• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தூ.வெ.அத்தியாயம் 02

STN - 62

New member
அத்தியாயம் 02

ஒரு வாரம் கடந்து இருக்கும், இதோ சுதாகரன் வீட்டின் ஹாலில் தலை தாழ்ந்து, இரு கை விரல்களையும் ஒன்றோடு ஒன்று கோர்த்துக்கொண்டு, நிலத்தை வெறித்துக் கொண்டிருந்தான் வாகீஷன்.

அவனை கலக்கமாக சுதாகரனும், குழப்பமாக கீர்த்தனாவும் பார்த்து இருக்க, சுதாகரனின் இரண்டு குழந்தைகளும் வாகீஷன் வாங்கி வந்திருந்த இனிப்புக்களோடும், விளையாட்டு பொருட்களோடும் ஐக்கியமாகி இருந்தனர்.

"எனக்கு ஒன்டும் விளங்கலண்ணா.. என்னதான் பிரச்சின.. இவர் அன்டைக்கே நிராளிக்கு அவள்ட கல்யாணம் விருப்பமா என்டு கேட்கச் சொன்னாரு.. நானும் ஃபோன் போட்டு கேட்டேன்.. அவள்ட முழு விருப்பத்தோட ரொம்ப சந்தோஷமா கல்யாணம் கட்டிக்க போறதா சொன்னவள்.. அது மட்டும் இல்லாம அவள் கட்டிக்க போறவர பத்தி அவ்ளவு ஆர்வமா கதைச்சவள்..

...அவர் கல்முனை கோட்டுல லாயரா இருக்காராம்.. அவள்ட அளவுக்கு வசதியான குடும்பமாம்.. ரொம்ப நல்லவராம், அவளுக்கு அவர ரொம்ப பிடிச்சிருக்காம்.. நான் கேட்ட ஒரு கேள்விக்கு அவள் முந்தியடிச்சுக்கொண்டு அந்த அண்ணாவப் பத்தி அத்தன விளக்கம் தாராள் என்டா அவள்ட மனசு என்னனு இன்னுமா விளங்கல..." என்று கேட்க

திரும்பத் திரும்ப நிராளினி மனம் விரும்பி தான் அந்த திருமணம் நடக்க இருப்பது காதில் விழுந்து, நெஞ்சில் குத்த, வாகீஷனின் உடல் மேலும் மேலும் இறுகியது.

"போதும் கீத்து!.. நீ போய் திரும்ப ஒரு தரம் தேத்தண்ணீ ஊத்திக் கொண்டு வா..." என்று மனைவியை சமையல் கட்டினுள் விரட்டிய சுதாகரன், வாகீஷனின் அருகில் வந்து அமர்ந்து "மச்சான்!..." என்று தோளை தொட,

கலங்கிச் சிவந்த கண்களால் நண்பனை பார்த்தவன் "அவள்ட நினைவுல ஒரு புள்ளியா கூட நான் இல்லையாடா..." என்றான் தழுதழுத்த குரலில்.

என்ன சொல்வான், இல்லாத படியால்தான் சந்தோஷமாக திருமணத்திற்கு தயாராகி விட்டாள். அன்று கீர்த்தனா பேசும்போது ஸ்பீக்கரில் போட்டு அவனும் தானே கேட்டுக் கொண்டிருந்தான். அவள் உற்சாகமாக தன் வருங்கால கணவனை பற்றி துதி பாடியதை.

"விடு மச்சான்.. அவளுக்கு குடுத்து வைக்கல.. வேற பெட்டை..." என்று சொல்ல வந்தவனின் தாடையை இறுகப்பற்றி வார்த்தையை நிறுத்தி இருந்தான் வாகீஷன்.

தலையை இடவலமாக ஆட்டி "அந்த வார்த்தைய சொல்லாத.. இந்த வாகீஷன் வாழ்க்கையில என்ட நிரா மட்டும் தான்..." என்றவன் கீர்த்தனா வரும் அரவம் கேட்க, கையை எடுத்துக்கொண்டு சற்று தள்ளி அமர்ந்தான்.

சுதாகரனுக்கு வாகீஷன் பற்றி பிடித்த தாடை வலித்தது. கோபம் வருவதற்கு பதில் அவன் மீது பரிதாபம் தான் வந்தது. அவனது அந்த அழுத்தமான பிடி அவன் ஆழமான காதலின் வெளிப்பாடு அல்லவா. ஆனால் இவன் காதலின் அரிச்சுவடு கூட தெரியாமல் இருக்கின்றாள் இவன் காதலி.

