• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 5

Vishakini

Moderator
Staff member
அலுவலகத்தை அனைவரும் அவர்களுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர். பிரகாஷ் கண்ணாவின் கண்கள் மாயமித்ராவையே தொட்டுமீண்டது.

அவளோ தன்னுடைய கவனத்தை எப்பக்கமும் சிதறடிக்காமல் தன்னுடைய வேலையை கவனமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

இங்கு நடக்கும் காட்சிகளை கோபமாக பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி. ஏனோ அவளுக்கு பிரகாஷ் கண்ணா மாயமித்ராவை பார்ப்பது பிடிக்கவில்லை.

வேலை பார்த்துக் கொண்டிருந்த மித்ராவின் அலைபேசியில் அழைப்பு வந்தது. யார் என்று பார்க்க, அவளுடைய மற்றொரு தோழி காவியா தான் அழைத்திருந்தாள்.

‘ வேலை நேரத்துல போன் பண்ண மாட்டாளே, என்னாச்சுன்னு தெரியல ஏதாவது அர்ஜெண்டா இருக்குமோ என்று நினைத்துக் கொண்டே அலைபேசியில் அழைப்பை மேற்கொண்டு காதில் வைத்தாள் மாயமித்ரா.

“மித்ரா நீ இன்னைக்கு ஃப்ரீயா இருக்கியா?” என்று பதட்டப்பட்டு கேட்டாள் காவியா.

“உனக்கு தெரியாதா இன்னைக்கு ஒர்க்கிங் டேஸ், கவர்மெண்ட் ப்ராஜெக்ட் ஒண்ணுக்கு கொட்டேஷன் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன், ஏன் என்னாச்சு” என்று மித்ரா கேட்க,

“இன்னைக்கு திருவள்ளுவர் மாவட்டத்தில உள்ள புழல் சிறையில உள்ள கைதிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்காக என்கிட்ட அசிஸ்டன்ட் கமிஷனர் அசோக் பேசியிருந்தாரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே, நானும் என்னோட வொர்க் செட்யூல் பார்த்துட்டு நான் அன்னைக்கு பிரீ தான் சார் கண்டிப்பா வரேன்னு சொல்லிட்டேன். இன்னைக்கு காலையில அங்க கிளம்பலாம்னு ரெடியானப்ப, ஊர்ல இருந்து போன் வந்துச்சு, அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு, நானும் தங்கச்சிக்கு போன் பண்ணி நீ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு அம்மா எப்படி இருக்காங்கன்னு பாத்துட்டு எனக்கு போன் பண்ணனுன்னு சொல்லிட்டேன், ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து இருக்குன்னு சொல்லி இருக்காங்க, இங்க வச்சு பாக்க முடியாது, பக்கத்துல உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்கன்னு தங்கச்சி கிட்ட சொல்லிட்டாங்க. தங்கச்சி அழுதுகிட்டே போன் பண்ணி சொன்னாள். இப்ப எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியல, ஊருக்கும் கிளம்பனும். இங்கேயும் கவுன்சிலிங் கொடுக்கணும், மூணு மணிக்கு ஃபங்சன் ஆரம்பிச்சிடுவாங்க, என்னால போக முடியாது அதான், நீ ஃப்ரீயா இருந்தா அங்க உள்ள கைதிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க சொல்லலாம்னு போன் பண்ணினேன்” என்று கூறி முடித்தாள் காவியா.

சிறிது நேரம் யோசித்து விட்டு “ சரி, அப்போ ஒன்னு பண்ணுவோம், ஊருக்கு கிளம்பி போயி அம்மாவ பாரு, நான் ஆஃப் டே லீவ் சொல்லிட்டு அங்க போறேன்” என்று மித்ரா சொல்ல,

“தேங்க்ஸ் மித்ரா, கடைசி நேரத்துல நான் வர முடியாதுன்னு சாரு கிட்ட எப்படி சொல்ல முடியும்னு ரொம்ப சங்கடமா இருந்துச்சு, நல்லவேளை நீ போறேன்னு சொல்லிட்ட இப்ப தான் எனக்கு உயிரே வந்த மாதிரி இருக்கு” என்று காவியா கூறினாள்.


