தழலை அணைக்கும் அமுதகமே - 05

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 77

Member
Jun 4, 2026
23
51
13
அத்தியாயம் 05

“ஆத்யா நீ போமா…” என அவளை அவசரமாக வெளியே அனுப்பி வைத்தார் விஷ்வநாதன் இதற்கு மேலும் நிலை மோசமாக கூடாது என்ற நோக்கத்துடன்…

ஆத்யா ஷாலினியும் அவர் சொன்னதை கேட்டு ஒரு கணம் அவரை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள், அடுத்த நொடி அங்கிருந்து சட்டென வெளியேறி இருந்தாள்…

தன்னை ஒரு பார்வை கூட பார்க்க முடியாதவளாக தரையை பார்த்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறியவளின் மேல் தான் விஷ்வசாஹரனின் பார்வை அழுத்தமாக பதிந்திருந்தது…

“உனக்கு என்னடா அவ்ளோ கோபம் எதுக்கு நீ காட்டுமிராண்டி மாதிரி நடந்துக்குற? நீ அடிச்சது எந்த அளவுக்கு அவளுக்கு வலிச்சிருக்கும் னு உனக்கு கொஞ்சம் கூட தெரியலையா?” என ஆதங்கமாக அவனைப் பார்த்து கேட்டார் விஷ்வநாதன்…

அவரின் கேள்விக்கு பதில் சொல்லாத விஷ்வசாஹரனோ தன் தந்தையை ஒரு கணம் அழுத்தமாக பார்த்தவன், வந்த வேலையை கூட மறந்தவனாக அங்கிருந்து விறுவிறுவென சென்றிருந்தான்…

ஆத்யாவின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக பாய, யாரும் தன்னை பார்த்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் அங்கிருந்த பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்…

உள்ளே வந்தவளுக்கு அழுகையை கட்டுப்படுத்துவது தான் பெரும் பாடகி போனது, ஒரு கணம் கண்ணாடியில் தன்னை அழுத்தமாக பார்த்தவளோ குழாயைத் திறந்து நீரை முகத்தில் அடித்துக் கழுவினாள்…

ஒரு சில நிமிடங்கள் அங்கே இருந்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவள், தன் ஷாலினால் முகத்தை துடைத்திக் கொண்டே அங்கிருந்து வகுப்பறைக்கு சென்றிருந்தாள். ஏற்கனவே பாடம் ஆரம்பித்து இருந்த காரணத்தினால் “எஸ்கியூஸ் மீ, மே ஐ கம் இன் சார்?” என்று கேட்டபடி வெளியே நிற்க, அங்கு உள்ளே பாடமெடுத்துக் கொண்டிருந்தது என்னவோ விஷ்வசரன் தான்…

வெளியே அனுமதி வேண்டி நின்றவளை ஒரு கணம் அழுத்தமாக பார்த்தவனோ “முதல் நாளே கிளாஸ்க்கு இப்டித்தான் லேட்டா வருவீங்களா?” என அழுத்தமான குரலில் கேட்க, அவ்வளவு நேரமும் தலை குனிந்து யோசனையாக கீழே பார்த்துக் கொண்டிருந்தவளோ, அவன் குரல் கேட்டு சட்டுனு நிமிர்ந்து பார்த்திருந்தாள்…

அவளுக்கோ அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை, தொண்டை குழிக்குள் ஏதோ சிக்கிக் கொண்ட உணர்வு, குரல் சத்தமாக வெளியே வர மறுத்தது…

“சாரி சார்…” என கூறியவளின் சத்தம் பக்கத்தில் இருந்தவனுக்கு கூட கேட்டிருக்காது, “நீங்க பேசுறது எனக்கு கேட்கல மிஸ் ஆத்யா ஷாலினி, கொஞ்சம் சத்தமா பேசுறீங்களா…” என கூறியவனின் குரலில் நக்கல் இருந்ததோ என்று தான் தோன்றியது ஆத்யாவிற்கு…

ஒரு கணம் மூச்சை இழுத்து விட்டாளோ, “சாரி சார் விஷ்வநாதன் சார் கூப்பிட்டு இருந்தார் அதான் போயிருந்தேன். பேசிட்டு வர லேட்டாயிடுச்சு நான் உள்ள வரலாமா?” என இப்போது சத்தமாக கேட்டாள்…

