அத்தியாயம் 29
அவன் எதிர்பார்த்த தேவயானியை எதிர்பாரா அந்நேரத்தில் கண்ட மகிழ்ச்சியில் எழுந்து வந்தவனை கண்ட தேவயானி, வேறு ஏதோ மகிழ்ச்சியில் இருக்கிறான் போல என்று எண்ணியவள் அதை அறியும் நோக்கோடு கேட்டாள்,
" என்ன குமரன் இன்னைக்கு இவ்வளவு சந்தோசம் " என்று அவள் கேட்ட போது சற்று வேகமாக வந்த குமரன் அவளின் குரல் கேட்டு அவள் முகம் நோக்கிய போது இடையில் இருந்த இருக்கையை பார்க்க தவறி அதில் இடித்து தடுமாற முன்னால் நின்ற தேவயானியின் மீது விழுந்தான், அதில் அவளும் சற்றே தடுமாற,
அவளை கீழே விழுந்து விடாமல் பிடிக்கும் பொருட்டு தன்னோடு இழுத்து அணைத்து கொண்டான் குமரன்.
சில நொடிகளில் சீக்கிரம் நடந்து முடித்த நிகழ்வில் இருந்து மீண்டு வர தான் சில நிமிடங்கள் பிடித்தது.
இருவரும் ஒருவாறு தங்களை சமன் செய்து கொண்டு நின்ற போது தேவயானி தான் முதலில் பேசினாள்,
" ஏன் குமரன் எதுக்கு இவ்ளோ அவசரம் கொஞ்சம் பொறுமையா வந்துருக்கலாம்ல, ஏன் இவ்ளோ அதிரடி. ஒன்னும் அடி படலை தானே? "
" இல்ல இல்ல தேவா ஒன்னும் இல்ல " லேசாக காலை தடவி கொண்டே சொன்னான்.
" என்ன குமரன் வலிக்குதா? காலை தடவுறீங்க? "
" இல்ல தேவா ஒன்னும் இல்ல லேசா தான், அது உங்களை பாத்துட்டே வந்தேனா இருக்கைய கவனிக்கல, மன்னிச்சுக்கோங்க தேவா அவசரமா வந்து உங்களையும் இடிச்சு கீழ தள்ளிர பார்த்தேன் " சற்றே சங்கடமாக சொன்னான். ஆனால் சில நொடிகளுக்கு முன்னால் தவறுதலாக இல்லாமல் நேரடியாகவே தேவயானியை கட்டி கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் தான் இருந்தான், எழுந்தான், நடந்தான். இப்போதும் கூட அது தான் நடந்தது ஆனால் தற்சயலாக நடந்ததால் அவனிடம் இந்த மாற்றம்.
சில நேரங்களில் இப்படி தானே நடக்கிறது, நம் மனதில் எழும் சொல்ல முடியா உணர்வுகளை வெளிப்படுத்த நினைத்தாலும் அது சரியான காலம் வரவில்லை என்றால் இப்படி தான் வேறு விதமாக மாறி போகும்.
குமரனுக்கும் இப்போது அது தான் நடந்தது, முதல் நாள் அவளோடு நெருங்கிய தருணங்களை நினைத்து மகிழ்ந்தவன் மறுநாள் அவளை பார்க்க கூட முடியாமல் அவளை பார்த்தால் கூட போதும் என்ற எண்ணத்தில் தவித்தவன் இப்போது பார்த்து விட்டான் பேசவும் கூட செய்கிறான் ஆனால் அவன் நினைத்தவாறு அல்ல..... சற்றே மாறுதலாக.
