• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பனி இரவும் கனல் மழையும் - 21

Vishakini

Moderator
Staff member
மழை - 21

"உன் அத்த சொல்றது சரிதான்மா. அம்மா வயசானவங்க அவங்க பேசுறத எதுவும் பெருசா எடுத்துக்காத. எங்களுக்கு அடுத்து இந்த குடும்பத்த வழிநடத்தப் போறது நீங்கதான். இந்த கல்யாணம் வேணும்னா பேசி வச்சு நடக்காததா இருக்கலாம். ஆனா, புருஷன் பொஞ்சாதி பந்தம்ன்றது அவங்க பொறந்ததுமே முடிவாகுறது. நாம என்னதான் முட்டி மோதுனாலும் அதை மாத்த முடியாது. நீங்க ரெண்டு பேரும் தான் இணைன்றது நீங்க பிறக்கும்போதே எழுதி வச்சிருக்கு. அதான் இன்னைக்கு உங்கள சேர்த்தும் வச்சிருக்கு. காலத்துக்கு தகுந்த மாதிரி நாம மாறி தான் ஆகணும். ஆனா, அப்பத்தா வயசானவங்க புரிஞ்சுக்க மாட்டாங்க. அவங்களுக்கு புரிய வைக்கிறதும், புரிய வைக்காததும் உன்னோட விருப்பம். இங்க நீ உன் விருப்பப்படி இருக்கலாம். அவங்க பேச்சை கண்டுக்காம கடந்து போகணும்னு தோணுச்சுன்னா அப்படி செய். இல்ல, அவங்க கூட மல்லுக்கு நின்னு அவங்க பண்றது தப்புன்னு புரிய வைக்கணும்னு தோணுச்சுன்னா அதை செய். எதுவா இருந்தாலும் அது உன்னோட விருப்பம் தான். உங்க குடும்பத்தோட எந்த ஒரு ஒட்டும் உறவும் இல்லாம இருந்திருந்தாலும், உன்ன பத்தி நிறையவே கேள்விப்பட்டிருக்கேன், பார்த்திருக்கேன். அதனால உன் மேல நிறையவே நம்பிக்கையும், மதிப்பும் இருக்கு. அதை கெடுக்குற மாதிரி நீ செய்யமாட்டனு நம்புறேன்" என்றார் தேவராஜ்.

இதைவிட வேறென்ன வேண்டும். காமாட்சியின் வார்த்தைகள் எத்தனை அவளுக்குள் கனலை மூட்டியதோ, அவளை அப்படியே குளிர்வித்துவிட்டனரே இவர்கள் இருவரும்.

"கீதா புள்ளய அறைக்கு அழைச்சிட்டு போ. நான் சமையல் வேலைய பார்க்கிறேன்".

"ஏன்கா நானும் உங்களுக்கு உதவி செய்வேன்ல".

"அதெல்லாம் இருக்கட்டும் கீதா, புள்ள மொத மொத இப்போதான் நம்ம வீட்டுக்கு வந்திருக்கு. எல்லாரும் தனியா விட்டுட்டு போயிட்டா ஒரு மாதிரி இருக்கும். நீ கூட இருந்து பேசிகிட்டு இரு. அதான் கை வேலைக்கு ஆள் இருக்கே நான் பாத்துக்குறேன்" என்ற வள்ளிக்கு தலையசைத்துவிட்டு செந்நிலாவுடன் பொற்செல்வனின் அறைக்குள் சென்றார் கீதா.

இந்த இடமும், சூழலுமே செந்நிலாவிற்கு ஒரு வித சங்கடமாய் தான் இருந்தது.

கீதாவிடம் என்ன பேச என்று தெரியாமல் தயங்கிக் கொண்டு அமர்ந்திருந்தவளின் மனநிலையை உணர்ந்த கீதா, "இங்க பாரு உன் பேரு என்ன மறந்து போச்சு".

"செந்நிலா".

