• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தூரத்து வெண்ணிலா தாகம் தீர்க்குதே 16

STN - 62

New member
அத்தியாயம் 16

குயிலும் குருவிகளும் கீதம் இசைக்க, இளங்காலை பொழுது இனிதே புலர்ந்தது. வாகீஷன் கேட்ட இரண்டு நாட்கள் முடிந்து விட்டது.

இரண்டு நாளில் காதலை உணர வைக்க முடியுமா என்று எண்ணியிருந்த மங்கையவளின் மனதில் காதல் மகாராஜனாக சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டான் வாகீஷன்.

ஆனாலும் சரி என்ற ஒற்றை சொல்லை சொல்ல மனது வரவில்லை. நேற்றைய விடியலில் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று எண்ணம் நிறைந்து கிடந்தது. இன்றைய விடியலில் வாகீஷன் மட்டுமே மனதில் நிறைந்து வழிந்தான்.

சிறிது நேரம் விழித்து கிடந்தவள், எந்த முடிவும் இப்போதைக்கு எடுக்க வேண்டாம் என்று மனதின் எண்ணங்களை தள்ளி வைத்து விட்டு, எழுந்து புத்துணர்வாகி வெளியே வந்தாள்.

வாகீஷன் எழுந்து இருக்கவில்லை. வீட்டு வேலைகளை அவளே செய்தாள். அவள் நடமாட்டத்தில் கண் விழித்தவனுக்கு ஆனந்த அதிர்ச்சி தான். உரிமைப்பட்டவளாக எந்த சங்கடமும் இன்றி வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.

அதிலும் அவள் அணிந்திருந்த குட்டி கை வைத்து இடுப்பிற்கு ப்ளீட் வைத்து தைத்த சிகப்பு நிறத்தில் கறுப்பு மாங்காய் டிசைன் போட்ட சட்டையில், தன் மனைவி என்ற எண்ணம் வந்து ஒட்டிக்கொண்டது.

வாகீஷன் எழுந்துவிட்டதை பார்த்தவள் "உங்களுக்கு குடிக்க ஏதும் வேணுமா?..." என்று கேட்டாள் சமையலறையில் இருந்து கொண்டே

மந்தகாச புன்னகையுடன் எழுந்து வந்தவன் "டீ வேணா.. இஞ்சி போட்டா, பிளான் டீ குடிப்பேன்..." என்று சொல்ல

"ம்ம்..." என்றவள் தண்ணீரை கொதிக்க வைத்து விட்டு, இஞ்சியை எடுத்து தோல் சீவி, துருவியில் துருவி எடுத்துக் கொண்டு, தேயிலை சீனி சுடுநீர் கலந்து எடுக்க,

வாகீஷன் முகம் கழுவிக் கொண்டு வந்தான். அவனிடம் தேநீரை கொடுக்க, மாறாத புன்னகையுடன் வாங்கிக் கொண்டவன், மனதில் இருந்த ஆசையை நிறைவேற்ற சமையல் திண்டில் ஏறி அமர்ந்து கொண்டு, தன்னவள் தயாரித்த தேநீரை அமுதமாக எண்ணி உறிஞ்சினான்.

நிராளினி அவன் அருகாமையில் குறுகுறுத்த மனதை காட்டிக் கொள்ளாமல் "பாட்டு போடுங்களேன்..." என்று சொல்ல

வாகீஷன் ஸ்பீக்கரை உயிர்பிக்க (என்ன இதுவோ) என்று அவர்கள் பாடல் ஒலிக்க "அச்சோ சாமி இந்த பாட்டு வேணாம்.. வேற பாட்டு போடுங்க..." என்றாள் நிராளினி

திருத்திருவென விழித்த வாகீஷன் அடுத்தடுத்து என்று மாற்ற அந்த பாடலை மட்டுமே 20 தடவை பதிந்து வைத்திருந்ததால் அதுதான் வந்தது.

நிராளினி முறைத்து பார்க்க, "கொஞ்சம் இருடா..." என்றவன் கடினப்பட்டு மாற்ற

(ஒருநாள் உனை விழிகள் பார்க்க... இது யார் என இமைகள் கேட்க... இவள் தான் உன் இதயம் என்றது காதல்... உயிரைத் திறந்து விடு புரியும்... உனக்குள் இருப்பது யார் தெரியும்... மனதில் எனது உருவம் விரியும் காதல்... கொள்ளாமல் கொள்ளும் காதல் பொல்லாதது... சில்லென்ற தீயில் ஜீவன் நனைகின்றது...) என ஹரிஹரன் குரலில் இவர்கள் காதல் கதைக்கு ஏற்றது போல் கசிந்துருகியது காதல் இசை.

