தேன் நாட்டு பைங்கிளி - 8

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,513
113
Germany
அத்தியாயம்: 8

"நாம கேஸ் போடுவோம்ப்பா. நீங்களும் அந்த வீட்டு வாரிசு தான். உங்களோட உரிமைய நீங்க கேட்டுதான் வாங்கணும்." என்று காட்டமாகக் கத்தியது கரிகாலன் தான்.

தவசிராஜன் இறந்த சமயம், சொத்தைச் சமபங்காகப் பிரிக்கிறோம் என்று அவர்கள் பிரித்துக்கொடுத்த பங்கை, ‘வாங்கக்கூடாது. நாம் கோர்ட்டிற்குச்சென்று வழக்குத் தொடுப்போம்’ என்றான் கரிகாலன்.

ஆனால் சகாயம், ‍"எதுக்குப்பா அதெல்லாம். வேண்டாம். சொத்துக்காக சண்டை போட்டுக்கிறதும், கோர்ட் வாசல்ல நிக்கிறதும், வஞ்சம் வச்சி, ஜாட பேசி, பழி வாங்குறதும், எங்களைப் பெத்து வளத்தவங்களுக்கு நாங்க தேடிக்குடுக்குற அவமானம். என்னோட அப்பா அம்மாக்கு நான் அதைக் குடுக்கமாட்டேன். என்னை நினைச்சு பெருமைப்படலன்னாலும் கூனி குறுக விடமாட்டேன்.

பணம் தானப்பா. அதைச் சம்பாதிக்க நல்ல உடம்பு இருக்கு, மனசு இருக்கு, புத்திசாலித்தனம் இருக்கு, எல்லாத்துக்கு மேல எம்பொண்டாட்டி பிள்ளைங்க இருக்கீங்க. இதெல்லாத்தையும் எனக்குத் தந்ததே அவங்க தான். அவங்களோட உழைப்ப பிடுங்கி அனுபவிக்கிறது, என்னைப் பொருத்தவரை பாவச்செயல். வேண்டாம் ப்பா. அவங்க மனசார ஒத்த ரூபா தந்தாலும் எனக்குப் போதும்." என்று சண்டைக்கு நின்ற கரிகாலனைச் சமாதானம் செய்தார் சகாயம். அவரின் வெள்ளை மனம் பெற்றவர்கள் எது தந்தாலும் சரி என்று சொன்னது.

சொத்து விவகாரம் என்பது எப்பொழுதுமே முடிவிலியானப் பிரச்சினைகளுக்குத்தான் வழி வகுக்கும். பெருந்தன்மையுடன் யாராவது விட்டுக்கொடுப்பது தான் வழி.

அது இல்லாது, நீதிமன்றத்திற்குச் சென்றால், உடனடியாகத் தீர்ப்பு வந்து விடுவதில்லை. காலம் நீண்டு கொண்டேபோகும். அதுவரை ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே திரிய வேண்டும். மனஸ்தாபம் உண்டாகும். பழி வெறி ஏறும். அது பல விதமான வன்முறைச் சம்பவங்களுக்கு வழிகாட்டும்.

இறந்த பின் எதைக்கொண்டு செல்லப்போகிறோம். இருக்கும்வரை பிறருக்குக் கொடுத்தும், தனக்கானதைத் தானே தேடியும் வாழ்ந்து விட்டுச்செல்வோமே என்று நினைத்தார் சகாயம்.

கரிகாலனுக்கு அதில் முரண்பாடு இருந்தது. அவர் விட்டுக்கொடுக்காது இருந்திருந்தால் இன்னேரம் ஆடம்பர வாழ்க்கையைச் சகல வசதிகளுடன் கூடிய வீடு என்று சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாமே என்ற எண்ணம் எப்பொழுதுமே உண்டு அவனுக்கு.

