நான் அறிய நீ - 24 (ஃபைனல்)

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 85

New member
May 26, 2026
7
33
3
வங்காள விரிகுடாவில் பூகம்பம் நிலை கொண்டால், கால நிலை சீர் கெடும். கார் முகில் வானைச் சூழும். சூரியனை காவு கொடுத்தது போல் காலை மாலை வித்தியாசம் அற்று இருள் கவியும். தொலைத்தொடர்பு அறும். குளிரில் கை கால் சுருளும். வாரக் கணக்கில் அழும் வானம், கூரையைத் தட்டும் மழை வெள்ளம். பொருளோடு நிகழும் உயிரும் சேதம் துன்புறுத்தும்.


இந்நிலையும் ஒரு நாள் மாறும். வானம் பளிச்சென்று சிரிக்கும். பறவை சிறகுலர்த்தி சப்திக்கும். சகலமும் வழமைக்கு திரும்பும். அதுவே இயற்கை நியதி. விடியாத இரவில்லை. முடியாத பகலில்லை. இருளும் வெளிச்சமும் மாற்றி மாற்றி வருவதே விதியாகும்.



பனி மூடி, இருளில் சிக்கி தவித்து திசை தெரியாது அலைந்த பிரார்த்தனாவுக்கும் சீராகிறது சூழ்நிலை.



திருகோணமலை உப்புவெளியிலுள்ள பிரார்த்தனாவின் பழுப்பு வீடு வெள்ளை பூசியிருந்தது. வீட்டின் துருப்பிடித்துத் துருத்தி நின்ற கேட் கூட வர்ணம் பூசி மின்னியது. கதவு ஜன்னல்கள் பாளிஷில் புதிது போல பளபளக்க திருஷ்டிக்காக வீட்டுக் கூரை மூலையில் பூசணிக்காய் கட்டித் தொங்கியது.



திறந்துள்ள வாசல் கேட் வழி உள்ளே நுழைந்தால், ராஜேஸ்வரி புதுச் சட்டையில் தோரணையாக சாய்மான கதிரையில் அமர்ந்திருக்கிறார். ஜன நடமாட்டம் தெரிகிறது உள்ளே.



யார் ஆள்கள் அவர்கள்?



நமக்கு தெரிந்தவர்களே!
ரமணி, பாலா, நிலானி, நிலானியின் கணவன் ரிஷி, இன்னும் ஒரு புதுப் பெண்..
ஹா, அவள் தான் கடைசி வருகையான விமலனின் காதலியும்; மனைவியுமான ஜோவிகா.



சில பக்கத்து வீட்டு காரர்களுடன் நெருக்கமான உறவுகள் சிலவும் கூடி இருந்தன மங்கள நிகழ்வொன்றை நிகழ்த்தி முடிக்க போகிறோம் எனும் செய்தியோடு.

ஆகட்டும்!


நம் நாயகி பிரார்த்தனாவை எங்கே எனத் தேடினால், உள் அறையில் ரமணியின் மகள் ஷாலுவுடன் உட்கார்ந்து இருக்கிறாள்.



"ஒரு கொஞ்ச நேரம் அக்கா.. கோப்ரேட் பண்ணுங்களேன்.."



"நீங்க டிசைன் ஓவரா போடுறிங்க ஷாலுமா.. சிம்பிளா முடிக்கலாம்டா"



"நோ! எனக்கு எந்தளவு தெரியுமோ அந்தளவு நான் வடிவா கை ஃபுல்லா போட்டு தான் விடுவன்.."



அன்பால் கட்டுண்டிருந்த பிரார்த்தனா 'சரி உன் இஷ்டம்' என விட்டுவிட, பிரார்த்தனாவின் கையை தனது மடியில் விரித்து வைத்து மருதாணி கூம்பால் கீறிக் கொண்டிருந்தாள் சின்னவள்.



"ஓம்! 8.30 தான் முகூர்த்தம்.. ஏழு மணிக்கு எல்லாரும் கோவில்ல நிக்கணும்" காதில் வைத்த அலைபேசியுடன் எதிர்முனைக்கு கட்டளை பிறப்பித்தார் ரமணி.



"இங்க வாம்மா என்ன பேர்? பேர் மறக்குது அடிக்கடி கோபியாவா சோபிகாவா?"



"ஜோவிகா"



"ஜோவிகா! இதுல எழுதி இருக்கிறதெல்லாம் வாங்கிட்டு வரச் சொல்லுங்க உங்கட புருஷனுட்ட" ஒரு பட்டியலை விமலனின் மனைவியிடம் கொடுக்கிறார்.



