• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிழலை கடந்த காதல் - 29(இறுதி அத்தியாயம்)

STN - 24

Member
வினியும் தனது கணவன் சங்கருடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.

"மேற்கொண்டு படிக்கிறியா?" என்று சங்கர் கேட்டபோதுகூட,

"இல்ல. இப்போதைக்கு அதில் எனக்கு ஆர்வம் இல்லை. குடும்பத்தோட சந்தோஷமா இருக்கணும்னுதான் விருப்பம்," என்று கூறிவிட்டாள்.

அரை மணி நேரப் பயண தூரம்தான் என்பதால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்து தாயைப் பார்த்துவிட்டு, தருணுடன் விளையாடிவிட்டு செல்வாள்.

அதேபோல் வீட்டுப் பொறுப்புகளையும் கவனித்து, அனைவருடனும் நேரம் செலவழித்துவிட்டு செல்வாள்.

நாட்கள் கிடுகிடுவென நகர்ந்தன.

மேலும் சில மாதங்களும் கடந்து விட்டன.


அன்று பரத் அலுவலகத்தில் வேலையில் கவனமாக இருந்தான்.

அப்போது சசியின் போன் அலறியது.

போனை எடுத்துப் பார்த்தவன்,

"பிரியா..." என்று திரையில் தெரிந்த பெயரைப் பார்த்தான்.

"சொல்லு பிரியா," என்றான்.

" எங்க இருக்கீங்க அண்ணா?"

"ஆபீஸ்ல."

"அவர் உங்க கூட இருக்காரா?"

"இருக்கான்."

"அவர் கிட்ட போனைக் கொடுங்க."

"ஏன்?"

"சொன்னதைச் செய்யுங்க. போனைக் கொடுங்க."அவளது குரலில் இருந்த அவசரம் அவனை யோசிக்க வைத்தது.

'என்னடா இது? அதிசயமா இருக்கு. இப்படி போன் பண்ணி பேசுறது என் தங்கச்சியா?' என்று மனதில் நினைத்துக் கொண்டவன், பரத்திடம் போனைக் கொடுத்தான்.

"சொல்லு பிரியா."

"உங்க போன் எங்கே?"

"என்ன விஷயம் சொல்லு."

"நான் போன் பண்ணினா போன் கூட எடுக்க மாட்டீங்களா?"

அப்போதுதான் தனது மொபைலைப் பார்த்தவன், அது சைலண்டில் இருப்பதை கவனித்தான்.

"சைலண்ட்ல இருந்துச்சு. சரி, என்ன விஷயம்?"

"வீட்டுக்கு வாங்க."

"வீட்டுக்கா?"

"ஆமாம்."

"ஏய், வேலையா இருக்கேன். என்ன விஷயம்னு சொல்லு."

"வீட்டுக்கு வாங்க. வர முடியுமா முடியாதா?"

"போன்ல சொல்ல முடியாதா?"

"வீட்டுக்கு வாங்க. அவ்வளவுதான்."என்று பட்டென்று போனை வைத்துவிட்டாள்.

பரத் சிரித்துக் கொண்டே,
'இவளுக்கு என்ன வந்துச்சு? புதுசா பிஹேவ் பண்றாளே!' என்று எண்ணினான்.

அருகில் இருந்த சசி அவனை குறுகுறுவென பார்த்தான்.

"மச்சான், கொஞ்சம் வெளியே வேலை இருக்கு. போயிட்டு வரேன்," என்றான் பரத்.

"எத்தனை நாள் என்னை ஒட்டி இருப்ப மவனே! இன்னைக்குதான் தெரியுதா பொண்டாட்டி ராஜ்ஜியம் என்னன்னு?

பொண்டாட்டி ஒரு வார்த்தை சொன்ன உடனே கிளம்புற பாத்தியா?

பயமா என் தங்கச்சியை பார்த்து?" என்று சிரித்தான்.

அவன் தலையில் ஒரு கொட்டு வைத்த பரத்,

"பயந்து ஒண்ணும் போகல."

"அப்போ இவ்வளவு நாள் நீ வீட்டுக்கு ஓடினதே இல்லையா? அப்போ என் தங்கச்சிக்கு பயந்து தான் ஓடுனியா?"

"போடா."

"ரேகாவுக்கு போன் பண்ணி சொல்லட்டுமா?"

"போடா நாயே! என் வாழ்க்கையில கும்மி அடிக்காத."என்ற நண்பனின் முதுகில் தட்டிவிட்டு கிளம்பினான்.


வீட்டிற்குச் செல்லும் வழியிலேயே அவனுக்குச் சிறு எரிச்சல் இருந்தது.

