• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தூரத்து வெண்ணிலா தாகம் தீர்க்குதே 07

STN - 62

New member
அத்தியாயம் 07

வாகீஷனைப் பொருத்தவரை இதுதான் என்று பிரத்தியோகமாக அவன் காதலை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவன் இழுத்து விடும் மூச்சின் ஓசை கூட நிரா என்று தான் ஒலிக்கும்.

நிராளினி மீது அவன் கொண்ட நேசம் உயிரில் கலந்தது என்பதால் அவன் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினாலே போதும். அவனுக்கும் நிராளினியை மெனக்கெட்டு கவர்ந்து இழுக்க வேண்டும் என்று தோன்றவில்லை.

இந்த இரண்டு நாட்கள் தன் காதலியுடன் தனிமையில் இருக்க கிடைத்த வாய்ப்பை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டான்.

மெதுவாக சென்று நிராளினி இருந்த அறை கதவை மெதுவாக தட்டினான்; அவள் பயந்து விடக்கூடாது அல்லவா.

அவள் திறக்க மாட்டாள், பதில் சொல்ல மாட்டாள் என்று தெரியும்; இருந்தும் "நிரா! அங்க உள்ள பீரோவுல உனக்கு உடுப்பு இருக்கு.. பாத்ரூம்ல எல்லா வசதியும் இருக்கு.. வேறேதும் வேணும்னா கேளு..." என்று மென்மையாக சொல்ல

அவளிடம் இருந்து ம், ஆ கூட வரவில்லை. ஏக்கமாக கதவைப் பார்த்தவன் அவள் சரியாக நேரம் எடுக்கும் என்று புரிந்து, நேற்று அவள் சரியாக சாப்பிடவில்லையே, அதே நேரம் அவளுக்கு கொடுத்த மாத்திரையின் வீரியமும் சேர்ந்து பசிக்கும். எனவே அவள் வயிற்றை முதலில் கவனிக்கலாம் என்று சமையலறை சென்றான்.

அவளுக்காக முதலில் தேநீர் தயாரிக்க எலெக்ட்ரிக் கெட்டில் தண்ணீரை ஊற்றி, கொதிக்கும் இடைவெளியில் இரண்டு மார்பில் கப் எடுத்து, அதில் சீனி, அங்கர் பால்மா போட்டவன் நெஸ்கஃபே கோபித்தூளை சேர்த்தான்.

இவற்றை செய்யும் போது மனதில் அத்தனை ரசனை. "முதன் முதலா என்ட பொண்டாட்டிக்காக டீ ஊத்துறேன் அவளுக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும் முருகா!..." என்று காதலில் கள்ளத்தனத்தை கடைப்பிடித்த கடவுளையே துணைக்கு அழைத்தான்.

அவன் மனசாட்சியோ (பொண்டாட்டியா ரொம்ப யோசிக்காத.. ரெண்டு நாள்ல உன்ட காதலே புரியல, கருமம் பிடிச்சவனே உன்னோட வாழ ஏலாதுடானு போய்ட்டா என்ன பண்ணுவ...) என்று கேட்க

'அப்பிடி அசால்டா போறதுக்கா கஷ்டப்பட்டு கடத்திட்டு வந்தேன்.. ரெண்டு நாள்ல போறேன்னு சொன்னா கால்ல விழுந்துன்னாலும் இன்னும் ரெண்டு நாள் டைம் வாங்கிட மாட்டேன்...' என்று வாகீஷன் சொல்ல

மனசாட்சியோ (அந்த ரெண்டு நாள் கழிச்சு போகணும்னா...) என்க

'திரும்பவும் ரெண்டு நாள் கேட்பேன்.. ரெண்டு நாள் ரெண்டு நாள்னு இறுதி மூச்சு வரைக்கும் அவள கூட வெச்சிக்க வேண்டியதுதான்...' என்று மனசாட்சியிடம் பதில் சொன்னவன்

தண்ணீர் கொதிக்கவும் அதை எடுத்து கப்பில் ஊற்றி, நுரை ததும்ப ஆற்றி, ஒரு கப்பை எடுத்துக்கொண்டு வந்தவன் அறைக் கதவைத் தட்டி "நிரா! ப்ளீஸ் வெளிய வாடா!..." என்று இரைஞ்சும் குரலில் கூப்பிட்டான்.

