• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நான் அறிய நீ - 11

நிதனிபிரபு

Administrator
Staff member
மேற்கு வானம் அடர் நீலத்தை அப்பிக் கொண்டிருந்தது. நெடுஞ்சாலை மின் விளக்கு பால்வெளிச்சம் வடிக்க ஆரம்பித்தது.


துறைமுக உள் வீதியில் விரசாக நடந்து வந்துகொண்டிருந்த பிரார்த்தனா, பிசுபிசுத்த கழுத்து வியர்வையை துடைத்து தெரு முனையில் ஆட்டோ தேடினாள்.


தன்னைக் கடந்த முட்சக்கர வண்டிக்கு கை போட்டு ஏறி இடம் கூறினாள்.


வீட்டு சந்தியில் இறங்கும் போது பல ஜோடி விழிகள் அவளைத் துளைக்க, நடந்து வரும் பெண்ணை விசாரிக்க தயாராக இருந்த தெருக்காரர்களை தவிர்க்க "கொஞ்சம் உள்ளுக்கு போய் நிப்பாட்டுங்க.." என்று வீட்டு கேட்டில் சென்று இறங்கினாள்.


கணக்கு பார்த்து ஐம்பதை கூட்டிக் கேட்டான் ஆட்டோக்காரன். கொடுத்து வயிறு எரிய அனுப்பி வைத்தாள்.


வாசல் கதவை திறந்து வைத்து பார்த்து இருந்த ராஜேஸ்வரி இவளைக் கண்டதும் காலை இழுத்து இழுத்து சமையல் கட்டிற்கு செல்ல, வந்தவள் மாற்றுத் துணியுடன் குளியலறை புகுந்தாள்.


கழுத்து முதுகெங்கிலும் வியர்வை கசிந்துருகியது. கதவை அடைத்து எண்ணெய் வழியும் தனது முகம் தனை கண்ணாடியில் பார்த்தாள்.


உடம்பொடு மனசும் புழுங்குகிறது.


வெப்ப மூச்சை இழுத்து விட்டு உடை களைந்து தண்ணி மொண்டு வார்த்தாள்.


36 பாகை செல்சியஸை மீறிக் கொதித்த மேனியின் சூட்டை தணித்து உடை அணிந்து கதவு திறக்கையில் ராஜேஸ்வரி கலந்து வைத்த தேநீர் கோப்பைக்கு காவல் இருந்தார்.


ஈரம் தோய்ந்த கழுத்தை துடைத்து "அவனோட தான் போயிருக்காள்.." என கோப்பையை எடுத்தாள்.


"அவன் தான் எவன் அவன்? அத தானே நான் கேக்குறன்.."


"யாரா இருந்தா என்ன.. ஓடினது ஒடினது தானே.. இவன் தான் வேணும் எண்டு பொயிட்டாள். ஒரு கவலையும் இல்லாம அவள்ட வழிய பாத்துட்டு பொயிட்டாள்.."


"என்ன பிள்ள கொஞ்சம் கூட கவலை இல்லாம கதைக்கிறாய்.. உனக்கும் இந்த வீட்டு ஆம்பிளைகளுக்கும் வித்தியாசம் இல்லாம பொயிட்டா?"


"மனசாட்சி இல்லையாம்மா உங்களுக்கு.. வீட்ட விட்டு ஓடிப் போனவளத் தேடி ரெண்டு நாளா சோறு தண்ணி இல்லாம நாய் மாதிரித் திரியிறன்.. மத்தியானம் சாப்பிட்டியா எண்டு ஒரு கதைக்காவது கேட்டிங்களா? என்ர அக்கறையில குறை கண்டு பிடிக்கிறிங்க.."


சுண்டிப் போனது தாயின் முகம்.


"நான் யார் எண்டு பாப்பன்.. அப்பன் தம்பி யாருக்கு பொறுப்பு இருக்கு.. இந்தக் கால வச்சிக் கொண்டு எங்க போய் தேடுவன்? இந்த மாதிரி செய்வாள் எண்டு கனவா கண்டன்.. எங்கயோ நல்லா இருக்காள் எண்டு அறிஞ்சா தானே மனம் ஆறும்.." ராஜேஸ்வரி சட்டென உடைந்தார். அழ ஆரம்பித்தார்.


