• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நேசமுகை உதிரும் இளவேனில் - 12

Vishakini

Moderator
Staff member
நேசமுகை - 12

நான்கு வருடங்களுக்கு பின்...

காலை எட்டு மணிக்கு பரபரப்புடன் தயாராகிக் கொண்டிருந்தாள் இளவேனி. அவளது புதல்வர்கள் இருவரும் இன்னும் எழுந்துக் கொள்ளவில்லை. இருவருக்கும் தேவையான அனைத்தும் தயார் செய்து வைத்தவள் தன் அன்னையிடம் சொல்லிக் கொண்டு தன் 'பேக்'கை மாட்டிக்கொண்டு கிளம்பியிருந்தாள் இளவேனி.

ஆம் இளவேனி திருநெல்வேலியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருக்கிறாள் கடந்த ஒரு வருடமாக. ஜோனீஸை பள்ளியில் சேர்த்தவள், ஜோவீஸை அங்கன்வாடியில் சில மாதங்களாக விட்டு பழகுகிறாள்.

இளவேனியின் அன்னை கவினி குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொள்வதால் தைரியமாக வேலைக்கு செல்லும் முடிவினை எடுத்தவள் இன்று வேலைக்கும் சென்று, குழந்தைகளையும் பார்த்து தன் வாழ்வை பொறுப்புடன் கையாளுகிறாள்.

ஜோனீஸ்க்கு ஆண்டு இறுதி தேர்வு நடைபெற இன்னும் சில நாட்களே இருந்தன. கவினி படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த ஜோவீஸை தூக்கி உச்சி முகர்ந்து

"என் தங்கம் நேரம் என்ன ஆகுது பாரு. 'மம்மம்' சாப்பிட வேணாவா? எழுந்திருடா வைரக்குட்டி"

என்று முத்தமிட்டு செல்லம் கொஞ்சி எழுப்பியவர் இருவருக்கும் 'ஹார்லிக்ஸ்' கலந்து வந்துக் கொடுத்தார். வாரயிறுதி நாளாக இருந்ததால் பள்ளி விடுமுறையே. எனவே இருவரும் வீட்டின் தோட்டத்தில் மரங்களின் நிழலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இளவேனி தன் அன்னை வீட்டிற்கு வரும் போது நிறை மாத கர்ப்பிணியாக தான் வந்திருந்தாள். வரும் போதே சொல்லி விட்டாள் 'தன்னிடம் எதுவும் யாரும் கேக்க கூடாது, தான் இங்கு தான் இனி இருப்பதாகவும் தன் புகுந்த வீட்டினரிடம் எதுவும் கேட்க கூடாது' என்றும் சொல்லி விட்டிருந்தாள்.

பெற்றோர் இருவருக்கும் அதிர்ச்சி தான் என்றாலும் முதலில் கவினி சீக்கிரமே சூழலை உணர்ந்து இரு உயிராய் இருந்தவளை நன்றாக பார்த்துக் கொண்டார். ஆனால் ஜெரோம் என்ன விஷயம் என்று அறியாவிட்டாலும் தினமும் வார்த்தைகளால் காயப்படுத்தினார்.

"நான் பார்த்து கல்யாணம் செய்து வைத்திருந்தால் இப்படி கண்ணைக் கசக்கிக்கிட்டு வந்து நிப்பாளா?"

"நிலைமையே சரியில்லை என்று தெரியும் தானே பின் எதற்காக ரெண்டாவது குழந்தைக்கு ஆசப்பட்ட?"

"உன்னை பெத்து படிக்க வைத்து ஆளாக்கி விட்ட பாவத்துக்கு உன் இஷ்டத்துக்கு கல்யாணம் செஞ்சிட்ட போனீல்ல. அப்படியே போவ வேண்டியதானே எக்ஸ்ட்ரா ரெண்டு லக்கேஜை கூட்டிட்டு வந்து அதுங்களுக்கும் சோறாக்கி போட இதென்ன சத்திரமா?"

"நீயே ஒரு தெண்டம் கூட ரெண்டு தெண்டம் வேற"

இப்படியான வார்த்தைகளை கேட்கும் போது உள்ளுக்குள் நொறுங்கி போவாள் இளவேனி. ஆனால் பதிலளிக்க மாட்டாள். அன்னை மட்டும் ஆறுதலாக இருப்பார். இதன் பொருட்டே வேலைக்கு செல்ல முடிவுச் செய்திருந்தாள் எனலாம்.

