• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நான் அறிய நீ - 08

நிதனிபிரபு

Administrator
Staff member
நான் அறிய நீ - 08

நேரம் ஐந்தை தொடுகிறது.

உத்தியோகத்தர்கள் அநேகம் பேர் கடமை முடித்து கிளம்பி இருக்க, தினமும் ஒன்பதுக்கு பிங்கர் வைக்கும் ரமணி, அவரைப் போல தாமதமாக வந்து நேரத்தை கவர் செய்ய காத்திருக்கும் இன்னும் சிலருடன் சிற்றூழியர்களே நிர்வாகக் கிளையில் எஞ்சி இருக்க, ஓய்வறை பயன்படுத்தி வந்த ரமணி பிரார்த்தனா நிற்பதை கண்டு, இந்த பிள்ள போகல்லயா இன்னும் என நேரம் பார்த்தார்.

"தனா?"

பிரார்த்தனா கையில் கடதாசியும் பையுமாக திரும்ப,

"நேரம் நாலே முக்கால்.. போகலயா நீங்க.. ஸ்டாப் பஸ் போயிருக்குமே.. என்ன இது?"

கையில் உள்ளதை அவரிடம் கொடுத்தாள்.

"என்ன பேக்.. சாரியா.. யாருக்கு.. பேப்பர்ல என்ன.. லெட்டரா?" என புருவம் சுருங்க,

காகிதத்தை பிரித்துப் படித்தவர் கண்கள் பளபளத்தன. தினம் மஞ்சள் பூசி, ஒன்றுக்கு மூன்று குங்கும திலகம் இடும் ரமணியின் மஹாலட்சுமி வதனம் இந்த சாயங்கால பொழுதிலும் அழகை சொட்ட, தேஜஸ் முகம் ஜொலிப்பதை பிரார்த்தனா கண்டாள்.

"யாரு?" கண்களில் ஆர்வம் கொப்பளிக்க,

"வரோதயன்.."

"அவர் எங்க?"

"வச்சிட்டு போயிருக்கார், எடுக்கச் சொல்லி"

ரமணி வேகமாக கண் சுழற்றினார். எஞ்சியுள்ளவர்கள் கருத்தில் உறுத்தாது சம்பவத்தை கையாள வேண்டி, "சரி, ஒண்டும் காட்டிக் கொள்ளாதிங்க. சத்தம் இல்லாம வாங்க.." என முன்னால் நடக்க,

புடவை, கடித்தத்தை எடுப்பதா விட்டுப் போவதா என்று போராட்டம் பிரார்த்தனாவுக்கு.

"வாங்க தனா"

"இது.."

"என்ன கேள்வி? எடுத்து வாங்க பிள்ள.."

பிரார்த்தனாவின் தடுமாற்றம் கண்டு அவளை எதிர்பாராமல் அவரே பையை எடுத்து கொண்டு தனது மேசைக்கு வந்தார்.

கடிகாரத்தின் பெரிய முள் 4.40 இற்கும் 4.45 ற்கும் நடுவில் துடிக்க,

"நான் இண்டைக்கு 8.57 க்கு வந்தன்.. 27 நிமிஷம் கவர் பண்ணணும். 4.37 க்கு வைக்கலாம் தானே சைன்?" கை விரல் அடையாளம் வைத்து, வரவுப் பதிவேட்டில் ஒப்பமும் வைத்தவர் கைப்பை வண்டிச் சாவியுடன் பிரார்த்தனாவுக்கான வரோதயனின் பரிசுப் பொதியையும் எடுத்துக் கொள்ள, பை குடை என தனது உடைமைகளை காவிக் கொண்டு புறப்பட தயாராகவே இருந்த பிரார்த்தனாவும் விரல் வைத்து சைன் வைத்தாள்.

"என்ன பிரார்த்தனா.. பஸ்ல போகல்லயா?" சிற்றூழியர் பாலசிங்கம் கேட்டார்.

"இல்ல.."

"ஏன் இண்டைக்கு ஷோட் லீவ்ல தானே பிள்ள வந்திங்க.. கவர் பண்ணவும் தேவை இல்லயே"

"நாங்க கடைக்கு போக போறம் பாலசிங்கம்.."

"அப்ப நீங்க பைக்ல கூட்டி போக போறிங்களா ரமணி தங்கச்ச.. சரி சரி.."

பிரார்த்தனாவின் தந்தை வயதுடைய பாலசிங்கம், பெண்கள் இருவருடனும் அன்பை பரிமாறுபவர். பிரார்த்தனா மீது தனி பரிவு புலப்படும் அவர் செயல்களில்.