வேலையாக இருக்கும் நேரத்தில் வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தாள்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன்,

"எங்கம்மா உங்க மருமக?" என்று கேட்டான்.

"ரூம்லதான் இருக்கா."

"என்னாச்சு?"

"தெரியலடா. நீ வந்திருக்கியே, போய்ப் பாரு."என்று கூறினார் பானுமதி.


அவசரமாக அறைக்குள் நுழைந்தான்.

"இவ்வளவு நேரமா?" என்று பிரியா கேட்டாள்.

"ஏய், என்னடி ஆச்சு உனக்கு?"

"வாங்க. நம்ம ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம்."

"யாருக்கு என்னாச்சு?"

"வாங்க.எல்லாத்துக்கும் கேள்வி கேட்டுட்டே இருப்பீங்களா?" என்று எரிச்சலுடன் கூறினாள்.

யாருக்கோ ஏதோ ஆகிவிட்டதோ என்ற பதட்டத்தில், அவள் கூறிய மருத்துவமனைக்கே அழைத்துச் சென்றான்.

அங்கே நேராக ஒரு மகப்பேறு மருத்துவரைச் சந்திக்கச் சென்றாள்.

"பிரியா, என்ன விஷயம்?" என்று மீண்டும் கேட்டான்.

"கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீங்களா?" என்றாள். பற்களைக் கடித்தபடி அமைதியாக அமர்ந்தான்.

மருத்துவர் புன்னகையுடன், "சொல்லுங்க மா? என்ன பிரச்சனை?"என்றார்..


அவளோ,"அது"என தயங்க..


புன்னகையுடன்,"எத்தனை நாள் தள்ளிப் போயிருக்கு?" என்று கேட்டார்.

அதிர்ச்சியுடன் பரத் பிரியாவைப் பார்த்தான்.

பிரியா நாணத்துடன்,"இருபத்தி இரண்டு நாள், டாக்டர்," என்றாள்.

'என்ன? இருபத்தி இரண்டு நாளா?' என்று மனதிற்குள் கத்தினான் பரத்.

"வீட்டில் டெஸ்ட் பண்ணீங்களா?"

"இல்ல டாக்டர். நேரா இங்கதான் வந்தோம்."

"சரி. ஒரு டெஸ்ட் எடுத்து பார்ப்போம்."என்று சீட்டு எழுதிக் கொடுத்தார்.

வெளியே வந்ததும்,"நீ என்கிட்ட எதுவுமே சொல்லலையே!" என்று பரத் கேட்டான்.

"எனக்குமே உறுதியா தெரியல."

"இருபத்தி இரண்டு நாள் ஆச்சு!"

"கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீங்களா?" என்று மீண்டும் அடக்கினாள்.

டெஸ்ட் கிட் வந்ததும் இருவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதை பிரியா பரத்திடம் கொடுத்து,
"நீங்க பாருங்க," என்றாள்.

"நீ பாருடி."என இருவரும் தள்ளிக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு நர்ஸ் வந்து,"எவ்வளவு நேரமா வெயிட் பண்றது? வாங்க, டாக்டர் கூப்பிடுறாங்க," என்று கிட்டை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

இருவருக்கும் ஏமாற்றமாக இருந்தது.

சில நிமிடங்களுக்குப் பிறகு மருத்துவர் அறைக்குள் அழைத்தார்.

அவர்களைப் பார்த்து புன்னகைத்தவர், "காங்கிராட்சுலேஷன்ஸ், பிரியா! நீங்க கர்ப்பமாக இருக்கீங்க," என்றார்.

அந்த ஒரு நொடி...

இருவரும் ஒருவரை ஒருவர் மட்டுமே பார்த்துக் கொண்டனர்.

எதிர்பாராத நேரத்தில் கிடைத்த அந்த மகிழ்ச்சி அவர்களை திக்குமுக்காட வைத்தது.

கண்களில் ஆனந்தம் நிரம்பியது.

மருத்துவர் ஏதோ அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால் இருவருமே வேறு உலகத்தில் இருந்தனர்.

அதை உணர்ந்த மருத்துவர் சிரித்துவிட்டு, "ஃபர்ஸ்ட் பேபியா?" என்று கேட்டார்.

பிரியா பதில் சொல்லும் முன்,

"இல்ல டாக்டர். செகண்ட் பேபி," என்று பரத் வேகமாகச் சொன்னான்.

"அப்புறம் ஏன் இவ்வளவு எக்சைட்மென்ட்?"என்று மருத்துவர் சிரித்தார்.