பாடல் வரிகளை கேட்டதும் நிராளினி வாகீஷன் கண்களைப் பார்க்க, அவனுமே அவளைத்தான் பார்த்திருந்தான். "சத்தியமா சிட்டுவேஷன் சாங் இல்ல.. உன்ட நினைப்பு அதிகமா அழுத்தும் போதெல்லாம் இந்த பாட்ட கேட்பேன்..." என்று வாகீஷன் சொல்ல

எதுவும் கூறாமல் தன் வேலையில் கவனமானாள். அவனும் தேநீரை குடிக்க, பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. சத்தியமாக அந்த பாடல் வரிகளை நிராளினியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

வாகீஷனின் மனதை அப்பட்டமாக கூறும் வரிகள், அவன் மனதின் வலிகளை அவளுள் கடத்திக் கொண்டிருந்தது.

தேனீரை குடித்து முடித்துவிட்டு, கப்பை கழுவ சிங்கின் அருகில் வாகீஷன் வர, அதே சமயம் நிராளினியும் திரும்ப, இருவர் மூச்சுக்காற்றும் மோதிக்கொள்ளும் நெருக்கம்.

(ஆறு ஜென்மம் இருவர் உயிரும் இணைந்து இருந்தது... இந்த ஜென்மம் உனது மனது உறவை மறந்தது... அழியாத காதல் சின்னம் கட்டி முடித்தேன்... அடையாளம் காட்ட இன்று உன்னை அழைத்தேன்... வரலாற்றில் நேற்று நமது பேரை படித்தேன்... நூற்றாண்டு தாண்டி உன்னை கண்டுபிடித்தேன்...) என காதல் இசை சரியாக செவிகளில் விழ

வாகீஷனின் காதல் ததும்பும் பார்வையை தாங்க முடியாமல், வேகமாக அவனை விட்டு விலகி அறைக்குள் வந்து அடைந்து கொண்டாள் நிராளினி. ஒரு நிமிடம் தாமதித்து இருந்தாலும் அவன் மார்பில் சாய்ந்து கதறி இருப்பாள்.

ஏழு ஜென்ம பந்தமாம் பாடல் வரிகள் சொன்னது. ஏழு ஜென்மம் என்ன நூறு ஜென்மமாக இருந்தாலும் அத்தனை ஜென்மத்திலும் அவன் காதல் மாறாது. அவன் காதலுக்கு அவள் தகுதியானவளா?

ஆம் அவள் மனதில் அவன் மீது காதல் வந்தும், சம்மதம் சொல்ல தடுப்பது அவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை மறந்து, பிரதீபனுடன் திருமணத்திற்கு சம்மதித்து, எதிர்கால வாழ்க்கை வரை பேசி பழகி இருக்கின்றாள்.

வாகீஷனின் புனிதமான காதலுக்கு இன்னொருவனுடன் திருமணத்திற்கு தயாரான தான் தகுதி இல்லாதவள் என்றே அவள் மனது எடுத்துக் கூறிக் கொண்டிருக்கின்றது.

வாகீஷனுக்கு எதுவும் புரியவில்லை 'என்னாச்சு.. நான் எதுவும் பண்ணலையே...' என்று நினைத்தவன்

அறைக்கதவை தட்டி "நிரா!.. என்னடா.. என்னாச்சு?..." என்று கேட்க

"ஹா! ஒன்னும் இல்ல..." என்றவள் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். அவனின் முகம் பார்க்காமல் சமையலறை நோக்கி நடக்க, எதுவும் புரியாமல் பார்த்து நின்றவனிடம் "நீங்க கேட்ட ரெண்டு நாள் முடிஞ்சு..." என்று சொன்னவள்

நான் போகவில்லை, இல்லை கொண்டு போய் விட்டு விடு என்று வசனத்தை முடிக்காமல் சமையலறைக்குள் சென்று விட்டாள்.

வாகீஷன் தான் ஆக என்னுடன் இருக்க பிடிக்காமல் தவிக்கின்றாளா! அவள் வீட்டில் கொண்டு போய் விடச் சொல்கின்றாளா! என்று உடைந்து போனான்.