மூவரையும் முறைத்துவிட்டு அறைக்குள் வந்தவளுக்கு தன் நிலையை நினைத்து அத்தனை ஆற்றாமையாக இருந்தது. சிறிது நேரம் கட்டிலில் அமர்ந்து சுவற்றை வெறித்தபடி யோசித்தாள்.

அவர்கள் சொல்வதை கேட்பதை தவிர வேறு வழி தெரியவில்லை. அப்போதுதான் வாகீஷன் அவளுக்கான அனைத்தும் அந்த அறையில் இருப்பதாக கூறிச் சென்றான்.

அவளுக்குமே உடல் கசகசன்னு இருக்க, குளித்து உடை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, எழுந்து சென்று பீரோவை திறந்து பார்த்தாள். அவளுக்கான உடைகள் இருக்க அதை எடுத்துப் பார்க்க அவளுக்கு பொருத்தமாக இருக்கும் என்றுதான் தோன்றியது.

"பொல்லாதவன் எல்லாமே செஞ்சு வெச்சிருக்கான்..." என்று வாகீஷனுக்கு திட்டி விட்டு, அதில் ஒரு உடையை எடுத்துக் கொண்டு குளித்து விட்டு வந்தவளுக்கு, அவள் குடலுக்குள் போன மாத்திரையின் வீரியத்தால் சோர்வாகவே இருந்தது.

அப்படியே கட்டிலில் சாய்ந்து அமர்ந்து விட்டாள். வெளியே போவதா வேண்டாமா என்று யோசிக்கும் போது தான் வாகீஷன் அழைக்கவும் சிறிது நேரம் கழித்து கதவை திறந்தாள்.

தன் தாரகையை கண்ட தலைவன் கண்கள் மின்மினியாய் ஜொலித்தது.நேற்று அவன் பார்த்து பார்த்து தேர்வு செய்த உடைகளில், கருப்பு நிற பாவாடையையும் சிகப்பு நிற பஃவ் கை வைத்த சட்டையும் அணிந்திருந்தாள்.

வேறு எந்த அலங்காரமும் செய்யவில்லை, தலைமுடியை கூட தூக்கி கொண்டை தான் போட்டிருந்தாள், நெற்றியில் பொட்டு கூட வைக்கவில்லை.

அவள் எப்படி தோற்றத்தில் இருந்தால் என்ன, அவன் கண்களுக்கு பேரழகியாகத்தான் இருந்தாள். அதிலும் அவன் வாங்கி தந்த உடையில் மினுமினுக்கும் குன்றிமணி போல் அவன் குமரி, அவன் மகிழ்ச்சியின் அளவை சொல்லவே வேண்டாம்.

முகத்திலேயே அது அப்பட்டமாக தெரிய அவனையும் மீறி "வடிவா இருக்க நிரா..." என்றுவிட்டான்.

அவளோ அவனே தீ பார்வை பார்க்க, சுதாகரித்துக் கொண்டவன் "டீ..." என்று அவளிடம் கப்பை நீட்ட, எதுவும் சொல்லாமல் அவள் அதை வாங்கிக் கொள்ள, அவன் முகம் மலர, கையில் இருந்த கப்பை கோபமாக கீழே போட்டு உடைத்து இருந்தாள்.

வாகீஷன் அதிர்ந்து முகம்வாடி பார்ப்பான் என்று அவள் எதிர்பார்க்க, அவனோ பற்கள் தெரிய சிரித்தவன் சமையல் அறைக்குள் போக,

'என்ன இவன், கவலப்படுவான் இல்ல கோபப்படுவான்னு பாத்தா.. ரெண்டும் இல்லாம சிரிச்சிட்டு போறான்...' என்று மனதோடு பேசி குழம்பியவள் ஹாலில் இருந்த சோஃபாவில் வந்து அமர்ந்து கொள்ள,

மற்ற கப்பை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான். அதற்கு இடையில் திரும்பவும் தயாரிக்க வாய்ப்பில்லை; எனவே ஏற்கனவே தயாரித்து வைத்து உள்ளான் என்பது புரிய, அவனை முறைத்துக் கொண்டே வாங்கிக் கொண்டாள்.