"இல்ல அது " என தடுமாற..

" செகண்ட் பேபிக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தீங்களா? ஃபர்ஸ்ட் பேபிக்கு என்ன ஏஜ் ஆகுது?"

"ஃபைவ் இயர்ஸ்"

"ஓஹோ!"என்று அதை கேட்ட மருத்துவரும் புன்னகைத்தார்.

பிறகு தேவையான பரிசோதனைகள் அனைத்தையும் செய்து முடித்து,

எப்படி சாப்பிட வேண்டும், என்னென்ன கவனிக்க வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.


வீட்டிற்கு திரும்பும் வழியெல்லாம் இருவரும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே வந்தனர்.

அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.


சிக்னலில் வண்டியை நிறுத்தியவன் மெதுவாக அவளைத் திரும்பிப் பார்த்தான்.

பிரியாவும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன?" என்று அவள் கேட்டாள்.

பரத் சில நொடிகள் எதுவும் பேசவில்லை.

பிறகு அவளது கையை பிடித்துக் கொண்டான்."எனக்கு இன்னும் நம்பவே முடியலடி..."என்றான்.

அவள் சிரித்துக் கொண்டே,
"எனக்குமே..."என்றாள்.

"நான் அப்பாவாகப் போறேன்னு நினைக்கும்போது..." என்று தொடங்கியவன் வார்த்தைகளைத் தேடினான்.

"தருண் என்னை அப்பான்னு கூப்பிடும்போது கூட சந்தோஷமாத்தான் இருந்துச்சு. ஆனா இப்போ..." என்று நிறுத்தினான்.

"இப்போ?"என்று கேட்டாள் பிரியா.

அவளைப் பார்த்தவன் கண்கள் கலங்க,"இப்போ நம்ம ரெண்டு பேரோட காதலுக்கு அடையாளமா ஒரு உயிர் வரப் போகுதுன்னு நினைக்கும்போது... என்னால சொல்லவே முடியல."என்றான்.

பிரியாவின் கண்களும் கலங்கின.
"பரத்..."என்று அழைத்தவள் அவன் கையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.

"நன்றி."என்றான்.

"எதுக்கு?"

"என் வாழ்க்கையில வந்ததுக்கு...
தருணை எனக்கு கொடுத்ததுக்கு... இப்போ இந்த சந்தோஷத்தையும் கொடுத்ததுக்கு..." என்று கூறியவன் அவளது கையில் மெதுவாக முத்தமிட்டான்.

கண்ணீரோடு சிரித்தாள் பிரியா.

"எனக்கும் நன்றி சொல்லணும் பரத்."

"எதுக்கு?"

"நான் விழுந்த இடத்துல இருந்து என்னை தூக்கி நிறுத்தினதுக்கு...
தருணுக்கு அப்பாவா இருந்ததுக்கு...இப்போ இந்தக் குழந்தைக்கு உலகத்திலேயே சிறந்த அப்பாவா இருக்கப் போறதுக்கு..."என்றாள்.

பரத் சிரித்துக் கொண்டே அவளது நெற்றியை வருடினான்.

"எனக்கு பொண்ணு வேணும்."
என்று திடீரென்று கூறினான்.

"ஏன்?"

"உன்னை மாதிரி இருக்கணும்."
என்றான்.

அவள் வெட்கத்தில் சிரித்தாள்.

"எனக்கு பையன் வேணும்."

"ஏன்?"

"உங்களை மாதிரி இருக்கணும்."
என்றாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.


வீட்டிற்குள் நுழைந்ததும், ஹாலில் வினி தருணுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

இருவரையும் பார்த்தவள் வேகமாக எழுந்தாள். "அண்ணி, எங்க போயிட்டு வரீங்க?நீங்க வந்ததிலிருந்து பதட்டமா இருந்தீங்க.அண்ணாவும் கொஞ்ச நேரத்துல வந்துட்டாரு. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் வெளியே போனீங்கனு.அம்மா போன் பண்ணி சொன்னாங்க.
அதனாலதான் நானும் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.என்ன ஆச்சு?" என்று கேட்டாள்.


பரத்தும் பிரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு புன்னகைத்துக் கொண்டே நின்றனர்.


வினி, பிரியாவின் கைகளைப் பிடித்துக் குலுக்கியபடி மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாள்.

பிரியா சிரித்துக் கொண்டே தனது கையில் இருந்த கவரை அவளிடம் நீட்டினாள்.

அதற்குள் இருந்த கர்ப்ப பரிசோதனை கிட் மற்றும் மருத்துவரின் அறிக்கையை வினியின் கையில் திணித்தாள்.