“இதுல என்ன இருக்கு காவியா, எப்பவும் நம்ம பண்றது தானே, நீ எதை நினைச்சும் கவலைப்படாம ஊருக்கு போயி அம்மாவ பாத்துட்டு எனக்கு போன் பண்ணு, நான் சிறைச்சாலைக்கு போறேன்!” என்று மித்ரா சொல்ல,

“ சரி மித்ரா எனக்கு பதிலா என் பிரண்டு வருவாங்கன்னு கமிஷனர் சார் கிட்ட சொல்லிடுறேன், நீ போயிரு” என்று சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தாள் காவியா.


காவியா அழைப்பை அணைக்கவும், எப்படி பர்மிஷன் வாங்குவது என்று நினைத்துக் கொண்டே தன்னுடைய கேபினிலிருந்து எழுந்தாள் மித்ரா.


இங்கு தன்னுடைய கேபினில் இருந்து மித்ராவின் ஒவ்வொரு அசைவுகளையும் படம் பிடித்த பிரகாஷ் கண்ணா’ என்னவா இருக்கும், ஏன் இவ முகம் மாறுச்சு’ என்று சிந்தித்து கொண்டு இருந்தான்.

கேபினிலிருந்து எழுந்து நேராக பிரகாஷ் கண்ணாவின் கேபினுக்குள் நுழைந்து கதவை தட்டி “எக்ஸ்க்யூஸ் மீ சார்” என்று கேட்டாள் மாயமித்ரா.

“உள்ள வாங்க” என்று பிரகாஷ் கண்ணா சொல்ல உள்ளே நுழைந்தாள் மாயமித்ரா.

“உட்காருங்க மித்ரா, கவர்மெண்ட் ப்ராஜெக்ட்கான கொட்டேஷன் ரெடி பண்ணிட்டீங்களா? “ என்று பிரகாஷ் கண்ணா கேள்வி கேட்க கண்களை உயர்த்தி அவனைப் பார்த்தாள் மாயமித்ரா.

“என்னாச்சு மித்ரா முழிக்கிறீங்க, கொட்டேஷன் ரெடி பண்றதுல்ல ஏதாவது சந்தேகமா?” என்று பிரகாஷ் கண்ணா கேட்க,

“சாரி சார் இன்னும் கொட்டேஷன் ரெடி பண்ணல, இப்போதான் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்று மாயமித்ரா கூறினாள்.

“சீக்கிரம் ரெடி பண்ணுங்க காலையில ஒன்பது மணிக்குள்ள அங்க அனுப்பி இருக்கணும், உங்களுக்கு தெரியும் தானே!” என்று பிரகாஷ் கண்ணா கேட்க,

“ தெரியும் சார் “என்று கூறினாள் மாயமித்ரா.” சரி அப்போ வேலைய பாருங்க!” என்று பிரகாஷ் கண்ணா சொல்ல என்ன சொல்வது என்று தடுமாறினாள் மாயமித்ரா.

“ என்னாச்சு மித்ரா எதையோ யோசிக்கிறீங்க, ஆமா எதுக்கு வந்தீங்கன்னு சொல்லவே இல்லையே என்ன விஷயம்? “ என்பதை பிரகாஷ் கண்ணா அவளின் முகத்தை பார்த்தபடியே கேட்க,


“சார் எனக்கு இன்னைக்கு ஆப்டே லீவ் வேணும்”என்று தயங்கிக் கொண்டே கேட்டாள் .

“ ஆப்பே டே எதுக்கு? அர்ஜெண்டா டெண்டர் கான கொட்டேஷன் அனுப்பனும்னு உங்களுக்கு தெரியும் தானே!”என்று கேட்டான் பிரகாஷ் கண்ணா.

மாயமித்ராவோ என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தாள்.