அவரிடம் சொல்லி விட்டு படி இறங்கினர்.

"சிங்கத்துக்கு தெரிஞ்சா பரவாயில்ல. அவர் புரிஞ்சு கொள்வார். அவருக்கு விளக்கம் சொல்ற நேரம் மற்ற மற்ற காதுகளுக்கும் கேட்டு கதையே திரிஞ்சி போகும் தனா. ஏன் வம்பு.." ரமணி குசுகுசுக்க,

"நீங்க என்ன செய்றிங்க ரமணி அக்கா, ஏன் இத எடுத்துட்டு வாறிங்க?" திருகோணமலை வெப்பத்தில் மூக்கு நுனி, கன்னக் கதுப்பில் எண்ணெய் பளபளக்க, குழப்பமும் அப்பி சோபை இழந்திருந்த பிரார்த்தனா ஆதங்கமாக கேட்டாள்.

"நான் நேற்று உங்களுக்கு தந்த கிஃப்ட் எங்க?"

"அது இருக்கு.."

"வீட்ட எடுத்து போனிங்களா?"

"ஓம்"

"அப்ப இத மட்டும் கொண்டு போக என்ன யோசனை?"

"ரமணி?"

இருபது வருடங்களுக்கு மூத்தவரான லோகேஷ்ரமணியை உரிமையாக பெயர் கூறி அழைப்பது இது போன்ற உண்ரவுக் குவியலான தருணங்களில் தான்.

"நீங்களும் அவரும் ஒண்டா ரமணி அக்கா.. எனக்கு பிறந்த நாளுக்கு கிஃப்ட் வாங்கித் தர அவர் யாரு? சாரி வாங்கித் தர அவருக்கு என்ன உரிமை இருக்கு? எவ்வளவு நாள் தெரியும் என்ன அவருக்கு? ஓவரா இடம் எடுக்கிறார். என்ர கஷ்ட நேரத்தில ஹெல்ப் பண்ணினாரு. அதுக்காக கொஞ்சம் இடம் குடுத்தா அட்வான்டேஜ் எடுக்கிறார்.."

இருவரும் திணைக்கள வாகன நிறுத்தம் வந்திருக்க, தனது இருசக்கர வண்டியில் சாவியை செலுத்திய ரமணி "ஹெல்மெட் வேணுமே உங்களுக்கு!" என அவரே போய் பணிமனையின் காவலாளிகளிடம் அவசரத்துக்கு உள்ள மாற்று தலைக்கவசம் வாங்கி வந்து அவளுக்கு அணியக் கொடுத்து வண்டியை முடுக்கினார்.

வீதிக்கு வந்ததும் மிதமான வேகத்தில் ஸ்கூட்டியை செலுத்தி "கண்டத கதைக்காதிங்க பிள்ள. முதல் நாள் அந்த பெடியன்ர ரவுசர் கிழிஞ்சு இருக்கு எண்டா, பாத்துட்டு எனக்கென்ன எண்டு போகாம அவர்ட மானம் போக கூடாது எண்டு நீங்க மட்டும் அவர அலர்ட் பண்ணலாம். உங்களுக்கு ஒரு அவசரம் எண்டத உணர்ந்து நீங்க கேட்காமலே வலிய வந்து அம்மாவ ஹொஸ்பிடல் கூட்டி போக அந்த பெடியன் உதவி செய்யலாம்.."

"இதெல்லாம் ரெண்டு பேரும் அறிஞ்சி தெரிஞ்சி பழகின பிறகா ஒருவருக்கொருவர் செஞ்சிங்க? உங்களுக்கு பிறந்த நாள் எண்டு அறிஞ்சி ஒரு கிஃப்ட வாங்கி வச்சிருக்கு பெடியன். வயசு வித்தியாசம் இல்லாம அளவு தெரியாம பொம்பிளைகளுக்கு எடுத்து குடுக்க கூடிய ஒரே உடுப்பு சாரி (saree) தான்"

"அதான் சாரி வாங்கி வச்சிருக்கு. அதையும் எவ்வளவு நாசூக்கா உங்க ரெண்டு பேருட பேரும் சேர்ந்து கெடக் கூடாது எண்டு எல்லாருக்கு முன்னுக்கும் தராம டெக்னிக்கா வச்சிட்டு போயிருக்கு.."

"ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஷிப் தனா இது. வேணும் எண்டால் அந்த பெடியன்ர பிறந்த நாள் எப்ப எண்டு கேட்டு, நீங்களும் ஒரு ஷேட்டும் ரவுசரும் வாங்கி குடுங்க. கணக்கு முடியுது. இதுக்கு போய் ஏன் இவ்வளவுக்கு யோசிக்கிறிங்க?"

