• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தூரத்து வெண்ணிலா தாகம் தீர்க்குதே 10

STN - 62

New member
அத்தியாயம் 10

கீர்த்தனா சுதாகரனிடம் நேரடியாக பேசுவதில்லை. ஒன்று மறைமுகமாக ஜாடை பேசுவாள், இல்லையென்றால் பிள்ளைகளிடம் பேசுவது போன்று பேசுவாள்.

அவனும் காதல் மனைவியை கைக்குள் போட தலைகீழாக நின்று பார்த்து விட்டான், நிராளினி வாகீஷனை ஏற்றுக் கொண்டால் பேசுவேன். இல்லை என்றால் கடைசிவரை இப்படித்தான் என்று சொல்லிவிட்டாள்.

வாகீஷனின் காதல் எந்தளவிற்கு ஆழம் என்று தெரியும். ஆனாலும் கணவன் ஒரு பெண்ணை கடத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாமலும், அவனை மொத்தமாக விலக்கி வைத்து தண்டிக்க முடியாமலும் தான், மறைமுக உரையாடல்கள்.

இப்போது வீதியில் இருவரும் நடந்து கொண்டிருக்க, அங்கு நின்ற நாயை பார்த்து "ஏய் நாயே!.. எதுவும் தெரியாத ஒருத்திய கடத்திட்டு வந்ததும் இல்லாம.. துணைக்கு கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்த என்னையும் இழுத்துட்டு வாரத பாரு..." என்று சொல்ல

'நாயா! என் நிலைம இந்தளவுக்கு மோசமாகும்னு நினைக்கலையே முருகா!...' என்று மனதில் நொந்தவன்

"ஏன்டி நீ அவ கூட கதைச்சிட்டு இருந்தா அவங்க ரெண்டு பேரும் கதைச்சு புரிஞ்சுக்க வேணாமா?.. அதுவும் இல்லாம வாகீ தாலி வாங்கிட்டு வந்தான்.. எப்டியும் தனியா காட்டி, தன் நேசத்த புரிய வைக்க யோசிச்சிருப்பான்.. அதான் உன்ன கூட்டிட்டு வந்தேன்..." என்று சுதாகரன் சொல்ல

'என்ன தாலியா!.. அவள் இருக்கிற மனநிலைக்கு அத பாத்தாள்னா கத்தி ஆர்ப்பாட்டமே பண்ணிடுவாளே...' என்று நினைத்த கீர்த்தனா

"ஏங்க வாங்க..." என்றவாறு வாகீஷன் வீட்டை நோக்கி நடக்க,

"என்னடி.. எதுக்கு?..." என்று சுதாகரன் கேட்க

"தெரியல.. ஆனா எதுவோ சரியில்லனு தோணுது..." என்று சொல்ல

சரியென்று கீர்த்தனாவோடு வாகீஷன் வீட்டினுள் நுழைந்தவன் கண்டது, இரத்த காயத்தோடு நின்ற நண்பனைத்தான்.

கீர்த்தனாவும் அதிர்ந்தவள், ஓடி வந்து நிராளினியை உலுக்கி "என்னடி செஞ்சு வெச்சிருக்க..." என்று திட்ட

அதற்கிடையில் சுதாகரன் வாகீஷனின் கையில் இருந்த தாலியை வாங்கி, டீப்பாயில் வைத்து விட்டு, அவனை அழைத்துச் சென்று காயத்தை நீரில் கழுவினான்.

கீர்த்தனா ஓடி சென்று கோமதியிடம் விடயத்தை சொல்ல, அவரும் கையில் துணியுடன் ஓடி வந்தார். அந்த துணியை வாங்கி வாகீஷன் தலையைச் சுற்றி கட்டிய சுதாகரன் அவனை அழைத்துக்கொண்டு வைத்தியசாலை சென்றான்.

