அத்தியாயம் - 9
ஹோட்டல் ரூம்ஸ் வெக்கேட் செய்து, அனைவரும் தங்களுடைய டிராலிகளை வேன் டிரைவரின் உதவியோடு வேனில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது அனன்யாவின் ஃபோன் இசைத்தது. ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த ஃபோனை எடுத்தாள், அஸ்வின் என்று காட்ட, அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.
“அனன்யா… கிளம்பிட்டீங்களா?”
“இல்லை. பதினைந்து நிமிடத்தில் கிளம்பிடுவோம்.”
“நான் வர அரைமணி நேரமாகும்.”
“ அப்ப நேரா கொல்லம் வந்துடுங்க.”
“இல்லை. எனக்கு ரூட் தெரியாது.”
“மேப் போட்டுட்டு வாங்க அஸ்வின்.”
“எனக்கு தெரியாது அனன்யா நீ வைட் பண்ணு.”
“அஸ்வின் உங்க ஒருத்தருக்காக எல்லோரையும் வைட் பண்ண சொல்ல முடியாது.”
“அவங்களை வேன் டிரைவரோடு அனுப்பு அனன்யா. நீ மட்டும் எனக்கு வழி சொல்ல எனக்காக வைட் பண்ணு. நாம இரண்டு பேரும் ஒன்றாக போகலாம்.”
“நான் உங்களுக்கு லைவ் லொகேஷன் அனுப்புறேன். அதை பார்த்து வாங்க.”
“எனக்கு புது ஊரில் தொலைந்து விடுவேனோன்னு பயமா இருக்கு.”
“நீங்க சொல்றதை தியா கூட நம்ப மாட்டாங்க.”
“நீ தான் இந்த ட்ரிப் ஆர்கனைசர். உன்னை நம்பி தான் நான் வந்திருக்கேன். என்னோட பாதுகாப்புக்கு நீ தான் பொறுப்பு.”
“அப்போ மற்றவர்களை யாரு பார்த்துக்கறது?”
“அவங்களை லோக்கல் டிரைவரோடு தானே அனுப்புற, அப்ப அவங்க எல்லோரும் பாதுகாப்பாதான் போவாங்க. அவங்க அந்த இடத்தை அடையறதுக்கு முன்னாடி நாம அங்க இருப்போம். நீ மட்டும் எனக்கு உதவி செய்ய வைட் பண்ணலேன்னு வெச்சிக்கோ. தினமும் நீ அப்லோட் பண்ற வீடியோவுக்கு கீழ, ‘நீ சரியாக கைடு பண்ணலன்னு’ தினமும் கமெண்ட் பண்ணுவேன் ” என்றான் அஸ்வின்.
“ என்ன மிரட்டிறீங்களா அஸ்வின்? இதுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். நீங்களா வந்தா வாங்க, இல்லன்னா எப்படியோ போங்க?” என்று காலை அனன்யா கட் பண்ண முயல
“ ஹேய்! ஹேய்! இரு அனன்யா… நான் ஒன்னும் உன்ன மிரட்டல, உன்னோட கடமையை தானே சரியாகச் செய்யச் சொல்றேன். எனக்காக வைட் பண்ணு.” என்றான் அஸ்வின்.
தலையில் கை வைத்து நின்றவள், பெரும் மூச்சோடு, பல்லை கடித்துக் கொண்டே, “சரி வைட் பண்றேன். சீக்கிரமா வாங்க.” என்றவள் காலை கட் செய்தாள்.
“எதுவும் பிரச்சனையா பியூட்டி?”
“ஹரிஷ் கொஞ்சம் எல்லோரையும் பார்த்து ஜாக்கிரதையா கொல்லம் கூட்டிட்டு போ. அஸ்வின் வர கொஞ்சம் லேட்டாகுமாம். அதுவரைக்கும் நான் வைட் பண்ணி, அவரை கூட்டிட்டு வரேன்.”
“அவர் என்ன தேவ்வா? குழந்தை தொலைந்துவிடும்னு வைட் பண்ணி, பார்த்து கூட்டிட்டு வர.”