இலகுவில் கண் கலங்கமாட்டார். வீரப் பெண்மணி. நா வண்மையும் மனவுறுதியும் வயசுப் பெண் காணாமல் போனதில் ஆட்டம் கண்டிருந்தது. வருத்தப்பட்ட உடம்பும் அடி மேல் அடி வாங்கிய மனமும் பலஹீனபட்டிருந்தது.


தாயின் கண்ணீர் துளி இதயத்தை சம்மட்டியால் அடிக்க, "நல்லா தான் இருப்பாள்.. சுகமா தான் இருப்பாள்.. அவளுக்கு என்ன.. நீங்க அழுது வருத்தத்த இழுத்து வச்சி என்ன கஷ்டப்படுத்தாதிங்க.. பிறகு தான் உங்களுக்கு பின்னாலையும் இழுபடணும்" என்றாள்.


ராஜேஸ்வரி சமையல் கட்டிற்கு நகர்ந்தார். பாத்திர அரவம் இரவுணவுக்கான ஏற்பாட்டில் அவர் இறங்குவதை உணர்த்தியது.


குளித்த ஈரம் துடைக்காமலே உலர்ந்திருக்க கைப் பை எடுத்து அமர்ந்தவள் வழியில் கைவளை அடகு வைத்து பெற்ற பணத்துடன் மீதமுள்ள சில்லறைகளையும் எண்ணி அடுக்கி பத்திரப்படுத்தினாள்.


தம்பி விமலன் வரும் வரை காத்திராமல் அழைத்து உடனே வா என்றாள்.


ஒன்பது மணிக்கு சாவகாசமாகவே வந்தவனிடம், "நாளைக்கு சிலாபத்துக்கு (*சிலாபம்* - Chilaw
🌴
இலங்கையின் வடமேல் மாகாணத்துல இருக்கிற ஒரு அழகான கரையோர நகரம்) பொயிட்டு வருவம்.. சாப்பிட்டு நேரத்துக்கு படுத்து எழும்பு.. விடிய சாமம் அஞ்சி மணிக்கு பஸ் இருக்கு" என்றாள்.


"என்னத்துக்கு?" கைலியை வாயில் கவ்வி கால்சராய் களைந்தவன் கேட்க,


தாயின் பாம்பு செவியில் விழுந்து விடாது குரலை இறக்கி "நிலானி அங்க தான் போயிருப்பாள் எண்டு சொல்றாங்க.."


"நீ அவள தேடப் போகப் போறியா.. லூசா உனக்கு?"


"மெதுவா கதை. நேர்ல ஒரு தடவை பாத்துட்டு வரணும்"


"உனக்கு பயித்தியமா எண்டு கேக்குறன்" விமலன் எகிறி எழ அவன் தோள் பற்றி தள்ளிப் போய் வாசலில் நிறுத்தினாள்.


"விடு!" என உதறியவன், "அவள் தான் அரிப்பெடுத்து ஓடிட்டாள். அவளத் தேடி நீ போகணுமா? இதுல என்னையும் கூப்பிடுறாய்"


"நீ என்னோட துணைக்கு வந்தா போதும். அவள பாத்துட்டு திரும்புற தான்.."

"அட்ரஸ் தெரியுமா? எங்க இருக்காளாம்? ஒண்டும் தெரியாம குத்து மதிப்பா போய் எங்க பார்க்க சொல்றாய். ஒரு நூறு ரூபா நான் கேட்டா இருக்காது உன்னிட்ட... இப்ப இதுக்கு செலவு செய்ய காசு இருக்கா.. கேக்குற நேரம் காச குடுத்து அவள படிப்பிச்சி.. இப்ப செருப்படி வாங்கிட்டு நிக்கிறாய்.. இதுல தேடி வேற போகணுமா?"
"எவ்வளவு நாளா கேக்குறன்... ஃப்ரெண்ட் கடை போட போறான்.. பார்ட்னரா சேருரன்..காசு வாங்கி தா எங்கையாவது எண்டு.."

பொறுமையாக

இமை மூடித் திறந்த பிரார்த்தனா, "உனக்கு காசு தரத் தான் இருக்கிறன் விமல். கண்டிப்பா செய்வன். லோன் போட்டு தாரன். எவ்வளவு வேணுமோ தாரன். நாளைக்கு என்னோட வா.."


