• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிழலைக் கடந்த காதல் -16

STN - 24

New member
அடுத்தடுத்த விஷயங்களை கூற ஆரம்பித்தான் சதீஷ்.

"முதல்ல ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கணும் மா" என்ற சதீஷ்.
"அப்பாவும் அம்மாவும் இல்லாத சூழ்நிலையில குழந்தை இருந்தா, சட்டப்படி இரண்டு பக்கத் தாத்தா பாட்டிக்கும் குழந்தையை வளர்க்க உரிமை கேட்க வாய்ப்பு இருக்கு. அதனால உங்க அப்பா அம்மா மட்டும் இல்ல, உங்க அண்ணியோட அப்பா அம்மாவுக்கும் கோர்ட்டில் வந்து குழந்தையை நாங்க வளர்க்கிறோம்னு சொல்ல உரிமை இருக்கு.

ஆனா உரிமை இருக்குறதாலேயே குழந்தையை அவங்களுக்குத்தான் கொடுக்கணும்னு அர்த்தம் இல்ல. குழந்தைக்கு எது நல்லது, யார்கிட்ட இருந்தா பாதுகாப்பா இருக்கும், யார்கிட்ட உண்மையான பாசமும் அக்கறையும் இருக்கு, இதையெல்லாம் தான் கோர்ட் பார்க்கும்.

அதோட சேர்த்து பொருளாதார வசதி, குழந்தைக்கு கிடைக்கப்போகும் எதிர்காலம், கல்வி, மருத்துவ வசதி போன்ற விஷயங்களையும் கவனிப்பாங்க. அந்த வகையில பார்க்கும்போது, பொருளாதார ரீதியா அவங்க கொஞ்சம் வலுவா இருக்குறது நம்ம பக்கத்துல ஒரு சின்ன மைனஸ் பாயிண்ட்.

ஆனா அதே நேரத்துல, உங்க அண்ணி கல்யாணம் பண்ணிட்டு வந்ததிலிருந்து அவங்க பெற்றவங்க பெருசா தொடர்பு வச்சுக்கல, குழந்தை பிறந்த பிறகும் வந்து பார்க்கல, உங்க அண்ணி இறந்தப்போ கூட குழந்தையை நாங்க வளர்க்கிறோம்னு கேட்கல. இதெல்லாம் நமக்கு சாதகமா மாறக்கூடிய விஷயங்கள்..."


"சப்போஸ் நீங்க சிங்கிளாவே இருக்கீங்கன்னு வச்சுக்கோங்க. ஒரு கட்டத்தில், உங்களையும் குழந்தையையும் பாதுகாக்க யார் இருக்காங்கன்னு கோர்ட் கேட்கலாம். இப்போ உங்க அப்பா அம்மா இருக்காங்க. ஆனா அவங்களுக்குப் பிறகு என்ன? என்ற கேள்வியும் வரும். அதுக்கு உங்ககிட்ட தெளிவான பதில் இருக்கணும் மா."என்று சதீஷ் கூற,

பிரியா சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

"அதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு அவசியம் இல்லையே சார்?" என்றாள் மெதுவாக.

"இல்ல மா. கல்யாணம் பண்ணிக்கணும்னு யாரும் உன்னை கட்டாயப்படுத்த முடியாது. சட்டமும் அப்படி செய்யாது. நான் சொல்ல வர்றது, எதிர் தரப்பு எந்த மாதிரியான வாதங்களை முன் வைக்கலாம் என்பதைத்தான்.

அவங்க வக்கீல், விக்ரம் குழந்தையை ஏற்றுக்கொள்ள தயாரா இருக்கான். பிரியாவையும் திருமணம் செய்ய தயாரா இருக்கான். குழந்தைக்கு அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என முழு குடும்பச் சூழல் கிடைக்கும்ன்னு சொல்லலாம். அது குழந்தையின் நலன் சார்ந்த வாதம்னு கோர்ட் பார்க்க வாய்ப்பு இருக்கு.

ஆனா அதே நேரத்துல, அந்த வாதத்தை ஏற்றுக்கணுமா வேண்டாமா என்பது உன் விருப்பம். உன்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

அதனால்தான் நான் ஆரம்பத்திலிருந்தே சொல்றேன். விக்ரமுக்கு குழந்தை மட்டும்தான் முக்கியமா? இல்லை உன்னை அடையணும்னு இந்த வழியை பயன்படுத்துறானா? என்பதை நிரூபிக்கிற ஆதாரங்கள் நமக்கு ரொம்ப முக்கியம்.

