அத்தியாயம் 6
டே - 3
“காய்ஸ்… இங்க சர்ஃபிங் கத்துக்க விரும்பிறவங்க கற்றுக் கொள்ளலாம். சர்ஃ போட் ரேண்ட்க்கு கிடைக்கும் எடுத்துக்கலாம். பாரக்கிலைட்டிங் (Paragliding) பாராமீட்டர் (paramotor) ரைடும் இருக்கு கண்டிப்பா நீங்க எலாலோரும் ட்ரை பண்ணணும். கடைசியா பனானா போர்ட் ரைட் போகலாம்.” என்றாள் அனன்யா.
தனக்கு சர்ஃபிங் சொல்லிக் கொடுத்த கோச்சிடம், அனைவரையும் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தாள்.
தனக்கான சர்ஃப் போர்டை எடுத்துக் கொண்டு அனன்யா கடலுக்குள் சென்றாள். அவள் சர்ஃப் போட் மேல் லாவகமாக ஏறி நின்று கடல் அலைக்கு தகுந்த மாதிரி பேலன்ஸ் செய்து சர்ஃபிங் செய்யத் தொடங்கினாள். கடலில் பெரிய அலை வர அதற்குள் நுழைந்தவள் பின் அடுத்த அலைக்கு மேல் ஏறி வந்தாள். இப்படியே கடல் அலையின் அசைவுகளும் ஏற்றபடி கடலில் பாலே நடனம் ஆடிக் கொண்டிருந்தாள் அனன்யா.
நண்பர்கள் கூட்டம் கைத் தட்டி அவளை ஆச்சரியமாக பார்த்தனர். அஸ்வினும் சர்ஃபிங் போட்டோடு செல்ல.
“அஸ்வின் அண்ணா எங்க டா போறாரு?” என்றான் ஈஸ்வர்.
“தெரியலையே. இரு பார்க்கலாம்.” என்றான் ஹரிஷ்.
அஸ்வினும் அனன்யா போல் நன்றாக சர்ஃபிங் செய்தான். அவன் வேகமாக, ஸ்டைலாக சர்ஃ போட் ஓட்டுவதை பார்த்த பெண்கள் மட்டும் இல்லை ஆண்களும் சைட்டடித்தனர்.
அனன்யாவோடு அவனும் இணைந்துக் கொண்டான். அவளுக்கும் இவனை பார்த்து அதிர்ச்சி தான்.
“இந்த அண்ணனுக்கு எல்லாமே தெரியுது பாருங்களேன். கிரேட், பார்க்கவும் அழாக இருக்காங்க.” என்றான் தீபக்.
“அட வாங்க டா நாமளும் போய் கத்துக்கலாம்.” என்ற ஹரிஷ் கோச் அருகே சென்றான்.
“நீங்க போங்க டா. நாங்க வரலை” என்று ரோஷிணி, சுவாதி பின் வாங்கினர்
அஸ்வின் அவளை காப்பாற்றாமல், வண்டியில் லேசாக தடுமாறிய அனன்யாவை கீழே விழாமல் பிடித்ததில் இருந்து. ‘இவள் என்ன தன்னை விட பெரிய ஆளா' என்று அனன்யாவின் மீதும் அஸ்வினின் மீதும் கோபமாக இருந்தாள் ரோஜா.
நண்பர்கள் அஸ்வினையும் அனன்யாவும் பாராட்ட, பொறாமை வர. “வாங்க நாமளும் கத்துக்கலாம்.” என்று ராஜேஷை அழைத்தாள் ரோஜா.
அவனுக்கு விருப்பமில்லை, “வர மாட்டேன்” என்று சொன்னால் ரோஜா கோபப்படுவாள் என்று பயந்து அவளோடு சென்றான்.
கோச் கரையில் அனைவரையும் சர்ஃப் போட் மேல் ஏறி நிற்க சொல்லி. எப்படி சர்ஃ ப் செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்.
