• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தீஞ்சுவை தீ - 2

ரோசி கஜன்

Administrator
Staff member

உத்ராவின் பெண் பார்க்கும் படலம் சலசலப்பில் முடிந்தது. அதனால் தீபிகா உத்ராவிற்கு ஆறுதல் சொல்ல அவள் அறைக்குச் சென்றாள்.

அங்கே தன்னையே மறந்த நிலையில் நின்றிருந்தாள் உத்ரா. “அக்கா எத்தனை அழகு” எனப் பூரித்த தீபிகா பெருமையாக அக்காவைப் பார்த்தாள்.

“கவலைப்படாத அக்கா இந்த வரன் இல்லைனா என்ன? வேற பாக்கலாம்” என அருகே சென்று ஆறுதல் படுத்துவதாக நினைத்துப் பேசினாள்.

“உனக்கு சூப்பர் பையனா பார்த்து நான் கல்யாணம் செய்து வைக்கிறேன் உத்ரா கண்ணு” தொடர்ந்து சங்கரனும் அறைக்கு வந்தார்.

உத்ரா நிலைமையை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள தற்பொமுது எதுவும் பேசாமல் இருப்பதே சாலச் சிறந்தது என மௌனம் காத்தாள். முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டாள்.

அடுத்ததாக அன்னம் வந்தார் தன் செல்ல சிருங்கார மகளை அணைத்து உச்சிமுகர்ந்தார். பின்பு புன்னகையுடன் உத்ரா இந்நிகழ்வால் மனம்வாடக் கூடாதென “இன்னிக்கு ஈவினிங் நாம எல்லாரும் சேர்ந்து வெளில போலாமா?” உத்ராவிடம் கேட்டார்.

உத்ரா மனமோ “கிரேட் எஸ்கேப்” என மகிழ்ச்சியில் கூத்தாடியது.

தன் மேல் எத்தனை நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு நாம் தலைகுனிவை ஏற்படுத்தக் கூடாது என அவள் சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை.

கேசவன் அறைக்குள் பிரவேசித்தான் “உனக்கும் வைத்தீஸ்வரனுக்கும் என்ன சண்டை?” கேட்ட நொடி அவள் மகிழ்ச்சி காணாமல் போனது.

“அப்படி எதுவுமில்லையே” சமாளித்தாள்.

“நான் கிட்சன்ல தண்ணி குடிக்க வந்தேன். அப்ப உங்க ரெண்டு பேர் குரலும் அத்தனை சத்தமா கேட்டுச்சி” கொக்கி போட்டான்.

உத்ரா பதட்டமாகத் தன்னையும் மறந்து “அந்த ராஸ்கலை பத்தி பேசாத” என்றாள் சீற்றமாக.

கேசவன் முகத்திலிருந்த தீவிரத்தை அன்னம் கவனித்தார். கேசவன் கேட்கிறான் என்றால் அதில் பொருள் இல்லாமல் இருக்காது என எண்ணியவர்.

உத்ராவின் பதட்டத்தையும் கவனிக்காமல் இல்லை. எதற்குச் சண்டை போட வேண்டும் என அவரும் எண்ணியவர் “உத்ரா எதாவது பிரச்சனையா?” கேட்க

“இல்லமா” உத்ரா நகர முயன்றாள்.

“உன்கிட்ட போன்ல எதோ போட்டோ காட்டினானே” கேசவன் விடுவதாக இல்லை. அதுவும் அவன் முக்கிய கட்டத்தை தொட்டும்விட்டான்.

“என்ன போட்டோ?” சங்கரன் கேசவனிடம் கேட்க .

“அதை உத்ரா தான் சொல்லணும்” கேசவன் பார்வை அவளைத் துளைத்தது.

“சொல்லு உத்ரா அடுத்து யாராவது பெண் பார்க்க வந்தா பிரச்சனை வராம பார்த்துகணும் இல்லையா?” அன்னம் வினவினார்.

உத்ரா “நான் என்னோட வேலை செய்யும் பையனை லவ் பண்றேன். அந்த போட்டோ தான்” பாதி உண்மையை உடைத்தாள்.

“என்னடி சொல்ற?” அன்னம் அலறிவிட்டார்.

“பையன் விவரம் சொல்லு?” பொறுப்பான அண்ணாகக் கேட்டான்.

“பேர் பிரபாகர்” என மிடறு முழுங்கினாள்.

கேசவன் மேஜை மேலிருந்த அவளின் போனை எடுத்து பிரபாகர் எண்ணைத் தேடினான். உத்ரா அவசரமாக போனைப் பிடுங்கினாள்.

