அத்தியாயம் 10
வெளியே கேட்ட பேச்சு சத்தத்தில் கண் விழித்தான் ஆரன், மெத்தையில் அவன் குப்புற படுத்திருக்க, அவன் வலது கைக்குள் அவனது டீஷர்ட்டை போட்டுக்கொண்டு சுருண்டு படுத்திருந்தாள் நிலாயினி.
சிரித்தபடி அவளை இன்னும் இறுக்க, தூக்கம் கலைவது பிடிக்காமல், முகத்தைச் சுருக்கினாள் நிலாயினி.
"இனி டெய்லி விடிஞ்சப்றமு எனக்கு மட்டும் நிலா தரிசனம் கிடைக்குமே" என அவள் உதட்டில் முத்தம் வைக்க, அப்போதும் மூடியக் கண்ணைச் சுருக்கி விரித்தாளே அன்றி திறக்கவில்லை.
"நிலா பொண்ணு" என இன்னும் நெருங்கி அவள் கழுத்தினுள் புதைய, அவன் மீசை முடி உராய்வில் தான் சுயம் பெற்றாள் நிலாயினி.
ஏசி குளிருக்கு இன்னும் அவனை ஒண்ஃஊடியவளுக்கு அலுப்பு தான் தீரவில்லை, தூக்கம் வேண்டி கண்ணும் உடம்பும் வெகுவாக கெஞ்சியது. அருகில் ஒரு வில்லனை திருமணம் செய்து வைத்துக்கொண்டு அதை எதிர்பார்த்தால் நடக்காதே!
"லஷ்மி நிலாயினி. ஏந்திரிடி!" என அவளின் மொத்தத்திலும் அவன் கைகள் ஊர்ந்தபடி இருக்க, டீஷர்ட் மேலேறுவது போல தோன்றவும் வாரிசுருட்டிக்கொண்டு எழுந்தாள். அவளை விட வேகமாக அவன் இழுத்துப்பிடிக்க, முத்த யுத்தமாகி போனது.
"ஓடுற நீ?"
"விடுறீங்களா நீங்க? பொறுமையே இல்ல உங்கள்ட்ட போங்க" என மூக்கைச் சுருக்கி உதட்டைத் துடைத்து அவனை பின்னால் தள்ளிவிட்டு நகர்ந்து அமர்ந்தாள்.
"சரிடி, நைட்டுப் போட்ட கோட்டெல்லாம் அழிச்சுட்டு இப்ப ஃப்ரெஷா போடுவோம் வா. இப்ப என்னோட உண்மையான பொறுமைய நீ பாக்க போற, நண்டு பிடிக்குறவன விட ஆக பொறுமையா இருக்கும் என் பொறுமை" என உருண்டு வர,
முடியைக் கொண்டையாக்கி கொண்டிருந்தவள் அவன் பேச்சில், "ஆத்தி!" என வேகமாக எழுந்து குளியலறை புகுந்துவிட்டாள். அவள் வெளியே வரவும், அவனும் சென்று குளித்து வர, இருவரும் வெளியே வந்தனர்.
தீக்ஷியும், சந்திராவும் கிளம்பி இருந்தனர். முந்தைய தினமிருந்தே, வெளியே அழைத்து சென்றும் கூட சற்று அமைதியாகவே தான் இருந்தனர், அதனால் அவர்களை நிலாயினி கிளம்பச் சொல்லிவிட அதிக சங்கடபடுத்தாமல் ஆரன் வீட்டினரும் விட்டுவிட்டனர்.
"இப்படியே இருந்துரும்மான்னு தெரியல. ஆனா அவர் இஷ்டம் போல வந்துட்டுப் போறதுக்கு அது சத்திரசாவடி இல்லன்னு அம்மா புரிய வச்சுருந்துருந்தா இப்ப நாம தலை நிமிந்தாவது நின்னுருக்கலாம். வேற ஒன்னும் பண்ணவும் முடியாது அவருக்கு பொண்ணா பொறந்துட்டோமே எங்க சுத்தியும் அவர் பண்ணதோட பலன் நம்மள சுத்தி வந்துட்டே தான் இருக்கும். அம்மாவ பாத்துக்கோங்க, ஃபீல் பண்ணாம போய்ட்டு வாங்க" என சொல்லியே அனுப்பிவைத்தாள்.
"நீயும் பாத்துக்கோ லஷ்மி, சீக்கிரம் அங்க வா மீட் பண்ணலாம்" என அணைத்து விடுவித்தே இருவரும் கிளம்பினர். வெளியே வந்து இருவரையும் காரில் ஏற்றிவிடுகையில் தான் இதை கூறினாள். அவள் பேசியதை அருகில் மதுரனுடன் ஃபோனில் பேசியபடியே கேட்டு நின்றான் ஆரன். அவள் கலங்குவது தெரிந்ததும் பேச்சோடு பேச்சாக தோளில் கையிட்டு அணைத்துக்கொண்டான், அணைத்துப்பிடித்தவாறே தான் மச்சினிகள் இருவருக்கும் கை அசைத்தான்.