சற்று நேரம் முன்பு வரை இருந்த இதமான மனநிலை தொலைந்து போக, முள் கூண்டுக்குள் சிக்கிக் கொண்ட கிளியாக அவன் இதயம் துடித்தது.

நீண்ட நேரம் அங்கேயே நின்றவன், அவளாக கொண்டு போய் விடச் சொன்னால் பார்த்துக் கொள்ளலாம் அதுவரை எதுவும் பேச வேண்டாம் என்று முடிவு எடுத்துக் கொண்டான்.

எங்கே சொல்லி விடுவாளோ என்று அதன் பின் அவன் அவள் முகம் பார்க்கவே இல்லை.

நிராளினியோ மீதி வார்த்தையை எப்படி சொல்வது, தன் மனதை அறிக்கும் விடயத்தை எப்படி விளக்குவது என அவன் முகம் பார்ப்பதும், வேலையை கவனிப்பதுமாக இருந்தாள்.

இப்படியே அன்றைய நாள் பொழுது கழிந்து, மணி நான்கு என்றானதும் கோமதி வந்திருந்தார். வாகீஷன் தான் அரிசிமா வறுத்து தருமாறு கேட்டு இருந்தான்.

அவரும் அரிசியை தண்ணீரில் இளக வைத்து, காய வைத்து, மாவாக அரைத்து எடுத்து வந்திருந்தார். "வாகீ மாவு இதுல இருக்கு.. வறுக்குறதுக்கு அடுப்பு மூட்டித்தா..." என்று வாளியை கீழே வைத்து விட்டு கேட்க

"ஹேஸ் அடுப்புல வறுக்க ஏலாத அக்கா..." என்று வாகீஷன் கேட்க

"இல்லடா.. நிறைய மாவு, வெளிய அடுப்பு மூட்டி தான் வறுக்கணும்.. மூணு கருங்கல் எடுத்து வை.. நான் கொள்ளி எடுத்துட்டு வாரேன்..." என்று கூறி தன் வீட்டிற்கு சென்று விறகுடன் வந்தவர், வீட்டின் பின்புறமாக தயார் செய்த அடுப்பில் மாவை வறுத்தார்.

அதை பார்த்துக்கொண்டு அங்கே தான் நிராளினி அமர்ந்து இருந்தாள். அவள் அமர்ந்து இருந்த தண்ணீர் தொட்டியின் மறுமுனையில் வாகீஷன் சாய்ந்தவாறு நின்று இருந்தான்.

கோமதி அரிசிமாவை வறுத்து, சூடு குறைய வேண்டும் என்பதால் தாம்பாளத்தில் கொட்டி, சமையலறையில் கொண்டு மூடி வைத்தவர் "நிராளி ஆறுனதும் எடுத்து வாளியில போட்டு வைம்மா..." என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

அவர் கூறியது அவள் காதில் விழவே இல்லை. தன்னுள் உழன்று கொண்டு இருந்தாள். ஏதோ போல் இருந்தவளை வாகீஷன் தான் "நிரா!.. நிரா!..." என்று அழைத்து கவனத்தை தன் பக்கம் திருப்பினான்.

தன்னை பார்த்தவளிடம் "என்ன நிரா!..." என்று ஆதூரமாக கேட்டான். எங்கே போக வேண்டும் என்று சொல்லி விடுவாளோ என்று இதயம் வேறு இறுகி துடித்தது.

"என்ன நினைப்புல என்ன கடத்திட்டு வந்தீங்க.. உங்கட பக்கத்து நியாயங்கள் எல்லாம் சரிதான்.. ஆனா நான் ஒருத்தர கல்யாணம் கட்ட சம்மதம் சொல்லியிருக்கேன்.. நெருங்கி பழகி இருக்கேன்.. இவ்ளவு ஏன் எங்களுக்குள்ள எல்லாமே.. மு..முடிஞ்சிட்டு.. இப்பவும் என் கூட வாழனுமா?..." என்று கேட்க

எங்கிருந்து தான் அத்தனை கோபமும் ஆதங்கமும் வந்ததோ, நிராளினியின் கையை பிடித்து இழுத்தவன், அடுப்பில் எரிந்து கொண்டிருந்த செந்தனல் விறகை எடுத்தவன், கீழ்ப்பகுதியை அவள் கையில் திணித்து, தகதகவென எரிந்து கொண்டிருந்த பகுதியை தன் இடது நெஞ்சின் அருகே வைத்து

