• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நேசமுகை உதிரும் இளவேனில் - 15 ( இறுதி அத்தியாயம் )

Vishakini

Moderator
Staff member
நேசமுகை - 15

நான்கு மாதங்கள் கடந்த நிலையில் திருநெல்வேலியின் உடையார்பட்டி கிராமத்தில் அந்த வீட்டில் காலையிலேயே போராட்டம் தொடங்கியது.

"பாட்டி விடுங்கன்னு சொல்றேன்லா. நான் என் அம்மாவ விட்டு எங்கேயும் வர மாட்டேன். அம்மா கூட தான் இருப்பேன். எனக்கு என் அம்மா வேணும்" என்று ஜோனீஸ் கத்திக் கொண்டிருந்தான்.

"ஜோனீ தங்கம் அம்மாவை நான் பாத்துகிறேன்டா நீ ஸ்கூல் போடா கண்ணு. அப்பதான் அம்மா, தம்பியை நீயே பாக்க முடியும்" கவினி ஜோனீஸிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் பள்ளி செல்வதற்கு.

"முடியாது அவனை நீங்களே பாத்துகோங்க நான் என் அம்மாவ விட்டு எங்கேயும் வர மாட்டேன் போங்க வெளியே போங்க" என்றவன் அன்னை படுத்திருந்த படுக்கையின் அருகில் அமர்ந்துக் கொண்டான்.

அன்று கியாஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்ததில் இளவேனிக்கு காயங்களும், புகையால் உண்டான மூச்சுத் திணறலும், அதிர்ச்சியும் அவளை 'ஆழ்மயக்கத்தில்' தள்ளியிருந்தது.

சத்தம் கேட்டு பிள்ளைகள் இருவரும் கூடத்திற்கு வர புகையால் அவர்களும் மயங்கியிருந்தனர் காயங்களின்றி. கிளாரின் நிலோஃபரின் வீட்டிற்கு சென்றிருந்ததால் தப்பியிருந்தார்.

வேலை முடித்து வந்த நேயன் ஈருருளியை தரிப்பிடத்தில் நிறுத்தியவன் அலைபேசியில் குழறியபடி பேசிக்கொண்டு இருக்கும் போது தான் "டமார்" என்ற சத்தத்துடன் சிலிண்டர் வீட்டின் கூரையைத் தாண்டி மேலே பறந்து போய் வெடித்திருந்தது. அன்றும் அவன் மதுவின் ஆதிக்கத்துள் தான் இருந்தான்.

பதறியடித்து வீட்டினுள் சென்றவன் பிள்ளைகள் கூடத்தில் மயங்கி கிடப்பதையும், கொஞ்சம் தள்ளி இளவேனி குருதிக் காயங்களுடனும் மயங்கி இருப்பதையும் பார்த்து பயந்துக் கதறினான்.

"ஏஏஏய் வ்வே...னி டி அம்மே... அம்மு என்னாச்சுடி ஐயோ எழுந்திரிடி செல்லம்... யாராவது வாங்களேன் ஹெல்ப் ..."

வெடித்த சத்தமும், நேயனின் கதறலும் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து மருத்துவமனையில் அனுமதிக்க உதவினர். சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றதில் உயிர் பிழைந்திருந்தாள், ஆனால் 'உணர்விழந்த மயக்க நிலை'யை அடைந்திருந்தாள் இளவேனி.

பிள்ளைகள் இருவரும் ஆபத்தின்றி கண் முழித்திருந்தனர். ஆனால் ஜோனீஸ் தன் அன்னைக்கு நடந்த விபத்தின் அதிர்ச்சியில் கொஞ்சம் சித்தம் கலங்கி நின்றிருந்தான். தன் தகப்பனை அன்னை அனுமதிக்கபட்ட மருத்துவ அறையில் கண்டதும் கத்த ஆரம்பித்தான்.

"வெளியே போங்க. என் அம்மாவை விட்டு போங்க. உங்களால் தான் என் அம்மாவுக்கு இப்படி ஆனது. அப்பவே சொன்னாங்க கியாஸ் கம்பெனில போய் பேசறதுக்கு. கேட்டீங்களா நீங்க? எப்போதும் எங்களை இக்னோர் பண்ணிட்டே இருந்தீங்க. இப்ப அம்மா..." என்றவன் தேம்பி தேம்பி அழுதிருந்தான்.

"ஜோனீ நா..."

"பேசாதீங்க. ட்ரிங்க்ஸ் பண்ணிருகீங்கள்ள இப்பவும்? ச்ச்சீய்... நீங்க இல்லாமல் எங்களை அம்மா நல்லா பாத்துகிட்டாங்க. இப்ப அம்மா இல்லாமல் எங்களை யார் பாப்பாங்க? எங்களுக்கு யார் இருக்காங்க? தா..தாத்தா... போன் பண்ணனும்" என்றவன் மருத்துவமனை அலைபேசியில் இருந்து ஜெரோம்க்கு அழைத்தான்.

"தா..தாத்தா உடனே வா..வாங்க... அம்மா ஹாஸ்பிடல்ல இருக்காங்க தாத்தா. உடனே வாங்க. பயமா இருக்கு தாத்தா. எனக்கு என் அம்மா வேணும் தாத்தா. பாட்டியை கூப்பிட்டு வாங்க.." திக்கித் திணறி பேசினான்.

"ஏலேய் என்ன ஆச்சு அம்மைக்கு? அப்பா எங்கே? போனை கொடு"

"நோ தாத்தா. எல்லாத்துக்கும் காரணம் அப்பா தான். நீங்க வாங்க தாத்தா. எனக்கு பயமா இருக்கு வாங்க தாத்தா" என்று அழுதுக் கொண்டே பேசினான்.

உடனே வண்டி பிடித்து கிளம்பி வந்தவர்கள் நேயன் மீது காவல் துறையிடம் புகாரளித்து விட்டு தான் மருத்துவமனையை அடைந்தனர்.

