• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பனி இரவும் கனல் மழையும் - 15

Vishakini

Moderator
Staff member
மழை - 15

"அதுக்கு இல்ல கண்ணு, கண்ணாலத்துக்கு முன்னாடி பொங்க வச்சு சாமி கும்புட வந்திருக்கோம். ஏதாவது பிரச்சனையாகிடப் போகுதுன்னு தான் பயமா இருக்கு. அவங்க கண்ணுல பட்டா என்ன பேசுவாங்கன்னு தெரியலையே".

"இப்போ அதுக்கு என்ன பண்ணனும்ன்ற, சரி பொங்கல் வைக்க வேண்டாம் வீட்டுக்கு போவோமா?".

"ஏன் கண்ணு நீ வேற இப்படி எல்லாம் பேசுற. ஆசையா பொங்க வைக்க கிளம்பி வந்துட்டு எப்படி அப்படியே போக முடியும். பொங்க வச்சிட்டே போவோம். அவங்க கண்ணுல படாம சீக்கிரமா வச்சுட்டு போயிடுவோம். உங்கையாலதேன் பொங்க வைக்கணும். நீ போய் குளத்துலருந்து தண்ணி கொண்டு வா கண்ணு" என்று துரிதமாக வேலையில் ஈடுபட்டார்.

அவருக்கு சம்மதமாக தலையசைத்தவள் ஒரு குடத்துடன் குளத்தை நோக்கிப் புறப்பட்டாள்.

"ஐயா செல்வா, இந்திரா கையாலதேன் பொங்க வைக்கணும். நாங்க பொங்கல் வைக்கிற வேலைய பார்க்கிறோம். நீ போய் கோவில் குளத்துல தலைய முங்கிட்டு வந்துடு. பொங்க வச்சதும் சாமிக்கு வச்சு படச்சிடுவோம்" என்றார் காமாட்சி.

அனைவரும் குடும்பமாக வருவதால் காமராஜ் குடும்பமும் சேர்ந்து தான் வந்திருந்தார்கள்.

கீதாவும், வள்ளியும் சேர்ந்து தான் பொங்கல் வைக்க அனைத்தையும் ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்திராவின் கையாலேயே பொங்கலையும் வைத்துக் கொண்டிருந்தனர்.

அனிதாவும், ரதியும் சற்று தள்ளி அமர்ந்து ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

ரகுவின் பார்வை அவ்வப்பொழுது ரதியை தீண்டி நழுவியது‌. சந்தன நிற சுடிதார் அணிந்திருந்தாள். அவளின் காதிலாடிய ஜிமிக்கையோடு சேர்ந்து இவனின் இதயமும் ஊசலாடியது.

ஆம், அவளை காதலிக்கிறான். என்று, எப்பொழுது, எப்படி என்பதெல்லாம் அவனுக்கே விடை தெரியாத வினா தான்.

எங்கோ, எப்படியோ, எந்த நொடியில் இருந்தோ அவளை அவனின் மனம் நேசிக்க துவங்கி விட்டது. தன்னவளாக அவளைப் பார்க்க துவங்கி விட்டது.

அவர்களின் குடும்பத்தின் மீது அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் கிடையாது தான். அவ்வளவு ஏன், இந்திராவின் மீதும் கூட அவனுக்கு எந்த ஒரு நல்ல அபிப்ராயமும் கிடையாது.

ஆனால், ரதி வேறாக தான் அவனின் கண்களுக்கு காட்சியளித்தாள்.

ஆண்களிடம் பேசவே தயங்கும் அவளின் குணமும், மென்மையும் இவனை வெகுவாக ஈர்த்தெடுத்து விட்டது.

சொந்தமே ஆனாலும், இவனிடம் கூட அவ்வளவாக அவள் வாய் திறந்து பேசியது கிடையாது. சினேகமாக புன்னகைப்பாள் அவ்வளவே..

ஏதேனும் இவனாக கேட்டால் அவளிடமிருந்து பதில் வரும். தானாக வலிய வந்து அவள் இதுவரை ஒருநாளும் பேசியது கிடையாது.