"இப்ப என்ன நிரா.. உனக்கு என்ன விட்டு போகணும் அவ்ளவுதானே.. போ.. என் நெஞ்சு பூராவும் நிறைஞ்சு இருக்கிற உன்ட நினைப்ப நீயே எரிச்சி அழிச்சிட்டு போயிடு.. இப்டி கதைச்சு என்ட காதல சோதிக்காத.. உன்ட உடம்புக்கு ஆசைப்பட்டா நான் உன்ன காதலிக்கிறேன்.. எப்டி இருந்தாலும் நீ என்ட நிரா.. இங்க இருந்து போகணும் என்றதுக்காக உன்ன நீயே தாழ்த்திக்காத.. நீ என்ன கதைச்சாலும் என்ட நெஞ்சுக்குள்ள இருக்கிற உன் மீதான காதல அழிக்க ஏலாது.. முடிஞ்சா நீயே அழிச்சுரு..." என்று அவன் நெருப்பை இன்னும் தன் மார்பின் அருகே கொண்டு செல்ல

அவனின் செயலில் திகைத்து விதிர்விதிர்த்து நின்று இருந்தாள் நிராளினி.

ஒற்றைக் கை அவள் கையுடன் இருக்க, மற்றைய கையால் டி-ஷர்டை இழுத்து விட்டு இடது மார்பை காட்டிக் கொண்டு நின்றிருந்தான் வாகீஷன்.

விறகில் இருந்த நெருப்பின் உஷ்ணத்தால் அவன் மார்பு முடிகள் கூட சுருங்கியது. சற்று அசைந்தாலும் நெருப்பில் அவன் தோல் கருகிவிடும்.

எல்லாத்துக்கும் மேல் கோமதி கூறியது போன்று ஏற்கனவே நெருப்பில் சுட்ட வடு இருந்தது. அவனையும் அவன் கோபத்தையும் பார்த்தவள், அதனுள் இருக்கும் காதலின் ஆழம் கண்டு அதற்கு மேல் தாங்க முடியாமல், மற்றைய கையால் எரிந்து கொண்டிருந்த விறகை கடினப்பட்டு பிடுங்கி தூக்கி எறிந்தாள்.

கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. நிராளினி விறகை பறித்து எறிய, டி-ஷர்ட்டை பிடித்து இருந்த கையை வாகீஷன் எடுக்க, அதே இடத்தில் கையை வைத்து இழுத்து அவன் மார்பை பார்த்தாள்.

நெருப்பின் வெம்மையில் சிவந்து இருந்தது அந்த இடம். உதடு குவித்து அவள் உயிர் காற்றை இழுத்து ஊதினாள்.

அவள் டி-ஷர்டை பற்றி இழுத்து நெருங்கியதிலேயே உறைந்து நின்றவன், அவள் உதடு குவித்து ஊதியதில் உடல் சிலிர்த்து அடங்கியது. கண்கள் விரித்து, குனிந்து தன்னவளை பார்த்தான்.

அவளோ அழுத விழிகளோடு காதலோடு கரிசனையையும் சேர்த்து மீண்டும் மீண்டும் ஊதிக் கொண்டிருந்தாள். இன்றைய வெம்மையை தணிக்க மட்டுமில்லை, என்றோ அவளுக்காக வெந்து போன அவன் காயத்தின் வடுவிக்கும் சேர்த்து இன்று இதம் கூட்டினாள்.

அவன் முள்ளம் தண்டு விரைத்து நிமிர்ந்தது. வெம்மையில் சுருண்டு கிடந்த மார்பின் முடிகள் கூட சிலிர்த்துக் கொண்டு நின்றது. உடல் முழுவதும் குளுமை பரவினாலும் தொண்டை குழி வறண்டு நீர் கேட்டு ஏறி இறங்கியது.

ஊதிக் கொண்டிருந்தவள் தன் தளிர்விரல்களால் ஏற்கனவே இருந்த காயத்தின் தடத்தை வருடினாள். அவ்வளவுதான் உறைந்து நின்றவன் உள்ளுக்குள் சில்லு சில்லாய் உடைந்தது தான் போனான்.

வெளிப்படையாகவே ஆடவன் உடல் துள்ளி அடங்கியது. நிராளினியோ அப்படியே அவன் நடுமார்பில் தலையை முட்டிக்கொண்டாள்.

