• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தேன் நாட்டு பைங்கிளி - 23(Final)

நிதனிபிரபு

Administrator
Staff member


அத்தியாயம்: 23 (final)

வானதியின் முகத்தில் இருந்த பரிதவிப்பும் ஏக்கமும், கரிகாலன் ஒவ்வொரு முறையும் அலைபேசியின், சிவப்பு நிற பொத்தானை அழுத்தும் போது கூடிக்கொண்டே போனது.

"எடுக்கலயா?"

"ம்..."

"ஆகாஷ் அண்ணாக்கு எடுத்துப் பாருங்க."

"அவன்ட்ட எப்படிக் கேக்க முடியும்? அவன் ஊருக்கு போயிருக்கான்."

"எனக்குப் பயமாக் கிடக்கு காலாண்ணா. பைக்க எடுத்துக் கொண்டு போயிருக்கார். திரும்பவும்... ஆக்சிடென்ட்... வேணாம்... பிழையா நினைக்க வேணாம்." என்று புலம்பியபடி தன் மொபைலில் இருந்து முயற்சிக்க, அது செல்லவில்லை.

வேகமாக தன் தாய் தந்தையின் புகைப்படத்திற்கு முன்வந்து நின்றவள், "என்னில காதல் வச்சதைத் தவிர அவன் வேற ஒரு பிழையும் செய்யல. நாந்தான் விசராட்டம் அவனை நோகடிச்சிட்டன். இனி அப்படிச் செய்ய மாட்டன். என்னிட்ட அவன ஒப்படைச்சிடுங்க." என்று மனமுருகக் கண்ணீருடன் வேண்டிக் கொண்டிருந்தவளுக்குக் காலையில் கரிகாலன் கூறியது முன்வந்து நின்றது.

"நீ தப்பு பண்ணுற வானு. அருள் சுஜித்ரா காதல் Past. நடந்த முடிஞ்ச அத்தியாயமே தவிர, அவனோட முழு வாழ்க்கையும் இல்லை. ஒரு மனுஷனோட கடந்த காலத்த தண்டிக்க ஆரம்பிச்சா அவனுக்குன்னு எதிர்காலமே இருக்காது. அதுவும் திருத்த முடியாத தப்ப செஞ்ச ஒருத்தனுக்கு மன்னிப்பு தான் பெஸ்ட் பனிஷ்மென்ட்.

ஆனா நீ அவனுக்கு அதைத் தராம, பழச‌ சுட்டிக்காட்டி தண்டிக்கிறேன்னு உங்க ரெண்டு பேரோட ப்யூச்சரையும் கெடுக்குற. உன்னால அருளத் தவிர வேற யாரையாது கல்யாணம் பண்ணிக்க முடியுமா? முடியாது. ஏன்னா நீ அந்த அளவுக்கு அவனக் காதலிக்கிற. இல்லன்னுன்னு என்னைப் பாத்து சொல்லு.” என்க, வானதியால் எதுவும் பேச முடியவில்லை.

“அவனும் உன்னை விரும்புகிறான் வானு. காதல் மனசு சம்மந்தப்பட்டது. உடம்பு, பரிமாறப்பட்ட காரணத்தால அதோட புனிதத்தன்மைய இழந்திடுச்சின்னு அர்த்தமில்ல. அதைப் பரிமாறிக்கிட்டவங்களும் கெட்டவங்கன்னும் அர்த்தமில்லை. அது அந்த நேரத்து உணர்வு. அதைக் கடக்க முடியாம திரும்ப திரும்ப அதே தவற தன்னோட சுயநலத்துக்காகச் செய்றவங்க தான் தப்பானவங்க. அருள் அப்படி இல்லை. தன்னோட தவற உணர்ந்து, எப்படிச் சரி செய்றதுன்னு தெரியாத குற்ற உணர்ச்சில தான் இருந்தான்.” என்க, வானதி மௌனம் சாதித்தாள். அவளின் மனம் இன்னும் வர்மாவை மன்னிக்கத் தயாராக இல்லை.