"எம்புள்ளைய என்ன பண்ணிய? என்ன கெதிக்கு ஆளாக்கி விட்டுருக்கிய? அப்பவே சொன்னாளே 'குடிகாரன் கூட வாழ முடிலப்பா'னு... நான் தான் 'அனுசரிச்சி போ'னு சொல்லி இப்படி ஒரேயேடியா அனுப்ப பாத்துட்டேனே? பச்ச புள்ளைகள் எப்படி தவிக்கும்...தாய் இல்லாமல் எப்படி வளரும்? " என்று வாய் விட்டுக் கதறினார்.

இந்தியக் குடும்பங்களுள் எழுதப்படாத சட்டம் ஒன்று உண்டு. அது திருமணத்திற்கு பின் 'என்ன நடந்தாலும் அனுசரித்துச் செல்' என்பது. எந்த ஒரு பெண்ணும் திருமணத்திற்கு பின் உடனேயே தந்தையிடம் முறையீடு செய்வதில்லை. முடிந்த அளவு அனுசரித்து, முடியாதபட்சத்தில் தான் தஞ்சம் அடைகின்றனர்.

பெற்றவரிடம் தானே கஷ்டங்களை பகிர்ந்துக் கொள்ள முடியும்? அவர்களே 'அனுசரித்து செல்' என்று ஒதுங்கும் போது அந்தப் பெண்கள் என்ன செய்வார்கள்? சிலர் அந்த 'நரகத்தில் வாழ பழகி'க் கொள்கிறார்கள். சிலர் 'உயிர் நீத்தலை' நாடுகிறார்கள். சிலரோ குழந்தைகளுக்காக 'நடைபிணமாக' வாழ்கிறார்கள். வெகு சிலரே துணிந்து அந்த 'உறவிலிருந்து வெளியேறு'கிறார்கள். அவர்களையும் இந்த சமூகம் விடுவதில்லையே...

"நோ டாக்டர்.. ஆஆஆ.. என்னை விடுங்க ... நான் என் அம்மாவை விட்டு போக மாட்டேன். இங்க தான் இருப்பேன் நீங்க எதாவது அம்மாவை செஞ்சிடுவீங்க நான் பாதுகாப்பா அம்மாவுக்கு இருப்பேன்" ஜோனீஸின் குரல் கேட்டதும் அங்கு ஓடினார்கள் மூவரும்.

"ஜோனீப்பா என் ராசா என்ன ஆச்சு? இங்கன வா அம்மாவுக்கு ஊசிதான் போடுவாவ" என்று அணைத்தார் ஜெரோம்.

"இவரை யார் உள்ள விட்டது? வெளியே போங்க நீங்க போங்க எங்கம்மாவ இப்படி ஆக்குனதே நீங்க தான் திரும்ப எதுக்கு வந்தீங்க?" என்று இளநேயனை பார்த்துக் கத்தினான். மனங்கசந்து வெளியேறியவன் மருத்துவமனை வாசலிலேயே அமர்ந்திருந்தான். ஜோனீஸ் அவன் முகத்தைப் பார்க்க கூட விரும்பவில்லை.

அதன் பிறகு 20 நாட்கள் மருத்துவமனை வாசம். பின் திருநெல்வேலியில் இருக்கும் அவர்களது வீட்டிற்கு அழைத்து வந்து ஒரு செவிலியரை வேலைக்கு அமர்த்தி பார்த்துக் கொண்டனர்.

ஜோவீஸ் ஓடியாடி விளையாடும் குழந்தையாதலால் அவன் பின்னே ஓடவே கவினிக்கு நேரம் சரியாக இருந்தது. ஜோனீஸை கவனிக்க தான் சிரமமாக இருந்தது. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தான். இயற்கை உபாதை கழிக்கச் செல்ல கூட யோசித்தான்.

பயம் அவனை ஆட்டுவித்தது. செவிலியர் என்ன செய்தாலும் ஏன்? எதற்காக? என்று கேள்விக் கேட்டு அவரையும் சந்தேக கண்ணோடே பார்த்திருந்தான். அவனை சாப்பிட வைக்கவே போராட்டமாக இருந்தது கவினிக்கு.

"அம்மா சாப்பிடமால் நான் எப்படி பாட்டி சாப்பிட?" என்றுக் கேட்பான்.

நான்கு மாதங்கள் கடந்த வேளையில் நரம்பியல் நிபுணரை வீட்டிற்கு அழைத்து பரிசோதனை செய்தனர். அவர் இளவேனியை பரிசோதித்த பின்பு

"குட்மார்னிங் டாக்டர் என் அம்மா எப்போது கண் முழிப்பாங்க? எப்ப சாப்பிடுவாங்க? எதனால் இவ்வளவு நாள் ஆகுது? என்ன பிரச்சினைனாலும் என்கிட்ட சொல்லுங்க. வேறு எதுவும் ஊசி போடனுமா? பணம் வேணும்னா கூட சொல்லுங்க" என்று மருத்துவரிடம் ஜோனீஸ் வினவியதை பார்த்து ஜெரோம் கவினி இருவரும் மௌனமாகக் கண்ணீர் வடித்தனர். புது மருத்துவர் வருகிறார் என்றதும் நன்மதியும் வந்திருந்தாள். அவள் இருவரையும் தேற்றினாள்.

"ஹாய் டாம் பாய் உங்க பேர் என்ன?" மருத்துவர் இளம்பரிதி.

"ஜோனீஸ்"

"ஹா ஜோனீஸ் இங்க பாருங்க நான் சொல்றதை கவனமா கேட்டுக்கோங்க சரியா. உங்க அம்மாக்கு அன்னைக்கு நடந்த ஆக்ஸிடென்ட்னால ப்ரெய்ன்ல அதிர்ச்சி ஏற்ப்பட்டு இப்ப ஆழ்நிலை மயக்கத்தில் இருகாங்க. நீங்க உங்க அம்மா சீக்கிரமே கண் விழிக்கனும்னு நினைச்சீங்கனா டெய்லி அவங்களோட பேசுங்க. நீங்க பேச பேச உங்க குரலை அவங்க ஐடின்டிபை பண்ண முயற்சி பண்வாங்க. அவங்க நினைவடுக்குல உங்களை தேடுவாங்க. அப்படி தேடும் போது அவங்களுக்கு மயக்கம் கொஞ்சம் கொஞ்சமா தெளிஞ்சி முழுசா முழிச்சிடுவாங்க. ஓகேவா நீங்க பேசுவீங்களா?"

