• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பனி இரவும் கனல் மழையும் - 24

Vishakini

Moderator
Staff member
மழை - 24

அவளின் விரல்களோடு தன் விரல்களை உறவாடவிட்டவன், "இந்த இடம், மனுஷங்க, சூழல் எல்லாமே உனக்கு ஒரு மாதிரி வித்தியாசமா தான் இருக்கும்னு எனக்கு புரியுது. ஏன்னா, இது நாள் வரைக்கும் நீ பார்த்த உறவு முறை வேற.. ஆனா, இனி அப்படி கிடையாது. இத்தன நாள் உன்கிட்ட உரிமையா பேச நினைச்சது கிடையாது. ரெண்டு குடும்பத்து சண்டையையும் தாண்டி உறவுமுறை இருந்தாலும், உரிமைன்றது எந்த அளவுலன்னு சொல்ல முடியாது இல்லையா. ஆனா, இனி அப்படி கிடையாது. நீ என்னோட மனைவி, இந்த வீட்ல எனக்கு இருக்க எல்லா உரிமையும் உனக்கும் இருக்கு. நீயும் இந்த வீட்ல ஒருத்தி. சோ, அப்பத்தா பேசுற எதையும் மைண்ட்ல ஏத்திக்காத. என்னை பொறுத்த வரைக்கும் நமக்கு முன்ன பின்ன பழக்கம் இல்லன்னாலும், இதுதான் வாழ்க்கைனு ஆன பிறகு வாழ்ந்து பார்த்திடலாமே.. அப்படி என்ன நடந்திட போகுது. தயங்கிகிட்டு சங்கடப்பட்டுக்கிட்டு பழச பத்தி யோசிச்சுக்கிட்டு எதுக்காக நம்ம வாழ்க்கைய நாம தள்ளி போடணும். இது என்னுடைய ஒபினியன் தான் நிலா. உன் மனசுல என்ன தோணுதோ அதை நீ என்கிட்ட தாராளமா சொல்லலாம். இல்ல, பேசி பழகி பார்த்து நம்ம லைஃபை ஸ்டார்ட் பண்ணலாம்னு உனக்கு தோணுச்சுனாலும் நீ அதை என்கிட்ட தாராளமா சொல்லலாம். ஏன்னா, இது நம்ம ரெண்டு பேருக்குமான வாழ்க்கை. நான் மட்டும் தனியா எல்லா முடிவையும் எடுத்துட முடியாது இல்லையா.. இதுல உனக்கும் சம பங்கிருக்கு. நாம ரெண்டு பேரும் சேர்ந்து தான இந்த வாழ்க்கையை வாழ போறோம். இந்த வாழ்க்கையில எந்த ஒரு இடத்துலயும் உன்னுடைய விருப்பத்தையும், விருப்பமின்மையையும் சொல்ல நீ கொஞ்சம் கூட யோசிக்கவே கூடாது. எதுவா இருந்தாலும் ஓப்பனா வெளிப்படையா என்கிட்ட நீ சொல்லலாம்" என்றவனோ கேள்வி தாங்கிய பார்வையை அவளைப் பார்த்தான்.

ஒத்து வருமா வராதா என்ற பேச்சுக்கெல்லாம் இடமே கிடையாது. அதான் திருமணம் முடிந்துவிட்டதே. அவன் கூறுவது போல் வாழ்ந்து தானே ஆக வேண்டும். நினைத்து நினைத்து மருகுவதைவிட துணிந்து இறங்கிவிட்டால் என்ன என்ற எண்ணம் தான் அவளுக்குள்ளும்.

பொற்செல்வனைப் பற்றிய மேலோட்டமான எண்ணங்கள் அவள் மனதில் அத்தனை நல்ல விதமாக தான் இருக்கிறது.

அவன் மேல் விருப்பமின்மையோ, பிடித்தமின்மையோ இருந்தாலாவது சிந்திக்கலாம். அதற்கும் வாய்ப்பில்லையே..

ஆனாலும், தனகாய் கேட்டு நிற்பவனின் வார்த்தை அவளை மிகவும் நெகிழ்ந்து போகச் செய்தது.

அவள் வாய் திறந்து கூறாத சம்மதத்தை அவளின் விழிகளே வெளிப்படுத்தி இருந்தன. அவனுடன் கைகோர்த்து இந்த வாழ்க்கை பயணத்தில் பயணிக்க இப்பொழுது தயாராகிவிட்டாள்.

