அத்தியாயம் 12
ஒரு மணி போல் சாப்பிட சென்றாள் அனன்யா. அங்கு நண்பர்கள் பட்டாளம் இருந்தது.
“ஹரிஷ்… சாப்பிட மட்டும் சரியா வந்துடுவப் போல.” என்றாள் அனன்யா.
“எஸ். நமக்கு சோறு தான் முக்கியம்.” என்றான் ஹரிஷ்.
“நல்ல ஆத்தென்டிக் கேரளா சாப்பாடு, அதுவும் ப்யூர் அசைவம். மீன், இறால் சூப்பர்.” என்றான் தீபக்.
“இது தீவு என்பதால் மூன்று வேளை சாப்பாடும், நமக்கு இங்க தான்.” என்றாள் அனன்யா.
மற்றவர்களும் வந்து இணைந்து கொள்ள, அந்த இடமே ரணகளம் ஆனது.
சாப்பிட்டு முடித்தவர்கள் குட்டி
தூக்கம் போட்டனர். பின் மாலை போல் ரெசார்ட்ல ஷிக்காரா போட் (Shikara boat) ஏற்பாடு செய்திருந்தனர்.
அதில் ஏறிக் கொண்டனர். இது ஒரு விதமான போட். இந்த ஷிக்காரா போட்டில் மேலே மூடியிருக்கும், உட்கார நல்ல வசதியாக இருக்கும்.
போகும் வழி எங்கும் தென்னை மரங்கள், கிரமத்து வீடுகள், இந்த வீட்டின் பின்புறம் ஏறி. வீட்டின் பின்புறம் நின்று மீன் பிடித்துக கொண்டிருந்தனர். மறுபடியும் சூரியன் அஸ்தமனமாகும் காட்சி. எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்க பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. இன்னும் கொஞ்ச தூரம் செல்ல, இங்கு மறுபடியும் மாங்குரோவ் காடுகள். மிகவும் அழகாக இருந்தது.
ஒரு மரம் நடுவில் பாதையை விட்டு மேல் முழுவதையும் தன் கிளை கொண்டு மூடி இருக்க, அதற்கு நடுவில் படகு சென்றது. இந்த மரத்தை முன்றோ ஐலன்ட்டின் முக்கிய இடம் என்றே சொல்வார்கள் செல்பி, ப்ரீ வெட்டிங் ஷூட் அதிகமாக இங்கதான் எடுக்கப்படும்.
“மறுபடியும் போட்டா என்று தோன்றவே இல்லை. ஷிக்காரா போட்டில் போய், இந்த ஏரியை யும், மாங்குரோவ் காடுகளை பார்க்குறதே ரொம்ப நல்லா, நிறைவா இருக்கு.” என்றார் கனி.
“ஆமா… எனக்கும் அப்படி தான் இருக்கு அக்கா.” என்றான் ஹரிஷ்.
“இப்போ போறோமே, இதுமாதிரி இந்த முன்றோ ஐலன்ட்ல நிறைய குறுகிய கால்வாய்கள் இருக்கும். அதனால தான் இங்க ஷிக்காரா போட் ஃபேமஸ். இந்த போட்ல மட்டும் தான் இப்படி சின்ன இடத்தில் ஈஸியா போக முடியும்.” என்றாள் அனன்யா.
தீபக் மெல்லிய பாடல்களை ப்ளூடூத் ஸ்பீக்கரில் போட , அந்த மாலை நேர பயணம் இன்னும் இனிமையானது.
அரை மணி நேர பயணத்தில் ரிசார்ட் வந்துவிட, இவர்கள் இறங்கிக் கொண்டனர்.
“பிரண்ட்ஸ் டீ, காஃபி, ஸ்னாக்ஸ் சாப்பிட்டு, ரெஸ்ட் எடுக்கிறதுனா எடுங்க, இல்லைனா இங்க ஸ்விம்மிங் பூல் இருக்கு அங்கு விளையாடுறதுனா விளையாடுங்க.” என்றாள் அனன்யா.
