அத்தியாயம் 12(இறுதி அத்தியாயம்)
தாழையூத்து, அங்கு தான் மதுரனின் வீடு, வாசலின் இருபக்கமும் வாழைமரம் வரவேற்க, முன்னால் பந்தலிட்டு, வண்ண வண்ண சீரியல் விளக்குகளோடு, பாட்டு சத்தம் காதைக் கிழிக்க, பெரியவர்கள் பரபரப்போடு உள்ளே வெளியே வேலையாக இருக்க, நண்டு சிண்டுகள் இங்குமங்கும் ஓடி சிரித்து விளையாண்டு அவர்களை தொந்தரவு செய்தபடி இருந்தனர். மொத்தத்தில் கல்யாணக் கலைக் கட்டியிருந்தது அவன் வீடு. பட்டு வேட்டி சட்டையில் மாப்பிளைத் தோரணையில் வாசலிலேயே எல்லோரிடமும் பேசியபடி நின்றான் மதுரன்.
மறுநாள் அதிகாலை மண்டபத்தில் வைத்து முகூர்த்தம், இப்போது பெண் வீட்டிற்குப் பெண்ணழைக்க அவன் வீட்டினர் பம்பரமாக கிளம்பிக் கொண்டிருந்தனர்.
"நீ இப்ப மண்டபம் வர வேணாம், அங்க வேலைப் பாக்க நம்ம ஆளுங்க இருக்காங்க. பெரியப்பாவும், பெரிய மாமாவும் நைட் அங்கேயே தான் இருப்பாங்க. அதனால நீ காலைல கிளம்பி முகூர்த்த நேரம் வந்தா போதும். லவ் மேரேஜ்னு ஏற்கனவே பேச்சா இருக்கு, எதாவது செஞ்சு வைக்காம கல்யாணம் முடியுற வர கம்முன்னு இருக்கணும் புரியுதா" என மதுரனிடம் அழுத்தி சொல்லியே மதுரன் வீட்டினர் கிளம்பியிருந்தனர்.
"சார் வீட்ல தான இருக்கீங்க, இந்தா வந்துட்டேன்" என ஆரனுக்கு அழைத்துக் கூறியவன்,
இவர்களுக்கு முன், அங்கு ஆரன் வீட்டில் நிற்க, அவனை முறையோ முறை என்று முறைத்தனர் மதுரன் வீட்டினர்.
"நா பாட்டுக்கு இங்க தனியா தான நிக்கேன், பொண்ணு வீட்டுக்குள்ளையா வந்தேன்? எதுக்கு சார் இப்டி முறைக்குறாங்க?" என அருகில் நின்ற ஆரனிடம் கேட்க,
"நீ மாமியார் மருமக சண்டைக்குப் பிள்ளையார் சுழி போட்டுட்ட மேன்" என்றான் ஆரன்.
"நானா? எப்போ?" என மதுரன் அதிர,
"இதோ இப்பத்தான், சற்றுமுன்"
"நா எதுவுமே பண்ணலயே சார்?"
"ம்கூம் இனி ஒன்னும் செய்ய முடியாது. நாளும் பொழுதும் பஞ்சாயத்தும் சொம்புமா சுபமா இருக்கப் போகுது உன் கல்யாண வாழ்க்கை"
"பயமுறுத்தாதீங்க சார்" என படபடத்தான் மதுரன்.
"அவங்க உன்னைய மண்டபத்துக்கு போ சொன்னா அங்க தான போயிருக்கணும் நீ. உன்ன யாரு நேரா இங்க வர சொன்னது? கல்யாணம் முடியுற வர அடக்கி வாசிக்க முடியல?"
"பொண்ணு எப்படி ரெடியாகிருக்கான்னு பாக்க வந்தேன் சார். அவள நா சேரில பாத்ததே இல்ல" என வெட்கப்பட,
"அய்ய நெளிஞ்சு தொலையாத. ஒரு சேரி ஷோக்கு ஆசைப்பட்டு வாழ்க்கைய அடமானம் வச்சுட்டியேடா மதுரா. இன்னைக்கு நீ பாஞ்சுட்டு உன் பொண்டாட்டிய பாக்க வந்தது உன் காலத்துக்கும் நின்னு பேச போற விஷயமாகப் போகுதுன்னு தெரியாம போச்சே உனக்கு? பாவம்டா நீ"
"என்னாகும் சார்?"
"ஒன்னும் சொல்லிக்கிறதுக்கில்லடா" என அவனை இவன் வெறுப்பேற்றியபடி இருக்க, அங்கு எதிர்வீட்டில் சந்திராவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தனர்.
சந்திராவின் இந்தப்பக்கம் நிலாயினியும் அந்தப்பக்கம் தீக்ஷியும் வர, நிலாயினி நிமிர்ந்து இவனைப் பார்த்து, வேனைக் கண்காண்பித்து, 'போகட்டா?' என்க,
"நோ!" என வாயசைத்துக் கண்ணை உருட்டினான் மேலிருந்தே ஆரன்.