திருகோணமலை மாநகராட்சி சாலையில் கடற்காற்று மோத மோட்டார் சைக்கிளில் ரமணி பின்னால் அமர்ந்திருந்த பெண்ணின் மனதில் மலை போல அழுத்தும் பதட்டத்தை பேசிப் பேசி தூசு போல தட்டி ஊதி வந்தார் ரமணி.

'இது வெறும் நட்பென்றால் அவன் வைத்த பரிசை ஏன் சத்தம் இல்லாமல் பிறர் அறியக்கூடாது என்று கமுக்கமாக மறைத்து அழைத்து வந்தீர்கள்?' என்று கேட்டு இருக்கலாம் தனா. ரமணி கூறிய சமாதானத்தை அவள் மனம் ஏற்றுக் கொள்ள விரும்பியது தான் நிஜம்.

"என்ன இந்த ஜங்ஷன்ல விட்டுட்டு நீங்க போங்க அக்கா. உங்களுக்கு நேரம் போகுது.."

அவள் பேச்சை பொருட்படுத்தாமல் வீடு வரை வந்து விட்டவர், வரோதயனின் பரிசுப் பொதியை அவள் கையில் கொடுத்து "சும்மா சொல்லக் கூடாது, பெடியனுக்கு நல்ல டேஸ்ட். எனக்கு பிடிச்ச கோல்டன் மஞ்சள் கலர்ல வாங்கி இருக்கார் சாரி" வரோதயனின் ரசனையை பாராட்ட,

"அக்கா, அப்ப நீங்களே.."

"என்ன தியாகமா.. தள்ளி விடப் பாக்குறிங்களோ.. மதிப்பு விளங்குதில்ல பிள்ளைக்கு.." என்று கவைப்பட்டு வண்டியை திருப்ப, சேலையின் பண மதிப்பைப் பற்றிக் கூறவில்லை ரமணி என்று பிரார்த்தனாவுக்கும் புரியாமல் இல்லை.

வாங்க டீ குடிச்சிட்டு போங்க என்ற போலியான சம்பிரதாய வார்த்தைகள் பேசாமல் தன்னால் ஏற்கனவே தாமதமானதை நினைத்து ரமணியை போக விட்டவள் உள்ளே வந்தாள்.

ராஜேஷ்வரியின் வருகை அடையாளங்கள் வீட்டில் தெரிய, அறை வந்து கதவை பூட்டி அலுமாரி திறந்து வரோதயனின் பையை உடைகளுக்கு நடுவில் பதுக்கியவள், கடிதத்தை மாத்திரம் பிரித்து நான்கு வார்த்தையை மறுபடியும் படித்துப் பார்த்து விட்டு மடித்து வைத்தாள்.

திருட்டுத் தனம் செய்ததை போல ஒரு நடுக்கம் மனதில்.

உடை மாற்றி முகம் கழுவி தேநீர் ஊற்றி எடுத்துப் போனாள்.

படுத்திருந்த தாயிடம் பேசப் பிடிக்கவில்லை. குவளையை கட்டிலில் வைக்க,

"வேலைக்கு போய் வந்திட்டியா பிள்ளை? போனா போறாள் எண்டு அப்டியே விட்டுட்டு இருந்திட்டிங்க என.. போனாளே என்ன செய்தாள் திண்டாளா குடிச்சாளா.. நினைச்சிங்களா?" கேட்டார்.

"நீ நினைச்சியா?" மகள் கேட்டாள்.

"என்னைப்பற்றி நீ நினைச்சியா? உன்ர தங்கச்சி எனக்கு செஞ்ச அநியாயத்த நினைச்சிருந்தா அங்க போயிருப்பியா?" ஒருமைக்குத் தாவி உதறி விட்டதும் குற்றம் புரிந்தவர் வாயை பொத்தினார்.

"விரும்பியா போனன்.. இந்த கொல காரனுக்கு பயந்து போனன்"

"உனக்கு உன்ர புருஷன பழி வாங்கணும். அதுக்காக வெளிக்கிட்டு பொயிட்டாய்.. பொழுதுக்கும் உன்ன பார்த்து பார்த்து கவனிக்கிற நான் தான் இங்க முழு முட்டாள்"

ராஜேஸ்வரி முகத்தை தொங்கப் போட்டதும் தணிந்தவள் "தேத்தண்ணியக் குடியுங்க" என்று ஒதுங்கி தனக்கும் ஊற்றி வந்து அமர்ந்தாள்.