"கண்டிப்பா டாக்டர் நான் பேசுவேன். நான் நிறைய பேசுவேன். அப்ப சீக்கிரமே எழுந்துடுவாங்கள்ள?" ஆர்வத்துடன் ஜோனீஸ்.

"அதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும் ஸ்வீட் பாய். அதுவரை நீங்க மனசு தளராமல் பேசிக்கிட்டே இருக்கனும்"

"ஓகே டாக்டர்" என்றவன் அவளது அருகில் போய் அமர்ந்து பேசத் தொடங்கியிருந்தான்.

"இவங்களோடு டெய்லி பேசுங்க. அவங்களை இடப்புறம் வலப்புறம் திருப்பி படுக்க வைங்க. எப்போதும் அவங்க பெட் கிளீனா வைங்க. நல்ல காற்று வர மாதிரி பாத்துகோங்க. சீக்கிரமே ரெகவர் ஆகிடுவாங்க. அண்ட் ஜோனீஸ்க்கு கவுன்சில் ட்ரை பண்ணுங்க ஒரு 3 சிட் அப் போனால் போதும்" என்றவர் கிளம்பியிருந்தார்.

இளநேயன் தன் நண்பனின் அறையில் தங்கியிருந்தான். சவரம் செய்யப்படாத, முகத்தையே மறைக்கும் அளவுக்கு தாடி வளர்ந்திருந்தது. விழிகளில் ஜீவனின்றி, உறக்கம் தொலைத்து, வாழ்வை இழந்து 'எதற்காக வாழ்கிறோம்?' என்றே தெரியாமல் தன்னவளையும், தன் பிள்ளைகளையும் நினைத்து வானை நோக்கி அமர்ந்திருந்தான். மெய்யோ மதுவின் பிடியில்... மனமோ மாதுவின் நினைவில்...

"இன்னும் எத்தனை நாள் இப்படி இருக்கப் போற மச்சான்? நான் சொல்றதை கேளு தங்கச்சி வீட்டில் போய் மன்னிப்பு கேட்டு அவளோட இரு. நீ பேசினால் கண்டிப்பாக உன்னை ஏத்துப்பாங்க. உன் மேலே அவளுக்கு அவ்வளவு லவ்டா. உனக்குனு குடும்பம் வேண்டாமா?" ரகு

"என் பையனே என்னை வெறுத்துட்டான்டா.... அவளை பாக்கக் கூட விடலயே. அவனை மீறி போகவும் முடில. அவன் கேக்கிற கேள்விகளுக்கு என்கிட்ட பதில் இல்லை. தப்பு பண்ணிட்டேன் போல"

"என்னடா இப்படி பேசுற? முயற்சி பண்ணி பாருடா"

"நான் இப்படியே இருந்துகிறேன்டா. உனக்கும் பாரமா இருந்தா சொல்லு வெளியே போய்டுரேன்"

"என்ன பேச்சுடா பேசுர? நீ என் மச்சான்டா" என்று அணைத்துக் கொண்டான்.

தலையாட்டியவன் தன் விதியை நினைத்து தானே சிரித்தான். வீடு மோசமான நிலையில் சேதமடைந்ததால் அதிலிருந்து தப்பியப் பொருட்களுடன் வெளியேறியவன் வாடகை குறைந்த வீட்டில் குடியேறினான்.

துரதிர்ஷ்டவசமாக அவனது மதுவின் நாட்டத்தால் வேலையும் பறிக்கப்பட, நிலோஃபரின் வீட்டினை இருவரும் தஞ்சம் அடைந்தனர். இரு நாட்கள் சென்ற வேளையில் நிலோஃபர் நேயனை அழைத்து

"இங்க பாரு இளா நீ குடிச்சிட்டு கிடிச்சிட்டு வந்தினா என் பசங்க அபஃக்ட் ஆவாங்க. நீ வேறு எங்கயாவது ரூம் எடுத்து தங்கிக்க. அவருக்கும் நீ இங்க இருக்கதில் விருப்பம் இல்லை போல. அம்மாவை நான் பாத்துகிறேன்" என்றவள் அவனை நாகரீகமாக வெளியேற்றினாள் வீட்டை விட்டு.

கிளாரின் தடுக்கவும் இல்லை அழைக்கவும் இல்லை. அவளது 'என் பசங்க அபஃக்ட் ஆவாங்க' என்ற வார்த்தை சாட்டையடியாக மனதில் விழுந்தது. இதைத்தானே அம்முவும் சொன்னாள், அப்போது யாரும் எதுவும் சொல்லவில்லையே? என்று மனதிற்குள் புழுங்கினான். அது மீண்டும் மதுவைவே நாட வைத்தது.

இளவேனி இருக்கும் வரைக்கும் அவனுக்கு அனைத்து பணிவிடைகளும் செய்து தருவாள். பதிலுக்கு அவள் கேட்டது என்னவோ காதலைத்தான். அதை தாமதமாகவே உணர்ந்தான் நேயன். குற்ற உணர்ச்சி எனும் பேரரக்கன் அவனை கொஞ்சம் கொஞ்சமாக தின்றது. மதுவின் ஆதிக்கத்துள் புதைகுழியாய் மூழ்கினான். தெருவில் விழுந்து கிடந்தான். எதேச்சையாக ரகு அவனை பார்த்த போது அவனை தன் அறைக்கு கூட்டி வந்து பார்த்துக் கொண்டான்.