அவர்களும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.
லைஃப் ஜாக்கெட் போட்டுக் கொண்டு கடல் உள்ளே செல்லாமல், கரை ஓரமே சர்ஃ போட் மேல் ஏறி நிற்க முயற்சி செய்தனர்.
பார்க்க எளிமையாக தெரிந்த சர்ஃபிங் செய்யும் போது மிகவும் கடினமாக இருந்தது.. சர்ஃப் போட் மேல் ஏறி நிற்பதே கஷ்டமாக இருந்தது.
ஐவரும் விடாமல் முயற்சி செய்துக் கொண்டிருந்தனர். ரோஷிணியும் சுவாதியும் இவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். மறுபக்கம் அஸ்வின் அனன்யாவோடு சேர்ந்து சர்ஃபிங் செய்துக் கொண்டிருந்தான்.
ஒரு மணி நேரம் சென்று இருக்க, “அஸ்வின்… நான் கரைக்கு போறேன்” என்று அனன்யா சொல்ல.
“நானும் வரேன்” என்றான் அஸ்வின்.
'இவன் ஏன் மற்றவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்கிறான். இவன் தனியாக கொஞ்ச நேரம் விளையாடினால் என்ன? எப்போ பாருஎன்னோடவே இருக்கான்' என்று மனதில் அஸ்வினை வறுத்து எடுத்துக் கொண்டே கரைக்கு வந்தாள் அனன்யா.
ஹரிஷ் முயற்சி செய்துக் கொண்டிருந்ததை பார்த்து நக்கலாக சிரித்தான் அஸ்வின்.
அவர்களை பார்த்த அனன்யா, “கமான் காய்ஸ்… ஆரம்பத்தில் நாங்களும் இப்படி தான் கஷ்டப்பட்டோம். ட்ரை பண்ணிட்டே இருங்க.” என்று சொன்னவள்.
ராஜேஷை தவிர மற்றவர்களுக்கு அவர்கள் எங்கு தவறு செய்கிறார்கள், எப்படி சரி செய்ய வேண்டும் என்று சொன்னாள். ஹரிஷ், தீபக், ஈஸ்வர் அவள் சொல்லியதை கவனமாக கேட்டுக் கொண்டனர். ரோஜா வேறு பக்கம் சென்றுவிட, தோளை குலுக்கிக் கொண்டு கரை சென்று மற்றவர்களோடு அமர்ந்தாள் அனன்யா.
ஜெய் முதல் தியா, தேவ் வரை அனைவரும் அவளை பாராட்டினர்.
சர்ஃபிங் வரவில்லையே என்று சோர்வாக வந்து கரையில் உட்கார்ந்தனர். ஹரிஷ் மட்டும் கரையில் சர்ஃப் போட் வைத்துக் கொண்டு, கடலில் சர்ஃபிங் செய்வது உடலை அசைத்து நடித்துக் கொண்டிருக்க. அவனை பார்த்து அனைவரும் சத்தமாக சிரித்தனர்.
அவன் தலையில் லேசாக அடித்த கோச், அவனிடமிருந்து சர்ஃப்போர்டை வாங்கிக் கொண்டு சென்றார்.
“ப்ரெண்ட்ஸ் பாராமீட்டர் ட்ரை பண்ணுங்க. ரொம்ப திரில்லிங்கா சூப்பரா இருக்கும்.”
“பயமா இருக்கு” என்றாள் ரோஷிணி.
“அப்படியே வானத்தில் பறக்குற மாதிரி இருக்கும். நான் நிறைய டைம் போயிட்டேன். இப்போ நீங்க எல்லோரும் தான் ட்ரை பண்ணணும்.” என்றாள் அனன்யா.
“நான் ட்ரை பண்றேன்” என்றான் ஹரிஷ்.
