நெஞ்சில் நிறைந்தவள் - 31

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany

அத்தியாயம் 31

காலை 6.00 மணி,
தினசரி நாளிதழை புரட்டி கொண்டே ஒரு குவளை தேநீரை கொஞ்சம் கொஞ்சமாக தொண்டை குழாயில் இறக்கி கொண்டிருந்தான் குமரன். அதில் யாரும் படிக்கவே விரும்பாத, சொல்ல போனால் பார்க்கவே செய்யாத பொருளாதார செய்தி பக்கத்தை தான் புரட்டி எடுத்து வைத்து வாசித்து கொண்டிருந்தான். அதில் வரி வரியாக வாசித்த விதத்தை பார்க்கும் போது அவனுக்கு அந்த பக்கத்தின் மீது இருக்கும் ஆர்வம் தெள்ளன விளங்கியது. அதில் மத்திய பகுதிக்கு கீழ் தெரிந்த ஒரு அறிவிப்பை பார்க்கவும் அவனது கண்கள் அதன் மீது நிலைத்து நகர மறுத்தது, ஒன்றுக்கு இரண்டு முறை வாசித்து விட்டு பின் அந்த சிறு பகுதியை மட்டும் கத்தரிக்கோலை எடுத்து கத்தரித்து தனது அலைபேசி உரையில் பத்திரப்படுத்தினான். பின் மற்ற பக்கங்களை சாதாரணமாக புரட்டி விட்டு அந்த செய்தித்தாளை மடக்கி ஓரம் தள்ளி அலுவலகம் கிளம்ப ஆரம்பித்தான்.

வழக்கம் போல இன்றும் முந்திய தேவயானி குமரனுக்கு வணக்கம் வைத்தாள், பதில் வணக்கம் வைத்து சிரித்து கொண்டே தனது இருப்பிடத்திற்கு சென்று வருகையை பதிவு செய்து விட்டு எழுந்து தேவயானியை பார்க்க வந்தான்.

" வாங்க குமரன், எதாவது விசேஷமான தகவல் உண்டா காலையில வந்ததும் என்னோட அறைக்கு வந்துருக்கீங்க? "

" ம்ம் ஆமா தேவா, ஒரு அறிவிப்பு ஒன்னு காலையில செய்தித்தாள்ல பார்த்தேன், அத பத்தி உங்ககிட்ட பேச நினைச்சேன் அதான் " அனுமதி கேட்கும் தோணியில் விஷயத்தை சொன்னான்

" என்ன அறிவிப்பு குமரன்? "

" இதோ பாருங்க தேவா " காலையில் கத்தரித்து வைத்த அந்த செய்தியை அவளின் காட்சிக்கு வைத்தான் அதை வாங்கிய தேவயானி கவனமாக வாசிக்க ஆரம்பித்தாள்,

" குமரன் இது உலகத்திலேயே மிகப்பெரிய துறைமுகமான சீனாவோட ஷாங்காய் துறைமுக செய்தியாச்சே இத எதுக்காக என்கிட்ட கொண்டு வந்து காட்டுறீங்க? "

" ஏன் தேவா இத நாம செய்ய கூடாதா? "

" இதெல்லாம் சாதாரண விஷயம் இல்ல குமரன் உலகத்தரம் வாய்ந்த விஷயம் "

" அப்போ நாம இன்னும் உலக தரத்துக்கு வளரலையா தேவா? அந்த அளவுக்கு நாம இல்லைன்னு நீங்களே நினைக்கிறீங்களா? " குமரனின் கேள்வி தேவயானியை திணற வைத்தது பதில் சொல்லாமல் அவனது முகத்தை பார்த்தாள்.