"ப்ளீஸ்!" என்றாள் இவள் கீழிருந்து மறுபடியும்,
"கொன்றுவேன்! மேல வாடி" என விரல் நீட்டி எச்சரித்தான் அவன்.
"க்குகூம்" என வாயைக் கோணித்துத் திரும்பிக் கொண்டாள்.
"சொல்லிட்டே இருக்கேன். இவள!" என கைச்சட்டையை மடக்கிக்கொண்டு கீழே இறங்கிவர,
அங்கு வேன் அருகில் நின்று தங்கைகளிடமும், வினோதினியிடமும், "நா அவங்க கூட பைக்லயே வரேன்மா. வெளி காத்துக்கு கொஞ்சம் நல்லாருக்கும்" என சொல்லிக்கொண்டிருந்தாள் நிலா.
பின்னயே வந்து நின்ற ஆரனைப் பார்த்ததும், சரி என வேகமாக தலையசைத்துவிட்டனர். அவர்கள் வேன் ஏறி சென்றபின், நடுரோடு என்றும் பாராமல், திரும்பி நின்று முறைத்தவள், "ஏன் இப்படி பண்றீங்க?" எனக் கேட்க,
அவள் மேடிட்ட வயிற்றை மூடியிருந்த சேலையை தள்ளிக்கொண்டு தெரிந்த இடுப்பை, மறுபடியும் சேலையை இழுத்துவிட்டு சரி செய்தவன், "உனக்கு என்னோட வந்தா என்ன?" என்றான் அவனும் முறைத்து.
"சந்திரா என்ன நினைப்பா? நா அவகூட வரலன்னு நினைக்க மாட்டாளா?"
"அவளுக்கு இன்னைக்கு உன்ன நினைக்குற அளவுக்குலாம் நேரம் இருக்காது" என்றவன், திரும்பி மதுரனைத் தேட, வேன்பின்னவே அவனும் கிளம்பியிருந்தான், "மந்திரிச்சு விட்ட மாதிரி திரியிதான் ஒருத்தன். அவன சமாளிக்குறது தான் உன் தங்கச்சிக்கு இப்ப பெரிய டாஸ்க்கே" என்க,
"போங்க நீங்க, தீக்ஷியும் சிரிச்சுட்டே தான் போறா. நக்கல் பண்ணுவாளுங்க அப்றம்"
"அவள என்ட்ட பேச சொல்லு, பத்து நாள் காய்ஞ்சு போய் வந்துருக்கவன் நிலைமை தெரியாம என்ன நக்கல் வேண்டிகடக்கு?" என எகிற,
"அச்சோ வாய மூடுங்க. ஏன் கத்துறீங்க" என்றவள் அவனை இழுத்துக்கொண்டு மாடியேற,
"சாப்பிட்டியா? மூணு மணிக்கு போனவ மணி இப்ப எட்டு, இவ்ளோ நேரம் என்னைய எட்டி கூட பாக்கல. இப்பவும் அவங்களோடவே போறேன்ற?" என கடுப்பாக கேட்டபடி தான் பின் தொடர்ந்தான்,
"கல்யாண வீடுங்க, நேரம் போறதே தெரியாது. வர சொன்னா நீங்க அங்க வரல, உங்களுக்கு குடுத்து விட்டேன்ல?"
"உன்ன சாப்டியான்னு கேட்டேன்?"
"சாப்டேன் ஆனாலும் இப்ப பசிக்குது" என அவள் வயிற்றைத் தடவ,
"வா சாப்பிடுவோம்" என வீட்டினுள் வந்தான்.
"நீங்க இன்னும் சாப்பிடவே இல்லையா?"
"இல்ல நீ வருவன்னு தான் வெயிட் பண்ணேன், சேரி எதுவும் மாத்தப் போறியா, இருக்கட்டுமா?"
"இனி அங்க போய் மண்டபத்தல சந்திராவ விட்டுட்டு வரத்தான? வேறெதுவும் செய்யப் போறதில்ல, அங்க எல்லாரும் தூங்கவும் போயிடுவாங்க, பேசாம சுடி மாத்திக்கட்டா?" என்றாள் வேகமாக,
"போய் மாத்திட்டு வா. போய் தலைய காண்பிச்சுட்டு சீக்கிரம் வந்தா தான் காலைல கிளம்பி போக சரியா இருக்கும்" என்றதும் விறுவிறுவென சென்று சுடிதார் ஒன்றை மாட்டிக்கொண்டு வந்துவிட்டாள். சாப்பாட்டை எடுத்து வைத்தவாறு தாயாராக நின்றவன், அவளுக்கு ஊட்ட, வாங்கிக் கொண்டாள், அவனும் அதோடே சாப்பிட்டு முடிக்க, இருவரும் மண்டபம் கிளம்பிச் சென்றனர்.
சந்திரா அவளுக்கான அறையில் இருக்க, தீக்ஷியும் அவள் தோழிகள் இருவரும் சந்திராவிற்கு துணை இருந்தனர்.
"வாக்கா. அத்தான எங்க?" என தீக்ஷி சிரிக்க,
"வெளில பேசிட்ருக்காங்க. அம்மா எங்க தீக்ஷி?"
