அத்தியாயம் -9
அருண்மொழி பாடி முடித்த பிறகு அந்தாக்ஷரி, ஆடல், பாடல் என களை கட்டியது கேளிக்கை.
நந்தனியோ அவர்களின் கொண்டாட்டத்தில் பங்கு கொள்ளாமல் வெளியே வந்தாள்.
பப்ஃபே முறையில் உணவு தயாராகிக் கொண்டிருந்தது.
நெடுநேரம் தண்ணீர் அருந்தாமல் இருந்ததால் அவளுக்கு தாகம் எடுத்தது.
அங்கிருந்த சிறிய அறையினுள் நுழைந்து சுற்றிலும் பார்த்தாள்.
தனியாக இருந்த ஒரு மேசையில் பெரிய பழரச குவளை இருந்தது.
யாரும் உந்த அறையில் இல்லை. குடிப்பதற்கு குடிநீரும் எங்கும் வைத்திருக்கவில்லை.
எனவே வேறு வழியின்றி வேகமாக சென்றவள் அதனை எடுத்து தொண்டையில் சரித்துக் கொண்டாள்.
சிறிது குடிக்கும் போதே தொண்டை கரித்தது.
லேசாக கசப்பாகவும் இருந்தது.
நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்ததினால் அதிக தாகம் எடுத்தது.
எனவே எதனைப் பற்றியும் யோசிக்காமல் அந்த மிகப்பெரிய குவளையை முழுவதும் குடித்து விட்டாள்.
அவளது தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது.
எடுத்து பேசியபடி குவளையை பேனாவினால் தட்டிக் கொண்டு இருந்தாள்.
அப்போது அங்கு அமுதனும் அவனுடன் பணிபுரியும் வேறு ஒரு நண்பனுமம் அந்த மேசையை நோக்கி வந்தனர்.
“ ஏன்டா….!நந்தினி மேடம் தான் டிரிங்க்ஸ் எல்லாம் வேண்டாம்ன்னு சொன்னங்கல்ல…இப்ப எதுக்கு அந்த ப்ராண்டியை ஜுஸ்ல கலந்து வச்சிட்டு வந்துருக்க..அவங்க பார்த்தா….” என்றவனது வார்த்தை பாதியிலேயே நின்றது.
“ என்னடா மச்சான்? ஏன் பேச்சை நிறுத்திட்ட.? அதெல்லாம் நந்தினி மேட..ம்…க்கு…” என்று பேசிக் கொண்டே வந்த நண்பனும் வார்த்தையை பாதியிலேயே நிறுத்தி விட்டு அமுதனை பார்த்தான்.
இருவரும் ஒருவரையெருவர் பார்த்துக் கெண்டு திகைத்து நின்றார்கள்.
அவளது கையில் அமுதனின் நண்பன் வைத்து விட்டுச் சென்ற குவளை இருந்தது.
“ அடேய்…சரக்கை இந்த க்ளாஸ் ல தான் டா மிக்ஸ் பண்ணிட்டு போனேன். அய்யோ..! அது கொஞ்சம் ஸ்டாராங்கான சரக்காச்சே…கொஞ்சம் அடிச்சால கும்முன்னு என்றுமே? இது எப்படிடா மேடம் கைல?” என கிசுகிசுத்தான் அமுதனின் நண்பன்.
“ வீணாப் போனவனே.! சரக்கை இப்படிதான் பப்ளிக்கா வச்சிட்டு வருவியா? கொஞ்சம் கூட சென்ஸ் வேணாம்? “ என பல்லைக் கடித்தான்.
“ சாரி.. மச்சான். காஸ்டலியான சரக்கு கிடைச்சிருச்சேன்னு ஒரு ஆர்வத்துல மிக்ஸிங் பண்ணி வச்சிட்டு உன்னை கூப்பிடலாம்னு வந்தேன். அதுக்குள்ள மேடம் எடுத்து குடிச்சிட்டாங்க. ஒருவேளை அவங்களுக்கு இந்த பழக்கம் இருக்குமோ?.” என்றவனை முறைத்தான் அமுதன்.
