தகிக்காதே குளிர்நிலவே..!(16)

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN46

Member
May 5, 2026
53
80
18
Chennai
அத்தியாயம் -16

அருண்மொழியின் தாத்தாவிற்கு முக்கிய வேலை இருந்ததால் ஊருக்கு கிளம்பிச் சென்று விட்டார்.

தனது வீட்டில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்‌ பாரதி.

மருத்துவமனையில் நந்தினி முகத்தில் வந்து போன புதிய உணர்வை அவளும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

ஏனோ அருண்மொழியை இழந்து விடக் கூடாது என்பதில் பாரதி உறுதியாக இருந்தாள்.

என்ன தான் அருண்மொழி அவளது காதலை ஏற்றுக் கொண்டதாகக் கூறினாலும் ஏதோ ஒன்று அவளது மனதை முரண்டிக் கொண்டு தான் இருந்தது.

குழப்பமான மனநிலையில் அமர்ந்திருந்தவளின் அலைப்பேசிக்கு அருண்மொழியிடமிருந்து அழைப்பு வந்தது.

அலுவலக விஷயமாக ஏதோ கேட்டவன் , "பாரதி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதுக்கு முன்னாடி நந்தினி என் கிட்ட என்னவோ பெர்சனலா பேசணும்ன்னு சொன்னாங்க. ஆஃபிஸ் ல தான் இருக்காங்க. நான் இப்ப ஆஃபிஸ்க்கு கிளம்பிட்டு இருக்கேன். இன்னும் ஒன் ஹவர்ல ஆஃபிஸ்ல இருப்பேன். அந்த பைலை உனக்கு மெயில் பண்ணிடுறேன்…ஓகே வா?” என்றான்.

பாரதி பதிலேதும் கூறாமல் அமைதியாக இருக்கவே,” ஏய்.. புரூஸ்லீ என்னாச்சு? நான் சொன்னது காதுல விழுந்துச்சா?” என்றான் .

"ம்ம்…ஹான்..சரி அருண்…” என்றவள் சில கணங்கள் யோசனையுடனே அமரந்திருந்தாள்.

தடுமாற்றத்துடன் ஒரு முடிவை எடுத்தவள் அலுவலகத்திற்கு கிளம்பினாள்.

நந்தினி அருண் பரிசளித்த இளஞ்சிவப்பு நிற ஜார்ஜெட் புடவையை உடுத்திக் கொண்டாள்.

அதற்கு தோதான இரவிக்கை ஏற்கனவே அவளிடம் இருந்தது.

வித்தியாசமாக இல்லாததால் அதனையே அந்த புடவைக்கு அணிந்து கொண்டாள்.

எப்போதுமே அவள் தனது தோற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தான் அலங்கரித்துக் கொள்வாள்.

இன்று இன்னும் சற்று கூடுதலாக கவனமெடுத்து தன்னை அலங்கரித்து கொண்டவளுக்கு தன்னை நினைத்தே சிரிப்பாக வந்தது.

வார்த்தைக்கு வார்த்தை அவனை 'சாதாரண ஊழியன்.. சாதாரண ஊழியன்' என்றழைத்து அவனிடம் அலட்சியம் காட்டியவளுக்கு அருண்மொழியை சாதாரண ஊழியன் என்கின்ற அளவிலேயே ஏற்றுக் கொண்டு அவனுடன் இணைந்து வாழ மனம் ஒப்பி விட்டது.

சாதாரண வாழ்க்கையை வாழ தயராகி விட்டாள் தொழில்
சாம்ராஜ்யத்தில் முடி சூடா இளவரசியாக வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர் நந்தினி தேவி.

கண்ணாடியில் தன்னை முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்தவளுக்கு திருப்தி ஏற்படவே கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

அவளது தாய் ஏதோ கூற வர அதனைக் கூட சரியாக கவனிக்காமல் வெளியே வந்துவிட்டாள்.

தனது காரினை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்தாள்..

அருண்மொழியிடம் தன்னை சந்திக்குமாறு கூறியிருந்த நேரத்தை விட மிகவும் சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு வந்துவிட்டாள் நந்தினி.