நீ சொல்ற மாதிரி, இதுவரைக்கும் அவனோ, அவனோட அப்பா அம்மாவோ குழந்தையை வந்து பார்த்ததில்லை, கொஞ்சியதில்லை, வளர்ப்பைப் பற்றி அக்கறை காட்டியதில்லைன்னு நிரூபிக்க முடிஞ்சா, அது நமக்கு பெரிய பலமா இருக்கும்.

அதனால உனக்குத் தெரிஞ்ச எல்லா உண்மைகளையும் எதையும் மறைக்காம கோர்ட்ல சொல்லு. மீதியதை சட்டப்படி நாம பார்த்துக்கலாம். இல்ல உனக்கு விக்ரம் உன்கிட்ட கல்யாணத்தை பத்தி பேசின விஷயத்தை பேச விருப்பம் இல்ல அது உன்னுடைய எதிர்காலத்தை பாதிக்கும்னு யோசிச்சாலும் அது உன் விரும்பம் மா"என்றவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

"எனக்கு என் புள்ளை மட்டும் தான் முக்கியம் சார். அவனை என் கிட்ட இருந்து பிரிக்கிற எந்த விஷயத்தையும் நான் மறைக்க மாட்டேன். உண்மையைச் சொல்ல வேண்டிய இடத்தில் முழுசா சொல்ல தயாரா இருக்கேன்," என்றாள் பிரியா உறுதியாக.

அவளது கண்களில் தெரிந்த உறுதியைப் பார்த்த சதீஷ் மெதுவாகத் தலையசைத்தான்.


"சரி, முன்னாடி ரெண்டு சைட் பெற்றவங்களுக்கும் குழந்தையை வைத்துக்கிற உரிமை இருக்குன்னு சொன்னேன்ல. அதனால்தான் எல்லா கோணத்துலயும் நம்ம தயாரா இருக்கணும் மா" என்றான் சதீஷ்.

"என்னாலயே என் புள்ளையைப் பார்த்துக்க முடியும் சார். என்னையும் பார்த்துக்க முடியும்" என்றாள் பிரியா வேகமாக.

அவளது அவசரத்தைப் பார்த்து லேசாகச் சிரித்தவன்,

"அது நடைமுறைக்கு சாத்தியம்தான் மா. ஆனா இங்கே பொண்ணுங்களுக்கு எந்த அளவுக்கு சிக்கல்களும் பிரச்சனைகளும் வருதுன்னு நாம பார்த்துட்டுத்தானே இருக்கோம். வேலைக்குப் போற இடத்துல, வீட்டுல, சில நேரங்களில் வாழ்க்கையில ஒரு துணை வேணும்னு சொல்வாங்க. அது கோர்ட்டோட கட்டாயம் கிடையாது. ஆனா அப்படி ஒரு விஷயம் முன்வைக்கப்படலாம்.

அதையும் விக்ரம் தனக்குச் சாதகமா மாத்தி, நான் கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இருக்கேன்ன்னு சொல்ல வாய்ப்பு இருக்கு. அதனாலதான் முன்னாடியே சொல்றேன்" என்றான்.

"இப்போதைக்கு நீங்க கேஸ் ஃபைல் பண்ணுங்க சார். எனக்கு என் புள்ளை வேணும். அதுக்கு என்ன பண்ணணுமோ அதைச் செய்யலாம். அவன் ஏற்கனவே மூவ் பண்ணப் போறதா சொன்னான். இவ்வளவு நாள் என்னை விட்டுவச்சதே பெரிய விஷயம். இப்போ தம்பியை வைத்து இன்னும் அராஜகம் பண்றான். இதுக்கு மேல என்னால அமைதியா இருக்க முடியாது. தினமும் தம்பியை பாதுகாத்துட்டு இருக்கிறதுமே ஒரு மன உளைச்சலா இருக்கு" என்று கூறிவிட்டு, தான் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுப் பேசியதை உணர்ந்தவள் தலையை உலுக்கிக் கொண்டாள்.

"கேஸ் ஃபைல் பண்ணுங்க சார். மேற்கொண்டு என்ன பண்ணணும்னு அப்புறம் பார்க்கலாம். வர்ற பிரச்சனைக்கு ஏத்த மாதிரி சமாளிக்க முடியுமான்னு பார்ப்போம். நானும் எங்க அக்கம் பக்கம் இருக்குறவங்ககிட்ட பேசி, நீங்க கேட்டதெல்லாம் ரெடி பண்ண முயற்சி பண்றேன்" என்றாள்.