"இத போட்டு உடைச்சாலும் திரும்பவும் ஊத்தி தருவேன்..." என்று அவன் சொல்ல

அவள் உடைக்கவில்லை, வீம்பை விட இப்போதைக்கு வயிற்றுக்கும் தொண்டைக்கும் இதமாக ஏதாவது வேண்டும் என்று தோன்ற, ஒரு மிடறு உறிஞ்சி விழுங்கினாள். அவள் கண்கள் தானாக மூடி திறந்தது. அதைப் பார்த்தவன் மனது தனக்கு தானே வெள்ளை தொப்பியை போட்டுக் கொண்டது.

அவளுக்கு பிடித்ததை போன்று நெஸ்கஃபே கலந்து ஊற்றி இருந்தான். நிராளினிக்கு தேயிலை சாயம் அவ்வளவு பிடிக்காது, இது அவள் நண்பர்களுக்கும் தெரியும் எனவே கீர்த்தனா மூலம் தெரிந்து இருக்கும் என்று நினைக்க, அவனும் அதையே சொன்னான்.

"உனக்கு பிடிச்ச கோப்பி போட்டு கலந்தேன் பிடிச்சிருக்கா?..." என்று கேட்க

அவள் நிமிர்ந்து பார்க்க "கீர்த்தனாட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்..." என்று அவள் கேட்காத கேள்விக்கும் சேர்த்து பதில் சொன்னான்.

எதுவும் கூறாமல் அவள் டீயை குடிக்க, அவளை ஒரு நொடி ரசித்துப் பார்த்தவன், சமையலறை சென்று ஒரு வாளியில் தண்ணீரும் ஒரு துண்டும், ஒரு பேப்பரும் எடுத்து வந்தவன், அவள் உடைத்த கப்பின் துண்டுகளை எடுத்து பேப்பரில் வைத்து விட்டு, காங்கிரீட் நிலம் என்பதால் நிலத்தில் இருந்த டீ மீது தண்ணீரை ஊற்றி, துண்டை கொண்டு துடைத்து எடுத்தான்.

அவன் செய்வதை கண்டும் காணாமல் தன் டீயை குடித்து முடித்தாள் நிராளினி.

தரையை சுத்தம் செய்தவன் அவளுக்கு சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டுமே, மா எதுவும் வறுத்து வைக்கவில்லை. அவசரத்திற்கு நூடுல்ஸ் செய்து கொடுக்கலாம் ஆனால் காலை உணவாக அதை கொடுக்க விரும்பாதவன் சுதாகரனுக்கு அழைத்து "மச்சான் அரிசிமா புட்டும் சம்பலும் வாங்கி வா..." என்று சொல்ல

"ஏன் துரை வேற எதுவும் சாப்பிட மாட்டீங்களா!..." என்று சுதாகரன் கேட்க

"டேய் நிராக்கு டா அவளுக்கு அதுதான் பிடிக்கும்..." என்று சொல்ல

"ஓ மை ஹாட்.. கடத்தி வந்ததையே மறந்துட்டேன்டா..."

"என்ன மறந்துட்டியா?..."

"ஓம்டா.. கீத்துவ சமாதானப்படுத்த வழி யோசிச்சே, எதுக்கு சமாதானப்படுத்த என்றதையே மறந்திட்டேன்..." என்று சுதாகரன் அசடு வழிந்தது வாகீஷனுக்கு ஃபோனிலேயே தெரிந்தது.

"நல்ல ஆள்டா.. சரி கெதியா வாங்கிட்டு வா..." என்று சொல்லி அழைப்பை துண்டித்தவன்,

அவன் கோயில் சிலையை தான் ரசித்துப் பார்த்தான். எட்டு வருட தவம் அவளை அவன் சேர வேண்டும் என்பது. இதோ தான் அவளுக்காக கட்டிய வீட்டில் தன்னவள். கால்கள் நிலத்தில் தான் இருக்கின்றதா என்ற சந்தேகம் தோன்ற கீழே குனிந்து பார்த்தான்.

அவளிடம் கேட்க ஆயிரம் இருந்தன, அவளிடம் சொல்ல லெட்சம் வார்த்தைகள் இருந்தன. ஆனால் இப்போது எதுவும் நினைவிற்கு வரவில்லை அவளை பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்ற நிலையில் இருந்தான்.

