• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நேசமுகை உதிரும் இளவேனில் - 13

Vishakini

Moderator
Staff member
நேசமுகை - 13

"ப்பா ப்பா எனக்கு ஸ்வீட் கார்ன் வேணும் வாங்கி தாங்க" ஜோனீஸ்.

"நானுக்கு வாணும் நானுக்கு வாணும்" ஜோவீஸ்.

மன்னூர்ப்பேட்டையின் பிரதானச் சாலையின் ஓரங்களில் உள்ள ஏராளமான கடைகளில் ஒன்றில் 'ஸ்கூல் பேக், லன்ஞ்ச் பேக்' மற்றும் இதர தேவையானப் பொருட்களை வாங்கியவர்கள் அருகில் இருந்த 'ஸ்வீட் கார்ன்' கடையில் பேருந்திற்காக நிற்கச் சுட்டிகள் இருவரும் 'வேண்டும்' என்று அடம்பிடித்தனர். இருவருக்கும் ஒவ்வொரு 'ஸ்வீட் கார்ன் பொட்டலம்' வாங்கி தந்தவன் இளவேனியைப் பார்த்துப் புன்னகைத்தான்.

"நேயன் நான் அவசரப்பட்டுட்டோனோனு தோணுதுடா" இளவேனி

"இப்ப என்ன சொல்ல வர்ர? என் கூட வந்து இருக்கது உனக்கு அவசரப்பட்டதா தோணுதா? இதான் அர்த்தமா? உனக்கு பிடிக்கலனா இப்பவேக் கிளம்பிடு வேனி" சூடாகவே பதில் வந்தது.

"ஆஹான் ஸ்கூல் பீஸ் கட்டியாச்சி இனிமே எங்கே போவ?"

"இல்லைனா போயிருவ அப்படி தானே?"

"அப்படி இல்லீங்க. நான் என்ன சொல்ல வந்தேன்னா உடனடியாக கிளம்பி வந்துட்டேன். ஆபிஸ்ல போட்டது போட்டபடி போட்டு வந்துட்டேன் அதான் கில்ட்டா இருக்கு"

இடுப்பில் கையூன்றி அவளை ஆழ்ந்து பார்த்தவன்

"இன்னும் உனக்கு என் கூட நார்மலா பேச முடில என்ன? அந்தளவுக்கு வெறுப்பு என்மேல. இன்னும் இந்த 'ங்க' போட்டுக் கூப்பிட்டு இருக்க. சரி சரி"

"பசங்க வளர்ராங்களாப்பா நாமளும் அதுக்கு ஏத்த போல மாறிக்கனும்ல"

"என்னவோ சொல்ற சரி வா வீட்டுக்கு போகலாம்" என்றவன் அங்கிருந்து ஒரு ஆட்டோப் பிடித்து வீடு வந்தனர்.

பள்ளிச் செல்லும் நாளும் வந்தது. குதூகலமாக இருவரும் கிளம்பினர். பெரியவன் நான்காவதும், பொடியன் அங்கன்வாடியிலும் சேர்த்திருந்தனர்.

ஒரு வாரம் கடந்திருக்க கிளாரின் தன் உண்மை முகத்தைக் காட்ட ஆரம்பித்தார்.

"அத்தை இந்த கேன் ரொம்ப பழசா இருக்கே இன்னும் மாத்தலயா?"

"ஆமாம்மா மாத்தல இங்கயே ரொம்ப கஷ்டமா தான் இருக்கு. நீயே இன்னும் ஒரு வருஷம் கழிச்சு வந்திருந்தினாச் சரியாக இருந்திருக்கும். என்ன செய்ய இவென் எப்படிச் சமாளிக்க போறானோ?"

அவர் உதிர்த்த வார்த்தைகள் இளவேனியை அதிர்வுறச் செய்தன. 'இதென்ன இப்படிச் சொல்றாங்க? இவங்க தானேக் கூப்பிட்டாங்க' என்று மனதோடு புலம்பிக் குழம்பியவள் 'சரி'யென்று தலையசைத்தவாறு அறைக்குள் வந்துவிட்டாள். அந்த நிமிடம் வீடே அந்நியப்பட்டுப் போனதாக உணர்ந்தாள்.

அன்றிரவு நேயனுடன் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தவள் காத்திருந்தாள் அவனின் வருகைக்காக. அதுவரை பிள்ளைகளுடன் விளையாடி நேரத்தை நெட்டிச் செலவிட்டவள் அவர்களை உறங்க வைத்து கதைப் புத்தகங்கள் எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்.

எழுத்தாளர் 'நித்யா மாரியப்பன்' நாவல்கள் என்றால் கொள்ளைப் பிரியம் அவளுக்கு. அவரது நாவல்களில் மலரும் தன்னம்பிக்கை ஊற்று மிக்க கதை நகர்வும், வார்த்தை ஜாலங்களும், அவளுக்குள் ஜீவ ஊற்றாக மலர்ந்துக் கொண்டிருந்தது ஒவ்வொரு நாளும்.

நேயன் வேலை முடிந்து வீடு திரும்பியதுமே அவனது அன்னையிடம் அமர்ந்து பேசிவிட்டு தான் அறைக்குள் நுழைவான். அன்றும் அவன் பேசிவிட்டு அறைக்குள் வர உடனே அறையின் கதவைச் சாற்றினாள். அதற்குள் பதறியவன்

"என்னடி பண்ற? அம்மா எதுவும் நினைக்கப்போறாங்க. மொதல்ல கதவை திற." இளநேயன்

"அவங்க இதுல நினைக்க என்ன இருக்குடா? நாம ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ப் தானே"

"நீ மொத கதவ திறந்து வைடி"

"நான் உங்கிட்ட கொஞ்சம் பேசனும்டா"

அறையின் கதவு மூடியிருந்தாலே கொஞ்சம் சத்தமாக பேசினால் வெளியே இருப்பவர்களுக்கு தெளிவாகக் கேட்கும். திறந்து வைத்துக் கொண்டு எப்படி பேசுவதாம்? ஆனால் இளநேயன் கதவை நன்றாகத் திறந்து வைத்து விட்டு

"சொல்லுமா என்ன விஷயம்?"