"சரி," என்று சதீஷ் தலையசைத்துவிட்டு நண்பனைப் பார்த்தான். அவனும் கண்மூடித் திறந்து சம்மதம் தெரிவித்தான்.

"அப்புறம், நீங்களே போவீங்களா பிரியா? இல்லை நான் கூட வரட்டுமா?" என்று பரத் கேட்டான்.

இதுவரை பரத்தைத் திரும்பிப் பார்க்காதவள், இப்போது அவனை நோக்கி லேசாகப் புன்னகைத்துவிட்டு, "நான் போயிடுவேன் சார். ரொம்ப தேங்க்ஸ். உங்களுக்குத்தான் நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். வரேன் சார். போன் பண்றேன்" என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் சென்ற பிறகு, சதீஷ் பரத்தைப் பார்த்தான்.

"என்னடா மச்சான், இந்தப் பொண்ணு இப்படி சொல்லிட்டு போறா?" என்றான்.

"அவ நிறைய வாழ்க்கையில அடிபட்டு, மிதிபட்டு வந்திருக்காடா. நிறைய வலிகளையும் வேதனைகளையும் சுமந்துட்டு நிற்கிறா. அதனாலதான் அப்படி இருக்கா" என்றான் பரத்.

"இருக்கட்டும். அவ சொன்ன மாதிரி, அப்போ இருக்கிற சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி பார்த்துக்கலாம்."

"டேய், நான் என்ன இல்லாததையா சொன்னேன்?" என்றான் சதீஷ்.

"புரியுது மச்சான். நீ இருக்குற விஷயத்தைத்தான் சொல்ற. ஆனா அதுக்காக சட்டுன்னு அவளை எந்த முடிவும் எடுக்கச் சொல்ல முடியாது இல்லையா?"

"நானும் முடிவு எடுக்கச் சொல்லலடா. ஆனா இந்த மாதிரி கேள்விகள் வரும் என்பதற்காக முன்னாடியே சொல்றேன். அதுக்கு ஏத்த மாதிரி நம்மளும் சில விஷயங்களை ரெடி பண்ணி வச்சிருக்கணும் இல்லையா? டைம் போகப் போக விக்ரம் அவன் பக்கம் பேசுற மாதிரி திருப்ப முயற்சி பண்ணலாம். அதுக்குள்ள நாம ஏதாவது கலெக்ட் பண்ணி வச்சிருந்தா நல்லதுதானே? அவன் எந்த வகையில பிடிச்சிருக்கான்னு நமக்குத் தெரியாது இல்லையா?"

"அவ சொன்ன மாதிரிதான்டா. எப்படியும் அவன் வக்கீலைப் பார்த்திருந்தா விஷயம் தெரிஞ்சுரும்" என்றான் பரத்.

"ஆமாம்" என்று தலையசைத்தான் சதீஷ்.

"அப்புறம் என்ன, விடு. பார்த்துக்கலாம். நான் வீட்டுக்குப் போயிட்டு பிரியாகிட்டயும் பேசிட்டு, என்னன்னு உனக்கு போன் பண்ணி சொல்றேன்," என்று கூறிவிட்டு கிளம்பினான்.

பரத் போகும் வழியெங்கும் சதீஷ் கூறிய விஷயங்கள்தான் அவன் மனதில் ஓடின. அதற்கு பிரியா கொடுத்த எதிர்வினையும் நினைவில் வந்தது. கடைசி வரை அவளுடன் துணையாக இருப்பேன் என்று அவளிடம் நேராகக் கூற முடியவில்லையே என்று வருந்தியவன், 'பாப்போம்... எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்'என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

அங்கிருந்து கிளம்பியவன், நடந்த அனைத்தையும் சசியிடமும் கூறினான். அவனும் பொறுமையாகக் கேட்டுவிட்டு,
"அடுத்தது என்னன்னு பாப்போம் டா. அதுக்குள்ள எதையும் அவசரப்பட்டுப் பண்ண வேண்டாம்" என்றான்.

"சரி" என்று பரத் அமைதியாகிவிட்டான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் விக்ரம் கோர்ட்டில் கேஸ் போட்டிருப்பதாக வக்கீல் நோட்டீஸ் வந்தது. பிரியா உடனே பரத்துக்கு போன் செய்து விஷயத்தை கூறினாள். அங்கிருந்து கிளம்பும்போதே சதீஷ் தன்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்திருந்ததால், அவனுக்கும் போன் செய்து தகவலை தெரிவித்தாள்.