சுதாகரன் சாப்பாட்டுடன் வந்தவன் உள்ளே வராமல், ஃபோனில் வெளியே அழைத்து சாப்பாட்டை கொடுத்து விட்டு செல்ல, வாகீஷனும் சாப்பாட்டை ஒரு தட்டில் எடுத்து வைத்தவன் நிராளினியிடம் கொண்டு போய் கொடுக்கவும்,

டீ குடித்ததால் சற்று தெம்பு வந்து இருக்க, வாகீஷன் மீதான கோபமும் மீண்டும் வர, சாப்பாட்டை வாங்காமல் கையை கட்டிக்கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"நிரா பசிக்கும்டா சாப்பிடு..." என்று சொல்ல, காது கேட்காதவள் போல் இருந்து கொண்டாள்.

"நிரா ப்ளீஸ்டா.. கோபத்த சாப்பாட்டுல காட்டாத.. உனக்கு பிடிச்ச புட்டுதான் சாப்பிடு..." என்று சொல்ல எங்கிருந்துதான் அத்தனை ஆவேசம் வந்ததோ, கடத்திக் கொண்டு வந்து வைத்துவிட்டு பிடித்த விடயங்களை பார்த்து பார்த்து செய்தால் மயங்கி விடுவாள் என்று நினைத்து விட்டானா என்று கோபம் வர,

அவன் கையில் இருந்த தட்டை மேல் நோக்கி தட்டி விட, சாப்பாடு சிதறி அவன் முகத்தில் தான் விழுந்தது. சோஃபாவில் அமர்ந்திருந்த நிராளினி நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

அவன் முகத்தில் கோபத்தின் சாயல் தெரிகின்றதா என்று, அவள் எதிர்பார்த்த கோபம் ஒரு நொடி வந்ததுதான். அது தன் மீது சாப்பாடு சிந்தியதற்காக இல்லை, ஒருவேளை சாப்பாட்டை வீண் செய்து விட்டாளே என்றுதான்.

அந்த கோபம் வாகீஷனுக்கு வரவில்லை என்றால் தான் தவறு. ஏனென்றால் ஒருவேளை உணவு கிடைக்காதா என்று பசியில் வாடியது அவனுக்கு தானே தெரியும். அதுவும் அவளுக்காக தானே.

எதுவும் பேசாமல் கீழே கிடந்த தட்டை எடுத்து, சிந்தி கிடந்த உணவை கையால் கூட்டி அதில் அள்ளி வைத்தவன் சிந்தனை அவனையும் அறியாமல் எட்டு வருடங்கள் பின் சென்றது.

நிராளினி சொல்லுக்கு கட்டுப்பட்டு, தன் தகுதியை உயர்த்திக் கொள்ள ஊரில் கடன் வாங்கி, குவைத்திற்கு வேலைக்கு சென்றான். அங்கு வேலை தருவதாக கூறியவன் முதலில் ஒரு அறையில் தங்க வைத்து இருந்தான்.

10 நாட்கள் கழிந்தும் அவன் வேலையில் சேர்த்து விடவில்லை என்றதும் தான், விசாரிக்கும் போது அவன ஏமாற்றி சென்ற விடயம் தெரியவந்தது.

கையில் ஒரு ரூபாய் கூட இருக்கவில்லை. அறையின் வாடகை, அடுத்தவேளை சாப்பாடு என்று பரிதவித்து நின்றான் அந்த 22 வயது வாலிபன்.

அதுவரை அவன் தாய் திலகம் வயிறு சுருங்க விட்டதில்லை. ஆனால் காதலுக்காக கடல் கடந்து வந்து பச்சை தண்ணீர் மட்டும் அருந்தி பட்டினி கிடந்தான். ஒரு நேர சாப்பாடு கிடைக்காத என்று ஏங்கினான். அதற்காக நாயாக வேலை தேடி அலைந்தான்.

அப்படி அவனுக்கு முதலில் கிடைத்த வேலை தான் கார் கழுவுவது. பசியோடு காரை கழுவி, அதற்கான கூலியை வாங்கி, உணவு உண்ட போது எப்படி உணர்ந்தான் என்று அவனுக்கு மட்டுமே தெரியும்.

அதன் பிறகு தான் கார் ட்ரைவராக வேலை கிடைத்து, கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வளர்த்து, கனரக வாகனம் ஓட்ட ஆரம்பித்தான்.

ஒருவேளை உணவுக்காக வேலையில் சேர்ந்தவன், அதன் பின் அந்த ஒருவேளை உணவை கூட திருப்தியாக உண்ணாமல் இரவு பகலாக உழைத்தது தன்னவளுக்காக மட்டுமே. அதை நினைத்தவன் மனம் சற்று சமன்பட்டது.