உள்ளமும் உடலும் இருந்த பரபரப்பில் நேரத்தை கவனிக்கத் தவறியிருந்தாள்.

இரவு ஷிப்ட் முடிந்த ஊழியர்கள் சென்று கொண்டிருந்தனர்.

மிக சீக்கிரம் வந்து விட்ட நந்தினியை கண்டு அவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தாலும் ஏதேனும் முக்கிய வேலையிருக்கும் என எண்ணிக் கொண்டு அவளுக்கு வணக்கம் வைத்து விட்டுச் சென்றனர்.

அப்போது கூட வணக்கத்தை ஏற்றுக் கொண்டாளே ஒழிய தான் சீக்கிரம் வந்து விட்டதை அவள் மூளை கிரகித்துக் கொள்ளவில்லை.

தனது அறைக்குள் நுழைந்தவள் ஒரு பெருமூச்சுடன் தனது இருக்கையில் அமர்ந்தாள்.

சுழல் நாற்காலியில் சுழன்று கொண்டே தனது அலைபேபேசியை எடுத்து கேலரிக்குள்‌ சென்றாள்.

எப்போதோ அலுவலக ஊழியர்களுடன் எடுத்த புகைப்படம் அதிலிருந்தது.

அப்புகைப்படத்தில் அவளருகே அருண்மொழி நின்றிருந்தான்.

கருப்பு‌ வெள்ளை கட்டம்‌ போட்ட‌ பருத்தி புடவையில் அவள் நின்றிருக்க அவளருகே கிட்டத்தட்ட இருவரின் தோள் உரசும் நெருக்கத்தில் அவன் நின்றிருந்தான்.

அமுதன் மீது கைகளை போட்டுக் கொண்டிருந்தாலும் அவனது பார்வை அவள் மீதேயிருந்தது.

அத்தனை காதல் அவனது கண்களில்.

கண்கள் மட்டுமா காதலை உணர்த்தும் ? அவனது உடல்மொழி கூட அவள் மீதான நேசத்தின் அளவை பறைசாற்றிக் கொண்டிருந்து அப்புகைப்படத்தில்.

சிறிது நேரம் அவனது பிம்பத்தை வருடிக் கொண்டிருந்தவளுக்கு சற்று படபடப்பாகவும் தான் இருந்தது.

‘எப்படி அவனிடம் காதலை உரைப்பது?என்னவென்று உரைப்பது? இத்தனை நாட்களாக அவனிடம் எரிந்து விழுந்து உதாசீனம் செய்து விட்டு திடீரென காதலிக்கின்றேன் என்று கூறினால் என்ன நினைப்பான்? மிகவும் ஏளனமாக நினைத்து விடுவானா?’ இது போன்ற விடைத்தெரியா கேள்விகள் அவளது தலைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

குழம்பிய மனநிலையில் தான் அமர்ந்திருந்தாள்.

“மே ஐ கம் இன்” என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

பாரதி தான் நின்றிருந்தாள்.

'இவ எதுக்கு இப்ப வந்துருக்கா?' என நினைத்துக் கொண்டே நேரத்தைப் பார்த்தவளுக்கு அப்போது தான் தான் வெகு சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு வந்து விட்டது உரைத்தது.

“ வாங்க பாரதி…” என‌ வெறுமையான‌ குரலில் கூறினாள்.

உள்ளே நுழைந்தவளின் பார்வை நந்தினியை துளைத்தெடுத்தது.

சற்று‌ அதிகப்படியாக சிரத்தை எடுத்துக் கொண்டு அலங்கரித்து கொண்டு வந்திருக்கின்றாள் என நன்கு புரிந்தது.

மூளையில் ஏதோ எச்சரிக்கை மணி அடித்தது.