“எல்லாம் பேசியாச்சு ஹரிஷ். நான் இங்க இருந்து கூட்டிட்டு போயே ஆகணும்னு ஆர்குயூ செய்றாரு.”
“நானும் உன் கூட இங்கேயே இருக்கவா?”
“என்னால் தனியா இதை மேனேஜ் பண்ண முடியும் ஹரிஷ். ரோஜாவை மட்டும் நான் வர வரைக்கும் பார்த்துக்கிட்டா போதும். அவங்க தான் ஏதாவது வம்பு செய்வாங்க. உன்னால அவங்களை ஈஸியா ஹேண்டில் பண்ண முடியுது. அதான் உன்னை வேனில் போக சொல்றேன்.”
“சரி நான் பார்த்துக்குறேன். நீ கவனமா வா.” என்றவன் வேனில் ஏறினான்.
“காய்ஸ்… நீங்க முன்னாடி போயிட்டே இருங்க. அஸ்வினுக்கு வழி தெரியாதாம், நான் அவரோடு பின்னாடி வரேன். டிரைவருக்கு வழி தெரியும், அவர் உங்களை பாதுகாப்பாக கொல்லம் கூட்டிட்டு போயிடுவார். உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா ஹரிஷிடம் கேளுங்க.”
“ஓகே” என்றனர்.
“பாய் பிரண்ட்ஸ்.” என்றவள் வேனிலிருந்து கீழே இறங்கினாள்.
ஒரு கப் காஃபியோடு, கடலை பார்ப்பது போல் உட்கார்ந்தாள் அனன்யா. 'உன்னை பார்க்கும் போது மட்டும் சலிப்பே வர மாட்டேங்குது. எத்தனை முறை பார்த்தாலும் உற்சாகம் தான் வருது' என்று கடலிடம் மனதோடு பேசிக் கொண்டே காஃபியை குடித்தாள்.
எதார்த்தமாக திரும்பியவளின் பார்வையில் விழுந்தான் அஸ்வின். “காஃபி குடிக்கும் வரை உனக்கு, நான் தெரியவே இல்லையா?”
“இவ்வளவு சீக்கிரம் வந்துடுவேன் சொல்லியிருந்தா நாம வேனிலே போய் இருக்கலாம். இப்போ தான் வேன் போனது.”
“நான் என்னோட பொருட்களை எடுத்து வைக்கணும். நான் இன்னும் ரூம் வெக்கேட் பண்ணலை.”
“சரி சீக்கிரம் எல்லாம் எடுத்துட்டு, வாங்க போகலாம்.” என்றாள்.
“நீ எனக்கு உதவி செய்ய வரியா?”
அவனை கோபமாக பார்த்தவள், “நோ” என்றாள்.
“ஜஸ்ட் கிட்டிங். அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். டென் மினிட்ஸ்ல வந்துடுறேன் வெயிட் பண்ணு”
பல்லை கடித்தாள் அனன்யா.
சொன்னது போல் சீக்கிரமாக வந்தவன், “வா அனன்யா.” என்றவன் நேராக பார்க்கிங் சென்றான்.
அவன் காரை பார்த்ததும், ஏதோ தான் ஏமாற்றப்படுவதாக தோன்றியது அனன்யாவிற்கு.
காரை ஸ்டார்ட் செய்து பார்க்கிங்கில் இருந்து வெளியே வந்தான். மியூசிக் ப்ளேயரை ஆன் செய்தான்.
‘மன்றம் வந்த தென்றலுக்கு’பாட்டு முடிந்து அடுத்த பாட்டாக,
“ராஜ ராஜ
சோழன் நான் எனை
ஆளும் காதல் தேசம்
நீ தான்
ராஜ ராஜ
சோழன் நான் எனை
ஆளும் காதல் தேசம்
நீ தான் பூவே காதல்
தீவே மண் மீது சொர்க்கம்
வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு
உண்டானதே”
என்ற பாடலை கேட்கவும், வந்த கோபத்தை பல்லைக் கடித்து கட்டுப்படுத்த முயற்சி செய்தாள். முடியாது போகவே, மியூசிக் ப்ளேயரை கோபத்துடன் நிறுத்தினாள் அனன்யா.