“மத்த விஷயத்துல தான் நான் என்ன கேட்கிறேன்னு தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருப்பீங்க, இதுலயுமா? எதுக்கு ஆப்டேனு பதில் சொல்லுங்க” என்று பிரகாஷ் கண்ணா குத்தலாக கேட்க,

“திருவள்ளுவர் டிஸ்ட்ரிக்ட்ல உள்ள புழல் சிறை வர போகணும் “ என மாயமித்ரா சொல்ல அதிர்ந்தான் பிரகாஷ் கண்ணா.

இவ்விருவரும் காரசாரமாக பேசிக் கொண்டிருக்க இவர்களை அங்குள்ள கண்ணாடி வழியே பார்த்தாள் கீர்த்தி. இருவரின் முகம் மாற்றத்தை பார்த்துவிட்டு,’ என்னாச்சு இவங்க ரெண்டு பேரும் எதைப் பத்தி பேசறாங்கனு, சாரு கோவப்படுற மாதிரி தெரியுது, அவ அமைதியா நிக்கிறா? ஒருவேளை ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை நடக்குதோ? என்று நினைத்துக் கொண்டே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக அங்கிருந்த ஒரு பைலை எடுத்துக்கொண்டு சந்தேகம் கேட்பதைப் போல பிரகாஷ் கண்ணாவின் கேபினுக்குள் வெளியே நின்று கதவை தட்ட,

“ ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க கீர்த்தி!” என்று பிரகாஷ் கண்ணா சொல்ல, கீர்த்தியின் முகம் வாடியது.

“சிறைச்சாலைக்கு என்ன விஷயமா போகணும்” என்று பிரகாஷ் கண்ணா தன் சந்தேகத்தை கேட்க,

காவியா அலைபேசியில் அழைத்து கூறியது அனைத்தையும் கூறினாள் மாயமித்ரா.

“ஓ இவ்வளவுதானா நான் கூட பயந்துட்டேன்” என்று பிரகாஷ் கண்ணா தன்னை அறியாமல் சொல்லிவிட அவனைப் பார்த்தாள் மாயமித்ரா.

“சரி அத விடுங்க, கண்டிப்பா போகணுமா?” என்று பிரகாஷ் கண்ணா கேட்க,

“ கண்டிப்பா போகணும். அவங்க எல்லாரும் ஏதோ ஒரு கோபத்துல ஏதோ ஒரு தப்பை பண்ணிட்டு சுதந்திரமே இல்லாமல் ஜெயிலுக்குள்ள அடைபட்டு கிடக்காங்க. அவங்கள்ல சில பேர் மன அழுத்தத்துல இருப்பாங்க. கண்டிப்பா அவங்களுக்கு கவுன்சிலிங் தேவை. அவங்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கான வாய்ப்பு என்னை தேடி வந்திருக்கு, கண்டிப்பா இந்த வேலைய செய்யணும்னு நான் ஆசைப்படுறேன்!” என்று மாயமித்ரா கூறினாள்.

மாயமித்ரா இப்படி கூறுவது புதிதல்ல. எப்பொழுதும் அவளால் முடிந்த சேவைகளை சில தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வாள். அதை பிரகாஷ் கண்ணா பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். ஆனால் சில நேரங்களில் சமூக சேவைகள் செய்யும்போது பெரிய இடத்தில் மாயமித்ரா மோதும் போது, அவளை கண்டித்து இருக்கிறான். ‘ இப்படி பெரிய இடத்து விவகாரம் உனக்கு எதுக்கு’ என்று கேட்டுள்ளான். இப்படி பெரிய இடம் பெரிய இடம் என்று சொல்லி எல்லாரும் தலையிடாம இருந்தால் இன்னைக்கு ஒரு நபர் செய்றத நாளைக்கு பல பேரு எதிர்க்கிறதுக்கு ஆள் இல்லைன்னு தைரியமா செய்வாங்க. அப்படி நடக்க கூடாதுன்னு நான் நினைக்கிறேன். அதுக்காக என்னால முடிஞ்சத நான் செய்கிறேன் ‘ என்று அலட்சியமாக சொல்லிவிட்டு கடந்து விடுவாள். சில நேரங்களில் மாயமித்ரா எதுவும் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வாளோ என்ற பயமும் அவ்வப்போது பிரகாஷ் கண்ணாவிற்கு வந்து போவதுண்டு. சில பிரச்சனைகளில் கூட மாய மித்ராவிற்கு எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் பிரகாஷ் கண்ணா.