அனுமார் வால் போல் நீண்ட பேப்பருடன் விமலனிடம் சென்ற அந்தப் பிள்ளை, விடயத்தை சொல்ல, "எவ்வளவு தான் வாங்குற.. காசு என்ன மண்ணுல விதைச்சி மறு நாள் நாளே அறுவடை செஞ்சி வாரனாமா?" என்று எரிந்து விழுந்தான் விமலன்.



"மெதுவா கதையுங்களன். நிலானி மச்சாள்ட காதுல விழுந்தா போதும். நாளைக்கே வேற வீடு பார்த்து மாறு எண்டுவாங்கள். பெயின்ட் பூச்சு பூஜை எண்டு எவ்வளாத்த செலவழிச்சுட்டம்.. நாளையோட எல்லா ஆட்டமும் முடியுது. எல்லாரும் கலைஞ்சிருவாங்கள்.. இப்ப போய் வாங்கி வாங்க" என புருஷனை சமாதானப்படுத்தி கிளப்பினாள் மனைவி.



அவள் வில்லி போல பாவித்த நிலானியோ, தனது ஆறு மாத ஆண் குழந்தைக்கு பால் புகட்டி முதுகில் தட்டிக் கொடுத்து ஃபோன் நோண்டிக் கொண்டிருக்கும் கணவன் கைக்கு மாற்றினாள் பிள்ளையை.



"சிணுங்கிட்டே இருக்கான்.. ஹொட்டா இருக்கு இங்க"



"இன்னும் ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணுங்க ரிஷிம்மா"
ஃபேனைப் போட்டு வைத்து எழுந்து பிரார்த்தனாவின் அறை சென்றவள் "சாரி ப்ளிட்ஸ் பண்ணி வந்துட்டா அக்கா?" என விசாரித்தாள்.



"ஓம்! அதுல இருக்கு.."



"நீ எழும்பாத. நான் பாக்குறன்.."



பார்லருக்கு அனுப்பி வைத்த பட்டுப் புடவைகளை ஜாக்கெட்டோடு தரம் பிரித்து வைத்தாள்.



"தனா, எங்கட ஸ்டாஃப் எல்லாரும் கோயிலுக்கு வரத் தான் விரும்புறாங்க. அவங்களுக்கு கவனிப்பு பிழைக்க கூடாது. உன்ர தம்பியார் பொறுப்பா செய்வார் தானே?"



"செய்வாரா? செய்யணும். நான் அத கவனிச்சு கொள்றன்" நிலானி அதைப் பொறுப்பேற்க



"அப்ப சரி" என திருப்திப்பட்டு அடுத்த ஜோலியை பார்க்க போனார் ரமணி.



மாதங்கள் மூன்று ஓடி விட்டது விமலன் தன் காதலியை ராத்திரியோடு ராத்திரியாக வீட்டுக்கு அழைத்து வந்து.



மூத்த மகள் வாழ்வு கேள்விக் குறியாக வளைந்து காலங்கள் ஓடிக் கொண்டிருக்க, அவள் தூக்கிச் சுமந்த தங்கை தம்பி சுயநலமாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் காட்டும் தீவிரம் ராஜேஸ்வரிக்கு வயிற்றை எரிய வைத்தது.



கை கட்டி மௌனமாக வேடிக்கை பார்க்கும் மகளைக் கோபித்தார்.



"நீ என்ன பிரார்த்தி பார்த்துக் கொண்டு நிக்கிற? இவன வெளிய போகச் சொல்லு. இதுக்கா இவனுக்கு தொழில் துவங்கிக் குடுத்தம்.." ஓசையும் ஒப்பாரியுமாக அவர் ஆரம்பிக்க அழுது பார்த்திராத தாயை அமர வைத்தவள்,



"நீங்க கத்திச் சண்ட போட்டு ஆகப் போறது ஒண்டும் இல்லம்மா. உங்களுக்கு ஏலாமல் போனால் எனக்கு தான் ஆக்கினை. தயவு செய்து பேசாமல் விடுங்க" என்றாள்.



அது போதுமானதே விமலனுக்கு அழைத்து வந்த பிள்ளையை அவன் குடும்பம் ஏற்றுக் கொண்டு விட்டது.



"உனக்கு பயித்தியம் புடிச்சிட்டா பிள்ள?" அரற்றியவர் நிலானிக்கு அழைத்து அழுதார். அந்தப் பக்கம் நிலானி தான் பொங்கினாள் "திமிர பாருங்களன் அவருக்கு, இதுக்காகவா காசு போட்டன் நான்.."



