• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிலவின் அக ஒலி - 5

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 5

லஷ்மி நிலாயினி வீடு திரும்பியபோது, மணி இரவு ஏழாகியிருந்தது. சந்திரா மட்டுமே வீட்டிலிருந்தாள். தீக்ஷியும் வினோதினியும் செல்வக்குமாரை பார்க்கச் சென்றிருந்தனர்.

கைப்பையைக் கொண்டு அவள் அறையில் வைத்தவள், மேல்கழுவி வீட்டுடைக்கு மாறி, மதியத்திற்கென்று எடுத்துச்சென்றிருந்த உணவு டப்பாவுடன் சமயலறை வந்தாள். அதை கழுவி வைத்துவிட்டு, ஒரு டீக்கு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் ஏற்றியவள், "சந்திரா டீ?" என கேட்க,

"வேணாம் நா இப்ப தான் போட்டுக் குடிச்சேன்" என்றவள், படித்துக்கொண்டு இருந்தாள்.

தனக்கு மட்டும் டீயை கலக்கியபடி வந்து சோஃபாவில் அமர்ந்த நிலா, "அம்மாவும் தீக்ஷியும் எங்க? கோவிலுக்கா போயிருக்காங்க?" என கேட்க,

அதில் திடுக்கிட்டு நிமிர்ந்த சந்திரா, "அப்பாக்கு ஆக்ஸிடென்ட்டுன்னு ஃபோன் வந்தது தெரியாதா உனக்கு? உன்ட்ட சொல்லிருப்பாங்கன்னு நினச்சேனே?" என வேகமாக கேட்க,

"அங்கையா போயிருக்காங்க?" என்றாள் நிலா சுருங்கிய புருவத்துடன்.

"ஆமா நா கோச்சிங் கிளாஸ்ல இருந்தேன். வந்து வீட்டு சாவிய குடுத்துட்டு சொல்லிட்டு போனாங்க லஷ்மி. நா உனக்கு தெரியும்னு நெனச்சுட்டேன். இல்லனா! ச்ச நானே கால் பண்ணினாலும் சொல்லிருக்கணும். சாரி" என்க,

"எப்ப போனாங்க?"

"மதியம் 2 மணி இருக்கும்"

"உனக்கு ஏன் அவங்க கூட போகணும்னு தோணல?" என்றாள் நிலாயினி. அவள் குரலே மாறிவிட்டிருந்தது.

"நா போய் என்ன பண்ணப் போறேன்? இவங்களே எதுக்குப் போனாங்கன்னு தெரியல. அங்க அவர் லவ்வர் முன்ன போய் அசிங்கபடவே கிளம்பிப் போயிருக்காங்க. கோச்சிங் சென்ட்டர்ல வச்சு என்னத்த பேசன்னு விட்டுட்டேன். நைட் வரட்டும் நாம ஒரு பிடி பிடிச்சுவிட்ருவோம்" என்றாள் கோவமாக.

"நா போக வேணாம்னு சொன்னேன் சந்திரா" என்றாள் நிலாயினி, ஆதங்கத்தை உள்ளடக்கிய குரலில்.

"லஷ்மி?"

"நா சொன்னேன் போகக் கூடாதுன்னு. அப்றமு ஏன் போனாங்க? இன்னும் மூணு வருஷம் தான் அவருக்கு சர்வீஸ். அதுக்கப்றம் அவர யாரும் பாத்துக்க மாட்டாங்கன்னு இங்க வந்து அம்மாகிட்ட சேர்ந்துக்க பாக்றாரு. புரியலையா இவங்களுக்கு? போய் பாத்துட்டா அதையே சான்ஸா யூஸ் பண்ணிட்டு அடிக்கடி வர ஆரம்பிப்பார்ல? ஏன் இவங்க யோசிக்கவே மாட்டேங்குறாங்க?" என அவள் பேசியதில், சந்திராவும் ஆமோதிப்பாகவே பார்த்திருந்தாள்.

"இவங்க இப்ப என்ன செய்யலாம்னு கிளம்பிப் போயிருக்காங்க?" என கேட்டபோது, நிலாயினி எண்ணிற்கு தீக்ஷி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

"சொல்லு தீக்ஷி கிளம்பிட்டீங்களா?" என்றாள் எடுத்ததுமே.

"இன்னும் இல்லக்கா. இது ஆக்ஸிடன்ட் இல்ல போலக்கா. ஏதோ ப்ளான்டுனு சொல்றாங்க. கேஸ் அதிதுன்னு ஆகும் போல. நீ ஏசிபி சார்ட்ட பேசேன்" என்றாள் அவள் பயத்துடன்.

"நா என்ன பேசணும்? ஃபர்ஸ்ட் அது என்னவா இருந்தா நமக்கென்ன? நீயும் அம்மாவும் கிளம்பி வராம அங்க நின்னு என்ன செய்றீங்க?"

"இங்க அவர்கூட யாருமே இல்லக்கா. போலீஸ் லீகல் வைஃப் தான் கூட இருக்க முடியும்னு சொல்லிட்டாங்க. அவரும் அம்மாவ விட மாட்டேங்குறாரு. போயிடாத வினோ போயிடாத வினோன்னு கையப் பிடிச்சுட்டு மயக்கத்துலயும் புலம்புறாரு. அதனால அம்மா அங்கேயே தான் உட்கார்ந்துருக்காங்க" என்ற தீக்ஷி பேச்சிலும் எரிச்சல் மண்டிகிடந்தது.

"நீங்க ஏன் முதல்ல அங்கப் போனீங்க? நா வேணான்னு தான சொல்லிருந்தேன்?" என்றாள் நிலாயினியும் கடுப்புடன்.

