நான் அறிய நீ - 17

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
நெரிசலற்ற பெருந் தெருக்களின் அழகை திருகோணமலையில் காணலாம்.

மதியம் இரண்டு நாற்பது வெயில் வியர்வை கசகசப்புடன், அலுவலகத்தில் இருந்து வெளியேறிய வரோதயன் நகரசபை வீதியோரம் வண்டியை நிறுத்தி இறங்கினான்.

மாநகர சபை பராமரிப்பில் கால் தடங்கள் தவிர்த்து, சிறு நிலக்கடலை கோதும் இன்றி சுத்தமாக பரந்து கிடக்கும் மணலும், வெள்ளை அலை அடித்து விரிந்து கிடக்கும் நீலத் திரைகடலும் பார்த்தான்.

அவனைக் காக்க வைக்காமல் வந்து சேர்ந்த பிரார்த்தனா, ஆட்டோவிற்கு பணம் கொடுத்து விட்டு அவனை நோக்கி வந்தாள்.

இருவரும் இணைந்து மணலில் நடந்து ஐந்தடி இடைவெளியில் நடப்பட்டிருந்த கல் பெஞ்சில் அமர்ந்தனர்.

சனத்தின் வருகைக்கு நேரம் உண்டு. ஜோடி ஜோடியாக, குடும்பம் குடும்பமாக நடப்பதையும், பொழுது கழிப்பதையும் பணி முடிந்து பஸ்ஸில் போகும் போது கண்டிருக்கிறாள் அவள்.

ஊசியாக வளர்ந்து நிற்கும் சவுக்கு மரங்களுக்கு பேச்சுத் துணையாக தூரத்தில் ஒரு சிலர் அமர்ந்திருக்க,

'டிவோர்ஸ் எடுத்துட்டிங்களா நீங்க?' என்று நேற்று பஸ்ஸில் வந்து கேட்டு, இருதய அடைப்புக்கு ஒத்திகை நிகழ்த்தியவனிடம் நாளை பேசலாம், இந்த இடம் இந்த நேரம் கூறி அழைத்திருப்பவள் மௌனமாகவே அமர்ந்திருக்க, அவள் அமைதிக்கு கலா ரசிகன் போல அலட்டலின்றி உட்கார்ந்து இருந்தான் வரோதயனும்.

எடுத்து வந்துள்ள ஒன்றரை மணி நேர குறுகிய விடுமுறை கரைந்து கொண்டிருக்க, "எனக்கு கல்யாணம் ஆகிட்டு எண்டு நம்புறிங்களா வரோதயன் நீங்க?" என் அவன் பக்கம் திரும்பினாள்.

சின்ன புருவ உயர்வு அவன் நெற்றியில். "பொய் சொன்னிங்களா?"

உதடு பிரியாது புன்னகைத்தவள் "பொய்யா??" சிரித்து "கல்யாணம் ஆகினவள் எண்டு சொல்லியும் நேற்று அப்டி கதைச்சிங்களே.. அதான் அதிசயமா இருக்கு"

"உங்கட ஸ்டேடஸ் இப்ப என்ன? தனியத் தானே இருக்கிறிங்க நீங்க?"

"அப்பா அம்மா தம்பியோட குடும்பத்தோட இருக்கிறன்.."

"அப்டி பார்த்தா, நானும் அம்மாவோட இருக்கிறன். அம்மா எனக்கு கல்யாணம் செஞ்சி வைக்கணும் எண்டு பேச்செடுத்து, அவங்க கேக்குற நேரங்கள்ள எல்லாம் தோணாத ஒரு விஷயம் உங்கள பார்த்த பிறகு, நாம ரெண்டு பேரும் சந்திச்ச பிறகு தோணுனது...."

"என்னது?"

"கல்யாணம் செய்யணும் எண்டு தோணுது பிரார்த்தனா.. என்ர கல்யாணம் உங்களோட நடக்கணும் எண்டு தோணுது.."

கடற் காற்றில் படபடத்த முந்தானை போலவே அவள் மனமும் தடதடக்க, சேலைத் தலையை கையோடு சுற்றி கரை கழுவும் அலைகளை பார்த்தாள்.