"பிரார்த்தி ஒண்டுமே கதைக்க இல்ல பிள்ள. விடுங்க எண்டு என்னச் சமாதானம் செய்றா"



அதை கேட்டதும் எதுவும் பேசாத நிலானி "நான் வாரன் அம்மா. அவனுக்கு நான் தான் சரி" என்றாள்.



பிரார்த்தனா சிறிது நேரம் அமைதியாக அமர்ந்தாள். நிதானமாக மூச்சு விட்டாள். ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தாள். வராண்டாவில் வந்து அமர்ந்து வரோதயனுக்கு அழைத்தாள்.



"ஃப்ரீயோ நீங்க?"



"ஓம்! சொல்லுங்க!" உள்ளதை ஒதுக்கி விட்டு கேட்டவன், அவளது குரலின் ஸ்தாயலில் என்ன வினை புரிந்ததோ அந்த வீடு அவள் நிம்மதியைக் குலைக்க என்று பயந்தான்.



"எனக்கு வீடில்ல. என்ர பேர்ல காணி இல்ல. சொல்லிக் கொள்ற மாதிரி நகையும் இல்ல. இப்ப நான் போட்டு இருக்கிற ஒரு ஜோடி தோடு தான் தங்கம் எண்டு இருக்கு என்னட்ட.."



"ம்ம்.. இந்தக் கணக்கெல்லாம் நான் கேக்கல்லயேம்மா?" அவன் கனிவாக சொல்ல,



"இப்போதைக்கு பேங் லோன் கழிய முப்பதாயிரம் சம்பளம் வாங்குறன். இது தான் என்ர ஸ்டேடஸ்.. என்னக் கல்யாணம் பண்ணிக் கொள்ள விரும்புகிறிங்களா நீங்க?"



பாலைவன பாதசாரிக்கு கல்லுக்குள் கசிந்து ஓடையாக இறங்கி அருவியாக கொட்டும் நீர் வீழ்ச்சியாக, வரோதயனுக்கு பிரார்த்தனாவின் பேச்சு கேட்டது.



சிரித்துக் கொண்டான். பொன் பொருள் கணக்கு சொல்லி பெண் தரும் கலாசாரத்தில் அடிபட்ட நமது நிலைக்காகவும் சிரித்துக் கொண்டான்.

"


எப்ப வர நான்.. இப்ப வரவா.. போட்டிருக்கிற உடுப்போட ரெடியா நிக்கிறிங்களா?"



இமைகளை மென்மையாக மூடிய தனாவின் நெஞ்சு ஏறி இறங்க, "வாங்க எண்டு சொல்லத் தான் ஆசையா இருக்கு வரோதயன். எனக்கு இங்க மூச்சடைக்குது.. சுதந்திரமா சுவாசிக்க ஏலாம தான் இருக்கு.."

"


அப்ப ரெடியா இரும்மா.. இப்ப வாரன் நான்" அவன் பைக் சாவியை தூக்கி விட்டான்.

"


இல்ல.. அவசரப்படாம நான் சொல்றத கேளுக்கு, இங்க எதுவுமே முறையா இல்ல. எனக்கு உங்களோட வாழ்க்கை முறையா தொடங்கோணும் எண்டு ஆசையா இருக்கு" என்றவள் மூடிய இமைகளில் ஈரம்.

"


முறையா கல்யாணம் செய்து முறையா என்ன இங்க இருந்து கூட்டி போவிங்களா?"



வரோதயன் அவள் ஒவ்வொரு சொல்லுக்கும் தலை அசைத்தான். நிறைவேற்றுகிறேன் என்று உறுதி அளித்தான்.



அவனிடம் ஒப்புக் கொடுத்த பிறகு உரியவள் அமைதியாகினாள்.



ரமணிக்கு அழைப்பு பறந்தது வரோதயனிடம் இருந்து. தன் தாயிடம் பேசினான். ராசு பஞ்சு மூலம் 'கிழிஞ்ச ரவுசர்' கதையை கூட அறிந்து இருந்த காமாட்சிக்கு, சம்மதம் தன் பிள்ளை விரும்பும் பெண்ணையே மருமகள் ஆக்குவதற்கு. ஆனாலும், அவன் பேசியதும் பாலா ரமணி நேரடியாக வந்து கதைத்தனர். பெண் வீடு சார்பாக மாப்பிள்ளை கேட்டனர்.



பிரார்த்தனாவின் குடும்ப சூழல், பெண்ணின் கடந்த காலம் எல்லாம் அறிந்ததும் சிறிய நெருடல் இருக்கத்தான் செய்தது. பிள்ளைக்காக ஏற்றுக் கொண்டார் தாய்.