ஒன்றும் புரியாமல் முதலில் மருத்துவரின் அறிக்கையைப் பார்த்தாள்.

அதைப் படித்தவளுக்கு அப்படி ஒரு ஆனந்த அதிர்ச்சி.

பிறகு சிறிய கவரைத் திறந்து பார்த்தாள்.

அதற்குள் இருந்த கர்ப்ப பரிசோதனை கிட் அவளது சந்தேகத்தை உறுதி செய்தது.

அடுத்த நொடியே அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

தனது அண்ணனும் அண்ணியும் ஒன்றாக முழுமையாக வாழ்ந்து விட மாட்டார்களா?

தனது அண்ணன் அவனது காதலை வெளிப்படுத்த மாட்டானா?

அவனுக்கென்று ஒரு குடும்பம் அமையாதா?என்று எத்தனையோ நாட்கள் ஏங்கியிருந்தவளுக்கு, இன்று தனது அண்ணி கர்ப்பமாக இருப்பதை நினைத்தபோது, தன்னை மீறி ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

"என்னடி இது?" என்று பானுமதி பதற்றமாகக் கேட்டார்.

"அம்மா... அது..." என்று பேச முடியாமல் நின்றாள் வினி.

"சொல்லுடி!" என்று பானுமதி அவசரப்படுத்தினார்.

வேகமாக தாயை அணைத்துக் கொண்ட வினி,"அம்மா... நான் திரும்ப அத்தையாயிட்டேன்... நீங்க திரும்ப பாட்டியாயிட்டீங்க!" என்றாள்.

அந்த வார்த்தையில் இருந்த இரட்டிப்பு மகிழ்ச்சியை பிரியா உடனே உணர்ந்து கொண்டாள்.

அதிலும் "திரும்ப" என்ற வார்த்தை அவளை இன்னும் அதிகமாக நெகிழ வைத்தது.

தருணை எந்த அளவிற்கு தங்கள் குடும்பத்தின் குழந்தையாக ஏற்றுக் கொண்டார்களோ, அதே அளவிற்கு அவனது உறவுகளையும் மனதார ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

அதை நினைத்த பிரியா, கண்கள் கலங்க பரத்தை திரும்பிப் பார்த்தாள்..

"இவை அனைத்தும் இவனால் தான் சாத்தியமானது..."

என்று மனதிற்குள் தன்னவனை நினைத்து கர்வம் கொண்டாள்.

அப்போது சசியிடமிருந்து வினிக்கு போன் வந்தது.

"வினி, என்ன ஆச்சு? நீ வேற வீட்டுக்கு வரச் சொல்லிட்டு, எனக்கும் போன் பண்ணியிருந்த.
அம்மாவும் பதட்டமா பேசினாங்க.
பரத் வீட்டுக்கு வந்தானா இல்லையா? எனக்கு வேற பயமா இருக்கு."

"மாமா, நீ அக்காவையும் கூட்டிட்டு வீட்டுக்கு வா.நான் சொல்றேன்."

"என்னன்னு சொல்லு முதல்ல."

"நீ வா மாமா."

"சரி."என்று கூறிவிட்டு அவனும் வேகமாக கிளம்பினான்.


இங்கே பானுமதி ஆனந்தத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தார்.

திடீரென்று சமையலறைக்குள் ஓடிச் சென்றவர், சர்க்கரை டப்பாவை எடுத்துக் கொண்டு வந்தார்.

தருண் அங்கே விளையாடிக் கொண்டிருந்தான்.

அவனருகே முட்டி போட்டு அமர்ந்தவர், ஒரு சிட்டிகை சர்க்கரையை அவன் வாயில் போட்டார்.

"என்ன பாட்டி?" என்று புரியாமல் கேட்டான் தருண்.

அவனது கன்னத்தை வருடியபடி பானுமதி கண்கள் கலங்கச் சிரித்தார்.

"என் தருண் குட்டிக்கு தம்பி பாப்பாவோ... இல்ல தங்கச்சி பாப்பாவோ வரப் போறாங்கடா!" என்றார்.

"உண்மையாவா?" என்று தருண் கண்களை விரித்தான்.

"ஆமாம்டா கண்ணா."

"அப்போ நான் பெரிய அண்ணனா ஆகப்போறேனா?" என்று குதூகலமாகக் கேட்டான்.

"ஆமாம்! என் குட்டி பெரிய அண்ணனா ஆகப்போறான்."
என்று கூறிய பானுமதி, அவனைத் தன்னோடு அணைத்துக் கொண்டார்.

