• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சில் நிறைந்தவள் - 38

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 38

" என்ன தேவயானி இவ்வளவு அமைதியாக இருக்க? நீ இவ்வளவு அமைதியா இருந்து அப்பா இதுவரைக்கும் பார்த்ததில்லையே, குமரன நான் வேலைக்காரன்னு சொன்னதுக்கு உன் மனசு இந்த அளவுக்கு பாடுபடுதே ஏன்? " என்று கேட்டு கொண்டே அவளின் முகத்தை ஆராய்ச்சி செய்தார்,
அவளிடம் மூச்சு முட்டும் அளவில் கலவையான உணர்வு தென்பட்டது.

" இதுவரைக்கும் நம்ம கிட்ட வேலை பார்த்த எத்தனையோ பேர நா இப்படி சொல்லி இருக்கேன் அப்போல்லாம் நீ அதை ஒரு பொருட்டாவே எடுத்துக்கிட்டதில்லையே இன்னைக்கு மட்டும் ஏன் இப்படி? " என்று தேவயானியை கேள்வியால் கிருஷ்ணன் துழைக்க,
அவளுக்கு நன்றாக தெரியும் அவர் யாரையும் அதிகபட்சம் வேலைக்காரன் என்று சொன்னது இல்லை என்ற உண்மை, அதே நேரம் அவர் இப்படி பேசுகிறார் என்றால் விஷயம் அவளுக்கு புரியாமல் இல்லை. நிதர்சனம் உணர்ந்தவள்,
மெதுவாய் தன்னை சமாளித்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

" ப்பா இதுவரைக்கும் இருந்த ஊழியர்கள் போல குமரன் கிடையாதுப்பா அவர் ரொம்பவே தனித்துவமான ஒரு ஆளு "

" அப்படி என்ன டா தனித்துவம் அவன் கிட்ட இருக்கு? "

" இருக்கு ப்பா மத்தவங்கள தாண்டி நிறையவே இருக்கு "

" அது தான் என்னனு சொல்லு டா நானும் தெரிஞ்சுப்பேன்ல "

" அது எப்படின்னு நா சொன்னா தான் உங்களுக்கு தெரியும் இல்ல ப்பா, " அவரின் மனதை அவள் அறிந்து விட்டாள் என்பதை காட்ட அவள் கேட்ட கேள்வி தான் அது. பின் அவளே பதிலும் உரைக்க ஆரம்பித்தாள்,

" வழக்கமா ஒரு நிர்வாகம்தான் தன்னோட அலுவலகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க ஆவண செய்யும். ஆனா அந்த நிர்வாகம் யோசிக்காத விஷயத்தை யோசிச்சு அதுல இந்த நிறுவனத்தை பொருத்தி பார்த்தவர் தான் ப்பா குமரன். இன்னைக்கு இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தை நாம கையில எடுக்க முழுமுதற்க் காரணம் குமரன் மட்டும் தான் பா. அதனால அவருக்கான மதிப்பு மற்றவர்களக் காட்டிலும் அதிகமானது தான் ப்பா. அலுவலகத்தில மட்டும் இல்ல ப்பா என்னிடத்திலும் கூட " நெற்றில் பொட்டில் அடித்தது போல சொல்ல

" அப்படியாடா அது உண்மையாவே மதிப்பா மட்டும்தான் இருக்கா இல்ல அன்பாவும் மாறி இருக்கா? " கிருஷ்ணனும் விடவில்லை.
எதையும் வெட்டு ஒன்னு தூண்டு ரெண்டு என்று பேசக்கூடிய சுபாவத்தை கொண்டவர் ஆதலால் சற்று நேரத்திற்கு முன்பு தண்டாயுதபாணி அலைபேசியில் அழைத்து நடந்த விஷயங்களை கூறியதை வைத்து தண்டத்தை போல இவரும் ஒரு முடிவோடு தான் இருந்தார். அந்த முடிவின் விளைவு தான் தேவயானியை அவர் இடை மறித்து பேசிக் காரணம்.
தேவயானியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்தே ஆக வேண்டும் என்பதில் அவர் உறுதியாய் நிற்க தேவயானி முதல் முறையாக தெளிவில்லாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

அவர்கள் நினைப்பது போல அவள் நினைக்கவில்லை ஒருவேளை அவர்கள் நினைத்தது போலவே அவளும் குமரனை விரும்புகிறாள் என்ற தெளிவு அவளிடம் இருக்குமேயானால் நிச்சயமாய் அவர்களிடம் நேருக்கு நேர் நின்று பேசியிருப்பாள் தான் ஆனால் குமரனை விரும்புவது பற்றிய தெளிவான சிந்தனை அவளிடம் இல்லை என்பதாலேயே இத்தனை திணறல் அவளிடம்.

