• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சோரம் துஞ்சும் நினைவுகளே - 6

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 6


அன்று இளங்கோ வீடு வரும்போதே முகம் சரியில்லாமல்தான் வந்தான். அதுவே அவனுக்குச் செய்தி போய்விட்டது என்று சொல்ல, அவனைக் கூப்பிட்டுப் பேசினார் சிவமூர்த்தி.

“தம்பி, நாங்க ஆரும் உங்கட அம்மாவப் பிழையா நினைக்கேல்ல. வீடு முழுக்கத் தேடிக் காணேல்ல எண்ட பிறகுதான் வாணி எடுத்துக் கேட்டவா. அதுவும் எங்கயாவது எடுத்து வச்சிட்டுப் போனாவோ எண்டுதான். அஞ்சு பவுன். சும்மா விடேலாதுதானே?” நயமாகவே தம் நிலையை எடுத்துச் சொன்னார் சிவமூர்த்தி.

“விளங்குது மாமா.” என்றுவிட்டு வந்தவனுக்கு அப்போதும் முகம் சரியில்லை.

“மாமிய நான் சந்தேகப்படேல்ல இளங்கோ. அம்மாவக் கேட்டனான். அப்பாவைக் கேட்டனான். அப்பிடித்தான் மாமியையும் கேட்டனான். ஆனா மாமி அதப் பிழையா எடுத்திட்டா.” கண்ணீருடன் கணவனின் முகம் பார்த்துச் சொன்னாள் வாணி.

“விடு!” என்றுவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டு படுத்துவிட்டான் இளங்கோ.

என்னவோ மனம் சரியே இல்லை. அதுவும் அவன் அன்னை, “அண்டைக்கும் இஞ்ச எங்கட வீட்டுக்கு வந்திட்டுத்தான் கைச் செயினை காணேல்ல எண்டு சொன்னவா. இப்ப நான் அங்க போயிட்டு வந்த பிறகு செயினை காணேல்லையாம். நான் வாறது பிடிக்காட்டிச் சொல்லச் சொல்லு தம்பி. ஒரு நேரக் கஞ்சியோட இருந்த காலத்தில கூட மானத்தோட வாழ்ந்தவளப்பு நான். இந்த வயசில எல்லாம் கள்ளிப் பட்டம் கேக்கத் தெம்பில்ல.” என்று அழுததே காதினுள் எதிரொலித்துக்கொண்டிருந்தது.

அவன் அன்னையைப் பற்றி அவனுக்குத் தெரியும். அதே நேரம் அவன் மனைவியும் இப்படி யார் மீதும் வீண் பழி போடுகிறவள் கிடையாது. பவன் கொஞ்சம் தராதரம் பார்ப்பானே தவிர்த்து அவள் வீட்டினரும் இப்படி அற்பத்தனமாக நடப்பவர்கள் இல்லை.

வேறு யார்? எப்படி இந்த நகைகள் காணாமல் போகின்றன?

விடையில்லாக் கேள்விகளே எல்லோர் மனத்திலும் எஞ்சி நின்றன.

அதன் பிறகும் அந்தச் செயின் கிடைக்கவே இல்லை. அன்றைக்கே சிவமூர்த்தி சின்ன லொக்கர் ஒன்றை வாங்கி வந்து கொடுத்தார். “நாங்க எங்கட பொருளில கவனமா இருந்திட்டா இந்தப் பிரச்சினைகள் வராது வாணி. இனி நகைகளை வெளில வைக்க வேண்டாம். இதுக்கையே வச்சு எடுங்கோம்மா.”

அதன் பிறகு மங்கையும் வரவில்லை. அதுவே ஒரு வித உறுத்தலாகத் தங்கிவிட கணவனை விசாரித்தாள்.

“தெரியா சத்யா. நேரம் இல்லை போல.” என்று சமாளித்தான் அவன்.

அவள் விடாமல் பார்க்க அவன் உதட்டில் மெல்லிய முறுவல்.

“என்ன பார்வை?” என்றான் அவள் விழிகளில் முத்தமிட்டு.

“சத்தியமா வேணுமெண்டு நான் கேக்கேல்லை.” விழிகளில் கண்ணீர் திரளச் சொன்னாள் அவள்.

“எனக்கு உன்னைத் தெரியாதா?”

“பிறகு ஏன் மாமி வாறேல்ல?”