டீ குடித்து விட்டு அறைக்கு சென்றவள், கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தாள். பின் ஸ்விம்மிங் பூல் சென்றாள். இம்முறையும் இவளை தவிர அனைவரும் அங்கிருந்தனர். இவளும் அவர்களோடு இணைந்துக் கொண்டாள்.
“என்ன அனன்யா இவ்வளவு லேட்டா வர.” என்றார் கனி.
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன் அக்கா.”
“இந்த குட்டீஸ் எங்களை ரூமுக்கே போகவிடல.”
“குழந்தைகளுக்கு ஸ்விம்மிங் பூல்னா ரொம்ப பிடிக்கும்.” என்றாள்.
“பியூட்டி… இங்க பாரு நான் நீச்சல் அடிக்கிறேன்” என்ற ஹரிஷ் தண்ணீரில் டான்ஸ் ஆடினான்.
அவன் அருகில் சென்ற அனன்யா, “இதுக்கு பேர் தான் நீச்சலா?” என்றாள்.
“ஆமா” என்றான் அஸ்வின்.
“எனக்கும் உன்னை மாதிரி நீச்சல் அடிக்க தெரியாது” என்றாள் அனன்யா.
“எவ்வளவு நல்லா நீச்சல் அடிக்கிற என்ன பார்த்து, இப்படி சொல்லிட்டீயே பியூட்டி.”
“நீச்சல் எப்படி அடிக்கணும்னு நான் செய்து காட்டிறேன்” என்ற அஸ்வின் நின்றாக நீச்சல் அடித்தான்.
“அண்ணா… உங்களுக்கு தெரியாத விஷயம்னு ஏதாவது இருக்கா? நல்லா சர்ஃபிங் செய்றீங்க, ஸ்விம் பண்றீங்க.” என்றான் ஈஸ்வர்.
“உடம்பை ஃபிட்டா பார்த்துக்கணும்னு நினைக்கிறவங்க. கண்டிப்பா ஸ்விம்மிங் கத்துப்பாங்க. ஸ்விம்மிங் இஸ் ஒன் ஆப் த பெஸ்ட் எக்ஸர்சைஸ்.” என்றான் அஸ்வின்.
“இங்க ஒரே நாய்ஸ் பொல்யூஷன்னா இருக்கு வா வேறு பக்கம் போகலாம் பியூட்டி.”
“எனக்கும் நீச்சல் கற்றுக் கொள்ள ஆசையா இருக்கு.” என்றாள் அனன்யா.
“ஸ்விம்மிங் கிளாஸ் போய் கத்துக்கோ பியூட்டி.”
“சின்ன வயசுனா ஈஸியா கத்துக்கலாம். இப்போ போய் எப்படி கத்துக்குறது.” என்றாள் அனன்யா.
“நீயேன் கிளாஸ் போகணும். நான் சொல்லி தரேன்.” என்றான் அஸ்வின்.
“நோ தேங்க்ஸ்”என்றாள் அனன்யா.
ஹரிஷ் அவனை பார்த்து நக்கலாக சிரிக்க.
“இப்போ உனக்கு வெக்கமா இருந்தா வேண்டாம். நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் கத்து தர்றேன்.” என்றான் அஸ்வின்.
அவனை கோபமாக முறைத்தவள் எழுந்து சென்றுவிட்டாள்.
பசி எடுக்க ஆரம்பிக்க, ஒவ்வொருவராக ரூமிற்கு சென்று, சுத்தம் செய்து, வேறு உடைக்கு மாறி, சாப்பிடும் இடத்திற்கு சென்றனர்.
மீண்டும் நல்ல கேரளத்து வீட்டு உணவுகள் இருக்க. தண்ணீரில் ஆட்டம் போட்டது வேற நல்ல பசி எடுக்க, எல்லோரும் நன்றாக சாப்பிட்டனர்.
“ரிசார்ட் லைட் வெளிச்சத்தில் ரொம்ப அழகா இருக்கு வாக் போகலாமா” என்று அனன்யா கேட்க
“ரொம்ப ஹெவியா சாப்பிட்டேன், வாக் போனா நல்லா இருக்கும்.” என்றான் ஈஸ்வர்.