"எனக்கு புடிக்கல்ல வரோதயன்"

"என்னையா?" அவன் குரல் தணிந்து ஒலித்தது. ஓம் என்று விடுவாளோ என்ற அச்சத்துடன்.

"கல்யாணம் பிடிக்கல்ல.."

"அப்ப என்னப் புடிக்கும்??"

அவனைப் பார்த்தாள். சமுத்திரத்தின் ஆழம் அவள் விழிகளில்.

"நீங்க எனக்கு நல்ல ஃப்ரெண்டா இருப்பீங்க எண்டு நினைச்சன்.."

இருப்பேன் பெண்ணே! நல்ல நண்பனாக, நல்ல துணைவனாக உன் கூட வரவே விரும்புகிறேன்!

"உங்கள்ள எனக்கு மரியாதை இருக்கு வரோதயன். என்னப் பற்றி உங்களுக்கு தெரிஞ்ச அளவுக்கு கூட உங்கள பற்றி எனக்கு தெரியாது. என்ன நம்பிக்கைல உங்களோட என்ர தங்கச்சிய தேடி கொழும்பு ராச்சியம் வரை தனிய வெளிக்கிட்டு வந்தன் எண்டால்.. அது தான் உங்கள்ள நான் வச்சிருக்கிற நம்பிக்கை மதிப்பு. நீங்க எனக்கு நல்ல ஒரு ஃப்ரெண்டா மட்டும் இருக்கணும் எண்டு விரும்புறன் வரோதயன்.." என்றவள் விழிகள் பரிதவிப்பதை கவனித்தான் வரோதயன்.

சப்பாத்தை கழற்றி, காலுறையை உருவி, சராயை மடித்து எழுந்தவன் எட்டிக் கிடக்கும் கடலின் மடியிடம் அலை மோதும் கரையிடம் சென்றான்.

கை கட்டி அவன் கால் நனைக்க, மணிக்கட்டில் அவள் நேரம் பார்க்கும் போது திரும்பி வந்தவனின் முட்டி வரை உவர் நீர் வடிந்து உறுதியான கால்களில் உரோமங்கள் படையாக ஒட்டியிருந்தன.

"தனாட வாழ்க்கைய நேராக்க என்னால என்ன செய்ய ஏலுமோ மெக்சிமம் நான் அத செய்வன் எண்டு ரமணி மிஸ் சொன்னாங்க.." சட்டைக் கை மடித்துக் கூறினான்.

அலட்சியமாக உதடு பிதுக்கியவள் நெற்றியியில் படர்ந்த முடிக் கற்றையை ஒதுக்கி "எப்ப?" என்றாள் வெறுமனே.

"உங்களோட கதைச்சிட்டு எனக்கு கோல் அடிச்சாங்க. அவங்க என்ன அர்த்தத்தில சொன்னாங்களோ எனக்கு தெரியாது.. நான் உங்களுக்கு நல்ல ஃப்ரெண்ட் எண்டிங்க.. அப்ப எனக்கும் பொறுப்பு கூடுதலாகுதே.."

"நீங்களும் சேர்ந்து நேராக்க போறிங்களா.. அவங்க அவங்களின்ர பிரச்சினை பார்க்கவே நேரம் இல்ல வரோதயன் இங்க"

"இருக்கட்டும். நீங்க முதல் சொல்லுங்க உங்கள பற்றி.. ஹஸ்பண்ட் எங்க இருக்கிறார். உள்ளூரா வெளியூரா. ரெண்டு பேரும் பிரிஞ்சி எவ்வளவு காலம்? பிரிய என்ன காரணம்??"

கை கடிகாரம் கழற்றி கைப்பைக்குள் போட்டவள் மணலில் புதைந்த பாதணியை விலக்கி விட்டு எழுந்தாள்.

நீ எனக்கு நண்பன் என்ற கூற்றை தாங்கவே கடலில் இறங்கினான். கால் நனைத்து வந்தான். அவளுக்கும் அந்த ஆறுதல் தேவைப்படுகிறதோ?