என்றுக் கேட்டதும் அவளுள் சினம் மூண்டது. பசங்களோடுச் சேர்ந்து படுத்துக் கொண்டவள் அதன் பின் அவனது எந்த குரலுக்கும் செவிசாய்க்கவில்லை. மெல்ல அவளது இடையில் கை வைத்தவன் மெதுவாக வருடச் சிலிர்த்து போனவள் திரும்பினாள்.

"என்ன வேணும் உனக்கு?"

"கோவபடாதடிச் செல்லம்"

"கோவபடுற மாதிரி நடந்துக்காதடா அப்ப"

"கோவத்தை குறைக்க என் கிட்டே ஒரு மேஜிக் இருக்கு" என்றவன் அவளை நெருங்கி வந்து அவளது வதனத்தை கைகளில் பிடித்தவன் இதழை நோக்கி குனிய கதவருகே நிழலாடியது, பின்னோடு கிளாரின் குரலும்.

"இளா இந்த மெஸெஜ்ல என்னவோ போட்டிருக்கு பாரு" என்றபடி நுழைந்தார். அதற்குள் இருவரும் பிரிந்து அவள் குழந்தைகளின் பக்கத்தில் நெருக்கமாக படுத்திருக்க, நேயனோ மறுபுறம் ஓரமாக படுத்திருந்தான். அவர் சென்றதும் வேனி நேயனை முறைத்த வண்ணம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

சில நேரத்தில் தாழ்ப்பாள் போடாமல் கதவை வெறுமனேச் சாற்றியிருந்தால் கூட ஏதாவது ஒரு காரணம் சொல்லி நுழைந்து விடுவார் அவர்களது தனிப்பட்ட நேரத்தைக் களவாடும் நோக்கத்தில்.

மறுநாள் காலையில் நிலோஃபரிடம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவர் "சரிடி நான் வேனிகிட்ட கேட்டு பாக்கிறேன்" என்று துண்டித்திருந்தார்.

"வேனி உன் நகை எல்லாம் அடவுலதானே இருக்கு? வருஷம் ஆச்சு இனி இவென் எங்க திருப்புவான்? பேசாமல் நீ அதை வித்துடுமா. கொஞ்சம் கடனையும் அடைச்சிட்டு நிலோ நகையையும் மீட்டுக் கொடுத்திடலாம். அவள் வீட்டுகாரன் நகை வேணும்னு சண்டை போடுரானாம். அழுதா என்கிட்ட. எனக்கு என்ன செய்யனே தெரில" என்று ஆரம்பித்தார்.

"இல்லைத்த நான் நகையை விற்கதா இல்லை" அவர் அலைபேசியில் பேசும் போதே அனைத்தையும் கேட்டுக்கொண்டு தானே இருந்தாள்.

"என்னம்மா இப்படிச் சொல்ற? நிலோ அழுறாம்மா. அவன் டெய்லி கேட்டு சண்டை போடுறானாம்"

"அப்ப நான் என்ன செய்வேன்? நீங்க நேயன் வந்ததும் சொல்லுங்க" பிடிக் கொடுக்காமல் நழுவப் பார்த்தாள்.

"அவென் எங்கிருந்து செய்வான்? உனக்கும் திருப்பிலாம் தரமாட்டான். அதுவா முங்கி போறதுக்கு இப்பவே வித்தினா கொஞ்சம் கடனும் அடையும். அவளுக்கும் நகையை மீட்டுக் கொடுக்கலாம். நாம தானே அவளுக்கு செய்யனும்"

"எனக்கு அவர் நிச்சயம் திருப்பி தருவாரு. தந்துதான் ஆகனும். அதுவரை நகையை நான் விற்கமாட்டேன்" அழுத்தமாக வார்த்தைகளை உதிர்த்தவள் அறைக்குள் முடங்கினாள்.

'என்ன பெண் இவர்? தன் மகளுக்காக மருமகளின் நகையை விற்க சொல்கிறாரே? ஏன் அது என் தாய் வீட்டு சீதனம் அல்லவா? எனக்கு இருக்கும் ஒரே சொத்து அதுதானே? நேயன் வரட்டும்' என்று மனதோடு நினைத்தவள் அமைதியானாள். ஆனால் கேட்க சொன்னதே அவன் தான் என்றறிந்து மனதளவில் காயப்பட்டுப் போனாள்.

நாட்கள் செல்ல மூன்று மாதங்கள் கடந்த நிலையில் 'வீட்டு வாடகை' கட்டவில்லை என்று 'வீட்டின் உரிமையாளர்' வந்து சத்தம் போட்டு விட்டுச் சென்றார். அவர் சென்றதும் கிளாரின்

"வேனி உன்கிட்ட கம்மல் மாதிரி ஏதும் சின்னப் பொருள் இருந்தா கொடுக்கிறீயாம்மா? வாடகை கட்டாமல் இந்த பையன் அசிங்கபடுத்துரான். பாரு எப்படி வந்து கத்திட்டு போறார்னு"

"இல்லை அத்தை என்கிட்ட எதுவும் இல்லை" என்றவள் உடனடியாக அந்த இடத்தைக் காலி செய்தாள். வந்த மூன்று மாதங்களில் தேவை இருக்கும் போது 'குழைந்து பேசுவதும்' இல்லையென்றால் கண்டுக்கொள்ளாமல் இருப்பதுமாக இருக்கும் மாமியாரிடம் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ள கூடாது என்று உணர்ந்திருந்தாள்.

பெரும்பாலும் கடைகளுக்குச் செல்வது, காய்கறிகள் வாங்குவது, மளிகைச் சாமான்கள் வாங்குவது, தண்ணீர் லாரி வந்தால் குடங்களை சுத்தம் செய்து ஓடிச்சென்று தண்ணீர் பிடிப்பது என்று அனைத்து வேலைகளுமே தனியாகவேச் செய்தாள் இளவேனி. செய்ய வைக்கப்பட்டாள் என்பதே சரியாக இருக்கும். அதில் அவள் வருத்தமோ, கவலையோ படவில்லை. தன் வீடு, தன் குடும்பம் என்ற புரிந்துணர்வு இருந்தது அவளிடம்.