மற்றவர்களும் இவர்களோடு இணைந்துக் கொள்ள.
“அமைதியான ஏரி, அதை ஒட்டி ரெசார்ட், இரவு நேரத்தில் இவங்க போட்டிருக்கும் லைட், அப்படியே அந்த தண்ணீரில் மங்களா ரிஃப்ளைக்ட் ஆகிறது எல்லாம் பார்க்க கவிதை போல இருக்கு.”என்றாள் ரோஷிணி.
எல்லோர் மனதிலும் அதே எண்ணமே இருந்தது. அப்படியே இருபது நிமிடங்கள் நடந்தனர்.
“சரி நடந்தது போதும், அப்புறம் எனக்கு திரும்ப பசிக்கும். நேற்று மாதிரி இன்னைக்கு விளையாடலாம்.” என்றான் ஹரிஷ்.
“யூநோ வா?” என்றாள் சுவாதி.
“இல்லை சீட்டு கட்டு விளையாடலாம்” என்றான் ஹரிஷ்.
“எங்க விளையாடுறது?” என்றாள் அனன்யா.
“எங்க ரூம் பெருசா இருக்கும். அங்க விளையாடலாம்” என்றான் ஹரிஷ்.
“ஓகே” என்றனர்.
“சரி வாங்க போகலாம்.” என்றான் ஹரிஷ்.
கல்லூரி நண்பர்களோடு, அஸ்வின் மற்றும் அனன்யா இணைந்துக் கொண்டனர். கனி குடும்பம் நடந்த பின் அவர்கள் அறைக்கு தூங்க சென்றுவிட்டனர். ரோஜா நடக்கவே வரவில்லை.
இம்முறை அனன்யா கவனமாக, சுவாதி மற்றும் ஈஸ்வர் இருவருக்கும் நடுவில் உட்கார்ந்துக் கொண்டாள்.
அஸ்வின் அவளை நக்கலாக பார்த்தான். ஹரிஷ் கவலையாக, “என்னோடு உட்காரு பியூட்டி.” என்றான்.
“எனக்கு இந்த விளையாட்டு விளையாட தெரியும். நான் இங்கேயே உட்கார்ந்துக்குறேன்.” என்றாள் அனன்யா.
மூன்று கட்டு சீட்டுகளை ஒன்றாக கலந்து குலுக்க முயன்றான் ஹரிஷ். அவனிடம் இருந்து வாங்கிக் கொண்ட அஸ்வின் எளிதாக மூன்று கட்டையும் சேர்த்து, நன்றாக குலுக்கினான்.
“அண்ணா…” என்று ஈஸ்வர் ஆரம்பிக்க அவனை தடுத்து நிறுத்திய ஹரிஷ்,
“நீ இப்ப என்ன சொல்ல போறனு எனக்கு தெரியும். அண்ணா… எப்படி நீங்க மட்டும் இவ்வளவு சூப்பரா குலுக்குறீங்க. இதிலேயே நீங்க எவ்வளவு பெரிய சீட்டு கட்டு அப்பாடக்கருனு தெரியுது.” என்று சொல்ல.
அனன்யா ஹரிஷ்ஷிற்கு ஹை ஃபை கொடுத்து, விழுந்து விழுந்து சிரித்தாள்.
அனன்யாவை பார்த்த அஸ்வினின் மனம் அமைதியானது. நேற்று அவள் அழுததை பார்த்த அஸ்வினின் மனம் இப்போது வரை தவித்து கொண்டு தான் இருந்தது. அதற்கு இந்த சிரிப்பு ஆறுதலாக இருக்கவே, ஹரிஷ்ஷை எதுவும் செய்யாமல் விட்டான் அஸ்வின்.
எல்லோருக்கும் பதிமூன்று கார்ட்ஸ் போட்டான் அஸ்வின்.
அதன் பின் அனைவரின் கவனமும் விளையாட்டில் இருந்தது. ஒன்று அஸ்வின் ஜோக்கரை முதலிலே பார்ப்பான் இல்லை என்றால் இரண்டு சுற்றிலே ஜோக்கரை கண்டுபிடித்து விடுவான்.
