நெஞ்சில் நிறைந்தவள் - 41

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
அத்தியாயம் 41


மாதுரியின் பேச்சு ஆய்வாளரை விழி பிதுங்க வைக்க அவள் சொன்னது போல விஷயம் பெரிதானால் நாளை அது தனக்கு தான் பெருத்த பிரச்சனையை கொடுக்கும் என்பதை உணர்ந்த ஆய்வாளர் வேறுவழியின்றி குமரனை விடுவித்தார்.

சரியாக ஒருமணி நேரத்தில் இதை செய்து முடித்திருந்த தேவயானி குமரனை பார்க்கவும்,

" குமரா ஒன்னும் பிரச்சனை இல்லையே, யாரும் எதுவும் செய்யல தான " தவிப்போடு வந்தது கேள்வி

" இல்ல இல்ல தேவா ஒரு பிரச்சனையும் இல்ல, அதே மாதிரி என்ன பிரச்சனைன்னும் தெரியல தேவா. எதுக்காக கைது பண்ணுனாங்க? " என்று அப்பாவியாய் கேட்க

" பாத்தீங்களா அதிகாரம் கையில இருக்குன்னு அப்பாவிங்களை நீங்க எப்படி எல்லாம் நடத்துறீங்க ஒருமணி நேரம் இவரை கைது பண்ணி உள்ள வச்சிருக்கீங்க ஆனா சம்பந்தபட்டவருக்கே எதுக்காக கைது செய்யப்பட்டோம்ன்னு தெரியல இது எவ்வளவு பெரிய கொடுமை, எவ்ளோ பெரிய சர்வாதிகாரம் பண்ணுறீங்கன்னு உங்களுக்கு புரியுதா? " ஆவேசமாக அவள் கேள்வி வர ஆய்வாளர் தலை கவிழ்ந்தார்.

" என்னைக்கு உங்களோட வேலையில அடுத்தவங்க தலையீடு இல்லாம இருக்கோ, அதிகாரத்தின் கைப்பாவை செயல்படுறீங்களோ அன்னைக்கு தான் இங்க குற்றங்கள் குறையும், ஏழைபட்டவங்க நிம்மதியா இருக்க முடியும். அதே நேரம் உங்க அதிகாரத்துக்கு நிகரான அதையும் மிஞ்ச கூடிய அதிகாரமும் இருக்குங்குறத மறந்துராதீங்க " என்று சொன்னவள் குமரனை அழைத்து கொண்டு வெளியில் நடந்தாள்.

அவள் அலுவலகம் வரும் முன்பே கிருஷ்ணன் அங்கு வந்திருந்தார். கிருஷ்ணன் அங்கு வந்திருப்பார் என்பதை முன்பே எதிர்பார்த்த தேவயானி அவர் வந்ததில் எந்தவித ஆச்சரியமும் காட்டாமல் தனது இருக்கையில் போய் அமர்ந்தாள் அதைப் பார்த்து எரிச்சலுற்ற கிருஷ்ணன் அவளின் அறைக்குள் நுழைய,

" என்ன கிருஷ்ணா நீ மட்டும் வந்துருக்க, உன் மாப்ள வரலையா? " நக்கலாய் கேட்க,

" தேவயானி உன் மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இருக்க? "

" ஏன் கிருஷ்ணா என்ன நினைக்கணும் ஏன் இவ்ளோ கோபம் உன்கிட்ட? "

" கோபப்படாம நீ பாட்டுக்கு காவல் நிலையம் போயி அங்கு இருக்கக்கூடிய ஆய்வாளரை மிரட்டி இருக்க? "

" என்ன நா மிரட்டுனேனா இது என்ன கிருஷ்ணா புதுசா இருக்கு "

" புதுசா தான் ஒரு பழக்கம் பழகிருக்க தேவயானி. இதுவரைக்கும் நீ நேரடியா காவல் நிலையம் போனதே கிடையாது, அப்படி பழக்கம் இல்லாத, உனக்கு தெரியாத இடத்தில போய் உன்னோட அதிகாரத்தை காட்டிருக்க, உன் அதிகாரத்துக்கு பதில் அதிகாரம் அவங்க காட்டுனா என்ன நடந்து இருக்கும்? எதுவுமே தெரியாம எந்த தைரியத்துல போன? "

" எல்லாம் நீயும் மாமாவும் இருக்குற தைரியம் தான் ப்பா, அந்த நிலையத்தில உங்களுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்குங்குற நிதர்சனம் தெரிஞ்சு தான் போனேன் " அவள் பேச்சில் இன்னும் நக்கல் தோணி இருக்க தான் செய்தது.

" விளையாட்டு பேச்சு வேண்டாம் தேவயானி. இந்த நிறுவனத்தோட நற்பெயருக்கு பாதகம் வராத அளவுக்கு நடந்துக்கோ அது தான் எல்லாருக்கும் நல்லது "

" பாதகம் வர அளவுக்கு ஒன்னும் நடக்கலையே கிருஷ்ணா "

" நடக்காம தான் அந்த ஆய்வாளரும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரும் என்கிட்ட உன்னை பத்தி குத்தம் சொல்லுவாங்க? ஏதோ நா பேசுனாதால அந்த குமரனை விடுதலை பண்ண சம்மதிச்சாங்க, அதுவும் நம்ம நிறுவன பெயருக்காக மட்டும் தான் விடுறதா சொன்னாங்க அதுவும் நிபந்தனையோட "

" நிபந்தனையா? என்ன நிபந்தனை? " அதே தோணி தான் அவள் மாற்றிக்கொள்ளவில்லை

" அவன நம்ம நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு நிறுத்தனும்ங்குற நிபந்தனை "

" ஓகோ சரி நீங்க என்ன சொன்னீங்க?'