ஜெரோம் பேசிய வார்த்தைகளை விட பல மடங்கு வலியை அவர் அனுபவித்தார் என்பதே உண்மை. ஏனெனில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஏளனப் பேச்சுகளும், கேள்விகளும், தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே, தன் பிள்ளையின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே? என்ற ஆதங்கம் தான் அவரை அவ்வாறு பேசவைத்தது.

எல்லாம் சரியாகச் சென்றால் வாழ்க்கை எங்ஙனம் சுவாரஸ்யமாக இருக்கும்? மீண்டும் புயல் அடிக்கக் காத்திருந்தது விதி எனும் சாத்தான் இளவேனியின் வாழ்வினிலே.

மாலை வீடு வந்ததும் இருவரும் ஓடிச்சென்று அன்னையை கட்டிக் கொண்டனர்.

"எங்க அம்மா"

"இல்லை எங்கம்மா" என்று இருவரும் மாறிமாறிச் சண்டையிட்டனர்.

"அடேய் வாலுபசங்களா ரெண்டு பேருக்கும் அம்மா தான். முதலில் என்னை விடுங்கடா. நான் ப்ரஷ் ஆகிட்டு வரேன்" என்றவள் குளியலறைச் சென்று தன்னை சுத்தம் செய்து விட்டு வந்து குழந்தைகளுடன் விளையாடினாள்.

இரவு உணவை முடித்து விட்டு படுக்கையில் விழுந்தால் அங்கும் சண்டை 'நான் தான் அம்மா பக்கத்தில் தூங்குவேன்' என்று. இருவரையும் சமாளித்து கதைச் சொல்லி உறங்க வைக்க முயற்சித்தாள் வேனி.

"ம்மா நான் ஒன்று கேட்பேன் கோவப்பட மாட்டீங்களா?" ஜோனீஸ்

"சொல்லுடா தங்கம்"

"அப்பா ஏன் போன் கூட பண்ணல ஏன் பேச மாட்டேங்குறாங்க? நாம ஏன் இங்கு இருக்கோம்?" ஜோனீஸ்

"உனக்கு பேசனும் னு தோணுச்சுனா நீயே போன் பண்ணி பேசுடா" இளவேனி

"நீங்க உங்கம்மா, உங்கப்பா கூட இருக்கீங்க தானே? நானும் ஜோவீயும் ஏன் உங்க கூட மட்டும் இருக்கனும்? நாமளும் அப்பா வீட்டில் போய் இருக்கலாம் அம்மா?"

"ம்ம்ம் ஆ..மா.. நீ சொல்றதும் சரிஈஈஈ தான். நான் பேசி பாக்கிறேன். உனக்கு இங்கு இருக்க பிடிக்கலயா?"

"அம்மா... நான் அப்படியாச் சொன்னேன்? தாத்தா பாட்டி நல்லா பாத்துகிறாங்க ஆனால் எனக்கு அப்பாவும் வேணும் அம்மா"

"சரிடா" என்றவள் அவனை உறங்க வைத்து விட்டு காதொலிப்பானில் பாடல்கள் இசைக்கவிட்டு கேட்டுக் கொண்டிருந்தாள். விழிகளில் கோடாக நீர் வழிந்து காதருகே வழிந்து தலையணையை தழுவி ஈரம் செய்தது.


🎶காதல் வெறும் மேகம் என்றேன்.
அடை மழையாய் வந்தாய்
மழையோடு நனைந்திட வந்தேன்
நீ தீயை மூட்டினாய்
மொழியாக இருந்தேன்
உன்னால் இசையாக மலர்ந்தேனே
உயிரோடு கலந்தவள் நீதான் ஹே பெண்ணே
கனவாகி கலைந்ததும் எனோ
சொல் கண்ணே
மௌனம் பேசியதே
உனக்கது தெரியலயா
காதல் வார்தைகளை
கண்கள் அறியலயா
காதல் செய்தால் பாவம்
பெண்மை எல்லாம் மாயம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே
பெண்கள் கண்ணில் சிக்கும்
ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே
துணை இன்றி தனியாய் சென்றேன்
என் நிழலாய் வந்தாய்
விடை தேடும் மாணவன் ஆனேன்
என்விடையும் நீயென
வந்தாயே
என் வழியில்
காதல் தந்தாயே
உன் மொழியில்
என் நெஞ்சில் காதல் வந்து
நான் சொன்னேன்
உன் காதல் வேறோர் மனதில்
எனை நொந்தேன்
கண்கள் உள்ளவரை
காதல் அழிவதில்லை
பெண்கள் உள்ளவரை
ஆண்கள் ஜெயிப்பதில்லை🎶


இசையின் வரிகளோடு இலயித்திருந்தவளை அலைபேசி அழைப்பு நிகழ்வுக்குக் கூட்டி வந்தது. வந்த அழைப்பைப் பார்த்தவள் துண்டித்தாள். மனது படபடவென்று அடித்துக் கொண்டது. அடிவயிற்றில் ஓர் வலி ஆழத்தில் இருந்து மெல்ல மெல்ல மேலெழுந்து வந்தது.