ஆனால் இப்போது அது இல்லை. ஏனெனில் பணம் இல்லாதவர்களுக்குப் பணம் இல்லை என்பது மட்டும்தான் பிரச்சனை. இருப்பவர்களுக்கு எல்லாமே பிரச்சினை தான் என்பதை கண்கூடாகக் கண்டுகொண்டிருந்தான்.

பணத்தில் செழித்த மனிதர் என்பதால் நிச்சயதார்த்த மண்டபம் பிரம்மாண்டமாக இருந்தது. ஆனால் உறவென்று வந்து இருக்கைகளை நிரப்பத்தான் ஜனங்கள் இல்லை. எடுத்துச் செய்ய பெருந்தன்மை கொண்ட நண்பர்கள் இல்லை.

‘காசைக் கொண்டா!’ என வாங்கி சட்டைப் பையில் போட்டுக்கொண்டு கடமைக்கே என்று அனைத்தையும் செய்தனர் விழா ஏற்பாட்டாளர்.

இருக்கும் ஒரு சிலரின் முகத்திலும் சிரிப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சம்.

திரும்பி தன் குடும்பத்தைப் பார்த்தான். ஆண்டாளும் சகாயமும் ஜோடியாக அருகருகே அமர்ந்திருக்க, இருவருக்கும் பின்னால் நாற்காலியைப் போட்டு, இருவரின் தோளிலும் கரம் பதித்து, தலையை முன் நீட்டி வானதி சகாயத்திடம் எதுவோ சொல்ல, ஆண்டாள் அவளின் தோளைத்தட்டி சிரித்தார். ஆண்டாளுக்குப் பக்கத்தில் இருந்து எட்டிப்பார்த்த பார்த்திபன் வானதியைக் கேலியாக எதோ சொல்லியிருக்க வேண்டும். விழி உருட்டி, விரல் நீட்டி அவனை மிரட்டிக்கொண்டிருந்தாள்.

இதுதான் தன்‌ மிகப்பெரிய சொத்து. அது கிடைத்த திருப்தியில் சகாயத்தின் அருகில்சென்று அமர்ந்து அக்கா, தம்பியின் கலாட்டாவிற்குக் காது கொடுத்தான்.

நிச்சயதார்த்த ஜோடிகள் நடுநாயகமாக அமர்ந்திருக்க, அவர்களுக்கு வாழ்த்தைச் சொல்லி பரிசுப் பொருட்களைக் கொடுத்துப் புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தனர்.

வந்திருக்கும் பொருள்களை ராஜேஸ்வரி வாங்கி ஓரமாக இருந்த ஒரு மேசையில் அடுக்க, நாகேஸ்வரி அதைப் பத்திரப்படுத்தி எடுக்கவந்தார்.

அப்பொழுது ஆண்டாளின் வெடிப்புச் சிரிப்பு கேட்டுத் திரும்பிப்பார்த்தவர்கள், பொறாமையில் பொசுங்கித்தான் போனர்.

குடும்பமாக ஐவரையும் பார்க்கும்போது பற்றி எரிந்தது. சிவதாண்டவம் எப்பொழுது தன் அருகில் அமர்ந்து பேசிச்சிரித்திருக்கிறார் என்று எண்ணிப்பார்க்கும் போதே, கிடையாது என்ற பதில்தான் முன்னுக்கு வந்தது. ஆண்டாளைத் தாங்கு தாங்கென்று தாங்கும் பிள்ளைகளைப் பார்க்கும் போது, தான் ஈன்ற மகனைத் தேடினார். அவன் கிடைக்கவே இல்லை. எப்படிக் கிடைப்பான்? அவன்‌ தான் நண்பர்களுடன் சேர்ந்து மொட்டை மாடியை மதுக்கூடாரமாக மாற்றி, கும்மாளம் அடித்துக்கொண்டிருக்கிறானே.

அவனைப்போய்த் தேடினோமே என்று தன் தலையில் அடித்துக்கொண்டு, மகளை எட்டிப்பார்த்தார்.