பிரார்த்தனா கால் நினைக்கவில்லை. காற்று மோதி புடவை படபடக்க நின்றாள். அவளுடைய ஜோடி புருவங்கள், தாழ்ந்த இமைகள், நாசித் தண்டு, மூடிய இதழ்கள், நாடியை எவ்வளவு நேரம் அவனும் பார்ப்பது.

நல்ல நண்பன் என்று வேறு கோடு போட்டிருக்கிறாள்.

"ஃப்ரெண்ட் எண்டா மனம் விட்டு கதைக்கலாம் பிரார்த்தனா.."

"கதைக்கலாம்.. எல்லாம் தெரிஞ்ச பிறகு என்னப் பற்றின உங்கட பார்வை மாறும் வரோதயன்"

முறுவலித்தான்.

"எப்பவும் உங்கட பக்கம் நிப்பன் நான். சத்தியம் செய்யவா??" அவள் கரம் தொட கையை நீட்டியவன், காற்றில் மோதி பிரமாணம் செய்து "பிழை உங்கட பக்கமே இருந்தாலும் நான் உங்கட பக்கம் நிப்பன்" என்றான்.

சட்டென அவள் விழிகளில் நீர் படர்ந்தது. காற்றில் அலைந்த கூந்தல் இழை விழுந்தைப் போல முடியை ஒதுக்கி சமாளித்து, வானமும் கடலும் உரசும் தொடுவானம் பார்த்தாள்.

"NSB Bankல அசிஸ்டன்ட் மெனேஜரா வேலை செய்தார். அவரும் ட்ரிங்கோ (திருகோணமலை) தான். அப்பாட ஒன்று விட்ட அக்காட மகன். எனக்கு அத்தான் முறை"

"பொருளாதாரம் எப்பவும் ஒரு பிரச்சினையா இருந்திருக்கு எங்கட வீட்ல.. அப்பாவ அம்மா கல்யாணம் கட்டும் போதே பேசின சீதனம் தரல்ல எண்டு அப்பாக்கு குறை இருந்திச்சாம். சொந்த காசுல கடை போட்டு வியாபாரம் செய்து நல்லா தான் வாழ வச்வர் அம்மாவ. நான் பிறந்து எனக்கு பத்து வயசு வரைக்கும் நல்ல வசதியா இருந்தம். இங்லீஷ் கான்வன்ட்ல தான் நான் நேர்சரி படிச்சன். அவ்வளவு காசு இருந்திச்சு அப்போ. தங்கச்சும் பிறந்த பிறகு அப்பா குடிக்க ஆரம்பிச்சார்.."

வியாபாரம் கை வந்தது வருணனுக்கு. உப்புவெளியில் முதல் மொத்த விற்பனை கடை அவருடையது. செல்வத்தில் பிறந்து வளர்ந்த பிரார்த்தனாவுக்கு புத்தி பிடிபடும் வயதில் வீட்டில் காலூன்றி வளர்ந்த குடும்ப கஷ்டத்தை ஏற்கவும் பழகி இருந்தாள். நிலானி தான் பிறந்த நாளில் இருந்து வறுமை.

கூடா நட்பு சகவாசத்தால் குடிப் பழக்கத்திற்கு அடிமையான வருணனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஆகி, அதை நிமிர்த்த மனைவியின் நகை ஒவ்வொன்றாக அடகுக்கு போனது.

நித்தமும் சண்டை. தர்க்கம். பல நாள் அடுப்பு பற்ற வைக்காமல் படுத்து விடுவாள் பிரார்த்தனாவின் தாய்.

பசியில் வாடும் பிள்ளைகளுக்கு பக்கத்தில் வாழ்ந்த ராஜேஸ்வரியின் தங்கை வசந்தாவிடம் இருத்து அனுசரணை கிட்டும்.

வசந்தா அரச வைத்தியசாலை செவிலியராக பணி புரிபவள். அந்த காலத்தில் குடும்ப கஷ்டத்திலும் உயிரியல் படிப்பு படித்து அரசாங்க வேலை எடுக்க வேண்டும் என்ற இலட்சியம் கொண்டு, செவிலியர் பயிற்சிக்கு கடிதம் வந்ததும் செய்திருந்த பதிவுத் திருமணத்தையே ரத்துப் பண்ணி, புருஷன் வேண்டாம் வேலை தான் முக்கியம் என்று இணைந்தவள். பயிற்சி முடித்து வெளிவரும் போது வெட்டி விட்டு போன கணவனுக்கு வேறு திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் ஆகி இருந்தது.