"இவன என்ன சார் செய்ய?" என அங்கிருந்து மதுரன்.
"அடைச்சு வை மேன்"
"இன்னைக்கு வரேன்னீங்க?"
"நா லீவ்லல இருக்கேன்டா?"
"அப்ப இவன நா மட்டும் வச்சு என்ன செய்ய?"
"திரும்பத் திரும்ப கேட்ட கேள்வியவே கேட்குற நீ?"
"ஏதாவது சொல்லுங்க சார்"
"ரெண்டு நாள் அவங்கூட எதாவது பேசி பொழுத போக்கிட்ரு. நா வந்துடுறேன்" என வைத்துவிட்டான்.
"இவன்ட்ட என்னத்த பேசிட்ருக்க நானு?" என புலம்பியபடி எதிரிலிருந்தவனைப் பார்க்க, அழுது கொண்டிருந்தான் அந்த குருதேவ்.
"டேய் டாக்டர் தான நீ? கழுத வயசுல செய்ய கூடாததெல்லாம் பக்காவா செஞ்சுட்டு இப்ப ஊழு ஊழுன்னு அழுதுட்டு உட்கார்ந்துருக்க. வாய மூடிட்டு இருக்கணும்" என வெளியே வந்தான். குருதேவ்வை அவன் இடத்தில் தான் அடைத்து வைத்திருந்தனர். இன்னும் அவனை கைதுசெய்த விஷயம் கமிஷ்னர் உட்பட யாருக்கும் தெரியப்படுத்தப்படவில்லை. அவனும் அழைத்து வந்து அடைத்து வைத்த நொடியிலிருந்து அழுது கொண்டுதானிருக்கிறான்.
மதியம் போல் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தான் மதுரன், அவனையும் சாப்பாடையும் மாறி மாறி பார்த்த குருதேவ், பல்லைக் கடித்தபடி அதை அப்படியே தூக்கி மதுரன் முகத்தில் வீசிவிட, அதிலிருந்த தக்காளி சாதம் அவன் முகத்தில் உடையில் பட்டு கீழே சிதறியது. அதில் கடுப்பான மதுரன், "உன்னைய சும்மா வச்சு வேடிக்கைப் பார்த்தா சாப்பாட்ட தூக்கி வீசுவியோ?" என எட்டி மிதித்து கீழே தள்ளியவன், அப்படியே போட்டு நான்கு மிதி சேர்த்து மிதிக்க,
"மன்னிச்சுங்க சார். கொன்னுடாதீங்க, தெரியாம பண்ணிட்டேன் சார்" என சொல்லி சொல்லி அழுதான் குருதேவ்.
"ச்சை வாய மூடு. உன்னைய பாத்தாலே எரிச்சலா இருக்கு. சாப்பாட தூக்கி வீசுனல்ல பட்னியா கெட" என முகத்தைக் கழுவச் சென்றான்.
வெளியே வந்ததும், "சார் அவன் சாப்பாட மூஞ்சில விட்டு எறியிறான் சார்" என ஆரனுக்கு அழைத்துச் சொல்ல,
"உன்ன யாரு மேன் அவனுக்கு பண்டுவம் பாக்க சொன்னது? பசிச்சா அவனே கேப்பான்ல அப்ப குடுத்துருந்தா இது தேவை இல்லைல?"
"ஏன் செஞ்சாம்னு விசாரிக்கணுமே அதுவர நல்லாருக்கட்டும்னு நினைச்சேன்ல என்னைய சொல்லணும்"
"இனி அவன் கேட்டா மட்டும் சாப்பாட குடு" என வைத்தான் ஆரன்.
அடுத்த அரைமணி நேரத்தில் மறுபடியும் அழைத்து, "சார்! ரூம் குள்ளேயே மூச்சா போய் வச்சுருக்கான் சார்?" என சொல்ல,
"அவசரமா வந்துருக்குமோ?" என்றான் சாவகாசமாக ஆரன்.
"சார் நாத்தம் தாங்க முடியல, நீங்க நக்கல் பண்ணிட்ருக்கீங்க"
"அதென்ன பன்னீரா மணக்குறதுக்கு? அத ஏன் நீ மோந்துப் பாக்குற மதுரா"
"கடுப்பேத்தாதீங்க சார். வீடே நாறுது. உள்ள பாத்ரூம் இருந்தும் இங்க போயிருக்கான் சார்" என அழுவது போல சொல்ல,
"ஒரு டாக்டர் அவனே அதுல சாதாரணமா இருக்கான் நீ ஏன் இவ்ளோ புலம்புற?"
"இங்க இருந்து பார்த்தா இப்படி பேச மாட்டீங்க"
"நீ அதுக்குத்தான ப்ளான் பண்ணி ஃபோன் மேல ஃபோன் அடிச்ச வண்ணமா இருக்க?"
"இப்ப இத என்ன சார் செய்ய?"
"பொடனில நாலு போட்டு அவனயே க்ளீன் பண்ண விடுடா. இனி ஃபோன் போட்டனா உன்னைய பொளந்துருவேன் சொல்லிட்டேன்" என கடித்துவிட, அந்த ஆத்திரத்தையும் சேர்த்து குருதேவ்விடம் தான் காட்டினான் மதுரன்.