"அம்மா அப்புறம் நாம ஒரு நாள் புருட்ஸ் வாங்கிட்டு வந்தோம். நீங்க கொய்யாப்பழம், ஆப்பிள் எல்லாம் தோலோடு சாப்பிடச் சொல்லி தந்தீங்க. அப்ப நான் ஒரு கேள்வி கேட்டேன் ஞாபகம் இருக்கா? ஹாஹா ஹாஹா ஹாஹா 'ஏன்மா மீன், இறால் தோல் எல்லாம் கிளீன் பண்றீங்க ஹாஹா ஹாஹா அதுல சத்து இல்லையா?'னு கேட்டேன் ஹாஹா நீங்க என்ன பார்த்து முழிச்சீங்க பாரு சிரிப்பு சிரிப்பா வருதும்மா" என்று ஒவ்வொரு விஷயங்களையும் அனுபவித்து அவளிடம் பேசிக்கொண்டு இருந்தான். அங்கு வந்த ஜோவீஸ்,

"ஏ என்ன பண்த அம்மா தூங்கி இரிக்கி ஷ்ஷ்ஷ் சத்தம் போதாத வா வெய்ய" என்று ஜோனீஸை வெளியே அழைத்தான். (என்ன பண்ற? அம்மா தூங்கிட்டு இருகாங்க சத்தம் போடாத வா வெளியே)

"நீ போய் விளையாடு நான் அம்மாகிட்ட பேச போறேன்" என்றவன் மீண்டும் பேசத் தொடங்கி இருந்தான்.

"ஜோனீ கண்ணா என் தங்கம் சாப்பிட்டுகிட்டே பேசுரீயா? " என்றபடி கவினி அவனுக்கு ஊட்டி விட்டார்.

20 நாட்கள் கடந்திருந்தது. அன்று ஜோனீஸ் அழுதுக் கொண்டே பேசினான்.

" நாம மூணுபேரும் பங்சன்ல எவ்வளவு ஜாலியா இருந்தோம் ம்மா ஙேஙே... வீட்டுக்கு வந்ததும் பால் காய்ச்சி வச்சிட்டு வரேன்னு தான் சொல்லி போனீங்க. அதுக்கு அப்புறம் பேசவே இல்லை நீங்க. உங்க கூட பேசாமல் எனக்கு இருக்க முடியலை அம்மா க்ஙே ஙேஙே..." என்று அழுதான். இளவேனியின் விழிகளிலும் கண்ணீர் வழிந்தது.

அதனை பார்த்தவன் பதறிப்போய் "நான் அழல அம்மா அழாதீங்கம்மா" என்று கண்ணீரைத் துடைத்தான். அவனது சத்தம் கேட்டு கவினி வந்து பார்த்தார். இளவேனியின் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.

"பாட்டி நான் அழுததும் அம்மாவும் அழுதாங்களே. அப்ப ஏன் பேச மட்டும் செய்யமாட்ராங்க?" என்று கேட்டான். ஜெரோமிடம் தகவலைச் சொன்னவர் மருத்துவருக்கு அழைத்து விஷயத்தைச் சொல்லி மறுநாள் காலைக்கு முன்சந்திப்புக்கு அனுமதி வாங்கினார்.

இரவெல்லாம் அன்னையின் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டேயிருந்தவன் தன்னையறியாமல் அமர்ந்தே உறங்கியிருந்தான். கவினி அவனை தூக்கி வேறு அறையில் படுக்க வைத்திருந்தார். காலையில் எழுந்தவுடன் "அம்மா அம்மா... அம்மா எழுந்துட்டாங்களா பாட்டி?" என்றவாறு அறைக்குள் நுழைந்தான். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்துக் கொண்டிருந்தார்.

"டாக்டர் செக் அப் செய்து முடிக்கட்டும் தங்கம். நாம அதுக்குள்ள ப்ரெஷ் பண்ணிட்டு வரலாம் வா" என்றவர் அவனுக்கு பல் துலக்கி விட்டு பால் கலந்து கொடுத்தவர் இளவேனியின் அறைக்குக் கூட்டி வந்தார்.

"குட்மார்னிங் டாக்டர். நீங்க சொன்ன மாதிரியே அம்மாகிட்ட பேசிகிட்டே இருந்தேன் அம்மா அழுதாங்க ஆனால் எழலையே ஏன்?"

"குட் ட்ரை ஜோனீஸ். உங்க மாம் நீங்க பேசுறதுக்கு ரெஸ்பான்ஸ் பண்றது நல்ல விஷயம் தானே? நீங்க எந்த விஷயத்தை அவங்க கிட்டே பேசுனீங்களோ அதை மறுபடியும் பேசி பாருங்க. அம்மாவுக்கு பிடிச்ச விஷயங்களை பேசுங்க. சீக்கிரமே எழுந்துடுவாங்க" என்று ஜோனீஸின் முதுகில் தட்டியவர் ஜெரோம் கவினியை பார்த்து

"அவங்க ப்ரெய்ன் சிஸ்டம்ல நல்ல முன்னேற்றம் தெரியுது. மே பி சீக்கிரமே நல்லது நடக்கலாம். தைரியமா இருங்க" என்றவர் கிளம்பியிருந்தார்.

கவினி இளவேனி அறையில் இருவரையும் அமர வைத்து பேச சொன்னவர் சமையலைத் தொடர்ந்தார். ஜோவீஸ் விளையாடிக் கொண்டிருக்க ஜோனீஸ் விபத்து நடந்த தினத்தை நினைவுக் கூர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

"நாம அன்னைக்கு ஒரு டாக் கூட பாத்தோமே அம்மா ஞாபகம் வருதா? அந்த ஆண்ட்டி முழிச்ச முழியை பார்த்து நாம எப்படி சிரிச்சோம்? எங்களை பார்க்க உங்களுக்கு ஆசை இல்லையா அம்மா? எனக்கு உங்க கூட படுக்கனும்னு ஆசையா இருக்கு உங்க தோள் வளைவுல என்னை படுக்க வைப்பீங்களே இப்ப அப்படி எல்லாம் படுக்க விட மாட்ராங்க" என்று பேசிக்கொண்டேயிருந்தான்.

இளவேனியின் கருவிழிகள் மெதுவாக அசைந்தன. இரு விழிகளும் கண்ணீரால் நிறைந்து வழிந்து கன்னத்தை தழுவின. அவளது நினைவடுக்கில் கொஞ்சம் கொஞ்சமாக விபத்து நடந்த தினம் நினைவு வந்தது.

ஏனோ மனம் ஊசலாட்டமாக படபடக்க, கியாஸ் லைட்டரை 'கிளிக்' என்று அடித்த நொடி 'டமார்' என்ற சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது உணவுக் கூடம். திடுக்கிட்டு மூச்சை இழுத்தவளை சிலிண்டர் வெடிக்கும் போது ஏற்பட்ட தள்ளுவிசையால் அவள் மேலே தூக்கியெறியப்பட்டாள். தான் மேலே பறக்கிற அந்த ஓர் நொடி விழிகளை மூட அந்த இருளில் ஒளியாக ஜோவீஸ் அவளிடம் பேசுவது காட்சியாக விரிந்தது.