"ஹாஸ்பிடல்ல இருந்து ஃபோன் வந்தப்ப தான் அம்மா உன்ட்ட கேட்டாங்க. நீ போ வேணாம்னு சொன்னதும், என்ன செய்யனுட்டு அமைதியா இருந்தாங்க. அப்றம் போலீஸ் கால் பண்ணி வர சொல்லிட்டாங்க. இது ப்ளான் பண்ணி பண்ணிருக்காங்க. யார் பண்ணாங்கன்னு கண்டு பிடிக்கணும், அதுவரை நம்பிக்கையானவங்க மட்டுந்தான் அவர்கூட இருக்கணும். அவர் உங்கள தான் நம்புறாருன்னு சொல்லி வரசொல்லிட்டாங்க. அதான் அம்மா கிளம்பி வந்துட்டாங்க" அன்று கல்லூரி விடுமுறை என தீக்ஷியும் வீட்டில் தான் இருந்தாள்.

"எட்டு வருஷமா இல்லாத நம்பிக்கை இப்பத்தான் வந்துருக்குதாமா? நடிப்பாரு நல்லா. அம்மா ஒரு இளிச்சவாயி நல்லா ஏமாத்தலாம்னு தெரியும்ல அவருக்கும்" என இவள் சொல்ல,

"இப்ப நா என்னக்கா பண்ண? என்னைய கிளம்பிப் போன்னு சொல்லுதாங்க. அவங்கள எப்படி தனியா விட்டுட்டு வர்றதுன்னு யோசனையா இருக்கு"

"நைட்டுக்கு நர்ஸ் யாரையும் பாக்க இருக்க சொல்லிட்டு நீ அம்மாவ கூட்டிட்டு வா"

"நா கேட்டுட்டேன். வர மாட்டேங்குறாங்க. அவரும் விட மாட்டேங்குறாரு"

"இதென்ன புது தொல்லையா இருக்கு" என யோசித்தவள், "சரி நீ கிளம்பி வா. அவங்களா எப்ப வர்றாங்கன்னு பாப்போம்" என்க, அடுத்த அரைமணி நேரத்தில், ஆட்டோ பிடித்து வீடு வந்திறங்கிவிட்டாள் தீக்ஷி.

இரவு உணவை முடித்த மூன்று பெண்களும், நிலாயினி அறையிலேயே படுத்துவிட்டனர். எப்போதும் வினோதினி, சந்திரா, தீக்ஷி மூவரும் ஒரு அறையில் படுத்துக்கொள்வர். நிலாயினி வெளியூரில் இருந்தபோது அப்படி பழக்கமாகியிருந்தது அவர்களுக்கு. அவள் வந்த பின்னரும் அதுவே தொடர்ந்தது. விரைவில் அவளுக்கு திருமணம் முடிக்க வேண்டிய சூழ்நிலையும் இருந்ததால், அவள் தனியறையே புழங்கட்டும் என விட்டிருக்க, அதுவே பழகியிருந்தது. சில வருடங்கள் கழித்து மூவரும் ஒன்றாக படுத்திருந்தனர் இன்று.

பத்து மணிபோல், வினோதினி நிலாவிற்கு அழைக்க, அவள் ஏற்கவில்லை. அடுத்து சந்திராவிற்கு அழைக்க அவளும் எடுக்காமல் விட, தீக்ஷிக்கு அழைத்தார்.

"நீ எடுத்து பேசு. நாம தனியா இருக்கோம்னு பயந்துட்ருப்பாங்க" என நிலாயினி சொல்லவும், தீக்ஷி எடுத்து, உண்டுவிட்டு உறங்கப் போவதை மட்டும் சொல்லி வைத்தாள். மறுநாள் காலையில் மூவரும் அவரவர் வேலைக்கும், கல்லூரிக்கும் கிளம்பிவிட, அவர்கள் கிளம்பும்வரையும் வினோதினி வரவில்லை.

நிலா அந்த கடுப்பில் வெளியே வர, மற்ற இரு பெண்களும் கூட கிளம்பி பின்னே வந்தனர்.

"ஏன்டா மதுரா? பேங்க்லாம் இப்ப எட்டு மணிக்கே திறந்துடுறாங்க போல? நிஜமாவா?" என்ற ஆரனின் குரலில், நிலாயினி திரும்பிப் பார்க்க, மதுரன், சந்திராவை கண்டு சிரிக்க அவள் அக்காவைக் காண்பித்து முறைத்தாள்.

தீக்ஷி, அவர்களை நெருங்கி, "ஹாய் போலீஸ் அத்தான்ஸ்!" என மெதுவாக கூறி கை அசைக்க, மெதுவாக என்றாலும் பின்னால் நின்ற சந்திராவிற்கு கேட்டது, அதில் அவளும் திருதிருவென விழித்து நிலாவிடம் திரும்ப, மதுரனும் அதிர்ந்து தீகிஷியை தாண்டி நிலாயினியைப் பார்த்தான், பின் இருவரும் ஒருசேர தீக்ஷியை முடிந்த மட்டும் முறைத்தனர்.

அதில் சிரித்த ஆரன், "ஹாய் தீக்ஷி. என்னவாம் இவ்ளோ சீக்கிரம்?" என நிலாயினியைக் காட்டிக் கேட்க,

"வீட்ல அம்மா இல்ல. அதான் அக்காவும் எங்களோடவே சீக்கிரம் கிளம்பிட்டா"

"தனியா இருக்க அவ்வளவு பயமா உன் அக்காக்கு?"

"ஆமா அத்தான், என் அக்கா ரொம்ப பயந்த சுபாவம்"

"பார்றா! நீ என்னையத்தான் அத்தான்றியா? நாங்கூட இந்த மதுரனையோன்னுல நினைச்சேன்" என மதுரன் தோளில் கைப்போட்டு சொல்ல,

"ப்ளீஸ் சார். நா பாட்டுக்கு சிவனேனு நிக்றேன். முதல்லயே அவ அத்தான்ஸ்னு கூப்பிட்டத நீங்க கவனிக்கல இல்லையா சார்?"

