• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தீஞ்சுவை தீ - 8

ரோசி கஜன்

Administrator
Staff member


சாம்பவி கண்கள் உத்ராவின் வீட்டை தழுவின. மூன்று படுக்கை அறை கொண்ட பெரிய வீடு. ஆங்காங்கே துணிகள் சிதறிக் கிடந்தன. வீட்டைச் சுத்தமாகப் பராமரிக்கவில்லை எனப் பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொண்டாள் சாம்பவி.

வரவேற்பறை சுவரில் பெரிய அலங்காரக் கடிகாரம் மாட்டியிருந்தது.

சமையலறையில் பாத்திரங்கள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்படவில்லை. கேஸ் ஸ்டவ்வில் டீ பொங்கி வழிந்து காய்ந்திருந்தது.

படுக்கையறை சுவரில் ஒரு புகைப்படம் இருந்தது. அதில் நடுத்தர வயது கணவன் மனைவி ஒரு வாலிபன் இரண்டு இளம் பெண்கள். அனைவர் உதட்டிலும் சம அளவில் புன்னகை. உத்ரா குடும்பம் என்பதை யூகிப்பது பெரிய காரியமாக இல்லை சாம்பவிக்கு.

சாம்பவி இத்தனை எளிதில் உத்ரா வீட்டினுள் நுழைய முடியும் எனக் கனவிலும் நினைக்கவில்லை. எப்படியும் சிரித்து, பேசி, நடித்து வீட்டிற்குள் புக ஒரு மாதமாவது ஆகும் என எண்ணியிருந்தாள்.

ஆனால் உத்ரா தன் திருவாயால் “என் வீட்டிலேயே இரு” என சொன்னதும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானாள் சாம்பவி. “இல்ல உங்களுக்கு எதுக்கு சிரமம், எனக்கு ஹாஸ்பெட்டல் மாடிரூம் கொடுத்திருக்காங்க அக்கா” என மென்மையாக மறுத்தாள்.

உடனே சரியென்றால் நன்றாக இருக்காது பிற்காலத்தில் சந்தேகம் எழலாம். அதனால் முதலில் தனக்கு இதில் விருப்பம் இல்லாதது போலக் காட்டிக் கொண்டாள்.

“இங்க நான் மட்டும் தனியாதான் இருக்கேன். நீ அங்க ரூம்ல தனியா இருக்கறதுக்கு என் கூட இருக்கலாமே” முகத்தை பாவமாய் வைத்து கேட்டாள்.

“இத்தனை பெரிய வீட்டுக்கு வாடகை என்னால …” சாம்பவி இழுக்க

“உன்னை வாடகை தரச் சொன்னேனா?” என உத்ரா பொய்யாகக் கோபித்தாள்.

“சரி அப்ப சமையல் வேலை நான் செய்றேன். சும்மா வீட்டுல தங்க முடியாது” சாம்பவி சொல்ல

“நாம ரெண்டு பேரும் சேர்ந்தே சமைக்கலாம். மத்த வேலை செய்ய ஆள் இருக்காங்க” என்றாள் உத்ரா.

சாம்பவி “சரி இப்ப முதல்ல சாப்பிடுங்க. அப்புறம் மாத்திரை எடுங்க” எனத் தான் கொண்டு வந்த உணவை எடுத்து வைத்தாள்.

உத்ரா டைனிங் டேபிளில் அமர சாம்பவி பரிமாறினாள். சாம்பவியை வலுக்கட்டாயமாய் உத்ரா சாப்பிட அமர்த்தினாள்.

“நான் சாப்பிட்டேன் . பசி இல்ல .. ” சாம்பவி பல வகையில் மறுத்தாலும் இறுதியில் உத்ராவின் பிடிவாதம் அவளை உண்ண வைத்தது.

“சாம்பவி இன்னைக்கே உன் ரூமை காலி செஞ்சிட்டு இங்க வந்திடு” உத்ரா சொல்லவும் மண்டையை ஆட்டினாள் சாம்பவி.

சாப்பிட்டு முடித்ததும் உத்ரா எடுக்க வேண்டிய மாத்திரைகளை சாம்பவி கொடுத்தாள். பின் அவள் தன் உடைமைகளைக் கொண்டுவர கிளம்பிவிட்டாள்.