“ ஹி..ஹி.முறைக்காதே டா. சொட்டு மிச்சம் வைக்காம குடிச்சிட்டாங்களே..? அதான் கேட்டேன். யாராலையும் இப்படி கல்ஃபா அடிக்க முடியாது டா. கொஞ்சம் கொஞ்சமா தான் குடிக்க முடியும். அதான் கேட்டேன். நீ டென்ஷன் ஆகாத…”என்று கூறி விட்டு திருட்டு முழி முழித்தான்.
“ உன்னை…இது மட்டும் மேடமுக்கு தெரிஞ்சது…. அவ்வளவு தான். ஏற்கனவே ட்ரிங்ஸெல்லாம் கூடாதுன்னு தானே சொன்னாங்க. ஏன்டா இப்படி பண்ணுறீங்க…ம்மச்” என்றபடியே நெற்றியை தேய்த்தவன் அருண்மொழி எங்கேனும் தென்படுகின்றானா எனப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
நந்தினியோ கோப்பையை கீழே வைத்து விட்டு அவர்களை தாண்டி நடந்து சென்றாள்.
இருவரும் அவள் செல்லும் வரை அசையாமல் நின்றிருந்தனர்.
அவள் தங்களை தாண்டிச் சென்ற பிறகு திரும்பிப் பார்த்தார்கள்.
கொஞ்சமாக நடையில் தடுமாற்றம் இருந்தது.
பஃபே இருக்குமிடத்திற்கு சென்றவள் நடுங்கும்
கைகளால் பீங்கான் தட்டை எடுத்து கொஞ்சமாக உணவு வகைகளை வைத்துக் கொண்டாள்.
பசியும் இருந்தது. ஆனால் அதையும் தாண்டி வயிறு ‘டொம்’மொன்று இருந்தது.
மிகவும் மெதுவாக சாப்பிட்டு முடித்தாள்.
நேரம் இரவு பத்தை தாண்டியிருந்தது.
அனைவரும் கிளம்ப ஆரம்பித்தனர்.
ஒரு சிலரே ஆங்காங்கே நின்றிருந்தனர்.
அருண்மொழி பாரதியுடன் அரட்டை அடித்த படி சாப்பிட்டு முடித்தான்.
அமுதன் அவனருகே வந்து , "டேய்..மச்சான். ஒரு இஷ்யூ டா…” என்றான்.
சிரித்தபடியே, “ ஏன் இங்க எந்த பிஃகரும் கடலை போட கிடைக்கலையா உனக்கு?” என்றான் நக்கலாக.
“ ம்ம்ச்…அருண். நந்தினி மேடம் சரக்கு மிக்ஸ் பண்ணி வச்சிருந்த ஜூஸை குடிச்சிட்டாங்க. அதுவும் ஸ்ட்ராங்கா போதை ஏறுற சரக்கு. முழுசையும் ஒரே கல்ஃப்புல…” எனக் கூறிக் கொண்டு இருக்கும் போதே நிதானம் தவறிய நடையுடன் அவர்களருகே வந்த நந்தினி, “ ஹேல்லோ..! ஏன் எல்ழாரும் இங்கே நிக்கூறீங்ங்க…? கிழம்பு..கக்க்…கிழம்புங்க. ம்ம்… நாளைக்கு ஆஃபிஸூக்கு டைம்முக்கு வந்துஊடனும். காட்…க்க்…இட்? பை. “ என நா குழறியபடி பேசியவள் தனது காரினை நோக்கி நடந்தாள்.
ஒரு பக்கமாக வழிய விட்டிருந்த புடவை வேறு அவளது காலைத் தடுக்கியது.
அவளருகே ஓடி வந்து கையைப் பிடித்தான் அருண்மொழி.
“ மேடம் பாத்து..நா ட்ரைவ் பண்ணுறேன். இந்த நிலைமையில நீங்க ட்ரைவ் பண்ண வேண்டாம்…” என்றான் அவளது கைகளை பிடித்தபடியே.