அத்தனையும் நடந்து முடியும் வரை உடலின் நடுக்கம் குறையாமல் அங்கேயே நின்று விழிகளை மட்டும் நகர்த்தி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள் நிராளினி.

வாகீஷனை அனுப்பி வைத்த பின்னர்தான் கோமதியும் கீர்த்தனாவும் நிராளினியை பார்த்தனர். என்ன நடந்து இருக்கும் என்று கீர்த்தனாவால் யூகிக்கக் கூடியதாக இருந்தது.

கோமதிக்கு எதுவும் தெரியவில்லை என்றாலும் வாகீஷன் தவறு செய்திருக்க மாட்டான் என்று நிச்சயமாக தெரியும். நிராளினியை கோபமாக பார்த்து விட்டு, பார்வையை திருப்பியவர் கண்ணில் பட்டது டீப்பாயில் இருந்த ரத்தம் தோய்ந்த தாலி.

அதை கையில் எடுத்தவர் "அவனோட வேர்வ சிந்தி உனக்காக வாங்கி இருக்கான்.. இப்போ உன்னால ரத்தமும் சிந்தியாச்சு.. இத உன்ட கழுத்துல போடுறதுக்குள்ள இன்னும் என்னெல்லாம் அவன் அனுபவிக்கனுமோ..." என்று அந்த தாலியை தூக்கி காட்டியவர், கோபமாக சென்று அதில் இருந்த இரத்த கரையை கழுவி விட்டு வர,

வாகீஷனை அடித்து காயப்படுத்திய அதிர்ச்சியில் இருந்தவள் பொம்மை போன்று நடந்து சென்று மாடிக்கு செல்லும் படிகளில் அமர்ந்து கொள்ள,

கீர்த்தனாவோ "எதனால இந்த கலவரம்னு புரியுது நிராளி.. ஆனா அண்ணா கண்டிப்பா உன்ட விருப்பம் இல்லாம தாலிய பூட்டி இருக்காது.. உன்னுட்ட காட்ட தான் எடுத்து இருக்கும்..." என்று சொல்ல

கழுவிய தாலியைத் துடைத்து, சாமி கும்பிட்டு, பூஜை அறையில் வைத்த கோமதி ஹாலுக்கு வந்து கீர்த்தனாவிடம் நிராளினியை கண்களால் கேட்க, படியில் சாய்ந்து இருந்தவளை அவளும் கண்களால் காட்ட ,

நிராளினியை விவேகமாக நெருங்கி, அவள் புஜத்தை பற்றி தூக்கியவர், அவள் கையைப் பிடித்துக் கொண்டு மாடிப்படிகளில் ஏற, அவரோடு இழுபட்டு சென்றாள்.

முதல் மாடியில் கீழ்த்தளம் போன்று நான்கு அறைகள் ஹால் என்று இருக்க, "நல்லா பாரு...!" என்று சுற்றிக்காட்ட

நிராளினி கண்களில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை. அப்படியே இரண்டாவது மாடிக்கு அழைத்துச் செல்ல, அங்கு இரண்டு அறைகள், ஹால், நீச்சல் குளம் இருந்தது.

அப்படியே மூன்றாவது மாடி அழைத்துச் செல்ல, ஒரு அறை, பெரிய ஹால், பால்கனி என்று இருக்க, வெட்ட வெளியில் இருந்து கதை பேசுவதற்காக என்று சீமெந்து கதிரை மேஜைகள் இருந்தது.

பால்கனிக்கு அழைத்து வந்த கோமதி "இந்த வீடு உனக்காக அவன் பாத்து பாத்து கட்டுறது.. அப்டியே இந்த பக்கம் பாரு...!" என்று அவள் முகத்தை பிடித்து திருப்ப,

வலது பக்கமாக முருகன் கோயில் கோபுரம் தெரிந்தது. உயரத்திலிருந்து பார்ப்பதால் அண்ணாந்து பார்க்காமல் கண்களுக்கு நேர் இருந்த கோபுர அழகு கண்ணை பறித்தது.