"சந்திராவோட மாமியார் தான் கூட்டிட்டுப் போயிருக்காங்க. தூங்க இங்க தான் வருவாங்க. நீ தங்குறியா வீட்டுக்குப் போய்ட்டு வருவியா?" என்றாள் சந்திரா.
"ஏசிபி சார் விடணுமே?" என தீக்ஷி சிரிக்க,
"ஏய்!" என்றாள் நிலாயினி.
"இங்க இருந்துடு பாப்போம்?" என சந்திராவும் சிரிக்க,
"அலேக்கா தூக்கிட்டுப் போயிடுவாரே நம்மத்தான்" என்றாள் தீக்ஷி.
"தூங்குங்கடி. காலைல சீக்கிரம் எந்திரிக்கணும்ல? ப்யூட்டிஷியன் ஃபோன எடுத்தாங்களா?"
"பேசிட்டேன்கா. வண்டில இருந்தாங்களாம் அதான் அப்ப எடுக்கலன்னு சொன்னாங்க. காலைல டான்னு மூணு மணிக்கு இங்க நிப்பேன்னு சொல்லிட்டாங்க"
"சூப்பர். மணி பத்தாகிடுச்சு. நானும் போய்ட்டு காலைல கிளம்பி வரேன். அம்மா வந்தா சொல்லுங்க" என்றபடி நிலாவும் கிளம்பிவிட்டாள்.
வெளியே பார்த்தவர்கள் எல்லாம், "ஏம்மா இங்கன தங்கச்சிமாறோட இருக்க வேண்டியது தான? வயித்து பிள்ளகாரி என்னத்துக்கு இங்கனயும் அங்கனயுமா இந்நேரத்துல அலையிற?" எனப் பிடித்துப் பிடித்து நிறுத்த, இவளுக்கு தான் பதில் சொல்லி முடியவில்லை. எப்படியோ தப்பித்து வெளியே வந்தவள், வாசலில் ஆண்களோட நின்றவனிடம் வர, "போவோமா?" என அவனும் அவர்களிடம் சொல்லிக்கொண்டுக் கிளம்பினான்.
"இருந்தா என்ன? ஒருநா புருஷன விட்டுட்டு இருக்க மாட்டியா? இந்நேரத்துல ஏன் அலையிறன்னு அவ்ளோ கேள்வி தெரியுமா? உங்கள உள்ள வந்து பதில் சொல்லிக் கூட்டிட்டுப் போக விட்ருக்கணும்" என வழிநெடுக பொரிந்தபடியே தான் வந்தாள்.
பத்து நிமிடத்தில் வீடு வந்து விட்டனர், அவள் இறங்கவும், வண்டியை நிறுத்தி இறங்கியவன், "ஆமா என் புருஷன கட்டிட்டுத் தூங்கினா தான் தூக்கம் வரும்னு ஒரு வரில முடிச்சுருக்கணும்டி நீ" என்க,
"ஏற்கனவே சிரிக்கிறது பத்தாதோ?" என பேசியபடி இருவரும் மேலே வந்துருக்க,
"எதுக்கு சிரிக்கணும்? அவங்களுக்கு தெரியுமா பத்து நாளா சென்னை போய்ட்டு வந்துருக்கேன் பொண்டாட்டிய பிரிஞ்சு ஏக்கத்துல இருக்கேன்னு?" என்றபடி உடை மாற்றினான் ஆரன்.
"ஏக்கத்துல இருக்கவங்க தான், பத்து நாளும் ஃபோன் மேல ஃபோன் பண்ணி உங்க டெம்பர் க்ளாஸ் தேய்ஞ்சு போச்சோ?" என்றவள் அப்படியே சென்று படுத்துவிட்டாள்.
"கொலைகாரன பிடிக்கப் போன இடத்துல மூட் மாறக்கூடாதே நிலா பொண்ணு" என்றவனும் வந்து அவளைக் கட்டிக்கொண்டுப் படுத்துவிட்டான். அவளை வாசம்பிடிக்க, வாகாக குடுத்தாள் அவன் நிலாவும்.
இன்று குருதேவ்வின் வழக்கு முடிந்து ஒரு வருடம் ஓடியிருந்தது. குருதேவ் கமிஷ்னர் அலுவலகத்தில் வைத்து தற்கொலை செய்து கொண்டதால், ஆரன் விசாரணை கமிஷனுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்க, எப்போதும் போல் இதையும் சமாளித்துவிட்டான்.
"நீங்க ஏன் அவர் பார்வைல படுற மாதிரி சேரி கொண்டு வந்தீங்க?" என்றனர், அவர்களுக்குத்தான் தெரியுமே நமது நாயகனின் கைகரியங்கள்.