தன்னை மறந்து மதுவிற்குள் செல்லும் அளவிற்காக சுஜித்ராவை அவன் காதலித்திருக்கிறான் என்பது வானதிக்கு அதீத வலியைத் தந்ததிருந்தது. அதை அவளின் முகம் காட்டிக் கொடுக்க,

“அவனுக்கு நடந்தது ஆக்ஸிடென்ட் இல்லை வானு. அவனே தான் ராங் சைடுல டிரைவ் பண்ணி, லாரி முன்னாடி விழுந்திருக்கான். எதுக்குன்னு தெரியுமா? தற்கொலை பண்ணக்க." என்றதும் அதிர்ந்துதான் போனாள் வானதி.

"அவன நீ மீட்டு வந்தது காதல் தோல்வில இருந்து இல்லை வானு. நீ கொடுத்தது, ஏன் உயிர் வாழணும் வெறுத்து, தொலைச்ச அவனோட வாழ்க்கைய. நீ குடுத்த அதை, நீயே திருப்பி வாங்கிக்க நினைக்காத வானு." என்றதும் வானதியின் மனம் படபடத்தது.

தற்கொலையா!!

பழைய காதலியை மறக்க முடியாது மதுவின் பிடிக்குள் சிக்கி, போதைக்கு அடிமையாகியதால் தான் விபத்து நடந்தது என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தவளுக்கு அவனின் தற்கொலை முயற்சி இடி தான்.

வர்மா தைரியமானவன். மன உறுதி கொண்டவன். தற்கொலைச் செய்ய எது அவனைத் தள்ளியது என்று யோசிக்க, அதையும் கரிகாலன் விளக்கினான். அதன்பின் தான் பேசிய பேச்சின் வீரியம் புரிய, வர்மாவிற்கு விடாது அழைத்துக்கொண்டே இருக்கிறாள்.

சோர்ந்த வர்மாவின் நடை, அவளைப் பயமுறுத்தியது. மாலை வேளையைத் தாண்டி இருட்டத் தொடங்கியிருந்தது. ஆனாலும் நண்பகலில் சென்றவன் எங்கே என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாது இருக்க, வெண்மதி வந்தார் கோபமாக.

"இப்ப சந்தோஷமா இருக்குமே உனக்கு! எம்பையனக் காணும். இனி உன்ன கல்யாணம் பண்ணிக்க காதல் பண்ணுன்னு தொல்ல பண்ண அவன் இருக்க மாட்டான். எங்க? எந்த நிலைமைல இருக்கான்னு தெரியல. திரும்பி கிடைப்பானான்னும் கூடத்தெரியல. அவனைப் பெத்த வயிறு கொதிக்குது டி. ஏற்கனவே ஒருத்தி அவனச் சாவுவரை கூட்டீட்டு போய்ட்டா. ரொம்ப போராடி மீட்டு வந்தேன். இப்ப நீ... எந்த ரோட்டுல எப்படி விழுந்து கிடக்கானோ... காதலுங்கிற பேர்ல என்னோட ரெண்டு அண்ணே மகள்களும் எம்பையன் வாழ்க்கைல விபரீதமா விளையாடிட்டாளுகளே டி!..." என்ற கண்ணீர் வடித்தவர்,

"எம்பையனுக்கு மட்டும் எதாவது ஆகட்டும். அப்பத் தெரியும் இந்த வெண்மதி யாருன்னு. உங்க ரெண்டு பேரையும் சும்மா விட மாட்டேன் டி." என்று தாய் மனம் மிரட்ட, கரிகாலன் மாறனுடன் சேர்ந்து வர்மாவைத் தேடுவதற்காகப் புறப்பட்டான்.

"நானும் வாரன்."

"வேணாம் வானு..." என்ற கரிகாலனைப் பேச விடாது, வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டாள். வர்மா வழக்கமாகச் செல்லும் எல்லா இடங்களுக்கும் சென்று பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை.

நள்ளிரவை நெருங்குவதால் சாலையில் பயணிக்கும் வண்டிகளின் வேகம் தாறுமாறாக இருந்தது. சர் சர் என்று கடந்து செல்லும் வாகனங்களும், லாரி போன்ற கனரக ஊர்திகளும் அவளின் அடிவயிற்றைக் கலக்கியது.