"நிலானிய தேடி போக மட்டும் நினைச்ச நேரம் காசு இருக்கும் என?" வெட்டி நகர்ந்தவன் வாசல் படியில் ஒற்றை காலில் நின்று யோசித்து "இப்ப ஒரு பத்தாயிரம் தா.. பொயிட்டு வந்து மிச்சத்த ரெடி பண்ணு" என்றான்.


ஓம்! பேரம் பேசுகிறான்!


அடி வயிறு கொதிக்க, அவன் பனியனை பிடித்து உலுக்கி, கன்னம் கன்னமாக அறைந்து, முதுகில் நான்கு போட்டு, அடி வெளுக்கும் ஆத்திரம் கிளர்ந்தது.


"என்னடா வழியில நிக்கிற? தள்ளு" தள்ளாடியபடி வந்த வருணன் மகனை இடித்து கொண்டு நடந்தார்.


இருவரையும் புளு போல பார்த்து ரூம் வந்தவள் மனம் கொதித்தது.


எப்போதும் வெறுமை சூழ்ந்திருக்கும் மனதில் பயம் அழுத்துகிறது. ஒவ்வொரு வினாடியும் இக் கணம் இந்த அறையில் இருக்க வேண்டிய பெண் இப்போது எங்கே எங்கனம் நொடி நகர்த்துகிறாள் என்று பதறியது.


நல்லதாக யோசிக்க வராமல் கண்ட கண்ட கற்பனைகள் முந்திக் கொண்டு விரிந்தது.

சிலாபம்...

சிலாபம் என்ற ஊரை பாடப்புத்தகத்தில் தான் படித்திருக்கிறாள். 1000 வருடங்கள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உண்டு என்று சைவ சமயத்தில் கற்றிருக்கிறாள்.

அந்த ஊரில் நிலானி இருப்பாளா..

நல்லபடியாக இருப்பாளா...

செத்துப் போன அவள் நம்பருக்கு மீண்டும் அழைத்து ஒரே குரல் பதிவில் சோர்ந்து அமர,

ரமணியிடம் இருந்து அழைப்பு வந்தது.


"என்ன முடிவெடுத்திருக்கிறிங்க தனா?


"இதுவரையிலயும் ஒண்டும் உறுதியா தெரியல்லக்கா.."


"அழுறிங்களா தனா?"


"இல்ல.. அழுது என்னத்த பண்ண?"


"இதுக்கு தான் சொன்னன்.. பேசாம பொலிஸ்ல கம்ளைன்ட் குடுப்பம் எண்டு.. இந்த விஷயத்தில என்ன உதவி நான் செய்ய ஏலும் சொல்லுங்க.. எனக்கு கஷ்டமா இருக்கு தனா.. "


"ஒருக்கா நேர்ல போய் பார்ப்பம் எண்டு நினைக்கிறன் அக்கா.."


"நேர்ல போக போறிங்களா. எங்க போவிங்க.. கொழும்புக்கா.. சிலாபத்துக்கா.. காலிக்கா.. எந்த ஊருக்கு போவிங்க.. நீங்க தனிய போகேலுமா.. இதெல்லாம் சாத்தியமா பிள்ள.. எனக்கு பத்திக் கொண்டு வருது பிள்ள ஆத்திரம். இதெல்லாம் என்ன சகோதரங்கள்.. உங்கள மாதிரி ஒரு அக்காக்கு இந்த மாதிரி ஒரு தங்கச்சி பாருங்களன்.."


"ஷாலினிக்கு எக்சாம் முடிச்சிதா?"


"இல்ல பிசிக்ஸ் மட்டும் தான் முடிஞ்சிருக்கு. அவள் படிக்க இருந்தா நான் பக்கத்திலயே இருக்கணும். சாமத்தில எழும்புவாள் குடிக்க கொறிக்க குடுக்கணும். என்னால நேர்ல வந்து பார்க்க ஏலாத நிலமை.."


"நேர்ல வந்து பாக்க என்ன இருக்கு.. நீங்க பிள்ளைய கவனியுங்க.."


"இந்தக் காலத்துல யார நம்புற.. கைக்குள்ள வச்சி பாக்குறன். நாளைக்கு இவ என்ன குடைச்சல் தருவாவோ.."