" என்ன ஆச்சு குமரன்? ஏன் இத்தனை நெளிவு உங்க கிட்ட, நடந்தது ஒரு விபத்து தான அறியாம நடந்ததுக்கு யார் பொறுப்பு ஆக முடியும்? " தேவயானி சாதாரணமாக பேசி விட குமரனால் அப்படி இருக்க முடியாது சற்று தவித்தான். அவன் தவிப்பின் காரணம் அவள் அறியவில்லை என்றாலும் கூட அவன் தவிப்பை அவள் அறிந்து இருந்ததால் வெகு சாதாரணமாக தனது பேச்சை நகர்த்தினாள்,
" ஆமா குமரன் நீங்க என்ன இந்நேரம் வரைக்கும் இந்த நிறுத்தத்தில இருக்கீங்க அதுவும் அலுவலகத்தில இருந்து வந்த மாதிரியே,
அப்போ இன்னும் வீட்டுக்கு போகலையா நீங்க? "
இந்நேரம் வரைக்கும் என்று சொன்ன பின் தான் நேரத்தை பார்த்தான் மணி 9.30யை நெருங்கி இருந்தது,
தேவயானி கேட்டதற்கு சட்டென என்ன பதில் சொல்வது என்று யோசித்த குமரன் ஒருவாராக தன்னை சமாளித்துக் கொண்டு,
" இல்லை தேவா பக்கத்துல ஒரு நண்பன் இருக்கான் அவனை பாக்க வேண்டி இருந்துச்சு, அதான் அவனை போய் அப்படியே பார்த்து பேசிட்டு வர நேரம் ஆகிட்டு, இப்பதான் அவன் வீட்ல இருந்து கிளம்புனேன் அப்படியே நடந்து வரும் போது கொஞ்சம் தலை ஒரு மாதிரி இருந்துச்சு அதான் அப்படியே ரெண்டு நிமிஷம் உட்காருவோம்ன்னு உட்கார்ந்து இருந்தேன் பாத்தா நீங்க வந்து நிக்கிறீங்க. ஆமா தேவா நீங்க இந்நேரம் இங்க எப்படி? " அவன் சாமர்த்திய பதில் கொடுத்து கேள்வியை அவளின் பக்கம் திருப்பி இருந்தான்
அவன் கேட்கவும் அவள் சற்றும் யோசிக்கவில்லை கடகடவென பேச ஆரம்பித்தால்,
" அதை ஏன் கேக்குறீங்க குமரன் அலுவலக வேலை காரணமா ஒரு இடத்துக்கு நானும் அப்பாவும் போயிருந்தோம் ஆனா போன இடத்துல சூழல் நமக்கு சாதகமா இல்ல.
சாதகம் இல்லாத சூழல்ல எனக்கு இருக்கிறதுக்கு விருப்பமும் இல்லை அதனால உடனே நான் கிளம்பி வந்துட்டேன் "
" அப்படியா ஆனா தேவா அலுவலக வேலையா வெளிய போனீங்கன்னா உங்களோட சொந்த வாகனத்தில தானே போயிருப்பீங்க? "
" ஆமா குமரன் எங்களோட வாகனத்தில தான் போனோம் ஆனா போன இடத்துல இன்னும் வேலை முடியல அதனால அப்பா அங்க இருக்காங்க நான் மட்டும் எனக்கு விருப்பம் இல்லைன்னு கிளம்பி வந்துட்டேன் "
" ஓ அதான் இந்த பேருந்து பயணமா? "
" ஆமா குமரன் இந்த பயணமும் ரொம்ப அழகா இருந்துச்சு "
" அட ஏன் தேவா இந்த இருட்டுல என்னத்த பாத்துருப்பீங்க அழகா இருந்துச்சுன்னு சொல்லுற அளவுக்கு " குமரன் ரொம்பவே இயல்பு நிலைக்கு வந்திருந்தான்.
" ஏன் குமரன் இருள்ல அழகு இல்லைன்னு யார் சொன்னாங்க? "
" இருள்ல அழகு எப்படி தெரியும் தேவா? "
" பாக்க தான் நமக்கு கண்ணு இருக்கே குமரன் "
" எத இருட்டையா தேவா " லேசான சிரிப்பு
" இல்ல இருளும் ஒளியும் சேர்ந்து வருவதை குமரன் "
அவள் சொன்னது அவனுக்கு புரியவில்லை எப்படி என்பதை போல பார்த்தான்.