“சரி, நீங்க செய்ற சேவையை செய்யுங்க, அதுல தலையிடறதுக்கு எனக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆனால் ஏன் கம்பெனி வேலையை எப்ப முடிச்சு தருவீங்க?” என்று பிரகாஷ் கண்ணா கேட்க,

“ கவுன்சிலிங் கொடுத்துட்டு ஈவினிங் அஞ்சு மணிக்கு ஆபீஸ் வந்துருவேன் சார், அதுக்கப்புறம் கொட்டேஷன் ரெடி பண்ணிடுவேன்” என்று மாயமித்ரா கூறினாள்.

“அதாவது எல்லாரும் ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போறப்ப நீங்க ஆபீஸ் வந்து வேலை பார்ப்பீங்க அப்படித்தானே!” என்று பிரகாஷ் கண்ணா நக்கலாக கேட்க எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றாள் மாயமித்ரா.

“சரி போங்க, நீங்க சொன்ன மாதிரி ஈவினிங் வந்து வேலையை முடிச்சு குடுத்துடுங்க நாளைக்கு காலையில அனுப்புற கொட்டேஷன் அத மறந்துடாதீங்க மாயமித்ரா!” என்று பிரகாஷ் கண்ணா சொல்ல “நன்றி சார்” தன்னுடைய கேபினுக்குள் சென்று தன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு ஆபீஸின் வெளியில் சென்று கேப் பிடித்துக் கொண்டு சிறைக்கு சென்றாள்.

சிறை கைதிகள் அனைவரும் வரிசை வரிசையாக அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் கண்காணித்துக் கொண்டு பல காவலர்கள் நின்று கொண்டிருக்க, முதல்வரின் வரவை எதிர்நோக்கி பல காவலர்களும் நின்று கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் முதல்வரின் பாதுகாப்புக்காக பல கார்கள் முன்னால் முதல்வரின் காரும் வந்து சேர்ந்தது. காரில் இருந்து முதல்வர் இறங்கி வர அங்கிருந்த உயர் அதிகாரிகள் முதல்வரை வரவேற்று அங்கு போடப்பட்டிருந்த மேடையில் அமர வைத்தனர். அவர்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்தபடி நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் ஆரம்பிக்க ஆரம்பித்தனர்.

“எல்லாருக்கும் வணக்கம்” என்று அனைத்து கைதிகளையும் பார்த்து பேச தொடங்கினார் முதல்வர். சில வினாடிகள் பேசியவர் விடுதலை கொடுக்கும் கைதியின் பேரையும் அந்த மேடையில் கூறினார்.

இங்கு பாதி நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்க அவசர அவசரமாக அந்த சிறை அதிகாரிகளிடம் தான் எதற்காக வந்திருக்கிறாள் என்பதை சொல்லிவிட்டு பங்க்ஷன் நடக்கும் இடத்தை நோக்கி சென்றாள் மாயமித்ரா.

முதலமைச்சர் மேடையில் நின்று பேசிக் கொண்டிருக்க, கீழே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர சொல்லி காவலர்கள் கூற மாயமித்ராவும் அமர்ந்தாள்

“அதிஷ்டக்காரன் இந்த விடுதலை நந்தனுக்கு கிடைக்க வேண்டியது, நந்தன் நான் போக விரும்பலைன்னு சொன்னதால இவனுக்கு கிடைச்சிருக்கு!” என்று அவளுக்கு பின்னால் அமர்ந்திருந்த காவலர்கள் பேசிக் கொண்டிருக்கும் செய்தி இவள் காதுகளில் விழுந்தது. நந்தன் எனும் பெயரை கேட்டதும் ஒரு கணம் அவள் கண்கள் அகல விரிந்தது அதிர்ச்சியில்....!









 
Top Bottom