இருவரும் அமைதியாக தேனீரை அருந்தினர். "சரி நான் போயிட்டு வரேன்..." என்றபடி வாகீஷன் எழும்ப,

"அண்ணா இருங்க சாப்பிட்டு போகலாம்..." என்று கீர்த்தனா கூற

"இல்லம்மா.. காலையில தான் வந்தேன்.. வந்ததும் வராததுமா உங்கள பாக்க வந்துட்டேன்.. வெட்டகிறங்கும் போதே மதியம் சாப்பாட்டுக்கு அம்மா வீட்டுக்கு வர சொன்னவ.. நான் போகணும், இன்னொரு நாள் கண்டிப்பா சாப்பிடுறேன்..." என்றவன் முன் செல்ல

நண்பனை பின்தொடர்ந்தான் சுதாகரன். வெளி வாசலுக்கு வந்ததும் "நான் அவள பாக்கணும்டா..." என்கவும் இயலாமையுடன் நண்பனை பார்த்தான் சுதாகரன்.

"நீங்க சொல்றது எல்லாம் புரியுது மச்சான்.. ஒருவேள அவளுக்கு வேற ஆர்ட்டயும் சொல்லேலாமா இருக்கலாம்.. என்ன நேர்ல பாத்தா என்னட்ட எல்லாத்தையும் சொல்லுவாடா..."

எத்தனை எடுத்துக் கூறியும் ஏற்றுக் கொள்ளாத வாகீஷனை என்ன செய்வதென்றே தெரியவில்லை அவனுக்கும். "சரி ரெண்டரைக்கு ஸ்கூல் முடியும் பாக்கலாம்..." என்று சொல்ல

"சரிடா.. நான் ரெண்டு மணிக்கு வாரேன்..." என்று புன்னகையுடன் சொன்னவன் புறப்பட்டான்.

மதியம் இரண்டை தொடும் முன், ஊருக்கு வந்தால் தேவைப்படும் என்று தொழிலுக்காக சுதாகரனின் உதவியுடன் வாங்கி நிறுத்தி இருந்த வேனை எடுத்துக் கொண்டு வந்து நண்பனின் வீட்டின் முன் நிறுத்தி இருந்தான்.

"டேய் மணி இப்பதான் ரெண்டு.. இன்னும் அரமணித்தியாலம் இருக்கு.. உள்ளவா ஏதாவது குடிச்சிட்டு போகலாம்..."

"இல்லடா என்னால ஒரு இடத்துல சும்மா இருக்க ஏலேல.. இப்பவே பறந்து போய் அவ முன்னாடி நிற்க மாட்டேனானு இருக்கு.. கால் ரெண்டுலையும் ரெக்க முளச்ச மாதிரி.. மனசுக்குள்ள பூ பூத்த மாதிரி என்னவோ பண்ணுது.. நான் சாப்பிட கூட இல்லடா.. பசியே தெரியல..."

"அடப்பாவி!.. இன்னும் சாப்பிடலையா? ஏன்டா இப்டி இருக்க?..."

"அதான் சொல்றேனே.. தெரியல.. அவள் இருக்கிற தெருவிலயாவது நான் இருக்கணும்.. இப்பவே போகலாம் வாடா..." என்று சுதாகரனை அழைக்க

வெளிப்படையாகவே தலையில் அடித்தவன் "இரு வெளிக்கிட்டுத்து வாரேன்..." என்று விட்டு உள்ளே சென்று தயாராகி வந்தவன், வேனில் சாய்ந்து வெளியே நின்றவனைக் கண்டு திகைத்தான்.

சற்றுமுன் வேனின் உள்ளே இருந்து பேசும்போது எதுவும் தெரியவில்லை. வெளியே நிற்கும் போது தான் அவன் தோற்றத்தை கவனித்தான். "என்னடா இது கோலம்..."

"என்ன?..."

"என்ன வா!.. காலையில நல்லா தானே இருந்த.. இது என்ன பஞ்சத்துல அடிபட்டவன் போல செக்கு சேட்டும்.. கொட்டூன் ட்ராவ்சரும், செப்பல் பாட்டா.. என்னடா கன்றாவி இது..."

"அது இல்லடா.. நிரா என்ன பாத்து எட்டு வருஷமாகுது.. பாத்ததும் அடையாளம் தெரியனும்ல.. அப்போ நான் இப்டிதானே இருந்தேன்..பாக்க எட்டு வருஷத்துக்கு முன்னாடி இருந்த போல இருக்கேனா..." என்று ஷர்ட்டை சரி செய்து கொண்டு குழந்தை போல் கேட்டவனை பார்க்க சுதாகரனின் நெஞ்சில் பாரம் ஏறிக்கொண்டது.

