சொல்லாமல் விட்டுச் சென்ற மின்னல்
அத்தியாயம் 1
அண்ணா நகர். வசதி படைத்தவர்களும் சாமானியர்களும் வாழும் வீதி அது. இரண்டு வீடுகளுக்கு நடுவே மிளிர்ந்தது அந்த மினி பங்களா. கீழ்தளம் முக்கால் வாசிக்குக் கார் பார்க்கிங் ஆக இருக்க. பின்பக்கம் சிறிதான தோட்டமும் இருந்தது. இரண்டுக்கும் இடையில் இருந்த கதவினை திறந்தால் வலப்பக்கமாகச் சிறிய மின் தூக்கியும் எதிர்ப்புறமாகப் படிக்கட்டும் தெரிந்தது.
இருக்கும் கால் வலிக்கு மின் தூக்கியிலேயே செல்வோம்.
(இத சொல்றது யாரு? நான் தான் ரைட்டர். உங்களுக்கு எல்லாரையும் அறிமுகப்படுத்தனும்ல்ல.? ஹி ஹி)
"சரி, சரி மின் தூக்கி ஏறியாச்சு." சிறிதான இடம்தான். நெருக்கிக் கொண்டு மூன்று பேர் நிற்கலாம். முதல் தளத்திற்கான பொத்தனை அழுத்திவிட்டு காத்திருக்க கூட நேரம் கொடுக்காமல் முதல் மாடிக்கு விரைந்து வந்திருந்தது அந்தச் சிறிய மின் தூக்கி. அதை விட்டு வெளியே வந்தால் இடது பக்கம் பாதி அளவுக்குக் கண்ணாடி வைத்த கதவு. வலது பக்கம் இரண்டாம் மாடிக்குச் செல்லப் படி.
முதல் மாடியை முதலில் பார்த்து விட்டு வருவோம். கதவைத் திறந்தவுடன் சாம்பிராணி வாசம் வீடு முழுவதும் பரவி நம் நாசியையும் நிறைத்தது. அது கூட மணி சத்தமும் காதை நிறைக்க, இடது ப்புறம் பார்த்தால் பக்திமயமாகத் தீபாரதனையை கையில் ஏந்தி. மணியை அடித்தபடி மும்முரமாக வாய் மந்திரங்களை உச்சரிக்க பால்கனியின் பக்கத்தில் சிறிதாக அமைத்திருந்த பூஜை அறையின் உள் நின்றிருந்தாள் பாவணி.
பெரிதாக வெங்கடாசலபதி வீற்றிருந்தார் சட்டத்திற்குள். இவள் தீபாரதனை காட்டி முடிக்கவும் குக்கர் விசில் சத்தம் கொடுக்கவும் சரியாக இருந்தது. வேகமாக நெற்றிக்கும் வகுட்டிருக்கும் குங்குமத்தை வைத்தவள் தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கனமான பத்து பவுன் தாலியிலும் லேசாகக் குங்குமத்தை வைத்து விட்டு அதைப் புடவையின் பின் மறைத்தபடியே வேகமாகச் சமையலறை நோக்கிச் சென்றாள்.
பூஜை அறைக்கு எதிர்ப்புறமாக இருந்தது சமையலறை. வரவேற்பறையையும் அதற்குப் பின்னான சிறிய உணவு அறையையும் தாண்டிச் சமையலறையின் உள் சென்றவள் அடுப்பை அணைத்து குக்கரை கீழே வைத்துவிட்டு. பக்கத்து அடுப்பில் வெந்து கொண்டிருந்த இட்லியில் கவனத்தை செலுத்தினாள். அதற்குப் பின் அவளின் நேரம் பரபரப்பாகச் சென்றது. சுட சுட இட்லி, தேங்காய் சட்னி, கேரட், பீன்ஸ் சேர்த்த சாம்பாரெனக் காலை உணவை முடித்து இருந்தவள் அனைத்தையும் உணவு மேஜையில் அடுக்கி விட்டு நேரத்தைப் பார்க்க, எட்டாகப் பத்து நிமிடம் என்றது அது.