அவன் பறப்பதை மற்றவர்கள் பார்த்தனர். ஆனாலும், யாருக்கும் அதில் செல்ல விருப்பமில்லை.
“அஸ்வின்… நீங்க தான் எல்லாத்தையும் ட்ரை பண்ணுவீங்கல போய் பறந்து பாருங்க.” என்றான் ஹரிஷ்.
“ஐ அம் நாட் இன்ட்ரஸ்ட்.” என்றான் அஸ்வின்.
“அஸ்வின் உங்களுக்கு இது கண்டிப்பா பிடிக்கும்.” என்றாள் அனன்யா.
“எனக்கு ரொம்ப ஹைட்னா பயம்.” என்றான் அஸ்வின்.
இப்போது அஸ்வினை பார்த்து நக்கலாக சிரிப்பது ஹரிஷின் முறையானது.
அனன்யாவும் சிரிப்பை அடக்க முயற்சி செய்வதை பார்த்த அஸ்வின். அவள் அருகில் சென்று மெதுவாக, “நீ என்னோடு சேர்ந்து வருவாயென்றால் சொல்லு , உன்ன கெட்டியமா பிடிச்சிக்கிட்டு வர, நான் இப்பவே பறக்க ரெடி.”
அதன்பின் அனன்யா அமைதியாகி விட்டாள். ஈஸ்வரும், சுவாதியும் பறந்து வந்தனர். மற்றவர்கள் போக விரும்பவில்லை என்று சொல்லிவிட்டனர். ரோஜா, ராஜேஷ் இன்னும் சர்ஃபிங்கில் இருந்தே வரவில்லை.
“காய்ஸ்… பனானா போட் ரைட் போகலாமா?” என்றுக் கேட்டாள் அனன்யா.
“நாங்க வரலை அனன்யா” என்றாள் கனி.
“கிட்ஸ்ஸ நான் பார்த்துக்குறேன் அக்கா.” என்றாள் அனன்யா.
“எனக்கு பயம், இவருக்கும் இதுமாதிரி ரைட் பிடிக்காது, நீங்க போயிட்டு வாங்க. கிட்ஸ்க்கு பீச்சில் இருந்தாலே போதும்.” என்றாள் கனி.
“நானும் வரலை.” என்றாள் ரோஷிணி.
“ஏன்?”
“அவளுக்கு வாமிட் வரும் பியூட்டி. அவ கனி அக்காவோடு இருந்துப்பா. வாங்க நாம எல்லோரும் போகலாம்.” என்றான் ஹரிஷ்.
பனானா போட் ரைடில் ஆறு பேர் செல்ல முடியும். இரண்டு மஞ்சள் ரப்பர் பலூனில் இரு பக்கமும் மூன்று மூன்று பேர் உட்கார. அதை ஸ்பீட் போட்டோடு இணைத்திருப்பர். ஸ்பீட் போட் வேகமாக இவர்களை அழைத்துச் சென்று
ஒரு இடத்தில் இவர்களை கீழே தள்ளிவிடும்.
அதே போல் இவர்கள் ஆறு பேரும் கடலில் விழுந்தனர். முறையாக அனைவரும் லைஃப் ஜாக்கெட் போட்டிருந்ததால் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடுக்கடலில் மிதந்தனர்..
ஹரிஷ், அனன்யா, அஸ்வின், ஈஸ்வர், சுவாதி, தீபக் வட்ட வடிவில் கை கோர்த்து, கடலில் ஆட்டம் போட. அதனை ஈஸ்வரின் டிரோன் கேமரா அழகாக வீடியோ எடுத்தது. டிரோனை ரோஷிணி இயக்கிக் கொண்டிருந்தாள்.
அனைவரும் கவலையை மறந்து சிறு குழந்தைகளாக மாறி இருந்தனர்.ரைடு முடிந்த பின் கரையை வந்தடைந்தனர்.