"உனக்கு முருகன் பிடிக்கும்.. முருகன் கோயில் பக்கத்துல வீடு இல்லனு நீ வருத்தப்பட்டனு, தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வச்சு இந்த வளவ வாங்கி வீடு கட்டுனான்.. நீ கோயில் கோபுரத்த கூட நிமிந்து பாக்கக் கூடாதுனுதான் இவ்ளவு உசரத்துக்கு வீடு கட்டுனான்.. ஏன் தெரியுமா அண்ணாந்து கோபுரத்த பாத்தா உன்ட கழுத்து நோக்குமாம்.. அப்படிப்பட்டவன் உன்ன கடத்திட்டு வந்தா, நீ என்னலாம் கஷ்டப்படுவன்னு தெரிஞ்சும் செஞ்சான்னா அவனுக்கு உன்ட காதல அடைய வேற வழி இல்லன்னு அர்த்தம்..." என்ற கோமதி

அவள் கையை விடாமல் கீழே அழைத்து வந்து, வீட்டின் வெளியே வந்தவர், கீர்த்தனாவிடம் "எங்கடி அந்த சாவி..! இங்க இருக்கா வீட்டையா?..." என்று கேட்க

கீர்த்தனா சுவாமி அறை சென்று, அங்கு கபட்டில் இருந்த ஒரு சாவியை எடுத்து வந்து கொடுக்க, அருகே இருந்த கார் கேரேஜ்ஜை திறக்க, கருப்பு நிறத்தில் டொயோட்டோ பிரியஸ் கார் ஒய்யாரமாக நின்று இருந்தது.

நிராளினியின் கண்கள் சற்று விரிந்தது. அது அவளுக்கு பிடித்த கார். நிரஞ்சன் வைத்திருக்கின்றான். அவள் எத்தனையோ முறை ஓட்ட கேட்டும் அவன் கொடுத்தது இல்லை.

புது கார் கேட்டதற்கு திருமணத்திற்கு சீதனமாக வாங்கி தருவதாக கூறிவிட்டனர் பெற்றோர். அதிலும் ஜெயந்தி "டீச்சர் உனக்கு எதுக்கு தனிக்கார்.. அதுக்கு நகை ஏதாவது செஞ்சு வச்சா உதவும்..." என்று விட்டார்.

"இதுவும் உனக்கு தான் வாங்கி வெச்சிருக்கான்.. இது மட்டுமில்ல அவன் பேர்ல ஒரு மரமில் இருக்கு.. அரிசி மில் கட்ட இடம் வாங்கி போட்டு வேலையெல்லாம் முடிஞ்சு.. நீ வந்ததும் உன் கையால திறக்கனும்னு வெச்சி இருக்கான்.. இது எல்லாமே நீ சொன்ன ஒத்த வார்த்தைக்காக தான்..." என்று கோமதி சொல்ல

திகைத்துப்போய் அவரை பார்த்தவள் "நான் சொன்ன ஒத்த வார்த்தைகாகவா?..." என்று கேட்க

"ஓம்.. உன்ட வார்த்தைக்காக.. உனக்காக..." என்று அழுத்தி சொன்னவர், அவளை விட்டு விட்டு வந்து ஹாலிருந்த சோஃபாவில் அமர்ந்து கொள்ள,

திரும்பி அந்த காரை ஒரு நொடி பார்த்தவள், உள்ளே வந்து அவர் அருகில் அமரவும் "இதோ இந்த சாமான் எல்லாம் இரவோட இரவா உனக்காக வாங்கி போட்டதுதான்.. கடத்திட்டு வந்து உன்ன கஷ்டப்படுத்தினானா.. கைய புடிச்சு இழுத்தானா.. அவன்ட காதல கூட வாய திறந்து சொல்ல தெரியாதவன்..." என்று கோமதி சொல்ல

தன் இரண்டு கையையும் முடங்காலில் குற்றி, தலையைத் தாங்கிய நிராளினி "அப்பிடி என்ன காதல்.. ஆராவது சொல்லுங்க.. எனக்கு எதுவுமே சரியா ஞாபகம் இல்ல..." என்று கேட்க, கோமதி சொல்ல ஆரம்பித்தார்.

