• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தேன் நாட்டு பைங்கிளி - 24(Epilouge)

நிதனிபிரபு

Administrator
Staff member

அத்தியாயம்: 24 (எபிலாக்)


இருள் தின்னும் ஒளிப் பறவையால் வானம் செந்நிறமாக மாற, ஆகாயத்தின் பிரதிபலிப்பைக் காட்டும் கடலும், தீப் பற்றி எரிந்தார் போல் காட்சி தந்தது.

தங்க பாற்கடலில் இருந்து தகித்துக் கொண்டே எழுந்து வந்த ஆதவனை, ஆழியில் மிதந்து கொண்டிருந்த உல்லாசக் கப்பலில் இருந்து, உள்ளப் பூரிப்போடு பார்த்தாள் வானதி.

கடலின் வாடைக் காற்றில் சிலிர்த்துப் போனவள், உடையாய் வெள்ளை நிறப் போர்வையை மட்டுமே சுற்றியிருந்தாள். மார்பை மட்டுமே சுற்றி இருந்தவளின் ஆடையற்ற தோள்பட்டையில் கதிரவன் மஞ்சள் நிறத்தால் ஆசிகளைப் பூசி விட்டது.

நெஞ்சுக் கூட்டுக்குள் தொங்கிய தங்கத் தாலி, அதை அணிவித்து விட்டவனின் காதலை உலகிற்கே பறைசாற்றும். நிச்சயம் அந்தத் தென்னாட்டுக் காரனுக்கு பிடிவாதம் அதிகம் தான்.

வேகமாக கண்ணாடி தடுப்பைத் தாண்டிக் கொண்டு உள்ளே செல்ல, அங்கு அதுபோன்றதொரு வெள்ளைப் போர்வைக்குள் துகில் கொண்டிருந்தான் அருள்மொழிவர்மன்.

அவனைப் பார்க்க பார்க்க உள்ளம் உவகையில் கர்வம் கொண்டது. இவன் என் மணாளன் என்ற மிடுக்கைத் தலையில் சூட்டிக்கொண்டு, நிமிர்வாய் அவனின் அருகில் சென்று அமர்ந்தாள்.

"காட்டான்... வடிவான காட்டான். உன்னக் காதலிச்சேனே தவிர, உன்ன அடைய வேணும் எண்டு ஒரு நாளும் நினைச்சதில்ல. கலியாணம் கட்ட வேணும். உன்னோட வாழ வேணும் எண்டு கற்பனைய வளர்க்கவே இல்ல. ஆனா இந்தக் காட்டான். எல்லாத்தையும் செஞ்சு போட்டான். வடிவா காதல சொல்லி, கல்யாணம் செய்து, இப்ப தேன் நிலவுல இருக்கோம்." என்று வர்மாவின் சிகை கோதியபடி நடந்தவற்றை நினைத்துப் பார்த்தாள்.

மூன்று தினங்களுக்குள் திருமணத்தை நடத்தியிருந்தனர் ஆண்கள் நால்வரும். கரிகாலன், மணிமாறன், ஆகாஷ் பிறகு நம் அருள்மொழிவர்மன். எதையும் எதிர் பார்க்கவில்லை என்று சொல்லி தாலி, புடவை என மணப்பெண்ணின் தேவைகளை அவனே தன்‌ சொந்த சம்பாத்தியத்தில் வாங்கினான்.

மாறனும், வெண்மதியும் "எங்களை அவமானப்படுத்திய அந்தப் பொண்ணு கூட எம்பையன் கல்யாணம் நடக்காது. அப்படி நடந்தா அவன் எம்பிள்ளையே இல்லை." என்று உறுமிய ரவி கிருஷ்ணாவைச் சரிக்கட்டி மணப்பந்தலின் முன் வரிசையில் இடம் பிடித்துக் கொடுத்து திருமணத்தை வெகு விமர்சையாக நடத்தினர்.

ஆண்டாளுக்கும் சகாயத்திற்கும் மனநிறைவு வந்திருந்தது. பார்த்திபன் கரிகாலன் இருவரும் வானதியின் கரத்தைப் பற்றி அருள்மொழிவர்மனுக்கு தாரை வார்த்துக் கொடுத்தனர். நாணம் பொங்க, தன்னவன் தந்த பொன் தாலியை கழுத்திலும், அவளவனை நெஞ்சிலும் நிரந்தரமாக ஏற்றுக் கொண்டாள்.

ரவி கிருஷ்ணாவின் பேச்சை மீறி நடந்த திருமணம் ஆதலால் சொத்தில் பங்கில்லை என்றுவிட்டார். அது யாருக்கும் வருத்தமாக இல்லை.