'விடாது கருப்பு' என்று சொல்வார்களே அதைப்போல் மீண்டும் மீண்டும் அழைப்பு வந்தது. ஏற்காமல் இருந்தாள் சில அழைப்புகளை. துண்டித்திருந்தாள் சில அழைப்புகளை. ஆனால் மீண்டும் மீண்டும் அழைப்பு வரவே 'சரி என்ன என்று கேட்போம். ஏதேனும் எமர்ஜென்சியோ?' என்று எண்ணியவள் அழைப்பை ஏற்றாள்.

"வே..னி.. அ..ம்..மு... ஏ..ன்டி போன் பணிணா எடுக்க மாட்டியா? ஏன் என்னை விட்டு போன? என் பையனையும் என்கிட்ட இருந்து பறீச்சீட்டல்ல? ஏன்டி இப்படி பண்ண? நீ சந்தோஷமா உங்கப்பன் வீட்டில் இருக்க. இங்கு நான் தெனம் தெனம் சாவுரேன்டி தெரியுமா?"

அவனது குழறியப் பேச்சுகளும், குற்றம் சாட்டி பேசிய தொனியும் அவன் மதுவின் ஆதிக்கத்தில் வீழ்ந்திருப்பதை உணர்த்த 'அவன் என்னவோ பேசட்டும்' என்று அமைதியாக இருந்துக் கொண்டாள்.

அவன் அவளை எந்தளவுக்கு தேடியிருக்கிறான் என்று அவனை அறியாமல் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் சொல்லியவிதம் தான் அவளுக்குள் வலியை உண்டுபண்ணியது. பேசிக்கொண்டிருந்தவன் அப்படியே உறங்கி விட்டிருந்தான் என்பதை எந்த அணக்கமும் இல்லாமல் இருந்த அவன் அலைபேசி பக்கம் உணர்த்தியது.

'இத்தனை வருஷம் இல்லாமல் ஏன் இப்படி நடக்கனும்? ஏன் இப்ப போன் பண்றான்? நிஜமாவே என்னை மிஸ் பண்றானோ?' மனதோடு நினைத்துக் கொண்டிருந்தவள் திடீரென கேட்ட குரலில் திடுக்கிட்டாள்.

'மண்ணாங்கட்டி... அவனாது உன்னை மிஸ் பண்றதாவது. உன்கிட்ட எதாவது தேவை இருந்துருக்கும். எப்படி உன்னை கவுக்கலாம்னு உன் பலவீனத்தை யூஸ் பண்றான். ஒழுங்கா அவனை 'டிவோர்ஸ்' பண்ணிட்டு முன்னேறுற வழியை பாரு' செந்நிற மியா.

'வேனி தப்பு செய்றவங்க திருந்துறதே இல்லையா? அவனுக்கு ஒரு வாய்ப்புக் கொடு. வாழ்க்கைதுணையா கடைசி வரை வர போவது அவன் தானே' வெண்ணிற லயா.

'அவன் கடைசி வரை இருப்பான். உன்னை வாழ விடுவானா? உனக்கு கொஞ்சம் கொஞ்சமா வலியைக் கொடுத்து நடைபிணமா மாத்தினதை எல்லாம் மறந்துட்டியா?' மியா

இரு குரல்களும் மாறி மாறி சண்டையிட வேனிக்கு தலையில் யாரோ ஊசியை வைத்துக் குத்துவது போல வலி எடுத்தது. எழுந்து முகத்தில் நன்றாக நீர் அடித்துக் கழுவி வந்தவள் குழப்பத்துடனேப் படுக்கையில் விழுந்தாள். முயன்று அந்த குரல்களை விழுங்கினாள்.

மறுநாள் காலையில் தாமதமாக எழுந்தவள் அரக்க பரக்கக் கிளம்பினாள். அவள் அலுவலகத்தில் இருக்கும் போது கிளாரின் அழைத்திருந்தார். இவளுக்கோ ஆச்சரியம். இத்தனை வருஷங்களில் 'நேரில் கூட சரியாக பேசாதவர்' 'இன்று அழைத்திருக்கிறாரே' என்று. அலுவலக வளாகத்தில் வந்து நின்றவள் அழைப்பை ஏற்க அதுவரை மூச்சைப் பிடித்து வைத்திருந்த அழுகையைக் கண்ணீராய் சொரிந்தார் கிளாரின்.