மதுரனை அம்போவென குருதேவ்விடம் விட்டுவிட்டு, அன்றைய இரவே, மனைவியை அழைத்துக்கொண்டு, மணாலி கிளம்பிவிட்டான்.
மே மாதம் என்பதால் அதிக குளிர் இல்லை, அதே நேரம் நிறைய தென் தமிழக குடும்பங்களையும் சுற்றுலா பயணிகளாக சந்திக்க முடிந்தது.
ஓய்வென்று வந்தாலே. போனை அணைத்து வைத்துவிட கூடியவன், தேனிலவு வந்திருக்க ஃபோனை எடுப்பானா? அது எங்கோ மூலையில் கிடக்க, நிலாயினியை தான் பஞ்சராக்கிக் கொண்டிருந்தான்.
பாராகிளைடிங், ஸ்கீயிங், மற்றும் ஜிப்லைனிங் போன்ற சாகசங்களை செய்ய வைத்து அவளிடம் அடிகளும் வாங்கிக் கொண்டிருந்தான்.
"இனி எங்கையும் உங்களோட நா வர்றதா இல்ல. என்னைய விடுங்க நா ஊருக்கே போறேன்" என மல்லுகட்டியபடி வந்தவளை,
"ஜாலியா இல்ல?" என இழுத்துக் கட்டிக்கொண்டான்.
"இல்லவே இல்ல" என முகத்தை உர்ரென்று வைக்க,
"ஏன்டி? நா என்ஜாய் பண்ணேன்பா. அவ்ளோட டைட் ஹக் நீ அப்டி இப்டி இருக்கும்போது கூட குடுக்குறதில்ல, இப்ப குடுத்தல்ல?"
"இனி ஒன்னுங்கிடையாது போய் பேக் பண்ணுங்க நாம ஊருக்குப் போறோம்"
"ஊருக்கு தானே? போலாமே" என்றவன் மறுநாள் அவள் வெளியே செல்லலாம் என கதறும்வரை விடாமல் அறைக்குள்ளேயே வச்சு செய்துவிட்டான்.
ஆனால் அவன் என்ன செய்தாலும் அவன் கைக்குள் தான் அவள். அப்படித்தான் தூக்கிக்கொண்டு சுற்றினான். திருமணம் முடிந்த புதிதில் அப்படித்தான் இருக்கும், இது எப்போதும் இருக்க வேண்டும் என்று மட்டும் மனதினுள் ஒரு ஒலி ஒலித்துக்கொண்டே இருந்தது அவளுக்கு.
மணாலி வந்த இரண்டாம் நாள் காலை, அறையின் பால்கனியில் டீயுடன் அமர்ந்திருந்தவள் பார்வை வெளியே சுழன்றாலும் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கணவனிடன் சென்று வந்து கொண்டிருந்தது. அந்த டீ அங்கிருந்த கெட்டிலை வைத்து அவளுக்கு அவளே தயாரித்துக்கொண்டது.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான் ஆரன். இங்கு வந்த கடந்து இரண்டு நாட்களாக அவன் கையால் தான் டீ, உணவு என அனைத்தும் அவள் வயிற்றுக்குள் சென்று கொண்டிருக்கிறது.
"சரியான சேட்டை. தூங்கும்போது மட்டுந்தான்பா இந்த வாய் மூடி இருக்கு" என நினைத்தவள் சத்தமின்றி சிரித்துக்கொண்டாள்.
டீயை குடித்து மேசையில் வைத்தவள், எழுந்து சென்று குளித்து உடைமாற்றிவிட்டு விரித்துவிட்ட கூந்தலுடன் மறுபடியும் அதே சேரில் வந்தமர்ந்துகொள்ள, இன்னுமே எழுந்திருக்கவில்லை ஆரன்.
"போய் எழுப்பி விட்ருவோமா? விடிய விடிய என்னைய தூங்க விடாம பண்ணிட்டு, இப்ப என்ன தூக்கமாம் ஏசிபிக்கு?" என முனங்கியவள், "ச்ச பாவம், இப்டி ரெஸ்ட் கிடைக்கும் போது எடுத்தா தானே? தூங்கட்டும்" என அவளும் அப்படியே அந்த சேரில் சாய்ந்து கண்ணயர்ந்துவிட, கொஞ்ச நேரத்தில், அவளுக்கு எதிலோ பறக்கும் உணர்வில், லேசாக கண்விழிக்க, தூக்கி வந்தவன், மெத்தையில் கிடத்தி, கட்டிக்கொண்டு மீண்டும் விட்ட தூக்கத்தைத் தொடர,
நன்கு விழித்தவள், "மிஸ்டர் ஏசிபி" என்றாள் மிக மெதுவாக,
"சொல்லு" என்றான் கண்ணைத் திறக்காமல்.
"எப்ப முழிக்குறதா ஐடியா?"
"முழிச்சா எதாவது வேலை செய்யணும். செய்ய விடுவியா நீ?" என்றான் அவன்.