"ம்மா... இவள பாத்ரூம் கூட்டிட்டு போ. அப்பத்துல இருந்து அணத்துறா. அப்படியே வெளில விக்கிற பலூன வாங்கிக்கொடு. சாப்பாடும் குடுத்திடும்மா." என்று தன் மகளின் எல்லாப் பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த சுஜித்ராவைப்பார்க்க பார்க்க ஆத்திரம் தான் வந்தது.

'எனக்குன்னு வந்து வாச்சிருக்குங்க பாரு.' என்று நொடித்தவருக்கு ஆண்டாளின் சிரிப்பு பிடிக்கவில்லை. ஆனால் அதை நிறுத்த எதுவும் செய்யமுடியாது. அரணாய் அவரின் பிள்ளைகள் இருக்கும்போது, எப்படிச் சாத்தியம் அது?

"எங்க வீட்டு பையன வேண்டாம்னு சொல்லி ஓடிப் போனவ தான உந்தங்கச்சி. ஒழுக்கங்கெட்டவன்னு தெரிஞ்சும் கமுக்கமா இருந்து, அந்த *** இந்த வீட்டுக்கு மருமகளாக நினைச்ச மானங்கெட்ட குடும்பம் தான உங்குடும்பம்." என்று மட்டம் தட்டித் தட்டியே ஆண்டாளின் முதுகில் சவாரி செய்துகொண்டிருந்தனர் இரண்டு ஈஸ்வரி சகோதரிகளும்.

என்று வானதி வந்தாளோ, "கலியாணப் பொண்ணுக்கு விருப்பம் இருக்கா இல்லையா எண்டு விசாரியாம திகதி முடிவு செய்தது உங்களட பிழை. அப்படியே சண்டை பிடிக்க வேணும் எண்டா என்ர அம்மாட்ட சண்டை பிடிச்சிருக்கணும். சம்மந்தமே இல்லாமல் ஏன் பெரியம்மாட்ட வாரீங்க? பதில் சொல்ல மாட்டா எண்ட தைரியமா!

எல்லாம் முடிஞ்சி பதிமூண்டு வருஷம் ஓடியும், அதையே பிடிச்சு தொங்கிக் கொண்டு இருக்கீங்க. அப்படி மானத்தைக் காக்க நினைச்சா! பிடிச்சி தொங்குற கயித்த கழுத்துல கட்டீட்டு தொங்குங்க. உங்கட மானமும் மரியாதையும் காக்கப்பட்டதுன்னு ஊர் சனம் பல காலம் பேசும்." என்று பதின்ம வயதிலேயே எதிர்த்து வாயாடுவாள். இப்பொழுது இருபத்திரெண்டு ஆகிவிட்டது. சும்மா விடுவாளா! இழுத்துக்கொண்டுபோய்த் தூக்கில் தொங்கவிட்டாலும் விடுவாள் என்ற பயத்தில் வானதியை முறைத்த வண்ணமே திரிந்தனர் ஈஸ்வரி சகோதரிகள்.

நிச்சய பத்திரிக்கை வாசிக்கப்பட்டு, திருமணம் உறுதி செய்யப்பட்டு விழா இனிதே நிறையேற, அனைவரும் பந்திக்குச் சென்றனர்.

"நான் வாஷ் ‌பண்ணிட்டு வாரன்." என்று பந்தியில் அமரும் முன் கைக் கழுவச் சென்றாள் வானதி.

அங்கு அலைபேசியில் யாருடனோ பேசியபடி, குறுக்கும் நெடுக்குமாக அறையை அளந்துகொண்டிருந்த வெண்மதியைப் பார்த்து நின்றுவிட்டாள்.