"அழகான பேரு, இங்க பாரு நிலாமா, இந்த இடம், வீடு எல்லாமே உனக்கு புதுசு தான். அதோட எதிர்பாராம நடந்தது. உம்மனசு கடந்து எப்படி அல்லாடும்னு என்னாலயும் புரிஞ்சுக்க முடியுது. என் மாமியார் வேற அந்த பேச்சு பேசிட்டாங்க. நீ ஒன்னும் வருத்தப்படாத, அவங்க வாயே அப்படித்தான். சரியான சூனியம் பிடிச்ச வாய் கண்டமேனிக்கு பேசும். என்கிட்டயும் அப்படித்தான் பேசுவாங்க. ஆனா, நான் வள்ளி அக்கா மாதிரி எல்லாம் முன்ன பேச விட்டுட்டு பின்னாடி மூஞ்சிய திருப்பமாட்டேன். நேருக்கு நேரா மூஞ்சிக்கு முன்னாடி கேட்டு விட்டுடுவேன். அதனாலதான் நான் அவங்களுக்கு ஆகாத மருமக.‌ அத விடு, அவங்க பேசுறத பெருசா எடுத்துக்காத. உன் குடும்பம்னா உன் மாமியார், மாமனார், செல்வா, அப்புறம் உன் நாத்தனா அம்புட்டுதான். அப்பத்தா எல்லாம் வாழ்ந்து முடிச்சவங்க, அவங்க பேசுறத மண்டைக்கு ஏத்திக்கிட்டு நம்ம வாழ்க்கையை ஏன் இன்னும் நொந்துக்கணும்" என்றவரோ அவளின் கையை அழுத்தமாய்ப் பற்றி, "நான் சொல்றது உனக்கு புரியுதா?".

"ம்ம் புரியுது.." என்று அவள் தடுமாறவும், "நான் உனக்கு சின்ன மாமியார் முறைதான். என்னையும் நீ அத்தைனு கூப்பிடலாம்" என்றார் இன்முகமாய்.

"புரியுதுத்த. இருந்தாலும், சட்டுனு ஏத்துக்க முடியல. சின்ன வயசா இருக்கும் போதே நிறைய பேச்சு கேட்டுட்டேன். விவரம் தெரியாத வயசுலருந்தே, என் பாட்டி பண்ண தப்பு புரியாத வயசுலருந்தே இவங்க பேச்ச கேட்டுட்டு இருக்கேன். என் பாட்டி செஞ்சது ரொம்ப பெரிய தப்பு தான். நல்லா இருக்க குடும்பத்துக்குள்ள புகுந்து கெடுக்கணும்னு அவங்க நினைக்கல. அவங்களுக்கே தெரியாம தான் இப்படி நடந்திருக்கு. தெரிஞ்சோ தெரியாமலோ நடந்த விஷயத்துக்கு அவங்களும் பொறுப்பு தான்.

அந்த குற்ற உணர்ச்சியால தான் உண்மை தெரிஞ்ச பிறகு அவங்களும் ஒதுங்கி இருக்க முடிவு பண்ணிட்டாங்க. ஆனாலும், பாக்குற இடம் எல்லாம் அவ்வளவு பேச்சு பேசுறத என்னால தாங்கிக்க முடியல. எனக்கு தெரிஞ்சு எனக்கு எல்லாமே என் பாட்டி தான். எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து அவங்க தான் என்னை வளர்க்குறாங்க. எல்லாருக்கும் அம்மா, அப்பா, கூட பிறந்தவங்கன்னு ஒரு குடும்பம் இருக்கும்.

ஆனா, என்னோட மொத்த குடும்பமும் என் பாட்டி மட்டும்தான். அவங்களுக்கு ஒரு நல்ல கௌரவமான வாழ்க்கைய கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். இவ்வளவு பேசுறவங்க குடும்பத்துக்கிட்டருந்து எந்த ஒரு உதவியும் எதிர்பார்க்க கூடாதுன்னு நினைச்சேன். ஆனா, ஒவ்வொரு முறையும் என் பாட்டி இங்கதான் உதவிக்கு வந்து நின்னாங்க. ஏதாவது பேசி என் வாயையும் அடைச்சிட்டாங்க. நான் எங்க இருந்து தூரமா போகணும்னு நினைச்சேனோ, கடைசியில அங்கேயே வந்து நிக்கிற மாதிரி செஞ்சிடுச்சு இந்த விதி" என எந்த ஒரு ஒளிவு மறைவும், பூசலுமின்றி வெளிப்படையாய் பேசினாள்.

