தீஞ்சுவை மலர் -21
ஆரிவும் யமுனாவும் அந்த இடத்திற்கு சென்று உமாவை மீட்டுக் கொண்டு வந்தார்கள்.
அந்தக் காவலாளியின் காலில் விழுந்து நன்றிக் கூறினாள் யமுனா. அவளால் அவர்களுக்கு வேறு என்ன செய்ய முடியும். கண்களில் கண்ணீரோடு கையெடுத்து கும்பிட்டவள் கைகளை பிடித்துக் கொண்ட அந்தப் பெண்,
"பெண்ணை பத்திரமா பார்த்துக்கோங்க. டாக்டர் கிட்ட அழைத்துக் கொண்டு போங்க" என்று ஹிந்தியில் கூறினார். யமுனாவுக்கு ஹிந்தி தெரியாது. ஆனால் அவர்கள் சொன்னதுப் புரிந்தது. ஆரிவ் அவர்களுக்கு ஹிந்திலேயே பதில் கூறி, எப்போது எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்க என்று அவனுடைய கைப் பேசி எண்ணையும் பெயரையும் சேர்த்து சொல்லி விட்டுக் கிளம்பி வந்தார்கள்.
ஆரிவ் தனக்குத் தெரிந்த பெண் மருத்துவரின் கிளினிக்குக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்தான். தேவையில்லாமல் யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம் யமுனாவிடம் கூறி விட்டான்.
யமுனாவுக்கு அப்பாவிடமிருந்து அழைப்பு வந்துக் கொண்டே இருந்தது.
உமாவுக்கு விபத்து என்று மட்டும் கூறினாள் .
எந்த மருத்துவமனை என்றுக் கேட்டவருக்கு "நாங்க பார்த்துக் கொள்கிறோம். சின்ன அடி தான் என்று கூறி சமாளித்தாள். அதே பொய்யை ரமாவிடமும் கூறினாள். பெற்ற வயிறு பதறிப் பிள்ளைக்கு ஆபத்து என்று காட்டி கொடுத்து விடுகிறதே.
"யமுனா நீ பொய் சொல்லறேன்னு தெரியும். என்ன ஆச்சு?அவ இருக்காளா இல்லையா?" என்று கேட்ட ரமாவுக்கு என்ன பதில் சொல்வது தெரியாமல் இவள் முழித்துக் கொண்டிருக்க,
யமுனாவிடமிருந்து போனை வாங்கி ஆரிவ் தான் பேசினான்.
"அவளுக்கு ஒன்னும் இல்ல. நார்மலா தான் இருக்கா . நீங்க சாப்பிட்டு மாத்திரை போட்டு ரெஸ்ட் எடுங்க. காலைல நாங்க அவளை அழைச்சுக்கிட்டு வந்து விடுவோம்" என்று சமாளித்தான். யார் என்ன சொன்னாலும் பெற்றவளுக்குத் தெரியாதா ?
அவர்கள் வீட்டில் இருந்த ரமாவுக்கு மலர் தான் கட்டாயப்படுத்தி இரவு உணவை கொடுத்து உறங்க வைத்தாள் . பிறகு ஆரிவிடம் பேசி நிலையை அறிந்துக் கொண்டாள் .
"ஏன்டா! எனக்கே பதறுதேடா. எப்படி டா அவங்க கிட்ட சொல்லறது? யமுனாவை பத்திரமா பார்த்துகோடா . இந்த மாதிரி நிலமைலதான் உன்னோட தேவை அவங்களுக்கு அதிகம் தேவை."
யமுனாவின் முகத்தை திரும்பிப் பார்த்தவன் ம் மட்டும் கொட்டிக் கொண்டிருந்தான்.
உள்ளேயிருந்து அழைத்த பெண் மருத்துவர் நடந்த விஷயங்களை சொல்லி விட்டார். ஒரு முறை அல்ல. நான்கு முறை என்று அவர் கூறவும் அதிர்ச்சியில் உறைந்து போனவளை தோளோடு அணைத்து தாங்கிக் கொண்டான் ஆரிவ்.
"ஆனா உடளவில் சரிப் படுத்திடலாம். ஆனா ஆரிவ் மனசுளவுல.. பார்த்துக்கோ "
"எஸ் நந்தினி. அவளை எப்ப டிஸ்சார்ஜ் செய்து கூட்டிட்டு போகலாம்?"