உணவு அறையின் எதிர்ப்புறம் இருந்த படுக்கை அறையை மெதுவாகத் திறந்து பார்க்க, அவளின் மாமியார் சம்பங்கி அம்மாள் அப்போதுதான் எழுந்து அமர்ந்திருந்தார்.
"அத்த காரு காஃபி தீஸுக்குனி ரானா?”
(அத்தை காபி கொண்டு வரவா)
“மொகம் கடிகி வச்சேஸ்தா அம்மா.”
(முகம் கழுவிட்டு வரேன் மா)
“சரே அத்த”
(சரி அத்தை)
என்றவள் மற்ற வேலைகளையும் பார்த்துவிட்டு வீட்டு வேலைக்கு வந்த லட்சுமி அம்மாவிடம் பேசியப் படியே முதல் மாடியில் இருக்கும் தங்கள் அறையிலிருந்து கணவன் வருவதற்காகக் காத்திருந்தாள்.
சிறிது நேரத்தில் அவள் கணவன் நந்தகுமார் வரவேற்புரைக்கு வர அவனைப் பார்த்தவள்,
“வச்சாரா? த்வரகா ஸ்வாமினி நமஸ்கரிஞ்சு ரண்டி, நேனு டிபின் பெட்டுதானு.”
("வந்துட்டீங்களா சீக்கிரம் சாமி கும்பிட்டு வாங்க நான் டிபன் எடுத்து வைக்கிறேன்.") என்றபடி குவளையில் தண்ணீரை நிரப்ப,
"ஹ்ம்ம்." என்றபடி சாமி அறை நோக்கிச் சென்றார் அவர்..
நந்தகுமார்.
ஆர் என் மெட்டல்ஸ் என்ற பிரிண்டிங் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவரின் தந்தை ரங்கராஜன் நாயுடு இவரின் இளமைப் பருவத்தில் காலமாகி விட, தாய் சம்பங்கி அம்மாளுடன் வசித்து வருகிறார்.
பாவனி, இரு வீட்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் நந்தகுமாருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண். அன்பானவர். கணவன் பிள்ளைகள் மட்டுமே இவரின் உலகம். தெய்வ நம்பிக்கை சற்று அதிகம் உள்ளவர்.
பாவனியின் தாய் வீட்டு குடும்பம் சற்று வசதி படைத்தவர்கள் தான். காஞ்சிபுரத்தில் சொந்தமாகப் பட்டுத்தறி மற்றும் பட்டுப் புடவை கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பாவனிக்கு அன்னை இல்லை அவள் சிறு வயதாக இருக்கும் போதே தவறிவிட்டார். அவளின் உடன் பிறந்த அண்ணன்மார்கள் மொத்தம் ஐந்து பேர். அவர்கள் அனைவருக்கும் ஒற்றை தங்கையின் மீது பாசம் அதிகம் தங்கையாகப் பார்ப்பதை விட அவளை மகளாகவே பாவித்து அன்பு செலுத்தினார்கள் அனைவரும். அவர்களுக்குத் தப்பாமல் இவள்மீது அன்பு கொண்டிருந்தார்கள் அவர்களின் மனைவிமார்களும்.
நந்தகுமார்,பாவனி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.
பெரியவள் ரோஷினி நம் கதையின் நாயகி. இவளுக்கு மூன்று வயது இளையவன் ஹரிஷ் நாராயணன்.
அளவான, அழகான சிறிய குடும்பம். வசதி வாய்ப்பிற்கும் மகிழ்விக்கும் எந்தக் குறையும் இல்லை இதுவரை.
ரோஷினி பதினோராம் வகுப்பு இறுதி தேர்வில் இருக்கிறாள். ஹரிஷ் நாராயணன் எட்டாம் வகுப்பில் இருக்கிறான். இருவரும் பிரபல பள்ளியில் படிக்கிறார்கள்.