"அம்மாடி இளவேனி இதுவரை நடந்தது எல்லாம் போவட்டுமா. என் பையன் அரை உசுரா ஆகிட்டான். நீ வந்துருமா. நீ இல்லாமல் ரொம்ப நொந்துப் போய்த் தவிக்கிறான். ஒரு தாயா என்னால இவனை இப்படிப் பாக்கமுடியல. புருஷனுக்கு துணை பொண்டாட்டி தான்மா. அவனும் ஒரு ஆம்பள எத்தனை நாள் தான் தனியா காலத்தை கழிப்பான்? எதுவும் நினைக்காம திரும்பி வந்துடுமா" என்று சூசகமாகச் சொல்லி அழுது தீர்த்தார்.

அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. நடப்பது எல்லாம் மாயாஜால உலகத்திற்கு அவளை அழைத்ததுப் போலிருந்தது.

"ஹேய் இளவேனி பாஸ் உன்னை தான் கேட்டாரு. கேமரால நீ போன் பேசுனத பாத்து செம டோஸ் மேனஜர்க்கு. இப்ப உன்னை கடிக்கதான் வருவாரு மேனேஜர் அதுக்குள்ள ஓடிரு" என்று சக ஊழியர் ஒருவர் சொல்லி விட்டு நகர்ந்தார். அவளுக்கோ வேலையில் அன்று ஈடுபாடே இல்லை. மாலை வீட்டுக்கு வந்தவள் பிள்ளைகள் இருவரையும் அணைத்துக் கொண்டாள்.

குளியலறைச் சென்று கண்ணாடி முன் நின்றாள். அவளின் பிம்பத்தின் அருகே மியா 'நெருப்பாகவும்' லயா 'குளிர்ச்சியாகவும்' நின்றுக்கொண்டிருந்தார்கள்.

'என்ன மாமியாக்காரி அழுது பேசினதும் உருகிட்டியோ? அன்பு இஸ் மை புஃட். ஒழுங்கா அவங்க நம்பர் எல்லாம் பிளாக் பண்ணிட்டு வேலையை பாரு' மியா

'இங்க பாரு வேனி. உன்னை நீயே ஏமாத்திக்காத. உனக்கு இன்னும் நேயன் மேலே லவ் இருக்கு தானே? நேயன் உன் மேலே எவ்வளவு காதல் வச்சிருந்தான் உனக்கு தெரியும் தானே? அவனோட போதாத நேரம் தப்பான வழிலப் போய்ட்டான். காதல்ல மன்னிக்கிறது ரொம்ப பெரிய விஷயம். நீ மன்னிச்சி ஏத்துக்கோ. காதலை விட இந்த உலகில் வேறு எது உன்னை உயிர்ப்பா வச்சிருக்க முடியும் சொல்லு?' லயா

'ஐயோ கடவுளே இங்க பாருங்களேன். அளவுக்கு அதிகமா காதலிச்சவன் இவளை கவனிக்கவே இல்லையாம். இவள் இங்கு வந்ததே தப்பி பிழைச்சிதான். இல்லைனா இவளை புதைத்த இடத்தில் இன்று புல் பூண்டு முளைச்சிருக்கும். ஆனால் பாருங்க கடவுளே இந்தப் பெண்ணுக்கு அவன் தான் வேணுமாம் சோ ஃபன்னி' ஏளனமாக சிரித்த மியா இவ்வார்த்தைகளை உதிர்ந்திருந்தது இளவேனியை காயப்படுத்தியது.

"இல்லை இல்லை இல்லை ஆஆஆ ஆஆஆ போ இங்கு இருந்து"

என்றுக் கத்திக் கூச்சலிட்டவள் நீர் எடுத்து கண்ணாடியின் மீது ஊற்றியவள் தூக்கி எறிந்தாள் தண்ணீர் டப்பாவை. 'ஷவரை'த் திறந்து விட்டவள் முழுவதும் நனைந்தாள். இருப்பினும் முகத்தில் நீரினை அடித்தாள். அவள் சத்தம் கேட்டு ஓடிவந்த கவினி 'என்னவென்று வினவ?' அனைத்தையும் சொல்லிக் கட்டி அணைத்து அழுதாள்.

"இங்க பாரு பிள்ளே இது உன் வாழ்க்கை. நான் உன்னை இங்கு இருன்னும் சொல்ல மாட்டேன் போன்னு துரத்தவும் மாட்டேன். ஆனால் நீ போய் சந்தோஷமா வாழ்ந்தால் அதுவே போதும் நிம்மதியாகக் கண்ண மூடிடுவேன் நான்"

"அம்மா என்ன பேச்சு பேசுரீங்க?" பதறினாள் இளவேனி.