அவளது துளைத்தெடுக்கும் பார்வையை கண்டு எரிச்சலான நந்தினி, "என்ன பாரதி? இவ்வளவு சீக்கிரம் வந்துருக்கீங்க?என்ன விஷயம்? இவ்வளவு சீக்கிரம் வந்து முடிக்கும் அளவுக்கு முக்கியமான வேலை எதுவும் இல்லையே?” என்றாள் நக்கலாக.

பதிலுக்கு எகிறி அடிக்க முயன்ற நாவை கட்டுப்படுத்தியவள் நிதானமாக குரலில், "உங்க கிட்ட தான் பேச வந்துருக்கேன்.” என்றாள்.

அவளது நிதானம் நந்தினியின் புருவத்தை உயர வைத்தது.

“ உக்காருங்க…” என்றாள்..

பாரதி அமைதியாக இருக்கவே , "பேசணும்னு சொன்னீங்க “ என்றாள் நந்தினி.

“ம்ம்…அருண்மொழியோட தாத்தா கிட்ட எங்களோட லவ்வை பத்தி சொல்லிட்டேன். கல்யாணத்துக்கு சீக்கிரம் ஏற்பாடு‌ பண்ணுங்கன்னும் சொல்லிருக்கேன்."என்று கூறி விட்டு அவளது முகத்தை பார்த்தாள்.

லேசாக மாற ஆரம்பித்த முகத்தை சீர்படுத்தி கொண்டே, "அதுக்கு என்ன? இதை ஏன் என் கிட்ட வந்து சொல்றீங்க” என்றாள் அழுத்தமாக.

“ ஊஃப்…” என இதழ் குவித்து ஊதியவள் நந்தினியின் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.

அவளது முகத்தில் இருந்து எதையும் ஊகிக்கவே முடியவில்லை.

‘ சரியான அழுத்தக்காரி…எல்லாத்தையும் நம்ப வாய்ல இருந்தே பிடுங்குவா…’ என மனதினுள் அவளை வறுத்தவள், "நான் நேராகவே விஷயத்துக்கு வந்துடுறேன். எனக்குன்னு நான் லைஃப்ல முதன் முதல்ல ஆசைப்பட்டதே அருண்மொழியை தான். அவனுக்கு உங்க மேல இன்னமுமே சாஃப்ட் கார்னர் இருக்குன்னு நினைக்கிறேன். அதனால…” என்று கூறி விட்டு மீண்டும் நிறுத்தினாள்.

“அ..அதனால..” என்றாள் கமறிய குரலில்.

“அருண்மொழி கிட்ட நீங்க கொஞ்சம் அழுத்தமாவே அவனை லவ் பண்ணலன்னு சொல்லிடுங்க . நா..நா அவரை மனசார விரும்புறேன். அருண்மொழி இல்லன்னா கூட உங்களுக்குன்னு ஒரு‌ நல்ல லைஃப் நிச்சயமா கிடைக்கும் . ஆனா…எனக்கு நான் ஒரு உறவா நினைக்கிறது அருண்மொழியை மட்டுந்தான். இது உங்க கிட்ட இதை நான் ஒரு ரெக்வஸ்ட்டா கேட்டுக்குறேன். ப்ளீஸ்…அப்ப தான் அவரு உங்களை மொத்தமா மறந்துட்டு என்னை கல்யாணம் பண்ணிக்குவாரு. அவரும் சாதாரண எம்ப்ளாயி தான் நானும் ஒரு சாதாரண எம்ப்ளாயி. எங்க ரெண்டு பேருக்கும் தான் சரியா இருக்கும். உங்க அந்தஸ்த்துக்கு ஏத்த‌ மாதிரி நல்ல வாழ்க்கை அமையும் ஆனா எனக்கு? இதை உங்களோட பரிதாபத்தை சம்பாதிக்க சொல்றேன்னு நினைக்காதீங்க. இது தான் நிதர்சனம்.‌ எப்ப…எப்படியும் உ…உங்க அந்தஸ்த்துக்கு நீங்க அருண்மொழியை விரும்ப மாட்டீங்க… இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கவே நீங்க அருண்மொழி கிட்ட சொல்லிட்டா அவன் உங்கள் பக்கம் திரும்பவே மாட்டான். இதை நீங்க எப்படி வேணா எடுத்துக்கோங்க . பயம் , பதட்டம் சரண்டர் இப்படி என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோங்க. ஆனா அருண்மொழி இல்லாத லைஃப்பை என்னால யோசிக்கக் கூட முடியாது . ப்ளீஸ்…” என்று கைக் கூப்பி நின்றாள்.

