணவர் சொல்லும் தோரணையிலும், ஏதோ சரியில்லை என்பதும் சற்றுத் தள்ளி உட்கார்ந்திருக்கும் முதிய தம்பதிகளைப் பார்த்ததும் வள்ளிக்கு புரிந்துவிட்டது.
"சரி, உள்ளே தூக்கிட்டு வாங்க," என்று கதவைத் திறந்து உள்ளே போனவர், "அம்மு!" என்று தனது மகளை கூப்பிட, கண்ணை மூடிப் படுத்திருந்தவளோ தனது தாயின் குரலில் பட்டென்று கண்களைத் திறந்தாள்.
"கொஞ்சம் காபி குடிடா," என்றவாறு கணவருக்கு ஒரு கிளாஸில் கொடுத்துவிட்டு, மகளுக்கு நன்கு ஆற்றியவர், பொறுமையாக அவளைத் தூக்கி சுவற்றில் சாய்ந்தவாறு உட்கார வைத்து டம்ளரை நீட்டினார். அவளோ தனது தாயைத் தான் பாவமாக பார்த்தாள்.
"குடி அம்மு. அப்பு வர்றான்," என்று மகளின் பார்வைக்குப் பதில் சொல்ல, "நிஜமாவா?" என்னும்போது அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
"ஆமாடி... அப்பாகிட்ட சொல்லிருக்கான். விடியற்காலை வந்துடுவான். நீ குடி," என்று மகளிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்த ரெஸ்ட் ரூமிற்குள் போய்க் கையை கழுவிட்டு வந்தவரோ புடவை முந்தானையில் ஈரத்தைத் துடைத்து விட்டு, கணவரிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு"தங்கப் பொண்ணு எதுக்குச் சிணுங்குறாங்க? தாத்தா திட்டிட்டாங்களா? மாமா வர்றான், அவன்கிட்டச் சொல்லி நம்ப தாத்தாவை அடிச்சிடலாம்," என்கவும், குழந்தைக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை, தனது கோலி குண்டு கண்களை மூடித் திறந்தது.
"என்னை பெத்த ஆத்தா!" என்றவாறு பேத்தியின் உச்சந்தலையில் முத்தமிட்டவர் மனம் ஏதேதோ நினைத்து உள்ளுக்குள் கலங்கியது.
பெட்டில் உட்கார்ந்திருந்தவளுக்கு தனது தாயின் கையிலிருக்கும் மகளைப் பார்க்கும்போது அவளது நினைவுகளும் பின்னோக்கிச் சென்றன.
நினைவுகள்-தேனூர்:
"ஏன் மரகதம், நம்ம காசி மகள் வள்ளியை மணிக்கு பார்த்தால் என்ன?" என்றவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார் பழனிச்சாமி.
"யாத்தே! அவளா?" என மரகதம் இழுக்க, "ஹா ஹா!" என்று சத்தமாக சிரித்தவர், "ஆயிரம்தான் இருந்தாலும் உன் அண்ணன் மகள் டி. அப்போ உன்னைப்போலத் தானே சின்ன வாய் இருக்கும்?" என்று பழனிச்சாமி சிரிக்க, "என்ன சொல்றீங்க?" என்று கணவரை முறைத்தார் மரகதம்.
"உண்மையைச் சொன்னேன் மரகதம். எங்கே, உன் மனசுல இப்படி ஒரு ஆசை இல்லைன்னு சொல்லு பார்க்கலாம்?" என்கவும், "நாம ஆசைப்பட்டா போதுமாங்க? வாழப்போற பிள்ளைங்ககிட்டக் கேட்கணும்," என்னும்போது உள்ளே வந்த மணி, அங்கிருந்த தனது அப்பாவைப் பார்த்தவன் "மருந்து போட்டாச்சுப்பா," என்க, "சரி கண்ணு, கையை கழுவிட்டு வந்து சோத்தைத் தின்னு," என்றவாறு சாப்பிட்டு எழுந்த பழனிச்சாமி கையை கழுவிவிட்டு வந்து நாற்காலியில் உட்கார்ந்தார்.
மணி, போர்க்கொட்டாயிலேயே குளித்துவிட்டு வந்ததால் ஈர உடையை மாற்றிக்கொண்டு, தலையைத் துவட்டியபடியே வந்து உட்காரவும், மவனுக்குப் பரிமாறினார் மரகதம்.
"நீ சாப்டியாமா?" என்க, "இல்லைப்பா, இனிதான்," என்றவாறு கீரையை அள்ளி மகனின் தட்டில் வைக்க, "ஏம்மா உனக்கு எத்தனை தடவை சொல்றது நேரத்துக்குச் சாப்பிடுன்னு? இப்படித்தான் பட்டினி கடந்து புண் வந்து அவ்வளவு அவஸ்தைப்பட்ட... இருந்தும் திருந்த மாட்டேன்ற பாரு," என்று தாயைத் திட்டிய மணி, "முதல்ல நீ சாப்பிடு, பிறகு நான் சாப்பிடுறேன்," என்று கையிலிருந்த சாதத்தைத் தட்டிலேயே போட்டான்.