"இப்ப ராத்திரி இருக்கட்டும். காலைல சொல்லறேன் "
மருத்துவமனையில் இருவரும் காத்துக் கொண்டிருந்தார்கள். யமுனாவுக்கு கண்கள் அழுது அழுது வீங்கிப் போய் தன்னையும் அறியாமல் உறங்கிவிட்டாள் .
தன்னுடைய தோளில் சாய்ந்து உறங்கியிருந்தவளை அட்டண்டர் படுக்கையில் தூக்கிச் சென்று படுக்க வைத்தவன், வேறு ஒரு அறையில் சென்று உறங்கினான் ஆரிவ் .
இரவில் விழிப்பு வர எழுந்து சென்று உமாவைப் பார்த்தான். உடல் கொதித்தது.பரிசோதனை செய்து விட்டு ஊசி போட்டு மீண்டும் உறங்க வைத்தார்கள் உமாவை. மறு நாள் மதியம் போல வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். பெரியவர்களுக்கு முழுவதும் விஷயம் சொல்லவில்லை. ஆனால் விஷயம் சொன்னார்கள். உமா கண் விழித்து நார்மலாக பேசுவதற்கு இரண்டு நாட்கள் ஆகின. ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தார் தந்தை. ரமாவோ அழுதுக் கொண்டே மகளை பார்த்துக் கொண்டார். அவருக்குத்தன் அதிர்ச்சியில் ஏதாவது ஆகிவிடுமோ என்று இவர்கள் பயந்துக் கொண்டிருக்க அவர் தன்னை சமாளித்துக் கொண்டது பெரிய விஷயம் தான்.
இந்த விஷயத்தை அப்படியே விட முடியாது. விட்டால் இவளை போல இன்னும் பல பெண்கள் கதி என்னாகும் ? பலவாறு புரிய வைத்து ஆரிவ் தனது நண்பன் மூலம் போலீசில் புகார் கொடுத்தான். விஷயத்தை விசாரித்தவரும் நேர்மையானவர் என்பதால்,இவர்களுக்கு பெரிய பிரச்சனை எதுவும் வராமல் பார்த்துக் கொண்டார்.
"இதை பார்மலா கொண்டு போகணுமா வேண்டாமா ?"
"வேண்டாம் " என்று விட்டாள் யமுனா. இதில் ஆரிவுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அவள் சொன்னதை ஏற்றுக் கொண்டான்.
இந்தப் பிரச்சனை இப்படியே முடியக் கூடிய விஷயம் இல்ல. ஆரிவுக்கும் புரிந்தது.
அந்த கேஸ் இல்லாமல் போதை மருந்து கேசில் அவர்களை அரெஸ்ட் செய்து உள்ளே வைத்தார் அந்தக் காவலர் . பதினெட்டு வயது நிரம்பாமல் இருந்த போலீசின் மகனை மட்டும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவன் அப்பாவும் நல்லவர் என்பதால் மகனை இனி அவர் பார்த்துக் கொள்வார் என்று நாம் நம்புவோம்.
இங்கே ஒரு புறம் உமாவின் பிரச்சனை ஓடிக் கொண்டிருக்க பணப் பிரச்சனை இன்னும் பெரிய பிரச்சனையாக வர ஆரம்பித்தது. அருகில் இருப்பவர்கள் யாரும் இவர்களிடம் நட்பு பாராட்டியதில்லை. அதனால் உமாவின் விஷயமும் தெரியாமல் போனது. இல்லையென்றால் வாயிலேயே இன்னும் பல முறை வன்புணர்வு செய்திருப்பார்கள்.
உமாவுக்கு நடந்த இந்த சம்பவம் அவர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்து விட்டது. பொறுப்பில்லாத தந்தைக்கு பொறுப்பு வந்தாலும் மகிழ்ச்சி என்பது தான் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம் என்றாகி விட்டது. ரமா முதலில் செய்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு இப்போது சில அலுவலகங்களில் சென்று சுத்தம் செய்யும் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார். ஓரளவு பணம் வந்தது. மகளுக்கு உடன் இருக்க முடிந்தது.
முதலில் எல்லாம் எழுந்து நடக்கக் கூட முடியாமல் மிகவும் அவஸ்தைப் பட்டாள் உமா. அம்மாவிடம் வாய்த் திறக்க முடியாதவள் உடன் பிறக்காதவளிடம் கதறினாள் .
"அக்கா ரொம்ப வலிக்குதுக்கா " அவர்கள் இருப்பது என்ன பங்களாவா? ஹால் சேர்ந்த சமையல் அறை மேடை உடன் சேர்ந்த ஒரு சின்ன அறை. அதில் பேசுவது அன்னைக்கு கேட்கமலா இருக்கும்?
