நேசமுகை உதிரும் இளவேனில் - 7

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113

நேசமுகை - 7

அலுவலகத்தின் பரபரப்பில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் ஆசுவாசமாக இளைப்பாறும் நேரம் என்றால் அது மதிய உணவு இடைவேளை தான். இளநேயன் அப்பொழுது தான் வந்தமர்ந்து சாப்பிட அமர்ந்திருந்தான். அலைபேசியில் இளவேனியின் எண் அழைப்பில் வரவும் இன்ப அதிர்ச்சி ஆட்கொள்ள ஒரு நொடியில் சுற்றம் மறந்தான்.

இளவேனி சாதாரணமாக கூட தன்னிடம் பேச விரும்பவில்லை என்று புரிந்ததும் தானாக விலக நினைத்தான். அவ்வபோது அவளது நினைவுகள் எழும் வேளையில் தனது மனதை மடை மாற்றும் விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். இன்று தன் தேவதையே அழைக்கும் போது மனம் குளிர தானே செய்யும்?

"ஹலோ நான்.."

"எப்படியிருக்க வேனி?" மென்மையாகக் கேட்டிருந்தான்.

"ம்ம் நல்லா இருக்கேன். நீ.. நீங்க எப்படி இருக்கீங்க?"

"ஹலோ பேசுறது வேனி தானா? இல்லை வேறு யாருமா"

"நான் தான் பேசுறேன். என்ன ஆச்சு?"

"இல்லை மரியாதை எல்லாம் பலமா இருக்கே. அதான் சந்தேகம் வந்துருச்சு"

"அது.. நான் பொதுவா தெரியாத யாருகிட்டயும் அனுசரணையா பேச மாட்டேன். அது அவங்க கிட்டே இருந்து நம்மளை தள்ளி வைக்கும்"

"ஓ இப்ப நான் தெரிஞ்சவனா..."

"இப்ப உங்களுக்கு ஒரு குட்நியூஸ் சொல்ல தான் போன் பண்ணேன். கேக்குறீங்களா இல்லை..."

"ஹேய் ஹேய் சொல்லு சொல்லு வச்சிடதா?" அத்தனை உற்சாகம் குரலில்.

"நான் வீக்கென்ட்ல நான்சி வீட்டுக்கு போயிருந்தேன். அவங்க வீட்டுக்கு நியூ மெம்பர் வர போறாங்க"

"யாரு?"

"அதை போன் பண்ணி உங்க ப்ரெண்ட் கிட்டே கேளுங்க. ஆபு மொபைல் மிஸ் ஆகிருச்சாம் சோ என்கிட்ட சொல்ல சொன்னாங்க"

"அவ்வளவு தானா?" அவனின் குரல் நலிந்து போயிருந்தது.

"வேறென்ன? சாப்டீங்களா?"

"ஏன் இல்லைனு சொன்னா வந்து ஊட்டி விட போறீயா?" குரலில் காரம்.

"இப்ப என்ன கேட்டுட்டேன் கோவபடுறீங்க?"

"நத்திங்" என்றவன் அழைப்பைத் துண்டித்திருந்தான். இதுவரை மற்றவர்களை இப்படி கோவமாகவும் உதாசீனமாகவும் பேசியிருந்த இளவேனி இந்த சூழலை சமாளிக்கத் தடுமாறி போனாள்.

வாரயிறுதியில் நான்சியை சந்திக்க சென்றிருந்தாள் இளவேனி. நான்சி தாய்மையடைந்த விடயம் அப்படி தான் அவளுக்கு தெரியும். ஆபுவின் அலைபேசி தொலைந்து விட்டதையும், இளநேயனை பற்றியும் இருவரும் சொல்லியிருக்க வீட்டிற்கு வந்ததும் அழைப்பு விடுத்திருந்தாள்.

இளநேயனின் தந்தை ஆசிர்வாதம் நேயன் படித்துக் கொண்டிருக்கும் போதே விபத்து ஒன்றில் அகால மரணமடைந்திருந்தார். அன்னை கிளாரின் தன்னால் இயன்ற அளவு சிறு சிறு வேலைகளை செய்து சிக்கனமாக குடும்பம் நடத்தினார்.

