• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சில் நிறைந்தவள் - 13

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 13


" அம்மா அம்மா "

" என்ன ய்யா சொல்லு, அம்மா அடுப்படில வேலையா இருக்கேன் "

" இன்னைக்கு வேலைக்கு ஒரு நேர்காணல்க்கு போறேன் ம்மா, போற வழியில சாப்பாடு பாத்துக்குறேன், நீங்க தயார் பண்ண வேண்டாம். "

" எல்லாம் தயார் பண்ணிட்டேனே ய்யா, ஒரு வாய் சாப்டு போயிறேன் "

" இல்ல ம்மா வேண்டாம். நேரம் ஆயிட்டு இப்போ போனா தான் நேரத்துக்கு அங்க போய் சேர முடியும் " என்று சொல்லிய குமரன் வீட்டிலிருந்து நடந்து பேருந்து நிறுத்தத்தை அடைந்தான். அவன் நேரமோ என்னவோ தெரியவில்லை அன்று அந்த பேருந்து நிலையத்திற்கு வர வேண்டிய இரண்டு பேருந்துகளும் வரவில்லை, நேரம் கடந்து கொண்டே இருக்க, நேர்காணலுக்கு நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற பரபரப்பு அவனை பற்றிக்கொண்டது.

" ச்சே நேரத்துக்கு போகணும்ன்னு தான சாப்பிடாம கூட ஓடி வந்தோம், இப்போ இப்படி ஆகிட்டே " என்று தனது மணிக்கட்டில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்து கொண்டே வாய் விட்டு புலம்பி கொண்டிருந்த நேரம் அவனது நண்பன் ஒருவன் இருசக்கர வாகனத்தில் வருவது அவனது கண்ணுக்கு தெரிந்தது.

" ஹையோ இவனா? இவன் கண்ணுல சிக்கினோம்... " என்று யோசித்தவன் சட்டென தனது முடிவை மாத்திக்கொண்டு,

" டேய் சுப்பி, சுப்பி " என்று அழைத்து அவனை பார்த்து கையை ஆட்டினான். திடீரென தான் அழைக்கப்படும் குரல் கேட்டு நிதானமான வேகத்தில் சென்று கொண்டிருந்தவன் தனது இருசக்கர வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தினான் சுப்பி என்று அழைக்கப்படும் அந்த சுப்பிரமணியன்.

" யாரு டா அது நம்மள கூப்டுறது? " என்று எண்ணிக்கொண்டே தலையை நிமிர்த்த அவனை தேட விடாமல் கையை ஆட்டி அழைத்தது தான் தான் என்று அடையாளம் கொடுத்தான் குமரன்.

" அட நம்ம குமரன், இவன் இங்க நின்னுட்டு என்ன செஞ்சுட்டு இருக்கான்? " என்று தனக்கு தானே கேள்வியை தொடுத்து விடை அறியும் நோக்கில் நண்பன் அருகில் வந்து தனது வாகனத்தை நிறுத்தி விட்டு, தான் நினைத்ததையே கேள்வியாக குமரனிடம் வைத்தான்.

" டேய் குமரா என்ன டா காலையிலயே இங்க நிக்குற? அதுவும் ஆளு ஒரு மாதிரி ஷோக்கா கிளம்பி இருக்கியே, என்ன விசேஷம் டா? "

" அதெல்லாம் சொல்லுறேன் இப்போ நீ வேற எதுவும் முக்கியமான வேலையா போறியா அத சொல்லு முதல்ல "

" அதெல்லாம் ஒன்னும் இல்லையே குமரா ஏன்? "

" ரொம்ப நல்லதா போச்சு சரி வண்டியை எடு "

" எடுக்கேன் டா ஆனா எங்க போகணும்ன்னு சொல்லு? " வண்டியை உதைத்து உயிர் கொடுத்துக் கொண்டே கேட்டான்.

" ஒத்த பாலம் பக்கத்துல இருக்குற யாணி கார்மெண்ட்ஸ்க்கு போடா "

" அங்கையா? அது பெரிய நிறுவனமாச்சே டா அங்க என்ன வேலை உனக்கு? "

" ம்ம்ம் அந்த நிறுவனம் விலைக்கு வருதாம் அதான் போய் ஏலம் எடுக்கலாம்ன்னு போறேன் "

" ஹேய் குமரா சந்தோசமான விஷயம் டா காசு எதுவும் குறைஞ்சா சொல்லு டா என்கிட்ட கொஞ்சம் இருக்கு தாரேன் "

" அப்படியா டா எவ்வளவு இருக்கும் உன்கிட்ட "

" ஒரு நூத்தியொரு ரூபாய் இருக்கும் டா "

" அய்யயோ அவ்வளவு தொகையா? "

" டேய் இதெல்லாம் நமக்கு ஒரு தொகையா டா நாம பாக்காத பணமா? "

" இருந்தாலும் அவ்ளோ பெரிய தொகை, அப்பப்பா நினைக்கும் போதே தலை சுத்துது டா " என்று இருவரும் கேலியாக பேசி கொண்டே செல்ல அந்த நிறுவன வாயிலும் வந்தது.