உத்ரா தன் ஆஸ்தான கார் மெக்கானிக்கை போனில் அழைத்து காரை பற்றிக் கூறினாள். அவனும் பத்து நிமிடங்களில் வந்து பழுது பார்க்கக் காரை எடுத்துச் சென்றான்.

மருந்தின் தாக்கத்தால் அடுத்த ஒரு மணி நேரம் நன்கு உறங்கினாள்.

மாலையில் சாம்பவி தன் உடைமைகளை எடுத்து வந்தாள். உத்ரா மற்றொரு அறையை அவளுக்கு காட்டினாள். அதில் எல்லா வசதிகளும் இருந்தன.

“தேங்க்ஸ்” என சாம்பவி சொல்ல

உத்ரா “கமான்” என்றபடி அவள் முதுகை தட்டி கொடுத்தாள்.

சாம்பவி தன் பெட்டியை வைத்துவிட்டு சமையலறை நோக்கிச் சென்றாள்.

உத்ரா “வெளியே சாப்பிடலாம்” என்றதற்கு சாம்பவி செவி மடுக்கவில்லை.

சமையலறையை சுத்தம் செய்தாள். தான் கொண்டு வந்திருந்த தோசை மாவில் தோசை வார்த்தாள். பின்பு தக்காளி சட்னி செய்து முடித்தாள்.

தோசையும் சட்னியும் ருசியாக இருந்தது. உத்ராவிற்கு தன் அம்மாவின் கைமணம் நினைவிற்கு வந்தது. இனி என்று கிடைக்குமோ அவரின் உணவு என ஏக்கம் உண்டானது.

”சாம்பவி உன் சமையல் சூப்பர்” என்றாள் உத்ரா.

“அட போங்கா .. தோசையை போய் சூப்பர்னு” என முறுவலித்தாள். கடிகாரத்தைப் பார்த்து தானும் உண்ண அமர்ந்தாள்.

“இந்த ஹாஸ்பெட்டல்ல எத்தனை வருஷமா வேலையில் இருக்க?” உத்ரா சாப்பிட்டபடி கேட்டாள்.

“வேலைக்குச் சேர்ந்து ஆறு மாசம் ஆகுது”

“அங்க உனக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காங்களா? அதாவது உதவுற மாதிரி?”

“எல்லா டாக்டரும் தெரிஞ்சவங்க தான். நான் கேட்டா உதவி செய்வாங்க” புருவ முடிச்சுகள் விழ சந்தேகத்துடன் வினவினாள்.

“அப்படி இல்ல பெர்சனலா உதவி செய்றவங்க” என வார்த்தைகளை மென்று முழுங்கினாள் உத்ரா.

“இப்ப உங்களுக்கு என்ன வேணும். அதை சொல்லுங்க”

சற்றே தயங்கி “எனக்கு இந்த குழந்தை வேண்டாம். உனக்கு தெரிஞ்சு டாக்டர் யாராவது கலைக்க?” குரல் கம்மியது.

“ஏன் குழந்தை வேண்டாமா?”

“நான் இருக்கிற சூழ்நிலையில் குழந்தை பெத்து வளர்க்க என்னால முடியுமா தெரியாது. பணப் பிரச்சனை எதுவும் இல்ல. ஆனா குழந்தை வளர்ந்து அப்பா யாருனு கேட்கும்? என்னை தப்பா நினைக்கும். அதான்” இதைச் சொல்லி முடிப்பதற்குள் கண்ணிலும் மனதிலும் முள் குத்திய வலியாகப் பெரும்பாடு பட்டாள்.

“இதற்குத்தான் தன்னை இருத்திக் கொண்டாளா?” சாம்பவி மனவோட்டம்.

உத்ராவின் வேதனையை சாம்பவி நன்கு உணர்ந்தாள். என்ன சொல்வதென்றே அவளுக்குப் புரியவில்லை.

“அக்கா நானே அங்க வேலைக்கு புதுசு. நீங்க சொன்னத அங்க செய்ய மாட்டாங்க.” என்றாள் நிதானமாக.

இந்த பதிலை எதிர்பார்த்த உத்ரா நீண்ட பெரும்மூச்சுடன் தலையசைத்தாள்.

“உங்க வீட்டுகாரர் எங்க இருக்கார் அக்கா?” சாம்பவி விஷயத்தை துருவ முயன்று கேட்டாள்.