"வெளில போலாம்"
"அங்க மட்டும்? புலம்பிட்டே தான் வருவ"
"புலம்பாம வர்ற மாதிரி இடத்துக்கு கூட்டிட்டுப் போகணும். வாழணும்னு கல்யாணம் பண்ணிருக்கேன் சூசைட் பண்ற இடமா கூட்டிட்டுப் போறீங்க நீங்க"
"ஹனிமூன் உனக்கு மறக்காம இருக்கணும்லடி?"
"அதுக்கு வேற இடமே இல்லையா இங்க?"
"நீயே செர்ச் பண்ணி எடேன். போவோம்" என்றதும், தலையணைக்கு அடியிலிருந்த செல்லைத் தேடி எடுத்தவள், அதில் தேட, கண்ணை மூடியபடியே அவள் காதில் கோலமிட்டான் ஆரன்.
"ஓல்ட் மணாலி போவோமா?" என்றாள் கூகுள் உதவியுடன்.
"ம்ம் போலாம்" என்றவன் கழுத்துக்கு இறங்க,
"ஏசிபி"
"ம்ம்"
"ஏ சி பி"
"ம்ம்ம்ம்"
"யோவ் ஏசிபி" என கத்தி அழைக்கவும்,
"என்னடி?" என்றான் அவனும் முறைப்பாக,
"போறோமா இல்லையா?"
"போவோம், அதுக்கு முதல்ல இன்னொரு ரவுண்டு போவோம்" என தூக்கி அவளை மேலே போட்டுக்கொள்ள,
"அப்ப போன மாதிரி தான்" என்றவளும் அவன் கழுத்தை சிரித்தபடி கட்டிக்கொண்டாள்.
அன்றைய நாளும் அறைக்குள்ளும், ஹோட்டல் சுற்றியுள்ள தோட்டப்பகுதியிலும் அப்படியே கழிய, மறுநாள் பழைய மணாலி அழைத்துச் சென்றான், நீண்ட நெடிய நடை பயணம் அதற்கு ஏற்றார்போல இரண்டு பக்கமும் பலவகை கடைகள், வாங்கி உண்பதற்கும் வாங்கி குவிப்பதற்கும் கொட்டி கிடந்தது.
வேடிக்கைப் பார்த்தபடி, அவன் கை வளைவில் நடந்தபடி, பேசியபடியே ஒரு நீண்ட நடை பயணம். நிறைய பேசினாள், அவளின் சிறுவயது கதைகள், பள்ளி கல்லூரி வாழ்க்கை, அதன்பின்னான போராட்ட வாழ்க்கை வரை அனைத்தையும் பகிர்ந்தாள்.
அதில் அவன் புரிந்துகொண்டது, அவளுக்கு அவள் அப்பாவை அதிகமாக பிடிக்கும், மூத்த பிள்ளை என்பதால் அவரிடமிருந்து அவளுக்கு கிடைத்த அன்பும் சலுகைகளும் ஏகத்திற்கு அதிகம் போலும். அவர் தவறிய இடம் அவள் மனதில் பெரிய அடியாக விழுந்துவிட்டிருந்தது. அதை ஒரு காரணியாக யாரும் காட்டிவிட கூடாதென்றே அதிகமாக ஓடியிருக்கிறாள் என்று.
"என் அப்பாவா அப்படின்னு நம்பவே முடியலங்க. அவ்வளவு வருஷம் அப்பாவா காட்டின பாசம் எல்லாம் ஒரு நொடில எப்டி காணாம போகும்? அப்படி கூட மனுஷங்க மாறுவாங்களா? காதல் தான் கண்ண மறைக்கும்னு சொல்லுவாங்க. கள்ள காதல்ல என்ன மறைக்கும்? எல்லாம் அனுபவிச்சாச்சு, மூணு பிள்ளைங்க ஆச்சு, நல்ல மரியாதையான வேலையும் இருக்கு. அழகான குடும்பமா தானே நாங்க இருந்தோம். இதுல அப்பாக்கு என்ன குறை வந்துருக்கும், எதுல இங்க இந்த குடும்பத்த விட அந்த இல்லீகல் அஃபைர் பெருசுன்னு போக வச்சுருக்கும்? இப்ப பாருங்க எந்த பேரு எங்கள துரத்த கூடாதுன்னு ஓடி வந்தேனோ, அதே இடத்துல திரும்பவும் கொண்டு நிப்பாட்டிட்டாங்க, எப்பவாது மாறுமா எங்களோட இந்த நிலமை?"
"நிலாமா? மனுஷங்க மனசு எப்ப எப்படி மாறும்னு கணிக்க முடியாதில்லையா? யாரும் பேசுறாங்கன்னுலாம் நாம வாழ முடியாது. உன் அப்பா செஞ்சதுக்கு நீ எதுவும் செய்ய முடியாதுன்னு தெரியாமலா அவங்க பேசுறாங்கன்னு நினைக்கிற? தெரிஞ்சே பேசுறவங்களுக்கு நாம விளக்கம் சொல்லியும் யூஸ் கிடையாது"
"ஓ, அப்ப இப்படியே கேட்டுட்டே அமைதியா போகணும்ல?"