"உம்மகன் என்ன நினைச்சிட்டு இருக்கான்? ஒரு நாள் வந்து நிக்கமாட்டானா! துரைய வெத்தல பாக்கு வச்சி தனியா அழைக்கணுமா!! 'எங்க உங்க சின்ன மகன்?'ன்னு என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கேள்வி கேக்கணும்னே இப்படி பண்றானா? அவமானப்படுத்தி பாக்குறான்!" என்று ரவிகிருஷ்ணன் திட்டிவிட்டார் போலும், செல்ஃபோனுடன் அவரின் கண்ணில் சிக்காதபடி, இங்கு வந்துவிட்டார்.

மகன் வரமாட்டான் என்று அவருக்கு நன்கு தெரியும். காரணமும் தெரியும். ஆனால் அப்படியே விடமுடியாதே. கணவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதனால் ஆகாஷிற்கு அழைத்துப் பேசிக்கொண்டிருந்தார்.

"வந்து தலைய மட்டுமாது காட்டிட்டு போச் சொல்லு ஆகாஷ். அஞ்சி நிமிடம் போதும். அவனோட அப்பா ரொம்ப கோபமா இருக்காரு. வந்திருக்குறவங்களுக்கு பதில் சொல்லி சமாளிக்க முடியல." என்று கெஞ்சியபடி நிமிர, வானதி அவரை இதழ் வளைவோடு பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள்.

வெண்மதிக்கு வானதியின் மீது விருப்போ வெறுப்போ ஏதும் கிடையாது. ஊருடன் ஒன்றி வாழ் என்ற பழமொழியைச் சற்று மாற்றி, தாய் வீட்டாள்களுடன் ஒன்றி வாழ் என்று திருத்தம் செய்து, தன் அண்ணன், தம்பி மனைவிகளுக்கு ஆகாதவள் தனக்கும் ஆகமாட்டாள் என்று ஒதுக்கி வைத்துவிட்டார். அவ்வளவே…

இப்பொழுது சிரிக்கும் வானதியை நிமிர்ந்து பார்த்தவர், சிரிக்கவா! வேண்டாமா! என்ற யோசனையுடனேயே கடந்துசென்றுவிட்டார்.

"ஒரு மணி நேரத்துக்கு பிறகு சிரிப்பாங்களா இருக்கும்!" என்று நக்கலாக நினைத்துக்கொண்டு சென்றாள் வானதி.

விருந்தினர்கள் கூட்டம் கலைந்து செல்ல, "நாங்க கார் ஏற்பாடு பண்ணிட்டு வர்றேன். OLA, Uberல கிடைக்கிற டாக்சிக்காரன் வரமாட்டேன்னு சொல்றான்." என்று மூவரையும் வாசலில் நிறுத்தி விட்டு, கரிகாலன் பார்த்திபனை இழுத்துச்சென்றான்.

விழா முடிந்த தறுவாயில் தான் வந்துசேர்ந்தான் அருள்மொழிவர்மன்.

அவன் விசேஷ விழாவிற்கு வந்தது போன்ற உடை அணியாது, விடுமுறையில் ஊர் சுற்றுபவன் போல் ட்ராக் பேண்ட், டீசர்ட்டுமாக வந்திருந்தான்.

அவனைப் பார்த்து ரவிகிருஷ்ணா பல்லைக் கடிக்க, "இப்படியா டா வருவ!" எனக் காது கடித்தார் வெண்மதி.

"வரக் கூடாதா… அப்ப கிளம்புறேன்." என்றவன் திரும்பிச் செல்வதுபோல் திருப்ப, அவனைப் பிடித்திழுத்துவந்தார் வெண்மதி. அவரைத் தவிர வேறு யாருடனும் வர்மா பேசவில்லை. வானதியை அவர்கள் ஒதுக்கி வைத்தார்கள் என்றால், வர்மா அவர்களையே ஒதுக்கி வைத்திருந்தான்.

வெண்மதி சொன்னது போல் ஐந்து நிமிடங்களுக்குக் கூடுதலாக ஒரு நொடி கூட அங்கு நிற்ககூடாது என்ற எண்ணத்துடன் வந்திருப்பான் போலும். நேராக மேடை ஏறியவன், வாங்கி வந்திருந்த பரிசை நீட்டிவிட்டு,‌ விடை பெற எதானிக்க,

"அருளு, சாப்டு போடா." என்றார் வெண்மதி.