ராஜேஷ் சோர்வாக உட்கார்ந்திருக்க. ரோஜா அனன்யாவிடம், ”நாங்களும் ட்ரிப்க்கு பே பண்ணி இருக்கோம். ஏன் எங்களை விட்டுட்டு போனீங்க?” என்றாள் கோபமாக.
“நீங்க சர்ஃபிங் பண்ணுறதில் ரொம்ப பிசியா இருந்தீங்க. அதான், சொல்லலை இப்போ கூட நீங்க போகலாம், போயிட்டு வாங்க. இந்த மாதிரி ரைடுக்கு எல்லாம் அவங்க அவங்க தான் பே பண்ணும்னு நான் முன்னாடியே சொல்லிருந்தேனே. பாரக்கிலைட்டிங், பாராமீட்டர், பனானா போட் ரைட் எல்லாமே ஈவினிங் வரைக்கும் இருக்கும் நீங்க போய் விளையாடிட்டு வாங்க. எல்லோரும் விளையாடிட்டு வர வரைக்கும் இன்னைக்கு இங்க தான் இருக்க போறோம்.
ஈவினிங் கொஞ்சம் ரெஸ்ட் அப்புறம் நைட் தான் ஃபயர் காம்ப் ஏற்பாடு பண்ணி இருக்கேன். சோ நீங்க போய் என்ஜாய் பண்ணிட்டு வாங்க.” என்ற அனன்யா கிட்ஸ் கட்டிக் கொண்டிருந்த மணல் வீடு அருகே உட்கார்ந்து, அவர்களோடு பேச ஆரம்பித்தாள்.
ரோஜா பதில் சொல்ல முடியாமல் நின்றிருக்க, ஹரிஷ் விசில் அடித்துக் கொண்டே சென்றுவிட்டான்.
அனன்யா மனமோ பழைய எண்ணங்களை ஞாபகப்படுத்தியது,
'இதே போல் இசிஆர்க்கு ஒருதடவை ஆஃபிஸ் ட்ரிப் போயிருந்த இடத்தில்.
“ராஜேஷ் எனக்கு போட்னா பயம், நான் வரலை.” என்று அனன்யா எவ்வளவோ சொன்ன பிறகும்கூட.
“நான் இருக்கேன்ல உனக்கு என்ன பயம்? நீ கண்டிப்பா வந்துதான் ஆகணும்” என்று கட்டாயப்படுத்தி அழைத்து சென்றான் ராஜேஷ்.
அந்த ரைட் போயிட்டு வந்த பின் அவள் வாந்தி எடுத்து தலைவலி சோர்வு வந்தது.
அதன் பின்பும் அவளை ஓய்வு எடுக்க விடவில்லை. “இன்று ஒரு நாள் தான் ட்ரிப், நீ தனியாகவும் என்னோடு வெளியே வரமாட்டாய்” என்று சொல்லியே அவளை கட்டாயப்படுத்தி அவனுக்கு பிடித்த ஆக்டிவிடீஸ்ஸை எல்லாம் அவளையும் செய்ய வைத்தான்.’
நினைவில் இருந்து வெளி வந்த அனன்யா. ‘கடவுள் ஒருவர் செய்யும் தவறுக்கு கண்டிப்பாக தண்டனையை பல மடங்காக திருப்பி தருவார்.’ என்பதை உணர்ந்தாள் அனன்யா.
அன்றைய அவளின் நிலையை தான் இன்று ராஜேஷ் அனுபவித்துக் கொண்டிருந்தான். அன்று காதலாக தெரிந்தது எல்லாம் வெறும் மாயை என்பதையும் இப்போது புரிந்துக் கொண்டாள்.
'இந்த வர்கலா என்னை ரொம்ப தைரியமான பெண்ணாக மாற்றிவிட்டது.’ என்று நினைத்துக் கொண்டே ஹரிஷ் கட்டிய மணல் வீட்டை தள்ளிவிட்டாள் அனன்யா.