"நா கவனிக்கல மேன். நிஜமா"

"உங்க கல்யாணம் முடியிறவர என்னைய காப்பாத்தி ஓரமா இருக்க விட்ருங்க சார் ப்ளீஸ்"

இவர்கள் பேச்சிலிருக்க, நிலாயினி ஸ்கூட்டியை எடுத்து வெளியே விட்டு, வீட்டை பூட்டி, வெளி கேட்டையும் பூட்டியபடி வந்தாள். அனைத்தும் காதில் விழுந்தாலும், எதற்கும் எதிர்வினை இல்லை அவளிடம்.

"சரி பொழைச்சு போ" என்றவன், "அப்புறம் தீக்ஷி, அத்தான்னு என்னமோ சொன்னமாதிரி கேட்டதேமா?" என இப்போது வேண்டுமென்றே சத்தமாக கேட்க,

"ஹே கிளம்புங்கடி ரெண்டு பேரும்" என்ற நிலாயினி சந்திராவிடம் சாவியை நீட்ட, வாங்கி பையில் போட்டுக்கொண்டவள், தீக்ஷியுடன் கிளம்பிவிட, "பை அத்தான்ஸ்" என சொல்லியே கிளம்பினாள் தீக்ஷி. இருவரும் திரும்பியே பார்க்காமல் நடந்துவிட்டனர்.

"ஆத்தி! இவ வேற" என்ற மதுரன், நிலாயினி முகத்தை தான் பார்த்தான், "சார் லஷ்மிக்கு புரியல தான? கவனிச்ச மாதிரி தெரியலல?" என்றுவிட்டு, "இதான் சார் சொன்னேன். லஷ்மி இந்தபக்கம் திரும்பாதனுட்டானா என் லவ்வுக்கு பெரிய நாமம் தான் சார்" என்றான் பாவமாக.

"அத்தான்னு தீக்ஷி கூப்பிட்டது இந்த தெருவுக்கே கேட்ருக்கும் இவளுக்கு கேட்ருக்காதா?" என நிலாவிற்கு முதுகு காண்பித்து அவன் வீட்டை பார்த்தவாறு மறுபுறம் திரும்பி வண்டியில் சாய்ந்து நின்று கழுத்தை தேய்த்துக் கொடுத்தான்.

"அது உங்கள கூப்பிட்டதா நினைச்சுருக்கலாம்ல?"

"இப்படியே நம்பி வாழ்க்கைய ஓட்டு மதுரா" என தலையை அந்தப்பக்கம் திருப்ப, கையைக் கட்டியபடி இருவரையும் தான் பார்த்திருந்தாள் நிலாயினி.

"வாவ் நிலா! வெயிட்ங்கா எனக்கு? சொல்லாமலே கிளம்பிட்டன்னு நினைச்சேன்" என்றான் ஆரன் சிரிப்புடன்.

அவனை பார்த்துவிட்டு மதுரனிடம் திரும்பியவள், "மதுரா. உன் பேரண்ட்ஸ வர சொல்லு. சந்திராக்கு அம்பது பவுன் நகை தான் போட முடியும். வேற ரொக்கமோ, பைக், இடம், இப்படி எதுவும் எதிர்பாக்க கூடாது. எதிர்பாத்தாலும் குடுக்க எங்கட்ட இல்ல. பேசி நிச்சயம் பண்ணிக்கலாம். பட் அவ வேலை வாங்கின அப்றம் தான் கல்யாணம். அதுல சேஞ்சே இல்ல. நீ இப்படி வந்து நிக்றது உன் வேலைக்கும் அழகில்ல, அவளுக்கும் அவ பேர் கெடும். அவ வேலைக்குப் போற வர வெயிட் பண்ணணும், அண்ட் எங்களோட சீர், டவ்ரி லிமிட் அதுதான், ரெண்டையும் உன் பேரண்ட்ஸ்ட்ட சொல்லு, வீட்ல பேசு. ஓகேனா பொண்ணுப் பாக்கக் கூட்டிட்டு வா" என்றுவிட்டாள். இதை அவள் அம்மா மேல் உள்ள ஆதங்கத்தில் உடனடி முடிவாக எடுத்தாளோ என்னவோ, அந்நொடி அவளே கூறிவிட்டிருந்தாள்.

அவனுக்கு பதிலே வரவில்லை, பார்த்தபடி, 'பே!' என நிற்க, "ஏதாவது பேசு மேன்!" என அவன் முதுகில் தட்டி சுயநினைவுக்குக் கொண்டு வந்தான் ஆரன்.

"சார்! லஷ்மி!" என இருவரையும் மாத்தி மாத்தி பார்க்க,

"அவன் ஷாக்ல இருக்கான். தெளியவும் பேசிருவான் நிலா" என்றான் ஆரன், தலையை மட்டும் அசைத்தாள் லஷ்மி நிலாயினி.

லைட் பிங்க் நிற சுடிதார், ஒற்றை பக்கமாக துப்பாட்டாவை பின் பண்ணியிருந்தாள். இடது கையில் ஒரு ப்ரௌன் நிற வார் வாட்ச். வலது கையில் தங்க வளையல் இரண்டு, கழுத்தை ஒட்டிய செயின். தோளில் ஹேண்ட் பேக், பவுடர் பூசிய முகம் அதில் குட்டி கருப்பு நிற பொட்டும் அதன் மேல் குட்டியாக திருநீறும். கைகட்டியபடி நின்று மதுரனிடம் பேசியபடி நின்றவளை மேலிருந்து கீழ் அளவிட்டிருந்தான் ஆரன் விஷ்வேஷ்வரன்.