ரமணி அடுத்து ராஜேஸ்வரியை சந்தித்தார். நிலானியும் பஞ்சாயத்துக்கு வந்திருக்க "யாரு, என்னய தேடி சிலாபம் வந்த அந்த அண்ணா வா, மாப்பிள்ளை?" என்று மட்டும் கேட்டுக் கொண்டாள்.

'


நிறைய கதைக்கணும் போல இருக்கு ஆனால் கேட்க முடியவில்லை' என்று அன்று பிரார்த்தனாவை பார்த்து சொன்னாளே, அதில் 'அன்று உன்னோடு வந்த அந்த அண்ணன் யார்? உங்களுக்குள் ஏதாவது.. அப்படி இருந்தால் சந்தோஷம். நீ கல்யாணம் பண்ணிக் கொள் அக்கா' என்றெல்லாம் கூற நினைத்தாள். குற்றவுணர்வு தடுத்து விட்டது உரிமையாக கதைக்க முடியவில்லை.



அக்காவின் குணம் தெரியும். அவள் ஒரு ஆணுடன் வருகிறாள் என்றால் அந்த ஆண் எப்படி பட்டவராக இருக்க வேண்டும்!



நிச்சயம் ஜெம் தான்.

அவளுக்கு சந்தோஷம்.


நிலானி சும்மாவே ஆடுவாள். பொறுப்பில்லா தகப்பன் தம்பியை துச்சமாக நடத்துவாள். இன்று அவள் பணக்கார மாப்பிள்ளையின் மனைவி. தனக்கென அந்தஸ்தை உருவாக்கி வைத்துள்ளதாக கர்வம் கொள்பவள்.



நிறை மாதம் அவளுக்கு அது. கிளம்பி வந்திருந்தாள் ஊருக்கு. அலுவலகத்தில் இருந்து வந்த பிரார்த்தனாவை "கொஞ்சம் வாரியா அக்கா, கதைக்கோணும், உன்னோட" என்று உட்கார வைத்தாள். ராஜேஸ்வரியை அமர வைத்தாள்.



வருணன் போதையில் இருந்தார். "சத்தம் போடக் கூடாது கொஞ்ச நேரம்" என அவரை அதட்டி வைத்தவள், விமலனையும் அவனை நம்பி வந்த பெண்ணையும் நிறுத்தி வைத்து "உங்கட எண்ணம் என்ன?" என்று கேட்டாள்.



"நீ யாரு என்னக் கேள்வி கேட்க?" தெனாவெட்டாக கேட்டான்.
"தொழிலுக்கு உனக்கு காசு தந்தது நான். என்ர காச எண்ணி வட்டியோட வை. நான் கேள்வி கேட்க மாட்டன்" என்றாள்.



விமலன் வாயை மூட,
"அம்மா இந்த வீடு உங்கட பேர்ல இருக்கு. இது முறைக்கு பிரார்த்தி அக்காவுக்கு சேர வேண்டியது. இத ஒழுங்கா அக்காக்கு சீதனமா எழுதி இருந்தால்.. சரி அந்த பழைய கதை வேண்டாம். வீடு மூண்டு பிள்ளைகளுக்கும் சேர வேண்டியது எண்டு நீங்க சொல்லி இருக்குறிங்க.."



"நிலானி! எனக்கு ஒண்டும் வேண்டாம்.."



"நான் இத எதிர்பார்த்தது தான் அக்கா. நான் முடிச்சிடுறன் ப்ளீஸ், அம்மா இதுல எனக்கும் அக்காக்கும் பங்கு இருக்கு. அந்த பங்குல எனக்கு சேர வேண்டியத நான் விட்டுத் தாறன்.. அதே மாதிரி அக்காக்கும் இது தேவை படாது என்றா.. அவள்ட மாப்பிள்ளை சீதனம் தேவை இல்ல எண்டுட்டார். விமல் இப்ப நீ எங்களுக்கு சேர வேண்டிய காச தரணும் அத வச்சி தான் அக்காட கல்யாணத்த நடத்தணும்"



"நிலானி! இரு! எனக்கு காசெல்லாம் வேணாம். உனக்கும் வீட்டுல ஆசை இல்லை எண்டால் வீட்ட விமலே எடுத்துக்கொள்ளட்டும். அம்மாட காலத்துக்கு பிறகு அவனுக்கு உரித்தாகட்டும் விடு.."