வர்மாவிடம், நல்லது தான் நடந்திருக்கிறது என்றார் வெண்மதி. “அப்பவே அந்த சீலோன்காரி சரின்னு சொல்லிருந்தான்னு வை… இன்னேரம் அந்தாளு போட்ட கண்டிஷன ஏத்துக் கிட்டு, கந்து வட்டி வசூலிக்க வான்னு இழுத்திட்டு போயிருப்பாரு. இப்ப பாரு… கல்யாணத்தையும் நடத்தி வச்சி உன்னையும் தண்ணி தெளிச்சி விட்டுட்டாரு. இனி நீ சந்தோஷமா இருக்கலாம். உனக்கு பிடிச்ச பொண்ணு கூட, நிறைவான வாழ்க்கைய வாழு.” என்றவரின் முகத்தில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் மகனின் திருமணத்தை நடத்தி முடித்த பெருமை இருந்தது.‌

“தப்பு மொத்தமும் எம்மேல தாம்மா. அருள் கிட்ட ஒரு வார்த்தைக் கேட்டுட்டு, சுஜித்ராவ பொண்ணு கேட்டிருக்கணும். உறவு விட்டுடக் கூடாதுன்னு, மூத்தவனுக்காக யோசிச்சேனே தவிர, அருளப் பத்தி நினைக்கல. அன்னைக்கி சுஜித்ரா அபாண்டமா பழி போட்டப்ப கூட நான் அவன் பக்கம் இருக்காமா… தப்பு பண்ணி… என்னென்னமோ நடந்திடுச்சிம்மா… எம்பையன் இப்ப உன்னை நேசிக்கிறான். மனசார உங்கூட வாழ ஆசப்படுறான். நடந்ததெல்லாத்தையும் மறந்திட்டு நீயும் அவனும் நீடூழி வாழணும்.” என்றவரின் காலில் விழுந்து ஆசிகளை வாங்கிக் கொண்டாள் வானதி.

நாகேஸ்வரி மட்டும் பெருத்த சந்தோஷம். எல்லாம் தன் மகள் மற்றும் தன் மகளின் வாரிசுகள் மட்டுமே ஆண்டு அனுபவிக்கப் போகிறார்கள் என்ற பெருமிதம் இருந்தது.

"ஏற்கனவே அருள் லைஃப் என்னாகுமோன்னு வருத்தத்துல இருக்குற எங்கம்மாவ மேலும் வருத்தப்பட வைக்க கூடாதுன்னு தான் நீ செஞ்ச காரியத்த, மறந்திட்டு உன்ன இந்த வீட்டுல இருக்க அனுமதிச்சேன். இனி ஒழுக்கமா… எனக்கு மனைவியா! நம்ம குழந்தைக்கு அம்மாவா! இந்த வீட்டுக்கு மருமகளா பொறுப்போட இருக்க முடியும்னா இரு, இல்லன்னா நான் உன்னை டைவர்ஸ் பண்ண தயங்க மாட்டேன்." என்று சுஜித்ராவின் திமிரை அடக்கி வைத்தான் மணிமாறன்.

ஒரே வீட்டில் தங்கும் நிலை இல்லை தான். ஆனாலும் சுஜித்ராவைக் காணும் பொழுதெல்லாம் ஒரு நெருடல் வரத்தான் செய்தது வானதிக்கு.

வீட்டில் விசேஷங்கள் வந்தால் அவளைப்‌ பார்த்து தானே ஆகவேண்டும் என்ற சஞ்சலத்தை ஒதுக்கி வைத்து விட்டு, தன் காதல் கணவனுடன் ஒன்றிப் போனாள். பத்து நாள்கள் பயணமாக மாலத்தீவில் இருக்கும் வரை எதுவும் தோன்றவில்லை.

இன்று மாலையில் அது நிறைவடைய உள்ளது. வசிப்பிடம் திரும்ப உள்ளனர், என்பது அவளுக்குள் சிறு பதட்டத்தைத் தந்தது.

தன் மொழிக்காக எதையும் சமாளிக்கலாம் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டவள், தன் கணவனின் கழுத்து வளைவில் ஆசையுடன் முத்தமிட, அவளின் இடையணைத்து தன்னோடு பிணைத்து வைத்தான் அருள்மொழிவர்மன்.

"அப்படி என்ன டி என்னோட கழுத்து மேல ஆசை. எப்ப பாத்தாலும் அதுக்கே முத்தம் குடுத்திட்டு இருக்க!"