"சரி அதவிடு, நீ எப்டி சட்டுன்னு என்னைய அக்ஷப்ட் பண்ணிகிட்ட. உன் மனசு எப்படி எங்கிட்ட மாறுச்சு?"
"நா உங்ககிட்ட ஓகே சொன்னதும் எங்கப்பா அப்படி செஞ்சதும் ஒன்னா?"
"இல்லடி, நாம நம்ம கதைய பேசுவோமேன்னு உன்ன டைவர்ட் பண்ணேன், நீ மறுபடியும் அங்கேயே போய் நிக்ற"
"சரி கேளுங்க, என்ன தெரியணும்?"
"அதுக்கு ஏன் உடனே மூஞ்ச உர்றுன்னு ஆக்குற? சிரிச்சுட்டே கேளு"
"ஈ ஈ சொல்லுங்க" என்றவளுக்கு அவன் பாவனையில் உண்மையில் சிரிப்பு தான்.
"நிலா"
"உங்க நிலாவே தான் சொல்லுங்க"
அவள் இன்னும் சோகமாக இருப்பதாக நினைத்தவன், சமாதானம் செய்ய எண்ணி, "சரிடி உங்கப்பா செஞ்சது தப்புத்தான் மன்னிக்கவே முடியாத குற்றம் தான். உங்க அம்மாவ மட்டும் ஒரு கம்ப்ளைண்ட் குடுக்க சொல்லு தூக்கிட்டுப் போய் உள்ள வச்சுடுறேன். மனுஷன் களி திண்ணட்டும்" என்க,
"எங்கம்மா தான் குடுக்க மாட்டாங்களே?" என்றாள் அவள்.
"ஏன் குடுக்க மாட்டாங்க?"
"தெரியல, நா அப்பவே சொல்லிருக்கேன், வாம்மா போய் அவர் மேல கம்ப்ளைண்ட் குடுப்போம்னு, வரவே மாட்டேனுட்டாங்க"
"ஏன்னு யோசிச்சுருக்கியா?"
"ம்ம் அம்மா அவர ரொம்ப லவ் பண்றதால போட்டும்னு விடுறாங்களோன்னு தோணும்"
"ம்ம், வேற?"
"வேறன்னா? அப்பா விலகி நின்னது அம்மாட்ட இருந்து தான். எங்களுக்கு எல்லாமே சரியா தான் செஞ்சார். நகை கூட போதுமானளவு சேர்த்துட்டார். டேர்ம் இன்ஸூரன்ஸ் கூட எங்க பேர்ல போட்டு வச்சுருந்தார்"
"இன்னொரு இல்லீகல் அஃபைர் வந்ததால் உங்க அம்மாட்ட இருந்து விலகினாரா, இல்ல உங்கம்மாட்ட இருந்து விலகினதால இன்னொரு அஃபைர் வந்துச்சா அவருக்கு?" என்றான் அவன்.
"தெரியலயே?"
"உங்கம்மா இப்ப ஈசியா அக்சப்ட் பண்ணிக்கறதா பாத்தா அவங்க சைடும் ஏதோ இருக்கலாம்னு தோணுது"
"என்ன இருக்கும்? ஆம்பளன்றதால அவருக்கு சப்போர்ட் பண்றீங்களா?" என நின்று எகிறியவளை,
"ஆத்தாடி உடனே சூலாயுதத்த ஏந்தாதம்மா, அவர் பண்ணது கண்டிப்பா தப்புதான், நா அத சொல்ல வரல, ஒரு சின்ன எக்ஸாம்பிள் சொல்றேன், உன்னால என்னைய சேட்டிஸஃபை பண்ண முடியலன்னு வச்சுக்கோ நீ என்ன பண்ணுவ?"
"என்ன சேட்டிஸ்ஃபை?"
"இப்ப நானும் நீயும் ரொம்ப தூரம் நடந்து போறோம், உன்னால பாதிக்கு மேல நடந்து வர முடியல, ஆனா எனக்கு நடக்க ஆசையா இருக்குன்னு உனக்கு தெரியுது, அப்ப நீ என்ன செய்வ?"
"போய்ட்டு வாங்க, நா இங்கேயே வெயிட் பண்றேன், திரும்ப வரும்போது என்னைய பிக்கப் பண்ணிக்கோங்கன்னு சொல்லுவேன். அப்படியே போற வழியில எவளையாவது சேர்த்துக்கோங்கன்னு சொல்ல மாட்டேன்" என முறைத்தாள் நிலாயினி.
"நீ நிலா சொல்ல மாட்ட. உங்கம்மா?"
"எந்த பொண்டாட்டியும் சொல்ல மாட்டா" என்றாள் இன்னும் உர்ரென்று.
"சரிவிடு, அவங்க என்னவும் பண்ணட்டும் நமக்கென்ன?" என இவன் தான் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது.
"உங்க பேச்சு ஒன்னும் சரியில்லையே? என்ன உங்க ப்ளானு? எனக்கு ப்ராமிஸ் பண்ணாம டிமிக்கி குடுக்குறது பாதில கழட்டி விடத்தான?"