“அத நீ உன்ர மாமியைத்தான் கேக்கோணும்.” அவளைத் தன்னிடம் இழுத்தபடி சொன்னான் அவன்.

“நான் மாமியக் கூப்பிடப்போறன்.”

“நான் மாமின்ர மருமகளக் கூப்பிடப்போறன்.” என்றவன் அந்த மருமகளைக் கொஞ்ச நேரத்திற்கு வேறு எதையும் பேச விடாமல் செய்திருந்தான்.

தந்தையிடம் பேசி மங்கையை அவர்கள் வீட்டுக்கு வரவழைத்தாள் வாணி. அவரும் கணவரோடு வந்தார். அங்கே விறாந்தையில் இரு தரப்புப் பெரியவர்களும் நடந்ததைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்க, திரும்பவும் ஏதும் பிரச்சனையாகிவிடுமோ என்று பயந்துகொண்டிருந்தவளை மேலே தங்களின் பகுதிக்குத் தள்ளிக்கொண்டு வந்தான் இளங்கோ.

அவர்களின் அறைக்குள் சென்றதும், “சும்மா பயப்பிடுறேல்ல. கீழ இருக்கிற ரெண்டு குரூப்பும் என்ன எண்டாலும் கதைக்கட்டும். உன்னில இருக்கிற என்ர பாசம் எப்பவும் குறையாது சரியா?” என்றான்.

அவளும் சரி என்று வேகவேகமாகத் தலையாட்டினாள்.

“நீயும் என்னை விட்டிற மாட்டியே?”

பதில் தெரிந்த கேள்விக்குப் பாய்ந்துகொண்டு பதிலளிக்கும் மாணவியைப் போன்று மிக வேகமாய் இல்லை என்று தலையை ஆட்டினாள் வாணி.

“அவ்வளவுக்கு என்னைப் பிடிக்குமா?”

இந்தக் கேள்வியில் எப்போதும் முகம் சிவக்கிறவள் அன்றைக்கு விழிகள் கலங்கிச் சிவக்க ஆம் என்று வேகமாகத் தலையை அசைத்தாள்.

அவன் கைகள் அவளைத் தனக்குள் இழுத்துக்கொண்டன. கலங்கிக் கிடந்த விழிகளையும் ஆதூரத்துடன் துடைத்து விட்டுவிட்டு, “எனக்கும்தான். இந்த மயில்குட்டியக் காலம் முழுக்கக் கைக்கையே வச்சிருக்கோணும் எண்டு நினைக்கிற அளவுக்குப் பிடிக்கும்.” என்று சொன்னான்.

அன்று நேசத்தின் அச்சாரமாக நிகழ்ந்தேறிய நிகழ்வுகள் எல்லாம் பின்நாள்களில் அவள் நினைத்து நினைத்து அலுவதற்குத்தான் என்று தெரியாமலேயே போயிற்று.

அன்று அப்படிச் சொன்னவனுக்குப் பிறகு எப்படி அவளைப் பிடிக்காமல் போனது? அல்லது வீட்டினரைப் பிடிக்காமல் போனதால் அவளையும் விட்டுவிட்டானா?

இல்லை, அவன் மீது தவறில்லை. அவன் வா என்றுதான் கூப்பிட்டான். அவள்தான் போகவில்லை. போகத் துணிவிருக்கவில்லை. அப்படி ஒரு பெரிய முடிவை அன்னை தந்தையைக் கேளாமல் அதுவரை அவள் எடுத்ததேயில்லை. திடீரென்று முடிவை நீ எடு என்றால் எப்படி எடுப்பாள்?

அவள் அவனுக்காக நிற்கவில்லையாம் என்று அவனுக்குக் கோபம். ஆனால், அவள் அவளுக்காகக் கூட நின்றதில்லை என்பதை அவன் யோசிக்காமல் விட்டுவிட்டான்.

அவளுக்கும் சேர்த்து யோசித்து, அவளையும் கூட்டிக்கொண்டு காலமெல்லாம் பயணிப்பான் என்று நம்பினாள். கடைசியில்…

தைரியம் இல்லாத ஒருத்தியாக வளர்ந்தவள் அவள். அதைப் பார்த்திருந்தவனும் அவளை அப்படியேதான் வைத்திருந்தான். பிறகு எப்படி அவளாக ஒரு முடிவை எடுப்பாள் என்று நினைத்தான்? அவ்வளவு காலமும் அவளுக்கும் சேர்த்து முடிவுகளை எடுத்துக்கொண்டிருந்தவன் அன்று மட்டும் ஏன் அவளை முடிவெடுக்கச் சொன்னான்?