எப்போதும் போல அதிரடியாகவும் அகம்பாவத்துடனும் பாரதி கூறியிருந்தால் கூட தக்க பதிலடி கொடுத்து விட்டு தன் மனதினை தெளிவாக எடுத்துரைத்து அவளை வெளியே அனுப்பியிருப்பாள்.

ஆனால் பாரதி பேசிய விதம் அவளை மௌனியாக்கியது.

வயிற்றிலிருந்து இருந்து ஏதோ ஒன்று உருண்டு தொண்டைக்கும் இதயத்திற்கும் நடுவில் சிக்கிக் கொண்ட போன்றதொரு உணர்வு.

கலங்க தொடங்கிய விழிநீரை கட்டுப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிப் போனது.

இரு கரங்களின் விரல்களையும் அழுந்தகோர்த்துக் கொண்டு வெடித்துச் சிதற தயாராக இருந்த உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

“ மேடம்…” என தயங்கியபடி பாரதி நிற்க , சில கணங்களில் ஒட்டுமொத்த உணர்வுகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவள் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு ,” ஏன்…நான் அருண்மொழியை லவ் பண்ணிடுவேன்னு பயம் உங்களுக்கு வந்துடுச்சா மிஸ் பாரதி? இவ்வளவு கீழ இறங்கி வந்து பேசிட்டு இருக்கீங்க? ஹான்…இன் செக்யூரிட்டியா?..இந்த நந்தினியோட டேஸ்ட் அவ்வளவு சீப்பா கண்டிப்பா இருக்காது. இதுக்காக தான் காலங்காத்தால அலறி அடிச்சிட்டு வந்துருக்கீங்களா? கல்யாணம் பண்ணுறதும் பண்ணாததும் உங்க பர்சனல். அதை ஏன் என் கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கீங்க. தயவு செஞ்சு உங்க பர்சனலை இங்க கொண்டு வராதீங்க. கிளம்புங்க முதல்ல. எனக்கு வேற இல்லையா? இந்த ரோமியோக்கு தான் நான் ஏங்கிட்டு இருக்கேனா? போய் வேலையை பாருங்க “ என்றாள் அலட்சியமாக.

அவளது மனநிலையை கணிக்க திணறினாள் பாரதி.

அந்தளவிற்கு அலட்சியத்தை முகத்தில் கொண்டு வந்திருந்தாள் நந்தினி.

கோபத்திலும் இயலாமையிலும் சிவந்து போயிருந்தது அவளது முகம்.

ஒரு பெருமூச்சுடன் அறையை விட்டு வெளியேறியவள் சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

தான் செய்வது சரியா தவறா என்று புரியவில்லை .

ஆனாலும் எதையோ இழக்க மனமில்லாமல் பற்றிக் கொள்ளும் பயம் .

தோழமையுடன் கூடிய ஒரு நல்ல உறவை இழக்க பாரதி விரும்பவில்லை .

ஏனோ மனம் பிசைந்தது. நெஞ்சில் கை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தவளுக்கு நெருடலாகவே இருந்தது.

அதற்கு மேல் அங்கிருந்தால் குற்றவுணர்வு தன்னை கொன்று தின்று விடும் என்பதால் கிளம்பி விட்டாள்.
 
Last edited:

Author: STN46
Article Title: தகிக்காதே குளிர்நிலவே..!(16)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
அடிப்பாவி இப்படி பண்ணிட்டா?????
உனக்கு நந்துவை பத்தி தான் கவலை இல்ல.....
ஆன அருண் மனம் உனக்கு நல்லா தெரியும் அப்படி தெரிஞ்சி இருந்தும் இப்படி செய்திட்ட