" என்ன தேவா அமைதியா இருக்கீங்க? "

" இல்ல இது ரொம்ப பெரிய... " அவளிடம் தயக்கம் எப்படி தன் மக்களை அவள் குறைத்து சொல்வாள்

" தேவா ஒரு தயக்கமும் வேண்டாம் நம்மளால முடியும். இன்னைக்கு இந்தியாவுல இருக்க கூடிய பல துறைமுகங்கள்ல வேலை செய்ய கூடிய பணியாளர்களுக்கு சீருடை நாம தான் தயார் செஞ்சு கொடுத்துட்டு இருக்கிறோம், அத சரியா செஞ்சு நாம தேசிய அளவுல தொழில்ல சாதிச்சு காட்டிகிட்டிருக்கோம். அப்படி இருக்கும் போது இத நீங்க யோசிக்க காரணம் என்ன? "

" யோசனை இல்ல குமரன் இது பெரிய அணுகுமுறை இதை அவ்வளவு சாதாரண நம்மளால செய்ய முடியுமான்னு யோசிக்குறேன்? "

" நம்மளால செய்ய முடியாதுன்னு ஒண்ணு இல்ல தேவா "

" ஆமா நான் இல்லைன்னு சொல்லல குமரன் ஆனாலும் தெளிவான திட்டமிடல் இல்லாம எதையும் முடிவு பண்ண முடியாது. கொஞ்சம் காத்திருங்க நா சொல்லுறேன். உங்க முயற்சிக்கு என்னோட பாராட்டுகள் இப்போ நீங்க உங்க இடத்துக்கு போங்க குமரன். " என்று தேவயானி சொல்ல குமரன் அமைதியாக எழுந்து தனது இருப்பிடத்திற்கு வந்தான்.

வந்த குமரன் சாங்காய் துறைமுகத்தை பற்றிய தகவல்களை சேமிக்க ஆரம்பித்தான் எப்படியும் தேவயானி ஒப்புக் கொள்வாள் என்பது அவனது திடமான நம்பிக்கை அதே நேரம் நாம் சொன்னவுடன் அவள் சரி என்று சம்மதிக்க மாட்டாள் என்பதும் அவன் அறிந்து தான் இருந்தான் ஆதலால் அவளது முடிவில் அவனுக்கு எந்த ஏமாற்றமும் இருக்கவில்லை நிதானமாக அவள் முடிவெடுத்து நிச்சயம் வந்து சேருவாள் ஒருவேளை அவள் அந்த முடிவை எடுக்கவில்லை என்றால் நிச்சயமாக அது நம்மால் முடியாத ஒன்றாக தான் இருக்கும் என்று மனதில் எண்ணிக் கொண்ட குமரன்,

அவளிடமிருந்து சரியென்று செய்தி வந்துவிட்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையில் அடுத்த கட்ட தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தான்.
இணையதள உதவியோடு அந்த துறைமுகத்தை பற்றிய தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக சேகரிக்க ஆரம்பித்தான் சேகரித்த தகவல்களை தனியாக ஒரு காகிதத்தில் குறித்து வைத்துக் கொண்டான்.

நேரம் மெல்ல கடந்து உணவு இடைவேளையும் முடிந்திருந்தது இடைவேளைக்கு பின்பு எப்போதும் போல மற்ற துறைகளுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பணியாளர்களோடு கலந்து உரையாடிவிட்டு, அவர்கள் முடித்த வேலையையும் மேற்பார்வை பார்த்துவிட்டு வந்த குமரன் தேவயானியின் அறையை கவனிக்க அங்கு அவள் இருக்கவில்லை.

தேவா எங்க போனாங்க என்ற யோசனையோடு மீண்டும் தனது இருக்கைக்கு சென்றான் அவன் நினைத்தது போல தேவயானி உடனே சரி என்று சம்மதிக்கவில்லை ஆனால் அன்றைய நாளில் அவள் சம்மதம் தெரிவித்துவிடுவாள் என்று உறுதியாக நம்பி இருந்தான். ஆனால் அவனது நம்பிக்கை அன்றைய நாளில் பொய்த்து போனது.

வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பும் நேரம் வந்தது அப்போதும் தேவயானி அலுவலகத்திற்கு வரவில்லை ஆதலால் என்ன காரணம் என்று கேட்கலாம் என்ற நோக்கத்தில் தனது அலைபேசியை எடுத்தான் அழைப்பை சொடுக்கினான் பிறகு என்ன நினைத்தானோ தெரியவில்லை அழைப்பை துண்டித்துக் கொண்டான்.

அன்றைய இரவு பொழுதில் அவனுக்கு தூக்கம் வரவில்லை அவளைப் பற்றிய யோசனையாகவே இருந்தது,
நாம் நினைத்தது போல காரியம் நடக்காமல் காலம் தாமதமாகும் எந்த செயலும் எதிர்மறை எண்ணத்தை உண்டாக்குவதே அப்படி தான் குமரன் மனமும் எண்ணிகொண்டிருந்தது,

" ஒருவேளை இது நம்மளால முடியாத காரியம் தானோ நாம தான் கொஞ்சம் அதிகப்படியா யோசிச்சிட்டோமோ? நாம முடிவு பண்றதுக்கு முன்ன, தெளிவான முடிவு எடுக்க கூடிய அதிகாரம் இருக்கிற தேவா கிட்ட பேசி இருக்கணுமோ? " என்றெல்லாம் மனதில் எண்ணங்கள் எழுந்து எழுந்து விழுந்தது.

இப்படியாக குமரன் குழப்பத்தில் உறக்கத்தை தொலைத்திருக்க தேவயானி தனது செல்வாக்கை பயன்படுத்தி டெல்லி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய தலைமைச் செயலகத்தில் அமர்ந்திருந்தாள்.

நேரம் இரவு 9 மணியை கடந்திருந்தது,

" தேவயானி நீ ஏன்டா இந்நேரத்துக்கு இங்க காத்துகிட்டு இருக்க மாமா தான் வீட்டுக்கு வந்து இருப்பேன்ல நீ ஏன் இங்க வந்த? " தங்கை மகளை கண்டதும் அன்போடு சொன்னார் அமைச்சர் தண்டாயுதபாணி

" கொஞ்சம் முக்கியமான வேலை மாமா அதான் உங்களை பாக்க நானே நேரடியா வந்தேன் "

" என்ன முக்கியமா இருந்தா என்ன டா சொல்லிருந்தா மாமா வர போறேன் "

" சரி விடுங்க மாமா அது இப்போ பிரச்சனை இல்ல "

" சரி டா இப்போ என்ன செய்யணும் அத சொல்லு "

" மாமா இது எங்களோட அடுத்த திட்டம், சீனாவுல இருக்க கூடிய சாங்காய் துறைமுக ஊழியர்களுக்கான சீருடை தயாரிப்புகான அறிவிப்பு வந்துருக்கு, இது மிக பெரிய நல்வாய்ப்பு இத தவற விடாம பயன்படுத்திக்க விரும்புறோம் அதற்கான திட்ட விரைவுகள கூட தயார் செஞ்சுட்டேன்.
இதோ இதுல அதோட மொத்த தகவல்களும் முழுமையா இருக்கு இதை பார்த்துட்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர பார்க்க அனுமதி நீங்க வாங்கி தரணும் அதுக்காக தான் உங்கள பாக்க வந்தேன் "

அதை கையில் வாங்கிக் கொண்ட தண்டாயுதபாணி உண்மையில் மனம் மகிழ்ந்தார் தனது தங்கையின் மகள் நாடு கடந்து தொழிலை விரிவு படுத்துவது அவருக்கு பெருமகிழ்ச்சியை கொடுத்தது ஆதலால் அதற்கு தேவையான வேலைகளை உடனே செய்து கொடுப்பதாக உறுதி கொடுத்து தேவயானியை வழியனுப்பி வைத்தார்.



நெஞ்சில் நிறைவாள்.........
 

Author: நிதனிபிரபு
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 31
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.