“மேடம் என்னோட வீட்டை எப்படி நீங்க இடிக்கலாம். யாரு உங்களுக்கு அனுமதி தந்தது.”
“சாரி” என்று கேட்க வந்தவள், அவன் அளவுக்கு அதிகமாக பேச, “நீங்க கவர்மென்ட் கிட்ட அப்ரூவல் வாங்காம எப்படி வீடு கட்டலாம்? அதான் இடித்தேன்.” என்றாள் அனன்யா.
அவன் அவளை பாவமாக பார்க்க. தியாவும், தேவ்வும் அவனை பார்த்து சிரித்தனர். “எங்க வீட்டை விட பெரிய வீடு கட்டுறேன்னு சொன்னீங்க.” என்று வம்பு செய்ய.
“சரி வா ஹரிஷ், நாம முதல்ல இருந்து கட்டலாம்.” என்று அனன்யாவும் ஹரிஷோடு இணைந்துக் கொண்டாள்.
நேரம் இனிமையாக சென்றுக் கொண்டிருந்தது.
ராஜேஷ் பயத்தில கத்தியது இவர்களை இருக்கும் இடம் வரை கேட்டது. அவன் எவ்வளவு மறுத்தும் அவனை பனானா போட் ரைட் அழைத்து சென்றுவிட்டு தான் வந்தாள் ரோஜா.
அதன் பின் அனைவரும் ஹோட்டலை நோக்கி சென்றனர்.
“ப்ரெண்ட்ஸ் நைட் செவனுக்கு ஃபயர் கேம்ப், நம்ம ஹோட்டலுக்கு பேக் சைட்ல.” என்றாள் அனன்யா.
“ஓகே” என்று கத்தினர். அதே அவர்களின் மகிழ்ச்சியின் அளவை சொல்லியது.
*****
ஒரு பக்கம் கட்டைகள் வைக்கப்பட்டிருக்க, மறுபக்கம் பார்பி க்யூ (barbeque) கிரில் தயாராக இருந்தது.
ஆண்கள் கிரில் அருகே சென்று நின்றுக் கொண்டு, மசாலாவில் ஊற வைத்த பைன் ஆப்பிள், பன்னீர், காளானை கிரில் செய்தனர். சைவத்திலிருந்து ஆரம்பித்தனர். பின் மசாலாவில் ஊற வைத்த சிக்கன், பீஃப்பை பக்குவமாக கிரில் செய்துக் கொண்டிருந்தனர்.
பெண்களோ கட்டைகளை தீமூட்டி விட்டு. இரவு உணவுகளையும் அங்கே எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
முன் பின் அறிமுகம் இல்லாத வேலைகளை, புது மனிதர்களோடு சேர்ந்து செய்வதே உற்சாகத்தை தந்தது.
இரவு நேரம், அமைதியான சூழலில், நிலவு வெளிச்சத்தோடு, நெருப்பின் வெளிச்சமும், வெப்பமும் அந்த இடத்தை நிரப்பியது. தங்களுக்கு பிடித்த உணவுகளை தட்டில் வைத்துக் கொண்டு, நெருப்பை சுற்றி உட்கார்ந்துக் கொண்டு, சாப்பிட ஆரம்பித்தனர்.
‘உனக்கு இது பிடிக்குமா? இன்னும் கொஞ்சம் வாங்கிக்கோ. உனக்கு இது பிடிக்காதா? அப்போ நான் சாப்பிடுகிறேன்' என்று ஒருவரோடு ஒருவர் உணவை பரிமாறிக் கொண்டிருந்தனர்.
சாப்பிட்டு முடித்து, அந்த இடத்தை சுத்தம் செய்தனர். கொஞ்ச நேரம் ஹை பிச்சில் டீஜே வைச்சு எல்லோரும் சேர்ந்து டான்ஸ் ஆடி என்ஜாய் பண்ணியவர்கள்,அதன் பின் மீண்டும் அனைவரும் நெருப்பை சுற்றி உட்கார்ந்தனர்.