அவன் பார்வையில், இங்குமங்கும் தெருவைத் திரும்பி ஒரு முழு நிமிடம் பார்த்தவள், "சரி கிளம்புறேன்" என திரும்ப,

"சிரிப்பு மட்டும் மிஸ்ஸிங். சரி அத நா தனியா டீல் பண்ணிக்கிறேன். நிலா பொண்ணுக்கு என்ட்ட எதுவும் சொல்ல இல்லையா?" என்றான். அவனும் இப்போது அவளிடம் நன்றாக திரும்பி நின்றிருந்தான்.

ஆரன் ஸ்பெலென்டரின் அந்த பக்கம் நிலா நிற்க, இந்த பக்கம் ஆரன் நின்றான். இருவருமே ஆரனின் வீட்டின் வாயிலில் தான் நின்றனர்.

கிளம்பியவளும் நின்று திரும்பினாள், வலது கை விரல்களை மூடி மூடி திறந்தாள். மறுபடியும் கண்கள் அலைமோத தெருவை வலதுபக்கமும், இடதுபக்கமும் திரும்பிப் பார்த்தாள். கை வேர்த்து பிசுபிசுத்தது. என்னவோ உள்ளுக்குள் பயம், யாருமில்லாமல் தனியாக நிற்பது போன்ற பிரம்மை அவளுக்குள்.

"நிலா!" என்றான் கனிவாக. எதையோ நினைத்து உழட்டுகிறாள் என அவள் முகத்தில் வந்துபோகும் பாவனைகளே சொல்லிற்று.

"என்ன வந்தாலும், ஏதோ சூழ்நிலைல என் மேல வெறுப்பே வந்தாகூட, வாழ்க்கையோட பாதில விட்டுட்டு போ மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணுவீங்களா?" என்றாள் அவனை நேராகப் பார்த்து.

அவன் புருவம் உயர்த்தி அவளையே பார்க்க, "பண்ண மாட்டீங்களா?" என்றாள் வேகமாக.

"நிலாம்மா!" என்றான் இப்போது இன்னும் மென்மையாக,

"ஜஸ்ட் எ ப்ராமிஸ்" என்றாள் மீண்டும்,

"உன் அப்பாவ வச்சுக் கேட்கிறியா இல்ல என் வேலைய வச்சுக் கேட்கிறியா?" என்றவனுக்கு அவள் முகத்தைத் திருப்பிப் கொண்டு, "நா கிளம்புறேன் சார். ஃபர்ஸ்ட் என் குழப்பங்கள் தீரட்டும்" என கிளம்ப முற்பட,

"ஆன்ஸர் வேணாமா?" என்றான் அவன். இருவரையும் மாற்றி மாற்றி பார்த்த மதுரன், இப்போது கொஞ்சம் தெளிந்து விட்டதுபோலும், சற்று தள்ளிச் சென்று நின்று கொண்டான்.

பள்ளி, கல்லூரி, வேலை என சென்றுகொண்டிருப்பவர்களால் பரபரப்பாக தான் இருந்தது அந்த தெரு. எல்லாரும் இவர்களைப் பார்த்து தான் கடந்துச் சென்று கொண்டிருந்தனர்.

"அப்பான்றவர் எங்களுக்கு பாதி நகை சேர்த்துட்டார். படிப்பும் என்னோடது மேக்ஸிமம் முடிஞ்சப்றம் தான் அம்போன்னு விட்டுட்டுப் போனார். அவர் அதுக்கு முன்னவே போயிருந்தா நிச்சயம் இன்னும் இன்னும் நாங்க ரொம்ப மோசமான நிலைக்கு போயிருப்போம். நல்லவேளை அவர் அட்லீஸ்ட் என் படிப்பாவது முடிஞ்சப்றம் போனார். சந்திரா, தீக்ஷி ரெண்டு பேருக்கும் நாதான் எல்லாம் செய்யணும்னு ஒரு எண்ணம் எனக்குள்ள இருந்துட்டே இருக்கும், அது கடந்த எட்டு வருஷமா உருபோட்ட பழக்கம். ஆனா கண்டிப்பா அவங்கள அவங்களே பாத்துப்பாங்க, எப்பவாச்சும் முடிஞ்ச சப்போர்ட் குடுக்கணும் நான். அப்புறம் என்னோட சேலரில தான் நா எனக்கான சீர் எல்லாம் செய்வேன். 'அது வேற இது உன் அம்மா தான் செய்யணும்'னு நீங்க சொல்லக் கூடாது. அப்புறம் என் வேலையப் பத்தி கேட்டீங்க தானே? எனக்கு ட்ரான்ஸ்பெர் வரும் தான், பட் ஹஸ்பண்ட் கவர்ன்மெண்ட் ஜாப்னு சொல்லி, நீங்க போற ப்ளேஸ் எல்லாம் ட்ரான்ஸ்பெர் அப்ளை பண்ணி வாங்க முடியும். ஆனா மினிமம் த்ரி டூ சிக்ஸ் மந்த்ஸ் ஆகும் ட்ரான்ஸ்பெர் வர்றதுக்கு. மத்தபடி ஒரு லாங்க் டேர்ம்கு ஒரு இடத்தில ட்ரான்ஸ்பெர் வேணாம்னு இருக்கவும் உங்க வேலை காரணம் காண்பிக்க முடியும். அவ்ளோ தான்" என்றவள், இரண்டு நிமிடம் விட்டு, "எல்லாம் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்" என்க,

"என்னைய பிடிக்குமா உனக்கு?" என்றான் அவன் பதில் கேள்வியாக, விழித்தாள் அவள். 'நிலவின் அகத்தினுள் ஆரனின் ஒலி!' அவன் முகத்தைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தவள் கண் இறங்கி அவன் கழுத்திற்கு வந்து, நடு நெஞ்சில் வந்து நின்றது.