அவள் கூறியதைக் கேட்டு ஒரு கணம் புருவத்தை ஏற்றி இறக்கிய சரணோ “கம்மிங்…” என்று ஒற்றை வரியில் சொல்லி இருந்தான், உள்ளே வந்து தன் இடத்தில் சென்று அமர்ந்தவளை ஒரு கணம் அழுத்தமாக பார்த்தவனின் கண்களில் இருந்து அவள் கன்னம் வீங்கி சிவந்து இருந்ததும் தப்பவில்லை…

ஒரு பெருமூச்சுடனே தனது பாடத்தை எடுக்க தொடங்கி விட்டான். ஆத்யாவும் படத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டாள்…

இப்படியே அடுத்தடுத்து பாடங்கள் முடிய மணியும் நான்கை காட்டியது, கல்லூரியில் இருந்து ஒவ்வொருவராக செல்ல ஆரம்பித்திருக்க, ஆத்யாவும் வெளியே வந்தாள்…

இன்னுமே அவளின் கன்னம் வீங்கி சிவந்து தான் காணப்பட்டது. அப்போது இருந்த அளவுக்கு இல்லை என்றாலும் இன்னும் லேசாக வீங்கி பார்த்ததும் தெரியக்கூடிய அளவுக்கு தான் காணப்பட்டது…

அவளுக்கு கன்னத்தில் சுள்ளென்ற வலி இருந்து கொண்டே தான் இருந்தது. ஆனால் என்ன தான் செய்து விட முடியும். அதனால் தன் கன்னத்தை மெதுவாக தடவிக் கொண்டவளோ பஸ் தரிப்பிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள், அவள் இப்போது நேராக செல்ல வேண்டியது என்னவோ, அவள் வேலை செய்ய வேண்டிய இடத்திற்கு தான். கையில் தன் தோழி தந்த அட்ரஸ் இருக்க தான் செல்ல வேண்டிய பஸ் வருவதற்காக பஸ் நிலையத்துக்கு சென்று காத்திருக்க தொடங்கினாள்…

பத்து நிமிடங்களில் பஸ்ஸும் வந்துவிட அவளுக்கு களைப்பாகத்தான் இருந்தது, இருந்தும் வேறு வழி இல்லை அவளுக்கு உணவிற்கும் ஹாஸ்டல் ரூமிற்கும் கொடுப்பதற்கு பணம் வேண்டுமே அதனால் வேலைக்கு சென்றாக வேண்டிய கட்டாயம் தான் அவளின் நிலை, பேரூந்தில் ஏறி அமர்ந்தவளோ தன் தலையை மெதுவாக ஜன்னலில் சாய்த்துக் கொண்டு கண்களை மெதுவாக மூடினாள்…

கண்களை மூடிய அடுத்த நொடியே காலையிலிருந்து தற்போது வரை நடந்த அனைத்து நிகழ்வுகளும் அவள் மனக்கண்ணில் படமாக ஓடியது. கடைசியில் ஓர் இடத்தில் அவளின் மனம் உறைந்தும் நின்றது. அது அவளை இறுதியாக விஷ்வசாஹரன் பார்த்த அந்தப் பார்வை, அவளின் நினைவுகளில் ஆணி அடித்தாற் போல் அப்படியே இருந்தது. என்ன மாதிரியான பார்வை அது என்று அவளிற்கே புரியவில்லை, எதற்காக அறைந்தான்? ஏன் அறைந்தான்? தெரியாமல் நடந்ததற்கு இப்படியா அடிப்பது? என அவளுக்குள் பல கேள்விகள் இருந்தாலும் எதற்கும் அவளிடம் பதில் இல்லை. எதிர்த்து கேள்வி கேட்கும் அளவிற்கு மனதில் தெம்புமில்லை…

அதனால்தான் விஷ்வசாஹரன் அறைந்த போது கூட அடுத்த எதிர் கேள்வி ஏதும் கேட்காது. விஷ்வநாதன் சொன்னதுமே அங்கிருந்து உடனே வெளியேறியிருந்தாள்…