கரிகாலன், "நேரமாச்சு வானு. உன்னை வீட்டுல விட்டுட்டு நாங்க போலிஸ் ஸ்டேஷன் போறோம்." என்க,

"காலாண்ணா! கடைசியா ஒருக்கா... ரிஹபிட்டேசன் பக்கமா போங்களன்." என்று இறைஞ்ச,

அங்கு அவள் எதிர்பார்த்தது போல் கடலை வெறித்தபடி இரு கரங்களையும் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் அருள்மொழிவர்மன்.

அவனைக் கண்ட மாத்திரத்தில், முழுதாக நிறுத்தக் கூடச் செய்யாத வண்டியில் இருந்து குதித்திறங்கி ஓடிச் சென்றாள் வானதி.

அவனின் முன்வந்து நின்றவள், தலைமுதல் பாதம்வரை அவனைத் தன் பார்வையால் வருடி அவனின் நலத்தை உறுதி செய்து கொண்டாள் கண்ணீருடன்.

அவளின் விசும்பல் சத்தம், எங்கோ வெறித்தபடி இருந்தவனின் கருமணியை இறங்க வைத்தது. தன் முன் நின்றவள் கானலா என்ற சந்தேகத்தில் இமை சுருக்கினான். அவனின் பார்வைக்காக ஏங்கியவளுக்கு அது கிடைத்துப் போக, இரு கரத்தையும் விரித்துக் கொண்டு அவனின் நெஞ்சில் சாய்ந்து, இடையணைத்துக் கொண்டாள்.

"நான் பிழ செய்திட்டன் மொழி. பழையதெல்லாம் குப்பை எண்டு ஒதுக்காம, நான் கிளறிட்டன். அதன்ட வாடை நம்மட லைஃப்புக்கு அவசியம் இல்லை. உன்ர காதல விட எனக்கு வேற ஒண்டும் தேவையில்ல. எந்த தகுதியும் நான் பாக்கலை மொழி. நான் உன்ன காதலிக்கிறன். அப்பவும் இப்பவும் எப்பவும்" என்றவள், அவனின் கன்னம் தாங்கி, விழிகளை உற்று நோக்கி, "என் பிழைய மன்னிச்சி. என்ர காதல ஏத்துக் கொள்ளுவியா நீ?" என்றாள்.

அத்தனை பக்கத்தில் நின்றும் அணைக்காது நின்றிருந்தவனின் பார்வை அழுத்தமாக அவளின் மீது விழ, அந்த வெற்றுப் பார்வையில் துடித்துப்‌போனாள் பெண்.

"உன்னப் பார்க்க எனக்கு பயமா இருக்கு மொழி. வேணாம். முடிஞ்ச எதையும் நினைக்க வேணாம்." என்றபடி அவனின் நெஞ்சில் இருந்து எழப்போனவளை, புயல்காற்றின் வேகத்தில் தன்னில் புதைத்தான் வர்மா.

அவனின் இறுக்கமான அணைப்பு அவனின் வலியைச் சொல்லி, அவளுக்கும் வலிக்க வைத்தது.

"நீ சொன்னது உண்மை தான் நதி. எனக்குத் தகுதி இல்லை. உன்னை கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு..." என்றபோது விரலால் அவனின் உதடுகளை மூடி வார்த்தைகளை வரவிடாது செய்து, ‘வேண்டாம்’ என்பது போல் தலையசைக்க, விரல்களைத் தன் உதடுகளில் அழுத்திப் பிடித்தவன்,

"ப்ரேக்கப் பண்ணிட்டு போகும் போதே அவ மேல் எனக்கு இருந்த காதல் விட்டுப்போச்சி. மாறன கல்யாணம் பண்ணதும் முழுசா முடிஞ்சது. எனக்கு அவள மறக்குறதும், அவகூட இருந்த நாள்களக் கடந்து வர்றதும் கஷ்டமா இல்லை நதி. ஈசியா… ரொம்பவே தான் இருந்தது. ஆனா… ripple effect மாதிரி, தொடர்ந்துகிட்ட இருக்கு.” என்றவன் உள்ளத்தின் வேதனையைத் தொண்டைக் குழிக்குள் விழுங்கினான்.

அமைதியாக இருக்கும் குளத்தில் கல்லை விட்டெரிந்த ஒரே ஒரு தவறால் அலை அலையாக பல அலைகள் உண்டாவது போல் தான் வர்மா செய்த தவறும்.