“உத்ரா இப்பவே ஒரு முடிவு செஞ்சாகணும்” அன்னத்தின் குரலில் சந்தேகம் துளிர்விட்டது.

உத்ரா கண்களை இறுக மூடித் திறந்தாள். என்றேனும் உண்மை தெரிந்துதான் ஆக வேண்டும். அது இன்றாகவே இருக்கட்டும் என மூச்சை இழுத்துவிட்டாள்.

பின்னர் “பாருங்க எனக்குக் கல்யாணம் குழந்தை இதுல எல்லாம் விருப்பம் இல்ல. வாழ்க்கையைச் சந்தோஷமா கொண்டாடனும். அதனால நான் பிரபாகர் கூட லிவிங் டுகெதர்ல இருக்கேன்.” குரலில் திமிர் தாண்டவமாடியது.

அடுத்த வினாடி கேசவன் பளார் எனக் கன்னத்தில் அறைந்தான். உத்ரா சுருண்டு விழுந்தாள். அவளை அரவணைக்க மற்ற மூவரும் வரவில்லை.

உத்ரா கன்னத்தில் கைவைத்தபடி மெல்ல எழுந்தாள். உடலும் உள்ளமும் எரிந்தது. கேசவனை எரித்துவிடுவதைப் போல முறைத்தாள்.

ஆனால் அவன் ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை. இன்னும் நான்கு அடி கொடுக்கத்தான் துடித்தது. தங்கை என்ற பாசம் மிச்சம் இருந்ததால் விட்டான். கோபமாக அறையைவிட்டு வெளியேறினான். அவன் பார்வை அறையை சுற்றியது.

“ஏண்டி இப்படி பண்ற?” தொண்டை அடைக்க அன்னம் அதிர்ச்சியில் தள்ளாடினார். சங்கரனும் தீபிகாவும் அவரை தாங்கி நாற்காலியில் அமர வைத்தனர். இதைக் கண்ட கேசவன் அவசரமாகக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

கம்பீரமாக வளம் வந்த தன் அன்னை இன்று ஒடுங்கி நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் காணச் சகிக்காத கேசவன் துவண்டு போனான்.

“இவங்க ரெண்டு பேரை வளர்த்த மாதிரி தானே அவளையும் வளர்த்தேன். பின்ன ஏங்க இப்படி?” என அன்னம் புலம்பினார். சங்கரன் அவள் கையை ஆறுதலாகப் பற்றினார். அவர் கண்களும் கலங்கி இருந்தது.

“ஏண்டி உன்னைவிடக் கேசவன் படிப்பு அந்தஸ்து எல்லாத்துலையும் உசந்து நிக்கிறான். அவன் தடம் மாறிப் போனானா? அவனுக்கு வரன் பாக்கையில முதல்ல உத்ரா கல்யாணம் அப்புறமாதான் எனக்குனு சொன்னான். நீ ஏன் இப்படி இருக்க?” அன்னம் சினத்துடன் சீறினார்.

கேசவன் மேல் கடுங்கோபத்தில் இருந்தாள் உத்ரா. இதில் அவனை உயர்த்திப் பேசியது எரிச்சலூட்டியது. இகழ்ச்சிப் புன்னகையை வரவழைத்து “அம்மா அவனுக்கு எந்த பொண்ணும் பிரபோஸ் பண்ணல. அதான் உத்தமன் வேஷம் போடுறான்.” என தன்னால் முடிந்தவரை நஞ்சைக் கக்கினாள்.

“வீட்டைவிட்டு வெளில போடி. இனிமே எங்களுக்கும் உனக்கும் எந்த உறவும் கிடையாது. ஒரு ஆம்பள தண்ணி அடிச்சிட்டு போறவர பொண்ண சைட் அடிச்சா அவன் ஹீரோ. அதே அவன் குடும்பத்துக்காகத் தியாகம் செஞ்சா அவனை அலட்சியமா பேசுவீங்க அப்படிதானே?”

“அவனுக்கு எத்தனை லவ் பிரபோசல் எத்தனை வரன் வந்தது எனக்கும் உங்க அப்பாக்கும் தான் தெரியும். அதை எல்லாம் அவன் நிராகரிக்க காரணம் நீதான் தான் தெரியுமா?”

“உனக்கு அவனைப் பத்தி பேசத் தகுதியே இல்ல. வீட்ட விட்டு வெளியில போ. உனக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எங்க சொத்துலையும் உனக்குப் பங்கு கிடையாது.” என அன்னம் ஆக்ரோஷமாக கண்ணீர் மல்கப் பேசினார்.