நந்தகுமாருக்கு தொழிலில் முன்னேறுவதில் கவனம் இருந்தாலும் மனைவி, பிள்ளைகள் அம்மாவிற்கு என எப்போதும் நேரம் ஒதுக்கி விடுவார். அத்துடன் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ தன் பள்ளிக்கால நண்பர்கள் சுந்தர், அப்துல் காதர் மற்றும் ரமேஷ் ஆகியோரை சந்தித்து அளவளாவதை நிறுத்தியதில்லை.
சாமி கும்பிட்டு நெற்றியில் குங்குமமும், விபூதியும் இட்டுக்கொண்டு உணவரைக்கு வந்த கணவனுக்குப் பார்த்து, பார்த்துப் பரிமாறியவள் இடையில் மாமியாருக்கும் காபியை கொடுக்க மறக்கவில்லை. உண்டு முடித்த நந்தகுமார் அன்னையின் அறைக்குச் செல்ல,
"வெள்ளிப்போயாவா நன்னா?"(கிளம்பிட்டியா பா.?)
என்று இவரை பார்த்ததும் புன்னகை முகத்துடன் கேட்ட அன்னையிடம்,
"அவுனு அம்மா."(ஆமா ம்மா.) என்றவர் சிறிது நேரம் அவரின் அருகில் அமர்ந்திருந்து விட்டு,அன்னை குடித்து வைத்திருந்த காபி டம்ளரை எடுத்து வந்து மனைவியிடம் கொடுத்துவிட்டு தன் கம்பெனியை நோக்கி விடை பெற்று சென்றார்.
கணவன் சென்றதும் சற்றே ஆசுவாச மூச்சுவிட்ட பாவனியின் கண்கள் வரவேற்பறையில் பெரிதாக மாற்றப்பட்டிருந்த அலங்கார கடிகாரத்தில் நிலைக்க. ஒன்பது மணியைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது அது.
சற்று அதிர்ந்தவராக அதைப் பார்த்துவிட்டு மின் தூக்கியின் உள் சென்று இரண்டாம் போத்தனை அழுத்திவிட்டு வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தபடி அதன் கதவுகள் திறப்பதற்காகக் காத்திருந்தார்.
இரண்டாம் மாடியில் நின்றதும் வெளியே வந்தவர் இடப்பக்கமாக இருந்த அறையின் கதவைத் திறக்க ஜில் என்ற ஏசியின் காற்று முகத்தில் அறைந்தது.
“விடிச்சி இந்தச் சேப்பு அய்யிந்தி… ஏஸீ வேஸுகுனி, பெட்ஷீட்டு மொத்தம் கப்புகுனி, ஏலா நித்ரபோத்துன்னாவு சூடு.”
(விடிஞ்சி இவ்ளோ நேரம் ஆகுது ஏசியும் போட்டுக்கிட்டு பெட்ஷீட்டையும் முழுசா போர்த்திக் கொண்டு எப்படி தூங்குறா பாரு)
என்று சற்று சத்தமாக பேசியவர்,
அவள் மூடியிருந்த போர்வையை ஒரே இழுவாக இழுத்து எடுத்தாள்., இரவு உடையான பைஜாமாவில் ஒரு காலை மடக்கியும் ஒரு காலை நீட்டியும் வைத்தபடி முகத்தைக் கைக்கொண்டு மறைத்தபடி ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மகளின் தொடையில் சுள் என்று ஒரு அடியை வைத்தவர்,
"காடிடா, தெல்லாவரி என்தா டைம் ஆயிந்தி?
இங்கா நிதரபோத்து உன்னாவா?
ஸ்டடி ஹாலிடே இச்சிந்தி சதவடானிக்கி இலா நிதரபோவடானிக்கி காது.”
(“ஏய் கழுதை! விடிஞ்சு எவ்வளவு நேரம் ஆகுது… இன்னும் தூங்கிட்டு தான் இருக்கியா?