அந்த வீட்டில் அடுத்த தலைமுறையின் வருகையை நினைத்த மகிழ்ச்சி, ஒவ்வொருவரின் முகத்திலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.


அப்போதுதான் சசி வீட்டிற்குள் நுழைந்தான்.

“என்ன வினி?” என்று கேட்டுக் கொண்டே வந்தவன், மற்றவர்களின் முகத்தில் மகிழ்ச்சி இருப்பதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் பிரியாவின் அருகில் சென்றான்.

தன் கையில் இருந்த பிரெக்னன்சி கிட்டை அவன் கையில் திணித்த வினி, “நீ இரண்டாவது முறையா தாய்மாமா ஆயிட்டீங்க மாமா!” என்றாள்.

கண்கள் கலங்க, வேகமாக தன் கைகளில் இருந்தவற்றைப் பிரித்துப் பார்த்தான். கண்கள் கலங்கி, தன்னை மீறி கண்ணீர் வழிந்தது.

பிரியாவைத்தான் பார்த்தான். அவளும் கண் மூடித் திறந்து புன்னகைத்தாள்.

“காங்கிராட்ஸ் தங்கச்சிமா!” என்றான்..

ரேகா அவளை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

“டேய் வினி குட்டி, நாம திரும்ப அத்தையாகிட்டோம்!” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு குதிக்க, அவளும் குதித்தாள்.

வீடே சந்தோஷத்தில் மிதந்தது.

விநாயகம், செல்விக்கும் போன் செய்து கூறியிருந்தார்கள். அவர்களும் வந்தார்கள்.

அனைவரும் அன்றைய பொழுதை சந்தோஷமாகக் கழித்தார்கள்.

சங்கரும் தனது வாழ்த்துக்களைக் கூறிவிட்டு,“எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு வினி. இன்னைக்கு நீ இங்கேயே இருந்துக்கோ. நாளைக்கு காலையில வந்து கூட்டிட்டு போறேன்,” என்று கூறிவிட்டு சென்றான்.

அவள் தாயுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவளை அங்கே விட்டுச் சென்றான். போகும் போது தனது அத்தையிடம் கண்களாலேயே சொல்லிவிட்டும் சென்றான்.

ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறாள் என்பதால், மனைவியை அங்கு விட்டுவிட்டு வாழ்த்துக்களைக் கூறிச் சென்றான்.

நேரமாவதை உணர்ந்து அனைவரும் ஒவ்வொருவராக கிளம்பத் தயாரானார்கள்.

“நீங்க சாப்பிட்டுப் போங்கடா,” என்று பானுமதி கூற,

“இப்பவே என்னத்த சாப்பாடு? இன்னொரு நாளைக்கு வரும்போது இருந்து சாப்பிடலாம். இப்போ வினி போன் பண்ணவும், எல்லாம் போட்டது போட்டபடி அப்படியே போட்டுட்டு வந்துட்டேன்,” என்றான் சசி.

அதன் பிறகு சரி என்று அனைவரும் கிளம்ப,

“சரி வரேன் மச்சான்,” என்று அவன் இரண்டடி எடுத்து வைக்க,
வேகமாக தனது நண்பனை கட்டி அணைத்துக் கொண்டான் பரத்.

“டேய் பரத்...மச்சி...” என்று அவன் முதுகை வருடினான்.

பரத்தின் கண்களில் இருந்தும் நீர் வழிந்தது. இவனும் அழுதான்.

அவர்களின் நெருக்கம் எந்த அளவிற்கு என்பது, அவர்களின் ஒற்றை அணைப்பும் அந்த கண்ணீரும் உணர்த்தியது.

தனது மொத்த உணர்வுகளையும் நண்பனிடம் அந்த ஒற்றை அணைப்பில் வெளிப்படுத்திவிட்டான்.

“ஒன்னும் இல்லடா மச்சான். அங்க பாரு... வினி, அம்மா, பிரியா எல்லாரும் பாக்குறாங்க,” என்றவன் அவன் முதுகை நீவிவிட்டான்.

வினி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

“சரி, நீ பாரு,” என்றவன், தங்களையே பார்த்துக் கொண்டிருந்த தங்கையை கண்காட்டினான்.

அதன் பிறகுதான் உணர்ந்தவன் அவனிடம் இருந்து விலகினான்.