"குருதேவ் ஒரு மனநோயாளி, திடீர்னு அழுறான், திடீர்னு ஆக்ரோஷமா நடந்துக்குறான். அவன் அம்மாக்கு மட்டும் கொஞ்சம் பயப்படுவான். அதனால அவன் அம்மா யூஸ் பண்ண எதையாவது அவனோட இருக்க மாதிரி வைங்கன்னு டாக்டர் தான் சொன்னாரு. அம்மா பாசம், சேலைனா சென்டிமெண்டா இருக்குமேன்னு கொண்டு வர சொன்னேன். அதகூட ஆள் இருக்க நேரம் மட்டும் அவன்ட்ட குடுத்துட்டு வாங்கிடுங்கன்னு தான் சொல்லிருந்தேன். அவனா இப்படி எடுத்துட்டு போவான்னு நினைக்கல. அன்ஃபார்சூனேட்லி அப்படி நடந்துருச்சு" என அவனுக்காக பாவப்பட்டு இவன் உச்சு வேறு கொட்ட, கமிஷன் அதிகாரிகள் தான், 'இப்படி ஒரு கமிஷன் தேவையா?' என மானசீகமாக தலையிலடித்து கொண்டனர்.
அன்று அவன் இறந்த செய்தி தெரிந்தபின், வினோதினி, சந்திரா, தீக்ஷி உட்பட அனைவரும் விஷயமறிந்து செல்வகுமாருடன் பெரிய சண்டையே போட்டுவிட்டனர்.
"இதுக்குத்தான் இங்க வந்தீங்களா? எங்கம்மாவ தான் நினைக்கலனா எங்களையுமா உங்களுக்கு நினைக்கத் தோணல? உங்களால நாங்க எவ்வளவு அசிங்கபடுறோம்னு தெரியுமா?" என சந்திரா பேச,
"இத்தோட முடியுறதா இந்த பேச்சு? உங்கப்பா இப்படியாமே? ஏன் அப்படி போய்ட்டாருன்னு உங்கள வச்சு எங்கள ஜட்ஜ் பண்றாங்க தெரியுமா? ஒரு நிமிஷம், இப்டி அல்ப்ப ஆசைல போறதால இவங்களாம் என்ன பண்ணுவாங்கன்னு யோசிச்சுருந்தா எங்களுக்கு இன்னைக்கு இந்த நிலை இல்லைல?" என்றாள் தீக்ஷி.
"எல்லாம் செஞ்சுட்டு இங்க வந்து ஒளிஞ்சுருக்கீங்க. அப்பாவா நீங்களாம்? உங்கள மாதிரி ஆளுங்கெல்லாம் எதுக்குப் பிள்ளைங்கள பெத்துக்கிறீங்க? உங்களால எங்க வாழ்க்கையும் சேர்ந்து நாசமாகியிருக்கும். அங்க அப்படி ஒரு வேலைய செஞ்சுட்டு திரும்ப எங்க முன்னவே வந்து நிக்க உறுத்தல? ச்சை அந்த குருதேவ் விஷயத்த கேட்டதுல இருந்து அவ்வளவு அசிங்கமா இருக்கு. அவனே அசிங்கம் அவன் வீட்ல ஒரு ஆளோட பழக்கம் வச்சு, அவனோட விஷயமும் தெரிஞ்சுட்டு உங்க உயிர காப்பாத்திக்க ஓடி வந்துருக்கீங்களே, எனக்கு இதால ஆபத்திருக்குன்னு கூடவா சொல்லத் தோணல? அவ்வளவு சுயநலம்? நீங்க இருக்க இடத்துல இருக்கவே அருவருப்பா இருக்கு. என்ன மனுஷன் நீங்களாம். இவரால என் வாழ்க்கையும் நாசமாகிருக்கும்னு சொல்றேன். இனியும் இவர இங்க வச்சு பாக்கப் போறியா நீ?" என அன்று அவள் பேசிய பேச்சில், வினோதினியும் கையெடுத்துக் கும்பிட்டு அமைதியாகிவிட்டார்.
அன்றே செல்வகுமார் கண்காணாமல் சென்றுவிட்டார். மறுபடியும் அந்த ரஞ்சனியிடமே சென்றிருக்க வேண்டும் என்றெண்ணம் தான் இவர்கள் எல்லோருக்கும். ஆனால் பின்னரே தெரிந்தது அவர் அவ்வூரிலேயே இல்லை என்று.
ரஞ்சனி, உண்மையில் அந்த பெண் இவரை மட்டும் தான் காதலித்தாள். வயது வித்தியாசமின்றி, அடுத்தவரின் உறவு அவர் என்ற எண்ணத்தையும் தாண்டிய காதலாக தான் ரஞ்சனி அதை நினைத்தாள். உண்மை தெரிந்து, பிடித்துதான் அவருடன் சேர்ந்து வாழ்ந்தாள். பிள்ளைப் பெற்றுக்கொள்ளும் ஆசையுடன் கர்ப்பம் தரித்தாள், அது குருதேவ் கொடுத்த வீரியமான மாத்திரையால் கலைந்திருக்க, மறுபடியும் தங்கவே இல்லை.
வருடங்களாக அவர்கள் கள்ள உறவு நன்றாகவே இருந்தது. பிள்ளை தொந்தரவு இல்லையே அதனால் செல்வகுமாருக்கு அங்கு குறை இல்லை போலும். குருதேவ் நிலாயினியை திருமணம் செய்ய கேட்டு மிரட்டவும் தான், தான் பெற்றப் பிள்ளைகளையே நினைவு கூர்ந்தார் அவர்.