'போதும்...' என்பது போல் அவனின் கழுத்து வளைவில் முத்தமிட்டு நிறுத்தினாள். அவன் சொல்லாத வேதனையைக் கண்கள் பிரதிபலித்தன.

அவனே சொன்னது போல் சுஜித்ராவின் மீதான அவனின் காதலைக் கடந்து வருவது எளிதாகதான் இருந்தது. அது வயதின் தாக்கத்தால் உண்டான ஈர்ப்பு ஆதலால் மனத்திற்குள் இருந்தவளை எளிதாக வெளியேற்றி விட்டான்.

ஆனால்... அவளுக்கு வர்மாவை மறப்பதுதான் முடியவில்லை. முக்கியமாக இருவரும் கூடிக் கழித்த நாள்களை அவளால் கடந்து செல்லவே முடியவில்லை.

"வேற வேலை தேடிட்டு இருக்கானாமே… இனியும் அவன் வந்து அந்த கம்பெனில சேர்ந்து உன்னை ராணி மாதிரி வாழ வைப்பான்னு நம்பிட்டு திரியாத. உங்கத்தை மணிமாறனுக்கு உன்னைய கேக்குறா. என்ன சொல்ற? அவனக் கட்டிக்கிட்டா காலம் முழுக்க பணத்துக்குக் குறையே இருக்காது.‌ இஷ்டப்படி வாழலாம். இல்ல இவன் தான் வேணும்னா! அஞ்சுக்கும் பத்துக்கு கையேந்தி, மாச சம்பளத்துக்குள்ள இறுக்கிப் பிடிச்சித் தான் வாழ வேண்டிவரும்." என்ற நாகேஸ்வரியின் தூபத்ததால் மணிமாறனை மணந்து கொண்டாள்.

அவள் எதிர்பார்த்த ஆடம்பர வாழ்க்கை கிடைத்தது. ஆனால் மாறனுடனானத் தாம்பத்யம் சுகிக்கவில்லை அவளுக்கு. ஆதலால் வர்மாவுடன் தன் உறவைத் தொடர நினைத்தாள்.

அவனும் ஆண் மகன் தானே… உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் அடிமை தானே… நெருங்கி தாராளமாகப் பழகினாலே போதும் என்று கணக்கிட்டாள். இதற்கு முன்னும் அப்படித்தான், கொஞ்சி கெஞ்சி, எல்லைக்குள் நிற்க முயற்சித்தவனை, தன் ஆசைக்கு இணங்க வைத்தாள்.

இப்பொழுதும் அதையே செயல்படுத்திப் பார்த்தாள். ஏற்கனவே ருசி கண்டதால் வர்மாவிடமும் இதற்கு எதிர்ப்பு இருக்காது என்று நினைத்தாள். தாராளமாக பழகவும் செய்தாள்.

இருவரும் காதலித்திருப்பார்கள் என்று யாருமே எண்ணி இருக்கவில்லை. வர்மாவும் சொல்லிக் கொள்ளவில்லை. சுஜித்ராவும் காட்டிக் கொள்ளவில்லை. அவர்களின் பழக்கம் பிழையாகப்‌ பார்க்கப்படவில்லை.

அவளின் நோக்கம் தெரியாத வர்மா, அவளின் திடிர் நெருக்கத்தைக் கண்டுகொள்ளும் நிலையில் இல்லாது வேலைக்கானத் தேடுதலில் இருந்தான்.

ரவிகிருஷ்ணனின் பெயரால் அவன் செல்லும் இடங்களில் எல்லாம் நிராகரிப்பைச் சந்தித்து வந்தவன், வேறெதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.

ஆனால் சுஜித்ரா தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் சமயத்திற்காகக் காத்திருந்தாள்.

அன்று ஒரு நேர்காணலை முடித்துவிட்டு வீடு வர, வீட்டில் யாரும் இல்லை. வெண்மதியும் மணிமாறனும் ஒரு விசேச வீட்டிற்குச் சென்றிருக்க, வேலையாட்களுக்கு விடுப்பு சொல்லி அனுப்பி வைத்திருந்தாள் சுஜித்ரா.