"போதும் எனக்காக செஞ்சதெல்லாம் போதும்.. கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி ஒருத்தரோட கதச்சி பழகிட்டேனேன்னு தான், நான் உங்களுக்கு வேணாம்னு நினைச்சேன்.. ஆனா உங்களுக்கு நான் எப்டி இருந்தாலும் உங்கட நிரா என்றது புரிஞ்சிடுச்சு.. நான் எங்கேயும் போகல.. உங்கட நிராவா உங்க கூடவே இருக்கேன்..." என்று சொல்ல

அவள் கூறிய தித்திக்கும் வார்த்தைகளை கேட்டவனோ சஞ்சீவினி மருந்து உண்டவன் போல் புத்துயிர் பெற்று, உடல் முழுவதும் ஜிவ்வென்று புது இரத்தம் பாய, அதிகப்படியான சந்தோஷத்தை தாங்க முடியாமல் இதயம் தாறுமாறாக துடிக்க,

பெண்ணவளின் கன்னங்களை இரு கைகளிலும் தாங்கி "நிரா.. என்.. என்னடா சொன்ன?..." என்று அவள் கண்களை தவிப்பாக பார்க்க,

"கல்யாணம் கட்டிக்கலாம்..." என்று பாவையவள் வாய்மொழி காதை நிறைத்த மறுநொடி, அவள் பின் தலையில் ஒரு கையும், முதுகில் ஒரு கையுமாக இடம் மாற்றி இறுக்கி அணைத்தான்.

நெஞ்சுகூடு வேகமாக ஏறி இறங்கியது வாகீஷனுக்கு. நிராளினியும் அவனை ஆரத் தழுவிக் கொண்டு, அவன் நிலை புரிந்தவள் போல முதுகை வருடி கொடுத்தாள்.

கடவுளை கண்ட நொடி கண்ணீர் வருமோ என்னவோ, அவன் காதலை கண்ட நொடி...
அந்த காதல் கை கூடிய நொடி... கண்ணீர் உடைப்பெடுத்தது ஆடவன் கண்ணில் இருந்து.

இரு உடல்களும் இணைந்து இறுகிய அணைப்பில் இருக்க, ஆடவன் உடல் குழைந்து குலுங்கியதிலேயே அவன் அழுகின்றான் என்பதை பெண்ணவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

"நிரா!... நிரா!..." உயிரை உருக்கி அழைத்தான் போலும் மயங்கி நின்றாள் மங்கை.

எத்தனை நிமிடங்கள் கழிந்ததோ "ஏங்க மூச்சு முட்டுது..." என்று நிராளினி சொல்லவும் தான் அணைப்பை தளர்த்தினான்.

பெண்ணவளை விட்டு விலகாமல், மீண்டும் அவள் பூ முகத்தை தன் இரு கைகளிலும் அமிர்த கலசத்தை தாங்கிக் கொள்ளும் பக்குவத்தில் பிடித்துக் கொண்டவன்

"தேங்க்ஸ் நிரா!..." என்று முதல் முத்தத்தை பிறை நுதலில் அழுத்தி வைத்தான்.

ஆடவன் தடித்த அதரம் தடம் பதித்த நொடி பெண்ணவள் மேனியினுள் சிறு பூகம்பம். முத்தம் வாங்கியவள் அதிர்ந்தாள் என்றால், கொடுத்தவனும் சிலிர்த்தான்.

முதல் முத்தம் தான் பகுமானமாக கொடுத்தான். மறு முத்தங்கள் மொச்சு மொச்சு என எச்சிலும் கண்ணீரும் சிதற, கன்னங்கள் இரண்டிலும் மாற்றி மாற்றி குடுத்தான்.

எண்ணிடலங்கா முத்தங்களை ஏற்றுக்கொண்ட கன்னங்கள் மீசை குத்தி சிவந்து போக, பெண்மையில் திணறி போனது வெட்கத்தில்

"ஏ..ஏங்க..."
இச் ...இச்...

"போ..போதும்..."
இச்...இச்...

போதும் விடுங்க..."
இச்...
"நிரா!..." கிறங்கியது வேந்தன் குரல்
இச்...

"நிரா!..." ஆங்கார காதல் அரக்கனை கட்டுப்படுத்த முடியவில்லை, கிடைத்த இமை சிமிட்டும் பொழுதில் வாயில் கையை வைத்து தடுத்து இருந்தாள் பெண்ணவள்.