“சரி மச்சான், நீ பாரு. ரொம்ப நேரமா தங்கச்சி உன்னைத்தான் பாத்துட்டு இருக்கா,” என்று அவன் காதில் கிசுகிசுத்துவிட்டு,

“அதனால்தான் எல்லாத்தையும் நானே கிளப்பிவிடுறேன். அவங்களும் கிளம்பிட்டாங்க. பிரியா ரொம்ப நேரமா உன்னைத்தான் பாத்துட்டு இருக்கா,” என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

பிரியா ரூமுக்குள் செல்வதற்கு யோசிப்பாளோ என்று எண்ணி, பானுமதி தான் அருகில் வந்து,

“பிரியா மா, வந்ததிலிருந்து சோர்வா இருக்கிற மாதிரி தெரியுது. கொஞ்ச நேரம் போயிட்டு ரெஸ்ட் எடு. கூப்பிடுறேன்,” என்று கூறினார்.

“சரிங்க அத்தை,” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

வினி தருணை அழைத்துக் கொண்டு விளையாடச் செல்ல, பரத் ஒரு சில நொடிகள் நின்றவன், தாயும் சமையலறைக்குள் சென்றதும் ரூமுக்குள் சென்றான்.

அவனைப் பார்த்தவுடன் வேகமாக கட்டி அணைத்துக் கொண்டாள் பிரியா.

“ஏண்டி, என்கிட்ட சொல்லவே இல்ல? டேட் தள்ளிப் போயிருக்கு என்று?”

“எனக்குமே தெரியல பரத்! நீங்க வேற சொல்லக் கூடாதுனு இல்ல. நானும் தெரியாமத்தான் இருந்தேன்.”

“போன் பண்ணும்போதுகூட சொல்லவே இல்லடி.”

“ இது போன்ல சொல்ற விஷயமா? இன்னொன்னு, எனக்குமே கன்ஃபார்மா தெரியல.”

“அப்புறம் எப்படி தெரிஞ்சுச்சு?”

அதற்குப் பிரியா நடந்ததை முழுவதுமாகச் சொல்ல ஆரம்பித்தாள்...“இன்னைக்கு ஆபீஸ்ல முக்கியமான ஒரு ஃபைல் சப்மிட் பண்ண சொல்லி இருந்தாங்க. ஒரு வாரம் கழிச்சு சப்மிட் பண்ண வேண்டிய ஃபைல். ஆனா அர்ஜெண்ட்டா இன்னைக்கே சப்மிட் பண்ணி ஆகணும்னு சொன்னாங்க.

அப்போ என் ஆபீஸ்ல ஒருத்தர் புலம்பிட்டு இருந்தாரு.

தேதி சொல்லி இன்னும் ஒரு வாரம் கழிச்சு சப்மிட் பண்ண சொல்லிட்டு, இப்போ இன்னைக்கே வேணும்னு சொல்றாங்க. இந்த வாரம் லாஸ்ட்ல 31-ம் தேதி பண்ணா போதும்னு சொல்லிட்டு, இப்போ 23-ம் தேதி கேட்கிறாங்க...ன்னு புலம்பிட்டு இருந்தாரு.

அப்போதான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. இந்த மாதம் 23-ம் தேதியா?ன்னு யோசிச்சேன்.

என்னோட மந்த்லி பீரியட் டேட் ஞாபகம் வந்துச்சு. நான் 28 நாள் சைக்கிள்ல வர்றவ. மந்த் ஸ்டார்டிங்லையே தலைக்குளிச்சிருக்கணும்.

அவர் தேதி சொல்லிச் சொல்லி புலம்பியதாலதான் எனக்கு புத்தி உறைச்சது.

உடனே அவர் கிட்ட போய், இன்னைக்கு என்ன தேதி?ன்னு கேட்டேன்.

அவர் என்னை ஒரு மாதிரி பார்த்தாரு.

அதுக்கப்புறம்தான் நான் போன் எடுத்து டேட் பார்த்தேன். 23-ம் தேதி.

அப்போதான் எனக்கு ஸ்ட்ரைக் ஆச்சு.

உடனே ஆபீஸ்ல பர்மிஷன் போட்டுட்டு வந்தேன்.

போகும்போதுகூட விட மாட்டேன்னு சொன்னாங்க. ஆனா நான் கட்டாயப்படுத்தி பர்மிஷன் வாங்கிட்டு வந்தேன்.

அதுக்கப்புறம்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்.

வீட்டுக்கு வந்தா நீங்க இருக்க மாட்டீங்கன்னு தெரியும். இருந்தாலும் வந்தேன்...” என்று கூறினாள்.

அவள் பேசிக்கொண்டே இருக்க, அவளது இதழ்களைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து வாசம் பிடித்தான்.

அவளது முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தான்.

அவளுமே அவன் முகத்தை தன் கைகளில் ஏந்தி, அவன் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தாள்.

அதன் பிறகு அவனது மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

“எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு பரத்...” என்றாள்.

“எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு பிரியா...” என்று கூறியவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

அதன் பிறகு அங்கே சில காதல் வார்த்தைகள் பேசப்பட்டன. இருவரும் ஒருவரை ஒருவர் கொஞ்சிக் கொண்டனர்.

இரவு உணவிற்கான நேரம் ஆகுவதை உணர்ந்து வெளியே வந்தனர்.

இரவு உணவையும் முடித்துக் கொண்டு உள்ளே சென்றார்கள்.

தருண் மிகவும் உற்சாகமாக இருந்தான்.

தனக்கு தம்பி பாப்பாவோ தங்கை பாப்பாவோ பிறக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தான்.

“என் கிளாஸ்ல எல்லாருக்கும் தம்பி பாப்பா, தங்கை பாப்பா இருக்காங்க.

நான் கூட மகிழ் பாப்பாவை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வரேன்னு சொன்னா விடவே மாட்டாங்க.

இனி நான் பாப்பாவை அத்தைக்கு தரவே மாட்டேன்.நானே வச்சுக்குவேன்...” என்று கூற,

இருவருமே சிரித்துவிட்டார்கள்.

அன்றைய பொழுது சந்தோஷமாகவே கழிந்தது.

தங்களது உலகத்தில் சஞ்சரித்தபடியே, புதிய உயிரின் வரவை நினைத்து மகிழ்ச்சியுடன் உறக்கத்திற்குச் சென்றார்கள்.

விடியல் யாருக்காகவும் காத்திருக்காமல் வந்துவிட்டது.

“எங்க வினியை காணோம் அத்தை?” என்று பிரியா கேட்க,

“காலையிலேயே வந்து அவங்க வீட்டுக்காரர் கூட்டிட்டு போயிட்டாருடி. அவங்க மாமியார் ஏதோ கல்யாணத்துக்கு போயிருக்காங்க போல. மாமனார் மட்டும் தான் வீட்டில் இருக்காராம். அவருக்கு சாப்பாடு செய்யணும் இல்லையா?

நேத்து நான் போன் பண்ணி சொன்னதும் வந்துட்டா. நேத்தே நமக்காக தான் இங்கேயே தங்கிட்டாப் போல. காலையில எழுந்த உடனே நான் கிளம்புறேன் மா, அத்தை இல்ல நானும் வீட்டுல கஷ்டம்ன்னு சொன்னா.

அதுக்கப்புறம் மாப்பிள்ளைக்கு போன் பண்ணினா. அவரும் வந்து கூட்டிட்டு போயிட்டாரு,” என்றார்.

அதன்பிறகு மூவரும் காலை உணவை முடித்துக்கொண்டு கோவிலுக்குச் சென்றார்கள்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில், கர்ப்பம் உறுதி ஆவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு நாள் வினி இங்கு வந்திருந்தாள்.

அப்போது பிரியாவிடம்,
“அண்ணி, நான் இன்னைக்கு விக்ரமை பார்த்தேன்,” என்றாள்.

“விக்ரமா? பார்த்தியா? எங்க? ஏதாவது பிரச்சனை பண்ணானா?” என்று பதறினாள் பிரியா.

விக்ரமைப் பற்றி வினி பேசுவதை கேட்ட பரத், தன் அறையில் இருப்பது அவர்களுக்கு தெரியாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

“என்கிட்ட பேசல. ஆனா அவன் பேசக்கூடிய நிலைமையிலேயே இல்ல.”

“புரியலையே...” என்றாள் பிரியா.

“அத்தையோட சொந்தக்காரங்களுக்கு ஒருத்தருக்கு உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடலுக்கு போயிருந்தோம். அப்போதான் அங்க விக்ரமை பார்த்தேன்.

அவனுக்கு ஒரு கால் இல்லை அண்ணி...”

“என்ன?” என்று அதிர்ச்சியடைந்தாள்.

“பிரண்ட்ஸோட சேர்ந்து ஊட்டிக்கு போயிருக்கான் போல. அங்க காரு பள்ளத்துல விழுந்து ஆக்சிடென்ட் ஆயிருக்கு. உயிர் பிழைச்சதே பெரிய விஷயமாம்.

நர்ஸ் சொன்னாங்க... அந்த ஆக்சிடென்ட்ல அவனுக்கு ஒரு கால் போயிடுச்சாம்.

நமக்கு பண்ண பாவத்துக்குத்தான் அண்ணி இவ்வளவும்...” என்றாள்.

“ஆக்சிடென்ட்” என்று கேட்டவுடன், தனது அண்ணனின் இறப்புதான் பிரியாவின் நினைவுக்கு வந்தது.