"ஏன்த்தா இப்படி எல்லாம் பேசுற. தப்பா புரிஞ்சுகிட்டு பேசுறவங்க தான் அவங்க தப்ப உணரனும். தப்பே செய்யாம நீங்க ஏன் வருத்தப்படுறீங்க".

"தப்பே இல்லன்னு சொல்ல முடியாதே, என் பாட்டிக்கும் இதுல பங்கிருக்கு தானே. அதுக்காக காலம் முழுக்க பார்க்கிற இடத்துல எல்லாம் அவமானப்படுத்துறதும் சரி கிடையாது தானே".

"நீ சொல்றது சரி தான்தா. ஆனா, இவங்களுக்கெல்லாம் அது புரியாது" என்று கீதா கூறும் பொழுதே இத்தனை நேரமும் அவள் மனம் வருந்தி பேசியது மொத்தத்தையும் கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் பொற்செல்வன் அவளின் உடை பெட்டியோடு.

"என்ன செல்வா நிலா பாட்டி கொடுத்து விட்டாங்களா?".

"ஆமா சித்தி" என்றவனோ நொடிக்கும் குறைவாக செந்நிலாவில் தன் பார்வையை பதித்தான்.

"இங்க என்னமா நடக்குது? தங்கச்சின்னு நான் ஒருத்தி இருக்கிறது உங்க எல்லாருக்குமே மறந்து போயிடுச்சா. யார கேட்டு எனக்கு தெரியாமலே என் அண்ணனுக்கு நீங்க கல்யாணத்த முடிச்சீங்க?" என்று மூக்கை உறிஞ்சியபடியே அழுகையுடன் கேட்டாள் யமுனா.

அவளின் குரலில் அனைவரும் கூடத்திற்கு வர.

"அண்ணா உனக்கு கூட என்னை மறந்து போச்சுல. நேத்து உன் பரிசத்துக்கு வரணும்னு எத்தன ஆசையா கிளம்புனேன் தெரியுமா. அந்த நேரம் பார்த்து என் மாமியார் வழுக்கி விழுந்து ஆஸ்பித்திரிக்கு போற மாதிரி ஆகிப்போச்சு. சரி, பரிசத்துக்கு தான் போக முடியல, கல்யாணத்துக்காவது முன்னமே போயிடனும்னு நினைச்சேன். ஆனா, இப்படி எனக்கு சொல்லாம கொள்ளாம எல்லாரும் சேர்ந்து கல்யாணத்தையே முடிச்சிட்டீங்க இல்ல" என்றாள் கோபமாய்.

"ஏன்டி வந்ததும் வராததுமா இப்படி எண்ணெய் சட்டியில் போட்ட வடகம் மாதிரி பொரியிற. நாங்களே எதிர்பார்க்காம நடந்தது, இதுல மகாராணிக்கு சொல்லலைன்னு கோவமோ".

"போங்க சித்தி, நீங்க என்கிட்ட பேசாதீங்க. நான் தானே நாத்தனார் முடிச்சு போட்டிருக்கணும். என் உரிமைய பறிச்சிட்டிங்க".

தன் தாடையில் கையை வைத்த கீதா, "அடியாத்தே, என் மகளுக்கு எம்புட்டு அறிவுனு பார்த்தீங்களாக்கா, நாத்தனார் முடிய இவ தான் போடணுமாமே.. சரி விடுத்தா, ஏதோ அவசரத்துல நடந்து போச்சு. இப்போ என்ன இதுக்கு அப்புறம் செய்யுற மொத்த சடங்கையும் நீயே முன்னிருந்து நடத்து சரியா" என்றார் அவளின் தாடையைப் பற்றி.

"ம்ம், வேற வழி. அதான் என்னைய ஒதுக்கி வச்சிட்டு கல்யாணத்த முடிச்சிட்டீங்களே. ஆனா, இனி எல்லா சடங்கையும் நான் தான் செய்வேன்" என்று கோபித்துக் கொண்டவள்.

"இந்தா பாருண்ண, எனக்கு தெரியாம கல்யாணம் பண்ணிட்ட. ஆனா, நாளைக்கு எம்புள்ளைக்கு தான் உம்புள்ளய நீ கொடுக்கணும். இப்பவே சொல்லிட்டேன் ஆமா".