இருப்பினும் தங்கை நிலோஃபர் படிப்பிற்காகவும், அன்னையை ஓய்வு எடுக்க வைப்பதற்காகவும், தான் படித்துக்கொண்டும், பகுதி நேர வேலைகளை செய்துக் கொண்டும் கடுமையான உழைப்பாளி ஆனான் என்பதே ஆபுவால் இவள் அறிந்து கொண்ட விஷயங்கள். அதன் பொருட்டு அவன் மீது மதிப்பு கூடியிருக்க இனி நட்பு பாராட்ட என்ன தடை அவளிடம். எத்தனை பேர் குடும்பத்திற்காக தன் சந்தோஷம் இழந்து உழைக்க முற்படுகிறார்கள்?

இரவும் மலர்ந்தது. இன்னும் அவனிடமிருந்து குறுஞ்செய்தியோ அழைப்போ வராமல் போகவே மனம் சோர்ந்து போனாள். இரவு 10 மணியளவில் அழைப்பு நேயனிடமிருந்து.

"இந்நேரம் யாரு போன் பண்றா? போன் அதிகம் பேசகூடாதுனு சொல்லி இருக்கேனா இல்லையா? சொல்லு பேச்சு கேட்டு நடக்கதா இருந்தா இரு இல்லனா வெளுத்துபுடுவேன் பாத்துக்க. போன் ஆஃப் பண்ணி வை" தந்தை ஜெரோம் சத்தமிட அவளின் மனமோ தவித்தது. அவனின் அழைப்புக்காக தானே இந்த தவிப்பு.

"ஹலோ ஆங்.. சொல்லுட்டி மதி. ஆ ஆமா.. நாளைக்கு காலேஜ் உண்டுடி. எப்பவும் வர்ர நேரத்துக்கே வா" தோழியிடம் பேசும் பாவனையில் பேசினாள்.

"வாட்?"

"ம்ம்ம் ஆமாட்டி அப்பா தூங்க சொல்றாங்க. நான் நாளைக்கு பேசவா? "

"ஓகே" என்றவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

'சாரி ஏதோ டென்ஷன்ல பேசிட்டேன்' என்று குறுஞ்செய்தி வந்தது அவனிடமிருந்து.

'பராவல விடுங்க' பதில் குறுஞ்செய்தி வேனி.

'எப்போதும் போலவே பேசு'

'ஓகே. சாப்டியா?'

'இல்லைனு சொன்னா வந்து ஊட்டி விடுவியா?'

'😡😡😡'

'ஜஸ்ட் கிட்டிங். சாப்பிட்டேன். நீ சாப்டியா?'

'ஆமா. அப்பா வராங்க. குட்நைட்'

'அப்பானா வேனிக்கு ரொம்ப பயமோ?'

'ம்ம்ம்'

'ஆண்டவா அடுத்த ஜென்மத்தில் நான் அப்பாவா பொறக்கனும்'

'ஆசைதான்'

இவ்வாறு அவர்களின் நட்பின் சகாப்தம் தொடங்கியது. தினமும் குறுஞ்செய்தி மூலமாகவும், வாரம் ஒரு முறை அலைபேசி அழைப்பு வழியாகவும் நட்பைப் பரிமாறிக் கொண்டனர். அன்றைய தினத்தில் நடந்த அத்தனை சுவாரஸ்யமான விடயங்களையும் பகிர்ந்துக் கொண்டாள் இளவேனி.

மாதங்கள் உருண்டோட கல்லூரியில் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தாள் இளவேனி. நான்சி ஆப்ரஹாம் தம்பதியர்க்கு அழகான ஆண்குழந்தை பிறக்க, ஞானஸ்நானம் விழாவிற்கு நண்பர்களை அழைப்பு விடுத்திருந்தனர்.

நண்பர்கள் அனைவரும் மீண்டும் வருகை தந்து நான்சி ஆப்ரஹாமை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இளநேயனிடம் வேனி இயல்பு போல் பேச அவனுக்குள்ளோ கள்ளம் புகுந்து கொண்டது. அவளது கண்களை தாண்டி யாரையும் பார்க்காமல் அவள் பின்னே சுற்றிக் கொண்டிருந்தான்.

"நேயன் இங்க வா உனக்கு பிடிக்குமேனு நானே செஞ்சு எடுத்துட்டு வந்தேன்டா" என்று தனியாக அழைத்து ஒரு உணவுடப்பாவைக் கொடுத்தாள். அதை திறந்ததுமே பலாபழத்தின் வாசனை மூக்கைத் துளைக்க ரகு ஓடி வந்து பிடிங்கிக் கொண்டான்.