********
சரியாக 9 வருடங்களுக்கு முன்பு. அப்போது நிராளினிக்கு 17 வயது, ஏ.எல் முதல் வருடம் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்த சமயம்.

வாகிசனுக்கு 21 வயது. தந்தை சிவலிங்கத்திற்கும் தாய் திலகத்திற்கும் பிறந்த மூத்த ஆண் வாரிசு. வாகீஷனுக்கு பிறகு பெண் குழந்தை ஒன்று கிஷாயினி, என்று பாந்தமான குடும்பம்.

எல்லா ஆண் பிள்ளைகளையும் போல் அம்மா செல்லம் எல்லாம் இல்லை வாகீஷன். அவன் அப்பா செல்லம். அவனின் முதல் ஹீரோ அவர்தான். சிவலிங்கத்திற்கும் வாகீஷன் மீது கொள்ளை பிரியம்.

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்க, யாரும் எதிர்பார்க்காத நேரம் வாகீஷனின் 16-வது வயதில் சிவலிங்கம் விபத்து ஒன்றில் இறைவனடி சேர்ந்து விட, இரு பிள்ளைகளை வைத்துக்கொண்டு தவித்து நின்றார் திலகம்.

சிவலிங்கத்தின் மொத்த கட்டுப்பாட்டின் கீழ் இருந்த குடும்பத்தை தன் ஆளுகையின் கீழ் கொண்டுவர திலகம் மிகவும் கஷ்டப்பட்டார்.

தந்தைக்கு அடுத்து குடும்பத்தை தாங்கிப் பிடிக்க வேண்டியது தனையன் தானே. அப்போதுதான் வாகீஷனின் ஓ. எல் ( சாதாரண தர பரீட்சை) பரீட்சை முடிவுகள் வெளியாகி இருந்தது.

நன்றாக படிக்கக் கூடியவன் தான். ஒன்பது பாடத்தில் சிறப்பு நிலைக்கு மேல் அவன் பெறுபேறுகள் இருந்தும் மேற்கொண்டு படிக்கும் சூழ்நிலை அவனுக்கு இருக்கவில்லை.

திலகம் காலையில் இடியாப்பம் அவித்து விற்பது, மாலையில் தயிர் ஊற்றி விற்பது என்று காலத்தை கடத்த, தந்தை இருந்தபோது தாய் எப்படி இருந்தார், அவரை இனியும் வருந்த விட மனமில்லாததால் வேலைக்கு செல்ல முடிவு எடுத்தான்.

திலகமும் வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தார். ஆனாலும் குடும்ப சூழ்நிலை, மேற்கொண்டு படிக்க வைப்பது என்பது சிறிய விடயம் இல்லை. பாடசாலையில் இலவச கல்வி என்றாலும் இதர சிறப்பு வகுப்புகள் சென்றால் தான் சிறந்த பெரும்பேறு பெற முடியும்.

இல்லையென்றால் இரண்டு வருட காலம் வீண்தான், எனவே மகனின் முடிவை ஏற்றுக்கொண்டார்.

சுதாகரனின் நிலையும் அதேதான். மேற்கொண்டு படிக்க அவனுக்கு விருப்பமில்லை, காரணம் நான்கு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. அந்த வெட்கத்தில் பாடசாலை போக முடியாது என்று கூறிவிட்டான்.

நண்பர்கள் இருவரின் குடும்பமும் வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என்பதால், அவர்கள் சம்பாத்தியம் இருந்தால் நல்லது என்று தோன்ற வேலைக்கு செல்ல தடை எதுவும் வரவில்லை.