அவன் தேடியது அவளுக்கு இல்லாமல் வேறு யாருக்கு என்று நினைத்தவன் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.

இப்போது அவன் கண்களுக்கு சிறு குழந்தையாகவே தெரிந்தாள். அவன் பெற்ற பிள்ளை இப்படி செய்தால் கோபம் வருமா, அந்த மனநிலையில் தான் இருந்தான்.

காதல் கிழத்தியை கடத்தி வந்த குற்றத்திற்கு தண்டனையாக அவள் எச்சில் கையால் அடித்தால் கூட ஏற்றுக் கொள்ள சித்தமாகத்தான் இருந்தான்.

சிதறிய சாப்பாட்டை எடுத்துக்கொண்டு சமையலறை சென்றவன், அவனுக்காக வைத்த சாப்பாட்டை எடுத்து வந்து நிராளினியை பார்க்க, சோஃபாவில் அவள் இல்லை.

வாகீஷன் கீழே ஒரு காலை மடித்து அமர்ந்து உணவை அள்ளும் போது அவளுக்குள் அத்தனை கஷ்டமாக இருந்தது. என்னதான் செல்வ செழிப்பில் வளர்ந்தாலும் அடுத்தவர்களின் கஷ்டங்கள் என்ன என்று யோசித்து நடப்பவள்.

இன்று உணவை அவமதித்து தட்டி விட்டதை அவளாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அழுகை வரவும் எழுந்து அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

வாகீஷனும் அவளை தேடி அறைக்கு வந்தவன், எதுவும் பேசாமல் அவள் அருகே சாப்பாட்டை வைத்து விட்டு சென்று விட்டான். அவளும் உணவை காக்க வைக்காமல் உண்டு முடித்தாள்.

நிராளினி சாப்பிடுவதை மறைந்து இருந்து பார்த்தவன், சமையலறை வந்து அப்போதுதான் தனக்காக நூடுல்ஸ் தயாரித்து சாப்பிட்டான். அவனுக்குமே நல்ல பசி நேற்று இருந்து சாப்பிடவில்லையே.

நிராளினி சாப்பிட்டு முடித்தவள் தட்டிலேயே கையை கழுவி விட்டு சிறிது நேரம் இருந்தவளுக்கு, எச்சில் தட்டை அப்படியே வைத்திருக்க ஒரு மாதிரியாக இருக்க, அதை எடுத்துக் கொண்டு சமையலறை வந்தாள்.

வாகீஷனும் அப்போதுதான் சாப்பிட்டு முடித்தவன், தன் தட்டை கழுவ சிங்கிள் போட்டு விட்டு திரும்ப, நிராளினி தயக்கமாக நின்று இருந்தாள். "தாடா..." என்று அவன் தட்டை கேட்க

"இல்ல விலகுங்க.. நானே கழுவி வைக்கேன்..." என்று நிராளினி சொல்ல

"அதெல்லாம் வேணாம்.. என்னுட்ட தந்துட்டு நீ போய் டிவி பாருடா..." என்க

எச்சில் தட்டை அவனிடம் எப்படி கொடுக்க என்று, அவள் அவனை முறைக்க, "என்ன!.. நான் கழுவ கூடாதா?..." என்று அவன் தட்டை பிடிக்க

"இல்ல வேணாம்..." என்று அவள் இழுக்க, தட்டில் இருந்த அவள் கை கழுவிய நீர் அவன் மேல் ஊற்றி விட ,

"ஐயோ!..." என்று அதிர்ந்து நிராளினி அவன் முகம் பார்க்க, அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

"சோத்துலையும் அடி வாங்கியாச்சு சேத்துலையும் அடி வாங்கியாச்சு என்ற மாதிரி ஆச்சி என்ட நிலைம..." என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்ல

என்ன இவன் கோபப்படாமல் சிரிக்கிறான் என்று தான் அவளுக்கு தோன்றியது. அவன் சற்று நேரம் முன் எச்சில் கையால் அடித்தாலும் வாங்க தான் வேண்டும் என்று நினைத்தது அவளு
க்கு தெரியாது அல்லவா.

"சொரி..." என்றவள் திரும்பி நடக்க

"நிரா ரெண்டு அடி கூட அடிச்சுக்க.. மன்னிப்பு கேட்காத..." என்றான். அந்த காதல் கிறுக்கன்.
 
Top Bottom