எப்போதும் அவனை சீருடையில் பார்த்ததில்லை அவள், கலர்கலர் சட்டையோடு தான் சுற்றுவான். அவன் உடம்பும், தலைமுடி வெட்டும் தான் அவனை காவல்துறையைச் சார்ந்தவனாக காட்டும். இதோ இப்போதும், வைன் நிறத்தில் சட்டை அதன் மேலிரண்டு பொத்தான்களும் கழண்டிருக்க, அதில் சுருள் முடியும் அந்த முடியோடு சுருண்டிருக்கும் குட்டியான கழுத்தை ஒட்டிய தங்க செயினோடு கோர்த்திருந்த பிறை நிலா டாலரில் பதிந்து நின்றது அவள் பார்வை. தீக்ஷி முதல் நாள் கூறியது நினைவு வந்தது, தற்போது அவனின் ஒரு வரி கவிதையே, 'நிலா!' என்பது.

போலீஸ்காரன் பார்வையில் அவள் பார்க்குமிடம் தெரியாமல் போகுமா?

"இது உன்ன பாத்தப்றம் தான் குடுகுடுன்னு ஓடிப்போய் வாங்கி மாட்னேன் நிலா" என்றான் கண்ணைச் சிமிட்டி,

பார்வையை நிமிர்த்தி அவன் முகத்திற்குக் கொண்டு வந்தவள், "நீங்க ஃபர்ஸ்ட் டைம் என்ன கீழ தள்ளிவிட்டு அப்றம் தூக்கியும் விட்டீங்களே அப்பவே இது உங்க கழுத்துல இருந்துச்சு. நா பாத்தேன்" என்றாள் முறைப்புடன்.

"அப்பவே இங்க பாத்துருக்க நீ? பேட் கேர்ள்" என சொல்ல,

இன்னும் முறைத்தவள், "நா எல்லாம் சொல்லிட்டேன். ரொம்ப நேரமா இங்கேயே நிக்றத எல்லாரும் பாக்றாங்க. நம்ம பேச்சு முடிஞ்சதா?" என கேட்க,

"முதல்ல என்னையப் பிடிக்குமான்னு சொல்லு நீ?"

"கல்யாணத்துக்கு ஓகே தான். என் ப்ராமிஸ் மட்டும் எனக்கு மேரேஜ் முன்ன வேணும்"

"உங்கப்பா மாதிரி செய்வேன்னு நினைச்சுக் கேட்டனா, வெளுத்துவிட்ருவேன்" என மிரட்ட,

"இப்படி மிரட்டக் கூடாது நீங்க" என்றாள் அவளும் ஸ்டிரிக்டாக,

"அப்ப நீயும் லூசு மாதிரி கேள்வி கேட்கக் கூடாது. பாதில விட்டுட்டு போணும்னு ப்ளான் பண்ணியா எவனும் கல்யாணம் பண்ணுவான்?"

"இப்ப ப்ளான் வராது மூணு பிள்ள வந்தப்றம் வரும்ல? அப்பவும் வர கூடாதுன்னு தான் ப்ராமிஸ் கேட்கிறேன்"

"நீ முப்பது பிள்ள பெத்து குடுத்தாலும், விட்டுட்டுப் போ மாட்டேன் போதுமா? தலைல அடிக்கணுமா வயித்துல அடிக்கணுமா?" என வண்டியில் ஒற்றை கை ஊன்றி அவளிடம் சென்று கையை அவள் தலைக்கும் வயிற்றுக்கும் கொண்டுப் போக,

"என்ன பண்றீங்க?" என அவன் கையைத் தட்டி விட்டாள்.

"சத்தியம் கேட்ட?"

"முதல்ல இந்த வாய குறைங்க"

நிமிர்ந்து பின்னால் வந்து, மீசையை நீவி, சிரிப்பை மறைத்தவன், "குறைச்சுடலாமே! கல்யாணம் ஆகட்டும் மொத்தமா மறைச்சுடலாம்" என அவன் சொன்ன விதத்தில், புரியாமல் பார்த்தவள்,

"அவ்வளவு தானே?" என்க,

"ம்ம்ம்! போ" என்றுவிட்டான்.

'என்ன, மேரேஜ் பத்தியோ அவன் வீட்ட பத்தியோ எதுவும் சொல்லல? போ ன்னு சொன்னப்றம் நின்னு எப்படி கேட்க?' என யோசித்தவாறே கிளம்பிவிட்டாள்.

"போலாமா சார்?" என வந்தான் மதுரன்.

"தெளிஞ்சுட்டியா?"

"லஷ்மி ரொம்ப நல்லப் பொண்ணு சார்" என்றான் அவன்.

"ஆமா பின்ன உன்னைய சுத்தல்ல விடாம தங்கச்சிய கட்டித் தரேனுட்டாளே இனி எல்லாம் சொல்லுவ நீ"

"அதுக்காக இல்ல சார். உண்மையாவே அவ ரொம்ப நல்லப் பொண்ணு நீங்க தான் அவள ஃஹேப்பியா வச்சுக்கணும்னு சொல்ல வந்தேன்"

"வச்சுக்கலாம் வச்சுக்கலாம்" என கூலர்ஸை மாட்டி வண்டியை எடுத்துவிட்டான் ஆரன்.

ரத்னாவில் ஆரம்பித்த தற்கொலை வழக்கு, ஆண்டாள் வரை வந்திருந்தது. ஆண்டாளின் கணவனான நவீனைப் பார்க்க வந்திருந்தனர் ஆரன், மதுரன் இருவரும்.

பத்மினி அலுவலகம், திருநெல்வேலியில் மட்டும் இரண்டு தியேட்டர்கள், நான்கு திருமண மண்டபம் அவர்களுக்கு இருந்தது. அதன் அலுவலகத்திற்கு தான் வந்திருந்தனர்.