“ஒரு கேம் விளையாடலாமா?” என்றான் ஹரிஷ்.
“என்ன கேம்?” என்றாள் ரோஷிணி.
“பாய்ஸ் ஒரு டீம், கேர்ள்ஸ் ஒரு டீம். பாட்டுப்போட்டி.”
“சூப்பர்…” என்றாள் சுவாதி.
பின் இடம் மாறி உட்கார்ந்துக் கொண்டு அரை மணி நேரம் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு விளையாடினர். கடைசியாக பெண்கள் அணி வெற்றி பெற, போட்டி முடிந்தது.
“இப்போ எல்லோரும் ஆளுக்கு ஒரு டாஸ்க் பேப்பர்ல உல்டாவா எழுதணும். எக்ஸாம்பிளுக்கு சோகமான பாட்டுக்கு குத்தாட்டம் போடணும். இது மாதிரி உங்களுக்கு என்ன தோணுதோ, அதை ஒரு சீட்டில் எழுதி, அதுக்கு கீழ உங்க நேமும் எழுதணும். உங்க சீட்டு எடுக்குறவங்க நீங்க சொன்ன டாஸ்கை செய்யலைன்னா நீங்க அவங்கிட்ட ஏதாவது கேள்வி கேட்கணும் அதுக்கு அவங்க கண்டிப்பா உண்மையான பதில சொல்லணும்.” என்றான் ஹரிஷ்.
அனைவரும் ஆர்வமாக மறைத்துக் கொண்டு டாஸ்கை எழுதி, பௌலில் போட்டனர்.
“இந்த கேமை சொன்ன நீ தான் ஃபர்ஸ்ட் எடுக்கணும்” என்றான் அஸ்வின்.
ஹரிஷ் சென்று எடுத்தான். அவன் சீட்டில், ”குரங்கு போல் நடக்க வேண்டும் - அஸ்வின்” என்று படித்து காட்டியவன்.
'அவனுக்கு கேள்வி கேட்க அனுமதி தரக்கூடாது.’ என்று நினைத்தவன். குரங்கு போல் நடித்து காண்பிக்க, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
“யூ டூ பிருடஸ். அடுத்து நீ தான் பியூட்டி” என்றான் ஹரிஷ்.
அனன்யா எடுத்த சீட்டில், “நாய் போல் குலைத்து காட்ட வேண்டும் - ரோஜா” என்று படித்து காண்பித்தாள் அனன்யா.
அதிலே ரோஜாவின் தலை கணம் திருந்தது.
“எனக்கு செய்ய விருப்பமில்லை. நீ கேள்வியே கேளு ரோஜா.” என்றாள் அனன்யா.
“உங்க அம்மா, அப்பா பற்றியும், உன்னோடு பினான்சியல் ஸ்டேட்டஸ் பற்றியும் சொல்லு.” என்றாள் ரோஜா.
ஹரிஷ் கோபமாக சண்டை போட எழுந்து நிற்க, அவனை தடுத்த அனன்யா, “ஹரிஷ்… எனக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல எந்த பிரச்சனையும் இல்லை.” என்றாள். ஹரிஷ் ரோஜாவை முறைத்துக் கொண்டே உட்கார்ந்தான்.
“அப்பா நான் பிறக்கும் முன்பே ஓடி போயிட்டாங்க. அம்மா தான் தனி ஆளாக வளர்த்தாங்க, அவங்க டைலர். அம்மா நான்கு மாதம் முன்னாடி இறந்துட்டாங்க. அதுவரைக்கும் நான் போயிட்டு இருந்த ஐடி வேலையை விட்டுட்டேன்.