அவனைக் கண்டதும், ஓடி வந்து அணைத்துக் கொண்டவள், " தப்பு பண்ணிட்டேன் மச்சி. என்னால உன்ன மறக்க முடியும்னு நினைச்சேன். ஆனா முடியல. இப்பவும் நான் உன்னை லவ் பண்றேன்னு நினைக்கிறேன். உங்கூட இருந்த டேஸ் தான் பெஸ்ட்..." என்று கண்டபடி உலறியவளின், பேச்சின் பொருள் புரியாது திகைத்துப்போய் நின்றான்.

அவனின் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டவள், அணைப்பை இறுக்க, உடலில் அமிலத்தை ஊற்றியதைப் போல் அருவெறுத்துப் போனான்.‌ நெஞ்சில் படர்ந்திருந்த அவளை உதறித் தள்ளி, கன்னத்தில் அறை விட்டான். ஒழுக்கமாக நடந்து கொள்ளும் படி எச்சரித்து விட்டு சென்றது அவமானமாக இருந்தது சுஜித்ராவிற்கு.

அதை வெளியே தெரிந்து விடும் முன், தன் அவமானத்தை அவனுக்கே திரும்பி தர வேண்டி, இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்டு,
ரவி கிருஷ்ணாவிடமும் கணவனிடமும் சென்றாள்.

“அவன் என்னை லவ் பண்ணிருப்பான்னு நான் நினைக்கவே இல்லை மாமா.” என்றவள்,

“அவன விட்டுட்டு உங்களைக் கல்யாணம் பண்ணதுக்காக பழி வாங்க, நானும் அவனும் சேந்து எடுத்துக்கிட்ட ஃபோட்டோவ காட்டி என்னை மிரட்டி காசு கேக்குறான்.” என்று குடும்பத்தாரின் முன் அழுதுவடிந்து வர்மாவின் மீது பழி போட்டாள். அதற்கு நாகேஸ்வரியும் சேந்து ஒத்து ஊத, பிரச்சனையை பெரிதாக்கி விட்டாள்.

வெண்மதி மாறன் இருவரும் சுஜித்ரா சுமத்திய பழியை நம்பவில்லை என்றாலும் அவன் காட்டி புகைப்படங்களை நம்பினர்.

மாறன் தம்பியுடன் சண்டை போட்டான் என்றால் வெண்மதி அமைதியாக இருந்தது, வர்மாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவருக்குத் தன் அண்ணன் மகளின் மீது சந்தேகமே வரவில்லை. காரணம் ‘மணிமாறனைத் திருமண செய்ய சம்மதமா?’ என்று அவளிடம் கேட்டு உறுதிபடுத்திய பின்தான் கல்யாணத்தை நடத்தி‌ வைத்தார்.

வர்மாவுடன் தனக்கிருப்பது நட்பு தான் என்று அழுத்திச் சொன்னவள் அவள். மகனிடம் அவர் எதுவும் கேட்கவே இல்லை. அப்படி அவன் சுஜித்ராவைக் காதலித்திருந்தால் தன்னிடம் தானே முதலில் சொல்லியிருப்பான். சொல்லவில்லை என்றால் அவர்களுக்குள் இருப்பது காதல் இல்லை என்று நினைத்தார். மகன் தன்னிடமிருந்து மறைத்ததை அவரால் ஏற்க முடியவில்லை. அவன் சொல்லியிருந்தால் இரு மகன்களில் வாழ்க்கையையும் காப்பாற்றியிருக்கலாமே.

வர்மா, மாறனிடம் சென்று, “அவ சொன்னது பொய் மாறா. என்னை நம்பு.” என்க,

“நீ சுஜித்ரா லவ் பண்ணியா?” என்று அழுத்தமாக கேட்டான்.

மௌனம் சாதித்தான் வர்மா.

“எனக்கு தெரியும் சுஜித்ராவ நீ மிரட்டியிருக்க மாட்டன்னு. ஆனா அந்த போட்டோஸ் உண்மை. அவளும் உன்னை காதலிச்சிருக்கான்னும் தெரியும். இப்ப எனக்கு தெரிய வேண்டியது. உங்க பழக்கம் எந்த லிமிட்ல இருந்தது‌ங்கிறது மட்டும் தான்.” என்க, அவனிடம் எப்படிச் சொல்வது என்று புரியாது குற்ற உணர்வில் முதல் முறை சிக்கினான் வர்மன். அவளுடன் கூடி கவனித்தபோது தவறாக தெரியாத அது. அவள் மாற்றான் மனைவி… அதுவும் அண்ணனின் மனைவி என்றானபோது, காதல் என்றாலும் கட்டில் வரை சென்றிருக்க கூடாது என்ற காலம் தவறிய ஞானோதயத்தைத் தந்தது.