‘நான் வேணும் எண்டா என்னோட வா!’ என்று நின்றானே. ‘நீ என்ர மனுசி. வாடி என்னோட!’ என்று இழுத்துக்கொண்டுதானே போயிருக்க வேண்டும்.

அவன் கூட்டிக்கொண்டு போயிருந்தால் அவள் இன்று இப்படி நின்றிருக்க மாட்டாளே! பொது இடத்தில் அமர்ந்திருக்கிறோம் என்பதையும் மறந்து கண்ணீர் உகுத்தாள்.

கைக்குட்டை இனிப் பயன்படுத்தவே முடியாது என்கிற அளவுக்கு மாறிப்போயிற்று. தண்ணீர் போத்தலில் தண்ணீர் முடிந்திருந்தது. அதைத் தூக்கிக் குப்பைவாளிக்குள் போட்டுவிட்டு, அங்கிருந்த கடை ஒன்றில் இன்னொரு தண்ணீர் போத்தலை வாங்கி அருந்தினாள். கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. விழிகளைச் சுழற்றி அப்பாவையும் மகளையும் தேடினாள்.

இருவரும் அவள் பார்வை வட்டத்தில் இல்லை. மகள் சேர்ந்துகொண்டாள் போலும். நிம்மதியான ஒரு வலி உள்ளே பரவியது. திரும்பவும் பழைய இடத்திலேயே சென்று அமர்ந்துகொண்டாள்.

அன்றைக்குப் பிறகு மங்கை பழையபடி வந்து போக ஆரம்பித்தார். அவளும் நகைகளில் கவனமாக இருக்க எல்லாம் சரியாகப் போனது. அந்த நகைகளின் நினைவு வருகையில் ஒரு கவலையும், இதையெல்லாம் செய்தது யார் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.

ஒரு வழியாக மிளிர் பிறந்தாள். சுகப்பிரவசம். இரு வீடுமே தமது அடுத்த வரிசைக் கொண்டாடித் தீர்த்தார்கள். பேத்தியை விட்டு இருக்க முடியாத மங்கையும் அடிக்கடி வந்து போனார்.

இப்படி இருக்கையில்தான் பவனுக்குத் திருமணத்திற்குப் பொருந்தி வந்திருந்தது. அன்று பெண் வீட்டினர் இவர்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார்கள். கதிர்வேலனும் மங்கையும் கூட அங்குதான் இருந்தார்கள்.

எல்லாமே மிக மிகத் திருப்தியாக நடந்தது. திடீர் என்று பார்த்தால் மிளிரின் கழுத்தில் கிடந்த செயினைக் காணவில்லை.

அவளின் நகைகள் காணாமல் போனபோதுகூட வாணியால் தாங்கிக்கொள்ள முடிந்தது. பிறந்து மூன்று மாதங்களேயான அவள் குழந்தையின் செயின் காணாமல் போனதை ஜீரணிக்கவே முடியவில்லை.

செய்தி இளங்கோ முதற்கொண்டு மெல்ல மெல்ல வீட்டிலிருந்த எல்லோருக்கும் வந்து சேர்ந்தது. யாருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை.

ஆனால், இதற்கு ஒரு முடிவு கண்டேயாக வேண்டும் என்று நின்றான் பவன். சிவமூர்த்தியுமே அந்த நிலைக்குத்தான் வந்திருந்தார். பவனின் தலைமையில் விசாரணை ஆரம்பித்தது.

அன்று எல்லோர் கைக்குமே மிளிர் போய் வந்திருந்தாள். அப்படியிருக்க யாரைச் சந்தேகப்படுவது? வாணி வீட்டினருக்கு மங்கை மீதுதான் சந்தேகம். இருந்தாலும் உறுதியாகத் தெரியாமல் வெளிப்படுத்த யோசித்தனர்.

“கடைசியா எப்ப செயினை பாத்தனி?” பவன் வாணியைப் பார்த்து வினவினான்.