"சரி, பார்த்துக்கலாம்" என்று அவனும் கூறிவிட்டான்.

மேற்கொண்டு, கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு விக்ரம் அவளை நேரில் சந்தித்தான். வீட்டிற்கே வந்தவன், "என்ன மேடம்? கோர்ட்டுல பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்க போல. வக்கீல் எல்லாம் ரெடி பண்ணி இருக்கீங்க போல" என்றான் நக்கலாக.

பிரியா அமைதியாக நின்றாள்.

"எந்த அளவுக்கு வேணாலும் போராடு. கடைசியா என்கிட்டதான் வந்தாகணும். அதை மறந்துடாத," என்றான்.

"எனக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு நீ வேணும். அதுக்கு இவன் இடைஞ்சலா இருக்கானா, இவனையும் கையோட கூட்டிட்டு போக எனக்கு பிரச்சனை இல்லை. அதுவும் உனக்காக மட்டும்தான்."
மேற்கொண்டு பேசாமல் நிற்க,

"ஏய்!" என்று வேகமாகக் கத்தினாள் பிரியா.

"துள்ளாதடி. எனக்கு அவன் தேவையே கிடையாது. அவன் எனக்கு ஒரு பொருட்டே கிடையாது. தெளிவாத்தான் சொல்றேன். நீ அடம்பிடிக்கிறதால அவனுக்குத்தான் பிரச்சனை. அதையும் மனசுல வச்சுக்கோ. எனக்கு நீ மட்டும் தான் வேணும். அவனை கூட்டிட்டு வர்றதும், இங்கே உங்க அப்பா அம்மாகிட்ட விட்டுட்டு வர்றதும் உன் பிரச்சனை. ஆனா உன்னை அடைஞ்சே தீருவேன்" என்றவன் கோணலாகச் சிரித்தான்.

போகும் முன் பறக்கும் முத்தம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, அவளை மேலிருந்து கீழ்வரை கேவலமாகப் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் சென்ற பிறகுதான் பிரியாவுக்கு உடல் முழுவதும் ஊசி குத்துவது போல இருந்தது. அவன் முன்பு நிர்வாணமாக நின்றது போன்ற அருவருப்பு தோன்றியது. தன் உடம்பையே தீ வைத்து எரித்துக் கொள்ளலாமா ?என்று கூட ஒரு கணம் தோன்றியது.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு அயோக்கியனுக்காக தன்னை உலகமாக நம்பியிருக்கும் தருணை விட்டுக்கொடுக்க முடியாது என்று எண்ணியவள், அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சுவரில் சாய்ந்தபடி நின்றாள்.

அவளது பெற்றோர் விநாயகமும் செல்வியும் இதையெல்லாம் பார்த்து வருத்தப்பட்டனர். மகளின் வாழ்க்கை இப்படியே சென்று விடுமோ ?என்ற பயம் அவர்களை ஆட்டிவைத்தது.

மகனை இழந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இப்போது ஆறு மாதங்களாக மகளிடம் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவளோ,"எனக்கு திருமணமே வேண்டாம். என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் தருண்தான்," என்று கூறிக் கொண்டிருக்கிறாள்.

இப்போது புதிதாக முளைத்திருக்கும் விக்ரம் வேறு. அன்றே அவன் தொல்லை முடிந்துவிட்டது என்று நினைத்திருந்தார்கள். ஆனால் மீண்டும் வந்து நிற்பதைப் பார்த்து அவர்களுக்கு அச்சமாக இருந்தது.

அதே சமயம் பேரனைத் தங்களிடமிருந்து பிரித்து விடுவானோ? என்ற பயமும், மகளை ஏதாவது செய்து விடுவானோ ?என்ற பயமும் சேர்ந்து அவர்களை வாட்டியது.

இதற்கு ஒரே தீர்வு, மகளுக்கு நல்லவராக ஒருவரைப் பார்த்து திருமணம் செய்து வைப்பதுதான் என்று அவர்கள் மனதில் தோன்றியது. குழந்தையோடு சேர்த்து மகளையும் ஏற்றுக்கொள்பவர் கிடைத்தால் மிகவும் நல்லது. அப்படி இல்லை என்றாலும், குழந்தையைத் தாங்களே நன்றாக வளர்த்துக் கொள்வோம். ஆனால் இவனிடமிருந்து மகளைப் பாதுகாக்க ஒரு வழி திருமணம்தான் என்று எண்ணினார்கள்.

ஒரு பெற்றோராக அவர்களது எண்ணமும் நியாயமானதுதானே?
 
Top Bottom