"அக்கா, அப்படியே விட ஏலாது. கல்யாணச் செலவ இவர் ஏற்க தேவை இல்ல சரி. ஆனா பொண் வீடு சார்பா எல்லா வேலைகளையும் நீ தான் எடுத்து செய்யணும் விமல். முதல் இந்த வீட்டுக்கு பெயிண்ட் அடிச்சி பேய்க் கோலத்த மாத்து. நல்லா உழைக்கிறாய் தானே இப்ப"

"


இங்க பாருங்க அம்மாச்சி, உங்களுக்கு தான் பெரிய பொறுப்பு இருக்கு. நீங்க எப்புடி வந்திங்க என்றது கேள்வி இல்ல. நீங்க தான் இந்த வீட்டு மருமகள். அதுல எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. ஆனால் அம்மாவ அப்பாவ கடைசி வரைக்கும் நீங்க தான் வச்சி பார்த்துக் கொள்ளணும். நீங்க கவனிக்கிறத வச்சி தான் வீடு உங்கட பேருக்கு வருமா வராதா தெரியும்" என்று செக் வைத்தாள்.

பிரார்த்தனா நிலானியை வாய் வியந்து நோக்க, "


இவள் யாரு என்னப் பார்க்க?" என்று ராஜேஸ்வரி கிளம்பினார்.
"ஏன் கடைசி மூச்சு வரைக்கும் அக்காவ படுத்தி எடுக்கணுமா நீங்க? இனியாவது அவட புருஷன், அவட ஃபெமிலி எண்டு வாழ விடுங்க அவள" என்றாள்.

கடைசி மூச்சு மட்டும் அக்காவ படுத்தி எடுக்கணுமா நீங்க? என்ற வார்த்தைகளில் ராஜேஸ்வரி அமர்ந்து விட, திருகோணமலை உப்புவெளியில் கோடி பெறுமதி பெறும் காணி வீடு மொத்தமாக தனக்கு வருகிறது என்று கணக்கு போட்ட விமலன் நிபந்தனைகளுக்கு சம்மதித்தான்.



வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்! நிலானியின் செயல்களால் நிறைவாக உணர்ந்தாள் தனா. நிலானி மட்டும் பேசவில்லை அங்கே. அவள் வாழும் ஸ்திரமான வாழ்கை பேச வைக்கிறது அவளை.


வரோதயன்.. அவரும் என்னை பேச வைத்தார். என் வாயால் கல்யாணப் பேச்சை எடுக்கும் தைரியம் தந்தது அவர் தான்.

முறையாக விவாகரத்துக்கு விண்ணப்பிக்க வைத்து பத்து வருட பிரிவால் அது இலகுவாக கிடைத்தும் கல்யாணம் என்று அவளை அவசரப்படுத்தாமல் அவளாக விரும்பி வர காத்திருந்தான்.


நட்பாக விழுந்த விதை பாசமா, நேசமா, அதையும் தாண்டிய நம்பிக்கையாக செழித்து கன்னி விட்டிருக்கிறது.


நிலானி ரமணி தலைமையில் அவள் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்தது.

வரோதயன் பக்கத்தில் ஜனம் அதிகம். ராசு பஞ்சு சித்தப்பா பெரியப்பா என ஒரு பட்டாளமே எடுத்து போட்டு வேலை பார்த்தனர்.


முறையாக நடக்க வேண்டும் என்றால் என்று ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயங்களும் குறையில்லாமல் நடத்த வேண்டும் என்றான் வரா.


நிறைந்த முகூர்த்த நாளில் சுப நேரத்தில் திருகோணமலை காளி கோவிலில் வைத்து பிராத்தனாவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினான். தலை குனிந்து தாலி வாங்கியவள், நெற்றி வகுட்டில் அவன் குங்குமம் வைக்கும் போது தலை நிமிர்ந்து கண் கலங்கினாள்.
சொரிந்த அர்ச்சனைகள் அவளை வாழ்த்தின. ஒவ்வொரு முறையும் ஸ்டாப் பஸ் கோயிலைக் கடக்கும் போது கல்யாணச் சடங்கு நிகழ்வதை தோரணங்களை கடந்து இருக்கிறாள். அது போல் நமக்கு இந்த ஜென்மத்தில் வாய்க்கவில்லை என்று மனம் வருந்தி இருக்கிறாள்.
இதோ அவளுக்கும் திருமணம் சிறப்பாக நிகழ்கிறது. இதோ அவள் அருகில் அவள் மனம் அறிந்த நாயகன் அமர்ந்திருக்கிறான். அவள் மனதில் பயம் இல்லை தயக்கம் இல்லை பதட்டம் இல்லவே இல்லை



"திருப்தியா?" கேட்கிறான்.
தலை அசைக்கிறாள் நெற்றிச் சுட்டி அசைய.
சௌபாக்கியா மண்டபத்தில் வரவேற்பும் விருந்தும் முடித்து, மூதூர் கிளம்பினர்.