"ஆனால் உனக்கு யாரும் இல்லைனு மட்டும் நினைச்சிடாத. எந்த தப்பான முடிவும் எப்போதும் எடுத்திடாத. நீ எப்ப வேணும்னாலும் இங்கு வரலாம்" என்று ஆறுதல் மொழிந்தார்.

அன்றிலிருந்து தினமும் அலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன அவர்களிடமிருந்து. பிள்ளைகளிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசினார்கள். 'முந்தைய காதல் நெருக்கம்' இல்லை என்றாலும் ஓரிரு வார்த்தைகள் பேச ஆரம்பித்தாள் இளவேனி. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கிளாரின் அவளிடம் நன்றாக பேசியதுதான்.

லயா' 'நேர்மறை'யாக பேச, 'மியா' எதிர்மறை'யாக பேச தவித்துப் போன பெண்ணவள், மனதை அலைபாய விடாமல் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டாள்.

ஆண்டுத் தேர்வு முடிந்து, விடுமுறை நாட்களும் முடிந்து பள்ளித் தொடங்க சில நாட்களே இருந்த சமயத்தில் நேயன் தன்னுடன் வந்து விடுமாறு வேண்டினான்.

"அம்மு ஏன்டி நான் உன் புருஷன் தானே? பேசவே தயங்குற இப்படி. போன்ல ஒன்னும் கடிச்சு முழுங்கிட மாட்டேன். என்கிட்ட வந்துடுடி அம்மு. இன்னும் நீ என்னை 'மாம்ஸ்'னு கூப்பிடலடி. 'ஐ லவ் யூ' கூட பதிலுக்கு சொல்ல மாட்டுற. அந்தளவுக்கு நான் உனக்கு வெறுத்து போய்ட்டேனா?"

"அப்படி எல்லாம் இல்லை. எனக்கு தோன்றனுமே சொல்லுவதற்க்கு. ஸ்கூல் இங்க போய்ட்டு இருக்கானே திடீரென எப்படி வர்ர? அவனுக்கு இந்த ஸ்கூல் செட் ஆகிருச்சு"

"இதலாம் ஒரு விஷயமா? இங்கயும் நல்ல ஸ்கூல்ஸ் இருக்கு. நம்ம வீட்டாண்டயே கூட இருக்கு. அங்கு பீஸ் கம்மி தான் டீச்சிங் கூட நல்லா இருக்கும். வந்துருடி என் பசங்கள பாக்கனும் போலவே இருக்கு அம்மு பிளீஸ்டி" என்றுக் கெஞ்சினான்.

"சரி அப்ப நீ குடிக்க மாட்டேன்னு எனக்கு வாக்குறுதிக் கொடு. கடன் வாங்க மாட்டேன்னு வாக்குறுதிக் கொடு. எனக்கும் உனக்கும் நடுவில் எந்த ஒளிவும், மறைவும் இருக்கக் கூடாதுனு வாக்குறுதிக் கொடு. போன்ல கேம் விளையாட மாட்டேன்னு வாக்குறுதிக் கொடு. அதோட இப்ப நமக்கு ரெண்டு பசங்க சோ வீட்டுச் செலவு எல்லாம் பாத்துப்பேன்னு வாக்குறுதிக் கொடு" என்று வாக்குறுதிகளை அடுக்கினாள்.

"அதலாம் நான் பாத்துகிறேன். இப்ப எல்லாம் விட்டுட்டேன்டி நான் மாறிட்டேன் நம்பு"

'மாறிட்டேன் நம்புனு சொல்றவன மட்டும் நம்பாத' மியாவின் குரல் செவிகளை வந்தடைந்தது. அதனை உதாசீனம் செய்தவள்,

"சரி உன்னை நம்புறேன் அவனுக்கு பீஸ் கட்டிடு நான் வந்துடுரேன்"

"ஹேய் என்னடி அம்மு? பொசுக்குன்னு இப்படி சொல்ற? நான் எங்கடி போவேன்? என் நிலைமை உனக்குத் தெரியாதா?"

"சரி நான் அப்பாகிட்ட கேக்கிறேன்" என்றவள் பள்ளித் திறக்க இரண்டு நாட்கள் முன் சென்னை வந்து சேர்ந்தாள் தன் குழந்தைகளோடு. அவளை அன்புடன் வரவேற்றனர் இளநேயன் மற்றும் கிளாரின். ஆனால் இந்த அன்பு நீடிக்குமா? நொடிந்து போகுமா?

முகை உதிரும்...
 
Top Bottom