அப்படி என்ன வேலைக்கு சென்று விடப் போகிறார்கள், இவர்களைப் போல் பாதியில் படிப்பை விட்ட, படிப்பு வராத பெரும்பான்மையான ஆண்கள் செல்வது மேசன் கூலி, தச்சன் கூலிதான்.

மேசன் கூலி என்றால் சீமெந்து குழைத்து, சீமெந்து புழுதி, ஈரம், வெயில், என்று தாங்கி நின்று, கை இளகி தோல் உரிந்து, காலில் சீமெந்து படிந்து என்று அவர்கள் பாடு அவர்களுக்குத்தான் தெரியும் .

தச்சு கூலியும் சும்மா இல்லை, கூரை வேலையில் வெயிலில் உயரத்தில் உயிரை பணயம் வைத்து நின்று, உள்வேளை என்றால் மரத்தை தோல் சீவும் போது காது மூக்கு முதல் கொண்டு உடல் முழுவதும் மர துகள்களுடனே வேலை செய்ய வேண்டும்.

என்னதான் மூக்குக்கு துணி கட்டி மறைத்தாலும், சாப்பிடும் போது ஒரு துண்டு மரத்துகளாவது வாய்க்குள் செல்லாமல் இருக்காது.

இந்த இரண்டு வேலை செய்பவர்களை எளிதாக கண்டு கொள்ள முடியும். என்னதான் தேய்த்து குளித்தாலும் சீமெந்தின் கரையும், மரத்துகளின் வாசமும் அவர்களில் இருக்கும் .

இதில் மேசன் கூலிக்கு தான் சுதாகரனும் வாகீஷனும் சென்றனர். காரணம் சுதாகரனின் அக்கா கோமதியின் கணவன் செல்வகுமார் மேசன் பாஸ். அவரின் கீழ் வேலை செய்யவே இருவரும் சென்றனர்.

இவர்களுடன் வேறு நான்கு பேரும் வருவார்கள். எனவே அனைவரையும் ஒரே இடத்தில் கூடி நிற்க சொல்லி, அழைத்துச் செல்வார் செல்வகுமார்.

அந்த இடம்தான் மைதானவீதி. அந்த வீதியில்தான் அவர்கள் படித்த பாடசாலையும், சற்று தள்ளி முருகன் கோவிலும், அதிலும் சற்று தள்ளி பாடசாலைக்கான பொது விளையாட்டு மைதானமும் இருந்தது.

கோவிலை கடந்து, பாடசாலையை கடந்து, மைதானத்திற்கு வர வேண்டும். அந்த மைதானத்தின் முன்பு வாகீஷன் சுதாகரனுடன் காத்திருப்பான்.

ஐந்து வருடங்கள் வெயில் பாடுபட்டு வீட்டை பார்த்துக் கொண்டான். அதுவரை இல்லாமல் தன் 21 வயதில் தான் நிரிளினியை கண்டான்.

வேலைக்கு செல்வது மட்டுமில்லை வேலை முடிந்ததும் அந்த மைதானத்தின் முன்புதான் நிற்பார்கள். செல்வகுமார் அங்கே வந்து தான் கூலியை கொடுப்பார்.

அன்றும் அப்படி அவருக்காக காத்துக் கொண்டிருக்க, மைதானத்தில் இருந்து காற்றில் கசிந்து வந்து வாகீஷனின் காதில் குதித்தது பிறந்தநாள் வாழ்த்து பாடல்.

"ஹாப்பி பர்த்டே டூ யூ நிராளினி!...." அந்த பெயர் ஏதோ செய்ய, வாகீஷன் பாடல் வந்த திசையை திரும்பி பார்க்க, கண்ணில் யாரும் தென்படவில்லை.