நோயாளியை வார்த்தையால் குத்தினால் ரத்தத்தில் அழுத்தம் அதிகரித்து சர்க்கரை அளவு கூடி உபாதையை இழுத்து வைப்பார். யாருக்கு பாடு.. அவளுக்கு தானே!

மிடறு மிடறாக சுடு பானத்தை இறக்க, அலைபேசியின் மெசேஜ் ஒலி கேட்டதும் மெல்லிய நடுக்கம் மனதில்.

'எப்டி இருக்கு என்ர கிஃப்ட் பாத்திங்களா.. பிடிச்சிருக்கா?' என்று வரோதயன் கேட்டிருப்பானோ.

அப்படிக் கேட்டால் என்ன பதில் சொல்வது என்று யோசித்தாள்.

வரோதயனின் கடைசி பார்வை சில நிமிடங்களுக்கு முன்பு காட்ட, வந்திருந்தது வேறு குழு மெசேஜ்.

இரவு உணவிற்கு ரொட்டி சுட்டு உருளைக்கிழங்கு மசாலா செய்தாள்.

"நிலானி இப்பயும் லேட்டா தான் வாராளா?" ராஜேஸ்வரி கேட்டார்.

"காலம் கெட்டுக் கிடக்கு. அங்க அங்க குடுவும் கஞ்சாவும் அடிச்சிட்டு வம்பு செய்து திரியிறானுகளாம் உதவாதவனுகள்.." அரட்டிக் கொண்டே இருந்தார்.

சத்தம் கேட்டு மழையா என சந்தேகமாக பார்க்க தூரல் விழ ஆரம்பித்திருந்தது.

திடீர் மழை!

துவைத்துப் போட்ட உடைகளை எடுக்கப் போனாள். கொல்லைப் புறக் கொடியில் கிடக்கும் துணியை எடுக்கும் போது பணிவான (உயரம் குறைந்த) பின் மதிலுக்கு அந்தப் பக்கம் பேச்சு குரல் கிசுகிசுப்பாக கேட்டது.

ஆள் நடமாட்டம் அற்ற அந்த குறுகல் ஒழுங்கையில் இந்த நேரத்தில் நிலானியின் குரல் எப்படி கேட்கும்?

துணியை தோளில் போட்டு கல்லில் ஏறி எட்டிப் பார்த்தாள்.

வீதி விளக்கில்லா இருட்டில் பைக் நின்றது. அந்த பைக் நிழலில் தன்னை தழுவி இருந்தவன் கைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தாள் நிலானி.

தடுமாறி இறங்கி வீட்டிற்குள் வந்தவள் கிட்டத்தட்ட நனைந்து விட்டாள். மேனியில் நடுக்கம் எடுத்தது.

மழையில் நனைந்து உண்டான குளிர் நடுக்கமாயின் அடங்கும். இது அதுவல்ல.

நிமிடங்கள் கழித்து வீட்டினுள் நுழைந்த நிலானி தொப்பலாக நனைந்திருக்க, தோள் பையை கழற்றி வைத்து பாத்ரூம் சென்றாள்.

வராண்டா சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொட்டும் மழையை வெறித்தாள் பிரார்த்தனா.

சற்று பொறுத்து முதுகுப்புறம் அரவம் உணர்ந்தும் அசையவில்லை அவள்.

"அக்கா.."

இவள் பேசவில்லை. சூடான மூச்சை வெளியேற்றி, உணர்ச்சியை அடக்கிக் கொண்டிருந்தாள்.

"அக்கா, நீ பார்த்தத அம்மாட்ட சொல்லாத.." குரல் இறங்கி குழைந்தது.

"அவ்வளவு பயமா அம்மாவுல?"

"பயம் இல்ல. ஊர் உலகத்தில நடக்காதது நடந்த மாதிரி கத்திட்டே இருக்கும்.. சொல்லாத ப்ளீஸ்"

"நீ செய்றது சரி எண்டு தோணுதா உனக்கு?"

"லவ்வர்ஸூக்குள்ள இதெல்லாம் நோர்மல். உனக்கு சொன்னா விளங்காது.."

உணர்ச்சி வேகத்தில் நெஞ்சு ஏறி இறங்கியது பிரார்த்தனாவுக்கு.

"எனக்கு விளங்காது தான். உங்கள பத்தி யோசிச்சு என்ர லைஃப துலைச்சிட்டு நிக்கிறன். இந்த மக்குக்கு நீங்க சுயநலமா யோசிச்சு செய்றதுகள் விளங்காது தான்.."