"செல்லத்துக்கு அம்மாவை பிடிக்குமா?"

"ஆமா பிதிக்கும் பிதிக்கும்"

"எவ்வளவு பிடிக்கும்?"

"ஒன்னு எண்டு மூணு பத்து பிதிக்கும்"

"ஹாஹா ஹாஹா என் தங்கத்துக்கு பத்து பிடிக்குமா?" என்றவள் உச்சி முகர்ந்து முத்தமிட்டு அணைத்தாள்.
 

Vishakini

Moderator
Staff member
இந்த அணைப்பும் அவனது மழலை பேச்சுக்களையும் இனி தான் கேட்க முடியாதா...? என்று மனதில் கேள்வி எழ விழிகளை திறந்த அந்த நொடி சுவற்றில் மோதியிருந்தாள். மீண்டும் விழிகளை மூட அந்த இருளில் ஒளியாக ஜோனீஸ் அவளிடம் பேசுவது காட்சியாக விரிந்தது.

"அம்மா நீங்க கவலையேப் படாதீங்க. சீக்கிரமே நீங்க வேலைக்கு போவீங்க. உங்களுக்கான 'மீ டைம்'மும் உங்களுக்கு கிடைக்கும். அதுக்கு ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால் நான்கு பேரும் வீட்டில் உள்ள வேலையை ஷேயர் பண்ணணும். நானும் ஜோவீயும் உங்களுக்கு எல்லா உதவியும் பண்ணுவோம் அம்மா ஐ லவ் யூ அம்மா" என்றவனை அணைத்து முத்தமிட்டு திரையில் ஓடிய பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தனர்.

இனி தன் குழந்தைகளுடன் பேசி விளையாடி ஆட முடியாதா? என்று தவித்தவள் விழிகளை திறக்க, சுவற்றில் மோதியிருந்தவள் கீழே 'தொப்' என்று விழுந்தாள். அவளின் உடல் இருமுறை தரையில் துள்ளி விழுந்தது. தலையில் பலமாக அடிப்பட மூளையின் நரம்புகள் அனைத்தும் ஓர் நொடி அதிர்ந்து அலைப்புற விழிகளை மூடியவள் நினைவில் இளநேயன் சிரித்தபடி வந்தான்.

அவளை தூக்கி தட்டாமாலை சுற்றியவன் இறுக்கி அணைத்து இதழொற்றினான். மறுநொடி அவன் வதனம் செந்தணலாக மாற

"உனக்கு மட்டும் தான் நான் குடிக்குறது பிரச்சினையா இருக்கு வேனி. குடிக்காத, வேலைக்கு போ சும்மா இருக்காதனு நொய் நொய்னு உசுர எடுக்கிற. பணம் பணம்னு அலையுற"

"வாட்? என்ன பேசுற நேயா? நான் பணம் பணம்னு அலையுரேனா? ஹோலி ஷிட். நீ குடிச்சி குடிச்சி உன் லிவர் அவிஞ்சி போய் உனக்கு ஏதாவது ஆகிருச்சினா உன் பசங்க அப்பா அப்பானு ஏங்குறாங்களே அவங்களுக்கு என்ன பதில் சொல்வேன்? அவங்களை விடுடா. உனக்கு இப்ப என் மேல் வெறுப்பு இருக்குனு தெரிஞ்சிம் உன் கூடவே இருக்கேனா பணத்துக்காகவா? தள்ளி இருந்தாலும் உன்னை பார்த்துகிட்டாவது காலத்தை கழிக்கலாம்னு தான். என்ன வார்த்தைடா சொல்லிட்ட" என்று தேம்பியவளை கொஞ்சமும் இணக்கமின்றி பார்த்திருந்தான் நேயன்.

இனி தள்ளி இருந்து கூட தன்னவனை பார்க்க முடியாதா? என்ற ஏக்கம் எழ அடிப்பட்ட தலையில் இருந்தும், உடலில் இருந்தும் குருதி நசநசவென்று அவளை நனைத்தது.

"ம்மா எங்கே இருக்கீங்க?" என்று இருமலோடு கேட்ட ஜோனீஸின் குரல் தேய்ந்தபடி செவியில் விழுந்தது. தீப்பிடித்ததில் அறை முழுவதும் புகை சூறாவளியாய் சூழ, சுவாசத்துக்கு ஏங்கிய இளவேனியின் நினைவில் இறுதியாக நன்மதி சிரித்தபடி வந்து போனாள். அத்துடன் விழிகளை மூடியவளின் நினைவுகளும் ஆழ உறங்க ஆரம்பித்திருந்தன.

இவை எல்லாம் தற்போது நினைவடுக்கில் மெல்ல மெல்ல ஞாபகங்களாக வலம் வர, முயன்று விழிகளைத் திறக்க முயற்சி செய்தாள். கைகளை அசைக்க முயற்சித்தாள். ஜோனீஸ் அன்னையிடம் மாற்றம் தென்படுவதை அறிந்து "பாட்டிஈஈ பாட்டிஈஈ இங்க வாங்க அம்மாவ பாருங்க"

அவன் கூப்பிட்டதில் என்னவோ ஏதோவென்று ஓடி வந்தவர் மருத்துவருக்கு அழைத்து பேசினார். ஜோனீஸ் நன்மதிக்கு அழைத்து "அத்தை சீக்கிரம் வாங்க நீங்களும் வந்து பேசுங்க" என்று அழைத்திருந்தான்.

மருத்துவர் வந்து பரிசோதனை செய்யும் போதே விழிகளை நன்றாகத் திறந்திருந்தாள். ஜோனீஸ் ஓடி வந்து கட்டிக் கொண்டான்.

"ஜோனீஸ் அம்மாவை விடுங்க. அவங்க முழுசா இன்னும் சரியாகலை சரியா. இப்படி வந்து விழகூடாது கொஞ்சம் தள்ளி நில்லுங்க" என்றவர்

"ஹலோ மிஸிஸ் ஹாய்.. குட்மார்னிங். உங்க நேம் என்ன ?" என்று மருத்துவர் இளவேனியிடம் வினவினார்.