போகிறான்.

வேண்டியது போல் வைத்தியசாலை நியமனம் கிடைத்தது. மேலதிக நேரக் கடமை வருமானத்துக்கு ஆசைப்பட்டு பகல் இரவு பாராது மருத்துவமனையில் வாசம் செய்து, கல்யாண வயது தாண்டியதும், பெற்றார் இழப்புக்கு பிறகு தனிமையில் வாழும் வசந்தா எதற்கு சேர்கிறோம் யாருக்கு சேமிக்கிறோம் என்று இல்லாமல் மூன்று வேளைக்கும் சேர்த்து ஒரு வேளை சமைத்து சூடு பண்ணி உண்டு பணத்தை மிச்சம் பண்ணும் ரகம்.

அந்த வசந்தா சித்திக்கு பிரார்த்தனாவில் மாத்திரம் தனிப் பிரியம்.

சாதுப் பெண். பணிவும் மரியாதையும் நிறைந்தது. எதைக் கொடுத்தாலும் நன்றியுடன் ஏற்கும். சித்தி வீட்டு வேலையை எடுத்து போட்டு செய்யும்.

இளைய பெண் நிலானி நேர் மாறானவள். நல்ல பலகாரம் தராமல் பழைய சோறை வைக்கும் சித்தியை நன்றியுடன் தனா பார்த்தால், "சரியான கஞ்ச பிசினி. எடுக்கிற சம்பளத்த என்ன தான் செய்வாங்களோ! எனக்கு வேணாம்" என்று பட்டினியே கிடந்து விடுவாள்.

நிஜமே! அக்காவின் பிள்ளைகள் மீது வசந்தாவின் பாசம், தனது பர்சிற்கு ஆபத்தாகாத வரைக்குமே. கைக்கு கடிக்காத வகையில் சில்லறை செலவுகள் செய்தவள், அக்காவின் பிள்ளைகளை நான் நான் பார்க்கிறேன் என்ற பெருமையை ஊருக்குள் தேடிக் கொண்டாள்.

நெடு நெடுவென வளர்ந்த பிரார்த்தனாவுக்கு, குட்டை சித்தியின் உடைகள் பத்து பன்னிரண்டு வயதிலேயே அளவானது. வசந்தா அணிந்து கழித்து உபயம் அளிக்கும் உடைகளையே அணிவாள். அவை பின்னாளில் நிலானிக்கு போய் சேர்ந்து அந்தப் பிள்ளை மனம் புழுங்கியது வேறு விஷயம்.

உடுத்தி கழித்தது கிடைத்தாலும் வசந்தாவின் நாகரிக உடைகளில், பதின்ம பருவ அழகுடன் மிளிர்ந்த பிரார்த்தனாவுக்கு பதினெட்டு வயது முடிய முன்பே மாப்பிள்ளையை தேடி வந்தான்.

உறவில் யாருக்கோ திருமணம் வந்தது. அது போன்ற விசேஷங்களுக்கு பிரார்த்தனாவை அழைத்து செல்வாள் வசந்தா.

'உத்தியோககாரி என்று எல்லாரும் பத்திரிகை வைத்து விடுவர். கல்யாணம், பிள்ளை குட்டி இல்லாத எனக்கு இதெல்லாம் எங்கே திரும்பி வரப் போகிறது. தனியாக போவதற்கு பதில், அக்காவின் பிள்ளையை அழைத்து போனால் அவளும் ஒரு ப்ளேட் உணவு உண்பாள். வைக்கும் மொய் காசுக்கு இரண்டு தட்டாவது செலவாகும். அக்காவின் பிள்ளைகள் நல்ல சோறே எங்கே கண்டிருக்க போகிறார்கள் என் புண்ணியத்தில் தின்று விட்டு போகட்டும்' என்ற தாராள மனப்பான்மை வசந்தாவிற்கு இருக்க, அன்றைய விசேஷத்தில் வருணனின் ஒன்று விட்ட அக்கா குடும்பம் வந்திருந்தது. வசந்தாவின் இளம் சிவப்பு சுடிதாரில் பிரார்த்தனாவை பார்த்து விட்டு மறு நாளே பெண் கேட்டு வந்தனர்.