சத்தமாக சிரித்த அஸ்வின், “நல்ல பாட்ட ஏன் நிறுத்துன அனன்யா?”
“எனக்கு பிடிக்கல அஸ்வின். எல்லாத்தையும் இத்தோட நிறுத்திக்கோங்க” என்றாள்ஸஅனன்யா.
“பாட்டையா? என்னையா? இங்க பாரு அனன்யா ராஜேஷ் எப்படி வர்கலா வரை காரில் வந்தாங்களோ அது மாதிரி தான் நானும் பிஎம்டபிள்யூ காரில் வந்தேன். அதுவும் டிரைவரோடு. நான் எங்க வர சொன்னாலும் அவர் சரியா வந்துடுவார். ஏன் பணக்காரர் யாரும் உன்னோட ட்ரிப்க்கு வரக் கூடாதா? அப்படி ஏதாவது ரூல்ஸ் இருக்கா?
நேற்று நீ நான் காரில் ஏறியதை சந்தேகமா பார்த்ததை நானும் ரியர் வியூ கண்ணாடி வழியா பார்த்தேன்.
நான் ஏழை அப்படின்னு உன்கிட்ட நடிக்கவோ, சொல்லவோ இல்லை. நான் உன்னை லவ் பண்றேன். அதுக்காக தான், இந்த ட்ரிப் வந்தேன். நான் இப்பவரை எந்த பொய்யும் சொல்லலை. இனிமேலும் பொய் சொல்ற ஐடியா இல்லை.உன்னை ஏமாத்த நான் நினைக்கலை. நீ ஏன் என்னை சந்தேகப்படுற? நான் உன்னை லவ் பண்றேன், அதை நான் வந்த நாளிலிருந்து உனக்கு உணர்த்திக்கிட்டு தான் இருக்கேன். இப்பவும் நான் முன்னாடியே வந்துட்டேன். ஆனா உன்கிட்ட தனியா பேசுற வாய்ப்புக்காக தான் வர லேட்டாகும்னு சொன்னேன்.” என்றான்.
பெருமூச்சு விட்டு தன்னை அமைதி ஆக்கினாள்.
“எனக்கு லவ் மேல நம்பிக்கையே இல்லை அஸ்வின். என்னை விட்டுடுங்க ப்ளீஸ்.”
“வெளி உலகம்னா என்னனு தெரியாமல் இருந்தப்ப நீ ராஜேஷை விரும்பினதுக்கு பேரு காதலா அனன்யா?
இப்போ ஒருவேளை அவனுக்கு கல்யாணம் நடக்காம இருந்திருந்தாக்கூட, நீயே கொஞ்ச நாள்ல அவனோட டாக்ஸிக் பிஹேவியர் தாங்கமுடியாம அவனை வேண்டாம்னு பிரேக் அப் செய்திருப்ப.”
அவன் சொல்வது உண்மை தான் என்பதால் அமைதியானாள் அனன்யா.
“நீயே கொஞ்சம் யோசித்து பாரு. அவனை நீ எப்படி லவ் பண்ண என்று?”
'அனன்யாவும் அன்றைய நாளுக்கே சென்றாள்,
இரண்டு, மூன்று முறை அவளுக்கு வேலையில் உதவி செய்தான் ராஜேஷ். பார்க்கவும் அழகாக தான் இருந்தான். ஆஃபிஸ்ல அவனுக்கு பெண் ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். எப்போதும் அவன் ஹீரோ போல் தான் வலம் வந்துக் கொண்டிருந்தான். அவன் பேசும் பெண்களையே ஆஃபிஸில் செலிபிரிட்டி போல் பார்த்தனர்.