"என்னைக்கா இது, சின்னப் பிள்ளை அவ.."


"சின்னப் பிள்ள தானே உங்கட தங்கச்சியும்... நம்மட வீட்டு நிலைமைக்கு ஏன் கண்டவன் நம்புவான் பழகுவான்.. சரி சரியானவன் எண்டால் வீட்ட கூட்டி வந்து காட்டி கதைச்சி பேசி செய்யன் யாரு தடுத்த?"


ரமணி மூச்சு விடாமல் ஆதங்கத்தை கக்க, யாரோ கூப்பிட்டு கேட்டது.


"ரெண்டு பாடம் இருக்கு இன்னும் அது முடிய ஸ்கூல்ல பங்ஷன் இருக்காம்.. டீச்சர் இவளுக்கு கொஞ்ச பொறுப்ப குடுத்து வச்சிருக்கிறாங்க.. நானோ பாலுவோ பின்னாலேயே இழுபட வேண்டி இருக்கு.. பொம்புள பிள்ளைகள வச்சிட்டு அவளுக்கும் பயப்பிட்டு அடுத்தவனுக்கும் பயப்பட வேண்டி இருக்கு.." ரமணியின் புலம்பல் முதல் முறையாக எரிச்சலை உருவாக்க, தனக்கு யாருமே இல்லையோ அநாதையோ என்று பச்சாதாபம் பெருகியது.


எதுவும் கூறாமல் "நீங்க ஷாலினிய கவனியுங்க அக்கா நான் எடுக்கிறன்.." என வைத்தவள் நிலானியின் பீரோ பக்கத்தை கிண்டினாள். உடைகளை கலைத்து, அலுமாரி ட்ராக்கை கிளறி, கட்டில் மெத்தைக்கு கீழும் துழாவினாள்


அலைபேசி மீண்டும் இசைத்தது. இந்த முறை அழைப்பில் வரோதயன் வந்தான்.


திரை பார்த்து ஒளிரும் அவன் பெயரை உச்சரித்து அழைப்பு அடங்கும் மட்டும் இருக்க, சில ரிங்கில் அவனே துண்டித்து விட்டான்.


திரையில் தெரியும் திறக்கப்படாத அவனுடைய புலனச் செய்தியை படித்தவள், எனக்காக யாரும் இல்லை என்ற பச்சாதாபம் உடைபட, அவனுக்கு அழைத்தாள்.


"ஹெலோ!" உடனே ஏற்றான்.


"சொல்லுங்க வரோதயன்"


"நீங்க தான் சொல்லணும்.."


"காலையில டைமுக்கு போனிங்களா.. ஒஃபிஸ்கு.."


"ஓம்.."


"அதுலயே நிண்டிங்க போல கன நேரம்.."


"கண்டிங்களா! ம், கொஞ்ச நேரம் நிண்டன் தான்.."


"எவ்வளவு நேரம்?"


"அரை மணித்தியாலம்.."


பிரார்த்தனா இமை மூடித் திறந்து "நான் தான் போக சொன்னனே வரோதயன்.. பிறகு ஏன் அவ்வளவு நேரம் நிண்டிங்க.. ஃபிங்கர் வச்சிங்களா, ஷோட் லீவ் ஆகி இருக்குமே?"


"அத விடுங்க.. நீங்க போன காரியம் என்ன மாதிரி, சக்ஸஸா?"


பிரார்த்தனா கட்டிலில் அமர்ந்து அமைதி காத்தாள். "உங்களுக்கு எந்தளவுக்கு தெரியும் வரோதயன்?"


"எத பத்தி?"


"நான் ஏன் லீவ்ல நிற்கிறன் என்றது?"


"ட்ரெய்னி சொன்னா..." அவனது குரலில் தயக்கம் ஏகத்திற்கு ஏறி அமர்ந்தது.


"அப்ப எல்லாருக்கும் தெரியும்.." பிரார்த்தனா தனது குரலில் அவமானத்தின் சாயல் விளங்காமல் இருக்க பெரு முயற்சி செய்தாள். அவளையும் மீறி அந்தக் குரல் உடைவதை வரோதயன் உணர்ந்தான்.


"பிரார்த்தனா?"