ஆனால் அவளது பிரச்சினையே வேறு. அவளது மாதாந்திர உபாதையின் போது கடுமையான வயிற்று வலியால் அவதிப்படுவாள். அந்த நேரத்தில் கூட சிறு உதவிகள் செய்யாமல் தனக்கும் வீட்டிற்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் இருப்பார். நேயனோ வேலைக்குச் சென்றால் அனைத்தையும் மறந்துவிடுவான். ஒரு முறை பக்கத்து வீட்டுப் பெண்மணி கூட அவள் அவதிப்படுவதைக் குறிப்பிட்டு உதவி செய்யச் சொல்ல, உடனே அறுவெறுப்புடன் அவர் மொழிந்த வார்த்தைகளில் விக்கித்து நின்றாள் இளவேனி.

"ச்சீ ச்சீ நான் அவள் பீரியட்ஸ் ஆனா கிட்டவே போகமாட்டேன் எனக்கு ஒரு மாதிரி வாயெல்லாம் உமிழ்நீர் சுரக்கும் அறுவெறுப்பா இருக்கும்"

"என்னக்கா பேசுதீய உங்க மொவளுக்கு பீரியட்ஸ் ஆனா கூட இப்படி தான் ஒதுக்கி பேசுவியலா?" என்று கேட்ட அந்த பெண்மணியை முறைத்தவர் எதுவும் பேசாமலே உள்ளே வந்தார். அவற்றைக் கேட்டவளோ மனம் வேதனையில் வாட நேயனை வெகுவாகத் தேடினாள். அவனோ காலையில் செல்பவன் இரவு தாமதமாகவே வந்துக் கொண்டிருந்தான்.

இதற்கிடையில் ஜோனீஸ்க்கு காலாண்டுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்க அதற்காக அவனைத் தயார் செய்ய, ஒவ்வொன்றாக அவனுக்கு புரியும் வகையில் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் இளவேனி. ஜோவீஸை பார்த்துக் கொள்ளுமாறுச் சொல்லி அவனை கிளாரினோடு விட்டிருந்தாள்.

அவரோ பத்து நிமிடத்திற்கு ஒரு முறை இளவேனியின் பெயரை ஏலமிட்டுக் கொண்டிருந்தார் எனலாம். ஏனெனில் ஜோவீஸ் சுட்டிக்குழந்தையென்பதால் அவன் ஓரிடத்தில் இருந்து விளையாடாமல் அங்கும் இங்கும் ஓட, உட்கார்ந்தே பழக்கபட்ட கிளாரினுக்கு அவன் பின்னே சென்று விளையாட்டு காட்டுவதற்கு ஆர்வம் இல்லை.

இளவேனிக்கோ பெரியவனுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதா? பொடியனை பார்த்துக் கொள்வதா? இரவு உணவு தயார் செய்யவா? என்று அழுத்தம் ஏற்பட இருவரையும் அடி விளாசி விட்டாள். குழந்தைகள் இருவரும் அழுதுக் கொண்டிருக்க இரவு உணவை தயார் செய்துக் கொண்டிருந்தாள் இளவேனி. சாப்பிட வைத்து சுத்தம் செய்து இருவரையும் உறங்க வைக்கும் போது இருவரிடமும் மன்னிப்புக் கோரினாள் இளவேனி. இருவரும் அவளைக் கட்டிக் கொண்டனர்.

அன்றிரவு அவளது மனம் குற்ற உணர்ச்சி எனும் அரக்கனிடம் மாட்டிக்கொண்டு அல்லாடியது. இனி இந்த தவறை செய்யவேக் கூடாது என்று முடிவுச் செய்தாள். அவள் நினைத்தால் போதுமா? காலமும் சூழலும் அவளுக்கு துணை நிற்க வேண்டுமே?

அன்று அரசு உத்தரவின் பெயரில் 'கேஸ் கம்பெனி' மூலமாக அதிகாரிகள் இருவர் வீடு வீடாகச் சென்று 'கேஸ் மற்றும் சிலிண்டர்'களை பார்வையிட வந்தனர். கேஸ் ஸ்டவ், கேஸ் வயர், சிலிண்டர், ரெகுலேட்டர் என ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்ந்து அதன் திறனையும், காலாவதியையும் சோதித்தனர். கேஸ் ஸ்டவ் 'ஆன்' செய்து அதன் எரிதிறனை சோதித்தனர். லேசாக 'கேஸ் கசிவு' இருந்தது போல் வாசனை வந்தது.

"சிலிண்டர் நேரத்திற்குக்கு கொண்டு வராங்களா மேடம்?"

"இல்லை சார் முன்னபின்ன ஆகும். அந்த பையன் காலி சிலிண்டரை முன்னவே தூக்கிட்டு போயிடுவான் ஆனால் நேரத்துக்கு தராமல் இழுத்தடிப்பான்"

"அப்படி எல்லாம் கொடுக்க கூடாது மேடம். நீங்க பதிவு செய்யும் போது மட்டும் தான் சிலிண்டரை எடுக்க அனுமதிக்கனும். இது இல்லீகலான வேலையாக கருதப்படும்"

"சரிங்க சார்"

"சிலிண்டர் வயர் மட்டும் எக்ஸ்பையர் ஆகிடுச்சி மேடம். ஐந்து வருஷம் தான் கேரண்டி உங்களுக்கு எட்டு வருஷம் ஆகுது. உடனே மாத்திடுங்க. கம்பெனிக்கு போன் பண்ணி சொன்னால் உடனே வந்து மாத்தி கொடுத்துடுவாங்க. ப்ரீ சர்வீஸ் தான் மேடம்"

"ஓகே சார் அதனால் தான் கேஸ் லீக் ஆகுதா?"

"இருக்கலாம் மேடம். அப்புறம் எக்ஸ்ட்ரா சிலிண்டரை இப்படி கிச்சன்லயே சேர்த்து வைக்க கூடாது மேடம். ப்ரிட்ஜ்ஜையும் சிலிண்டர் பக்கத்தில் வைக்க கூடாது."

"ஓகே சார்"

இந்த சேவைக்கு 250 ரூபாய் வாங்கிக் கொண்டு அதற்கான ரசீதும் அளித்து விட்டு, மேலும் ஐந்து வருட உத்திரவாதச் சான்றிதழும் அளித்து, 'இலவச அடுப்பு சர்வீஸ் கூப்பனையும்' தந்து கையெழுத்து வாங்கிக் கொண்டுச் சென்றனர்.

அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்ததால் சுட்டிகள் இருவரும் கூடத்திலுள்ள கிளாரின் படுக்கையில் ஏறிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை விரட்டிக் கொண்டிருந்தார் கிளாரின்.