இவனைப் பார்த்ததும் நிராளினி காட்டப் போகும் எதிர்வினை எப்படி இருக்குமோ என்று நினைக்கும் போது தலை சுற்றியது.

எதையும் வெளிக்காட்டாதவன் "உடுப்பு சரி.. அப்போ ஊதிவிட்டா பறக்குற ஒல்லி பிச்சான் போல இருந்த.. இப்போ அர்னால்டுக்கு தம்பி போல உடம்ப வளத்து வச்சிருக்கியே.. இத என்ன பண்ண போற..." என்று அவன் கிண்டல் செய்ய

"டேய் நீ மட்டும் அப்பவே சூர்யா மாதிரி சிக்ஸ்பேக் வெச்சிருந்தியோ.. சிங்கிள் பேக் கூட இல்லடா..." என்று சொல்ல

"என்ட வரலாற ஆரும் கேட்டாங்களா.. நீ தான் பழைய மாதிரி இருக்கேயான்னு கேட்ட.. நான் சொன்னேன்.. சரி வா போகலாம்..." என்றவாறு வேனில் ஏற, வாகீஷனின் மனதின் வேகத்திற்கு வாகனத்தால் நகர முடியவில்லை. சலித்துக் கொண்டு ஓரளவு வேகத்தில் பாடசாலை வீதியில் வாகனத்தை நிறுத்தி இருந்தான்.

பாடசாலை முடிய இருபது நிமிடங்கள் இருந்தன, வாகீஷன் "என்னடா இன்னும் டைம் போகல..."

"நான் வேணுமெண்டா மணிகூண்டு கோபுரத்துல இருக்கிற முள்ள திருப்பி வச்சுட்டு வரட்டுமா?..." என்று சுதாகரன் கடுப்பாக கேட்க,

"இல்ல.. அதெல்லாம் வேணாம்.. உள்ள போய் ஸ்கூல் கடைசி பெல்ல அடிச்சிட்டு வந்தா போதும்..." என்று சொன்னவனை வெட்டவா குத்தவா என்ற வகையில் பார்த்து வைத்தான் சுதாகரன்.

20 நிமிடங்கள் 20 கோடி வருடங்களாய் கடக்க, வேனின் நீளத்திற்கு நடந்து நடந்து புழுதியை கிளப்பிக் கொண்டிருந்தான் அந்த காதல் கிறுக்கன்.

சரியாக இரண்டரை மணிக்கு பாடசாலை இருதி மணி ஒலிக்க, தேவகானமாக வாகீஷனின் செவிகளில் விழுந்தது.

ஆற்றில் இருந்து பிடித்து வந்த மீனை சிறிய பாத்திரத்தில் போட்டால் வெளியே குதித்து விடுவேன் என துடிக்கும் மீனை போல அவன் இதயமும் கண்களும் ஆர்வமாக... தவிப்பாக... ஆசையாக... காதலாக... தன் கண்மணியின் கலை ஓவிய உருவம் தெரிகின்றதா என்று பாடசாலை வாயிலையே முற்றுகை இட்டு இருந்தது.

மாணவச் செல்வங்கள் வெள்ளை புறாக்களாக சிறகடித்து வெளியே வர, அதன் பின் ஒவ்வொரு ஆசிரியர்களாக வெளியே வந்தனர். அதோ கண்டுகொண்டான் அவன் காதல் கவியழகை, அவன் தூரத்து வெண்ணிலாவை

அவளோ தன்னோடு பணிபுரியும் சக ஆசிரியையோடு ஸ்கூட்டியை உருட்டியவாறு, பச்சை வெள்ளை கலந்த புடவையில், முடியை பின்னி இடைவரை நிற்க, நெற்றியில் கருப்பு கோபுர வடிவ பொட்டு, மூக்கில் வெள்ளைக்கல் மூக்குத்தி மின்னல் புள்ளியாய் ஜொலிக்க, கழுத்தில் குட்டி செயின், அதில் வெள்ளை கல் பதித்த இரண்டு வளையங்களை சேர்ந்தது போன்ற பென்டன், வலது கையில் இரண்டு தங்க வளையல்கள், இடது கையில் தங்க நிறத்தில் கைகடிகாரமுமாக கருவண்டு விழிகள் அங்குமிங்கும் உருண்டு நர்த்தனமாட, செம்மாதுளை இதழ் பிரித்து, சிற்பி முத்து பற்கள் தெரிய சிரித்து பேசிக்கொண்டு வந்தவளை கண்ட வாகீஷன் சத்தியமாக வையகத்தில் இல்லை.