மீண்டும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் ஓட, அவளுக்கோ மனதில் ஆயிரம் ஆயிரம் கவலைகளும் குழப்பங்களும், இருந்தும் இதெல்லாம் கடந்து வர தான் வேண்டும் என்று மனதை திடப்படுத்திக் கொண்டவள், மெல்லமாக விழிகளை விரித்துக் கொண்டாள்…

அதற்குள் அவள் வந்து சேர வேண்டிய இடமும் வந்திருக்க பெருமூச்சுடனே இறங்கிக்கொண்டாள். பையில் படிப்பு புத்தகம் இருக்க அவளோ வீட்டு வேலை செய்வதற்காக செல்கிறாள். படிக்கும் பிள்ளைகள் எக்காரணம் கொண்டும் வீட்டு வேலை செய்யும் அளவிற்கு வர கூடாது என்பதே அப்போதைய அவளின் வேண்டுதலாக இருந்தது…

திவ்யா கூறியது போலவே பஸ்ஸில் ஏறி அவள் சொன்ன இடத்துக்கு வந்து விட்டாள், ஆனால் வீடு எது என்று அவளுக்கு சரியாக தெரியவில்லை. அந்த வீட்டில் உள்ளவர்களின் பெயரும் அவள் சரியாக விசாரித்திருக்கவில்லை. திவ்யாவின் அப்பாவிடம் சொல்லி அல்லவா அவள் பேச சொல்லி இருந்தாள் அதனால் அவளுக்கு சரியான விவரங்கள் எதும் தெரிந்திருக்கவில்லை, ஒரு குருட்டு தைரியத்தில் வந்துவிட்டாள், அடுத்து என்ன செய்வது என்று யோசனையோடு நின்றவளுக்கு திவ்யாவிடமே கேட்டு விடலாம் என்று தோன்ற திவ்யாவிற்கு தொலைபேசியில் அழைத்தாள்…

ஒரே ரிங்கில் திவ்யாவும் அழைப்பை ஏற்று விட “ஹாய் சொல்லு ஆதி, இன்னைக்கு தான் உனக்கு முதல் நாள் காலேஜ் ல? எப்படி போச்சு? ஹாஸ்டல் ரூம்லாம் செட் ஆயிடுச்சா? நாலு மணி தாண்டிடுச்சே அடுத்து நீ வேலைக்கு போகணும்ல? இப்ப எங்க இருக்க?” என எடுத்ததுமே ஆத்யா ஷாலினியை பேச விடாது இவளே படபடவென அடுத்தடுத்த கேள்விகளை கேட்டாள்…

“ஹேய் ஒரு நிமிஷம் இரு டி. என்ன பேச விடு. ஆமா இன்னைக்கு தான் முதல் நாள் காலேஜ் என்ட் ஹாஸ்டல் ரூம்லாம் ஓகே தான். செட் ஆகிடுச்சி இப்ப நீ சொன்ன போலவே சொன்ன பஸ்ல ஏறி சொன்ன இடத்துக்கு வந்துட்டேன், ஆனா இங்க எந்த வீடுனு எனக்கு தெரியல எந்த வீடுனு கொஞ்சம் சரியா சொன்னனா நான் போயிடுவேன்…” என தான் போன் பண்ணியதற்கான காரணத்தை கூறினாள்…

“ஓஓ போய்டியா சூப்பர். இப்ப நீ என்ன பண்றனா நீ இருக்க பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்திலேயே ஒரு ரோடு போகும் அதுல ஸ்ட்ரைட்டா போனனா இடது பக்கம் இருக்க நாலாவது பெரிய மாடி வீடு. உள்ள எல்லாம் உடனே போக முடியாது வெளியே இருந்து காலிங்பெல் அடி செக்யூரிட்டி வருவாரு, அவர்கிட்ட நீ யாருன்னு சொல்லு அப்படியும் அவருக்கு விளங்கலைன்னா என் பெயர் இல்லனா அப்பா பேரை சொல்லு அவர் உன்ன உள்ள விடுவாரு?” என்ன விளக்கமாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என தன் தோழிக்கு அறிவுரை கூறினாள் திவ்யா…