"கட்டிலை உடைச்சிராத போ அங்க போய் விளையாடுங்கடா எந்நேரமும் ஆட்டம் தான். ச்சைக் கொஞ்சம் நேரம் நிம்மதியா படுக்க முடியுதா?" என்றவர் அலைபேசியில் 'மல்லி' சீரியலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இரு பிள்ளைகளும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு வர இருவரையும் அணைத்துக் கொண்டவள் அறையில் இருந்த தேவையற்ற பொருட்களை எடுத்து வெளியே வீசியவள் சுத்தம் செய்து பிள்ளைகள் விளையாட ஏதுவாக அமைத்துக் கொடுத்தாள். மனமோ கசந்தது. அன்றிலிருந்து நேயனிடம் காலையில் சண்டையிட ஆரம்பித்தாள் 'வீட்டில் எதையும் கவனிக்கவில்லை' என்று.

அன்று சனிக்கிழமை விடுமுறை நாள் காய்கறிகள் வாங்கி வந்தவள் தண்ணீர் லாரியின் 'ஹார்ன் சத்தம்' கேட்டு காய்கறிகள் கொண்டு வந்த பைகளை கூடத்தில் வைத்து விட்டு, அடித்து பிடித்து ஓடினாள் குடங்களை எடுத்துக் கொண்டு. ஏனெனில் கூட்டம் கூடினால் எப்படியும் ஒரு சண்டை நடக்கும் அதை தவிர்க்கவே ஓடோடினாள்.

தண்ணீர் பிடித்து வைத்து விட்டு, 'மீன் மார்க்கெட்' சென்று வறுவலுக்கு மத்தி மீனும், குழம்புக்கு நெத்திலி மீனும் வாங்கியவள் வீட்டுக்கு வந்து சுத்தம் செய்து குழம்பு வைக்க ஆரம்பித்தாள். கூடத்திலோ காய்கறிகள் அடங்கிய பைகள் கேட்பாரின்றி வாடிக்கிடந்தன. கிளாரின் வாசலில் அமர்ந்து அவர் வயது தோழியரிடம் புறணி பேசிக்கொண்டிருந்தார். பார்த்ததும் சுறு சுறுவென்று கோவம் வந்தாலும் பொறுமையாக அதைப் பிரித்து பிரிட்ஜில் எடுத்து வைத்தவள் சமையலைத் தொடர்ந்தாள்.

வேலைகளை முடித்தவள் ஓய்வாக அமர குழந்தைகள் இருவரும் அவள் மடி மீதேறி அமர்ந்து

"எங்கம்மா" ஜோனீ

"என்ட அம்மா" ஜோவீ

சண்டையிட அவளது மனநலமும் , உடல்நலமும் அப்போதைய சூழலில் எரிச்சல் மண்டி இருக்க சட்டென்று குழந்தைகளிடம் கோவத்தைக் காட்ட ஆரம்பித்தாள். குழந்தைகள் வந்த பின்னரே அவளது மனநலம் அதிகமாக அடிவாங்கியதாக எண்ணத் தொடங்கியிருந்த தருணம் அது.

ஆர அமர்ந்து ஒரு காஃபியை மிடறு மிடறாக ரசித்து அருந்த முடியவில்லை. பொறுமையாக அமர்ந்து உண்ண முடியவில்லை. அவள் எப்போது சாப்பிட அமர்கிறாளோ அந்த நேரத்தில் தான் சுட்டிகளுக்கு டாய்லெட் அவசரமாக வரும். அதன் பிறகு எங்கே சாப்பாடு இறங்கும்? பெயருக்கு கொரித்து விட்டு மீதியைக் குப்பை டப்பாக்கு தானமளிப்பாள்.

சில நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சாப்பாட்டில் தண்ணீர் ஊற்றி விட்டு ஓடி விடுவான் பொடியன். ஓய்வெடுக்கலாம் என்று படுத்திருந்தால் அவளது வயிற்றில் திடூமென ஏறி குதித்திடுவான். அலைபேசியை கீழே தூக்கி எறிந்துவிட்டு "அச்சோ உடைஞ்சி" என்று கீறல்களை பார்த்து பாவம் போல் முகத்தை வைத்துக் கொள்வான்.

பிரிட்ஜில் இருக்கும் தேங்காயை கடித்து சாப்பிட்டு விடுவான். அரிசி டப்பாவை திறந்து அதை கைகளில் எடுத்து வீடெல்லாம் சிந்தி வைப்பான். பாத்திரங்களை எடுத்து கரண்டியை வைத்து 'கொட்டு அடிக்கிறேன்' பெயரில் அடிப்பான். சப்பாத்தி கட்டையை எடுத்து மாவு உருட்டுவதாக சொல்லி தேய்ப்பான். மடித்த துணிகளைக் களைத்து போட்டு ஓடி விடுவான். சும்மாவே அலைபேசியை காதில் வைத்து பேசிக்கொண்டு இருப்பான்.

இவையெல்லாம் ரசிக்க கூடிய குறும்புகள் தான் என்றாலும் அந்த வீட்டில் அவள் நடத்தப்படும் முறையினால் அதாவது தனித்தே வீட்டின் வேலைகளையும், குழந்தைகளையும் பார்த்துக் கொள்வது அவளுக்கு அழுத்தங்களை தந்தது.

ஆறுதல் தந்து தேறுதல் தரக்கூடியவனோ கேட்பாரின்றிச் சென்று வந்துக் கொண்டிருந்தான். அவளது அழுத்தங்கள் சினங்களாக உருவெடுக்க அதை குழந்தைகள் மீது காட்டத் தொடங்கினாள் அவளையறியாமலே.