"எங்க சுத்தி எங்க வர்ற நீ? போடி லூசு" என அவள் மண்டையில் கொட்டியவன், சென்று ஒரு பென்ச்சில் அமர்ந்துவிட, தானும் சென்று அவன் அருகில் சற்று தள்ளி அமர்ந்தாள்.
அந்நேரம் அவள் ஃபோன் அடிக்க, அவனுக்கு அழைத்து அழைத்து ஓய்ந்திருந்த மதுரன், அப்போதென்று நிலாயினி எண்ணிற்கு அழைத்து தானாக வந்து தலையைக் கொடுத்தான் ஆரனிடம்.
ஃபோன் இருந்ததே அவன் பாக்கெட்டில் தான் என்பதால், "என்ன தாண்டா வேணும் உனக்கு?" என எடுத்ததும் கடிக்க,
"சைக்கோ சார் இவன்" என அங்கிருந்து அலறினான் மதுரன்.
"அத கண்டுபிடிக்கவே உனக்கு மூணு நாளாச்சா? லவ்வு பண்ண தெரியுதுல ஒரு சைக்கோவ பாத்ததும் தெரியாதா?"
"லவ் பண்ணா சைக்கோவ தெரிஞ்சுருக்கணுமா? ஏன் சார் இப்படி இவன்ட்ட கோர்த்து விட்டீங்க என்ன" என அழவே செய்தான் மதுரன்.
"அவன் டெம்பர் ஆகணும், அப்பதான் நமக்கு உண்மைய சொல்லுவான் ஈசியா வேலை முடியும், சும்மா அவன்ட்ட கெஞ்சிட்டு திரிய முடியாது"
"இப்ப நானும் சைகோ ஆகிடுவேன் போல இருக்கு. நா ஆம்பளன்னு கூட பாக்காம ட்ரெஸெல்லாம் அவுத்துட்டு நிக்கான் சார். இத பாக்கவா சார் நா இங்க உட்கார்ந்துருக்கேன்"
"கண்ண மூடாம நீ ஏன் மேன் பார்த்த?"
"சார் நானே பாவம்"
"ஹனிமூன் வந்தவன இப்டி டார்ச்சர் பண்றியே அது பாவம் இல்லையா?"
"இப்ப என்னைய இவன்ட்ட இருந்து காப்பாத்துவீங்களா மாட்டீங்களா?"
"அவன் அப்படி நிக்றது அல்ரெடி வீடியோ ரெக்கார்ட் ஆகிருக்கும். அத எடுத்து அவனுக்கே போட்டு காட்டு. மொத்த ரூமையும் இருட்டாக்கிவிடு, டிவி மட்டும் ஓடிட்டே இருக்கட்டும், சாப்பாடு தண்ணி எதுனாலும் கேட்டா மட்டும் குடு, தனியாவே இருக்கட்டும் நீ அவன் முன்னவே போகாத"
"அப்படி பண்ணா?"
"நீ கண்ட கருமத்தையும் பாக்க தேவை இருக்காது" என்கவும், அமைதியானவன், மறுபடியும் முதல் கேள்விக்கே வந்தான்.
"நீங்க எப்ப வரீங்க?"
"நா பத்து நாள் லீவ்ல இருக்கேன்டா"
"அதெல்லாம் முடியாது சார். நீங்க வந்து இவன கை மாத்திக்கோங்க. அவனுக்கு ஒரு முடிவு கட்டிட்டு எத்தன நாள் லீவ் வேணா எடுத்துக்கோங்க"
"டேய் நா சீனியரா நீ சீனியரா?"
"சைகோவோட மல்லுகட்ரதுல நீங்க தான் எனக்கு சீனியர், அதனால நீங்களே வாங்க"
"வரவர ஒருத்தருக்கும் பயமில்லாம போச்சு" என அருகில் இருந்தவளையும் சேர்த்துப் பார்த்து உறும,
"ப்ளீஸ் சார், அப்றம் நா கத்தி அழுதுருவேன்" என மதுரன் பாவமாக கேட்டதில்,
"என்னன்னு தான் போலீஸ் ஆனியோ. வச்சு தொலை, நாளகழிச்சு வந்துருவேன்" என்றுவிட்டே வைத்தான்.
"எதுக்கு இப்ப டென்ஷனா இருக்கீங்க? அந்த குருதேவ் சைகோவா? என்னவும் பெருசா பண்ணிட்டானா?" என பயந்து கேட்க,
"அவன நா பாத்துப்பேன். பட் டென்ஷன் உன்னால தான்"
"நா என்ன பண்ணேன்?"
"எதுக்கு உங்க அப்பா கதை எல்லாம் பேசி இப்ப மூஞ்ச தூக்கிட்டு உட்கார்ந்துருக்க? நா கேட்டனாடி உங்க அப்பாவோட இல்லீகல் ஸ்டோரி?" என மறுபடியும் அவள் பேச்சை மாற்றிவிட்டான்.
"பாதில மனசு மாறும்னு நீங்க சொன்னது மட்டும் சரியாங்க?"