எட்டு வருட தவத்தின் வரமாக வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷத்தை கண்டவன் கற்சிலையாக உறைந்து தான் போனான்.

சக ஆசிரியையுடன் பேசிக் கொண்டு வந்த நிராளினி ஸ்கூட்டியில் ஏற போக, உறைந்து நின்றவனை உலுக்கி "டேய் வாடா..." என்று இழுத்துக் கொண்டு அவளிடம் வந்தான் சுதாகரன்.

சுதாகரன் "நிராளி..." என்கவும் நிமிர்ந்தவள் "ஹாய் அண்ணா!.. வாங்க! என்ன இந்த பக்கம்.. எப்டி இருக்கீங்க...?"

"நான் நல்லா இருக்கேன்மா.. நீ எப்டி இருக்க...?"

"நான் சுகமா இருக்கேன்ண்ணா.. கீர்த்தனா பிள்ளைகள் சுகம் தானே...?"

"ஹா, அவைங்க நல்ல சுகம்..."

"கீர்த்தனாவோட ஃபோன்ல கதைச்சும் கன நாளாச்சு.. பிறகு கதைக்கிறேன் என்டு சொல்லிவிடுங்க ண்ணா.. தெரியும் தானே கல்யாண வேலைகள்ல கொஞ்சம் பிஸி..."

"ஹ்ஹா.. தெரியும்மா.. காட் பாத்த நான்..." இதுவரை சுதாகரன் அருகில் நின்றவனை கண்டு கொண்டதாக தெரியவில்லை நிராளினி. ஆனால் அவன் பார்வை இம்மியும் விலகாது அவளிடம் மட்டுமே.

"சரிண்ணா.. நான் வரவா..."

"அது நிராளி.. இவன் என்ட பிரண்ட் வாகீஷன்..."என்று அருகில் இருந்தவனை அறிமுகம் செய்துவைக்க,

"ஓ..ஹாய்..." சொன்னவள் புருவம் சுருக்கி அவனை பார்க்க, அவனோ பதில் சொல்லும் நிலையில் இல்லை. அவள் பார்வையே சொன்னது அவளுக்கு தன்னை தெரியவில்லை என்று, என்ன எதிர்வினை ஆற்றுவான்.

அவன் உடல் கூடு மட்டும் நிற்க, உயிர் அவள் காலடியில் கிடந்து கதறுகின்றதே, என்னை கண்டு கொள் கண்மணி என்று.

வாகீஷனிடம் பதில் இல்லை என்றதும் சுதாகரனிடம் "சரிண்ணா பிறகு பாப்போம்..." என்றவள் வண்டியை உயிர்பித்து செல்ல, தன்னை விட்டு செல்லும் தன்னவளை விழி நீர் சிந்த வெறித்திருந்தான் வாகீஷன்.

இதயத்தின் நார்கள் அத்தனையும் அறுந்து, ஒற்றை நாளத்தில் ஊசலாடும் வலியை தந்தது காதல் மனது.

தன்னை கண்டதும் அவள் முகம் மலரும்... சந்தோஷத்தில் பூரிப்பாள், தாவி வந்து தனக்குள் புகுந்து கொள்வாள்... இத்தனை நாள் பார்க்க வராததற்கு செல்ல கோபம் கொள்வாள், இப்போதே இந்த நொடியே தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்வாள் என்று ஆயிரமாயிரம் கற்பனைகள்.

அனைத்தும் கானல் நிராக கனத்த மனதுடன் கண்ணீருடன் நின்றிருந்தான். வாகீஷனின் அந்த தோற்றத்தை பார்க்க வெறியேறியது சுதாகரனுக்கு. "வேன்ல வந்து ஏறுடா.. அவள மடக்கி நியாயம் கேட்டே ஆகணும்..." என்று அவனை இழுத்துக்கொண்டு வேனின் அருகே சுதாகரன் வர,

நிராளினியின் ஸ்கூட்டி திரும்பி இவர்களை நோக்கி வந்தது. வாகீஷனை சுதாகரன் அறிமுகம் செய்யும்போது எங்கோ பார்த்த ஞாபகம். ஆனால் சட்டென நினைவு வரவில்லை, யோசனையுடனே ஒரு 300 மீட்டர் சென்று இருப்பாள், நினைவடுக்கில் அவன் யார் என்பதை கண்டு கொண்டவள் வாகனத்தை திருப்பினாள்.