விழிகளை சுழற்றிப் பார்த்தவள் இறுக்கமாக விழிகளை மூடிக்கொண்டாள்.

"ரிலாக்ஸ் ரிலாக்ஸ் மெதுவா கண்ண திறங்க"

விழிகளை மலர்த்தியவள் "ஜ் ஜ்ஜோ.. னீ " என்றழைக்க அழுதுக்கொண்டே ஓடி வந்தவன் "அம்மா உங்களுக்கு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சா? லவ் யூ அம்மா" என்றவன் அவளை அணைக்க போக மருத்துவரை பார்த்ததும் தயங்கினான்.

"உங்க 'சன்'னோட முயற்சியில் தான் இப்ப நீங்க முழிச்சிருக்கீங்க மிஸிஸ் இளவேனி. வாய் வலிச்சாலும் பராவலைனு பேசிப் பேசி உங்களை மீட்டுக் கொண்டு வந்துட்டார். உங்களுக்கு எந்த அளவுக்கு மெமரிஸ் இருக்குனு செக் பண்ணணும்" என்றவர் வரிசையாக கேள்விகளைக் கேட்டு அவள் பரிபூரணமாகக் குணமாகி விட்டாள் என்று சொன்னவர் இத்தனை மாதங்கள் ஒரே இடத்தில் படுத்ததில் உடல் கொஞ்சம் பலவீனமாக இருக்கும், மெதுவாக நடக்க, அமர பழகியப் பின் நார்மல் வாழ்க்கையை வாழத் தொடங்கலாம் என்று அறிவுறுத்தி விட்டு கிளம்பினார். மேலும் அவளின் மனதில் ஏற்ப்பட்ட 'மன அழுத்தங்கள்' நீங்க எளிமையான பயிற்சிகளையும் பரிந்துரைத்தார். கூடவே சில மருந்துகளையும் பரிந்துரைச் செய்திருந்தார்.

அன்று அந்த வீடு மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. நேயனை பற்றி அன்னையிடம் வினவினாள். இங்கு வந்தப் பின் தொடர்புக் கொள்ளவில்லை என்று சொன்னதும் மனம் வாடியது. இருப்பினும் அவளும் தொடர்புக் கொள்ள முயற்சிகள் எடுக்கவில்லை. அவன் மீது அளவில்லா நேசமிருந்தாலும் மதுவின் ஆதிக்கத்திலும், தங்களை விலக்கி வைத்திருத்தலும் அவளை இம்முடிவை எடுக்க வைத்திருந்தது.

காலையில் தினமும் தோட்டத்தின் முன் அமர்ந்து வேடிக்கைப் பார்ப்பதை வாடிக்கை ஆக்கிக் கொண்டாள் இளவேனி. அவ்வபோது நன்மதியும் வந்து பேசிப் போனாள். அன்று காலையில் தோட்டத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த வேனியின் முன் ஜோனீஸ், ஜோவீஸ் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். இரும்பு வாயிற்கதவை திறக்கும் சத்தம் கேட்க யாரென்று நிமிர்ந்துப் பார்த்தாள். நேயன் வந்திருந்தான்.

அவனின் விழிகள் இளவேனியிடமே இருந்தது. இளவேனியும் அவனை தான் பார்த்திருந்தாள். முதன் முதலில் அவனைப் பார்த்த போது அவன் முன் நெற்றி கேசம் பறந்து அவள் நெஞ்சைக் கொள்ளைக் கொண்டதே அதே நேசம் இன்றும் அவள் நெஞ்சில் மாறாத வாசமாய். அவன் விழிகளிலோ தவிப்பு. அவள் "வா" என்று தலையை அசைக்க அவளை நோக்கி நடந்து வந்தான்.

"எப்படி இருக்க நேயா?"

"என்னை மன்னிச்சிடு அம்மு" என்றபடி அவள் அருகே வந்தான். அவனை தானும் எழுந்து நின்று விழியசைக்காமல் அவனைப் பார்த்து "ஐ லவ் யூ" என்றிருந்தாள்.

"லவ் யூ டூ அம்மா" என்று ஜோனீஸ் கட்டிக் கொள்ள நேயனோ ஒளித்துகள்களாக சிதறிப் போனான். ஏனெனில் அவள் கண்டது நிழலான கற்பனை. காதல் அது மாறாதுதானே.

பள்ளிக்கு இந்த வருடம் செல்ல முடியாததில் ஜோனீஸை கவுன்சில் அழைத்துச் செல்ல இளவேனி முடிவு செய்தாள். பள்ளி திறக்கும் முன் அவனின் மனநிலையை சரிசெய்து ஏதாவது கலைப்பயிற்சியில் சேர்த்து பயிற்சி கொடுக்கலாம் என்பது இளவேனியின் விருப்பம்.

சிலம்பம் ஆடுவதில் ஜோனீஸ்க்கு விருப்பம் என்றறிந்து அந்தப் பயிற்சி கூடத்திற்கு தினமும் ஒருமணி நேரம் அனுப்பி வைத்தாள். மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வலிமை அடைந்துக் கொண்டு வந்தான் ஜோனீஸ்.

ஆனால் இளவேனியை மட்டுமே அவன் எண்ணம் சுற்றியிருக்கும். எங்குச் சென்று வந்தாலும் அவளிடம் அனைத்தையும் பகிர்ந்துக் கொள்வான். அன்னையின் மீது அவ்வளவு அன்பு.

நாட்கள் செல்ல இளவேனியும் நல்ல குணமடைந்த பின்பு மெல்ல வெளியே வர ஆரம்பித்தாள். இந்த வருடம் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேர்த்திருந்தனர் ஜோனீஸை. அன்று மாணவர்களுக்கான போட்டிகள் நடைப்பெற்றன. அதில் நடுவராக கலந்துக் கொண்ட 'எழுத்தாளர் நர்மதா சுப்ரமணியம்' பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேச வந்திருந்தார்.