மாமியார் வீட்டில் ஒரு வாரம்! பிரார்த்தனாவுக்கு மறு வீட்டு விருந்துக்கே பொழுது சரியாக இருந்தது. திருமண விடுமுறை முடிந்ததும் திருகோணமலை திரும்பினர்.



உத்தியோகத்தர்கள் தங்கும் குடும்ப விடுதியை வரோதயன் தன் பெயரில் எடுத்து வைத்திருந்தான். வரோதய நகரில் அமைந்துள்ள ஃபெமிலி குவார்டசில் பால் காய்ச்சி குடியேறினர்.



முதல் நாள் அரக்க பறக்க வேலைக்கு கிளம்பி இரண்டாம் மூன்றாம் நாளில் ஓரளவுக்கு பண்ட பாத்திரம் துணி மணியை ஒழுங்கு படுத்திவிட்டாள்.



புது இடம், இருவர் பேச்சுக்கு எதிரொலிக்கும் விசாலமான குடியிருப்பு. பிடித்திருந்தது. மனதில் அமைதி குடிகொண்டிருந்தது. பெரிதாக வேலை இருக்கவில்லை. வைத்தது வைத்த இடத்தில் இருந்தது. குப்பைக்குள் பழகி விட்ட பிரார்த்தனாவுக்கு, மண்ணை உணவை மதிக்கும் சுத்தம் ஒழுங்கு பேணும் வரோதயனின் பழக்க வழக்கங்கள் பிடிபட்டிருந்தன.



அந்த வாரம் புதன் கிழமை. வேலை விட்டு விடுதி வந்தவள் முகம் கழுவி, டீ ஊற்றும் போது வரோதயன் வந்து சேர்ந்தான்.



ரமணி பிரார்த்தனாவுக்கு ஐந்து வருட சேவை நிறைவாதலால், இருவரும் இடம் மாற்றம் பெற்று கணக்காய்வு அலுவலகம் வந்திருந்தனர்.



"குவார்ட்ஸூக்கு பக்கத்துல மாறணும் தனா. ரிலாக்ஸா இருக்கும். லஞ்சுக்கு போய் வர ஈசி.." என்ற ரமணியின் யோசனைக்கு அமைய விடுதி வளாகத்திலேயே, கிழக்கு மாகாண சபை நிர்வாக அலுவலகத்தில் ஒன்றான அதை தேர்வு செய்திருந்தாள்.



வரோதயன் இன்னும் கல்வித் திணைக்களத்தில் தான் பணி புரிகின்றான். அவன் இடமாற்றம் பெற இன்னும் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.



அடுக்கு மாடியில் இவர்களுக்கு மூன்றாவது தளத்தில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. புழுக்கத்தால் சட்டையை மாத்திரம் கழற்றி விட்டு பெனியன் பேண்டுடன் வியர்வை ஈரம் காய பால்கனி காற்றில் நின்றவனுக்கு தேநீர் எடுத்து வந்தாள்.



வரோதய நகர், இன்னும் நகர வாசனைக்குள் சிக்குண்ணாத பிரதேசம். விடுதியை சுற்றி மரங்கள் அதிகம். தூரத்தில் எங்கோ குயில் கூவியது.



"உங்கட ஊர் மாதிரி தான் இருக்கு இந்த ஏரியாவும்.."



"ம். அங்க குருவி குயில் கிளிக் சத்தம் கேட்டுட்டே இருக்கும்"



"ஊர விட்டு வந்தது, அம்மாவ விட்டு வந்தது விருப்பம் இல்லத் தானே?"



குயில் பாட்டுக்கு காது கொடுத்தவன் அவளைப் பார்த்தான்.



சிவப்பு காட்டன் சேலை. பச்சை ஜாக்கெட். வியர்வை கலைக்காக நெற்றிக் குங்குமம். கண்ணில் ஒரு சாந்தம். கழுத்தில் தாலி. முத்தாய்ப்பாக, ஒரு வாரத்தில் கன்னத்தில் பூசி விட்ட கல்யாணப் பூரிப்பு.



சிரித்தான். "தனிய இருந்தா, இந்தக் காட்டுக்க வந்து என்னடா செய்றம் எண்டு வெறுப்பா இருக்கும்.. இப்ப அப்படியா" என்றான்.



புரிந்தது.



"அம்மாவ எங்களோட கூப்பிட்டு வச்சிருக்கலாம் என.."



"யாருட அம்மா?!"



அவன் கேட்ட தொனியில் புன்னகைத்தவள் "பயப்படாதிங்க உங்கட அம்மாவ, மாமியச் சொன்னன்"



"அம்மா ஊர விட்டு, வீட்ட விட்டு வரமாட்டாங்க. வன்செயல் காலத்திலயே அசையாதவங்க அவங்க.."