குழந்தையாக இருந்தவளை நடக்க வைத்து அழகுப் பார்த்த அன்னை , இப்போது அவளை அதே நிலைமையில் கண்டபோது கதறி அழத்தான் முடிந்தது .
தன்னால் தானே அனைவருக்கும் இந்த நிலைமை. முதலில் எல்லாம் ஆர்ப்பாட்டமாக இருந்த உமா இப்போது அமைதியாக அழுதுக் கொண்டிருந்தாள் .
குளித்து விட்டு அறையில் உடை மாற்றிக் கொண்டிருந்த அக்காவின் உடல் அமைப்பு இப்போது உமாவுக்கு கண்ணில் பட்டது.
அவளின் மேல் பகுதி இப்படி மாறுவதற்கு அவள் எத்தனை கஷ்டங்களை அனுபவித்திருப்பாள்? எத்தனை பேர் கசக்கியிருப்பார்கள்? சித்தி வலிக்குது சித்தி என்று எத்தனை முறை அழுதிருக்கிறாள். வேலைக்குச் சென்று வந்தாலே கசங்கி இருக்கும் முகத் தோற்றத்தின் வலி இப்போது புரிந்தது. மனதின் வார்த்தைகளை மறைக்கத் தெரியவள் அதை வெளிப்படையாகவே யமுனாவிடமும் கேட்டாள் .
"உங்க கிட்ட மன்னிப்பு கேக்கற தகுதி கூட எனக்கு இல்லக்கா. எனக்காகத் தானே நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டு.. உள்ளங்கை கோர்த்து பார்த்துக் கொண்டு பேசியவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. வந்த அழுகையை முழுங்க முடியாதவள் அப்படியேத் தொடர்ந்தாள் .
"என்ன செய்து என்ன பிரயோஜனம் . நான் எதையுமே புரிஞ்சுக்கலையே . நீங்களும் அம்மாவும் எவ்வளவோ சொன்னீங்க . எனக்குத் தான் மண்டைல ஏறலை . எல்லாம் அழகா இருக்கோம்னு திமிரு. ஆனா என்ன! எனக்கு புரிய வைக்க கடவுள் சின்ன கொட்டு வச்சுருக்கலாம். இவ்ளோ பெரிய அடி என்னால தாங்க முடியலையக்கா " முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தவள் ஓ என்று கதறி அழுகவும் அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டு முதுகை நீவிக் கொண்டிருந்தாள் யமுனா. இப்போது அந்த அக்காவின் நெஞ்சும் மார்பும் தங்கைக்கு அருவருப்பாக இல்லை. அதன் உள்ளிருந்த வலிதான் புரிந்தது.
நீ குளிச்சுட்டு முதல்ல சாப்பிடு என்று உணவை எடுத்துக் கொண்டு வந்து கையில் கொடுத்தாள் . இப்போது இந்த உமாவுக்கு அந்த அரிசி மாவு கலந்த சாம்பார் கூட அமிர்தமாக இருந்தது.
முதலில் ஒரு வாய் வாயில் வைத்தவள்," எத்தனை நாள் இதே சாப்பாட்டை நான் தூக்கி அடிச்சுருக்கேன் இல்ல?"
"ப்ச்! நீ எதை பத்தியும் நினைக்காத. முதல்ல சாப்பிடு" என்று தங்கைக்கு அப்பளம் சுட்டுக் கொடுத்தாள் . கண்களில் கண்ணீர் வழிய வழிய மறு வார்த்தை பேசாமல் உணவை உண்டு முடித்தாள் .
யமுனா ஆரிவ்வுக்கு அழைத்தாள் . யமுனாவுக்குமே மெண்டல் ஸ்ட்ரெஸ் அதிகமாக இருந்தது . இதற்கு நடுவில் காண்ட்ராக்ட் முடியப் போகுது. இன்னும் இரண்டு வருஷத்துக்கு போடலாம். உன்னோட தங்கையை கூட கூட்டிட்டு வா. இன்னும் *** அழகா இருக்கும் என்று அந்த கிழவன் சொன்னபோது மிகவும் கடினப் பட்டு தன்னை அடக்கிக் கொண்டு வந்தாள் யமுனா. பள்ளியில் நிலைமையை விளக்கி உமா இப்போது சில நாட்களுக்கு விடுமுறையில் இருந்தாள். ஆனால் அடுத்த மாதம் பரீட்சை ஆரம்பித்து விடும். அவளை அழைத்துக் கொண்டு போக வேண்டும் . என்ன செய்வது என்ற பல யோசனைகள் யமுனாவுக்கு.