"வாங்க சார்" என நவீன் நேராகவே வந்து அழைத்துச் சென்றான். சோர்ந்து முகமெல்லாம் கறுத்து, அந்த இடத்திற்கும் உடைக்கும் சம்மந்தம் இல்லாதவனாக அழுக்காக இருந்தான். உள்ளே அவன் அப்பாவும், அண்ணனும் அமர்ந்திருக்க, இவர்களைக் கண்டதும், எழுந்து கைக்கொடுத்தனர்.

"சொல்லுங்க சார். என்ன தெரியணும்?" என்றார் நவீனின் அப்பா.

"ஆண்டாள் அப்பா கேஸ் குடுத்துருக்காரே?"

"சூசைட் எங்க வீட்ல நடந்துருக்கே சார். அப்ப அவங்க சந்தேகம் எங்கமேல தான திரும்பும்? எனக்கு புரியும் சார். நீங்க கேட்குறத கேளுங்க" என்றார் அவர்.

"ரைட். நீங்க என்ன சொல்றீங்க அதுக்கு?"
 

நிதனிபிரபு

Administrator
Staff member
"இழப்பு அவருக்கு மட்டுமில்ல எங்களுக்கும் தான். எங்க வீட்டுப் பொண்ணு அது. இதோ என் மூத்த மகனுக்கு அப்றம் எட்டு வருஷங்கழுச்சு பிறந்தவன் நவீன். அவன் ஆசைப்பட்டுக் கேட்டு எதையும் மறுத்ததில்ல. ஆண்டாளும் அவன் ஆசைப்பட்டுக் கட்டிட்டு வந்தப் பொண்ணு தான். நாங்க எங்களுக்கு தெரிஞ்சு அந்தப் பிள்ளைக்கு ஒரு குறையும் வச்சதில்ல. ஆனா அது மனசுல எது குறையா இருந்ததுன்னு எங்களுக்கும் தெரியல. பிள்ளை இல்லன்னு ஆஸ்பத்திரின்னு இவனும் அந்த பிள்ளையும் கிளம்பினப்ப கூட ஒருநாளும் ஒருவார்த்தை நாங்க கேட்டதில்ல. அதப்பத்தியே நாங்க பேசமாட்டோம். அது ஆண்டவன் குடுக்குறது அவன் குடுக்குறப்பக் குடுப்பான்னு தான் சொன்னோம். எதுக்கு அப்படி பண்ணுச்சுன்னே தெரியல, மூணு நாளா அந்த ரூமவிட்டே வராம கிடந்தவன இன்னைக்கு நீங்க வர்றீங்கன்னு காரணம் காட்டி தான் வெளில கூட்டிட்டு வந்துருக்கோம். அதனால தான் உங்களையும் ஆபீஸ் வாங்கன்னு சொன்னதும் கூட. நீங்க வீட்லப் போய் செக் பண்றதுனாலும் தாராளமா பண்ணுங்க. நாங்க மனசறிஞ்சு எந்த தப்பும் பண்ணல. உண்மைக்கும் எங்க மகன யோசிக்காம அந்த பிள்ள இப்படி அவசரபட்ருச்சேன்னு ஆதங்கமா தான் இருக்கு" என பேசி முடிக்க, நவீனைத் திரும்பிப் பார்த்தான் ஆரன், குனிந்தபடி அமர்ந்திருந்தவன் அப்படியே தான் இருந்தான், ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பவனாக தெரிந்தது.

"நவீன்!" என அழைத்துப் பார்த்தான்.

"டேய்" என அவன் அண்ணன் அவன் தோளில் தட்டியபிறகே, நிமிர்ந்து, அதிர்ந்து விழித்தான்.

ஆரன், "ஆண்டாள் ஏன் சூசைட் பண்ணிகிட்டாங்க?" என்றவன் பார்வை மொத்தமாக அவனை ஆராய்ந்தது. நவீன், சுயநினைவோடு இருப்பவனாகவே தெரியவில்லை அவன் பார்வையில்.

"தெரியலயே? குழந்தைக்கான செக்கப் போவோம்னு சொன்னேன். வேணாம்னு அழுதா, ஆறுமாசமா போயிட்ருக்கோம் இன்னும் ரெண்டு மாசம் போவோம் கண்டிப்பா குழந்தை இருக்கும்னு சொன்னேன். சொல்லிட்டு நா வெளில போய்ட்டேன் அவ மொத்தமா போய்ட்டா, குழந்தை வேணும்னு கேட்டதே அவதான். ஆனா கடைசி நா அத சொன்னேனா போயிட்டா?" என அவன் ஆரனிடம் திருப்பிக் கேட்க,

"எந்த ஹாஸ்பிடல் போனீங்க?"

"மதி ஃபெர்டிலிடி சென்டர், இங்கதான், லெனின்ரோஸ் காலேஜ் பில்டிங்கு அடுத்த பில்டிங்க்" என்றான் நவீனின் அண்ணன்.

"ரீசன்ட் டேய்ஸ்ல வேற எந்த சேஞ்சஸும் இல்லையா அவங்கட்ட?"

"இல்லையே சார்"

"தனியா எங்கையாவது போனாங்களா? ஃபோன்ல யார்ட்டயும் பேசுன மாதிரி எதுவும்?"

"இல்ல சார். என் பையன் இல்லாம ஆண்டாள் தனியா எங்கையும் போக மாட்டா. எப்பவும் நாங்க கூடவே தான் இருப்போம்"

"சரி விசாரிப்போம். மறுபடியும் எதுவும் தேவைனா வருவோம். எனக்கு ஆண்டாள் லாஸ்டா யூஸ் பண்ண ரூம் செக் பண்ணணும்" என எழுந்து கொண்டவன், "உங்கப் பையனுக்கு ஸ்பெஷல் கேர் குடுங்க. இப்படியே விடுறது நல்லதே இல்ல" என நவீனைப் பார்த்தே சொல்லிவிட்டு வெளியே வந்தான்.