ஸ்டடி ஹாலிடே படிக்கத் தான் கொடுத்திருக்காங்க, இப்படி நாள் முழுக்க தூங்கி படுத்துக் கிடக்கச் சொல்லல!”)
அம்மாவின் அடியில் லேசாகத் திரும்பிப் படுத்தவள், அடித்த இடத்தைத் தடவியபடி.
"ஸ்டடி ஹாலிடே தான். அதுக்காகத் தூங்க கூடாதுன்னு இருக்கா என்ன.? இன்னும் பத்து மணி ஆகல இல்ல. பத்து மணி ஆகட்டும். எழுந்துக்றேன்… அதுக்கு முன்ன எழுந்துருச்சா தெய்வ குற்றம் ஆயிடும்…" என்றபடி மறுபடியும் புரண்டு படுத்தவள் தூக்கத்தை தொடர,
“இப்புடு லேஸ்தாவா
லேகபோதே நீலு தீஸுகொச்சி மொகம் மீத போசேதா?”
("இப்போ எழுந்துக்கிறியா இல்ல தண்ணி எடுத்துட்டு வந்து முகத்தில் ஊத்தவா.?")
"ஐயோ அம்மா காலங்காத்தால எதுக்கு ஜாங்கிரிய பிச்சு போட்ட மொழியால என் காத தீக்குறீங்க. இதுக்கு எந்திருச்சு படிக்கிறதே மேல்."
என்றவள் எழுந்தமர்ந்து தலையைச் சொரிந்தபடி அன்னையை ஏறிட்டு பார்க்க. கோபத்துடன் வேக மூச்சுகளை இழுத்து விட்டவர்,
“"மனம் சுந்தரங்கா தெலுங்கு மாட்லாடே வாள்ளம். மா முன்னோர்லு அந்தரு தெலுங்குலோனே மாட்லாடே வாரு. அந்துகே மனமும் தெலுங்குலோனே மாட்லாடாலி; தமிழ்லோ காது.”
("நாம சுந்தர தெலுங்கு பேசுறவங்க. நம்ம முன்னோர் எல்லாம் தெலுங்குல தான் பேசுனாங்க அதனால நாமளும் தெலுங்குல தான் பேசணும் தமிழ்ல இல்ல.")
"என்னால தெலுங்குல எல்லாம் மாட்லாட முடியாது. நான் தமிழ்ல தான் மாட்லாடுவேன். நம்ம முன்னோர் வேணும்னா தெலுங்கு காரவங்களா இருக்கலாம் ஆனால் நான் தெலுங்கு ஆள் இல்ல. நான் மறத்தமிழச்சி." என்றாள் அவளும் அதே கோப குரலுடன். நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு.
"இப்படி எங்க சுந்தர தெலுங்க குதறி போடாம. நீ தமிழிலேயே பேசு. எங்க தெலுங்க சரியா பேசி நாங்களே காப்பாத்திக்கிறோம். இப்போ போய்க் குளித்துக் கிளம்பி வா." என்று தமிழில் அவளுக்கு பதில் கூறிவிட்டு அறையை விட்டு வெளியேற,
"அது."" என்று சிரிப்புடன் கூறிக்கொண்டவள் தன் மெத்தையின் அருகில் இருந்த அலைபேசியை எடுத்து
"எழுந்துட்டியாடா மண்ணு." என்று கேட்டு ஒரு குறுந்தகவலை யாருக்கோ அனுப்பிவிட்டு, சில நொடிகள் அனுப்பிய தகவலைச் சிரிப்புடன் பார்த்திருந்தவள் மறுபடியும் அன்னை வரும் அரவம் கேட்க, வேகமாக அலைபேசியை அனைத்து சார்ஜரில் போட்டுவிட்டு குளியலறை நோக்கிச் சென்றாள். உல்லாசத்துடன் குதித்த படி.