அனிதாவுடன் பேசிக்கொண்டிருந்த ரதிக்கு உள்ளுணர்வு உந்த ராகுவின் புறம் திரும்பி இருந்தாள்.

அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவள் சட்டென்று தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

"என்ன இது, மாமா எதுக்காக நம்மளையே பாக்குறாங்க. அவங்க நம்மள தான் பாக்குறாங்களா?" என்ற சந்தேகம் தோன்ற.

மீண்டும் ரகுவின் புறம் திரும்பினாள். ஆனால், இம்முறை அவன் அவளை பார்த்திருக்கவில்லை. செல்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.

"ச்ச.. நாம தான் தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கோம். மாமா ஏன் நம்மள பார்க்க போறாங்க. அப்படியே பார்த்திருந்தாலும், அவங்க அனிதாவை பார்த்திருப்பாங்க. அதான் நமக்கு நம்மள பார்த்த போல தோனி இருக்கு" என்று தனக்குத் தானே சமாதானமும் பேசிக்கொண்டாள்.

அவள் தன்னைக் கண்டு கொண்டதும் ரகுவும் திரும்பிக் கொண்டான்.

கள்ளத்தனமாக மனம் விரும்புபவளை பார்ப்பது எத்தனை சுகம் என்பதை ரகு அறிந்த தருணம் அது.

குளத்தில் இறங்கி தண்ணீரை நிரப்பியவள் அதை தன் இடுப்பில் வைத்துக் கொண்டு மெதுவாக படி ஏறி மேலே வந்தாள்.

சற்று தூரத்திலிருந்து வரும் பொழுதே பொற்செல்வனின் விழிகளுக்கு தரிசித்தாள் செந்நிலா.

அவளின் கவனம் முழுவதும் தண்ணீரில் இருக்க. அவனோ அவளை தான் பார்த்துக் கொண்டு முன்னேறினான்.

அந்த வாடாமல்லி நிற பாவாடை தாவணி அவளுக்கு அத்தனை அழகாக இருந்தது. பெரிதாக குளத்தில் கூட்டம் இருக்கவில்லை. ஒன்று, இரண்டு பேர் மட்டுமே தண்ணீர் எடுக்க வந்திருந்தனர்.

இவன் அவளைக் கடக்க முற்படவும், அவளின் கால்கள் பாசியில் வழுக்கி சரிய. நிலை தடுமாறி கீழே விழ சென்றவளின் கையைப் பிடித்து நேராக நிற்க வைத்திருந்தான் பொற்செல்வன்.

இருவருமே இப்படி ஒரு சூழலை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கால் இடறியதில் அவள் கையில் வைத்திருந்த குடமும் நழுவியிருக்க. ஒற்றைக் கையால் அதனைக் கீழே விழுந்து விடாமல் பிடித்தவன். மற்றைய கையால் செந்நிலாவின் கரத்தைப் பற்றி நிற்கச் செய்திருந்தான்.

ஒரு நொடி திகைத்த செந்நிலா சட்டென்று சுதாரித்துக் கொண்டு விலகி நின்றாள். அவளின் கால் இன்னமுமே வலித்துக் கொண்டுதான் இருந்தது.

சுளுக்கு வழுந்திருக்கும் போலும், பாதத்தை கீழே வைத்து சரிவர நடக்கவே சற்று சிரமமாக தான் இருந்தது.

வலியில் அவளின் முகம் கசங்கி இருப்பதைக் கண்டவன், "என்னாச்சு வலிக்குதா?".

"ம்ம்" என்று வலி நிறைந்த முகம் அவளிடம்.

"சரி, குடத்த நான் கொண்டு வந்து தரேன் வா" என்றுவிட்டு அவன் முன்னே நடக்கவும்.

இவள் அவனைப் பின் தொடர்ந்து நடந்தாள்.

இருவரின் கால் தடங்கலும் ஒன்றோடு ஒன்று ஜோடியாய் பின்னிப் பிணைந்து கிடந்தது.

இவர்களை ஜோடி சேர்க்க கடவுள் போடும்
முடிச்சுகளில் ஒன்றுதான் இதுவுமோ என்னவோ.