பள்ளிப் படிப்பையே முடிக்காத பிரார்த்தனாவுக்கு உள்ளங்கை வியர்த்து ஒழுக, நடுக்கம் எடுத்தது மேனியில் அன்று.

பையன் பேங் வேலை. இணைந்து சில ஆண்டாகிறது. எந்தப் பெண்ணுக்கும் மயங்காதவன் உன் மகளை பார்த்ததும் பிடித்து விட்டது. பேசி வைம்போம் படிப்பு முடித்ததும் எழுத்து வைத்து கல்யாணத்தை பிறகு கூட நடத்திக் கொள்ளலாம் என,

"உங்களுக்கே தெரியும், உங்கட அண்ணன் இருந்த எல்லாத்தையும் அழிச்சி போட்டார்.. இருக்கிறது இந்த வீடு மட்டும் தான். எனக்கு இன்னொரு பொம்பிளப் பிள்ளையும் இருக்கு.."

பேங் மாப்பிள்ளை என்று வாயை பிளக்காமல், சீதனம் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்று வெளிப்படையாகவே ராஜேஸ்வரி பேசிவிட,

அங்கிருந்த வசந்தா எப்போதும் போல் அக்கா பிள்ளைகள் நலன் காப்பேன் என்று வலிய வந்து "என்ர பிள்ளை மாதிரி தான் பிரார்த்தி.. எனக்கு யார் இருக்கா? நாளைக்கு தண்ணி வாங்கி குடிக்க ஆள் வேணும். செத்தாலும் விளக்கு வைக்க ஒரு பிள்ளை வேணும். என்ர வீடு இருக்கு பிரார்த்திக்கு. நான் தாரன். கல்யாணத்துக்கு பிறகு என்னோட இருக்கட்டும் ரெண்டு பேரும்" என,

நெகிழ்ந்து போனார்கள் சபையில் இருந்தவர்கள்.

நெக்குருகி நின்றார் ராஜேஸ்வரி, உடன் பிறந்த தங்கையின் பாசத்தில்.

பார்த்தீபன் - வீட்டில் சம்பந்தம் பேசவே காத்திருந்தவன் போல பிரார்த்தனாவை அடுத்த நாளே நேரில் சந்தித்தான்.

சீரான தாடி மீசை, நேரத்தியான பேங் உடையில், வாட்ட சாட்டமாக பைக்கில் வந்தவனைக் கண்டு பதின்ம வயதுக்குரிய படபடப்பும் ஹார்மோன் கிளர்ச்சியும் அடைந்த பிரார்த்தனாவுக்கு உள்ளார்ந்த நடுக்கம் மட்டும் குறையவில்லை.

எனக்குரியவரா இவர்? என்ற பிரம்மிப்புடன், தோழியர் எதிரில் பெருமையுடனே அவனை ஏறிட்டாள்.

ஏ.எல் வகுப்புக்கு போய் வந்த பிள்ளையை தனது வண்டியிலேயே அழைத்து வந்து வீட்டில் விட்டவன், வங்கி விடுமுறைகளில் நேராக வருணன் வீட்டு கேட்டிற்கு வந்து விடுவான்.

வகை வகையாக இனிப்பு, உடை, மேக்கப் ஐட்டங்கள், பிரார்த்தனா கண்டறியாத பலவும் பரிசாக கிடைத்தது அவனிடம் இருந்து.

'இந்த க்ரீம் போடல்லயா அக்கா நீ.. நான் எடுக்கவா?' அக்காவை விட நிறம் குறைவு என்று எண்ணும் நிலானிக்கு தான் அதிர்ஷ்டம். மூன்று வேளையும் பூசி அவள் வெளிற, காதல் கிளர்ச்சியில் பிரார்த்தனாவின் சரும மெருகு ஏறிக் கொண்டே போனது. அவள் மீதான பார்த்தீபனின் மயக்கம் போலவே.