அவளையே பார்த்திருந்த வாகீஷன் அவள் திரும்பி வரவும், புன்னகை முகமாக கண்களைத் துடைத்தவன், நண்பனை தட்டி "டேய் அவ வாராள்டா.. என்னுட்ட விளையாடி இருக்காள்.. பின்ன எட்டு வருஷம் எந்த தொடர்பும் இல்லாம காணமா போனா கோவம் இருக்கும் இல்ல.. அதான் என்ன தெரியாத மாதிரி நடிச்சு இருக்காள்.. இப்ப வந்து ஏசுவாள் பாரு.. உனக்காக நான் காத்திருக்க சொல்லாம கொள்ளாம எங்கடா போனனு சண்ட போட போறாள்..." என்று சொன்ன நண்பனை திட்டுவதா அணைத்து ஆறுதல் சொல்வதா தெரியவில்லை.

நிராளியின் முகத்தில் இவன் சொல்வது போன்ற எந்த பிரதிபலிப்பும் இல்லை. அவர்கள் அருகில் வண்டியை நிறுத்தியவள் "நீங்க எட்டு வருஷத்துக்கு முன்னாடி அண்ணா கூட மேசன் வேலைக்கு போவிங்களே அவங்கதானே.. ஒரு தடவ என்னுட்ட கூட தனியா கதைக்கனும்னு வந்து கதைச்சிங்களே..." என்று கேட்க

அவன் தலையை ஆம் என்ற வகையில் ஆடியது. விரிசல் விட்ட கண்ணாடி பாத்திரம் மீண்டும் கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்த நிலை அவனது. வாய் திறந்து பேச முடியவில்லை.

"பாத்தவுடனே ஞாபகம் வரல.. பிறகு தான் ஞாபகம் வந்துச்சு.. எப்டி இருக்கீங்க?.. கல்யாணம் ஆயிடுச்சா? எத்தன பிள்ளைங்க?..." என்று அடுக்கிக் கொண்டே போனவள் அவன் பேசாமல் இருக்க

"அட என்னங்க.. சங்கடப்படாம சாதாரணமா கதைங்க.. அன்டைக்கு நீங்க கதைச்சத நான் அப்பவே மறந்துட்டேன்..." என்று சொல்ல திகைத்து விழித்தான் வாகீஷன்.

அன்று அவன் பேசியது அனைத்தும் அவன் உள்ளத்தின் உணர்வு ஊற்றுக்கள் அல்லவா. அதை கேட்டு அவள் சொன்ன ஒற்றை வார்த்தையை உயிரின் ஆதாரமாகக் கொண்டு தானே அவன் உயிர் வாழ்ந்ததும், உழைத்ததும், உயர்ந்ததும்... இவள் சாதாரணமாக மறந்து விட்டேன் என்கின்றாள்.

சிதைந்து கிடக்கும் இதயத்தை எத்தனை தடவை வாள் கொண்டு அறுப்பாள். அவள் இவன் முகம் பார்ப்பதை உணர்ந்து, வழிய புன்னகைத்து "நா.. ம்க்கு..நான் சுகமா இருக்கேன்.. நீ.. நீங்க..."

"ஹா நானும் நல்லா இருக்கேன்.. எனக்கு இன்னும் 20 நாள்ல கல்யாணம்.. காட் கையில இல்ல.. பிறகு வீட்டுக்கு வந்து வைக்கிறேன்.. ஆனா இப்பவே அழைச்சிடுறேன் கண்டிப்பா கல்யாணத்துக்கு வாங்க..." என்றவள்

தன் கைப்பையில் இருந்து ஃபோன் சிணுங்கவும் "சரி எனக்கு ஒரு அவசர வேல இருக்கு.. நான் வாரேன்..." என்றவள் வந்த வழி மீண்டும் பறந்து விட்டாள்.

"டேய் என்னடா இது.. அவ உனக்காக வெயிட் பண்ணுவேன்னு சொன்னானு நீ சொன்ன.. அவ என்னடான்னா அன்டைக்கு கதைச்சது எதுவுமே ஞாபகம் இல்லனு சொல்றாள்..." என்று சுதாகரன் கேட்க

வேனின் பின்பக்கம் ஏறி அமர்ந்தவன் "வேன எடு மச்சான்..." என்று சொல்ல சுதாகரனும் வண்டியை எடுத்தான்.
 
Top Bottom