சட்டென்று அவனது கைகளை உதறியவள், “ ஏ…மேன்..! ஐ கேன் மே..னே..ஜ் இட். என்ன்…ன கொஞ்சம் த..ழை சுத்து..ற..மாதிரி இருக்கு…து. தட்ஸ் இட். நீ போ…” என அவனது தோளினைப் பிடித்து தள்ளியவள் தானே தட்டுத்தடுமாறி நடந்து தனது காரினை அடைந்து விட்டாள்.
கைப்பையை மறந்துவிட்டு வந்திருந்தாள். அதில் தான் கார் சாவி இருக்கும்.
“ம்ம்ச்…!” என்றவளுக்கு தலை சுற்றிக் கொண்டு வர அப்படியே காரினருகிலேயே அமர்ந்து விட்டாள்.
பாரதியோ, “ நான் போய் மேடமை ட்ராப் பண்ணிட்டு வரவா?” என்றாள்.
“ வேண்டாம் பாரதி. நானே போய் விட்டுட்டு வந்துடுறேன். டேய் அமுதா…நீ பாரதியை வீட்டுல ட்ராப் பண்ணிடு..” என்று கூறி விட்டு நந்தினியின் அருகில் சென்றான்.
தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த நந்தினியின் தோளைத் தொட்டான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவனது பிம்பம் மங்கலாக தெரிந்தது.
“கார் கீ குடுங்க…” என்றான்.
அப்போது தான் நினைவு வந்தவளாய் அவனை நிமிர்ந்து பார்த்தபடியே, "ஆமா..எங்க்கக?” என்று அவனிடமே திரும்பக் கேட்டாள்.
“சுத்தம் போ…” என முணுமுணுத்தான் அமுதனின் புறம் திரும்பி,” டேய் அமுதா…உள்ள நத்தினியோட ஹேண்ட்பேக் இருக்குதான்னு பாரு…” என்றான் சத்தமாக.
“ ஹேய்…ஹேய்…வெய்ய்யிட். டோ…ண்..ட் கா...ஆல் மீ நந்தினி. காஆ..ஆல் மீ மேஏஏடம்.” என்று குழறினாள்.
“ சாரிங்க மேடம்…”
“ம்ம்ம்….தட்ஸ்…குட்…” என கோணலாக சிரித்தாள்.
சிறிது நேரத்தில் அமுதன் நந்தினியின் கைப்பையை எடுத்து கொண்டு வந்து அருண்மொழியிடம் கொடுத்தான்.
அதிலிருந்து கார் சாவியை எடுத்தவன் பின் பக்க கதவினை திறந்தான்.
அவளிடம் கெஞ்சி கூத்தாடி மெல்ல எழ வைத்தான்.
அதிக போதையினால் அவளுக்கு நிதானம் தவறியிருந்தது.
அருண்மொழி மீதே சரிந்தாள்.
கையில்லாத இரவிக்கையுடன் சாட்டின் புடவை அணிந்திருந்திருந்தால் அது ஒரு பக்கம் நழுவிக் கொண்டு போனது.
அவனுக்கோ அவஸ்தையாக இருந்தது.
பாரதியின் உதவியுடன் பின்பக்கத்தில் அவளை அமர வைத்துவிட்டு தான் முன்பக்கமாக சுற்றி வந்து ட்ரைவர் சீட்டில் அமர்ந்து காரை எடுத்தான்.
“ டேய் உனக்கு இந்த ஹயர்எண்ட் காரெல்லாம் ஓட்டத் தெரியுமா?” என வாயைப் பிளந்தான் அமுதன்.
“தெரியும் டா. சரி சரி பேசிட்டே இருக்காம நீ பாரதியை கூட்டிட்டு கிளம்புற வழியைப் பாரு. நாளைக்கு வந்து நான் என் வண்டியை எடுத்துக்குறேன்.” என்றபடி காரினை கிளப்பினான் அருண்மொழி.