கசப்பான புன்னகையுடன் உத்ரா தன் பெற்றோர், உடன் பிறந்தோர். வேலையில் தோழிகளின் பேச்சு. தன் முட்டாள்தனமான முடிவு. காதல் தோல்வி எனத் தேவையான விவரங்களை வடிகட்டி சுருக்கமாகச் சொல்லி முடித்தாள்.

இருவரிடையே பலத்த மௌனம்.

“உன்னை பத்தி சொல்லு சாம்பவி?” உத்ரா பழைய புன்னகையுடன் கேட்டாள்.

சாம்பவி “என் வாழ்க்கையில சொல்ற மாதிரி எதுவுமில்ல .. சொந்த ஊர் மானாமதுரை. பாதியில என் படிப்பை நிறுத்தி எனக்கு அப்பாவும் அம்மாவும் கட்டாய கல்யாணம் செய்தாங்க. சரி இதுதான் தலைவிதினு புருஷன் வீட்டுக்குப் போனேன்.”

“தினமும் குடிச்சிட்டு வந்து என் புருஷன் என்னை அடிச்சு சித்ரவதை செய்தான். அவன் குடும்ப ஆட்களும் எதையும் கேட்க மாட்டாங்க. என்னால தாங்க முடியலை ஒரு கட்டத்துல யாருக்கும் தெரியாம வீட்டைவிட்டு ஓடி வந்துட்டேன். இந்த ஹாஸ்பெட்டல வேலை கிடைச்சது. அம்புட்டுதான்” எனச் சொல்லி சோகமான புன்னகையை உதிர்த்தாள்.

சாம்பவியின் புன்னகை வேதனையைக் காட்டியது.

“உன்னைத் தேடி யாரும் வரலையா?” உத்ரா

“வந்தாங்க நான் கண்ணுல படாம தப்பிச்சேன்”

உத்ரா பேச எத்தனிக்க காலிங் பெல் ஒலி இருவரின் பேச்சைத் தடை செய்தது.

உத்ரா கதவைத் திறந்தாள். மெகானிக் கார் தயாராகிவிட்டது எனச் சாவியை கொடுத்தான். வெளியே நிறுத்தியிருந்த தன் காரைப் பார்த்தாள். புத்தம் புதிதாக ஜொலித்தது. அவனுக்கு அதற்கு உண்டான பணத்தைக் கொடுத்து அனுப்பினாள்.

உத்ரா வந்தமர்ந்து உண்ணத் தொடங்கினாள். “அக்கா நீங்கத் திரும்ப உங்க காதலனோடு சேரப் போறீங்களா?”

“நோ சான்ஸ்”

“உங்க அம்மா அப்பாவோட சேர??”

“எந்த முகத்தோட அவங்க முன்னால போக முடியும்?”

“அப்ப இன்னொரு கல்யாணம்? காதல்?”

“இல்ல சாம்பவி. இனிமே அப்படி ஏதும் இல்ல”

“அப்ப நீங்க குழந்தை பெத்து வளர்க்கலாமே? உங்களுக்குனு ஒருத்தர் இந்த உலகத்துல இருந்தா வாழ்க்கையில ஒரு பற்று வரும் தானே?”

“ஆனா குழந்தை வளர்ந்து என்னை தப்பா நினைச்சா? நான் தானே முறை தவறிப் போனேன்”

“ஆனா நீங்க பிரபாவை உண்மையா காதலிச்சிங்க இல்லையா? கல்யாணம் பண்ற விருப்பம் இருந்தது. உங்க மேல தப்பு இல்லை”

சாம்பவி சொன்னதில் ஓரளவு உண்மை இருந்தது. “குழந்தை வளர்ப்பு சாதாரண காரியமில்லை. என்னால முடியுமா?” உத்ரா சந்தேகமாக கேட்டாள்.

“அதான் நான் இருக்னேல அப்புறம் என்ன?” சாம்பவி

உத்ரா குழப்பத்துடன் மௌனம் காத்தாள்.

“அக்கா நீங்க உயிர்ப்போட இருக்க உங்களுக்குனு இந்த உலகத்துல ஒருத்தர் வேணும். அது ஏன் இந்த குழந்தையா இருக்கக் கூடாது?”

“கேட்க நல்லா இருக்கு சாம்பவி ஆனா பிராக்டிகலா முடியணும் ” சிந்தனைவயபட்டவளாய் பதில்

“அக்கா நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்க தானே” சாம்பவி பொறுமையாக வார்த்தைகளைக் கோர்த்தாள்.