“ஆமா கோடி கோடியாவா சொத்து இருக்கு. இந்த புறாக் கூண்டு வீடு. கொஞ்சம் நகை. இது யாருக்கு வேணும்?” என எகத்தாளமாக பேசினாள்.

இதில் தன் தந்தை உழைப்பை அவமதிக்கிறோம் என்ற நினைப்பு அவளுக்குச் சிறிதும் இல்லை.

அன்னம் வெள்ளைத் தாளை எடுத்து எதையோ எழுதினார். அதை அவளிடம் காட்டி “கையெழுத்துப் போடு” என்றார் காட்டமாக.

“எங்கள் மூத்த மகள் உத்ராவிற்கு எங்கள் சொத்தில் பங்கு இல்லை. இதில் அவளுக்கும் சம்மதம்” அதைப் பிடுங்கி துச்சமாகக் கையெழுத்திட்டாள் உத்ரா.

“இதைவிடப் பெரிய பங்களா என்னால வாங்க முடியும்.” என்றபடி அலட்சியமாக கையெழுத்திட்டத் தாளைத் திரும்பக் கொடுத்தாள்.

அப்போது தீபிகா அவளை ஒரு பார்வை பார்த்தாள்.

அதைக் கண்ட உத்ராவிற்கு “உனக்கென்ன பெரிய பெரிய கஸ்டமர் இருக்காங்க” என்பதாக இருக்குமா எனத் தோன்றியது. அப்படி இல்லாமலும் இருக்கலாம். ஒரு நொடி குழப்பமும் அவமானமும் மின்னலடித்து விலகியது. அதை முழுவதுமாக உணர்ந்திருந்தாள் அவள் உத்ரா இல்லையே.

தன் உடைமைகளை எடுத்துக் கொண்டிருக்கையில் சங்கரன் நா தழுதழுக்க “ அம்மாடி அந்த பையனை வரச் சொல்லு எந்த சாதி மதம் இருந்தாலும் பரவாயில்ல உன் சந்தோஷம்தான் முக்கியம். கல்யாணம் செய்து வைக்கிறோம். இந்த லிவிங் டுகெதர்லாம் வேண்டாம்.”

என்ன இருந்தாலும் சீராட்டி தாலாட்டி வளர்த்த பாசம் அல்லவா? உத்ரா இத்தனை பேசியும் அவள் மேல் பாசம் குறையவில்லை.

“அப்பா இது என் வாழ்க்கை. எனக்கு எது பிடிக்குமோ அதை செய்வேன். ஒருத்தர் முகத்தை வாழ்க்கை முழுக்கப் பாக்க முடியுமா? பிடிக்கும் வரை சேர்ந்து இருக்கணும். பிடிக்கலையா தனித்தனியா போயிடணும்”

“குழந்தை பெத்துகிட்டு அதை வளர்த்து ஐயோ நினைக்கவே முடியலை. என்னை விட்டுடுங்க” என்றாள். அவள் பேச்சில் சிறிதளவு கூட குற்றவுணர்ச்சி இல்லை.

அயர்ந்து போனார் சங்கரன். இனி அவளிடம் பேசி பலனில்லை எனப் புரிந்தது.

“வாலிப பருவம், அளவுக்கு மீறிய பணம் இதெல்லாம் அவ கண்ணை மறைக்குது. கணவன் மனைவிங்கற பந்தம் புனிதமானது. அது வெறும் உடல் இச்சைக்காக மட்டும் இல்ல.

நீங்க என்ன சொன்னாலும் அவளுக்குப் புரியாது. சில விஷயங்கள் தானே புரியணும். அவளுக்கும் ஒரு நாள் புரியும். ஆனா அப்ப அவ எல்லாத்தையும் இழந்திருப்பா” என அன்னம் விரக்தியுடன்க் கூறினார்.

தன் உடைமைகளுடன் உத்ரா வீட்டைவிட்டு வெளியேறினாள். இனி வாழ்க்கையில் இவர்களைப் பார்க்கவே கூடாது என்று முடிவுடன்.

இரவு தன் பெங்களூர் அப்பர்ட்மெண்டை அடைந்தாள். மனமும் உடலும் சோர்வாக இருந்தது. நேரடி விமான டிக்கெட் பெங்களூருக்கு கிடைக்காததால் அங்கு இங்கு என அலைக்கழிக்கப்பட்டு வந்து சேர்ந்தாள்.

பிரபாகர் பிராஜெகட் விஷயமாக மலேசியா சென்றிருக்கிறான். அவன் இல்லாத காரணத்தால் தான் சென்னைக்குச் சென்றாள். அதோடு அவளுக்கு விடுப்பும் இருந்தது.