இத்தனை நாட்களும் அவனின் மனதை அழுத்திய ஏதோ ஒரு உணர்வு நீங்கியதைப் போன்ற ஆசுவாசம் அவனுக்குள்.

செந்நிலாவின் மேல் காதல் என்றெல்லாம் கூறி விட முடியாது. ஆனாலும், ஏதோ ஒரு உணர்வு அவனை வேறு திருமணமே செய்து கொள்ள முடியாத அளவிற்கு முடக்கிப் போட்டிருந்தது. இந்நொடி அவளுடன் திருமணம் முடிந்ததும் எத்தனை இலகுவாய் உணர்கிறான்.

காதலையும் தாண்டிய ஏதோ ஒரு உணர்வு, அவளை உறவாய் அமைத்துக் கொள்ள அவனின் இதயம் துடிக்காவிட்டாலும், அவளையன்றி வேறு யாரையும் உறவாய் அமைத்துக் கொள்ள அவன் இதயம் துடிக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

யோசித்து யோசித்துக் குழம்பி வாழ்க்கையை தாங்களே கடினப்படுத்திக் கொள்வதை விட, அதன் போக்கில் அப்படியே வாழ்ந்துப் பார்க்கலாம் என இருவருமே முடிவு செய்துவிட்டனர்.

எந்த ஒரு எதிர்பார்ப்பும் பெரிய பெரிய கனவுகளும் இன்றி அவர்களின் வாழ்க்கை இன்றே அழகாய் துவங்கியது.

அவனின் விரல்களின் நெருக்கங்கள் கூட இவளுக்குள் மூச்சுக்காற்றுக்கு திணறும் நிலையாகிக் போனது.

அதை உணர்ந்தவன், "சொல்லு நிலா, எதுக்கு இவ்வளவு நர்வஸ். உன்ன மீறி உன்ன நான் ஒன்னும் கடுச்சு தின்னுட போறதில்ல. என்னுடைய விருப்பத்த பத்தி மட்டும் தான் நான் சொன்னேன். அதுக்காக இப்பவே நாம நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. உன்னுடைய விருப்பம் தான், உனக்கு சம்மதம்னாலும் இல்லனாலும் வெளிப்படையா தயங்காம சொல்லலாம்".

அவனின் பேச்சுக்கள் அத்தனை நிதர்சனமாகவும், எதார்த்தமாகவும் இருந்தது. வாழ்க்கையை அதன் போக்கில் எதார்த்தமாய் வாழ அழைக்கிறான். அவனுடன் கைகோர்க்க தயங்குபவளா அவள்.. அவனுக்கு சம்மதமாய் தலையசைத்து விட்டாள்.

என்னதான் வாய்மொழியாக கூறிக் கொள்ளவில்லை என்றாலும், அவளின் மேலிருக்கும் பிடித்தம் அவனுக்குமே இன்னும் சரிவர புரியாமல் இருந்தாலும், மாங்கல்யத்தை அவளுக்கு அணிவித்த நொடி முதல் தன் மனைவி என்ற உரிமையுணர்வு அவளின் மேல் நிறையவே உயிர்ப்பெற்றது.

பிடித்தவள் என்னும் பொழுது கூட கண்ணியம் காத்தவனுக்கு, தன் மனைவி என்னும் உரிமை உணர்வு என்னவோ அவளில் மொத்தமாய் தன் உணர்வையும், உரிமையையும் நிலை நாட்ட தூண்டியது.

வெளியே காமாட்சி பாட்டிக்கு இப்பொழுதுதான் எதிர்பாராத திருமணம் உடனேயேவா இவர்களின் வாழ்க்கை துவங்கி விடப் போகிறது. இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் புரிந்து கொள்ளவே சில காலம் எடுக்கும் என்று அசட்டையாய் தோன்றினாலும், ஒருவித படபடப்போடும் பல வேண்டுதல்களோடும் இவர்களின் வாழ்க்கையை துவங்கிவிட கூடாதே என்று கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருக்க.

அவரின் பேரனோ அழகாய் தன் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தன் மனைவியுடன் கைகோர்த்திருந்தான்.

அவனை விளக்கவும், தங்களின் வாழ்க்கையை தள்ளி வைக்கவும் அவளிடமும் பெரிதாய் எந்த ஒரு காரணமும் இல்லை, ஒவ்வாத தன்மையும் இல்லை. அதிலும், அவன் மேல் அத்தனை நம்பிக்கை மண்டிக் கிடக்கிறதே.