அன்று அப்படிதான் ஜோனீஸ் பேப்பர்களை கிழித்து கப்பல் செய்து, ராக்கெட் விட்டு என்று விளையாடிக் கொண்டிருக்க,

"வீடு மாதிரியா இருக்கு ச்சைக்... அவ்வளவும் பேப்பரா கிழிச்சிப் போட்டா வீட்டுக்கு தரித்திரம் தான் வந்து சேரும்" என்று வசைபாடிக் கொண்டிருந்த கிளாரின் நிறுத்தாமல் அதையேச் சொல்லிக் கொண்டிருக்க, பெல்ட்டை எடுத்தவள் இருவரையும் விளாசினதில் கால்களில் இருவருக்கும் பெல்ட்டின் அடையாளங்கள் வீக்கமாக பரிசளித்திருந்தன. அதைப் பார்த்து ஜோனீஸ் கேவிக் கேவி அழுதவன்

"ஏம்மா இப்படி அடிக்கிறீங்க? நீங்க இப்பலாம் ரொம்ப கோவப்படுரீங்க. நாங்க வேறு எங்க போய் விளையாட போவோம்? விளையாட என்ன இருக்கு? எப்போதும் பேப்பர் எடுத்து விளையாடினால் என்ன ரூல் சொல்லி இருக்கீங்க? விளையாடி முடிச்சதும் பேப்பர் எல்லாம் எடுத்து குப்பையில் போடனும் தானே? ஆனால் நாங்க விளையாடி முடிக்கவே இல்லையேம்மா? " என்று கேவி அழுதான்.

பொடியனோ அழுத முகத்தை கைகள் கொண்டு மூடி விரல்களின் நடுவே பார்த்துக் கொண்டிருந்தான். இளவேனி அவனைப் பார்த்ததும் இரு கைகளையும் இதய வடிவாக வளைத்து 'லவ் யூ' என்றான். குற்ற உணர்ச்சி தலைத் தூக்க சத்தமின்றி அழுதவள் இருவரையும் அணைத்துக் கொண்டாள்.

"சாரி தங்கங்களா என்னை மன்னிச்சிடுடா அம்மா இனி அடிக்க மாட்டேன்" என்றவள் முத்தம் வைத்தாள் பிள்ளைகளுக்கு.

"அம்மா அழக்கூடாது அப்புறம் நானும் அழுவேன்" ஜோனீஸ்

"நானு அவும் நானு அவும்" ஜோவீஸ்

"இல்லை இல்லை அம்மா அழல" என்றவள் முகத்தை அழுந்தத் துடைத்து விட்டு ஊறவைத்த அரிசியையும் உளுந்தையும் இட்லி மாவாக அரைக்க அடுத்த வேலையைத் தொடர்ந்தாள்.

அன்றிரவு அதீத மன உளைச்சல் மற்றும் உடல் உழைப்பினால் சோர்வு ஏற்பட காய்ச்சல் அண்டியது இளவேனியை. மறுநாள் ஞாயிறு அன்று ஆலயம் கூட செல்ல எழ முடியவில்லை. ஆனால் பிள்ளைகள் எழுந்தால் பசியில் அழுவார்களே என்று எழுந்தமர்ந்தாள். தலைச் சுற்றியது. திரும்பிப் பார்த்தாள் அவளது குழந்தைகள் ஆழ்ந்த உறக்கத்தில்.

மெல்ல எழுந்தவள் கிச்சன் செல்ல அங்கு இட்லி ஈடுகள் ஊற்றப்பட்டு இட்லி பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. 'ஓ இட்லி அவிக்க தெரியுமா?' என்று மாமியாரை மனதோடு வஞ்சப்புகழ்ச்சிப் பாடியவள், பால் பாத்திரத்தில் பாலை ஊற்றியவள் அதை காய்ச்சி வைத்தாள். குடிப்பதற்கு வெந்நீர் சூடாக்கி வைத்தவள் அதற்கு மேல் நிற்க முடியாமல் அறைக்கு வந்து அமர்ந்தாள்.

இயற்கை உபாதை 'என்னை வெளியேற்று' என்று மூளைக்கு சமிக்ஞை செய்ய மூளையின் கட்டளையை உடல் ஏற்க முடியாதளவுக்கு உடல்வலி பின்னியது. மணியோ எட்டு ஆக , இதற்கு மேல் எழ வில்லை என்றால் சிறுநீரகம் அழ ஆரம்பித்துவிடும் என்றெண்ணியவள் சுவற்றில் கையூன்றி மெல்ல ஓய்வறைச் சென்று வந்தவள் மீண்டும் அறைக்கே செல்ல எத்தனிக்க

" ஏய் வேனி நில்லு நீ. என்ன நினைச்சிட்டு இருக்க நீ? காலையில் எழுந்து என்ன வேலை செஞ்ச? உன்பாட்டுக்கு ரூம்க்கு போற. பசி எடுக்குது சட்னி கூட அரைக்க முடியாதா?"

"எனக்கு உடம்பு முடியலை அத்தை ஜொரம் அடிக்குது" என்று மெல்லியதாக அவள் பேச நேயன் சத்தம் கேட்டு எழுந்து வந்தான்.

"அதுக்கு நாங்க சாப்பிட வேணாமா?"

"இப்ப கூட வாயைத் தொறக்க மாட்டல்ல நீ ?" இளநேயனை பார்த்து வினவினாள்

"என்னடி?"

"என்ன என்னடி? ஏன்டா எனக்கு உடம்பு முடியலைனு சொல்றேன் இப்ப கூட நான்தான் வந்து சமைக்கனுமா? வேலைக்காரிக்கு கூட லீவு உண்டு ஆனால் இங்கு நான் சம்பளமே இல்லாத வேலைக்காரி மாதிரி இருக்கேன். ஒரு காய்கறி உனக்கு வாங்கி வந்து தர முடியாதா?"

"ஆம்பளைங்க காய்கறி கடைக்கு போய் நின்னு காய் வாங்குவாங்களா? எம்புள்ள அதலாம் செய்ய மாட்டான். செய்ய தெரியாது அவனுக்கு. உன்னை சட்னி தானே வைக்க சொன்னேன்" என்று நேயன் பதிலளிக்கும் முன்னர் கிளாரின் பேசினார்.

"ஹோலி ஷிட். ஆம்பளைங்க இத செய்ய கூடாது அத செய்ய கூடாது அங்க போக கூடாது இங்க போக கூடாது வேறு என்ன தான் ஆம்பள செய்வான்?" கொதித்து விட்டாள் இளவேனி.

"ஒரு சட்னி வைக்க சொன்னதுக்கா இம்புட்டு பேச்சு?" மீண்டும் சட்னியிலே வந்து நின்றார் கிளாரின்.