"ஓம்... உங்கட குரல் அங்க இருந்து தானே பிறந்து வருது. என்னை மயக்கின குரல்." என்று மீண்டும் அதற்கே முத்திரை பதிக்க,‌

"மற்றதெல்லாம் என்ன பாவம் செய்தது?" என்றவன் அவளிடம் உள்ள தன் மயக்கத்தைத் தணிக்க, இருவரின் தேடல்கள் முடிந்து உடமைகளை மூட்டை கட்டி வைக்க, நேரம் போதவில்லை.

ஆனால் சரியான நேரத்திற்கு படகில் இருக்க வேண்டுமே. கப்பல், சர்வதேச எல்லையில் நிறுத்தப்பட்டு விடும். மோட்டார் படகின் மூலம் துறைமுகம் அடையவேண்டும்.

மோட்டர் படகா! என்று வானதி ஏறும் போதே தயங்கி நிற்க, அவளைத் தன் மடியில் அமர்த்தி, இரு கரத்தையும் அவளின் மார்பிற்குக் குறுக்கே கட்டி, அடைகாக்கும் குஞ்சைப் போல் பாதுகாப்பாகக் கூட்டி வந்தான்.

இப்பொழுதும் அவனின் மடியில் அமர்ந்து கொண்டவள், கரத்தை எடுத்து கட்டுக் கொண்டு, "சீட் பெல்ட் போட்டுட்டன்." என்று சன்னமாகச் சிரிக்க, இதழ் இழுவையில் கன்னத்தில் குவிந்த சதையைக் கடித்து உண்ணும் உத்வேகத்துடன் முத்தமிட்டான்.

"போதும் உங்கட லீலை... மிச்சத்த வீட்டுல பாத்துக்கொள்வம். இங்க எல்லாரும் நம்மளத் தான் வேடிக்கைப் பாக்குறாங்க." என்று நாணத்துடன் சொன்னவள், தூரத்தே தெரிந்த கறைகளையைச் சிறு மிரட்சியுடன் பார்த்தாள்.

இடப்பக்கம் இருக்கும் பெருந்தீவு, அவளின் உள்ளத்தில் சுமையாய் ஏறி அமர்ந்தது. ஏக்கத்துடன் அதையே பார்த்தபடி இருந்தவளுக்கு எதுவோ நெருட,

"திசை மாறுதா?"

"எந்தத் திசையும் மாறல." என்றவன் அணைப்பை இறுக்கிக் கொண்டான்.

"இல்லை... மாறுது..." என்றவள் கண்களுக்கு ஆரஞ்சு நிற மிதவை குண்டுகள்‌ தெரிந்தன. அது எல்லை... இரு நாட்டிற்குமான எல்லை. இப்பொழுது அவள் பயணித்துக் கொண்டிருக்கும் படகு... குண்டுகளைத் தாண்டி எல்லைக்குள் சென்றது.

நெஞ்சு தடதடக்க அவளின் பார்வையில் வீசியது சிங்களத்து தேசிய கொடி... அதன் எல்லைக்குள் அவள்... தன் நாடு... தன் தந்தை தாயுடன் வளர்ந்த நாடு... கண்டு விட மாட்டோமா என்று எத்தனை ஆண்டுகாலம் ஏங்கியிருப்பாள்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே என்ற பாரதியின் வரிகளை எத்தனை முறை உருப்போட்டார் போல் சொல்லி சொல்லி பார்த்திருப்பாள்.

உடல் நடுக்கம் காண, வேகமாகத் திரும்பி தன் கணவனைப் பார்த்தாள்.

"கிழக்கு இலங்கைல நம்ம கம்பெனியோட புது ப்ரான்ச் ஓப்பன் பண்ணிருக்காங்களாம். அதுக்கு மேனேஜரா நாந்தான் பொறுப்பா பாத்துக்கணும். சென்னைல இருந்திட்டு எப்படி அது முடியும்? அதான் இங்கயே தங்கி வேலை பாக்கலாம்னு..." எனும் போது அவனை முத்தமழையில் நனைத்திருந்தாள்.

"நதி... எல்லாரும் ஃப்ரீ ஷோ பாக்குறாங்க. கண்ட்ரோல்..." என்றவனும் கண்ட்ரோலில் இருக்க சிரமம்பட்டான். ஆனால் இருவரையும் நடப்புக்கு கொண்டு வரவேண்டி இசைத்தது வர்மாவின் அலைபேசி.

"கரிகாலன் தான்..." என்றவன் வானதியின் கையில் அலைபேசியைத் தினித்து விட்டு இருவரும் பேசிக் கொள்ளட்டும் என்று எழுந்து சென்றான்.