ஏனென்றால் மைதானத்தின் நடுவில் இருந்த மேடையின் பின்புறம் தான் நிராளினி நின்று இருக்க, அவளை சுற்றி அவள் தோழிகள் நின்று பிறந்தநாள் வாழ்த்து கூறிக் கொண்டிருந்தனர்.

நிராளினியின் பெயரை கேட்டதும் சுதாகரன் மைதான மேடையை நோக்கி சென்றான். காரணம் அவன் காதல் கோதை கீர்த்தனா நிராளினியுடன் தான் ஒட்டிக்கொண்டு திரிவாள் என்று தெரியுமே அதனால் தான்.

அவன் காதலியை தேடிச்செல்ல, புவி ஈர்ப்பு விசை போல் வாகீஷனும் அவனுடன் சென்றான். இருவரும் மேடையின் பின்புறம் பார்க்க, தன் கோதையைக் கண்ட சுதாகரன் கண்கள் குதூகலமாக விரித்துக்கொள்ள,

தன் ராதையை முதன் முதலில் பார்த்த வாகீஷன் கண்களில் கருமணி விரிந்து வைரமாக ஜொலித்தது. கருப்பு நிறத்தில் சிவப்பு நிற டிசைன் போட்ட சுடிதார் அணிந்து இருந்தாள்.

பால் மணம் மாறாத பிள்ளை முகம், பார்த்ததும் ஆடவன் நெஞ்சில் பூகம்பத்தை உருவாக்கி இருந்தாள்.

இங்கு ஒருவனின் காதல் மனதை தட்டி விட்டது தெரியாமல், 1,7 என்ற மெழுகுவர்த்தி இரண்டையும் தன் செம்பவள இதழ் குவித்து, நாசி நுழைந்த காற்றை உள் இழுத்து, உயிர் காற்றாய் மாற்றி அதன் தலையில் ஊத, அவள் வாசம் கொண்ட வாயு பட்டு மயங்கி செத்தது மெழுகுவர்த்தி .

வாகீஷனுக்கோ புண்ணியம் செய்த அந்த மெழுகுவர்த்தி நானாக கூடாத என்று நினைத்த மாத்திரத்தில் பெருமூச்சு வேறு.

நிராளினி கேக்கை வெட்டி தோழிகளுக்கு ஊட்டி விட, அவர்களும் அவளுக்கு மாற்றி ஊட்டி விட்டனர். கீர்த்தனா நிராளினிக்கு ஊட்டும் போது, சுதாகரன் எச்சில் ஊற வாயை திறந்தான்.

பாவம் அவனும் கொஞ்ச நாளாக கீர்த்தனாவின் மீது பித்தாகி சுற்றுகின்றான். அவள் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

கொடுமை என்னவென்றால் அவன் நூல் விடுவது கூடவே இருக்கும் வாகீஷனுக்கே தெரியாது. இதில் பெண்ணவளுக்கு எப்படி தெரியும். அவன் சைட் அடிக்கும் பாங்கு அந்த லட்சணத்தில்.

வாகீஷன் தான் முதலில் சுற்றம் உணர்ந்து, அருகில் வாயை பிளந்து வாட்டர் பால்ஸ் ஊற்றிக் கொண்டிருந்த நண்பனை கண்டு திகைத்தவன், அவன் பார்வை செல்லும் இடத்தை பார்த்துவிட்டு

'இவன் ஆர திங்குற மாதிரி பார்க்கிறான்...' என்ற யோசனையில் அவன் தோளை தொட்டு உசுப்பே,

தோளை உதறி சிலிப்பி கொண்டவன், அவன் வேலையில் கவனமாக இருக்க, வாகீஷனோ உதட்டை மடித்து, கைய ஓங்கி சில்றென்று முதுகில் ஒன்று போட

"ஆஆ!..." என்று கத்தியவன் காதல் உலகில் இருந்து முழித்து "ஏன்டா அடிச்ச...?" என்க

"ஹா, நீங்க என்ன பண்ணிட்டு இருக்க?..."