"வீட்டுக்கு நா கூட்டிட்டுப் போறேன் சார்" என நவீனின் அண்ணன் பின்னையே எழுந்து கொண்டான்.

அடுத்து நவீன் வீடு சென்றனர், ஆண்டாள் நவீன் அறையை சல்லடையாக பரிசோதனை செய்துவிட்டு, ஆண்டாளின் கேஸை முதலில் எடுத்த அந்த ஏரியா காவல் நிலையம் சென்று அவளின் ஃபோன், லேப்டாப்பை பெற்றுக்கொண்டு அவர்கள் சேகரித்திருக்கும் ரிப்போர்ட்களையும் பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.

மீண்டும் கமிஷனர் அலுவலகம் வந்து சேர்ந்தபோது, கமிஷ்னர் ஆரனுக்காகவே காத்திருந்தார்.

"ரத்னா கேஸ் என்னாச்சு ஆரன்?" என்றார் அவன் வந்ததுமே,

"இப்போதைக்கு அது சூசைட் தான்" என்றவன் நிதானமாக அவர் எதிரில் சாய்ந்து அமர்ந்தான்.

"அப்ப கேஸ க்ளோஸ் பண்ணிடலாமே?"

"நோ சார். சூசைட் தான் ஆனா அதுக்கு காரணம் வேறங்கையோ இருக்கு. அத கண்டுபிடிக்கணும்"

"எப்போ கண்டுபிடிப்பீங்க?"

"ஆள் கிடைச்சதும் நேரா கூட்டிட்டே வரேன்"

"ஆளா? அப்போ கொலையா?"

"ம்ம்கூம். நா சரியா மேப் பண்ணிட்டு சொல்றேனே. ஒரு டென் டேய்ஸ் டைம் குடுங்க. முடிச்சுடலாம்" என அவன் அவர் மேசையில் தாளம் போட,

"சரி புது கேஸ் எந்த லெவல்ல இருக்கு?"

"இப்பதான் கலெக்ட் பண்ணிட்டு வரேன், இதோ டீடெயில்ஸ் நீங்களே பாத்துடுறீங்களா?"

"நானே பாக்றதுக்கா உங்கட்ட வேலையக் குடுத்துருக்கேன்?"

"அப்ப பாக்க விடணும்ல?"

"சீக்கிரம் முடிச்சா தான அடுத்தென்னன்னு பாக்க முடியும் ஆரன்?"

"அடுத்து மதுரனுக்கு கல்யாணம் பண்ணணும் அதுவர ரெஸ்ட் தான்" என்றதும் அவன் விழிக்க, கமிஷ்னர் இருவரையும் பார்த்து, தலையைப் பிடித்துக்கொண்டார்.

"சாருக்கு ஒரு டீ சொல்லு மதுரன்" என எழுந்து கொண்டு, "நா போய் என் வேலையப் பாக்றேன் சார்" என வெளியேறிவிட்டான்.

"என்ன நம்மள கோர்த்து விட்டுட்டுப் போறாரு" என்ற மதுரன், "சார் டீ சொல்லவா?" என்க,

"போய்யா முதல்ல" என கடித்துவிட, ஓடியே வந்துவிட்டான்.

ஆரன் அறைக்குள் வர, அவன் முன் குவிந்துகிடந்தது ஆதாரங்கள்.

"மதுரா!" என்றவன் கண்ணை மூடி சேரில் ஆடியபடி இருந்தான்.

"சொல்லுங்க சார்!"

"எதாவது கெஸ் பண்ண முடியுதா?"

"ஆமா சார், குழந்தை இல்லாத பொண்ணுங்களா தேடி எஃபில ஃபாலோ பண்ணி ஃப்ரெண்டாகி அவங்கள ப்ரைன் வாஷ் பண்ணித் தூக்குலத் தொங்க வச்சுருக்கான். இப்ப அவன தான் நாம கண்டுப் பிடிக்கணும்"

"ஓ! எப்படி கண்டுப் பிடிக்கலாம்?" என்றவன் இன்னுமே சிந்தனையில் தான்.

"இந்தா நாம சேர்த்து வச்சுருக்கோமே சார். இந்த ஆறு வருஷத்துல மொத்த பனிரெண்டு தற்கொலை கேஸ். ரத்னால ஆரம்பிச்சு இப்ப ஆண்டாள் வர, எல்லாரோட ஃபேஸ்புக் ஐடியையும் ட்ராக் பண்ணி எடுத்து, அதுல காமன் ஐடிஸ பிரிச்சு எடுத்தா, தொக்கா தூக்கிடலாம்ல சார் அவன?"

"ம்ம் ஓகே. டீடைல் எடுங்க, காமனா வர்றவங்கள ஃபில்டர் பண்ணுங்க. அதுல சந்தேகபடுற மாதிரி சேட்ஸ், அன்வான்டட் ராங் சேட்ஸ் எல்லாம் எடுங்க. எதாவது க்ளு கிடைக்குதான்னு பாப்போம்" என அவனை அனுப்பிவிட, மதுரன் அந்த வேலையை செய்ய சென்றுவிட, இவன் அந்த பனிரெண்டு பேர் தற்கொலைக்குள் இருக்கும் ஒற்றுமைகளை வரிசைப் படுத்தும் வேலையில் இறங்கினான்.

அங்கு, நிலாயினி வீட்டில், மூன்று பெண்களும் மாலை ஒவ்வொருவராக வீடு வந்தபோதும் வினோதினி வந்திருக்கவில்லை.