பத்து, இருபது என்று ஆட்டம் போக, கடைசியில் விளையாடிக் கொண்டிருந்தது அஸ்வினும், ஹரிஷ்ஷும் தான். அஸ்வின் தான் கடைசியில் ஜெயித்தான்.
“நீ எவ்வளவு கிண்டல் பண்ணாலும், அஸ்வின் அண்ணா கிரேட் தான், எப்படி ஜெயிச்சாரு பாத்தியா?” என்றான் ஈஸ்வர்.
“சரி தான் போடா” என்றான் ஹரிஷ்.
“எல்லோரும் சீக்கிரமா தூங்குங்க. காலைலே எழுந்து போட்டிங் போகணும். பாய் காய்ஸ்” என்ற அனன்யா வெளியே வர.
அவள் பின்னாலே அஸ்வினும் வந்தான். இருவரது அறைகளும் பக்கத்தில் தான் இருந்தது.
அவள் கையை பிடித்து இழுத்து மறைவான மரத்திற்கு பின் தள்ளி. அவள் கைகள் இரண்டையும் அவள் முதுகிற்கு பின் பிடித்துக் கொண்டான்.
“அஸ்வின்…” என்றாள் நம்ப முடியாத பார்வையோடு அவனை பார்த்துக் கொண்டே.
“நான் இப்படி எல்லாம் நடந்துக்க மாட்டேன்னு ஏற்கனவே உன் கிட்ட சொல்லலையா? உன்னோட சம்மதத்திற்காக தான் அமைதியா வைட் பண்ணிட்டிருக்கேன். நீ மட்டும் ஓகே சொல்லிப்பாரு அப்போ தான் நான் யாருன்னு உனக்கு தெரியும்.
கொஞ்ச நாள் கூட நல்ல பையனா இருக்க என்னை நீ விட மாட்ட போல” என்றான் அஸ்வின்.
“நான் என்ன பண்ணேன்.” என்றாள் அனன்யா.
“ஒருத்தன் என்னை கிண்டல் செய்றான், உனக்கு எப்படி அப்படி சிரிப்பு வந்தது. இந்த உதடு தான சிரிச்சது, இதற்கு தண்டனை தந்தாகணும்” என்று அவள் அருகில் போனான்.
“அஸ்வின் ப்ளீஸ்.” என்ற அனன்யாவின் உடல் பயத்தில் நடுங்கியது.
“ஹே அனன்யா கூல். நான் சும்மா விளையாடினேன், இதுக்கு போய் இப்படி பயந்து நடங்குற.” என்ற அஸ்வின் அவள் கைகளை விட.
“எதில் விளையாடுறதுன்னு அறிவில்லை உனக்கு.” என்றாள் அனன்யா கோபமாக.
“உன்கிட்ட ஒருத்தன் தப்பா நடக்க முயற்சி செய்தா, இப்படி தான் பயந்துட்டு நிப்பியா? ஓங்கி என் வயித்தில் காலால் அடிக்கணும். சத்தம் போட்டு யாரையாவது உதவிக்கு கூப்பிடணும். இதில் நீ எதையுமே செய்யல. உன் பாதுகாப்புக்கு ஏதாவது ஒரு தற்காப்பு கலையை கத்துக்கோ” என்றான்.
“எனக்கு அது தெரியும். நான் போறேன்.” என்றவள அவள் அறைக்கு சென்றாள்.
அவள் பின்னே வந்தவன், “ நிஜமா உன் கிட்ட விளையாட தான் அப்படி செய்தேன். சோ பயப்படாம நிம்மதியா தூங்கு. நான் ஒன்னும் பொறுக்கி இல்லை.” என்றான்.
“தெரியும்.” என்றவள் கதவை தாள் போட்டாள்.
“அதுவரைக்கும் சந்தோஷம்.” என்றவன், அவனது அறைக்கு சென்றான்.
தண்ணீர் குடித்து தன்னை அமைதி படுத்தினாள் அனன்யா. பின் பெட்டில் படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை.