அப்படி இருக்க ஒரு நாள் ஆஃபீஸ் ட்ரிப்பில் எல்லோர் முன்பாகவும், “அனன்யா… ஐ லவ் யூ.” என்று ரோஜாவை அவளிடம் நீட்டினான் ராஜேஷ்.
அவளை யோசிக்கக்கூட யாரும் விடவில்லை. கைத்தட்டி எஸ் சொல்ல சொல்லி வற்புறுத்தினர்.
அவளும் ரோஜாவை வாங்கிக் கொண்டு, “எஸ்” என்றாள்.
இன்று அதுபோல் சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக , அவள் மனம் என்ன சொல்லுது என்று யோசித்திருப்பாள்.
ஆனால், அன்று அவள் மனது என்ன நினைக்கிறது என்று உணராமல், மற்றவர்கள் உருவாக்கிய மாய வலையில் விழுந்து காதலிப்பதாக உடனே சொன்னாள்.’
பழைய நினைவில் இருந்து வெளிவந்தவள்.
‘அப்போ நான் அவனை காதலிக்கவே இல்லையா. சும்மா டைம் பாஸ்க்கு சாட் செய்து, அடிக்கடி ஃபோன் பேசி, சாப்பிட்டியா, உடம்பு எப்படி இருக்கு என்று கேர் செய்யும், சோசியல் மீடியா ஃப்ரண்ட் அடிக்சன் போல் தான் அவனோடு இருந்தேனா?
அவன் திடீர்னு என்னோடு ஏன் பேசலை என்று அந்த அடிக்சனிலிருந்து வெளிவர முடியாமல் தான் நான் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்தேனா? அப்ப நான் அவனை ஒரு நாள் கூட மனதார நேசிக்கவில்லையா?’ என்று யோசித்தாள் அனன்யா.
“என்ன இப்போவாவது லவ் எது? மத்தவங்க மேனிப்ளேட் பண்ணி வந்த ஈர்ப்பு எதுன்னு உனக்கு புரியுதா?”
“எஸ். லவ்வுன்னா என்னன்னு இப்ப புரியுது நான் எப்பவுமே அவனை லவ் பண்ணலை போல. ஏதோ ஒரு அட்ராக்ஷனை காதல்னு நினைச்சிட்டேன்.
அதே மாதிரி எனக்கு உன்மேலயும் எந்த உணர்வும் வரலை. வந்தா நானே சொல்றேன்.” என்றாள் அனன்யா.
“டேக் யுவர் ஓன் டைம் அனன்யா.” எனறான் அஸ்வின்.
அதன் பின் அந்த கார் பணம் அமைதியாக சென்றது. அனன்யாவிடம் வழி கேட்காமல், அவனே சரியான இடத்திற்கு வர.
அவனை கோபமாக பார்த்தாள் அனன்யா.
தலையின் பின் பக்க முடியை கோதியவன், “நான் தான் சொன்னேனே. உன் கிட்ட தனியா பேச தான் அப்படி பொய் சொன்னேன்னு.” என்றான்.
வேன் நின்ற ஐந்து நிமிடத்திலே, அனன்யா அவர்கள் அருகில் வந்தாள்.
“உங்க ட்ராலிகளை எடுத்துக்கோங்க. இரண்டு மூன்று நாட்களுக்கு தேவைப்படாத பேக்குகளை வேணும்னா வேனிலே வைத்துவிடுங்கள். ஆனா நாம இரண்டு நாளைக்கு வேனுக்கு போகமாட்டோம்.” என்றாள்.
அவள் ஏற்கனவே வாட்ஸ்அப்பில் போட்டில் தங்கபோற நாட்களுக்கு தேவையான துணிகளையும், பொருட்களையும் தனி ட்ராலியில் வைக்க சொல்லியிருந்தாள். அவள் சொல்லியது போலேவே தேவையானதை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டனர்.