"இப்ப நான் என்ன சொன்னாலும் உனக்கு தப்பா தான் படும் அக்கா. ப்ளீஸ், காட்டிக் குடுத்துராத. மெதுவா கதை. அம்மாக்கு பாம்பு காது. விபரீதமா கற்பனை பண்ணி கத்தும். நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. என்ர லைஃப பத்தி உங்கள விட எனக்கு அக்கறை இருக்கு. நான் என்ன செய்றன் எண்டு எனக்கு வடிவா தெரியும். நீ பார்த்தத பத்தி மட்டும் அம்மாட்ட சொல்லாம இருந்தா போதும்.."

மழை வலுத்து நீர் தாரைகள் நர்த்தனம் ஆடின கூரையில். சாரல் பட்டு தேகம் குளிர, மனம் மட்டும் பற்றி எரிந்தது.

"உன்ர வாழ்க்கையை பார்த்துட்டு நீ போ எண்டு அண்டைக்கு சொல்லிட்டியே.. நான் சொல்லமாட்டன்.."

அக்கா சொல்லமாட்டாள் என்ற நம்பிக்கையில் தங்கை சென்று விட்டாள்.

அக்கா தான் மழை நின்ற பிறகும் குளிரில் அமர்ந்திருந்தாள்.

நாளைக்கும் அலுவலகம் உண்டு. தொழில் உண்டு. வேலை உண்டு. இன்றுள்ளதை முடித்து உறங்கினால் தான் விடியவும் எழுந்து ஓட முடியும்.

முடித்து படுக்கைக்கு வந்தவள் ஃபோன் தொடும் போது வரோதயனின் செய்திகள் காணக் கிடைத்தது புலனத்தில்.

08.05 க்கு 'ஹாய்' வந்திருந்தது.

09.11 க்கு 'நித்திரையா?' என்று கேட்டிருந்தான்.

தற்போது நேரம் 11.15. நெஞ்சில் சிக்கிச் சுழலும் கனத்தை கரைக்க அவனுடன் பேச வேண்டும் போல் இருந்தது.

"ஹாய்!" அனுப்பினாள்.

உடனே நீலத்தில் இரட்டை டிக் காட்டி, வரோதயன் டைப்பிங் என்றது.

"கோபிச்சிட்டிங்களோ எண்டு நினச்சன்.."

"ஏன்?"

"பர்த் டே கிஃப்ட் தந்தது பிடிக்காம.."

"இல்ல.."

"கோபிக்கல்லயோ?"

"இல்ல.."

"புடிச்சிருந்தா இந்நேரத்துக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லி இருப்பிங்க"

பிரார்த்தனா தயங்காமல் பேசினாள். "சாரி தேவை இல்லாத செலவு. விஷ் பண்ணினது மட்டும் போதும்"

"அப்ப கோபம் இல்ல?"

"இல்ல.."

"எழுதினத படிச்சிங்களா?"

"ஓம்! தாங்க்ஸ் ஃபோர் த விஷ்.
எனக்கு கிஃப்ட விட வாழ்த்து வரிகள் பிடிச்சிருந்திச்சு..சிம்பிளா தமிழ்ல விஷ் பண்ணி இருந்திங்க.. இப்ப யாரு தமிழ்ல வாழ்த்துறாங்க?"

"அது வேற மாதிரி எழுதிட்டு பிறகு திருத்தினன். அதான் பிடிச்சிருக்கும்.."

"திருத்தினதா.. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பிரார்த்தனா, இனி எல்லாம் இனிதாகட்டும். சிம்பிள் வேர்ட்ஸ். இதுல திருத்த என்ன இருக்கு?"

"முந்த நாள் நைட் 12 மணி வரை கதைச்சம். எனக்கு இண்டைக்கு பிறந்த நாள் எண்டு சொல்லி இருந்தா, இந்த வருஷம் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன முதல் ஆள் நானா இருந்து இருப்பன்.."

"பிறந்த நாள் எண்டே எனக்கு ஞாபகம் இல்ல. ஞாபகம் வச்சி கொண்டாடுற அளவுக்கு அது முக்கியமான நாளும் இல்ல. நீங்க என்ன திருத்தின?"

அவனிடம் இருந்து பதில் வரவில்லை.

"ஹெலோ!"

"ஓ.."

"என்ன திருத்தின?"

மறுபடியும் மௌனம்.

"வரோதயன்!"

"நான் அறிந்த, அறிந்து கொள்ள விரும்புகிற முதல் பெண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் எண்டு தான் ஆரம்பத்தில எழுதினன்!"

பிரார்த்தனா ஃபோன் திரையை பார்த்தபடி இருந்தாள்.
 
Top Bottom