இப்போ நான் சோசியல் மீடியா, ட்ரிப் ஆர்கனைஸ் மூலமா தான் பணம் சம்பாதிக்கிறேன். அம்மா எனக்காக சில லட்சங்கள் பேங்க் அக்கவுண்ட்ல சேர்த்து வச்சிருக்காங்க. என்னோட தேவைக்கு நான் சம்பாதிக்கிற பணமே இப்ப வரைக்கும் போதுமானதாக இருக்கு.” என்றாள் அனன்யா.
அவளை ஏளனமாக பார்த்த ரோஜா, “உங்க அம்மா ஒரு டெய்லரா. டெய்லரா இருந்து எப்படி லட்சங்கள் சம்பாதிச்சாங்க?”
“ஹரிஷ் ஒரு கேள்விக்கு தானே பதில் சொல்லணும்” என்று கேட்டாள் அனன்யா.
“ஒரு கேள்விக்கு தான் பதில் சொல்லணும்” என்றான் ஹரிஷ்.
அமைதியாக சென்று தன் இடத்தில் உட்கார்ந்து கொண்டாள் அனன்யா.
“டெய்லர்னா ஒன்னும் கேவலம் இல்லை. இப்போ நீங்க உங்க மானத்தை காப்பாத்த டிரஸ் போட்டு இருக்கீங்க. அத தைச்சதும் ஒரு டெய்லர் தான். ஏன் நான் கூட ஒரு டெய்லர் தான். யாரையும் ஏமாற்றாமல், யார் கிட்டையும் திருடாமல் செய்யும் எந்த வேலையும் கேவலம் இல்லை.” என்றான் அஸ்வின்.
“எஸ்” என்று அனைவரும் சொல்ல, ரோஜா அவனை முறைத்துக் கொண்டே அடுத்த சீட் எடுக்க சென்றாள்.
“டான்ஸ் ஆட வேண்டும்” என்றிருந்தது. ரோஜா எந்த தயக்கம் இல்லாமல் ஆடினாள். யாராலும் அதை பார்க்க முடியவில்லை, கொஞ்சமும் நளினம் இல்லாமல், ஏதோ டிரில் செய்வது போல் டான்ஸ் ஆடினாள்.
அதன்பின் ஒவ்வொரு வராக சீட்டை எடுத்தனர். அஸ்வின் கடைசியாக எடுத்தான்.
அவனுக்கு வந்த சீட்டில், “சுவாதியிடம் லவ் ப்ரொபோஸ் செய்ய வேண்டும் - ஈஸ்வர்” என்று எழுதி இருந்தது.
“என்னால் செய்ய முடியாது. காதல் என்பது உணர்வுபூர்வமான ஒரு விஷயம். இதில சும்மா விளையாட்டுக்கு கூட காதல் இல்லாதவங்க கிட்ட காதலை என்னால் சொல்ல முடியாது.” என்றான் அஸ்வின்.
“ஓகே அண்ணா. நீங்க போடற ட்ரஸ் எல்லாம் மாஸா இருக்கு. எங்க வாங்கிறீங்கன்னு மட்டும் சொல்லுங்க.” என்றான் ஈஸ்வர்.
“நான் போடுற ட்ரஸ் எல்லாமே ஏ. ஹச் பிராண்டோடது.” என்றான் அஸ்வின்.
“அது ரொம்ப காஸ்ட்லி. அதுவும் இல்லாமல் செலிபிரிட்டி இல்லாதவங்களால் அவ்வளவு எளிதில் அந்த பிராண்ட் ட்ரஸ் வாங்க முடியாதே.” என்றான் ஈஸ்வர்.
“ஆமாம்.” என்ற அஸ்வின் அனன்யாவை பார்க்க. அவளோ அவனை சந்தேகமாக பார்க்க. “சரி சரி வாங்க எல்லோரும் போய் தூங்கலாம்.” என்று அனைவரையும் துரத்தினான் அஸ்வின்.
Author: Vishakini
Article Title: நயவனின் நயவள் இவளோ - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நயவனின் நயவள் இவளோ - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.