" சரி சுப்பி நீ போய்ட்டு வா நா உள்ள போறேன் " என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் குமரன், அடுத்த நொடியே சுப்பிரமணியும் கிளம்பிவிட்டான்.

சுப்பிரமணியன் கொஞ்சம் ஓட்டை வாய் ரகம் என்பதால் குமரன் அவனிடம் எதையும் வெளிப்படையாக சொல்ல மாட்டான், அது அறிந்தாலும் கூட குமரன் எந்த ரகத்தில் பேசுகிறானோ அதே ரகத்தில் பேசி நகர்ந்து விடுவான் சுப்பி.

அந்த நிறுவனத்தின் நுழைவாயில் அருகில் நின்று ஒரு முறை மேலாக பார்த்தவன் தனது முந்தைய அனுபவங்களை ஒரு நிமிடம் கண்கள் மூடி நினைத்து பார்த்தான்.

பின் கடவுளை வணங்கி விட்டு அந்த நிறுவன வாசல் படியை தொட்டு வணங்கி உள்ளே நுழைந்தான்.

உள்ளே நுழைந்தவன் அலுவலக பிரதான நுழைவு வாயிலை பார்க்க அங்கே ஒருவன் சலம்பி கொண்டிருக்கும் சலசலப்பு சத்தம் கேட்டது, அவனது சத்தமே சொல்லியது அவன் போதையில் தான் இருக்கிறான் என்பதை. ஆதலால் அந்த பக்கம் செல்வதை தவிர்த்து விடலாமென்று நினைத்தான் ஆனாலும் கூட அந்த பக்கம் தான் போயாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்ததால் அந்த பக்கமாக நடந்தான், ஏற்றுமதி சரக்கு பகுப்பாய்வு செய்யும் பகுதியை நெருங்கிய போது அவனது சலசலப்பு சத்தம் அதிகமாக,
அவன் பேசும் பேச்சு அங்கு இருக்கும் நிலையை குமரனுக்கு மெல்ல விளங்க செய்தது,

அங்கே ஏற்றுமதி பொருள்களை தரம் பிரிக்கும் வேலை செய்யும் பெண்ணின் கணவன் ஒருவன் தான் குடித்து விட்டு வந்து ரகளை செய்து கொண்டிருந்தான்.

" ஏய் என்ன டி வேலை பாக்குற நீயி எந்த நேரத்துல வீட்டுக்கு வர்றது போறதுன்னு கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாத வேலையா இருக்கு. உன் இஷ்டத்துக்கு வார உன் இஷ்டத்துக்கு போற, ஒரு சொல்லு பேச்சு கேட்க மாட்டேங்குற, எல்லாம் காசு சம்பாதிக்கிற திமிரு.
அந்த திமிர்ல தான இப்படி ஆடிக்கிட்டு மினிக்கிட்டு திரியுற. உன்னை எல்லாம் காலை உடைச்சு வீட்ல போடணும் டி அத செய்யாம உன்ன வேலைக்கு அனுப்புனது என் தப்புடி.
எங்க அம்மா சொன்ன மாதிரி பொம்பளைங்க நாலு சுவத்துக்குள்ள இருக்கிறது தாண்டி ஆம்பளைங்களுக்கு மரியாதை,... இனிமே வேலை வெட்டிக்கு போறத விட்டுட்டு பொம்பளையா வீட்டுக்குள்ளேயே அடங்கிக்கிட அப்போ தான் உன் கறி திமிரு குறையும். இனிமே என் வழிக்கு தாண்டி நீ வரணும், நா என்ன சொல்லுறேனோ அது படி தான் நடக்கணும், அத விட்டுட்டு எதாவது ஏடாகூடம் பண்ண நினைச்ச " என்று நாக்கை கடித்து விரலை நீட்டியவன் நிற்க கூட தெம்பு இல்லாமல் ஆடி கொண்டிருந்தான்.

அங்கிருந்த சக ஊழியர்கள் அவனை அமைதிப்படுத்த நினைக்க அவனது வார்த்தை இன்னும் தடிக்க ஆரம்பித்தது. நிறுவன காவலர்கள் வந்து அவனை அப்புறப்படுத்த நினைத்த முயற்சியும் கை கொடுக்காமல் போனது. ஒவ்வொருவராக அவனை அங்கிருந்து கிளப்பி விட முயற்சி செய்ய செய்ய அவனது பேச்சு இன்னும் தடிக்க தான் செய்தது. ஒரு அளவுக்கு மேல் அவனது பேச்சின் சூடு தாங்காமல் அங்கிருந்த அனைவரும் கொதித்து கொண்டிருக்க,

அனைவரின் எண்ணத்தை மெய்ப்பிக்கும் வண்ணம் அந்த குடிகாரனின் கன்னத்தில் பதிந்த ஒரு கை அவனது உதடுகளையும் சேர்த்து உரசி அதை கிழித்து குருதியை வரவழைத்தது.......


நெஞ்சில் நிறைவாள்.......
 
Top Bottom