அவளின் திருமணத்திற்காக வைக்க வேண்டிய பொங்கலுக்கான நீரை இவன் கையால் சேர்த்துவிட்டார். எல்லாம் கடவுளின் சித்தம்தானோ…

பொற்செல்வன் குடத்தை சுமந்துக் கொண்டு வரவும், பின்னே செந்நிலா காலை தாங்கி நடந்து வரவும் பதறிய செங்கேணி, "என்ன கண்ணு என்ன ஆச்சு?" என்றவாறு தடதடத்த நடையோடு அவளை அடைந்திருந்தார்.

"ஒன்னும் இல்ல பாட்டி, கால் இடறிடுச்சு அவ்வளவுதான். நீ ஒன்னும் பயப்படாத".

"அச்சச்சோ! என்ன கண்ணு இப்படி சொல்ற. கல்யாணத்துக்காக பொங்க வைக்க வந்திருக்கோம். இந்த நேரம் பார்த்து இப்படி ஆகிப்போச்சே. என்னவோ மனசுக்கு சரியா படல" என்று நொடி நேரத்தில் படபடத்துப் போய்விட்டார்.

"குளத்துகிட்ட பாசி பிடிச்சு போய் கிடக்கு. அதான் தெரியாம கால் வழுக்கு விட்டிருக்கு. இத போய் அபசகுணம்னு பேசுறீங்களே. நல்லபடியா பொங்கல் வச்சு குலதெய்வத்த வேண்டிக்கோங்க. தப்பா எதுவும் நடக்காம உங்களுக்கு அந்த சாமி துணையா இருக்கும்" என்று விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான் பொற்செல்வன்.

பாட்டி அவளிடம் எதுவோ புலம்பி கொண்டிருக்க. அவளின் செவிகளில் அவரின் வார்த்தைகள் விழுந்தால் தானே.. செல்லும் பொற்செல்வனில் தான் அவளின் பார்வை பதிந்திருந்தது. அந்நேரம் சரியாக அவனின் விழிகளும் இவளின் விழிகளை தீண்டி இருக்க. ஒரே நொடி இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று கவ்விக் கொண்டது.

இருவருக்குள்ளும் ஏதேதோ உணர்வுகள். ஆனால், விவரிக்க தான் வார்த்தைகள் அற்றுப் போயினர்.

சில உணர்வுகள் விவரிக்கவே முடியாது என்பார்களே.. ஒருவேளை, அப்படியும் இருக்கலாம்.

*****

"ஏய், அது உன் அக்கா இந்திரா தானே? அங்க யாரு கிட்ட பேசிகிட்டு இருக்கா" என்று ரதியிடம் கேட்டாள் அனிதா.

"தெரியல அனி" என்ற ரதி புருவம் சுருக்கி அவர்களை தான் பார்த்தவாறு நின்றிருந்தாள்.

இந்திராவுடன் யாரோ ஒரு ஆடவன் நின்று பேசிக்கொண்டிருந்தான். இருவரும் காரசாரமாக ஏதோ பேசுவது போல் தெரிந்தது.

ஆனால் அந்த ஆடவனின் முகம் இவர்களுக்கு தெரியவில்லை. பக்கவாட்டாக திரும்பி நின்று இருந்ததால் அவனின் முகம் இவர்களுக்கு சரிவர தெளிவாக தெரியவில்லை.

ஆனால், இந்திராவின் முகம் மட்டும் நன்கு தெரிந்தது.

அதற்குள் காமாட்சி பாட்டியும், உமாவும் அவ்விடம் வந்து சேர்ந்தனர்.

"இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?" என்ற பாட்டியின் குரலில் திரும்பியவர்கள், "அது இந்திரா அண்ணி அங்க யார்கிட்டயோ பேசிட்டு இருக்காங்க அப்பத்தா. அதான் யாருன்னு பாத்துட்டு இருந்தோம்" என்ற அனிதாவின் வார்த்தையில் அவரும் அந்த திசையை தான் பார்த்தார்.

பார்த்தவருக்கு சுர்ரென்று கோபம் ஏறியது. ஆனால், அனிதாவின் முன்பு அதை காட்டிக் கொள்ள முடியாமல், "அது அவளுடைய பிரென்டாம். எதோ படிப்புல சந்தேகம் கேட்கணும்னு கூப்பிட்டதா என்கிட்ட சொல்லிட்டு தான் போனா இல்லடி உமா" என்கவும்.