"பாருடி, ஆத்தி பொறக்காத புள்ளைக்கு பரிசம் வேறயா" என்று தன்னை பரிகாசம் செய்த தன் சித்தியைப் பார்த்து, "சித்தி" என்று சிணுங்கினாள்.

"முதல்ல புள்ள பொறக்கட்டும் டி. அப்புறமா இதெல்லாம் பேசிக்கலாம்" என்று அனைவரும் சேர்ந்து அவளை சமாதானம் செய்தனர்.

"மதினி நான் தான் உங்க வீட்டுக்காரரோட தங்கச்சி யமுனா" என்று தன்னைத் தானே செந்நிலாவிடம் அறிமுகம் செய்து கொண்டாள்.

அவளின் வெள்ளந்தியான படபட பேச்சும், மனதில் எதையும் மறைக்காத குணமும் செந்நிலாவிற்கு மிகவும் பிடித்து விட்டது. அவளுக்கு பதிலுக்கு மெல்லிய புன்னகையை பரிசளித்தாள்.

"நீங்க வாங்க நாம போய் பேசுவோம். உங்ககிட்ட நிறைய கேட்க வேண்டியதிருக்கு" என்று செந்நிலாவின் கையைப் பிடித்து மீண்டும் அறைக்குள்ளேயே அழைத்துச் சென்றுவிட்டாள் யமுனா.

"பாத்தீங்களாக்கா உங்க பொண்ணுக்கு மூக்கு மேல கோபம் வருது. சொல்லாம கல்யாணம் கட்டிட்டோமாம்" என்று சிரிப்புடன் கூறினார் கீதா.

"நடந்த விஷயம் எல்லாம் அவளுக்கு தெரியாதுல்ல கீதா, நமக்கு மட்டும் இப்படி அவசர கதியில கல்யாணம் கட்டணும்னு அவசியமா.. சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சு. அதெல்லாம் சொன்னா புரிஞ்சுக்குவா".

"எனக்கு தெரியாதாக்கா நம்ம யமுனாவ பத்தி".

********
முகம் சிவக்க கோபத்தோடு வீட்டிற்குள் நுழைந்த பாட்டியின் விழிகளில் வந்து விழுந்தது என்னவோ உமாவின் கணவர் சேகர் தான்.

மூக்கு முட்ட குடித்து விட்டு போதையில் நிதானமின்றி கட்டிலில் புரண்டுக்கொண்டு ஏதோ புலம்பிக் கொண்டிருந்தவரைப் பார்த்ததும் பாட்டியின் ஆத்திரம் பல மடங்காக அதிகரித்தது.

"எடுபட்ட பயலே, உன்னால தான்டே எல்லாம். குடிச்சிட்டுக் கூத்தடிச்சிட்டா கிடக்குத" என்று கோபமாய் திட்டிக் கொண்டே அருகில் சொம்பிலிருந்த தண்ணீரை எடுத்துக்கொண்டு வேகமாய் அறைக்குள் நுழைந்தவர், அவரின் முகத்தில் அப்படியே கொட்டினார்.

அதில் மூச்சுத் திணற எழுந்தவருக்கு நடப்பது பிடிப்படவே இல்லை. அத்தனை நிதானமின்றி இருந்தார்.

குழறியபடி, "யாரது.." என ஏதேதோ பேச.

இவருக்கோ அவர் பேசுவது ஒன்றும் புரியவில்லை.

"நாசமா போனவனே, எங்க குடிய கெடுக்க வந்தவனே, எம்மவ வாழ்க்கையவே இப்படி சீரழிச்சிட்டியேடே.. எடுபட்ட பயலே.. நீ எல்லாம் நல்ல கெதிக்கு போவியா.. அந்த ஆத்தா உனக்கு நிச்சயம் கூலி கொடுப்பா.. எங்கள போட்டு இந்த பாடு படுத்துதியேடே படுபாவிப்பயலே" என வாய்க்கு வந்தபடி எல்லாம் அவருக்கு வசைபாட துவங்கிவிட்டார்.

அவரின் குரலில் அடித்து பிடித்து அறைக்குள் ஓடி வந்தனர் உமாவும், ரதியும்.
 
Top Bottom