" நா ஏறுன இடம் ரொம்ப வெளிச்சமா இருந்துச்சு, ஒரு ரெண்டு அல்லது மூணு நிமிஷம் தான் இருக்கும் அந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமா மங்கி போய் ஒரு கட்டத்துல அது இருட்டா மாறிட்டு அந்த இருட்டுல நாளோ இல்ல அஞ்சோ நிமிஷம் பயணம் போயிருக்கும் அந்த இருள் மறுபடியும் முழு வெளிச்சமா மாறிச்சு "
" ஹையோ தேவா இதெல்லாம் ஒரு விஷயமா விளக்கு இருந்த இடம் வெளிச்சமா இருந்தது விளக்கு இல்லாத இடம் இருளா இருந்தது இதுல என்ன பெரிய விஷயம் இருக்கு "
" இருக்கு குமரன் நம்ம வாழ்க்கையே அதுல பாடமா இருக்கு "
" போச்சு டா இப்போ ஒரு கருத்து சொல்ல போறீங்களா தேவா? " நக்கலாக கேட்டு விட
சிரித்தே விட்டாள் தேவயானி.
" இல்ல இல்ல குமரன் கருத்து எல்லாம் ஒன்னும் இல்ல, நா இருந்த மனநிலையை இந்த பயணம் வேற மாதிரி எனக்கு மாத்தி கொடுத்தது. "
" எப்படி தேவா "
" விருப்பம் இல்லாத நிகழ்வுகள் நடக்கும் போது நம்ம மனசு குழம்பி நிலை இல்லாத நிலைக்கு போய் நம்ம நிலையவே நிலை இல்லாம மாத்திருது "
" அப்பா என்ன அடுக்கு மொழி தேவா மிரட்டி வீட்டுடீங்க போங்க " கை தட்டி பாராட்ட தேவா பொய் முறைப்புடன் அவனை பார்த்தாள்,
" என்ன கிண்டல்லா " முகத்தில் முறைப்பை வைத்து கேட்க,
" அய்யயோ தேவா நிஜமாவே நீங்க சொன்ன விஷயம் மாதிரி சொன்ன விதமும் ரொம்ப அழகா இருந்துச்சு "
அவள் பேசவில்லை முறைப்போடு நிற்க்க
" பொய் இல்ல தேவா நிஜமாலுமே " குமரனின் குரல் கொஞ்சலோடு சேர்ந்த கெஞ்சலில் இருக்க தேவயானிக்கும் சிரிப்பு வந்து விட்டது.
" குமரன் ஒன்னு சொல்லவா? "
" என்ன தேவா? "
" மனசு எப்படி இருந்தாலும் சரி உங்க கூட பேசும் போது நிஜமாவே லேசாகுது இது என்ன விந்தைன்னு தெரியல ஆனா அந்த சக்தி உங்க கிட்ட இருக்கு, நீங்க தேவான்னு கூப்டுறதுமே எனக்கு ரொம்ப பிடிக்கும், அத எப்படி சொல்ல, எல்லாரும் கூப்டுற மாதிரி இல்லாம நீங்க மட்டும் தனித்துவமா கூப்டுறது நல்லா இருக்கும் தெரியுமா, நீங்க என்னை விட பெரியவங்க தான் ஆனாலும் உங்க கிட்ட இருக்குற அந்த குழந்தை தனம்..... " சிறிது இடைவெளி விட்டவள்,
" சரியா சொல்லுறேனா தெரியல குமரன், சொல்ல வந்த விஷயம் உங்களுக்கு எப்படி புரிஞ்சதுணும் தெரியல முடிவா சொன்னா உங்க கூட இருக்குறது ஒரு தனித்துவமான உணர்வு " தெளிவாய் இருக்கும் தேவயானியிடம் கூட திணறல்,
எப்போதும் திணறி திரியும் குமரனிடம் சிறு சிரிப்பு, ஆனால் அந்த சிரிப்பின் ரகசியம் அவனே அறிவான்.....
நெஞ்சில் நிறைவாள்.....
Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 29
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 29
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.