"மாறாத மாதிரி நீதான் என்னைய பாத்துக்கணும்னு அர்த்தம் இருக்குல்ல?"
"ஆஹான்! அதெப்படி பாத்துக்குறதுன்னு கொஞ்சம் சொல்லுங்க?" என அவன் அருகில் வர,
"பாசமா பாத்துக்கணும்"
"பாத்துக்கலனா என்ன செய்வீங்க?"
"என்ன செய்ய முடியும்? கலகலன்னு சிரிக்க தெரியாத பொண்டாட்டின்னு தெரிஞ்சும் அட்ஜஸ்ட் பண்ணலையா அதுமாதிரி பாசமே இல்லாத பொண்டாட்டியையும் அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியது தான். ஆனா எழுதி வச்சுக்கோ நிலா முப்பது பிள்ளையும் பொம்பள பிள்ளையா பெத்து பாசத்தப் போட்டிப் போட்டு என்மேல காட்ட வைக்கல" என அவன் சபதம் எடுக்க,
"முப்பது பிள்ளைய நீங்க க்ளோனிங் மெஷின்ல ஆர்டர் குடுத்து தான் எடுக்கணும். குடுத்துட்டீங்களா?"
"குடுக்குறேன்டி, மொத்தமா குடுக்குறேன்" என்றான் முறைப்புடன்.
"ரொம்பத்தான்!" என்றவள் வந்த சிரிப்பை அடக்கி அமைதியாக அமர்ந்து வேடிக்கைப் பார்த்தபடி இருக்க, அருகிலிருந்த மரத்திலிருந்து வந்த காற்றுக்கும் அவ்வளவு நேரம் நடந்ததற்கும் இரவு விழித்ததற்கும் கண்ணை சொக்கியது அவளுக்கு, இன்னும் நகர்ந்து வந்து அவன் தோளில் சாய்ந்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.
"அகம்பிடிச்ச கழுத" என்றவன் அணைவாக பிடித்தமர்ந்திருந்தான். கடந்து சென்றவர்கள் எல்லாம் பார்த்து சிரித்து கையசைத்தும் செல்ல, தானும் சிரிப்புடன் பார்த்திருந்தான் ஆரன்.
மறுநாள் தேனிலவை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர். விமானத்தில் திருவனந்தபுரம் வந்திறங்கி தென்காசி வந்து சேர்ந்தனர்.
வந்ததும் ஆரன் சோஃபாவில் குப்புற கவிழ்ந்துவிட, நிலாயினி தன் உடமைகளை அவர்கள் அறையில் கொண்டு வைத்துவிட்டு வந்தாள்.
"பயணம் நல்லாருந்துச்சாம்மா?" என்றார் இளங்கோவன்.
"குளிராம்மா அங்க?" என்றார் தங்கமாடத்தி.
"நல்லாருந்துச்சு மாமா. வெயில் நேரம் தானத்தே, அங்கேயும் வெயில் தான் ஆனா இங்க அளவுக்கு இல்ல" என்றபடி, சோஃபா அருகில் வந்து நிற்க,
"நீயும் அப்பாவும் ஒரு ரவுண்டு போய்ட்டு வர்றீங்களா?" என்றான் தலையை மட்டும் நிமிர்த்தி ஆரன்.
"மொழி தெரியாத ஊர்ல போய் உங்கப்பா என்னைய தொலைச்சுட்டு வர்றதுக்கா?"
"அப்டி தொலைஞ்சு போக கூடிய ஆளாம்மா நீ? எவெரஸ்ட் மலையவே தமிழ்ல கூவி கூவி வித்துடுவம்மா நீ?"
"உன்ன விட கொஞ்சம் கம்மி தான்டா எனக்கு" என அவர் முகத்தைத் திருப்ப, சிரித்தாள் நிலா,
"ம்மா நா ஆபிஸ் போகணும். நானும் நிலாவும் நாளைக்கு காலைல திருநெல்வேலி கிளம்பிடுவோம்"
"அவளுக்கு ஒரு மாசம் லீவு தானே? லீவு தானேம்மா?" என மாடத்தி அவனிடம் சொல்லி அவளிடமும் கேட்க,
"ஆமாத்த" என அவள் சிரிக்க, அவன் கண்கள் சுருக்கிப் பார்த்தான், "லீவுன்னா அங்க வந்து என்கூட இருக்கட்டும்" என்றான்.
"உனக்கு வேணும்னா நீ வந்துட்டு போயேன். அவ இங்கன இருக்கட்டும், லீவு முடிஞ்சா வேலைக்கு அங்க தான வருவா"
"அதுக்கு?"
"வேலைக்கு ஜாயின் பண்றப்ப வரட்டும் விஷ்வா அதுவர இங்க இருக்கட்டும் நீ போய்ட்டு ரெண்டு நாளைக்கு ஒருக்கா வா"
"நிலாவ எங்கூட இருக்க கல்யாணம் பண்ணியா இல்ல உங்கூட வச்சுக்க கல்யாணம் பண்ணியா?"