கேட்டில் நின்றே பேசுவர். தங்கை தம்பி அம்மா என்று இருக்க, வீட்டிற்குள்ளே அழைக்க மாட்டாளே தவிர்த்து, திருகோணமலையில் இருவரும் சேர்ந்து சுற்றாத இடம் மிச்சமில்லை.

கைபேசி வாங்கித் தந்தான். இரவிரவாக காதல் பேசினான். படிக்கும் போது பேச ஏலாது என்று சொல்வதற்கு அஞ்சியும், அவன் மீதான மயக்கத்திலும் நன்றாக படிக்க கூடியவள் உயர்தரத்தில் சித்தி குறைந்து பல்கலைக்கழகம் தெரிவாகும் வாய்ப்பை இழக்க,

'நீ யூனிவர்சிட்டி போக தேவை இல்ல. வெடிங் பண்ணுவோம்' என்றவன் காதலின் பேரில் பிற ஆண்கள் கண்ணில் அவள் படக் கூடாதாம் என்று சட்ட திட்டங்கள் எல்லாம் போட்டான்.

பார்த்தீபனின் அவசரத்துக்கு பதிவுத் திருமணம் செய்தனர். செலவு அத்தனையும் அவனே ஏற்றான். நெருங்கிய சொந்தங்களுடன் எழுத்து வைத்து விருந்து போட்ட அன்று அவனும் பெண் வீட்டில் தங்குவது என்று முடிவானது.

அன்றிரவு மகளுக்கு திருமணமான சந்தோஷத்தில் குடித்து விட்டு வீதியில் தள்ளாடிய வருணனை கடந்து போன கார் தட்டி விட, தலையில் அடி பலம். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு தகவல் வந்தது.

முதல் இரவு அது பிரார்த்தனா பார்த்தீபனுக்கு.

"நாசமா போனவனால ஒரு நேரம் சந்தோஷமா இருக்க ஏலுதா!" ராஜேஸ்வரி தலையில் அடித்துக் கத்த, பெண் கதவைத் திறந்து ஓடி வந்தாள்.

ஆஸ்பத்திரிக்கு கிளம்ப எடுத்த பிரார்த்தனாவை "நீ எங்க போறாய்?" என்று எரிச்சலை காண்பித்த பார்த்தீபன், "செத்தா பொயிட்டார்.. வீட்டுக்கு பிரயோசனம் இல்லாத ஆளுக்காக இவ்வளவு துடிக்கிறிங்க.. உங்கட அம்மா வேணும் எண்டால் போகட்டும். நீ போக கூடாது" என்றான்.

அவனுடை கோபம் முதல் முறையாக அதீத பயத்தை தந்தது.

ரோட்டில் ஒரு நாய்க்குட்டி அடிபட்டு கிடந்தாலே அன்று முழுவதும் உணவு செல்லாது அவளுக்கு. மறக்கும் வரை உறக்கம் வாராது.

நான் அம்மாவுக்கு துணைக்கு போய் பார்த்து விட்டு வருகிறேன் என்று கூற தைரியம் வரவில்லை. அவளை விட ஏழு வருடங்கள் மூத்தவன் அவனிடம், பெரியவன் என்ற பயமும் மரியாதையும் இயல்பாகவே உருவாகியிருக்க துக்கத்தை அடக்கி கொண்டாள்.

ச்சே! மருமகன் அல்லவா அவன், ஆபத்து காலத்தில் உடன் நிற்க வேண்டும். வந்த முதல் நாளே ரூமுக்குள் உட்கார்ந்து இருக்கிறான்!

பொது வைத்தியசாலையில் தங்கை கடமையில் இருப்பாள் என்ற தைரியத்தில் கடனே என கணவனை காண கிளம்பிய ராஜேஸ்வரிக்கு, பார்த்தீபன் மீதான மரியாதை தேய்ந்து போக,

தங்கை தம்பியுடன் ஹாலில் படுத்து விட்ட பிரார்த்தனாவை தொட்டு உசுப்பியவன், அவள் அசையவில்லை என்றதும் காத்திருந்த நாள் அளித்த ஏமாற்றத்தால் தாய் வீட்டுக்குக் கிளம்பி விட்டான்.