“எனக்கு நினைவு இல்லையே அண்ணா.” நடுங்கியபடி சொன்னவளுக்குச் சட்டென்று ஒன்று தோன்றவும் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.

அன்றைய நாளின் விசேசத்துக்காக மிளிருக்கும் புது உடைகள் போட்டு, மிக அழகாகத் தயார் படுத்தியிருந்ததில் புகைப்படங்கள் எடுத்திருந்தாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
கடைசியாக மாலை நேரத்திற்குப் பொருத்தமாகக் குட்டிப் பாவாடை சட்டை அணிவித்து, மேலே அவர்களின் பகுதி விறாந்தையில் வைத்தும் புகைப்படங்கள் எடுத்திருந்தாள். அப்போது அவள் கழுத்தில் செயின் கிடந்தது. அதன் பிறகு மங்கைதான் மிளிரை வைத்திருந்தார்.

அவள் பார்வை தயக்கத்துடன் மங்கையிடம் போயிற்று.

“என்ன? என்னத்துக்கு என்னைப் பாக்கிறீங்க வாணி? இதுக்குத்தான் இஞ்ச வர வேண்டாம் எண்டு சொன்னான் அப்பா. நீங்கதானப்பா கேக்கேல்லை.” என்று கதிர்வேலனிடம் பாய்ந்தார் மங்கை.

இளங்கோவிற்குக் கோபம் வந்தது. “என்ன வாணி?” என்றான் சினத்தை அடக்கி.

“கடைசியா மாமிதான் மிளிர வச்சிருந்தவா.” மிடறு விழுங்கியபடி சொன்னாள்

“அம்மாவைச் சந்தேகப்படுறியா நீ?” பல்லைக் கடித்தான் இளங்கோ.

கணவனின் புது முகத்தில் அவளுக்குச் சகலதும் நடுங்கிற்று. “ஐயோ இல்ல. ஆனா இப்பிடித் தொடந்து காணாம போனா எப்பிடி இளங்கோ? என்ர எண்டா கூடப் பரவாயில்ல. பிள்ளையின்ர…”

அவனுக்கும் என்ன இது என்றுதான் இருந்தது. மனைவி மீது அதிருப்தியும் கோபமும். எப்போதும் ஏதோ ஒரு நகையைக் காணவில்லை என்றால் என்ன இது?

“உனக்கு எதையும் பக்குவமா வச்சு எடுக்கவே தெரியாதா?” குரலை அடக்கி அவளிடம் சீறினான்.

கோபத்தில் இருந்த பவன் அதைக் கவனித்துவிட்டான். “அவளோட ஏன் சண்டைக்குப் போறீங்க இளங்கோ? உங்கட அம்மா எண்டு நம்பி வீட்டுக்க விட்டனாங்க. இப்பிடி ஒவ்வொரு நாகையா களவெடுத்தா என்ன இது? அப்பா நீங்க பாக்கிற வேலைக்கு மேலாலதானே சம்பளம் தாறார். உங்கட வீட்டுக்குச் செய்யவும் விடுறார் எல்லா. பிறகும் ஏன் இப்பிடிப் பரிசு கெட்ட வேலை பாக்கிறீங்க?” என்றான் எரிச்சலுடன்.

இளங்கோவிற்கு நொடியில் சினம் உச்சிக்கு ஏறிற்று. பவன் மணக்கப்போகும் பெண் வீட்டினரும் இருந்ததில் பொறுத்துப்போனான். ஆனாலும், “நேர்ல பாத்த மாதிரிக் கதைக்காதீங்க பவன். என்ர அம்மாவைப் பற்றி எனக்குத் தெரியும். முதல் அவான்ர பேத்தின்ர நகைய அவா எடுப்பாவா எண்டு யோசிக்க மாட்டீங்களா?” என்று தானும் அதட்டினான்.

“அதத்தான் நானும் கேக்கிறன். எவ்வளவு கேவலம் இது? இனியும் எப்பிடி உங்களை எல்லாம் நம்பி வீட்டுக்க விடுறது? காசு தேவையா இருக்கு எண்டு ஒரு வார்த்த சொன்னா, அப்பா பாத்துப் பாராமக் காசத் தூக்கி எறிஞ்சிருப்பாரே. இது நீங்க களவெடுத்து எங்களையும் கேவலப்படுத்திறீங்க!”