"டேய் அல்வா உனக்காக தான் செஞ்சு எடுத்துட்டு வந்தேன் மரியாதையா அவன்கிட்ட இருந்து வாங்கி சாப்பிடு" என்று இளவேனி சொல்லிய விதத்தில் இதழ் விரித்து புன்னகை புரிந்தவன் ரகுவிடம் இருந்து பிடிங்கிக் கொண்டு வந்தான். அறையின் பால்கனியில் அமர்ந்து அவன் உண்ண அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் இளவேனி.

"என்னங்கடா எங்க மேரஜ்க்கு வந்தீங்க பாத்தீங்க இப்ப லவ்வும் பண்றீங்களா?" என்று ஆபு கேலி செய்து கொண்டே அறைக்குள் நுழைய

"நோ நோ நோ அப்படியெல்லாம் இல்லை அவன் எனக்கு நல்ல ப்ரெண்ட். சொல்லு நேயா" இளவேனி

"அவனுக்கு மட்டும் ஸ்வீட் தனியா எடுத்துட்டு வந்து கொடுக்கிற? ரகு அங்கு வந்து ரத்தகண்ணீர் வடிக்கிறான்டா கொஞ்சம் கொடுத்துடுடா" என்று சொல்லியபடி வெளியேறினான்.

"இந்த ரகுவுக்கு அறிவே இல்லையா? அவன் யார் எனக்கு? அவனுக்கு நான் ஏன் கொடுக்கனும்? நீ என் ப்ரெண்ட் சோ உனக்கு பிடிக்கும்னு எடுத்துட்டு வந்தேன். இதுக்கு உள் அர்த்தம் கண்டு பிடிச்சா நான் என்ன செய்ய?" என்று சிணுங்கினாள். அதனை ரசித்தபடியே சாப்பிட்டவன்

"அவனை நான் பாத்துக்கிறேன் இந்தா" என்று ஒரு ஸ்பூன் அவளுக்கு ஊட்டி விட அவளும் கள்ளம் இன்றி வாங்கிக் கொண்டாள். எதேட்சையாக அங்கு வந்த நன்மதி இதனைக் காண அவளை தனியாக அழைத்தவள்

"என்ன பண்ற வேனி? அவன் சாப்பிட்டு உனக்கும் ஊட்டுறான் அதை வாங்கி சாப்பிடுற?" என்று கோவத்துடன் பேசினாள்.

"மதி அவன் எனக்கு ப்ரெண்ட். மேத்யூ ஆபூ எப்படியோ அப்படி தான் அவனும். நீ கூட என்னை புரிஞ்சிக்கலயா?" ஆதங்கமாக பேசினாள்.

"வேனி நீ அவனை ப்ரெண்ட்டா பாக்குற பட் அவனும் உன்னை அப்படி பாக்கனுமே?"

"மதி அம் நாட் அ கிட். ஹி இஸ் ஜெம்" அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல அறையை விட்டு வெளியேறினாள். நன்மதிக்கு கோவம், தான் சொல்வதை புரிந்துக் கொள்ளவில்லையே என்று வேனியிடம் பேசாமல் ஒதுங்கி இருந்துக் கொண்டாள்.

விழா நல்விதமாக முடிய ஒவ்வொருவராக கிளம்ப ஆயத்தமாயினர். இளவேனி சொல்லிக் கொண்டு கிளம்ப இளநேயன் ஏக்கத்தோடு அவளைப் பார்த்திருந்தான்.

"அவளைப் பிடிக்கும்னு சொல்லிட வேண்டியதானாடா" ஆபு.

"சொல்லலாம்டா" என்று புன்னகைத்துக் கொண்டான்.

இளவேனியின் மீதுள்ள கோவத்தில் நன்மதி அவளை தவிர்த்து ஏனைய தோழிகளுடன் ஐக்கியமாகி அவர்களுடன் சுற்ற இளவேனி தனித்து விடபட்டாள். இணை பிரியாத தோழிகள் சிறு மனகசப்பில் மனம் விட்டு பேசாமல் மனம் விலகி பாதை விலகி நடந்தனர்.

மீண்டும் கல்லூரியில் 'கலைநிகழ்ச்சிகள் 2010' நடக்கவிருந்தது. முந்தைய ஆண்டில் இருவரும் சந்தித்து முட்டிக் கொண்டதை நினைவுக்கூர்ந்து இருவரும் சிரித்துக் கொண்டனர்.

"நாம பேசி பழகி ஒரு வருஷம் ஆகுது" இளவேனி

"ஆமா வேனி எனக்கு உன்னை பாக்கனும் போல இருக்கு வரட்டுமா?" ஏக்கத்தைத் தேக்கி நேயன்

"டேய் லவ்வர்கிட்டே கேக்ர மாதிரி இருக்கு அதலாம் வேண்டாம் வர வேண்டிய தேவை இருக்கும் போது வா"

'எனக்கு நீ லவ்வர் தான் வேனி' மனதோடு பேசியவன்

"வேனி... உனக்கு லைப் பார்ட்னர் எப்படி வேணும்?"