“சரிடி தேங்க்ஸ் நான் அப்புறம் வேலையெல்லாம் முடிச்சிட்டு நைட் உனக்கு கால் பண்றேன்…” என கூறி விட்டு அழைப்பை துண்டித்து விட்டாள்…

திவ்யா சொன்ன போலவே பஸ் தரப்பிடத்தில் இருந்து பக்கத்திலேயே ஒரு வீதி செல்ல அவ்வீதியின் வழியவே நடக்க ஆரம்பித்து விட்டாள். சொன்னது போலவே இடது பக்கம் ஒவ்வொரு வீடாக பார்த்துக் கொண்டு வந்தவள் நாலாவதாக ஒரு பெரிய மாடி வீடு இருப்பதையும் கவனித்தாள்…

“திவ்யா சொன்ன போலவே நாலாவதா ஒரு பெரிய மாடி வீடு இருக்கு, அப்போ இதுதான் அந்த வீடு போல…” என மனதுக்குள் பேசிக்கொண்டே அவள் அந்த வீட்டை நெருங்கவும் உள்ளிருந்து செக்யூரிட்டி வெளியே வரவும் நேரம் சரியாக இருந்தது…

அவரோ நேராக அவளிடமே வந்தவர் “நீங்க தானே மா ஆத்யா ஷாலினி உங்கள உள்ள வர சொன்னாங்க, உள்ள போங்க மா…” என அவள் கேட்காமலேயே அவளை உள்ளே அனுப்பி வைத்தார் காவலாளி…

அவளுக்கோ ஒன்றுமே புரியவில்லை, இருந்தாலும் ‘தான் இன்று இங்கே வருவது தெரியும் தானே அதனால் சொல்லி வைத்திருப்பார்கள்’ என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டு, மெதுவாக வீட்டுக்குள் அழைப்பு மணியை அழுத்தி விட்டு வலது காலை வைத்து உள்ளே நுழைந்து கொண்டாள்…

சத்தம் கேட்டு வெளியே வந்திருந்தார் மகாலட்சுமி விஷ்வநாதன் அவரை அவள் சற்றும் அங்கு எதிர்பார்த்து இருக்கவில்லை, அவளுக்கோ பேரதிர்ச்சி பேய் அறைந்தாற் போல் அப்படி நின்று விட்டாள்…

காலையிலிருந்து எத்தனை அதிர்ச்சியைத்தான் அவளும் தாங்குவாள், அதை காட்டிக் கொள்ளமல் இருப்பது போல் அவளும் எவ்வளவு நேரத்துக்கு தான் நடிப்பாள்? இப்போது அவரை பார்த்ததுமே அவளுக்கு சுத்தமாக முடியவில்லை, அடுத்த நொடியே கையில் இருந்த பையை கீழே போட்டவள்…

ஓடி சென்று அவரை “ம்மா…” என்ற விம்மிய அழைப்புடன் இறுக்க அணைத்துக் கொண்டாள், அவள் தான் இதெல்லாம் எதிர்பார்த்து இருக்கவில்லை, ஆனால் மகாலட்சுமி எதிர்பார்த்துதான் இருந்தார் போல அது அவர் முகத்திலயே அப்பட்டமாக தெரிந்தது…

அதனால் தன்னை இறுக்க அணைத்து கொண்டவளை அவரும் மாறி அணைத்துக் கொண்டவர் “எப்படி இருக்க ஆதிமா?” என பரிவாக அவளின் தலையை வருடிக் கொண்டே கேட்டிருந்தார்…

அச்சமயம் அங்கிருந்த பூச்சாடியொன்று விழுந்து நொறுங்கும் சத்தம் அவ்வீட்டையே நிரப்ப, சட்டென இருவரும் திரும்பி வாசலை அதிர்ந்து பார்த்திருந்தனர்…


தொடரும்…
 
Last edited:

Author: STN - 77
Article Title: தழலை அணைக்கும் அமுதகமே - 05
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
379
83
Chennai
அவன் அம்மாவையும் தெரிஞ்சி இருக்கு, அவருக்கும் இவளை தெரிஞ்சி இருக்கே.....ரொம்ப க்ளோஸ் போலவே .....
வந்தது சாகரா.....