வேன் டிரைவரிடம், “அண்ணா… நீங்க முன்றோ ஐலன்ட்(Munroe island) பக்கமா வேனை பார்க் பண்ணிட்டு வைட் பண்ணுங்க. நாங்க இரண்டு இல்லை மூன்று நாட்கள்ல அங்க வருவோம். எப்போ வருவோம்னு அப்புறமா கால் பண்ணி சொல்றேன்.” என்றாள். அவரும் சென்றுவிட்டார்.
அனைவரும் அஷ்தமுடி லேக்கிற்கு (Ashtamudi Lake) தான் வந்திருந்தனர். மணி ஒன்பதை நெருங்க. காலை உணவை பக்கத்தில் இருந்த உணவகத்தில் முடித்துக் கொண்டு. அனன்யா புக் செய்த ராயல் போட்டிங் சர்வீஸ்யின் போட் அருகே இவர்கள் வர. போட்டும் தயராக இருந்தது.
இவர்கள் ஏறியதும் கரையோரம் கட்டப்பட்ட போட்டின் கயிறை அவிழ்த்தனர். போட் கிளம்பியது.
“இங்கு நிறைய கெ.எஸ்.ஆர்.டி.சி போட் அதாவது கவர்மெண்ட் போட் இருக்கும். நாம எப்படி பஸ்ல போவோமோ அதே மாதிரி கேரளால மக்கள் நிறைய இடத்துக்கு போட்டில் தான் போவாங்க. அதோ அது பாருங்க பஸ் ஸ்டாப் மாதிரி போட் ஸ்டாப். சரி வாங்க எல்லோரும் உங்களுக்கான ரூமை காட்டுறேன்.”
“கீழே இரண்டு ரூம், மேலே இரண்டு ரூம் இருக்கு. ஜோடியாக வந்திருக்கிற ஜெய், ராஜேஷ் கீழ இருக்க ரூம்ல இருந்துக்கோங்க. மேலே கேர்ள்ஸ் எல்லாருக்கும் ஒரு ரூம், பாய்ஸ்க்கு ஒரு ரூம்” என்றாள் அனன்யா.
“போய் பேக் எல்லாம் ரூம்ல வைச்சிட்டு, ரெஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க. வெல்கம் டிரிங்க் கொடுப்பாங்க.” என்றாள்.
எல்லோரும் வந்து படகு ஹாலில் உட்கார்ந்து தங்களுக்கான இளநீர் சர்பத்தை ரசித்து குடித்தனர்.
“சரி வாங்க நாம போட்டை சுற்றி பார்த்துட்டு வரலாம். இப்போ நாம இருக்குறது பெரிய ஹால். அடுத்தது இரண்டு பேட் ரூம். அப்புறம் கிச்சன்.
மாடி ஏறி போனா இரண்டு பெட் ரூம். பெரிய ரெஸ்ட் ஏரியா, அப்புறம் லேக்க நின்னுட்டே பார்க்க பால்கனி” என்றாள்
“இங்கு ரொம்ப சூப்பரா வேடிக்கை பார்க்கலாம்.” என்றான் ஹரிஷ்.
“அம்மா… அங்க பாருங்க மீன் பிடிக்குறாங்க.” என்றாள் தியா.
“ஆமா குட்டி” என்றார் கனி.
“அம்மா… அங்க பாருங்க தென்னை மரங்கள்.” என்றான் தேவ்.
“ஆமாடா செல்லம்… கேரளாவை காட்ஸ் ஓன் கண்ட்ரின்னு சொல்லுவாங்க. இங்கு எங்க பார்த்தாலும் இயற்கையின் அழகு கொட்டி கிடக்கும். பச்சை பசேல்னு நிறைய மரங்கள், நீர் நிலைகள்னு நிறைய இருக்கும்.” என்றார் கனி.
“நீங்க போய் ரெஸ்ட் எடுக்குறதுனா எடுங்க. ரூமிலே இந்த லேக் அழகை ரசிக்கலாம்.
இல்லைனா இங்கே இருங்க, கீழே ஹால்ல இருங்க. நாளைக்கு மார்னிங் நாம முன்றோ ஐலன்ட் போகுற வரைக்கும் இது நம்ம போட். சோ என்ஜாய் காய்ஸ்” என்றாள் அனன்யா.