"ஏன் மாப்பிள்ளை கீப்பிளை பாத்து கட்டி வைக்க போறீயா என்ன?"

"வேனி ப்ளீஸ் சொல்லு"

"அதான் சொல்லிட்டியே பார்ட்னர்னு. நம்ம வாழ்க்கையை இன்னும் சுவாரஸ்யமா வாழ தான் இந்த லைப் பார்ட்னரை கடவுள் அமைச்சு தந்துருக்காரு. பைபிளில் ஒரு வசனம் வரும் நேயா. கணவனும் மனைவியும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்னு. அதுக்கு அர்த்தம் ஊனும் உயிரும் உணர்வுமாய் கலந்து இருப்பது தான். ஒருத்தரை ஒருத்தர் விட்டு கொடுக்காமல், விட்டு விலகாமல், எல்லா சூழல்லயும் இணைஞ்சே இருக்கனும். அப்படி ஒரு பார்ட்னர் தான் எனக்கு வேணும்"

"அந்த மாதிரி பார்ட்னரா நான் இருக்கேனா வேனி?"

"உனக்கு என்னடா நீ.. நீ.. நல்ல பையன் தான்" தடுமாற்றமாய்

"நான் கேட்டது உனக்கு நான் நல்ல பார்ட்னரா இருப்பேனா?" அழுத்தமாய் வந்தன வார்த்தைகள்.

"என..க்கு தெர்ரில.. நான் உன்னை அப்படி நினைக்கலடா" குரலில் தடுமாற்றம்

"வேனி எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு என்னை பிடிச்சிருக்கா? நீ சொன்ன மாதிரி லைப் பார்ட்னரா நான் உனக்கு இருப்பேன். அந்த நம்பிக்கை உனக்கு இருக்கா?"

"...."

"ஒரே மாம்சமாய் உனக்கு உறுதுணையா நானும் எனக்கு உறுதுணையா நீயும் நாம நல்லா வாழலாம். இப்ப சொல்லு இந்த 'மாம்ஸ்' ம்ம்ம் மாம்ஸ உனக்கு பிடிச்சிருக்கா?"

"இல்லை இல்லை நாம ப்ரெண்ட்ஸ் நேயா. ப்ளீஸ் ஸ்டாப் இட். என் ஹார்ட்பீட் ரொம்ப வேகமா துடிக்குது. இதலாம் நமக்கு வேணாம். நாம ஒன்லி ப்ரெண்ட்ஸ் தான்"

"வேனி 'எஸ் ஆர் நோ' "

"...."

மூன்று வினாடிகள் கழிந்து அலைபேசியைத் துண்டித்தவள் அதனை 'ஸ்விட்ச் ஆப்' செய்து படுக்கையில் படுத்துக் கொண்டாள்.

அவள் இதயம் தாறுமாறாக துடித்தது. 'ஆக்சிடோசின்' எனும் 'காதல் ஹார்மோன்கள்' தலைதூக்கி மனதெங்கும் ரசாயன மாற்றங்களை உண்டு பண்ணியது. படபடப்புடன் கூடிய மெல்லிய அதிர்வு உடலை ஆட்டுவித்தது.

உடலிலிருந்து ஆத்துமா வெளியேறி மேலே பறப்பது போல இருந்தது. படுத்திருக்க முடியவில்லை என்று எழுந்தமர்ந்தாள். ஆனால் அவள் உடலோ அந்தரத்தில் பறப்பது போலவே பிரம்மை ஏற்பட என்ன செய்வது? எப்படி தன்னை தானே சமாளித்து உறங்க வைப்பது? என்று புரியாமல் தவித்தாள்.

நன்மதி இருந்தால் அவள் 'சரியான பாதையில் தன்னை வழிநடத்துவாள்' என்று ஒரு மனம் அவளைத் தேட, மறு மனம் 'இத்தனை மாதங்கள் பேசாதவள் இனி வந்து பேசுவாளா? முதலிலேயே அவள் சொன்னாள் தானே அவன் பார்வை சரியில்லை' என்று மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டன.