அவளது திணறலை கண்டு கிருஷ்ணனுக்கு மெல்ல உஷ்ணம் கூடிக் கொண்டே போனது, அவள் என்ன சொல்ல போகிறாள் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் அத்தகைய உணர்வை ஏற்படுத்தியது. ஆனால் தேவயானியோ எதுவும் பதில் சொல்லாது அமைதியாய் தனது அறை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். கிருஷ்ணன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்க அதை அறிந்தும் அவள் ஒன்றும் பேசவில்லை, அறைக்குள் நுழைந்தவள் கதவை தாழிட்டு கொண்டு கட்டிலில் விழுந்தாள்.

கிருஷ்ணனின் கேள்வி மீண்டும் ஒலித்தது,

" மதிப்பு மட்டும் தானா இல்ல அன்பாவும் மாறியிருக்கா?
சொல்லு தேவா அன்பாவும் மாறியிருக்கா என்ன? " அப்பாவின் கேள்வியையே தனது கேள்வியாகவும் மாற்றினாள்
அந்நேரம் முகப்புத்தகத்தின் அறிவிப்பு ஒலி சத்தம் கேட்க அலைபேசியை எடுத்து பார்த்தாள் அதில் அவள் குமரனின் ஆண்மகன் பக்கத்தை மூடாமல் அப்படியே வைத்திருக்க அதில் கீழ்கண்ட வரிகள் ஒளிர்ந்தன,

#நீங்களே......

ஆதியும் அந்தமும் நிறைந்திருக்கும் ஆண்டவனைப் போல, எனக்கு அனைத்தும் நானே! நண்பன், துரோகி என்பதைப் போல... எனக்கான நன்மை, தீமைக்கும் நானே மூலமானவன்.....!

நமக்கு ஒரு நன்மை நடக்கும்போது நம்மை நினைத்து பெருமிதம் கொள்வதும், ஒரு துரோகம் நடக்கும்போது அடுத்தவர் மீது பழிபோடுவதும் சிறுமையான செயல். நம்மை வாழ வைப்பதும், வீழ வைப்பதும் நாம் எடுக்கும் முடிவுகளும்தான்.

நமக்கு வெளியே எந்த இரட்சகனும் இல்லை...... எந்த எதிரியும் இல்லை.

வீழ்ச்சியின் அந்தம் நாம் என்றால், எழுச்சியின் ஆதியும் நாம் மட்டுமாகத்தான் இருக்க முடியும்..!

நம்மை செதுக்குவதும் சிதைப்பதும் நம் கைகளில்தான் இருக்கிறது. உங்களுக்குள் இருக்கும் உங்களை நம்பி கம்பீரமாக எழுந்து நில்லுங்கள்...!

- ஆன்மன்
இதைப் படித்த தேவயானிக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்தது குமரனின் வரிகளை மீண்டும் மீண்டும் படித்தாள்,
அதையே நெஞ்சில் புதைத்தாள்,
அது புதைய புதைய அவளுக்குள் புதிதாய் ஒரு வீரியம் முளைத்தது.

தந்தை பேசிய வார்த்தைகளிலிருந்து தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொண்டாள் மதிப்புக்கும் அன்புக்குமான வித்தியாசத்தை அந்த நொடிகளில் புரிந்து கொண்டாள் மதிப்பை கடந்த ஒரு நேசம் குமரனின் மீது தனக்கு வளர்ந்திருப்பதை அப்போது உணர்ந்தாள்,
அதை அவள் உணர்ந்த நேரம் மனதில் அப்படி ஒரு துள்ளாட்டம் இந்த துள்ளாட்டத்தை ரசித்து அந்நிமிடங்களை கொண்டாடினாள். தனக்குள் இருக்கும் தான் தன்னை செதுக்கிக் கொண்டதை முழுவதுமாய் உணர்ந்து குமரனின் மீது தான் கொண்டிருக்கும் அன்பின் அம்சத்தை தெளிவாய் விளங்கி கொண்டாள். அந்த வரிகளுக்கு தனது பதிலை பதிப்பித்தாள்,

" அடி மனதில் இருக்கும் அன்பின் அம்சத்தை அறிய வைத்த ஆன்மனின் வரிகளுக்கு ஆழமான வணக்கங்கள் " கூடவே வரிசையாய் இதய உருவங்களையும் சேர்த்து அனுப்பி வைத்தாள்.

நெஞ்சில் நிறைவாள்....
 
Top Bottom