முடிவே கட்டிக்கொண்டு வார்த்தைகளை அள்ளி வீசுகிறவனின் பேச்சில் கூனிக் குறுகிப்போனான் இளங்கோ. அவமானத்தில் முகம் சிவந்து கன்றியது. ஆத்திரத்தில் இரத்தம் கொதித்தது. அவன் ஏழைதான். அதற்கென்று மான ரோசம் இல்லாதவன் இல்லையே.

திரும்பிச் சிவமூர்த்தியைப் பார்த்தான். “தம்பி, அமைதியா இரு. பிறகு கதைப்பம்.” என்று மகனை அடக்க முயன்றாரே தவிர்த்து அவன் விட்ட வார்த்தைகள் குறித்து எந்த ஆட்சேபனையையும் அவர் தெரிவிக்கவில்லை.

“எப்பிடி அப்பா அமைதியா இருக்கிறது? இப்பிடி ஒவ்வொரு நாகையா காணாம போனா என்ன அர்த்தம்? வசதியா இருக்கிறோம் எண்டதுக்காகச் சும்மா இருக்கேலுமா?” என்று இன்னும் துள்ளிக்கொண்டிருந்தான் பவன்.

முதலே பவனுக்கு இளங்கோ வீட்டினரைப் பிடிக்காது. இப்போது அவனுக்குப் பேசிய பெண் வீட்டினரும் அங்கே நின்றதில் அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

“நிறைய வார்த்தையை விடுறீங்க பவன். கண்ணால காணாம எதையும் கதைக்காதீங்க. காலத்துக்கும் ஒருத்தர் இன்னொருத்தரின்ர முகம் பாக்கவேண்டிய உறவு எங்கட. கவனமா கதைங்க.” பொறுமையை இழுத்துப் பிடித்துச் சொன்னான் இளங்கோ.

“என்ன பெரிய உறவு…” என்றவனைப் பேச விடாமல் இடையிட்டு, “இப்ப என்ன செயின்தானே காணேல்ல? அத நான் வாங்கித்தாறன். இந்தப் பிரச்சினையை இதோட விடுங்கோ.” என்று முடிக்கப் பார்த்தான் இளங்கோ.

“என்ன தம்பி கதைக்கிறாய்? நீ வாங்கிக் குடுத்தா அவே சொல்லுற மாதிரி நான்தான் எடுத்தனான் எண்டு ஒத்துக்கொள்ளுற மாதிரி ஆகிடும். ஏன் உங்கட வருங்கால மனுசி ஆக்களும்தானே இஞ்ச நிக்கினம். அவே எடுத்திருக்கலாம்தானே.” என்றதுதான் தாமதம் அவரை அடிக்கவே பாய்ந்து வந்திருந்தான் பவன்.

அவனைத் தடுக்கப்போன இளங்கோவுக்கு அந்த அடி விழுந்த கணத்தில் அத்தனையுமே மாறிப்போயிற்று. என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று வாணியால் கணிக்கவே முடியவில்லை.

அவளின் கண் முன்னாலேயே அவள் உலகம் இடிந்து விழுந்துகொண்டிருந்தது.

சுற்றியிருந்தவர்கள் மறிக்க முயன்றதையும் மீறிப் பவனும் இளங்கோவும் ஒருவரை ஒருவர் தாக்கி, கட்டிப்புரண்டு சண்டையிட ஆரம்பித்தனர். பவன் மேலும் மேலும் விட்ட படு மோசமான வார்த்தைகள் இளங்கோவின் நிதானத்தையும் முற்றிலுமாகப் பறித்திருந்தன.

கடைசியில் இளங்கோவைப் பிடித்துப் பலமாகத் தள்ளி, வெளி முற்றத்தில் விழுத்தி, காலாலும் கையாலும் உதைத்துத் தள்ளினான் பவன். யாராலும் அவனைத் தடுக்கவே முடியாமல் போயிற்று.

“ஐயோ அண்ணா, என்ன செய்றீங்க? விடுங்கோ! என்ர கடவுளே, அவர் என்ர மனுசன் அண்ணா.” என்ற வாணியின் கதறல் அவன் காதில் விழவேயில்லை.

தடுக்கப்போன அவளைக் குணவதி மறித்துப் பிடித்தார். ஆண்களாலேயே அவனைச் சமாளிக்க முடியவில்லை என்கையில் மிளிரையும் கையில் வைத்துக்கொண்டு நடுவில் போனால் அவள் கதி என்னாகும்?