"நீ இப்படி பேசாம இருக்குறதே உங்க லிமிட் என்னென்னு சொல்லிடுச்சி." என்று அருவெறுப்பான பார்வையைத் தந்துவிட்டுச் சென்றான். அது தன் நிலையை அறவே வெறுக்க வைத்தது வர்மாவிற்கு.

எப்படித் தன் அண்ணனை எதிர் கொள்வது என்ற குற்ற உணர்வே, வண்டியைத் தாறுமாறாக ஓட்டி, லாரியின் மீது மோத வைத்தது.

அவனின் விபத்திற்குபின் தான் வர்மா மட்டுமல்ல சுஜித்ராவும் சேர்ந்தே காதல் செய்திருக்கிறாள் என்பது ஆகாஷ் மூலம் தெரியவந்தது வெண்மதிக்கு.

சுஜித்ரா, எங்கே தன் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து, “இதுவரை எப்படியோ… நம்ம கல்யாணம் ஆனதுக்கு அப்றம் நான் உங்களைத் தவிர வேற யாரையும் நினைச்சுக் கூடப் பாக்கல. இது சத்தியம்ங்க. நம்புங்க. என்னை வெறுத்திடாதிங்க. எனக்கு நீங்க தான் முக்கியம்.” என்று கண்ணீர் வடித்து தன் கல்யாண வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொண்டாள் இப்பொழுது வரை.

வெண்மதி தான் உடைந்து விட்டார். தன் மகனிடம் ஒரு வார்த்தையாவது கேட்டிருக்க வேண்டும். எதுவும் கேட்காது, அவனை நம்பாது இருந்த தன் தவறை எண்ணி எண்ணி மருகிப் போனார். அதன் பின் மகனை எத்தனையோ முறை சமாதானம் செய்யப் பார்த்தும் பலன் இல்லை.

நாகேஷ்வரிக்கு அனைத்தும் தெரியும் என்பதும், அவர் தான் திட்டம் போட்டு மறைத்து விட்டார் என்பதையும் அறிந்து வெண்மதி தாய் வீட்டையே அறவே ஒதுக்கி விட்டு மகனின் மனமாற்றத்திற்காக காத்திருந்தார்.

_____

இருவரும் பேச்சற்று ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு நிற்க, அலைகள் வந்து வந்து போதும் சத்தம்‌ மட்டுமே அங்கு பேரிரைச்சலுடன் கேட்டது. அவனின் தளராத அணைப்பு, அவளை அவனுள் பிணைத்துக்கொண்டே போனது. உள்ளுக்குள் இருந்த வேதனைகள் மொத்தமும் அந்த அணைப்பில் வற்றிப் போவதாய் உணர்ந்தான். அவன் மட்டுமல்ல அவளும் தான். புது ஜனனம் எடுத்தார் போல், பேச்சற்ற நிமிடங்களாய் சில நொடிகள் கழிய, மெல்லத் தெளிந்த வானதி,

"ஸ்ரீஜாட கலியாணத்துல அந்த அரக்கி வந்து பேசினா என்னோட... நீங்க, அவள் வேணாம் எண்டு தூக்கி எறிஞ்சதாம். எனக்கு செக்கேன்ட் சான்ஸ்ஸாம். அவள் யூஸ் பண்ணதாம்… அது இது எண்டு கதைச்சிட்டு போனா. அது என்ர கண்ண மறைச்சிட்டு. அதான் ஆத்திரத்துல உங்கள வேண்டாம் எண்டு கண்டத கதைச்சிட்டன். இனி அதுமாதிரி கதைக்க மாட்டன். ப்ராமிஸ்." என்று வழமை போல் அவனின் கழுத்தில் முத்தமிட்டவளின் நெற்றி முட்டினான் வாஞ்சையோடு.