"நான் விருந்து சாப்பிட வரல. செந்தூர் மாமா கால் பண்ணாரு. அவருக்காகத்தான் வந்தேன்." என்றவன் பார்வையாலேயே தாய் வீட்டுச் சொந்தங்களை எரித்துவிட்டு நகர,

"என்ன மாப்ள நீ! சாப்பிடாம போற." என்று செந்தூர் தான் அவனின் தோளில் கைப்போட்டு இழுத்துச்சென்றார் பந்திக்கு. அவனை விழுந்து விழுந்து கவனித்தார் வெண்மதி. உண்ணும் அவனின் கேசத்தை ஆதுரியமாகத் தடவிக்கொண்டே பக்கத்திலேயே நின்றார்.

அவரின் பாசப்பிடியில் இருந்து விடுபட்டு வெளியே வந்தவன், சகாயத்தையும் ஆண்டாளையும் பார்த்து புன்னகைத்துவைத்தான்.

அப்பொழுது தான் அவனின் பார்வைக்குள் முழுதாக விழுந்தாள் பெண்.

ஊதா நிற சுடிதார். துப்பட்டாவின் நுனிக்கு மட்டும் தோளில் நிரந்தர இடம் கொடுத்து, மீதியை பீரியாக காற்றில் பறக்க விட்டிருந்தாள். மிதமான ஒப்பனையில், கலையாத சிகை அலங்காரத்துடன் நின்றவளின் நேர்த்தியில் அவனின் கவனம் சில நொடிகள் படிந்தது.

வழமை மாறா தன் விழி அகலாப் புன்னகையுடன் அவனையே பார்த்தபடி நிற்க, அவளின் சலனமற்ற பார்வை அவனுக்குத் தான் சிறு சங்கடத்தைத் தந்தது.

"ஏன் இப்படிப் பார்க்குறா? ஆஃபிஸ்லயும் இப்படித்தான் உத்து உத்து பாக்குறான்னா… இங்கயும்... ச்ச... கொஞ்சம் கூட வெக்கம், கூச்சம், எதுவும் கிடையாதுபோல." என்று இகழ்வாக நினைத்துக்கொண்டவன், அவளின் மதி முகத்துடன் முட்டி மோதிக்கொண்டிருந்த தன் பார்வைக்கு டேக் டைவர்சன் கொடுத்து திசைமாற்றி விட்டான்.

தன் ஈரக் கையைத் துடைக்க வேண்டி, கைக் குட்டையை எடுத்த சமயம் அவனின் கால் சட்டையில் இருந்து விழுந்ததுதான் வாலெட். அதை அவன் கவனிக்காது, பைக் பார்க்கிங்கிற்குச் சென்றுவிட்டான். வானதி தான் எடுத்துப்பார்த்தாள்.

அவளைப் பற்றிய அவனின் எண்ண ஓட்டத்தை அவனின் முகத்திருப்பலை வைத்தே உணர்ந்துகொண்டவள் எப்படிச் சும்மா இருப்பாள்.

கத்தையாகப் பல ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் சிரிக்க, க்ரெடிட் கார்ட், டெபிட் கார்டு என ஏகப்பட்ட அட்டைகள் இருந்தன. அதில் அவனின் புகைப்படத்துடன் இருந்த ஓட்டுநர் உரிம அட்டையை மட்டும் எடுத்துக்கொண்டு,

"பெரிப்பா, உங்கட தங்கச்சி மகன் இதை விட்டு போட்டு போறார்." என்று சகாயத்திடம் நீட்ட, அவரோ, "மாப்ள... அருளு..." எனக் கூவி அழைத்தபடியே ஓடிச்சென்று ஒப்படைத்தார்.