"வாயை நல்லா பசைப் போட்டு ஒட்டி வச்சிக்கோ நேயா. தப்பித்தவறி திறந்திடாதே. நல்லா நம்ப வச்சு கழுத்தறுத்துட்டல்ல நீ. நம்பிக்கை துரோகி"

"வேனி சும்மா இரு பிளீஸ் டெய்லி காலாங்காத்தால சண்டை போடுற எதுக்கு சண்டை போடுற என்ன காரணம்னே எனக்கு தெரியலே. எனக்கு நிம்மதியே இல்லை இங்கு" நேயன் மனம் கசந்து பேச,

"செத்துப்போ அப்பவாது உனக்கு நிம்மதி கிடைக்குதானு பாப்போம். எந்நேரமும் அவென் கூட சண்டை. வேலைக்கு போய்ட்டு வர்ர ஆம்பள நிம்மதியா சாப்பிட வேணாமா? ஒரு சட்னி அரைக்க சொன்னதுக்கு என்னா வரத்து வாரா பாரு. ஒரு மரியாதை கிடையாது"

"ஆஆஆஆ ஆஆஆஆ சட்னி தானே எல்லாமே வைக்கிறேன் " என்றவள் கடகடவென சட்னி அரைத்து தாழித்து வைத்தவள், சாதத்தையும் வடித்து எளிமையாக மிளகு ரசம் செய்தவள் அதன் பின்பே அறைக்கு வந்தாள். நடந்தவை அனைத்தும் பார்த்த குழந்தைகளிடம் தனக்கு 'காய்ச்சல்' என்றும் 'கிட்டே வராதே' என்றும் சொல்ல

" ஏன்மா இப்படி பேசுரீங்க? கிட்ட வந்தா என்ன ஆக போகுது? காய்ச்சல் தானே வரும் பராவல்ல நீங்க என் அம்மா. நான் வரதான் செய்வேன்" என்று அணைத்துக் கொண்டான். கண்கள் கசிந்தது. மெல்ல விலக்கியவள் அருகிலுள்ள மெடிக்கலில் மாத்திரை வாங்கி வரச் செய்து போட்டவள் பொடியனை ஜோனீஸின் கண்காணிப்பில் விட்டவள் நிம்மதியற்ற உறக்கத்தில் ஆழ்ந்தாள். மீண்டும் எழும் போது 1.30 ஆகியிருந்தது.

"தங்கம் எழுப்பியிருக்கலாம்லா ஜோவீ ரொம்பச் சேட்டை பண்ணாணா?"

"இப்பதான் அழ ஆரம்பிக்கான் அவனுக்கு பசிக்குது போலம்மா"

"சரிடா தங்கம் நான் சாப்பாடு வச்சு தரேன்" என்றவள் ஓய்வறைச் சென்று வந்தவள் அப்பளம் பொரித்து இருவருக்கும் கொடுத்து விட்டு தானும் அமர்ந்து சாப்பிட்டாள். கிளாரின் அலைபேசியில் 'சிங்கப் பெண்ணே' பார்த்துக் கொண்டிருந்தார்.

பிள்ளைகள் இருவரிடமும் நிறைய பேசினாள். தன் மன ஆதங்கத்தை வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்தாள். தனக்கென்று "மீ டைம்" கூட இல்லை என்று வருத்தப்பட்டாள். அன்றிலிருந்து ஜோனீஸ் தாயுமானவனாக மாறினான் இளவேனிக்கும் ஜோவீஸ்க்கும். அவனால் முடிந்த சிறு உதவிகள் கடைகளுக்கு செல்வது, தம்பியைப் பார்த்துக் கொள்வது என்று தன்னை மெருகேற்றிக் கொண்டான் பத்து வயதேயுடைய ஜோனீஸ்.

வேலைக்கு தானே செல்ல அனுமதி தரவில்லை, வீட்டிலே ஏதாவது செய்யலாம் என்று நினைத்தவள் அறையின் மூலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தையல் இயந்திரத்தை வெளியே எடுத்தவள் சுத்தம் செய்து எண்ணெய் ஊற்றி தையல் விழுகிறதா என்றுச் சோதித்தாள்.

அதுவும் நன்றாக வேலைச் செய்ய வீட்டின் வாசலில் "இங்கு புடவை மற்றும் நைட்டிக்கு ஓரம் அடித்து தரப்படும்" என்று எழுதி தொங்கவிட்டாள். அதை எழுதி வடிவமைத்தது ஜோனீஸ். அதில் அவளுக்கு கொள்ளை சந்தோஷம்.

அதை நேயன் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தையல் தைப்பதில் நேரம் செலவிடுவதால் குழந்தைகளிடம் நேரம் செலவிடும் நேரம் குறைந்தது. எனவே ஜோவீஸ்

"தக்காத தக்காத" என்று அழுவான். ஆனால் தைத்த பின்னோ 'நான் கொண்டு போய் அவரிடம் கொடுத்து விடுகிறேன்' என்று ஓடி போய் கொடுத்து விட்டு மறக்காமல் காசினை வாங்கி வந்து விடுவான்.
 

Vishakini

Moderator
Staff member
தையல் இயந்திரம் முதல் நிலையான பெடலிங் இயந்திரமே. ஆனால் அறையிலே மின்விசிறியின் கீழே அமர்ந்து தைப்பதால் 'கரண்ட் பில் அதிகமாக வருகிறது' என்ற குற்றச்சாட்டை வைத்தார் கிளாரின்.

'கரண்ட் பில் ஜாஸ்தியாக வருகிறது'

'கேஸ் சீக்கிரமே காலியாகுது நாங்க ரெண்டு மூணு மாசம் வரைக்கும் வச்சிருப்போம்'

'கேன் வாட்டர் ஒரு வாரம் வரைக்கும் இருக்கும் இப்ப ரெண்டே நாள்தான் எங்கே தான் போவுமோ தெரியாது'

'ஒன்றரை படி அரிசி போட்டா ஒரு வாரம் வரைக்கும் இட்லி மாவு ஓடும்'

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லிச் சொல்லி மனதளவில் இளவேனியின் மனதை நொறுக்கிக் கொண்டிருந்தார். இதை எல்லாம் அறிந்தும் நேயன் வாய் திறக்காமல் இருப்பதுதான் பேரதிசயம்.

பலூனை ஊதிக் கொண்டேயிருந்தால் அழுத்தம் தாளாமல் அது வெடித்து விடும். ஒவ்வொரு பலூனுக்கும் அதனதன் திறனுக்கு ஏற்ற சக்தி இருக்கும். அதற்கு மேல் போகும் போது தான் உடைந்துவிடும். அப்படி ஒரு சூழலும் வந்தது இளவேனிக்கு.