"நீங்களும் தான்.. ஸூவிஸ் போற ஓப்பர்சுனிட்டியவே மிஸ் பண்ணிவர்.." கலைவாணியை மனதில் வைத்து சொல்ல,



"ம்ம்.. வாணிக்கு நான் எண்டு விதி எழுது பட்டிருந்தால் ஒருவேளை போயிருப்பனாருக்கும்.. பிரார்த்தனாவுக்கு வரோதயன் என்றது தான் கணக்கு"



முறுவலித்தாள்.



"இது தான் நடக்கணும் எண்டு இருக்கு. நடுவுல நமக்கு சில கிளைக் கதைகள எழுதி வச்சிருக்காங்கள். மெயின் ஸ்டோரில நானும் நீங்களும் தான்.."



பிரார்த்தனா தேநீர் மிடறிழுக்கும் போதும் அவனையே பார்த்தாள்.



"என்ன யோசிக்கிறீங்க? சொல்லுங்க"



"தீபன் அத்தான்ர வீட்ட போகணும் ஒருக்கா.."



"ஓ.."



"அவர்ட வைஃப் என்னப் பாக்கணும் எண்டு கேட்டாங்களாம்.. வரச் சொல்லி அட்ரஸ் ஃபோன் நம்பர் எல்லாம் தந்தார்"



"எப்ப, நீங்க மீட் பண்ணின நேரமா?"



"ம்ம்.."



"காரணம் அது மட்டுந் தானா?"



"ரெஜிஸ்டர் வச்ச டைம், தோடு, செயின், மோதிரம் எல்லாம் எனக்கு போட்டவர் அவர். ஒவ்வொண்டா அடகு வச்சி அறுதியா பொயிட்டுது"


இருவரும் அருகருகே தேநீர் கோப்பைகளுடன் பால்கனி தடுப்பு சுவரில் சாய்ந்து நிற்கும் காட்சி அந்திச் சூரிய கதிரில் பேரழகாக,



"ரெண்டு பிள்ளைகள் இருக்காங்களாம் அவருக்கு. அவங்களுக்கு நகை போட்டுட்டு வரணும்"


அவள் மனம் படம் போல் தெரிகிறது வரோதயனுக்கு. தீபன் தந்ததை கடனாக நினைத்து கழிக்க நினைக்கிறாள். விட்ட குறை தொட்ட குறையாக விடாமல்.



"சின்ன ஆக்களுக்கு பொருத்தமா நகைய வாங்குவம். ஒரு நாள் கோல் அடிச்சிட்டு பொயிட்டு வருவம்"



"இல்ல, அவசரம் இல்ல"



"ஏன்? நினைச்சா முடிச்சிடணும். ஆறு மாசம் ஒரு வருஷம் எண்டு ஒவ்வொண்டுக்கும் இழுத்தடிக்க கூடாது"



"உங்களுக்கு சொல்லி வச்சனே தவிர, இப்பவே போகணும் எண்டு இல்ல.."



"சரி, எப்ப எண்டு நீங்களே சொல்லுங்க"



"ஒரு வருஷம் கழிச்சி"



"ஒரு வருஷமா? அதுக்கும் ஒரு வருஷமா! ஏன் பிரார்த்தனா?" அவன் சலிக்க,



தேநீர் உறுஞ்சியவள் "அவருக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்கு. நாங்க ஒரு பிள்ளையோடையாவது போறல்லயா? நானும் சந்தோஷமா இருக்கன், நிறைவா வாழ்றன் எண்டு காட்ட வேணாமா?"


கண்ணடி சுருங்கி விரிந்தவன் வியந்து அவளைப் பார்த்தான். கண்ணாலேயே மனைவியை ஆலிங்கனம் புரிந்தான். அவனது கண்மணிகள் இரண்டும் ஆர்வமிகுதியில் பளபளத்தன.



இயல்பாக தான் பேசிவிட்டாள் பிரார்த்தனா. ஆனால், திருமணம் முடிந்து பனிரெண்டாம் நாள் இன்று வரையில் ஒரே அறை; ஒரே படுக்கை; ஒற்றை போர்வை பயன்படுத்தினாலும், இருவர் சுண்டு விரல் கூட அவசியம் இன்றி பட்டதில்லை.
தோள் உரசல், கை ஸ்பரிசம் அவசியத்தின் போது இயல்பாக நிகழ்ந்து கடந்து போய் விடும். இரண்டு வாரங்களில் சுவாச நெருக்கமே பழகி இருந்தது இருவருக்கும்.