"காலாண்ணா நான் இப்ப எங்க இருக்கன் எண்டு உங்களுக்கு தெரியுமா?"

"ஓ... நல்லாவே தெரியும். உன்னைப் பொண்ணு கேட்டு வர்றதுக்கு முன்னாடியே அந்த வேலைல அருள் ஜாயின் பண்ணிட்டான். உனக்கு அங்க இருக்கத்தான் பிடிக்கும்னு தெரிஞ்சி." என்றதும் வர்மாவைத் திரும்பிப் பார்த்தாள். அவன் உடமைகளை சரி பார்த்துக் கொண்டிருந்தான், இறங்கவேண்டிய உள்ளதால்.

"நல்லா யோசிச்சுப் பாத்தேன் வானு. நீ சொன்னது சரி தான். கஷ்ட காலத்த யாரும் கடல் கடந்து கூட்டீட்டு வர மாட்டாங்க. அதான் அதை அதோட இடத்துலயே வைச்சிடலாம்னு தோணுச்சு."

"காலாண்ணா... நான் கஷ்ட காலமா?"

"உன்னை அப்படிச் சொல்வேனா!"

"பிறகு ஆராம்?"

"உம் புருஷன்."

"காலாண்ணா!!!" எனக் கத்த,

"நீ போட்ட கண்டிஷனால வீட்டோட மாப்பிள்ளையா அவன் வந்து உக்காந்திட்டா! தினமும் அவனை முறைச்சுக்கிட்டே என்னால திரிய முடியுமா சொல்லு. அத்தோட பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்ட மாப்பிள்ளைய சிறப்பா கவனிக்கணுமாம். மரியாதை குடுக்கணுமாம். தினமும் கறி விருந்தாக்கிப் போடணுமாம். ஏகப்பட்ட கண்டிஷன் இருக்கு. அவன உக்கார வச்சி தினமும் சோறாக்கிப் போடுறதெல்லாம் நமக்கு செட்டாகுமா? சொல்லு. அதான் உங்க ஊர் வழக்கபடி ஒரு வீட்ட சீதனமா குடுத்து போய்ட்டு வா சாமின்னு அனுப்பி விட்டுட்டேன்." என்று மீண்டும் ஓர் அதிர்ச்சியை இறக்கினான் கரிகாலன்.

"காலாண்ணா... வீடு..."

"உன் வீடு தான். உன்னோட அப்பாவும் அம்மாவும் உனக்காக குடுத்த வீடு. கடன்ல இருந்தது. அதை மீட்டாச்சு. பெயிண்ட் அடிச்சி நீங்க ரெண்டு பேரும் குடித்தனம் நடத்த எல்லாத்தையும் அருள் செஞ்சிட்டான். அப்றம் நான் இந்தியால தான் பிறந்தேன். இங்க பெத்தவங்கள பசங்க தான் பாத்துக்கணுங்கிற வழக்கம் நடைமுறைல இருக்கு. அதுனால என்னோட அம்மாவையும் அப்பாவையும் நானே பாத்துப்பேன். நீ உன்னோட வாழ்க்கைய நிம்மதியா வாழு. ஆல் தி பெஸ்ட் வானு." என்று வைத்து விட, கண்ணில்‌ இருந்து தாரை தாரையாய் நீர் வடிந்தது வானதிக்கு. அவளைக் கட்டியணைத்து ஆறுதல் சொன்னான் அவளின்‌ காதல் கணவன்.

அன்று எதோ இராமன் சீதை இராவணன் என்றெல்லாம் மனத்திற்குள் நினைத்தவளை, நிஜமாகவே அவளின் இராமன் கரம்பற்றி இலங்கைக்கு அழைத்து வந்திருக்கிறான்.

முதல் வேளையாக அவள் செய்தது, அவள் வளர்ந்த வீட்டைச் சுற்றிக் காட்டி, “சைக்கிள் ஓடத் தெரியுமா!” என்று கேட்டது தான்.

அவன் தெரியும் என்றாலும், பின்னால் அமர வைத்து, கல்லடி பாலத்திற்குக் கூட்டிச் சென்றாள். அங்கு சூரிய அஸ்தமனத்தை அவனின் கரங்களுக்குள் நின்று கொண்டு தன் தேசத்தை ரசிக்க, அந்தத் தேன் நாட்டுப் பைங்கிளியுடன், அந்தத் தேன் நாட்டையும் ரசித்தபடி, சங்கமித்திருந்தான் அந்தத் தென்னவன்.

இனி அவர்களின் வாழ்க்கை தேனாய்த் தித்திக்கட்டும்.


சுபம்!!

 
Top Bottom