அவனது செயலைப் பார்த்துப் பதறியெழுந்த மரகதம், வேகமாகச் சமையற்கட்டுக்குச் சென்று தட்டில் சாப்பாட்டைப் போட்டு வந்து மகனின் எதிரில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினார்.
இதையெல்லாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த பழனிச்சாமி, 'ஆடுற மாட்டையும் ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டையும் பாடிக் கறக்கணும்' என்பது போல, அதற்குத் தகுந்த ஆள் சொன்னால்தான் வேலை நடக்கும் என்று மௌனமாகச் சிரித்துக் கொண்டார்.
நான்கு வாய் அள்ளி வேகவேகமாக வாயில் வைத்த மரகதம், "ஐயா, நீயும் சாப்பிடு," என்கவும், "நீ முதல்ல சாப்பிட்டு முடி, பிறகு நான் சாப்பிடுறேன். இதுக்கு அப்புறமும் நீ இதே போலப் பண்ணினால் நான் சாப்பிடவே மாட்டேன்," என்று கோபமாக மணி சொல்லவும், "ஐயா, அப்படிச் சொல்லாதே... இனி நேரத்துக்கு நான் சாப்பிடுறேன்," என்றார்.
அதன் பிறகே மீதமிருந்ததைச் சாப்பிட்டு எழுந்தவன், கணக்கு நோட்டில் இன்றைக்கு எத்தனை ஆட்கள் வேலை செய்தார்கள், எவ்வளவு சம்பளம் கொடுத்தது என்று எழுதி முடிக்கவும் அவனுக்குத் தோள்பட்டை வலிக்கத் தொடங்கியது.
'உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது' என்ற பழமொழிக்கு ஏற்ப, தங்களது வயல்தானே என்று மணி வேடிக்கை பார்க்க மாட்டான். அவனும் ஒரு ஆளாக இறங்கி வேலை செய்வான். திரும்பி மகனைப் பார்த்த பழனிச்சாமி, "ஐயா!" என்கவும், "இதோ வர்றேன்ப்பா," என்று வராண்டாவிற்கு வந்த மணி, "சொல்லுங்கப்பா," என்று எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
"வர்ற வைகாசியோட உனக்கு இருபத்தைந்து முடியுது அப்பு. அதான் தையில் உனக்கொரு கல்யாணத்தைப் பண்ணிடலாம்னு இருக்கோம். உன் மாமன் மகள் வள்ளியைக் கேட்கலாம்னு என் மனசுக்குத் தோணுதுய்யா... நீ என்ன சொல்ற?"
திடீரென்று தந்தை இப்படிக் கேட்பார் என்று எதிர்பாராததால், ஒரு நொடி அவனுக்கு திக்கென்று இருந்தது. பின்னர் 'வள்ளி தான் மணமகள்' என்று நினைக்கும் போதே மனதிற்குள் ஓர் இதம் பரவியது.
மகனின் அமைதியைப் பார்த்தவர், "சொந்தத்தில் பொண்ணு வைச்சுக்கிட்டு வெளியே போய் பொண்ணு கேட்டா நாலு பேர் அதே கேள்வியை திருப்பி கேட்பாங்க. அது இல்லாம உன் அம்மாவுக்கும் அண்ணன் மகளைக் கட்டணும்னு ஆசை இருக்காதா? உன்னோட விருப்பம்தான் எங்களோட விருப்பம். கடைசி வரை வாழப்போறது நீ தான் அப்பு. வள்ளி வேண்டாமென்றால் சொல்லிடு, தரகர் கிட்டச் சொல்லி வேற பொண்ணு பார்க்கலாம். ஆனால் வரும் தையில் கல்யாணம் - அது மட்டும் உறுதி," என்றார்.
"அய்யோ அப்பா... எனக்குன்னு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லைங்கப்பா. உங்கள் ரெண்டு பேருக்கும் பிடித்திருந்தால் எனக்குச் சம்மதம்தான்," என்றான்.
"எலேய்! வச்சுக்கிட்டு குடும்பம் நடத்தப் போறது நீ," என்று சிரித்தவர், "என்ன செய்ய... என்னை போல உனக்கும் ஆண்டவன் இப்படி தான்னு எழுதிட்டானே.உன் அம்மாகாரி போல, அவள் அண்ணன் மகளும் ஏழு ஊர் வாய்தான்! ஆனாலும் உனக்கு ஏத்த மகராசி வள்ளிதான்ப்பா. பொறுப்பான பிள்ளை... உன்னைக் கண் கலங்காமல் பார்த்துக்கும்," என்கவும், "எதேஏஏ!" என்று மணி அதிர, அவரோ சத்தமாகச் சிரித்துவிட்டார்.
கணவரும் மகனும் பேசிக் கொண்டிருப்பதை கேட்ட மரகதம், ஆமா இந்த ஊர் உலகத்தில் நானும் என் மருமகளும் தான் வாயாடிங்க. உங்க குடும்பத்தில் உள்ள பொண்ணுங்களுக்கு பேச்சே வராது. எல்லாம் சாடையில் தானே பேசுவாங்க என்றவாறு துலக்க வேண்டிய உணவு பாத்திரங்களை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்று விட்டார்.
செம்புலம் தொடரும்..