"அனைவருக்கும் வணக்கம். மதிய உணவு நேரம் நெருங்குது பசி தொடங்குவதற்கான நேரமும் கூட. சீக்கிரமே பேசி முடிச்சிடுறேன். உங்களை எல்லாம் பார்க்கும் போது என் பள்ளிகால நினைவுகள் மலரும் நினைவுகளா வந்து போகுது.

என்னுடைய பள்ளிக் காலங்களில் போட்டிகளில் கலந்து கொள்வேன் ஆனால் என்னிக்குமே தைரியமா பேசியதில்லை. மனசு முழுக்க பயமும் பதட்டத்தோட திக்கித் திணறி தான் பேசுவேன்.

இன்னிக்கு நான் எந்தவித பயமும் பதட்டமும் இல்லாம தைரியமா உங்க முன்னாடி இப்படி நின்னு பேசுவதற்கு எனக்கு உதவியது என் கல்வியும் என்னுடைய பணியான ஐடி வேலையும் தான். நான் என்னுடைய பணியை சரியா செய்யனும்னு செய்த தொடர் முயற்சிகள், பயிற்சிகள் தான் என்னை இங்கே தைரியமாய் பேச வச்சிருக்கு.

ஒருத்தருக்கு கல்வி எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு அவங்க வெளியுலக வாழ்க்கையும், அனுபவத்தையும் கொடுக்கிற 'வேலை' ரொம்ப ரொம்ப முக்கியம். கல்வி பயில்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து வேலைக்குச் சேர்ந்து பணியாற்றுங்க.

அதன் மூலமாக உங்களுக்கு கிடைக்கிற பொருளாதார சுதந்திரம் கொடுக்கிற தைரியமே வேறு. யாரையும் நம்பி இல்லாம சொந்த கால்ல நிக்கக் கூடிய தைரியத்தை வேலையும் அதில் கிடைக்க கூடிய பணமும் தான் கொடுக்க முடியும். பிசினஸ் கூட செய்யலாம். படிச்சி முடிச்சிட்டு வீட்டுக்குள்ள இருக்காம வெளியுலகத்தோட தொடர்புல இருக்கிற மாதிரி ஏதாவது செஞ்சிட்டே இருங்க.

இன்றைய காலத்தில் பெண்கள் சமையலறையை ஆளவும் கத்துக்கனும். சமூகத்தை ஆளவும் கத்துக்கனும். சமையலறையோட நின்னுடக் கூடாது.

எந்த இடத்துக்கு போனாலும் எப்படி உங்களை அழகா காண்பிச்சிக்கிறதுனு செலவு செய்ற நேரத்தை அங்கே எப்படி உங்க திறமை மூலம் மதிப்பை பெறுவதுனும் யோசியுங்க.

குடும்பமும் சமையலறையும் உங்களோட ஒரு பகுதி தானே தவிர அதுவே உங்க முழுமையான வாழ்க்கை இல்லை. உங்களோட திறமையை கண்டுபிடிச்சி அதை வளர்த்துக்கிட்டு அதில் முன்னேறி காட்டும் போது, சமூகத்தில் உங்களுக்கு கிடைக்கிற மதிப்பும் சேரும் போது தான் உங்க வாழ்க்கை முழுமையான வாழ்க்கையா மாறும்.

அதனால கல்வி பயில்வதோட நிறுத்திடாம கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி உங்க திறமைகளை வளர்த்துக்கோங்க.

எந்த துறைல படிச்சாலும் உங்களோட தொடர்ந்த முயற்சியும், பயிற்சியும் தான் உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும். கல்வியும் வேலையும் தான் உங்களை சமூகத்துல மரியாதையோட வாழ வைக்கும். அதை மனசுல வச்சிக்கிட்டு நல்லா படிங்க.

நல்வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி"

அவர் பேசி முடித்ததும் அனைவரும் கைத்தட்டினர். இளவேனிக்கு அவரது பேச்சுகள் ஊக்கத்தை தந்தன. தானும் ஏதேனும் செய்து வாழ்வில் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்று முடிவுச் செய்தாள்.

சில நாட்கள் கழிந்திருக்க அறையில் அமர்ந்து தொழில் தொடங்குவது பற்றிய சிந்தனையில் இருந்தாள் இளவேனி. அறையின் கதவை திறந்து காற்றில் ஆடும் கேசத்தை கோதியபடி இதழ் விரித்த புன்னகையுடன் உள் நுழைந்தான் நேயன். எங்கோ வைரமுத்துவின் வரிகளில் ஷங்கர் மகாதேவன் பாடிக்கொண்டிருக்கும் பாடல் மெல்லியதாக அறையை எட்டியது.

🎶கண்ணுக்குள் கண் வைத்து கண் இமையால் கண் தடவி
சின்னதொரு சிங்காரம் செய்யாமல் போவேனோ
பேச்சிழந்த வேளையிலே பெண் அழகு என் மார்பில்
மூச்சு விடும் வாசனையை முகராமால் போவேனோ
உன் கட்டு கூந்தல் காட்டில் நுழையாமல் போவேனோ
அதில் கள்ள தேனை கொஞ்சம் பருகாமல் போவேனோ
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டானோ
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ
நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில்
அதை உனக்கு ஒளி பரப்ப மாட்டேனோ
என்னுயிரே நீ தானோ
என்னுயிரே நீ தானோ🎶

"நீ என்னைத் தேடி வருவனு நான் எதிர்பாக்கலை நேயா"

"உன் மேல உள்ள லவ்வு என்னை இழுத்துட்டு வந்துடுச்சு"

"அதே லவ்வு தானே என்னை இங்கே கூட்டி வந்தது'"

"நீ அதை தடுத்திருக்கலாமே அம்மு? அடிக்கடி கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்னு மிரட்டுவியே ஒரு தடவையாது செய்தியா? "

"எப்படி? ஒரு புகார் எழுதி கொடுத்தா எல்லாம் முடிஞ்சிடும் நினைச்சியாடா?"

"ஆமா உங்களுக்கு தான் இருக்கவே இருக்கு வரதட்சணை புகார். அதை தவிர வேற என்ன சொல்வீங்க?"