"நீங்களும் எனக்கு ஒரு சத்தியம் செய்யணும்." என்று முகம் பார்த்துக்கேட்க,

“ம்… பண்ணலாமே…” என்றவன், என்ன என்று கூய கேட்காது அவளைப்போல் அவனும் கழுத்து வளைவில் பற்தடம் பதிய சத்தியம் செய்துகொடுத்தான்.

"உங்கட அம்மாக்கு கால் எடுங்க. அவங்களும் பயந்து போய் கிடக்காங்க. என்னை மிரட்டிட்டு போனாங்க தெரியுமா?"

"உன்னையா?"

"ஓம்..."

"என்னென்னு?" என்றவனிடம் அனைத்தையும் கூறி முடித்தவள்,

"மறுபடியும் நீங்க மூஞ்சூறாட்டம் லாரிட விழுந்து கிடப்பீங்களோ எண்டு பயம் வந்திட்டு. இனி ப்ராமிஸ்ஸா தற்கொலைக்கு போகற மாதிரி முட்டாள்தனம் செய்யக் கூடாது. " என்றவள் மீண்டும் மீண்டும் சத்தியம் கேட்க, அவனும் செய்யத் தயாராகத்தான் இருந்தான். ஆனால்...

"தற்கொலையா?” என்றதும் குழம்பிப் போய் பார்த்தாள்.

“லூசா நீ... இது நீ குடுத்த லைஃப் நதி. உயிர் வாழணுங்கிற எண்ணத்தையே தந்தது நீ தான். அதை உங்கூட கடைசி வரை வாழ்ந்து கழிப்பேனே தவிர, அரைவேக்காட்டுத்தனமா எந்த முடிவையும் எடுக்க மாட்டேன். இது என்னோட ஜீவநதி மேல் சத்தியம்." என்று இதழில் உதடுகளைப் பதிக்க, தள்ளாடித்தான் போனாள் அவன்‌ தந்த சத்தியத்தில்.

சில பல கொஞ்சலுக்கும் கெஞ்சலுக்கும் இடையே ஊடலுடன் அங்கு காதல் அரங்கேறிக் கொண்டிருந்தது.

அவனின் கடந்த காலத்தை வெறுத்தவளால் அவனின் காதலை வெறுக்க முடியவில்லை. அதே நேரம் அவளின் குணம் ஏற்கவும் விடவில்லை. ஆனால் அவளின் ஆழ்மனக் காதலுக்காக அவனை ஏற்றாள். அவனை எந்தச் சூழ்நிலையிலும் இழந்து விட அவள் தயாராக இல்லை.

அவனின் சட்டைப் பாக்கெட்டிற்குள் போட்டு வைத்திருந்த அலைபேசி சத்தமிடாது இரு முறை அதிர்ந்தது.

எடுத்துப் பார்த்தான். அழைத்தது வெண்மதி, உடனே அவருக்கு அழைக்க, ”நான் கால் எடுக்கைக்குள்ள ஏன் எடுக்கல?” என்று சண்டைக்கு நிற்க, அவன் புன்னகையுடன் loudspeaker-ல் போட்டான்.

"என்ன ம்மா! என் பொண்டாட்டிய மிரட்டுனியாமே!"

"நான் அப்பவே அவள கரிகாலன் பின்னாடி ஏத்தி விட்டுட்டேன்‌ டா...இன்னுமா வரல?" என்று ஒரு சேர இருவரும் கேட்க, விழி விரித்தாள் வானதி. அவளின் விரிந்த விழிகளில் இதழொற்றி எடுத்து தன்னோட இறுக்கிக்கொண்டான். அப்பொழுது தான் கவனித்தாள் பைக்க நிறுத்திவிட்டு வரவேண்டிய கரிகாலனும் மாறனும் வந்து சேராததை.

"எல்லாம் ப்ளானா!" என்று சற்று கோபமாகச் சொல்லி விட்டு நடக்க, அவளின் பின்னோட சென்று கட்டிக் கொண்டவன், அவளின்‌ நாசியோடு நாசி உரசியவன், இல்லை என்றான்.

"பொய் சொல்றீங்க." என்றவளுக்கு உண்மையைச் சத்தமில்லாது பெண்ணவளின் இதழ்களுக்குள் இறக்கியிருந்தான்.
 
Last edited:
Top Bottom