இரவெல்லாம் அலைபேசியில் 'சீரியல்' பார்த்துக் களைத்தவர் பகலில் உறக்கத்தை தழுவியிருந்த நேரம் ஜோவீஸ் "பாத்தி பாத்தி பாத்தி" என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தான். அவரோ எழுந்தபாடில்லை இவனோ விடுவதாயில்லை.

"ஏய் போ தூங்க விடாமல்" என்று முணுமுணுத்துக் கொண்டவர் திரும்பி படுத்துக் கொண்டார். மனம் வேதனையில் புழுங்கியது. மறுநாள் நிலோஃபர் வீட்டிற்கு வந்தாள். அவளுக்கு இரண்டு பிள்ளைகள். இரு குழந்தைகளையும் "என் தங்கம் என் பட்டு" என்று கொஞ்சியவர் அவர்களை கடைக்கு அழைத்துச் சென்று துணிமணிகள், நொறுக்கு தீனிகள் வாங்கிக் கொடுத்தார்.

ஜோனீஸ்க்கு விவரம் தெரிந்ததால் ஒதுங்கி நின்றுக் கொண்டான். ஆனால் ஜோவீஸ் எனக்கு எனக்கு என்று பின்னோடச் சென்று வாங்கிச் சாப்பிட்டான். இளவேனியை மனதளவில் பாதித்த பெரும் விஷயம் இதுவே.

அன்றிலிருந்து மனமோ படபடவென்று அடித்துக் கொண்டது. என்னவென்று சொல்ல முடியாத பாரம் இதயத்தில் குடியேறியது. விழியோரம் துடிப்பு அதிகரித்து தானாகவே கண்ணீர் வழிந்தது. ஏன் என்று தெரியாமல் இது எதற்கான அறிகுறி என்று புரிந்துக் கொள்ள இயலாமல் மனதோடு அழுதாள்.

வாரத்தில் ஒரு நாளாது மதுவை நாடவில்லை என்றால் நேயனுக்கு உறக்கம் வராது போல என்பது மாதிரி வாரயிறுதியில் மதுவின் ஆதிக்கத்தோடு தான் வீடு வந்துச் சேர்வான். இளவேனியோ என்னச் செய்வது என்று தெரியாமல் தவித்தாள். அந்த நேரத்தில் அவள் வாசித்த 'உன்னில் இதயம் அளாவுதே' நாவலில் ஒரு காட்சியை வாசிக்க நேரிட்டது. வாசித்தவள் விழுந்து விழுந்து சிரித்து அதை நேயனிடமும் காட்டினாள். அவனோ அவளை முறைத்தவன்

"நல்ல கதை தான் வாசிக்கிற போ இப்படி தான் ஹஸ்பண்ட வெளக்கமாறால அடிப்பாங்களா?"

"அவள் என்ன சும்மாவா அடிக்கிறா? புருஷன் குடிச்சிட்டு வந்தான். சொல்லிப் பாத்தா கேக்கல. துடைப்பத்தை எடுத்து விளாசிட்டா பாரு செம்ம சீனு போடு அப்படி தான் அதுக்கு அப்புறம் அவன் குடிக்கலயே" என்று அவனை ஆழ்ந்துப் பார்த்தாள். அவனோ முகத்தை திருப்பிக் கொண்டு வெளியேறினான்.

அன்று வேலை அனைத்தும் முடித்து ஆசுவாசமுற்று அமர்ந்தவள் தண்ணீர் போத்தலை எடுத்து தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க, அவளது போத்தலை மேலே தூக்கி விட்ட குறும்பு கார ஜோவீஸ் தண்ணீர் முழுவதும் அன்னையின் மீது சிந்தியதில் பயந்துப் போனான். திடீரென தண்ணீர் அதிகமாக வாயில் விழுந்ததும் மூக்கில் ஏறி நுரையீரலை தஞ்சம் அடைந்து இரும ஆரம்பித்தாள். நெஞ்செல்லாம் எரிந்தது. 'ஆஆஆஆ' என்று கத்த வேண்டும் போல் இருந்தது. தான் அடித்து விடுவோமோ என்று பயந்து நின்ற ஜோவீஸை ஒரு பார்வை பார்த்தவள் எழுந்து குளிக்கச் சென்றாள். அன்றைய இரவுக்காக காத்திருந்தாள் நேயனின் வருகைக்காக.

அவன் வந்ததும் அறையின் கதவினை தாழ்ப்பாள் போட்டவள் அவனை ஓடி வந்துக் கட்டிக் கொண்டாள்.

"என்னடி? நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன். விடுடி பசங்க எழுந்துக்க போறாங்க"

"நான் உனக்கு சலிச்சிப் போய்ட்டேனா நேயா?"

"என்னடி இது பேச்சு?"

"சொல்லு நான் உனக்கு சலிச்சிப் போய்ட்டேனா? இல்லை உன.. உனக்கு வேற யாரு..."

"ஏதாவது சொல்லிட போறேன் அம்மு. ஒன்னையே வச்சு பாத்துக்க முடிலயாம் இதுல ரெண்டாவது ஒன்னா? உனக்கு ஏன் இப்படி லூசு மாதிரி தோணுது"

"நான் ஒன்னும் சந்நியாசியா வாழ இங்க வரலடா நேயா. ஆனால் நீ அப்படி தான் நடந்துக்கிற. ஒரு முத்தம் கொடுத்து எத்தனை மாசம் ஆகியிருக்கும் ஞாபகம் இருக்கா? கடைசியா எப்ப நீ 'ஹக்' பண்ண சொல்லு. தனித்தனியா வாழ எதுக்குடா ஒரு வீடு"

"அம்மு பிளீஸ் ஆபிஸ்ல ஏற்கனவே பல பிரச்சனை போகுது நீயும் என்னை கடுப்படிக்காதடி. புரியுது எனக்கு. கொஞ்ச நாள் பொறு இந்த பிரச்சினை எல்லாம் சால்வ் ஆனதும் நாம வெளியே போகலாம். நான் இங்கதானே இருக்கேன் எங்கே போக போறேன்"