விழிகளை மூடி உறங்க முயற்சித்தாள். அவளது விழிகளுக்குள் இளநேயன் பலாப்பழ அல்வாவை ஸ்பூனில் எடுத்து ஊட்டினான். சிலிர்த்து போனவள் விழிகளை திறக்க தன் வீட்டில் இருப்பதை உணர்ந்து திரும்பி படுத்துக் கொண்டாள்.

அவனின் நெற்றியில் வழிந்த கேசத்தை கைகளால் வாரியவன் இவளைப் பார்த்து மீண்டும் சிரித்தான். கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள் இளவேனி. அவளது காதருகே 'ஒரே மாம்சமாய் உனக்கு உறுதுணையா நானும் எனக்கு உறுதுணையா நீயும் நாம நல்லா வாழலாம். இப்ப சொல்லு இந்த 'மாம்ஸ்' ம்ம்ம் மாம்ஸ உனக்கு பிடிச்சிருக்கா?' என்று கேட்பது போல மாயை எழ செவிகளை இறுக்கமாக பொத்திக் கொண்டாள்.

அவனுடன் பேசியது, அவனை பார்த்தது என்று ஒவ்வொன்றாக அவளைச் சுற்றி வலம் வர உறக்கம் அண்டாமல் படுக்கையில் புரண்டவள் எப்போது துயில் கொண்டாளோ அவளுக்கே வெளிச்சம்.

இளவேனி எதுவும் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்ததோடு அணைத்து வைத்திருக்க இளநேயன் அவளை எங்ஙனம் தொடர்புக் கொள்வது என்று தெரியாமல் தவித்து போனான். நேரம் செல்ல முடிவெடுத்தவனாய் பேக்பேக்கில் துணிகளை அள்ளி வைத்தவன் கிளம்பியிருந்தான் திருநெல்வேலியில் காதலியை சந்திக்க.

மறுநாள் விழிக்கும் போதே விழிகளில் எரிச்சல், சரியாக உறங்காததில். எழுந்த பின்னும் அவன் நிற்பது போலவும், அவள் காதருகே பேசுவது போலவும் தோன்ற மெதுவாக கிளம்பியவள் கல்லூரி நிறுத்தத்தில் இறங்கி கல்லூரியை நோக்கி நடந்துக் கொண்டிருந்தாள்.

"வேனி... வேனி.."

யார் தன்னை அழைப்பது என்று திரும்பி பார்த்தவள் இன்பமாக அதிர்ந்தாள். நம்பயியலாமல் கண்களை இறுக்கமாக மூடி திறந்தவள் அவன் அருகே நடந்து வருவதை பார்த்து, இதயம் வெளியேக் குதித்து விடும் போலத் துடித்தது. 'ஆக்சிடோசின்' அதிவேகமாக சுரக்க அவனுடன் பேசிய இனிய தருணங்கள் வரிசையாக நினைவில் வந்து இன்பமாக இம்சித்தன. அருகில் வந்தவன்

"இந்த மாம்ஸ கட்டிகிறீயா வேனி?"

என்று அவளது விழிகளை பார்த்துக் கேட்க அவளோ மீண்டும் அதிர்ந்துப் பார்த்தாள். அவள் கைகளைப் பற்றியவன்

"நீ தான் என் லைப் பார்ட்னரா வரனும் வேனி. நீயில்லாமல் எனக்கு லைப் இல்லை"

"...."

"உன்னை பார்க்கனும்னே இவ்வளவு தூரம் ஓடி வந்திருக்கேன்"

"எதுக்கு வந்தீங்க?"

"போன் ஏன் ஆஃப் பண்ணி வச்சிருக்க?" என்றவன் கேட்டதும் லேசாக புன்னகைத்தாள்.

"ஹேஏஏஏஏ அப்ப உனக்கு என்னை பிடிச்சிருக்கு"

"நான் எப்ப அப்படி சொன்னேன்"

"இப்ப சிரிச்சியே"

"சிரிச்சால் ஓகே சொன்னதா அர்த்தமா? கொஞ்சம் டைம் கொடுங்க இப்ப இடத்தை காலி பண்ணுங்க"

"எவ்வளவு நேரம்?"

"சென்னை கிளம்புங்க. நானா போன் பண்ற வரைக்கும் நோ சாட்ஸ் நோ கால்ஸ். பை" என்றவள் விறுவிறுவென்று கல்லூரிக்கு சென்றிருந்தாள்.

முகை உதிரும்...
 

Author: Vishakini
Article Title: நேசமுகை உதிரும் இளவேனில் - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
Hmm இப்படி விரட்டி விரட்டி லவ் பண்ணிட்டு இப்ப ஏண்டா இப்படி ஆகிட்ட????