“பியூட்டி… இங்க டான்ஸ் ஆடலாமா?”
“கண்டிப்பா… அதுக்கு தான் இவ்வளவு பெரிய இடமே விட்டு வைத்திருக்கார்கள்.”
“டேய் மச்சி ப்ளூடூத் ஸ்பீக்கர் எடுத்துட்டு வா டா.” என்றான் ஹரிஷ் தீபக்கை பார்த்து.
அவனும் வேகமாக சென்று அவனது ஸ்பீக்கரை எடுத்து வந்து ஃபோனோடு இணைத்தான். பின் என்ன சொல்லவும் வேண்டுமா, கல்லூரி மாணவர்கள் என்று ஆட்டம் போட்டு நிருபித்தனர்.
ரோஜா, ராஜேஷ் மட்டும் அறைக்கு சென்றிருக்க. மற்றவர்களை டான்ஸ் ஆட வைத்தே ஓய்ந்தான் ஹரிஷ்.
மதிய உணவு ரெடி என்று வந்து சொல்ல, அனைவரும் கீழே டைனிங் டேபிள் சென்று உட்கார்ந்தனர்.
நடப்பது, பறப்பது, நீந்துவது எல்லாவற்றை அடிக்கி வைத்திருந்தனர். அங்கு பேமஸாக கிடைக்கும் கனவாய் மீன் இருந்தது.
“என்னென்ன ஐட்டங்களோ?” என்று பாடிக் கொண்டே தட்டை நிரப்பினான் ஹரிஷ்.
அசைவ விருந்தை எல்லோருமே விரும்பி சாப்பிட்டனர். அதன் பின் சிலர் தூங்க சென்றுவிட, சிலர் லேக்கை பார்த்துக் கொண்டு கதை பேசினர்.
மாலை நான்கு மணி போல் சாம்பிராணிகோடி ஐலன்ட் (Sambranikodi Island) வந்தனர்.
எல்லோரையும் கீழே வர சொன்ன அனன்யா. “ப்ரெண்ட்ஸ் இது தான் சாம்பிராணிகோடி ஐலன்ட். இங்க தண்ணீரில் ஷாப்பிங் செய்ய, சாப்பிடன்னு நிறைய கடைங்க இருக்கும். உங்களுக்கு பிடித்ததை தண்ணீரில் விளையாடிட்டு வாங்கி சாப்பிடுங்க.
மரம் இருக்கும், அதுல ஏறி ஃபோட்டோஸ் எடுப்பதுதான் வழக்கம். நீங்களும் எடுத்துக்கோங்க. அப்படியே சன் செட்டை ரசிங்க. எல்லோரும் கொஞ்சம் கவனமா நடங்க, தண்ணீருக்கு அடியில் கட்டையா இருக்கும். ஆழமா இருக்காது. கனி அக்கா குழந்தைகளை கவனமா பார்த்துக்கோங்க.” என்றாள்.
ஒவ்வொரு வராக கீழே இறங்கினர். மாங்க, பைனாப்பிள், ஜூஸ், டீ, காபி என்று சாப்பிட ஆரம்பித்தனர்.
மரத்தில் உள்ள ஒவ்வொரு கிளைகளிலும் ஹரிஷ், தீபக், ஈஸ்வர், சுவாதி, ரோஷிணி ஏறி நின்றுக் கொண்டனர்.
“பியூட்டி… எங்களை ஒரு ஃபோட்டோ எடு” என்று ஹரிஷ் சத்தமாக அழைத்தான்.
அவர்கள் அருகில் வேகமாக சென்ற அனன்யாவின் கால் நன்றாக ஒரு மரத்தின் வேரில் இடித்துக் கொண்டது. அவள் வலி தாங்கமுடியாமல், “அம்மா…” என்றாள்.