ரஞ்சனியும் செல்வகுமாரிடம், "உங்க பொண்ணுக்கு வேற பையன பாத்து சீக்கிரம் கல்யாணம் செஞ்சு வச்சுருங்க, என் தம்பி வேணாம். அவன் குணம் சரி கிடையாது. இங்க அவ வந்தாலும் சந்தோசமா இருக்க மாட்டா" என சொல்லிவிட, அதற்காகவே இவர்களிடம் மீண்டும் வர துவங்கியிருந்தார். அந்நாட்களில் வாரத்திற்கு ஒருமுறை நடையோ நடையென நடந்ததும் கூட அதற்காக தான். ஆனால் கடைசியில் அவன் அவர் உயிருக்கே உலை வைக்கவும், பிள்ளைகள் தான் முக்கியம் என செல்வகுமார் வினோதினியுடன் வர, ரஞ்சனியும் வழிவிட்டு அதையும் ஏற்றுக்கொண்டார்.
செல்வகுமாருக்கு இரு பெண்களுக்கும் செய்த துரோகம் வெகு தாமதமாக நின்று உறுத்தியது. மனதளவில் நிம்மதி இழந்து தான் இருந்தார். இறுதியாக குருதேவ் இனி இல்லை என்றதும் தான் அப்படியொரு விடுதலை அவருக்கு கிடைத்தது. துரோகம் செய்த இரு பெண்களோடு, அவர் பெற்ற மூன்று பெண்களும் சேர்ந்து அவர் மனதில் நின்று உறுத்த. யாருக்கும் சொல்லாமல் அவருக்கே எங்கென்றும் தெரியாமல் கிளம்பிச் சென்றுவிட்டார். அவரைத் தேடுவோரும் இல்லை அங்கு.
"தேடி பாப்போமா?" என்ற ஆரனுக்கும், நிலாவின் முறைப்பு தான் பதிலாக கிடைத்தது. அவர் அங்கிருந்து இறுதியாக சென்னை செல்லும் பேருந்தில் ஏறியிருக்கிறார் என்று மட்டும் கண்டு கொண்டிருந்தான். அவராகவே வரட்டும் என அப்படியே விட்டுவிட, அடுத்து ஆறுமாதமாகியும் வரவில்லை.
அவரின் வேலையிடத்திலிருந்து அழைப்பு வந்தது, ஆள் இறந்துவிட்டால் தான் வாரிசு வேலை கூட கிடைக்கும். காணாமல் போனவர் ஏழு வருடங்களாகியும் திரும்ப வரவில்லை என்றால் தான் வாரிசு வேலையை அவர் மனைவிக்கு மாற்ற முடியும். இரண்டும் இன்றி அதுவும் அப்படியே இருந்தது.
அந்நாட்களிலேயே சந்திரா அந்த பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருக்க, கையில் விஏஓ ஆர்டரும் பெற்றுவிட்டாள். அதன் பின்னரே, மதுரன் அவன் வீட்டில் பேச, அவர்கள் விசாரித்து, இறுதியில் செல்வகுமாரின் செயலில் வந்து முட்டி நின்றனர்.
"வேற பொண்ணா கிடைக்காது?" என தான் அவர்களும் பேசினர், அதெற்கெல்லாம் குட்டிகரணம் அடித்து, மேலும் ஆறுமாத போராட்டத்தின் பின், இதோ திருமணத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறான் மதுரன்.
குருதேவ் இறந்து, செல்வகுமார் காணாமல் போய் ஒரு வருடமே ஓடியிருந்தது. குருதேவ்வின் இறப்பு அவ்வளவு எளிதாக இருந்திருக்க கூடாது தான். வாழ பயந்தவன் என்பதால் சாவை கண்டும் அதிகமாக பயந்து அதை தானாக தேடிக்கொண்டான். எழுபத்தி எட்டு பெண்களின் கண்ணீரை வாங்கி கொண்டு சாவையும் சுலபமாக அரவணைத்துக் கொண்டவனை கடவள் எப்படி சும்மா விடுவார்? மறுபறவி என்னும் மனிதபிறவி எடுத்து, ஏன்? எதற்கு? என்ற எந்த காரண காரியமும் புரியாமல் துன்ப படுவான், ரண வாழ்க்கையை அனுபவிப்பான். அது செல்குமாருக்கும் பொருந்தும். இருவரும் தப்பித்து விட்டதாக நினைத்திருக்க, சிறப்பான, தரமான சம்பவங்களோடு மறுபிறவியையே துவங்கி வைக்க இருக்கிறார் மேல் உள்ளவர்.
அந்த இருவிரின் இழப்பால் எந்த பாதிப்புமின்றி அவரவர் அவரவரின் வாழ்க்கையில் பொறுந்தியிருந்தனர்.