"ஓ"


"நான் இத பத்தி கதைக்கிறத நீங்க விரும்ப மாட்டிங்க.. அதான் எனக்கு தெரிஞ்ச மாதிரி காட்டிக் கொள்ளல்ல. காலையில உங்கள அங்க பாத்துட்டு விட்டுட்டு போக ஏலாம பொயிட்டு. நானும் வாரன் என்றதும் உங்களுக்கு அசௌகரியம். நீங்க கஷ்டப்படுறிங்க எண்டு மட்டும் க்ளீயரா விளங்குது. என்னிட்ட சொல்ல விருப்பம் இருந்தா சொல்லுங்க.. நான்.. என்ர ஹெல்ப் தேவைப்பட்டா ஒரு செக்கனும் யோசிக்காதிங்க.."


பிரார்த்தனாவின் மனவெளியில் குளிர் பரவியது.


"நீங்க.. உங்கட.. உங்களோட யாரு யாரு இருக்கிறாங்க வரோதயன்?"


எத்தனையோ நாள் நள்ளிரவு வரை புலன எழுத்துக்களில் பேசி இருக்கிறார்கள். அப்போதெல்லாம் விசாரிக்காமல் விட்டதை இன்று கேட்கிறாள்.


"நான், அம்மா.. அண்ணா பக்கத்தில நான் இருக்கார் கல்யாணம் பண்ணி" எதிர் கேள்வி கேளாமல் அவனும் பதில் தந்தான்.


"அம்மா தனியவா?" ஏமாற்றம் கவிய,


"அம்மா தனிய இல்ல.. நானும் அம்மாவும் இருக்கிறம்.. பக்கத்தில சுத்தியும் சொந்த பந்தம் இருக்கு.. ஏன் பிரார்த்தனா?"


"நீங்க உதவி தேவைப்பட்டா கேட்க சொல்றிங்க.. எனக்கு இப்ப ஒரே ஒரு உதவி தேவைப்படுது.. தங்கச்ச ஒருக்கா ஒரே ஒருக்கா நேர்ல பாக்கணும் வரோதயன்.. நீங்க எந்த அளவுக்கு கேள்வி பட்டிங்க எண்டு தெரியாது. நான் காலையில அவளுக்கு க்ளாஸ் எடுத்த ஒருத்தர பற்றி விசாரிக்க தான் போயிருந்தன். பக்கத்துல இருக்குற சனம் ஒவ்வொண்டும் ஒவ்வொண்டு சொல்லுது.. அவன் ஆல்ரெடி கல்யாணம் ஆகினவனாம்.. அவனுக்கு பிள்ளைகள் இருக்காம். அவனும் மூணு நாள் காலேஜ் லீவு. இவள் லவ் பண்ணினது அவன தானா.. இப்ப போனது அவனோட தானா.. . அவள பத்தி கன்ஃபோர்மா தெரியாம.." குரல் வரண்டு தேய்ந்து மறைந்தது.


அழைப்பை துண்டித்தவள் ஒரு பாட்டம் அழுதாள். முகம் பொத்தி துடைத்தாள். நடுவில் நாலைந்து முறை வரோதயன் அழைத்து விட்டான்.


"சொரி...நான் தான் கட் பண்ணினன்..." எடுத்து மன்னிப்பு கோரினாள். குரல் கரகரத்தது.


வரோதயன் சுற்றி வளைக்காமல் "நான் என்ன செய்யணும்.. அத மட்டும் சொல்லுங்க!" என்றான்.


"நான் ட்ரிங்கோ (திருகோணமலை) விட்டு ஒரு இடமும் போனதில்ல.. மட்டக்களப்புக்கு மட்டும் ரெண்டு ஒரு தடவை போய் வந்திருக்கன்...."


கிழக்கு மாகாணம் தவிர்த்து இலங்கையை அறியாத எனக்கு காதலின் பெயரில் காணாமல் போயிருக்கும் தங்கையை தேடிச் செல்ல கூட வருவாயா நீ என்று கேட்டு விட்டாள்.


என்ன உரிமையில், என்ன தைரியத்தில் அவனை துணைக்கு அழைக்கிறாள்?
யோசிக்கும் நிலைமையில் இல்லை பிரார்த்தனா!
 
Top Bottom