அவள் அருகில் நின்றிருந்த அஸ்வினுக்கு கேட்க, அவள் அருகில் சென்று பார்த்தான். அவள் காலில் ரத்தம் வர ஆரம்பித்தது.
“அனன்யா… வா போட்டுக்கு போகலாம்.”
“ஒன்னும் பிரச்சினை இல்லை.” என்றவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.
“பியூட்டி… என்ன பண்ணுது” என்று அவன் கேட்கும் போதே.
அனன்யாவை அசால்டாக தூக்கிய அஸ்வின், “இவளுக்கு கால்ல அடி பட்டிருக்கு, நான் போட்டுக்கு கூட்டிட்டு போறேன். ஜெய் அண்ணாவ உங்களை ஃபோட்டோ எடுக்க கூப்பிடுங்க.”
கவனமாக நடக்க ஆரம்பித்தான் அஸ்வின்.
“என்னை கீழே விடு அஸ்வின். நானே நடந்து வரேன்.” என்றாள் அனன்யா.
“நான் இப்போ செய்றது உதவி தான் புரியுதா? யாரா இருந்தாலும் இப்படி தான் செய்வேன்.” என்றான்.
போட்டில் அவளை பொறுமையாக நிற்க வைத்துவிட்டு, அவனும் ஏறினான்.
அவளை சோபாவில் உட்கார வைத்தவன். போட்டில் இருந்தவர்களிடம் ஃபர்ஸ்ட் எய்ட் கிட்டை கேட்டு வாங்கிட்டு வந்தான். கீழே உட்கார்ந்து அவளின் காயங்களை சுத்தம் செய்தான்.
“இது மாதிரிதான் எல்லோருக்கும் செய்வீங்களா?”
“போட்டில் இறக்கி விட்டு, ஃபர்ஸ்ட் எய்ட் கிட்டை கையில் தருவதோடு நிறுத்திக் கொள்வேன். நீ என்னோடு காதலி அதான் இப்படி கீழே உட்கார்ந்து, உன்னோட காயத்தை சுத்தம் செய்றேன். இதுக்காக நீ என்னை லவ் பண்ணும்னு எந்த அவசியமும் இல்லை. நீ லவ் பண்ணாலும் பண்ணலைனாலும், நான் உன் கிட்ட இப்படி தான் நடந்துப்பேன்.” என்றவன் அவளை பார்க்க. அவளும் இவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“காதல் என்பது உணர்வு சம்மந்தப்பட்டது. அந்த உணர்வு ஒருத்தர் மேல் இயல்பா வரும். அந்த உணர்வு உனக்கு எப்ப வருமோ? அப்ப உனக்கு புரியும், நான் உன்னை இம்ப்ரஸ் பண்ணறதுக்காக இப்படி செய்யலை.. இது என்னோட அன்பின் வெளிப்பாடு மட்டும் தான்.”
“பியூட்டி என்ன ஆச்சு?” என்ற ஹரிஷின் குரல் கேட்க, வேகமாக அஸ்வின் மடியில் இருந்த அவள் காலை எடுக்க முயன்றாள்.
அவனோ எதை பற்றியும் கவலை படாமல். அவள் காலை விடாமல், தான் செய்துக் கொண்டிருந்த வேலையை தொடர்ந்தான்.
“ஒன்னும் இல்லை ஹரிஷ். மரத்தோடு வேரில் இடிச்சிக்கிட்டேன். நீங்க போய் விளையாடிட்டு வாங்க, ஒன்னும் அவசரம் இல்லை.” என்றாள் அனன்யா.
அஸ்வின் அவன் வேலையை முடித்த பின்பே அவளின் காலை விட்டான்.
“இல்லை நானும் உன்னோடவே இருக்கேன்.” என்றான் ஹரிஷ்.
“அவளை கூட்டிட்டு போய் ரூம்ல விட்டுட்டு வா ஹரிஷ்.” என்றான் அஸ்வின்.
“நான் இங்கேயே இருக்கேன்.” என்றாள் அனன்யா. மூன்று பேருமே சோபாவில் உட்கார்ந்தனர்.