அப்பொழுது எந்தச் சந்தேகமும் வரவில்லை. ஆனால் இன்று லிஃப்டில் அவள் பார்த்த பார்வையில் வந்தது வர்மாவிற்கு.

“எடுத்திருப்பாளோ!" என்று தலைதூக்கி வானதியின் இருப்பிடத்தைப் பார்த்தான். அவள் தன் சகாக்களுடன் லூட்டி அடித்தபடி இருந்தாள். அது பணி முடியும் நேரம். வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தாள்.

"எடுத்திருந்தாலும் அத வச்சி என்ன பண்ணப் போறா?" என்று அலட்சியமாக நினைத்தவன், கணினியை அணைத்து விட்டு, மிருதுளாவுடன் வளவளத்தபடி சென்றவளுடன் பயணிக்கத் துடித்த விழிகளைத் தன் முன் இருந்த கோப்புகளுக்கு இழுத்துவந்தான்.

அழகி, தேவதை என்று ஆடவர்கள் புகழ் பாடும் வசீகரம் நம் வானதியிடம் உண்டு. அது காளைகளை ஈர்க்கவில்லை என்றால் தான் ஆச்சர்யம். வர்மாவையும் ஈர்த்தது. மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆவலைத் தூண்டியது.

ஆனால்....

ஏற்கனவே காதல் என்ற பெயரில் பட்ட காயங்கள் இன்னும் ஆறாது ரணமாய் இருக்கும் பொழுது, எந்தப் பெண்ணையும் ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை. ரசனை வந்தாலும் தன் முன்னாள் காதலை நினைவிற்குக்கொண்டு வந்து முறித்துக்கொள்வான் ரசனையை. இப்பொழுதும் மனத்தின் தலையில் தட்டி அடக்கிவைத்தவன், மமதிக்கு அழைத்தான்.

"RK கார்மெண்ஸ்ஸோட இன்சூரன்ஸ் ப்ராசஸ் எந்த நிலைல இருக்கு?"

"ஆல் மோஸ்ட் டன் சார். நாளைக்கு ஈவ்னிங் குள்ள எல்லாத்தையும் முடிச்சிடலாம்."

"குட்... அவங்க சில amendment தந்திருக்காங்க. அதையும் சேர்த்து பாருங்க." என்றவன் வேலையில் முழ்கிப் போனான்.

அவளைப் பற்றிய எந்தச் சிந்தனையும் அவனுக்குள் இல்லை. காலையில் ஜெய்யுடன் பேசிக்கொண்டே அலுவலகப் படி ஏறியவளை எவ்வித உணர்வும் இல்லாது கடந்துசென்றான்.

நாள்கள் இவ்வாறே செல்ல, ஒருநாள் உணவை முடித்துக்கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தவள், தலையைக் கணினியின் முன் கவிழ்த்தியபடி இருந்தாள்.

"என்னாச்சி வானு?"

"தலையிடி. மண்டை வெடிக்குறா மாதிரி பிளக்குது." என்றாள் நெற்றியை அழுத்திப்பிடித்தவாறு.

"இந்தா... இதைத் தேச்சுக்க." என்று தைலத்தை எடுத்துக்கொடுத்தாள் மமதி.

"ஃபோன், டிவி, கம்ப்யூட்டர்ன்னு என்னேரமும் டிஜிட்டல் ஸ்க்ரீனையே பாத்திட்டு இருக்குறதுனால எனக்கும் அடிக்கடி தலைவலி வரும். அப்பல்லாம் நான் ஸ்டாங்கா காபி குடிப்பேன். அதுவும் நம்ம ஆபிஸ் பக்கத்துல இருக்குற கபே ல குடிக்குற காபி சூப்பரா இருக்கும். லன்ச் டயம் முடிய இன்னும் நேரமிருக்கு‌. போய் காபி குடிச்சிட்டு வா." என்று அனுப்பிவைத்தாள் மமதி.