“தப்பா நினைக்க மாட்டேன் கேளு”

“உங்க பிரெண்ட்ஸ் பெண்கள் சுதந்திரமா இருக்கணும் தானே நினைச்சாங்க? அதாவது சுயவிருப்பத்துடன் நடத்தல்” இறுதி வார்த்தைகளை அழுத்தமாகச் சொன்னாள்.

“ஆமா” தலையசைத்தாள்.

“உங்களுக்கு இருந்த சுதந்திரம் உங்க குழந்தைக்கு இல்லையா? இந்த உலகத்துக்குக் குழந்தை வராம தடுக்க நீங்க யாரு?”

உத்ரா தொண்டைக் குழியில் ஏதோ சிக்கியதை போல ஒரு உணர்வு. விதிர்விதிர்த்துப் போனாள்.

இதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சாம்பவி சொல்வது முற்றிலும் உண்மை. தன் குழந்தையின் வருகையைத் தடுக்க தான் யார்? தன் உணர்வுகளை மறைக்கப் பெரும்பாடுபட்டாள். குழப்பம் மேலோங்கியது.

சாப்பிட்டு முடித்ததும் சாம்பவி பாத்திரங்களைக் கழுவும் இடத்தில் வைத்தாள். பின் தயாராகி “அக்கா இன்னிக்கு நைட் டியூட்டி. மறக்காம மாத்திரை சாப்பிடுங்க. போயிட்டு வரேன். “ என்றபடி கிளம்பிவிட்டாள்.

இரவு நெடுநேரம் உறக்கம் வராமல் தவித்தாள் உத்ரா. சாம்பவியின் வார்த்தைகள் அவளுள் தடுமாற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தது.

எது சுதந்திரம்? வாழ்க்கையில் எந்த லட்சியம் குறிக்கோள் இன்றி இப்படித்தான் இருக்க வேண்டும் என்றில்லாமல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் எனத் திரிந்தது தான் சுதந்திரமா?

சுய கட்டுபாடின்றி எவருடனும் ஆட்டம் போடலாம். ஆனால் அதன் விளைவாக கரு உண்டானால் குழந்தை வேண்டாம் என்பது சுதந்திரமா?

சில தோழிகள் தன்னை தவறான பாதையில் வழிநடத்தியதை எண்ணி வெம்பிப் போனாள்.

தான் ஏன் சிந்திக்கவில்லை?

பெற்றோர் சொன்ன வார்த்தைகளை ஏன் மதிக்கவில்லை?

தனக்கு ஏன் இது தவறு என்று தோன்றவில்லை?

தோழிகளின் கைப்பாவையாக தான் ஆகிவிட்டோம் என நினைக்க வெட்கம் பிடுங்கி தின்றது.

பிரபா தனக்குத் தேவையானதை அவர்கள் மூலமாக நடத்திக் கொண்டுள்ளான் என்பதும் புரிந்தது.

சாம்பவி தன்னைவிட வயதில் சிறியவள் எத்தனை முதிர்ச்சியுடன் நடந்து கொள்கிறாள் என அவளுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்தாள்.

தன்னிடமுள்ள அளவுக்க அதிகமான பணம் பாதை மாறச் செய்ததா?

தன் அண்ணன் கேசவன் தன்னைவிட அதிகம் சம்பாதிக்கிறான். அவன் பாதை மாறவில்லை. இன்றளவும் பொறுப்பாக குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிறான்.

சாம்பவி மருத்துவமனை நோக்கிச் செல்லுகையில் அவள் போன் முனகியது.

போன் செய்த நபரின் பெயரைக் கண்டு கோபமுற்றாள்.

“எத்தனை தடவை போன் செய்யாதனு சொல்லி இருக்கேன்” என எடுத்தவுடன் கடித்துத் துப்பினாள்.

“சாரி சாரி உத்ரா வீட்டுக்கு போயிட்டயானு கேட்க” என எதிர்முனை ஆண் குரல் பதட்டத்துடன் கேட்டது.

சாம்பவி “ம்ம் அவ வீட்டுக்கு போயிட்டேன்” என்றாள் மனநிறைவுடன்.

இருமுனையில் இருந்தவர்களுக்கு இது வெறும் தொடக்கம் எனத் தெரியும்.


தொடரும் …
 
Top Bottom