முத்த வேகம் தாங்காமல் மூச்சு வாங்கியது தாரகைக்கு. "ரிலாக்ஸ்.. ரொம்ப எக்சைட் ஆகுறீங்க.. வெளியே நிற்கோம்.. உள்ள போவோம்..." என்று சொர்க்கத்தில் மிதந்தவனை பூவுலகிற்கு இழுத்து வந்தாள்

"ம்ம்..." என்று மந்த காச புன்னகை பூத்தவன், தன் பிரியசகியை அப்படியே அள்ளி அணைத்து தூக்கிட

"ஏங்க! என்ன இது.. விடுங்க..." என்று நிராளினி கூறிய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்கும் மனநிலையில் அவள் கண்ணாளன் இல்லை.

வீட்டினுள் தூக்கி வந்து இறக்கி விட்டிருந்தால் பரவாயில்லை, சோஃபாவில் தான் அமர்ந்து கொண்டு, மடியில் அவளை அமர்த்திக் கொள்ள

ஆடவனின் அதீத நெருக்கமும் அளவுக்கு மீறிய காதல் பார்வையும் பாவையவளை நெளிய வைத்தது.

"ஏங்க நான் சோஃபால இருக்கனே..." என்று நிராளினி கேட்க

இல்லை என்று தலையை ஆட்டியவன் "உடம்ப விட்டு தனியா பிரிஞ்சு போன உசுரு திரும்பவும் சேந்த மாதிரி இருக்குடா.. ப்ளீஸ் இப்டியே கொஞ்ச நேரம் இரேன்.. இது கனவு இல்லன்னு நான் உணர்ற வரைக்கும்..." என்று சொன்னவன்

நிராளினியின் தலையை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு, தன் தலையை சோஃபாவில் சாய்த்து, விழி மூடி இதமாக சுகித்தான் அந்த நொடிகளை. சில நிமிடங்கள் எடுத்தன வாகீஷனின் இதயத்துடிப்பு சீராக, அதன் பின்னரே நிராளினியை விட்டான்.

அவளும் எழுந்து சென்று இருவருக்கும் குடிக்க தேனீர் எடுத்து வந்தாள். அதற்கு இடையில் சுதாகரனுக்கு அழைப்பை எடுத்து திருமணத்திற்கு நிராளினி சம்மதித்ததை ஆர்ப்பாட்டமாக கூறினான் வாகீஷன்

நண்பன் கூறிய மகிழ்ச்சி செய்தியை கேட்டவனுக்கு அப்பாடா என்ற நிம்மதி. சம்மதம் இல்லாத பெண்ணை கடத்தி வந்த குற்ற உணர்ச்சி நீங்கிய உணர்வு.

அதே நேரம் கஷ்டப்பட்டு காத்திருந்த நண்பனின் காதல் கைகூடிய மகிழ்ச்சியும் என்று உணர்வின் பிடியில் சிக்கிக் கொண்டவன், அருகில் இருந்த கீர்த்தனாவை இழுத்து அணைத்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினான்.

கீர்த்தனாவிற்குமே தோழிக்கு காதலுடன் கூடிய இனிய வாழ்வு கிடைக்கப் போகும் திருப்தியும் மகிழ்ச்சியும்.

உடனே திருமணம் பற்றி கலந்தாலோசிக்க வாகீஷனின் வீட்டிற்கு சுதாகரனும் கீர்த்தனாவும் வர,

கோமதிக்கும் விடயம் கூறப்பட்ட அவரும் வந்துவிட்டார். "செல்லம்! காலத்துக்கும் நல்லா இருக்கணும்..." என்று நிராளினியை கட்டிக் கொண்டவர், பிறகு "என்னடா எப்ப கல்யாணம்?..." என்று வாகீஷனிடம் கேட்க

சந்தோஷத்தில் சுதாகரனை கட்டிக்கொண்டு நின்றவன் "அம்மாட்ட விஷயத்த சொல்லணும்.. நிறைய சிக்கல் இருக்கு.. நிதானமா யோசிச்சு பிளான் போடணும்..." என்று சொல்ல

கீர்த்தனாவின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருந்த நிராளினி என்ன சிக்கல் என்று புரிந்தாலும், சற்று கலவரமாக வாகீஷனை பார்த்தாள்.

சுதாகரன் "சரி வாங்க.. கலந்து கதைச்சு ப்ளான் போடலாம்..." என்க

மற்ற மூவருக்கும் வீட்டின் தலைவியாக நிராளினி தேநீர் எடுத்து வர, திருமணத்திற்கான திட்டம் வகுக்கப்பட்டது.
 
Top Bottom