ஆஸ்பத்திரி அலைச்சலும், காயம் ஆறவும் என வருணன் வீடு வரவே வாரம் ஆகியது. நடுவில் அம்மா வீட்டுக்கு சென்ற மாப்பிள்ளையை ராஜேஸ்வரியோ பிரார்த்தனாவோ அழைக்கவில்லை.

அவர் அல்லவா பொறுப்பாக எங்களுடன் நின்றிருக்க வேண்டும்! போனவருக்கு வரத் தெரியும் என்று விட்டாள் தாய்.

சரி எது? தவறு எது? குடும்ப வாழ்க்கையில் ஆனா ஆவன்னா அறிய முதலே அரண்டு இருந்த பிரார்த்தனா பார்த்தீபனுடன் பேசப் பயந்து, வரும் போது வரட்டும் என்று ஒத்திப் போடுவதில் குறியாக இருக்க, பார்த்தீபனின் தாயும் தகப்பனுமே விஜயம் செய்தனர்.

குடிகாரனுக்கு, வாழ்ந்து கெட்டவனுக்கு என்ன மரியாதை கிடைக்கும்? பேச்சுக்கு ஒரு வார்த்தையில் சுகம் விசாரித்து விட்டு "நல்ல நல்ல இடங்கள்ள இருந்து பெண் வந்தது. இந்தப் பிள்ளை தான் வேண்டும் என்று பிடிவாதமா நிண்டார். நல்ல மரியாதை செய்றிங்க" சாடி விட்டு "ரூம்ல ஒரு ஃபேன் வைக்கிற இல்லையா.. வேர்த்து விறுவிறுத்து மூச்சு முட்டி வந்தார் நடுச் சாமத்தில. நல்லா இருந்து பழக்கப்பட்டவர். இந்த வீட்டுல அவருக்கு வசதிப்படாது. சீதனமா தாரன் எண்ட உங்கட தங்கச்சி வீட்ட எழுதிக் குடிங்க. ரெண்டு பேரையும் குடி வைக்க ஏற்பாடு செய்யுங்க" மாமனார் கராராக சொன்னார்.

"நல்ல நாள் பார்த்து செய்வம்" என்று ஒத்துக் கொண்ட ராஜேஸ்வரி வசந்தாவிடம் பேச,

இரவுக் கடமை முடித்து வீடு செல்லும் வழியில் அக்கா வீட்டுக்கு வந்திருந்த வசந்தா "என்ர வீட்ட குடிவைக்கவா.. அவங்கள குடி வச்சிட்டு நான் எங்க போக? வீடு எழுதித் தாரன் எண்டு நான் எப்ப சொன்னன்.. என்ர கண்ணுக்கு (காலத்துக்கு) பிறகு உன்ர மகளுக்கு எண்டு சொன்னன். முழிச்சு இருக்கும் போதே முழிய பிடுங்கப் பாக்குறாங்களா??"

வசந்தா வாக்கு மாறினாள்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: நான் அறிய நீ - 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
706
581
93
Pondicherry
ஆசைப்பட்டு மணக்க கேட்டு பின்னர் சீதனம் வாழ்க்கையை தடம் மாற்றி விட்டது போல.. வசந்தா, தேவையே இல்லாத ஆணி 🤦🏻‍♀️
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
அட பக்கி என்ன இப்படி பல்டி அடிச்சிட்ட 🤦 🤦 🤦 🤦 🤦 🤦
விரவம் இல்லாத பிள்ளையை போட்டு கல்யாணம் செய்து வெச்சிட்டு....இந்த ராஜி பாட்டுக்கும் இருக்கு....
இப்படி அம்மா இருந்தா நிலா ரன் பண்ண தான் செய்வா......
இவங்க எல்லாத்துக்கு மேல அவள் கணவன்.....ஏண்டா அன்னைக்கு நைட் ஓட உலகம் அழிஞ்சிருமா??????