"ஏன்டா லீவு முடியற வர இருக்கட்டும்னு தான சொல்லுதேன்"
"அந்த லீவு முடியுற வர அவ என்கூடவே இருக்கட்டும்" என மல்லுக்கு நின்றான்.
"நீ போறியா இருக்கியாம்மா?" என தங்கமாடத்தி அவளிடமே கேட்க,
திரும்பி கணவனைப் பார்த்தாள், "வெளுத்துருவேன்!" என விரல் நீட்டி மிரட்டினான் ஆரன்.
"எதுக்கு அந்த புள்ளைய மிரட்டுற நீ?" என தங்கமாடத்தி சண்டைக்கு வர,
"உன்ன யாரு புது பிரச்சனைய கிளப்ப சொல்றா?" என்றான் மகன்.
"அவ வந்தா கூட்டிட்டு போ, சும்மா பொம்பள பிள்ளைய அரட்டக் கூடாது, அவ பாவமா நிக்கா பாரு" என சொல்ல,
"பாவமா?"
"ஆமா, பாரு"
"நீ போய் ஊருக்கு வேணுங்குறத பேக் பண்ணு நிலா, நாம இப்பவே கிளம்புவோம்" என்றான் அவன்.
"போகவா அத்த?" என உண்மையிலேயே அவனை வெறுப்பேற்ற அவரிடம் கேட்க,
"உனக்கு இந்தா வர்றேன் இரு" என அவன் சோஃபாவில் இருந்து எழுந்த வேகத்தில், வேகமாக சென்று தங்கமாடத்தி அருகில் நின்றுகொண்டாள்.
"ஏன்டா அவள அடிக்க வர்ற? உன் போலீஸ்காரன் முரட்டு தனத்த அவகிட்ட காமிப்பியோ? அவ வரமாட்டா நீ தனியாவே போ" என பேச,
"தங்கோ இங்க வா" என இளங்கோவன் உள்ளறையிலிருந்து அழைக்கவும், "திட்டாதடா அவள, புது இடம். திட்டினா அவளுக்கு ஒருமாதிரி இருக்கும். அவ இங்க இருக்கானா இருக்கட்டும் ஒரு வாரம் கழிச்சு வந்து கூட கூட்டிட்டுப் போ. அப்பாட்ட என்னனு கேட்டுட்டு வரேன். ரெண்டு பேரும் குளிச்சுட்டு வந்து சாப்பிடுங்க" என சொல்லிவிட்டு செல்ல,
"பாவமா நடிக்கிற நீ கள்ளி" என அவள் கன்னத்தில் நறுக்கென்று கிள்ளி வைத்தான்.
இருவரும் மறுநாள் காலை உணவை முடித்துக்கொண்டு அவனது பல்சரிலேயே கிளம்பிவிட்டனர். நேராக அவன் வீட்டின் முன் சென்று தான் வண்டியை நிறுத்தினான்.
வண்டி சத்தத்திற்கே வினோதினி வேகமாக வெளியே வந்தார். திருமணத்தன்று கிளம்பி வந்தபிறகு அவரும் அவளுக்கு அழைக்கவில்லை, அவளும் அழைக்க முயலவில்லை.
சாம்பல் நிறத்திலான சுடிதாரில், கல்யாணம் முடிந்த புதுப்பெண் கலையுடன் வந்திறங்கியவளைக் கண்டு அவர் வீட்டு வாசலில் நின்றே திருஷ்டி வழித்தார்.
பின் மெதுவாக அவர்களிடம் வர, வண்டியை நிறுத்தி இறங்கியவன், திரும்பி அவரிடம் சிரிக்க, "வீட்டுக்கு வாங்க மாப்ள" என்றார் மெதுவாக, நிலாயினி சாதாரணமாக பார்த்தபடி நின்றுகொண்டாள்.
"ட்யூட்டி டைம் ஆகிடுச்சுத்த போய் கிளம்பணும். நீங்க வாங்க வீட்டுக்கு. சந்திராவும் தீக்ஷியும் போயாச்சா?"
"ஆமா இப்பதான் போனாங்க. உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரட்டுமா? சாப்பிடுவீங்களா?" என அவர் மெல்ல கேட்க,
திரும்பி நிலாயினியைப் பார்த்தவன், அவள் எதுவும் பேசப்போவதில்லை என்றதும், "சரி எடுத்துட்டு வாங்க" என்றான், பின் ட்ராவல் பேக்கை கையிலெடுத்து மேலேற, நிலாயினி அவனை முறைத்தவாறே பின் தொடர்ந்தாள்.
வினோதினி வேகமாக சென்று இருவருக்கும், இட்லியையும் இரண்டு வகை சட்னியையும் எடுத்து வைத்தவர், ரவையை நெய்யில் வறுத்து, நிமிடங்களில் கேசரி கிண்டி அதையும் ஒரு டப்பாவில் போட்டு எடுத்துக்கொண்டு, ஆரன் வீட்டிற்கு கிளம்பி வெளியே வர, ஹாலில் அமர்ந்து அனைத்தையும் மௌனமாக பார்த்தபடி இருந்தார் செல்வகுமார்.