ஆரிவுக்கு அவள் அழைக்கவும் சில நாட்களுக்கு உமா தன்னுடைய வீட்டில் இருக்கட்டும் என்றான். யமுனா வீட்டில் பேசி விட்டு சரி என்றாள் . அவன் வீட்டில் மலர் இருக்கிறாள் என்ற நம்பிக்கை இருந்தது. மலர் ஆரிவின் மனைவி என்று இவளே நினைத்துக் கொண்டாள் . தன் வீட்டிலிருக்கும் உமாவிடம் அவ்வபோது ஆரிவ் வந்து பேசிவிட்டுச் செல்வான். இதனால் இருவருக்குமிடையே ஒரு நல்ல புரிதல் வர ஆரம்பித்தது. உமா ஆறிவிடும் இயல்பாக பழக ஆரம்பித்தாள் . தன்னுடைய படிப்பு, இன்டரெஸ்ட், ஓவியம், அறிவியல், தன்னுடைய குடும்பம், அக்காவின் வேலை அதனால் அவள் படும் கஷ்டங்கள் என்று எல்லாமே பேச ஆரம்பித்துவிட்டாள் உமா. அவளின் படிப்பை மலர் பார்த்துக் கொண்டாள். இதை எல்லாம் ஒரு எதிர் வீட்டுக்காரனாக இருந்து பார்த்துக் கொண்டிருந்த கதிருக்கு மலர் மீது இன்னும் காதல் அதிகமானது. தன்னுடைய உடல் நலமில்லாத அன்னையை பார்த்துப் பார்த்து கவனித்துக் கொண்டவள் என்ற எண்ணம் தான் இப்போதெல்லாம் அவனுக்கு அவனுக்கு அதிகமாக வருகிறது. இவள் என் மனைவி என்ற உரிமையும் அவளின் நல்ல எண்ணம் பார்த்து பெருமிதமும் அவனுக்கு கூடவே சேர்ந்து வருகிறது.
ஒரு நாள் காலை கதிர் வேலைக்குச் சென்றுக் கொண்டிருந்தபோது சிக்னலில் யூ டர்ன் எடுக்கும் போது சிக்கனலில் இருந்து கிளம்பிய கார் இவன் மீது மோதிவிட கதிர் ரோட்டிலேயே சறுக்கி விழுந்தான். நல்ல நேரம் பெரிய அளவில் ஏதும் அடி இல்லையென்றாலும் வலது கை , காலில் நல்ல சிராய்ப்பு.
சிலர் ஓடி வந்து தூக்கி விட்டு அருகில் இருந்த மருத்துமனைக்கு அழைத்துச் சென்றார்கள் . உடன் வேலை செய்யும் ஒருவன் வந்து வண்டியை எடுத்துக் கொண்டு இவனையும் வீட்டில் விட்டு விட்டுப் போனான்.
நொண்டி நொண்டி நடந்து வந்தவனை உமா தான் பால்கனியில் அமர்ந்து படிக்க கொண்டிருந்த போது பார்த்தாள் . அவளுக்கு கதிரை எதிர் வீட்டில் வசிக்கும் அங்கிள் என்று தான் தெரியும். மலர் வந்தவுடன் அவளிடம் இவள் விஷயம் கூறவும் பதறிப் போனவள் தானாகவே வந்து நின்றாள் அவன் வீட்டின் முன்பு.
"வா மலர்" என்று கதவை திறக்கவும் அவசரமாக அவன் உடல் ஆராய்ந்தாள். 'எனக்காக பதறும் இவள் . எனக்கான ஜீவன்' என்று அவன் மனம் குத்தாட்டம் போட்டது. அவளோ இப்போதும் அவனிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். ஒருவருக்கொருவர் பார்க்காத வரை எதுவும் தெரிவதில்லை. விவாகரத்து வாங்கி விட்டாலும் அருகருகே இருக்கும்போது பயமும் படபடப்பும் இயல்பாகவே வந்து விடுகிறது.
தோளில் சாய்ந்து தனக்காக அழுதவளை அமைதியாக தலையை தடவிக் கொண்டு நின்றான் கதிர். அவளின் படபடப்பு அவனுக்குத் தெரிந்தது .அவர்கள் இருவருக்குமே இப்போது இந்த அணைப்புத் தேவைதான். திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியாக இருந்த போது கூட கதிர் அவளை அணைத்ததில்லை . ஒரே ஒரு முறை அவளை ஆரத் தழுவியிருந்தால் அவளின் நெஞ்சின் ஒலியை அவன் கேட்டிருந்தால் அவளின் காதல் அவனுக்குப் புரிந்திருக்கும்.