கடைசியில் உயிர்போகும் வலியையும், மண்ணுக்குள் புதைந்து விடலாமா என்கிற அளவிலான அவமானத்தையும் தாங்க முடியாத இளங்கோ, ஆவேசம் கொண்டு பவனைச் சுழற்றி அடித்ததில் அங்கிருந்த தென்னை மரத்தோடு போய் மோதுண்டு விழுந்தான் பவன்.

அவனிடம் மூச்சுப் பேச்சில்லை.

ஒரு நொடி அவன் உடலிலிருந்து உயிர் பிரிந்துவிட்டதோ என்று அத்தனை பெரும் நடுங்கிப் போயினர்.

அடுத்த கணமே, ஆண்கள் பவனைக் கவனிக்க ஓடிவிட, “வேலைக்கார நாயே. உன்னை எல்லாம் ஒரு மனுசன் எண்டு மதிச்சு வீட்டுக்க விட்டதுக்கு என்ர பிள்ளைக்கே அடிப்பியாடா? வெக்கமா இல்லையோ உனக்கு? எங்கட வீட்டுச் சோத்தைத் திண்டு உடம்ப வளத்துப்போட்டு, எங்களுக்கே கைய நீட்டுவியோ?” என்று கேட்டு அங்கிருந்த செருப்பை எடுத்துக் குணவதி அவன் கன்னத்திலே மாறிமாறி அடிக்கவும் அப்படியே நின்றுவிட்டான் இளங்கோ.

“கடைய விட்டு உன்ன அனுப்பினா உன்னட்ட என்னடா இருக்கு? சோறு போட்டு, வேலை பழக்கி, உன்னையும் ஒரு மனுசனா மதிச்சு, எங்கட வீட்டு பிள்ளையையும் கட்டி தந்தா திமிரா காட்டுறாய். நாய்க்கு நடுக் கடலிலையும் நக்குத் தண்ணிதானாம். எவ்வளவு உயரத்தில தூக்கி வச்சாலும் நீயெல்லாம் மாறுற ரகம் இல்லையடா!”

நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நின்றுவிட்டாள் வாணி. அவள் ஓடி வந்து தடுப்பதற்கும் அத்தனையும் முடிந்திருந்தன.

குணவதியைப் பிடித்துத் தள்ளிவிட்ட மங்கை சாபமாக விட்டுத்தள்ளினார். தலையில் அடித்துக்கொண்டு அழுதார். அந்தக் குடும்பமே மண்ணோடு மண்ணாகிப் போக வேண்டும் என்று மண்ணை அள்ளித் தூற்றினார். இளங்கோ அசையவேயில்லை. இமைக்காது சில கணங்களுக்கு மனைவியையே பார்த்தான்.

அடிபட்ட புறாவாகக் குழந்தையோடு ஓடி வந்து, கணவனைக் கட்டிக்கொண்டு கதறினாள் வாணி. அவள் உள்ளம் நெருப்பில் விழுந்த புழுவாகத் துடித்தது. தன் வீட்டில் வைத்து, தன் கண் முன்னாலேயே, கணவனுக்கு நடந்த அவமானத்தில் சுக்கு நூறாக நொறுங்கிப்போனாள் அவள்.

இளங்கோ அசையவேயில்லை. அவன் பார்வை அவள் கையில் இருந்த குழந்தையில் நிலைத்தது. அவளுக்கு என்ன புரிந்ததோ, அடித் தொண்டையிலிருந்து கதறிக்கொண்டிருந்தாள்.

கண்ணீர் திரள அவள் தலையை ஒரு முறை வருடிக்கொடுத்தவன் அன்னை தந்தையோடு அங்கிருந்து வெளியேறினான்.

அவனுடன் போய்விடத் துடித்த வாணியை அவள் வீட்டினர் விடவில்லை.

“ஐயோ அம்மா விடுங்கோ! இளங்கோ இளங்கோ!” என்று கதறியவளின் கதறல் யார் காதிலும் விழவில்லை.

அன்று ஆரம்பித்த கதறல் இன்றுவரை ஓயவில்லை. அன்று சத்தமாகக் கதறினாள். இன்று நெஞ்சுக்குள்ளேயே கதறுகிறாள்.
 
Top Bottom