அஸ்வின் சொன்னதை யோசித்தாள், ‘அவன் இடத்தில் வேறு யாராக இருந்திருந்தாலும் அவன் சொன்னது போல் தான் அனன்யா நடந்திருப்பாள். அஸ்வின் என்பதால் தான் நான் கோபமா நடந்துக்காமல் இருந்தேனா.’ என்று நினைத்தாள்.
யோசனை செல்லும் பாதை அனன்யாவிற்கு பிடிக்கவில்லை. வேகமாக ஃபோனை எடுத்தவள்,
“காலைலே சன் ரைஸ் பார்க்க போட்ல போவோம். ரெடியா இருங்க.” என்று அனன்யா மெசேஜ் செய்தாள்.
“நாளைக்கு என்ன போட்” என்று ஈஸ்வர் மெசேஜ் செய்ய.
“கண்ட்ரி போட் (country boat) அதாவது மோட்டார் இல்லாத பழைய மரத்தால் ஆன படகு. துடுப்பு மாதிரி ஒரு பெரிய குச்சி வைத்து அந்த போட்டை ஓடடுவாங்க. நம்ம கயாக்கிங் செய்தப்ப கனி அக்கா போனங்களே , அந்த போட்ல தான் நாம நாளைக்கு போறோம்.” என்று பிதில் தந்தாள்
“சூப்பர்.” என்றான் ஹரிஷ்.
“இந்த ரைட் எல்லோருக்கும் கண்டிப்பா பிடிக்கும். நமக்கு புது அனுபவம் கிடைக்கும். ஓகே பாய், குட் நைட் காய்ஸ்.” என்று அனன்யா மெசேஜ் செய்தாள்.
டே - 8
காலையில் சொன்னது போல் எல்லோரும் தயாராகி நிற்க. இரண்டு படகுகள் வந்தது.
ஒன்றில் கல்லூரி மாணவர்களோடு அஸ்வினும் அனன்யாவும் ஏறிக் கொண்டனர். மற்றொன்றில் ஜெய், ராஜேஷ் குடும்பம் ஏறிக் கொண்டது.
இதுவரை சென்ற இடம் போல் இல்லாமல், இங்கு மிகவும் அமைதியாக, மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. காலை கதிரவன் வெளிவருவதை ரசித்தனர்.
“அண்ணா… கிராமத்து பக்கம் போங்க.” என்றாள் அனன்யா.
அதேபோல் படகோட்டியும் கிராமத்து பக்கம் போட்டை ஓட்டினர்.
உயரம் குறைவான சின்ன பாளம் வர, “எல்லோரும் குனிந்து உட்கார்ந்திருக்க. இல்லைனா தலையில் அடிப்படும்.” என்றாள் அனன்யா.
குறுகிய கால்வாய் வழியாக படகு சென்றது. ஒவ்வொரு வீட்டிற்கு பின் புறம் ஏறி, தென்னை மரங்கள் அமைந்திருந்தது.
மற்றொரு படகு எதிர் புறம் வந்தது, அதில் காலையில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்றுக் கொண்டிருந்தனர். இவர்களோட தினசரி வாழ்க்கையே படகோடு இணைந்திருப்பதை பார்த்தனர்.
அருகில் வந்த டீ கடையை பார்த்த ஹரிஷ், “அண்ணா… அந்த டீ கடையில் போட்டை நிறுத்துங்க.” என்றான்.
சிலர் போட்டில் உட்கார்ந்து குடிக்க, சிலர் கரையில் ஏறி சென்று டீ குடித்தனர்.
“இந்த மக்கள் எல்லோருமே ரொம்ப லக்கி. அழகா இயற்கையோடு இணைந்து வாழ்றாங்க. நம்ம சென்னையில் ஒரு அடி கூட இடைவெளி இல்லாமல் வீடுகளை கட்டி வாழ்ந்துட்டு இருக்கோம்.” என்றான் தீபக்.
“ஆமா… ஒரு நாள் அங்கிருந்து, இங்க வந்த நமக்கு போக மனசே வரமாட்டேங்குது. இந்த கிரமத்து மக்கள் ரொம்ப லக்கி தான.” என்றாள் சுவாதி.