"யார் சொன்னது அப்படி? Protection of Women from Domestic Violence Act, 2005 இது பெண்களுக்கு முக்கியமான பாதுகாப்பு சட்டம். குடும்ப வன்முறைனா அடிக்கிறது மட்டும் இல்லை நேயா.
வாய்வழி அவமதிப்பு,
மனஅழுத்தம் தருவது,
மிரட்டல்,
செலவுக்கு பணம் தராமல் கட்டுப்படுத்துதல்,
வீட்டிலிருந்து வெளியேற்றுதல்,
நகை / பணம் / சொத்தை பிடித்துவைத்தல்,
பாலியல் தொல்லை,
குழந்தைகளைக் காட்டி மிரட்டுதல் இது எல்லாமே சீரியஸான டொமஸ்டிக் வயலன்ஸ்ல தான் வரும். அதுமட்டும் இல்லை BNS act sections 85 & 86 படி criminal complaint file கூட பண்ணலாம்"

அதிர்ந்து விழித்தவனை பார்த்து சிரித்தவள் "இதையெல்லாம் நான் ஏன் பண்ணலை தெரியுமா? நீ இன்னிக்கு மாறிடுவ நாளைக்கு மாறிடுவனு நான் வச்ச நம்பிக்கை. ஆனால் மாற வேண்டியது நான் தான்னு லேட்டர் புரிஞ்சிகிட்டேன்" என்று கண்ணீர் சிந்தினாள்.

"ஷ்ஷ்ஷ் இனி அழ கூடாது அதான் நான் வந்துட்டேன்லா" என்றவனை அணைத்தவள் தடுமாறி நின்றாள். நேயன் ஒளித்துகள்காக சிதறிப் போனான்.

"அம்மா அம்மா டீவில என்ன சாங் போடுறான் பாருங்க வாங்க" என்று அறைக்குள் நுழைந்த ஜோனீஸ் அவளை இழுத்துக் கொண்டு போனான்.

🎶I'm moving with speed in the name of the fire
Boom, boom, Liar!
Zoom, zoom, die ya!
I'm moving with speed in the name of the fire
Boom, boom, Liar!
Zoom, zoom, die ya!
This is basic therapy
For anyone that knows my trait
You walked a thin line, razors edge
Knowing it's too late
I'm faster than thought
I never tire
You can't escape the world on fire🎶

ஒலித்துக் கொண்டிருந்த பாடல் வரிகள் அவளை ஈர்த்தன. பிள்ளைகளோடு அமர்ந்துக் கேட்டு ரசித்தவள் அவர்களோடு 'Brain Games', Find the Vegetables' விளையாட்டுகளை டெலிவிஷனில் விளையாடினாள். மனம் இலேசானது. பிரிவென்பது அவ்வளவு சுலபமில்லை என்பதை உணர்ந்துக் கொண்டாள்.

தனக்கு தெரிந்த தையல் கலையையே புது முயற்சி எடுத்து செய்யலாம் என்று நினைத்தவள் புதியதாக கடை ஒன்றைத் திறந்து 'ஜோனீ மேஜிக் சீயிங்' என்ற பெயரில் தொடங்கினாள். ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக போனாலும் போக போக நல்ல வரவேற்பு கிடைத்தது.

வாரம் தவறாமல் ஆலயம் சென்றனர். இறைபக்தியை சிறு வயதிலேயே பிள்ளைகளின் மனதில் பதிய வைத்தாள் இளவேனி. இரவு உறங்கும் முன் இருவரையும் தன் கை வளைவில் படுக்க வைத்து தினமும் கதைகள் சொல்வதை வழக்கம் ஆக்கிக் கொண்டாள்.

அன்று இளநேயன், இளவேனியின் திருமணநாள். அறையில் அவனோடனா காதல் வாழ்வினை நினைத்துப் பார்த்திருந்தாள்.

கவினி தன் பெயரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அவனது பெற்றோரின் மணநாள் இன்று என்று.

"அம்மாகிட்ட எதுவும் சொல்லாதீங்க பாட்டி. வருத்தப்படுவாங்க. நான் இருக்கும் வரைக்கும் அம்மா எப்போதும் சந்தோஷமா இருக்கனும்"

"ஏன் தங்கம் உனக்கு அப்பாவை பிடிக்காதா?"

"அப்பாவை பிடிக்காத பசங்க இருப்பாங்களா பாட்டி? ஒவ்வொரு பையனுக்குமே அப்பா தான் ரோல் மாடலா இருப்பாங்க லைக் ஹீரோ மாதிரி. ஆனால் நான் அப்படி ஹீரோவா அப்பாவை எடுத்துக்க முடியாதே. அவர் நிதானம் இழந்து வரும் போது அவர் மீது வரும் ஒவ்வாத வாசனையும், அதனைத் தொடர்ந்து அவர் செய்கிற விஷயங்களும் மறுபடியும் வேண்டாம் பாட்டி.

எங்கே நான் அப்பாவை தேடி அம்மா எனக்காக அப்பாகிட்ட மறுபடியும் போய் அதனால் அம்மா கஷ்டப்பட்டுடுவாங்களோனு தான் எனக்கு அம்மா மட்டுமே போதும்னு இருந்துட்டேன்" என்றவனின் வார்த்தைகள் அறையின் வாயிலில் நின்ற இளவேனியின் செவியில் திவ்யமாக விழுந்தது.

விழிகள் ஈரமாக அறைக்குள் நுழைந்து அலைபேசியை எடுத்தவள் நடுங்கிய கைகளுடன் நேயனின் எண்ணிற்கு அழைத்தாள். தனக்காக தனயன் யோசிக்கும் போது அவனுக்காக அவள் இறங்கி வர மாட்டாளா? ஆனால் விதி வேறொன்றை நிர்ணயத்திருந்தது. பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் ஒலித்தது. வாழ்வெனும் முகை மொட்டவிழ்த்து மலர்ந்து வாசம் தருவதற்கு முன்பே மடிந்து போனது. நேசமெனும் மலர் உதிர்ந்து போனது வசந்த காலத்தில்.

"நீங்கள் தொடர்புக் கொள்ளும் எண்ணின் வாடிக்கையாளரின் எண்ணானது தற்போது பயன்பாட்டில் இல்லை...!"

முற்றும்...
முகை உதிர்ந்தது...!
 
Top Bottom