நிலாயினிக்கு இது ஏழாம் மாதம். அதே ஐஓபி கிளையில் தான் வேலைக்கு சென்று வந்து கொண்டிருக்கிறாள். ஆரனும், "பிள்ள பிறக்குற வர யாரும் எனக்கு ட்ரான்ஸபெர் குடுக்கக் கூடாது, நா போகவும் மாட்டேன். நீங்க உங்களுக்கு ஆரன் தான் வேணும்னு அடிச்சு சொல்லிடுறீங்க" என கமிஷ்னரை உண்டில்லை என்றாக்கியிருக்க, அவ்வப்போது தேவைக்காக மட்டும் வேறு மாவட்டங்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறான்.
அப்படி ஒருமுறை ஒரு கடத்தல் வழக்கின் கலந்தாய்விற்காக அவன் கோவை சென்றிருந்தான். நான்கு நாட்கள் சென்றிருந்தது, அங்கு தங்கியிருந்து அந்த வழக்கிற்கு ஒரு வரைபடம் கொண்டுவரும் முயற்சியில் இருக்க, ஐந்தாம் நாள் காலையில் அழைத்துவிட்டாள் நிலா. இப்படி அவன் வெளியூர் வந்திருக்கையில் எல்லாம் அவன் அம்மா தங்கைகளுடன் தான் அவளின் இரவுகள் இருக்கும், அவனாக அழைக்காமல் காரணமின்றி அழைக்கவே மாட்டாள்.
அன்று அதிகாலையே அழைத்திருக்கவும், "நிலாமா?" என்று தான் எடுத்தான்.
"ஏசிபி, நேர்ல வரணுமே?" என்றாள் அவளும் பரவசமாக,
"பார்றா, ஒருவழியா என் பொண்டாட்டிக்கு என்னைய தேடிருச்சு"
"ஆமா தேடுது. இப்ப வரணும் நீங்க"
"இன்னும் ரெண்டு நாள் ஆகுமேமா? லீவ் எடுத்துட்டு நீ இங்க வரியா?"
"அவ்வளவு தூரம் இப்ப ட்ராவல் பண்ண முடியாது"
"எவ்ளோ தூரம்? நைன் அவர்ஸ். நைட் ஏறுனா காலைல இங்க என்ட்ட இருக்கலாம் நீ"
"நீங்க வராம என்னைய வரசொல்றீங்க? தேடுதுன்னு சொன்னது நானு. சோ நீங்க தான் வரணும்"
"சரி ரெண்டே நாள், ஓடி வந்துடுவேன். ஆல்மோஸ்ட் கேஸ் முடிஞ்சது. மூணு பேர்ல ரெண்டு பேர புடிச்சாச்சு. ஒருத்தன் தான் மிஸ்ஸிங் அவனும் சிக்கிட்டாம்னா, அடுத்த செகெண்ட் கிளம்பிடுவேன்"
முக்கிய வழக்குகளில் கலந்துரையாடலுக்கு செல்பவன், சில பொழுதுகளில் இதுபோல் இருந்து கேஸை முடித்துக் கொடுத்துவிட்டும் வருவதுண்டு. மற்றபடி ஏசிபியாக இவன் இவனது கருத்தை, யோசனையை, திட்டத்தைக் கூறிவிட்டு வந்தாலே போதுமானது தான். அதனால் இப்போதும் நிலாயினி அழைத்தபின் அங்கிருக்க மனமின்றி கிளம்பிவிட்டான். அதிகாலை நான்கு மணி போல வந்திறங்கியவன், நிலா அவள் வீட்டிலிருப்பதால் நேராக அங்கு சென்று தான் வாசல்மணியை அடித்தான்.
வினோதினி வந்து உள்கதவை மட்டும் திறக்க, "நாந்தான் அத்த, நிலாவ வர சொல்றீங்களா?" என்றான். உள்ளே அழைத்தாலும் வரமாட்டான், இரு பெண்பிள்ளைகள் இருப்பதால் அவரும் வற்புறுத்தமாட்டார்.
இருந்தும் இப்படி வந்து நிற்பவனை அழைக்காமல் இருக்க முடியாதே, "உள்ள வந்துட்டுப் போங்களேன் மாப்ள?" என அழைத்தார்.
"இல்லத்த, ரெஸ்ட் எடுக்கணும். நிலாக்கு கால் பண்ணேன் அவ எடுக்கவே இல்ல" என்றான். ஓய்வெடுக்க வேண்டியவன் அப்படியே அவன் வீடு சென்றிருக்கலாம், ஆனால் இங்கு வந்து மனைவியை எழுப்பி வர சொல்லச் சொல்லி நிற்கிறான் என நினைத்து சிரித்தவர், சென்று நிலாயினியை எழுப்பி அனுப்பி வைத்தார்.
கண்ணைக் கசக்கிக் கொண்டே வந்தவள், கதவை திறந்து வெளியே வர, "கண்ண முழிச்சு நடப்பியா? இல்ல தூக்கிட்டுப் போகவா?" என்றான் கிண்டலாக,
"தூக்கிட்டே போங்களேன்" என கை இரண்டையும் தூக்கி நீட்ட,
"உன் அம்மா பாக்றாங்க பரவால்லயா?"