" நா என்ன சொல்லுறது என்னை மதிச்சு எனக்காக அவங்க செய்யும் போது அவங்க கேட்டதை நா செஞ்சு கொடுக்கணும்ல "

" அதனால "

" அதனால அந்த குமரன் எக்காரணத்தை கொண்டும் இந்த நிறுவனத்தில் இதுக்கு மேல வேலைக்கு வைக்க நான் ஒப்புதல் கொடுக்க மாட்டேன். நீயா அந்த குமரன வேலையை விட்டு நிறுத்துறியா இல்ல நானே நேரடியா நிறுத்தட்டுமா? " கோபமாய் கிருஷ்ணன் கொந்தளிக்க,

மிக நிதானமாய் பதிலுக்கு கேட்டாள்,

" அப்பா அவரை வேலைய விட்டு நிறுத்த தான் இவ்வளவு பேச்சா? "
அதுவரை கோபம் காட்டிய கிருஷ்ணன் முகம் சட்டென்று மாறியது.

" குமரன் மேல உங்களுக்கும் மாமாவுக்கும் ஏன் இவ்ளோ வன்மம்ன்னு எனக்கு தெரியல ப்பா, எதுக்காக அவரை குறி வச்சி இப்படி செய்யுறீங்க? " நேரடியாக கேட்க,
கிருஷ்ணன் சமாளிக்க முயற்சி செய்தார்,

" என்ன வன்மமா நா வன்மம் வைக்குற அளவுக்கு அவன் என்ன அவ்ளோ பெரிய ஆளா? "

" அதே தான் ப்பா அவ்ளோ பெரிய ஆளா இல்லாத குமரனை குறி வச்சி எப்பவோ எழுதின ஒரு பதிவை காட்டி ஏன் இப்படி செய்யணும்? "

" நா ஒன்னும் செய்யலையே எனக்கு அப்படி ஒரு அவசியம் இல்லையே "

" உங்களுக்கு வேண்டிய சட்டமன்ற உறுப்பினர், உங்களுக்கு வேண்டிய ஆய்வாளர்ன்னு சம்பந்தபட்டவங்க எல்லாருமே உங்களுக்கு வேண்டியவங்களா இருக்கும் போது சம்பவம் மட்டும் எப்படி ப்பா மாறும்?
குமரனை வேலையை விட்டு நிறுத்த போறீங்கன்னா நிறுத்திக்கோங்க அதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல அதே நேரம் வன்மம் நிறைந்த முதலாளி கிட்ட இருந்து ஒரு அப்பாவி தொழிலாளிய காக்க முடியாத நான் இந்த பொறுப்புல இருக்குறது அழகு இல்ல அதனால நானும் என்னோட பொறுப்புல இருந்து விலகிக்குறேன் " என்று அவள் அதிரடியாக சொல்ல கிருஷ்ணனும் அதே அதிரடி குணத்தோடு சரி என்று சொல்ல தனது இருக்கையிலிருந்து எழுந்த தேவயானி அறையை விட்டு வெளியே வந்தாள், அவள் வந்த நேரம் அவள் அறையின் முன்னால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அதில் குமரனும் சேர்ந்து தான் இருந்தான்.

" இத்தன நாள் எனக்கு உறுதுணையா இருந்து தோளுக்கு தோள் கொடுத்த உங்க எல்லாருக்கும் என்னோட மனம் நிறைந்த நன்றி, இன்றோடு உங்ககிட்ட இருந்து விடை பெறுகிறேன் " என்று சொல்லிவிட்டு வெளியே நடக்க கூடியிருந்த கூட்டத்தில் குழப்பம் அதிகமானது.

அங்கிருந்த யாருக்கும் அவள் சொல்லியது சரியாய் விளங்காது போனதே அந்த குழப்பத்திற்கு காரணம். கூச்சல் சத்தம் கேட்டு வெளியே வந்த கிருஷ்ணன் தனது வெண்கல குரலில் கூட்டத்தை கலைக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்றார். குமரன் தனது இருக்கையில் அமர்ந்து கணினியை பார்க்க அதில் அவனது வேலை பறிக்கப்பட செய்தி பல்லை காட்டிக்கொண்டு வந்து நின்றது. அதை பார்த்து ஒரு நிமிடம் உணர்வற்ற நிலைக்கு சென்றவன் தேவயானியின் வார்த்தைகள் நினைவில் வர அவள் சொன்ன விஷயமும் மெல்ல புரிய வேகமாக தனது இருக்கையிலிருந்து எழுந்து வெளியே ஓடினான். அங்கு சிரித்து கொண்டே அவனை எதிர் கொண்டாள் அவனின் தேவா.


நெஞ்சில் நிறைவாள்......
 

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 41
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.