கண்களில் கண்ணீர் வழிந்தது.

“அவன் பண்ண பாவத்துக்கு அவனுக்கு வேணும்...” என்று மீண்டும் கூற,

“வினி!” என்று வேகமாக சத்தமிட்டான் பரத்.

அப்போதுதான் தன் அண்ணன் அங்கே இருப்பதை உணர்ந்த வினி, அவனைப் பார்த்தாள்.

பரத் பிரியாவை கண்களால் காட்டினான்.

பிரியாவின் கண்களில் கண்ணீர் வழிவதை அப்போதுதான் கவனித்தாள்.

“அண்ணி...” என்று பதறினாள்.

“நான் பார்த்துக்கிறேன். நீ போ...” என்று பரத் கூறியதும், வினி அமைதியாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவள் சென்ற பிறகு, தன்னவனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள் பிரியா.

“ஒன்னும் இல்லடி...

உங்க அண்ணனும் அண்ணியும் நம்ம சந்தோஷமா இருக்கிறதை பார்த்துட்டுத்தான் இருப்பாங்க.

எதையும் நினைச்சு கவலைப்படக்கூடாது பிரியா...” என்று அவளைத் தேற்றினான்.

அவள் நெற்றியில் முத்தமிட்டவனின் தோளில் சாய்ந்து சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

இன்று இருவரும் தருணுடன் கோவிலுக்கு வந்து இறங்கினார்கள்.

சாமியை தரிசித்துவிட்டு, மூவரும் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

அப்போது தருணுடன் சேர்ந்து கிச்சு கிச்சு மூட்டி, ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தான் பரத்.

பிரியாவோ கண் வாங்காமல் தன்னவனையும் தன் மகனையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன் வாழ்க்கையில் பரத் வந்ததை நினைத்துப் பார்த்தாள்.

யார் என்று தெரியாமலேயே தனக்காக உதவி செய்தது...
தன்னை காதலித்ததால்தான் அந்த உதவியைச் செய்யவில்லை. ஒரு சக மனிதனுக்கு உதவுவது போலத்தான் உதவினான்.
தனக்குத் துணையாக, தோள் கொடுத்து நின்றான்.

அதன்பிறகு தன் மீதுள்ள அன்பாலும், விருப்பத்தாலும், தன்னை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்ற திருமணம் செய்துகொண்டான்.

அதற்குப் பிறகும் தனக்கு எந்த நெருக்கடியும் தராமல், தானாகவே தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து, தனது காதலை வெளிப்படுத்தாமல், அந்த வீட்டில் தன்னை சுதந்திரமாக இருக்க விட்டான். தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்துச் செய்யும் வினி, பானுமதி, சசி, ரேகா என அனைவரையும் நினைத்துப் பார்த்தாள்.

அனைத்து உறவுகளும் கிடைப்பதற்கு அடித்தளமாக இருந்தது பரத் தான் என்று எண்ணியவளுக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.
தருணை தான் எப்படி பார்த்துக்கிறேனோ, அதேபோல் பார்த்துக்கொள்ளும் உறவுகள் கிடைத்திருந்தது அவளுக்கு மிகப்பெரிய வரமாக இருந்தது.

தன் தாயும், மாமியாரும் அடிக்கடி சொல்வது போல, தனக்கென தோள் கொடுக்கும் உறவு கிடைத்திருக்கிறது என்று எண்ணி புன்னகைத்துக் கொண்டாள்.

அப்போது அவள் அருகில் வந்த பரத்,"என்னடி யோசனை?" என்று கேட்டான்.

"ஒன்னுமில்லை," என்று சிரித்துவிட்டு அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.

அவனும் அவளது நெற்றி முடியை ஒதுக்கிவிட்டு, காதலாக ஒரு பார்வை பார்த்தான்.

அந்த நேரத்தில் தருண் ஓடிவந்து அவன் மடியில் அமர்ந்தான்.
குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டவன்,"என் செல்லம் டா!" என்றான்.

"அப்பா, தம்பி பாப்பா வந்ததும் நாம இதே மாதிரி விளையாடலாம் இல்ல?" என்று உற்சாகமாக கேட்டான் தருண்.

"விளையாடலாம்டா செல்லம்," என்று சிரித்தான் பரத். அவர்களைப் பார்த்த பிரியாவும் சிரித்தாள்.

அவர்களின் இந்த மகிழ்ச்சி எப்போதும் அவர்கள் வாழ்க்கையிலும் நிலைத்திருக்க வேண்டும்.சுபம்.
 
Top Bottom