"பரவால்ல"
"அடிப்பாவி!" என சிரித்தவன் ஒரே கையில் அவளைத் தூக்கிக்கொண்டு ரோட்டை கடந்து, அவர்கள் வீட்டுப் படியேற, அவனைக் கழுத்தோடுக் கட்டிக்கொண்டவள் அசராது பார்த்தபடி வர,
"என்னவாம் நிலா பொண்ணு ஓவரா சைட்டடிக்கிறாங்க?" என மூக்கோடு மூக்குரசி, வீட்டு வாயிலில் கொண்டு இறக்கிவிட, அவள் தான் இடக்கையில் வைத்திருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறந்தாள். அவனிடமும் ஒரு சாவி உண்டு. ஆனால் அவனுக்கு நிலா தானே வேண்டும்.
உள்ளே வந்தவனைப் பாய்ந்து இறுக கட்டிக்கொள்ள, "ப்ரெக்னென்ட்டா இருக்கியா நிலா?" என்றான் கட்டிக்கொண்டு நின்றவளின் காதினுள், அவன் தோளில் தலையை வைத்திருந்தவள், அப்படியே நின்றே தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்ட, "நினச்சேன்டி!" என தூக்கி இன்னும் இறுக்கிக் கட்டிக்கொண்டு ஒரு சுற்று சுற்றி இறக்கினான். முகமெங்கும் முத்தமிட்டுக் கொண்டாடிவிட்டான்.
அதன்பின் வெளியூர் பயணங்கள் முடிந்தளவு அவன் தவிர்த்திருக்க, இப்போது தான் கட்டாயம் போக வேண்டியாதாகியிருந்தது. பத்து நாட்கள் அவளிடம் பேச கூட நேரமின்றி இருந்தவன். சந்திரா மதுரன் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் வந்திறங்கியிருந்தான்.
நிலாயினிக்கு ஏழாம் மாதம் இது. அவளுக்கு வளைகாப்பு செய்வதா, சந்திராவிற்கு திருமணம் செய்வதா என்ற குழப்பம் வர, தங்கமாடத்தியே, "எதிர்த்த வீடு தானே? ரொம்ப தூரமா வரப்போறா? ஒன்பதுல கூட போட்டுக்குவோம். முதல்ல சின்னவ கல்யாணத்த முடிங்க" என்றுவிட்டார்.
சந்திரா திருமணத்திற்கும் சொந்தங்கள் என யாரையும் அழைக்கவில்லை. மதுரன் வீட்டினர் மட்டுமே, அது போக, நிலாவும், ஆரனும், ஆரன் விஷ்வேஷ்வரன் குடும்பத்தினரும் மட்டுமே.
இதோ மதுரன், சந்திரா திருமணத்திற்கு, ஜோடியாக அவன் பல்சரில் சென்று இறங்கிவிட்டனர்.
மண்டபத்தினுள் வந்ததும், "பாத்து கவனம்டி!" என சொல்லியே அனுப்பிவிட்டவன், அவன் அம்மா, அப்பா அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
குறித்த முகூர்த்த நேரத்தில், சந்தோசமாக தன் காதலியை கரம்பிடித்தான் மதுரன். ஆரன் அவன் பரிசாக, பத்து நாட்கள் லீவும், அதே மணாலியில் ஹனீமூன் பேக்கேஜும் போட்டுக் கொடுத்துவிட, ஆர்ப்பாட்டம் தான் அவனுக்கு.
"உன்ன மாதிரி ஃபோன் மேல ஃபோன் போட்டுக் கடுப்படிக்க மாட்டேன் மேன். என்ஜாய்" என்று சொல்லியே தான் கொடுத்தான்.
"நீங்க தெய்வம் சார்" என மதுரன் சிரிக்க,
"நடிக்காதடா" என கண்ணை உருட்டினான் ஆரன்.
சந்திராவை, மதுரன் வீட்டில் கொண்டு விட்டு, இரவு நலங்கும் முடித்து, தனியறைக்கு அனுப்பிய பின்னரே, அவள்வீடு கிளம்பினாள் நிலாயினி. சீர்வரிசையாக தாழையூத்தின் கட்டை சிறப்பாக செய்து தங்கையைப் பிடித்த வாழ்க்கையில் பொறுத்திவிட்ட திருப்தியோடே அங்கிருந்து கிளம்பினாள்.
அதே வாரத்தில், தீக்ஷியும் அவள் வேலைக்காக சென்னை பயணம் ஆகிறாள். அவள் கல்லூரியிலேயே நடந்த கல்லூரி வளாக வேலைவாய்ப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னையில் ஒரு புகழ்பெற்ற உணவகத்தில் வேலைக்கு சேரவிருக்கிறாள். முந்தைய வாரம் ஆரன் அங்கு சென்றிருந்தபோதே அனைத்தையும் விசாரித்து அவளுக்கு தங்குமிடம் வரை சரிபார்த்து வந்திருக்க, இதோ இன்று அவளையும் ட்ரைன் ஏற்றிவிட, வந்திருந்தனர் நிலாயினி ஆரன் தம்பதியினர்.