"வாழ வேண்டிய வயசுல தான்டா வாழ முடியும். இந்த இளமை போயிருச்சினா திரும்ப வராது. அப்ப ஓடிபிடிச்சி நம்மால் விளையாட முடியாது. ஒரு அணைப்பு போதும் டா. உன் தோளில் சாய்ஞ்சி கதை பேசி எத்தனை நாள் இல்லை இல்லை மாசம் ஆகுது தெரியுமா? உன் ஸபரிசத்தை வாசம் பிடிக்கனும்னு ஆசையா இருக்குடா. உன் நெஞ்சில முத்தம் வைக்கனும் உன் கையை பிடிச்சிட்டு தூங்கனும் இப்படி நிறைய ஆசை இருக்கு"

"உழைக்கிற வயசுல தான் உழைக்கவும் முடியும் இப்ப நீ சொன்னதுலாம் எனக்கும் தோணிருக்கு அம்மு கொஞ்சம் பொறு"

"இன்னும் எத்தனை நாள் தான்..." சத்தத்தை உயர்த்தி பேச

"சத்தம் போடாதடி"

"ஓ ஹோலி ஷிட் என்னால முடியலடா" என்றவள் தரையில் மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

"ப்ச் வேனி" என்றவன் அவளருகே அமர்ந்தான்.

"சரி சொல்லு என்ன பேசனும் உனக்கு?"

"உன் பசங்க என்னை ரொம்ப படுத்துராங்கடா" என்றவள் அவர்களது குறும்புகளை சிரிப்பினூடேச் சொன்னாள். அவளது கன்னம் தழுவிய கண்ணீரைத்து துடைத்தான் நேயன்.

"ஒரு பாத்ரூம் கூட போக விட மாட்ரான் அங்கயும் வந்து அம்மானு கதவ தட்டுரான் என்ன செய்ய சொல்ற சொல்லு. இன்னைக்கு தண்ணீ குடிச்சேன் பாட்டிலை மேலே தூக்கி விட்டு தண்ணீ எல்லாம் லங்க்ஸ்(lungs) உள்ள போயி ஐயோ மிடிலடா"

"பசங்க அப்படி தான் இருப்பாங்கடி"

"உங்கம்மா?"

"புரில?"

"உங்கம்மா ஏன் இப்படி இருகாங்க? உன் தங்கச்சி புள்ளைங்க வந்தா ஸ்னாக்ஸ் வாங்கி தராங்க தங்கம் வெல்லம்னு கொஞ்சுராங்க ட்ரெஸ் வாங்கி கொடுக்றாங்க"

"அப்ப டெய்லி நம்ம பசங்கள பாத்தா எரிச்சல் வருமா?"

"ப்ச் என்னடி சொல்ல வர்ர?"

"வேலை தான் செய்ய முடியலை கால் வலி முட்டி வலினு உக்காந்துகிறாங்க. நான் வேலை பாக்கும் போதாது கொஞ்சம் நேரம் பசங்கள பாக்கலாம்லா? எந்நேரமும் போன்ல சீரியல்லயே கட்டிட்டு அழுதா வீடு மாதிரி இருக்குமா? "

"நீ ஏன் அவங்க பாக்கனும்னு எதிர்பாக்கிற? நம்ம பசங்கள நாம பாப்போம். நீ வீட்டில் தானே இருக்க? பசங்கள பாக்கிறத விட என்ன பெரிய வேலைடி இருந்திட போகுது"

"நேயா?"

"வேலை செய்யலனா விடு உனக்கு முடிஞ்சத செய்டி"

சரியென்றவள் அவனருகில் படுத்துக் கொண்டாள் உறக்கம் தூர போனது. மறுநாள் காலையில் அவளோட எழுந்தவன் அவளுக்கு சமையல் செய்ய உதவிகள் செய்தான்.

அவளது விழியோரம் துடிப்பு அதிகம் ஆகி கண்ணீர் தானாக வழிந்தது. மனதிலோ ஏதோவொரு ஊசலாட்டம் படபடப்பைத் தந்தது. இருப்பினும் அதை உதாசீனம் செய்தவள் அவனோடு வேலைகளைப் பகிர்ந்துக் கொண்டு சீக்கிரமே சமையலை முடித்தவள், மகன்கள் முழிப்பதற்குள் துணிகளை அலசி வந்தாள். அன்று பகல் பொழுது டென்ஷன் இன்றி நிதானமாகக் கழிந்தது.

மாலை நேயன் வந்ததும் பிள்ளைகளை கடைக்கு அழைத்துச் சென்று பானிபூரி, சாண்ட்விச் வாங்கி தந்து, இளவேனிக்கு பிடிக்கும் என்று மரவள்ளி கிழங்கு சிப்ஸ் வாங்கி, தன் அன்னைக்கு மிளகாய் பஜ்ஜி வாங்கியவன் வீடு வந்தான். இளவேனிக்கோ அளவில்லா சந்தோஷம். ஆனால் மனதின் பாரம் குறையவில்லை படபடப்புத் தொடர்ந்தது.

அன்றைய இரவில் மெத்தையில் நால்வரும் ஒன்றாக படுத்துக் கொண்டு கதைகளை பேசி சிரிக்க அந்தக் காட்சியே கவிதையாக மனதில் பதிந்தது இளவேனிக்கு.

"ப்பா நானு கூலுக்கு போதேன் முட்டை தந்தா"

"முட்டை தந்தாங்களாடா என் தங்ககுட்டிக்கு" என்றவன் வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்தான்.

"ப்பா எனக்கும்" என்று ஜோனீஸ் கிச்சு கிச்சு மூட்ட சொல்லி சிரித்தான். அவர்கள் உறங்கியதும் இருவரும் தரையில் படுத்துக் கொண்டு கதை பேசி சிரித்தனர்.

"ஐ லவ் யூ நேயா"

"லவ் யூ டூ டி அம்மு"

அந்த நிமிடங்கள் அடுத்து அவர்களது வசம் இல்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரது மனமும் உடலும் நெருங்க ஆரம்பித்தன. மென்மையும் வன்மையுமாக அவளுள் ஆதிக்கம் செலுத்தியவன் சந்தோஷ கடலில் நீந்த வைத்தான். மறுநாள் நடக்க இருக்கும் அனர்த்தங்களோ அவர்களைப் பார்த்து சிரித்தது.
 
Top Bottom