மறுப்பு சொல்லாது வானதியும் எழுந்துசென்றாள், மிருதுளாவை அழைத்துக்கொண்டு. ஏசியில் மனித வாடைக்குள் கிடந்தவளுக்கு, வெளிக்காற்றும், காபிக் கொட்டையின் நறுமணமும் புத்துணர்ச்சி தருவதுபோல் இருந்தது. இரண்டு குளம்பியை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தனர்.

சாலையோரம் வெட்ட வெயில் இருந்த கபேயின் உட்கட்டமைப்பை ரசித்துக் கொண்டிருந்தவர்களின் முன், நுரை பொங்க குளம்பி வைக்கப்பட்டது. வானதி, விரல் இடுக்கில் கோப்பையின் கைப்பிடியை எடுக்க, மமதியிடம் இருந்து அழைப்புவந்தது,

"என்ன மமதி! காபி குடிக்க என்னை அனுப்பி விட்டு, இப்படி டிஸ்டர்ப் செய்றாய்." எனச் சிணுங்க,

"கொஞ்சம் அவசரம் வானு. RK கார்மெண்ஸ் இன்சூரன்ஸ் டாக்குமெண்ட்ஸ்ஸ நேத்து நீ தான பைல் பண்ண?”

“ஓம்…”

“எங்க வச்சிருக்கன்னு சொல்லு. நான் உன்னோட டேபிள் தான் இருக்கேன்."

"நான் இன்னும் அதை ப்ரிண்ட் எடுக்கல்ல."

"என்ன!"

"ஈவ்னிங் எண்டு தான சொன்னிங்க. எல்லாம் ரெடியா இருக்கு. ப்ரிண்ட் எடுத்தா மட்டும் போதும்." என்றதும் மமதிக்கும் பின்னால் இருந்து வர்மாவின் குரல்கேட்டது,

"சிஸ்டம் பாஸ்வேர்டு கேட்டு சொல்லுங்க மமதி." என்று.

அவனின் குரல்கேட்டதும், சுள் என்று ஏதோ ஏற, “நான் வந்து எடுத்துத் தாரன் மமதி. காபி குடிச்சிட்டு வாரன். யாரும் என்ர சிஸ்டத்தை நோண்ட வேண்டாம்.” என்றவள் கடவுச்சொல்லைச் சொல்லாது இருக்க,

“வானு, அதைச் சரி பாக்கணும். நீ பாஸ்வேர்டு சொல்லு நான் பாத்துக்கிறேன்.”

“இல்லை மமதி நான் வாரன். ஆர்டர் செய்தத குடிக்காம வர ஏலாது. வெய்ட் பண்ணுங்க." என்று அலட்சியமாகச் சொன்னவள் இணைப்பைத் துண்டித்துவிட்டு காபியை உறிஞ்சி சுவைக்கலானாள்.

சற்று நேரத்தில்…

"எந்த ஃபோல்டர்ல இருக்குன்னு சொல்லு வானு. வர்மா சார் உன்னோட சிஸ்டத்த ஓப்பன் பண்ணிட்டார். நாங்களே ப்ரிண்ட் எடுத்துக்கிறோம். நீ நிதானமா வா." என்று குறுஞ்செய்தி வந்தது மமதியிடமிருந்து.

திறந்து விட்டானா! அது என்னுடைய கணினி. என்னுடைய கடவுச் சொல் அவனுக்கு எப்படித் தெரியும்? என்று மண்டைக்குள் மணி அடிக்க,

கையில் இருந்ததை டொம் என மேசையில் வைத்துவிட்டு ஓடிச்சென்றாள்.

அவள் அலறி ஓடும் வண்ணம் என்ன பாஸ்வேர்டு வைத்திருப்பாள்???
 
Last edited:

Author: நிதனிபிரபு
Article Title: தேன் நாட்டு பைங்கிளி - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
வர்மா பத்தி தெரியாம இவளா இவன் மேல வன்மத்தை வளர்த்துட்டு இருக்கா
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.