உமாவும் பதட்டம் கலந்த உணர்வோடு 'ஆமாம்' என்பது போல் தலையை நாலாபுரமும் உருட்டி வைத்தார்.

"நீங்க போங்க நாங்க அவள அழைச்சிட்டு வரோம்" என்றவாறு அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தனர்.

இந்திரா அந்த ஆடவனுடன் பேசிவிட்டு எதுவும் அறியாதது போல் நடந்து வரவும்.

"என்னடி நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல நீயி? நான் உன்கிட்ட அன்னைக்கே சொன்னேன்ல இந்த மாதிரி ஆம்பள பசங்களோட சவகாசத்தை வச்சுக்காதன்னு. திரும்பத் திரும்ப என்ன பண்ணிட்டு இருக்க நீ" என்று எகிறினார் பாட்டி.

"ஐயோ! அம்மாச்சி பாத்திருச்சு போலருக்கே" என்று திருதிருத்தவள்.

"அது ஒன்னும் இல்ல அம்மாச்சி, என் பிரண்டு தான்" என்று சமாளிக்க முற்பட்டாள்.

"என்னடி கிழவி தானே ஈஸியா ஏமாத்திடலாம்னு நினைச்சியோ. அதெல்லாம் பார்த்தாலே நான் கண்டுகிடுவேன். நீ எப்படி நினைச்சு பேசுறேன்னு.. நீங்க ரெண்டு பேரும் பேசுறதே சரி இல்ல. திரும்ப ஏதாவது பிரச்சனையா? உம்மாம மகனுக்கு உன்ன நிச்சயம் பண்ண போறாங்க. தேவையில்லாம ஏதாவது வேலைய பாத்து உன் தலையில நீயே மண்ணள்ளி போட்டுக்காத".

"ஐயோ! அப்படியெல்லாம் இல்ல அம்மாச்சி. சத்தியமா பிரண்டு மட்டும் தான். நானும் இப்போ முழு மனசா மாமாவ கட்டிக்கணும்ன்ற எண்ணத்தோட மட்டும்தான் இருக்கேன். என் மனசுல வேற யாரும் இல்ல. பொற்செல்வன் மாமா மட்டும்தான் இருக்காங்க போதுமா".

"நீ உண்மைய தான சொல்லுத" என்று அவளை உருத்துவிழித்தார் பாட்டி.

"உம்மேல சத்தியமா சொல்றேன் அம்மாச்சி. மாமாவ கட்டிக்க எனக்கு முழு சம்மதம். நீங்க சொன்னதை எல்லாம் யோசிச்சு பார்த்தேன், எந்த விதத்துலயுமே மாமா குறைஞ்சவர் கிடையாது. அவரை கட்டிக்கிட்டா ரொம்ப வசதியாவும், கௌரவமாவும் வாழலாம். அப்படி ஒரு வாழ்க்கைய நானே எதுக்காக எடுத்துக்க போறேன்" என்று இவள் விரிவாக பேசவும்.

"பரவாயில்லடி பொழச்சிக்கிடுவ. நீ போ" என்றதும் விறுவிறுவென அங்கிருந்து சென்று விட்டாள் இந்திரா.

"ரொம்ப சந்தோஷம்மா. இப்பவாது இவளுக்கு புத்தி வந்துச்சே" என்று நிம்மதி பெருமூச்சை வெளியேற்றியவாறு கூறினார் உமா.

"ஆமா டி. கோவிலுக்கு பொங்க வைக்க வந்த நேரம், நல்ல செய்தி காதுல விழுந்திருக்கு. உம்பொண்ணு இப்பவாவது இந்த காதல் கீதல்னு சுத்தாம திருந்தி இருக்காளே.. ஒழுங்கா பொற்செல்வன கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கையை வாழ்ந்தா போதும்" என்றவர் கையை மேல் தூக்கி கும்பிட்டவாரு ஏதோ முணுமுணுப்பாக வேண்டினார்.
 
Top Bottom