"உன்ட்ட வந்து சாவியே வாங்கலையா?" என்றாள் சந்திராவிடம் நிலாயினி,

"ம்ம்கூம், எப்பமா வருவன்னு நானே கால் பண்ணி மதியம் கேட்டேன், தெரியலன்றாங்க" என்றாள் அவள் சலிப்பாக. முடிந்தமட்டும் திட்டிவிட்டு தான் வைத்திருந்தாள்.

"இவங்க என்ன செய்ற ஐடியால அங்கேயே உட்கார்ந்துருக்காங்க?" என தீக்ஷியும் கடுப்பாக, நிலாயினி யோசனையானாள்.

"அவரு வேறெதோ ப்ளான் பண்றாருன்னு நினைக்கிறேன்" என நிலா சொல்ல,

"ப்ளான் பண்ணி? இங்க நம்மட்ட இருந்து அவருக்கு என்ன கிடைக்கும்?"

"அவர் மூணு மாசமா நடையா நடைன்னு நடக்கிறது எதுக்கு?"

"எதுக்கு?"

"அம்மாவ பாக்கத்தான? மறுபடியும் சேர்த்துக்க தான? இப்ப அதுக்கு சூப்பர் சான்ஸ் கிடைச்சுருக்கு விடுவாரா?" என பல்லைக் கடிக்க,

"நம்ம அம்மாவும்ல லூசு மாதிரி நடந்துக்குறாங்க" என்றாள் சந்திரா.

"நீ மதுரன் நம்பர் குடு" என நிலா கேட்டதும், சந்திரா திடுக்கிட்டு விழித்தாள், அதிலேயே மதுரன் காலையில் இவள் பேசியவற்றை சந்திராவிடம் சொல்லவில்லை என புரிந்தது.

"மாட்னியா!" என தீக்ஷி சிரிக்க,

"காலைல தீக்ஷி உளறுனத வச்சு கேட்கிறியா லஷ்மி?" என சந்திரா திணற,

"மதுரன் நம்பர் குடு சந்திரா" என நிலாயினி மறுபடியும் அழுத்திக் கேட்க, படபடவென்று சொல்லிவிட்டாள்.

நிலாயினி மதுரனுக்கு அழைக்க, அவன் எடுத்ததும், "எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் மதுரா" என்க,

"சொல்லு லஷ்மி" என்றான் அவன்.

"எங்களுக்கு அப்பான்னு ஒருத்தர் உண்டு. அவருக்கு ஏதோ ஆக்ஸிடெண்டுன்னு அம்மாவ ஹாஸ்பிடல்ல இருக்க வச்சுருக்காங்க. ரெண்டு நாள் ஆச்சு இன்னும் வீட்டுக்கு வர விடல"

"எங்க? எந்த ஹாஸ்பிடல்?" என்கவும் அவள் சொல்ல, "நீ வை நா பேசிட்டுக் கூப்பிடுறேன்" என வைத்துவிட்டான்.

"லஷ்மி!" என சந்திரா வந்து நிற்க,

"எனக்கு எப்பவோ தெரியும் சந்திரா. தனியா இருக்கனால என்ன சுத்தி நடக்குறதுமேல எனக்கு கவனம் ஜாஸ்தி. நீ லவ் பண்றதோ, அதை என்ட்ட மறைக்கிறதோ பெரிய விஷயமில்ல. உன் வாழ்க்கைல நீ ஜெயிச்சுக்கணும். அதுதான் முக்கியம். பாஸ் பண்ணி வேலை வாங்கிட்டு கல்யாணம் உனக்குப் பிடிச்சவங்களயே பண்ணிக்கோ" என சொல்ல, பாய்ந்துக் கட்டிக்கொண்டாள் சந்திரா. அவள் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்திருக்க, இவள் காதல் அதிதென சுற்றிக்கொண்டிருந்தாள் என்று நினைத்துவிடுவாளோ என அதிகமாக பயந்திருந்தாள். லஷ்மி நிலாயினி இதை இவ்வளவு சுலபமாக்கியது வெகுநாட்களாக மறைத்து வைத்திருந்தது வெளிவந்துவிட்ட திருப்தியோடு மனது லேசாகிவிட்டிருந்த சந்தோஷத்தில் கட்டிக்கொண்டாள்.

"அவள உண்டு இல்லன்னு பண்ணுவன்னு பாத்தேன்கா" என்றாள் தீக்ஷி சோகமாக, அவளையும் இழுத்துக் கட்டிக்கொண்டாள் சந்திரா.

"மதுரன் நல்ல பையன். அதனால அவளுக்கு ஓகேனா ஓகே தான்" என்றாள் நிலாயினி.

அந்நேரம், மதுரனுக்கு பதில் புதிய எண்ணிலிருந்து நிலாயினிக்கு அழைப்பு வந்தது, இளையவர்கள் அணைப்பிலிருந்து வெளிவந்து, ஃபோனை எடுத்தவள், "ஹலோ!" என்க,

"ஐ லவ் யூ நிலா. என்னைய தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும். நா உன்ன ரொம்ப வருஷமா லவ் பண்ணிட்ருக்கேன். நீ இன்னைக்கு வந்தவன கல்யாணம் பண்ணிட்டுப் போவியோ? அப்படி ஏதாவது நடந்தது? உன் குடும்பத்தையே விடமாட்டேன் சொல்லிட்டேன். உன் அப்பாவையும் அம்மாவையும் ஆஸ்பத்திரியவிட்டே வெளிய வராம பண்ணிருவேன். என்னைய தான் கல்யாணம் பண்ணணும் நீ. வர்ற மன்டே ரிஜிஸ்டர் ஆபிஸ்ல நமக்கு கல்யாணம். ரெடியா இரு. பை" என்றவாறு அந்த அழைப்பு நின்றது.

கேட்டவை நிஜம் தானா என புரியாமல் நின்றாள் லஷ்மி நிலாயினி. ட்ரூ காலரில் அந்த எண்ணின் பெயர், 'குருதேவ்'.
 
Top Bottom