"அ..அது சும்மா சத்தம் கேட்டுச்சுனு எட்டிப் பாத்தேன்..."

"நம்பிட்டேன்.. வாய தொட..." என்கவும்

'அச்சோ வெளிப்படையாவா ஜொள்ளு ஊத்தினேன்...' என்று மனதில் நினைத்த சுதாகரன்

"நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லடா..." என்று சமாளிக்க

"பச்சையா நடிக்காத.. உண்மைய சொல்லு.. அந்த நாலு பெட்டையல்ல ஆர பாத்த..." என்று கேட்க

சுதாகரன் கையை உயர்த்தி சுண்டுவிரலை நீட்ட, வாகீஷனின் இதயம் தாறுமாறாக அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

"அந்த பச்சகலர் சல்வார் மச்சான்..." எங்கவும் தான் அவன் இதய துடிப்பே சரியானது.

ஆசுவாச மூச்சை இழுத்து விட்டவன்,
"ஆருடா அந்த புள்ள? சொல்லவே இல்ல..."

"அத்தான் வீட்டுக்கு முன்னுக்கு டா அவ வீடு.. பாத்ததும் பிடிச்சு போச்சு.. இந்த ஸ்கூல்ல தான் ஏ.எல் ஃபர்ஸ்ட் இயர்.. பேர் கீர்த்தனா..." என்று சுதாகரன் சொல்ல

"கூடவே தானேடா இருக்கேன்.. எனக்கே தெரியாம லவ் பண்ணி இருக்க..."

"நீ வேற.. அவளுக்கே தெரியாது.. இப்போதைக்கு பாக்கிறதோட சரிடா.. அவள பத்தின எல்லா டீடைல்ஸும் தேடி தேடி தெரிஞ்சுகிட்டேன்.. இனிதான் லவ்வ சொல்லணும்.. அதுக்கு வாய்ப்பு கிடைக்குமானு தெரியல..."

"ஏன்டா..."

"அந்த பிறந்தநாள் கொண்டாடுற புள்ள நிராளினி கூட தான் இவ எப்ப பாரு சுத்துறா.. தனியா சிக்க மாட்டேங்குறாடா..." என்று குறைபட

"அதுக்கு என்ன, அந்த புள்ளகிட்டையே ஹெல்ப் கேட்க வேண்டியதுதானே..."

"நல்ல ஐடியா மச்சான்.. நீ போய் கேக்குறியா.. என்ட பிரண்டு உங்க பிரண்டுக்கு ப்ரொபோஸ் பண்ணனும் ஹெல்ப் பண்ணுங்கனு..." என்று சுதாகரன் சொல்ல

வாகீஷன் குனிந்து எதையோ தேட, "என்னடா தேடுற?..."என்று சுதாகரன் கேட்க,

"ஹா உன்ட மண்டைய பொளக்க ஏதாவது கிடைக்குதான்னு தான்..."

"ஏன்டா?..."

"ஏன்டா வா.. எனக்கு தெரியாம கொழுப்பேடுத்த வேலையெல்லாம் பாத்ததும் இல்லாம.. என்னையவே கூட்டு கம்பு வேலை பாக்க சொல்றியா?..." என்று வாகீஷன் திட்ட

"சரி விடு.. இன்னைக்கு என்ட காதலுக்கு நீ ஹெல்ப் பண்ணு.. நாளைக்கு உன்ட காதலுக்கு நான் ஹெல்ப் பண்றேன்.. இதுக்கு எதுக்கு கோவிச்சுக்கிற..."

"எது இல்லாத காதலுக்கு ஹெல்ப் பண்ண போறியா?..."

"இனி வரலாம் இல்ல..." என்ற சுதாகரன் ஓட

ஒரு நொடி நிராளினியை திரும்பி பார்த்துவிட்டு நண்பனை துரத்தினான் வாகீஷன்.
 
Top Bottom