“ஆனா, அவங்களுக்கு இந்த சூழலில் வாழுறதில் சில கஷ்டம் இருக்கும். ஒரு நாள் வந்துட்டு போற நமக்கு அது தெரியாது. இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்வார்களே. அது மாதிரி தான். என்ன இவங்க இயற்கையோடு இணைந்திருப்பதால், மன நிம்மதியோடு இருப்பார்கள்.” என்றாள் அனன்யா.
“இயற்கையை நேசித்து, எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புறவங்களுக்கு இது ஏற்ற இடம். ஆடம்பரத்தோடு, டெக்னாலஜியோடு வாழ விரும்புறவங்களுக்கு சிட்டி லைப் தான் செட்டாகும்.” என்றான் அஸ்வின்.
“படத்தில் பார்த்து, நம்ம மனசில் உருவான கேரளாவின் அழகை இந்த முன்றோ ஐலன்ட்ல தான் என்னால பார்க்க முடியுது. எவ்வளவு அழகான இடம்.” என்றாள் ரோஷிணி.
“எஸ். நீ சொல்றது சரிதான். இங்கு இன்னும் கேரளவின் பழமை மாறாத இயற்கை அழகு இருக்கு. சரி வாங்க படகில் ஏறுவோம்.” என்றாள் அனன்யா.
ரெசார்ட்டை நோக்கி சென்றது படகு. ஈஸ்வர் தன் கேமராவில், மீனவர் ஏறியில் வலை வீசுவதை படம் எடுத்தான். பின் இவர்கள் படகு அருகே வந்த பறவையை ஃபோட்டோ எடுத்தான்.
“இங்க நிறைய வகையான பறவைகளை பார்க்க முடியுது.” என்றான் ஈஸ்வர்.
“ஆமா ஈஸ்வர். இங்க பேர்ட்ஸ் வாட்சிங் கூட ஒரு பொழுது போக்கு தான். இயற்கையான சூழல் எல்லா உயிரினத்திற்கும் பிடிக்கும். அதான் இங்கு பல வகையான பறவைகளை பார்க்க முடியுது.” என்றாள் அனன்யா.
ஈஸ்வரும் அவன் பார்க்கும் பறவைகளை எல்லாம் அழகாக புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
ஒரு மணி நேர பயணத்திற்கு பின். இவர்கள் தங்கி இருந்த ரெசார்ட் அருகில் வந்தனர்.
“ரெப்ரெஷ் ஆகிட்டு, உங்க பேக்கை ரெடி பண்ணி வைச்சிடுங்க. காலை உணவை சாப்பிடுங்க . அப்புறம் பதினொரு மணிக்கு ரூமை வெக்கேட் பண்ணிட்டு கிளம்பணும்.” என்றாள் அனன்யா.
எல்லோரும் சாப்பிட்டு தயாராக நின்றனர். ஆனால், இந்த இடத்தை விட்டு போக யாருக்கும் விருப்பமில்லை. ஆனால், சென்று தான் ஆகணும்.
ஃபெர்ரி போட் வர, அதில் ஏறி, மறுகரைக்கு வந்தனர். அனன்யா சொன்ன இடத்திற்கு வேன் டிரைவர் சரியாக வந்திருக்க. இவர்களின் பொருட்களை வேனில் ஏற்றி விட்டு, அனைவரும் வேனில் ஏறினர்.
கடைசியாக அனன்யா ஏறினாள். ஹரிஷ் கடைசி சீட் முழுக்க, கால் நீட்டி படுத்திருக்க. வேறு வழியின்றி அஸ்வின் அருகில் உட்கார்ந்தாள் அனன்யா.
'காலையில் இருந்து என்னை கண்டுக்கவே இல்லை எப்படி மாட்டிக்கிட்ட பார்த்தீயா.’ என்று மனதில் நினைத்துக் கொண்டான் அஸ்வின்.
வேன் திருவனந்தபுரத்தை நோக்கி சென்றது.
Author: Vishakini
Article Title: நயவனின் நயவள் இவளோ - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நயவனின் நயவள் இவளோ - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.