பேசுவதற்கு மாதங்கள் எடுத்தாள். திருமணத்திற்கு ஒத்துவர வருடம் வேண்டினாள்.



அடுத்தடுத்து சமய சந்தர்ப்பம் பார்த்து அமையும் எனக் காத்திருக்கிறான். இயல்பாக நிகழும் என்று பார்த்திருக்கிறான்.



"அப்ப பத்து மாசத்துக்கு பிறகு ஓடர் குடுப்பமா?"



"நகைக்கா?"



"ம்ம்?"



"ம்ம்!"



"பத்து மாசத்துக்கு பிறகு மூண்டு பேரா போவம் என்றிங்க..."



பிரார்த்தனாவின் முறுவலும் கன்னச் சிவப்பும் அவன் கேட்க வருவதை ஆமோதித்தது.



வரோதயன் அநியாயத்திற்கு வெட்கப்பட்டான்.



புன்னகையை நீட்டித்த பெண்ணிடம் நாணத்தை விடவும் நம்பிக்கையே அதிகம் பிரகாசித்தது.


முற்றும்.


பிரார்த்தனாவின் கதையை வளர்க்க, நிறைக்க, தொடர்ந்து உத்வேகம் அளித்த வாசக நெஞ்சங்களுக்கு நன்றி. தங்கள் மேலான விமர்சனங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
STN85
 
Last edited:

Author: STN - 85
Article Title: நான் அறிய நீ - 24 (ஃபைனல்)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

EswariSasikumar

Active member
Nov 21, 2018
409
236
43
Chennai
அருமையான கதை 💞 💕.. நிறைவான முடிவு 💞 💞 💞. வாழ்த்துக்கள் மா 💞
 
  • Love
Reactions: STN - 85

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
565
461
63
Pondicherry
மனம் நிறைய வைத்த அத்தியாயம்..வரோ புரிதல் அருமை..தனா ஒரு வழியா தனக்கொரு பொருத்தமான துணையை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி..

வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐💐💐💐
 
  • Love
Reactions: STN - 85

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
161
152
43
France
மிக அருமையாக இருந்தது.நல்ல மனங் கொண்ட இருவர் இல்லறத்தில் இணைந்தமை நன்று. எங்கள் அயலில் நடப்பது போல நிதர்சனமான கதை.வாழ்த்துகள்.
 
  • Love
Reactions: STN - 85

kalaivarshini

New member
Jul 6, 2026
2
1
3
India
நான் அறிய நீ

இலங்கை தமிழில் எதார்த்தமான உரைநடையில் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தது போல உள்ளது.

ஒரு குமரி பெண் உணர்வுகளை மறைத்து ஆசைகளை குறைத்து தேவைகளுக்கு கூட தாரளமாக செலவு செய்யாமல் இறுக்கி பிடித்து குடும்பத்திற்காக மாடாக உழைக்கிறாள். ஆனால் அவளை புரிந்து கொள்ள ஒரு ஜீவன் அந்த வீட்டில் இல்லை என்னும் போது அவ்வளவு ஆதங்கமாக இருந்தது.

ரமணி வயதில் மூத்தவராக இருந்தாலும் தனாவுக்கு நல்லது செய்ய துடித்து விடும் மனது. அவரது நட்பு நெகிழ வைத்தது. கடைசியில் அவளை ஒரு திருமணத்திற்கு ஒத்து கொள்ள வைக்க அவர் எடுத்த முயற்சிகள் பாராட்டு தக்கது.

வரோதேயன் பிராத்தனா வாழ்வில் தொடர்ந்து வசந்தத்தை மட்டுமே தர முயற்சிக்கும் ஒரு நல்ல உள்ளம்.

கடற்கரையில் தன்னை பிடிக்கவலில்லை என சொல்லி விடுவாளோ என பரிதவித்த இடமும் அதன் பின்னர் அவனது உரையும் அருமை.

எனக்கு வீடு நிலம் இல்லை கையில் வேலை ஒரு ஜோடி தங்க கம்மல் மட்டுமே சொத்து என தனா சொல்லும் இடத்தில் எனக்கு நீங்க மட்டும் போதும் என்ற இடம் மெய்சிலிர்க்க வைத்தது.

நிலானி மேல் ஆரம்பத்தில் கோபம் இருந்தாலும் அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததும் சுயநலவாதியாக கடைசி வரைஇருந்திடாமல் பணம் தந்து கொஞ்சமேனும் தனா பாரத்தை குறைத்தில் அவள் மீது கோபம் குறைந்து போனது.

வரோதேயனுடனான தனாவின் வாழ்க்கை பயணம் இனிதே இருக்கும்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍👍
 
  • Like
Reactions: ஷமீம்