அவளின் சூடானக் கண்ணீர் அவனிடம் ஆயிரம் கதை சொன்னது. தன்னை தானே சமாதானம் செய்துக் கொண்டவள் பார்வை நிலைத்து நின்றது சிவகாமியின் சந்தன மலை போடப்பட்ட புகைப்படத்தில் தான். அவளுக்கு அதிர்ச்சி தான் . கதிர் இங்கு வந்தது முதலே இவள் மண்டையைக் குடைந்த கேள்விக்கு பதில் இப்போது கிடைத்துவிட்டது.
அவள் தலையை நிமிர்த்தியவன், அவளின் கண்களைத் துடைத்து விட்டான்.
"எனக்கு ஒன்னும் இல்லை" என்று நடந்த விஷயங்களை சொன்னான்.
அவன் முகத்தை நிமிர்த்துப் பார்த்தாள் . அர்த்தம் புரிந்துக் கொண்டவன்,
"சாப்பிட்டேன் மலர். டாக்டர் கொஞ்சம் வலி தெரியாம இருக்க மாத்திரை கொடுத்திருக்கார்" என்றவன் அனைத்தையும் அவளிடம் காட்டினான்.
அமைதியாக அவன் வீடு விட்டு வெளியில் வந்தாள் . சற்று நேரம் கழித்து அவனுக்கு ஒரு பெரிய பிளாஸ்கில் டீ கொண்டு போய் கொடுத்தாள் . இரவு உணவைக் கொடுத்தாள் . தோசையை விண்டு உண்ணுவதற்கு கஷ்டமாக இருந்தது. அவளே ஊட்டினாள் . அடுத்த சில நாட்களுக்கு அவள் தான் அவளைப் பார்த்துக் கொண்டாள். அவன் இதுவரை யாரிடமும் பேசாதது பலதும் பேசினான் . அவள் அமைதியாக கேட்டுக் கொள்வாள். அம்மா இறந்தது, செல்வி குழந்தை பிறப்பு , அதற்கு வாங்கிய கடன்கள், வெற்றியின் தனிக் குடித்தனம், பிள்ளை பிறந்த நாள் விஷயங்கள், என்று எல்லாம் சொன்னவன் அவன் மனைவியுடன் ஒன்றாக இருப்பது போல தனக்கும் பல கற்பனைகள் ஆசைகள் இருப்பதாகச் சொன்னான். அவள் முகத்தை ஆராய்ந்தவனுக்கு ஏதோ ஒரு ஏமாற்றம். அவளிடமிருந்து எந்த ஒரு உணர்ச்சியும் அவனால் அறிய முடியவில்லை.
அந்த நிலையில் எப்படியாவது தன்னுடைய காதலை அவளிடம் நிரூபித்து விட வேண்டும் என்ற எண்ணம் தான் அவனுக்கு அதிகமாக இருந்தது. இனி இந்த ஜென்மத்தில் இந்தக் காரணம் கொண்டும் அவன் மலரை இழந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அவனை குளிப்பாட்டினாள் . உடை மாற்றி விட்டாள் . அப்போது அவனுக்கு இருந்த மேனி சிலிர்ப்புக் கூட அவளுக்கு இருந்ததா என்றுத் தெரியவில்லை. இந்த அளவுக்கு அவளின் உணர்ச்சிகள் மறைந்து விட்டதா? அவனால் நம்ப முடியவில்லை. இது எல்லாவற்றிற்கும் பதில் கூறக் கூடிய ஒரே ஆள் ஆரிவ் தான். அவன் வாய் திறக்க மாட்டான். அவளை எப்படி மீட்டுக் கொள்வது என்று யோசித்தவனுக்கு ,
மலருக்கு முத்தம் கொடுத்தால் என்ன என்ற விபரீத ஆசை வந்தது. அதை அவன் செயல் படுத்தியதும் பளீரென்று அவனக்கு கன்னத்தில் அரை விழுந்தது ஆசை மனைவியிடமிருந்து . கோபத்தோடு வீட்டுக்கு வந்தவள் பிறகு அவன் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.
நடக்கும் எல்லா விஷயமும் ஆரிவுக்குத் தெரியும். இப்போது மலர் மனம் குழம்பிக் கொண்டிருக்கிறது. பிறகுத் தானே தெளிந்து விடும் அமைதியாக தூர நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
தொடரும்...........