முதல் வேலையாக தன்னுடைய விடுப்பை ரத்து செய்துவிட்டு நாளை மதியம் வருவதாக அலுவலகத்திற்கு மெயில் செய்தாள்.

சோர்வு நீங்கக் குளித்தாள். பின் உணவை ஆர்டர் செய்து உண்டுவிட்டு உறங்கினாள்.

அடுத்த ஒரு வாரம் எந்த சிந்தனையும் இன்றி வேலையில் மூழ்கினாள். இரண்டு முறை பிரபாவுடன் பேசினாள். சொற்ப நிமிடங்கள் பேசிவிட்டு அவன் வேலை இருப்பதாக வைத்துவிட்டான்.

பிரபா வீட்டிற்கு வர வேண்டிய நாளும் வந்தது. விமானநிலையம் சென்று அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாள்.

அவனும் வந்தான் அவளைப் பார்த்து இன்முகத்துடன் மெல்ல அணைத்தான். வீட்டிற்கு வந்து இருவரும் இன்பமாகப் பொழுதைக் கழித்தனர்.

பின்னர் தன் வீட்டில் நேர்ந்ததை ஒன்றுவிடாமல் அவனிடம் சொல்லி அழுதாள்.

“ஹே பேபி கமான். அவங்களை விடு. அதான் நான் இருக்கேன்ல” என்று அவள் கரத்தை ஆறுதலாகப் பற்றினான்.

“லவ் யூ பிரபா”

“லவ் யூ உத்ரா” என அவளை இதமாக அணைத்து இதழில் முத்தமிட்டு விடுத்தான்.

அடுத்த சில நாட்கள் எப்பொழுதும் போலச் சென்றது.

ஒரு நாள் இரவு அவன் தாமதமாக வந்தான். “ஏன்டா லேட்?” அவள் வினவ

தள்ளாடிய படி உள்ளே வந்தான். மூக்கு முட்டக் குடித்திருந்தான்.

“லுக் நீ என் மனைவியும் இல்ல நான் உன் கணவனும் இல்ல. எந்த உரிமையோட கேள்வி கேட்கிற? நான் உன்னோட பிரேக் அப் பண்ணலாம்னு இருக்கேன்” என்றான்.

இதற்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் ஸ்தம்பித்து அமர்ந்துவிட்டாள். காரணம் கேள்வி கேட்கக் கூடாது. அவரவர் விருப்ப படி இருக்கலாம். எப்பொழுது வேண்டுமானாலும் பிரேக் அப் செய்யலாம் போன்ற விதிமுறைகளை வகுத்தது உத்ராதான். அது இன்று அவளுக்கே திரும்பும் என நினைக்கவில்லை.

அவள் கேள்வி கேட்கும் இடத்தில் இல்லை. அவளுக்கு உரிமையும் இல்லை. பிரபா சென்று படுத்துவிட்டான்.

உத்ரா இரவு முழுவதும் ஹாலில் அமர்ந்திருந்தாள். அவனுடன் சென்று படுக்க அவளுக்கு இஷ்டமில்லை.

காலையில் அவன் எழுந்து பார்க்கையில் இரவு இருந்த இடத்திலேயே இருந்தாள்.

அவள் மௌனமாக அமர்ந்திருப்பதை பார்த்ததும் பிரபா அருகில் வந்து “உத்ரா ஏன் இப்படி இருக்க? நம்ம ரிலேஷன்ஷிப் முடியுது. நான் ராதிகாவை காதலிக்கிறேன்” என்றான்.

இங்கு காதல் இல்லை. காமம் மட்டுமே உள்ளது. லவ் யூ, முத்தம், அணைப்பு இதெல்லாம் சாப்பிடுவது, உறங்குவதைப் போல சாதாரண விஷயம்.

அவன் தன் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு பெரும் தொகையை ஆன் லைனில் அவளுக்கு அனுப்பினான். “உனக்கு எதாவது தேவை இருந்தா கேளு” என்றான்.

அவள் மௌனம் காக்கவே சென்றுவிட்டான். அவள் தடுக்கவில்லை.

இந்த பணம் எதற்கு என்ற கேள்வி அவளுள் எழுந்தது. அதன் அர்த்தம் புரிய அவளுக்கு உமட்டிக் கொண்டு வந்தது.

வாஷ் ரூமிற்கு சென்று வாந்தி எடுத்தாள். சட்டென தனக்கு பீரியட்ஸ் தள்ளிப் போனது உரைக்க அவளுள் சுனாமி அலைகள்.


தொடரும் …
 
Top Bottom