"இன்ஸ்டா இன்ஸ்டான்னு அதுல ஓவரா டைம் ஸ்பெண்ட் பண்ணக் கூடாது. புது இடம், ரொம்ப கவனமா இருக்கணும். வேலைய நல்லா கத்துக்கோ, உனக்கு பிடிச்சுருக்கான்னு பாத்து செய். இல்லனாலும் வேற வேலைத் தேடிக்கலாம். பிடிச்சு செய்யணும் ஓகே. எதுனாலும் கால் பண்ணு. தனியா இருக்கப் போற ஜாக்கிரதையா இருக்கணும்டி" என ஆயிரம் முறை சொல்லியே கிளம்ப விட்டாள்.
"ஆல் த பெஸ்ட் தீக்ஷி. ஹேவ் ஃபன்" என முடித்துவிட்டான் ஆரன்.
"ஃபன்னா? அவ வேலைக்குப் போறாங்க" என நிலா திருத்த,
"அத தான் ஃபன்னா பண்ணுன்னு சொன்னேன்டி" என்றவன் ரயில் ஏறியவளுக்கு டாட்டா காண்பித்து, அவன் நிலவைப் பத்திரமாக அழைத்துக்கொண்டு ஸ்டேஷன் விட்டு வெளியே வந்தான்.
"அங்க உங்களுக்கு யாரையும் தெரியும்னா கொஞ்சம் பாத்துக்கச் சொல்லிச் சொல்லி வைங்கப்பா"
"அதெல்லாம் தீக்ஷியே நாலு பேர சமாளிப்பா அவளுக்கு எதுக்கு எஸ்கார்டு?"
"அவ இங்க திருநெல்வேலி தாண்டி எங்கையும் போனதில்ல. எக்ஸைட்மெண்ட்ல எதையாவது செஞ்சுட கூடாது"
"செய்யாம எப்படி, எத செய்யக் கூடாதுன்னு கத்துப்பா?"
"ஏசிபி?"
"விடுறி. அவ பாத்துப்பா. ஹெல்ப் கேட்டா கண்டிப்பா செஞ்சுடலாம். நல்லா விசாரிச்சுட்டேன். உன் தங்கச்சி அங்க சேஃபா இருப்பா. போதுமா"
"ம்ம் உங்க பொறுப்பு தான்" என்றபடி வீடு வந்து சேர்ந்தனர்.
"சரிடி. அடுத்து உங்கம்மாவ எங்கையும் பேக் பண்ணணுமே?" என பீம் பேக்கில் சாய்ந்தவாறு கேட்க,
"ஏன் அவங்க உங்கள என்ன பண்ணாங்க?" என்றபடி அவன் முன் வந்து முறைத்து நின்றாள்.
"இல்ல ஒவ்வொரு கடமையா முடிக்குற, உங்கம்மாக்கும் ப்ளான் வச்சுருப்பன்னு நினைச்சேன்" என்றவன் அவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொள்ள,
"நக்கலா உங்களுக்கு? எங்கம்மாக்கு துணைக்கு போய் இருந்துக்கட்டா நானு?" என அவன் இடுப்பில் கிள்ள,
"ஆ! வலிக்குதுடி. எங்க போயேன் பாப்போம்" என கட்டிக்கொண்டு முறைத்தான் அவன்.
"போமாட்டேன்ற தைரியம்" என அவன் மீசையை பிடித்திழுக்க,
"ம்கூம் இவன் விடமாட்டானேன்ற சந்தோஷம்டி உனக்கு"
"அடடா அத நா சொல்லணுங்க. நீங்களே சொல்லிப்பீங்களோ?"
"முப்பது பிள்ள பெத்தாலும் நீ சொல்ல மாட்டடி"
"மூணு தான்"
"முப்பது தான். நா உன் ப்ராமிஸ காப்பாத்துறேன்ல நீ என் ப்ராமிஸ காப்பாத்துற. நாம ரெக்கார்ட் ப்ரேக் பண்றோம்"
"போயா ஏசிபி" என அவனைத் தள்ளிவிட, அவன் நிலவுப் பெண்ணை வயிற்றுப் பிள்ளையோடு சேர்த்து பாந்தமாக அணைத்துக்கொண்டான் ஆரன் விஷ்வேஷ்வரன். ஒரு நன்நாளில் அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள் லஷ்மி நிலாயினி.
"இங்க ஒரே கேர்ள்ஸ் கூட்டம்டா. நீயும் நானும் தனிகட்சிடா மகனே" என கொஞ்சிக்கொண்டான் ஆரன் விஷ்வேஷ்வரன்.
நிலவின் அக ஒலியானவன்!
ஆரன் விஷ்வேஷவரனும் அவன் நிலவும் நிறைவான வாழ்க்கை வாழ வாழ்த்தி விடைபெறுவோம் நாம்.
நன்றி!
Author: Vishakini
Article Title: நிலவின் அக ஒலி - 12 ( இறுதி அத்தியாயம் )
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நிலவின் அக ஒலி - 12 ( இறுதி அத்தியாயம் )
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.