அவளின் தயக்கங்கள், சங்கடங்கள் என ஒவ்வொன்றையும் அவளின் முகம் பார்த்து அறிந்து அவளை தன் வசப்படுத்தினான் பொற்செல்வன்.

மனதளவிலும் யாரின் மீதும் காதல் என்றெல்லாம் அவள் நினைத்ததே கிடையாது. அவள் வேண்டியது கௌரவமான ஒரு வாழ்க்கை. அதை நிச்சயம் பொற்செல்வன் அமைத்துக் கொடுப்பான் என்ற நம்பிக்கையோடும், கணவன் என்ற உரிமையோடும் அவனின் கரம் சேர்ந்தாள் காரிகை.

"நிலா" என்றவனின் குழைய வரும் பிதற்றல்கள் இவளை இன்னுமே சிவக்கச் செய்ய.

அதை ரசித்து தனக்குள் உள்வாங்கிக் கொண்டே அவளையும் உள்வாங்கினான்.

அவளின் மென் உணர்வுகள் அனைத்தையும் மொத்தமாய் படித்தவனுக்கு தீரா இரவாகிப் போனது.

வண்டுகளின் ரீங்கரமாய் இவர்களின் செல்ல கெஞ்சல்களும், கொஞ்சல்களும், சிணுங்கல்களும் என அந்த அறையே கூசி சிலிர்த்து விட்டது. பொற்செல்வனின் இந்த புதிய பரிமாணத்தில்.

நாணம் கொண்டு தலை சாயும் நாணலாய் அவனின் நெஞ்சுக்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவளின் கன்னம் பற்றி முகம் நிமிர்த்தியவன் மூச்சடக்கி அவளின் நெற்றியில் இதழ் பதித்து தங்கள் வாழ்க்கையை இனிதே துவங்கியிருந்தான்.

******
"ஏட்டி யமுனா, மகாராணி இன்னுமா எழும்பல. வாக்கப்பட்டு வந்த வீட்டுல வெரசா எழுந்திரிக்க கூடவா அவ பாட்டி சொல்லிக் கொடுக்கல. போயி கதவ தட்டி ரெண்டு பேரையும் வெரசா எழுப்பி விடு" என்றவருக்கு அத்தனை வயிற்றெரிச்சலாய் இருந்தது.

"மணி எட்டு தானே பாட்டி ஆகுது. அவங்களே வரட்டுமே நான் போய் எப்படி கதவை தட்ட" என்று சங்கடமாய் கேட்டாள் யமுனா.

சரியாய் அந்நேரம் கதவைத் திறந்து கொண்டு செந்நிலா வெளியே வரவும். அவளின் கொலுசொலியில் இவர்களின் கவனம் அவள் புறம் திரும்பியது. இருவரின் பேச்சும் அப்படியே தடைபட்டது.

தலையில் சுற்றப்பட்ட துண்டுடன் வேகமாய் வெளியே வந்தவள், "சாரி, ரொம்ப நேரம் ஆகிடுச்சா" என்றாள் சற்று பதட்டம் கலந்த குரலில்.

அவளின் குரல்களுக்கு எல்லாம் எங்கே காமாட்சி செவி சாய்த்தார். அவளையே குறுகுறுவென உறுத்து விழித்துக் கொண்டிருந்தார்.

"பரவாயில்ல மதினி, நானெல்லாம் கல்யாணமான மறுநாள் வெளியே வரவே பத்து மணி ஆச்சு தெரியுமா" என்று அவளின் காதில் கிசுகிசுப்பாய் கூறி நகைத்தாள்.

அதில் அவளும் மெல்லிய புன்னகையை உதிர்க்க, "என்னை பெயர் சொல்லியே கூப்பிடுங்க, என் பேரு யமுனா" என்றாள் அவளிடம்.

"சரி யமுனா" என்று அவளுக்கு பதில் கூறிவிட்டு அடுப்படியை நோக்கி சென்றனர் பெண்கள் இருவரும்.

கீதா கையில் ஒரு கிண்ணத்துடன் வீட்டிற்குள் நுழைவதையும் ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த காமாட்சி பாட்டிக்கு வாயடைத்துப் போய்விட்டது.

செந்நிலாவின் நடத்தையை வைத்தே அவர்களுக்குள் நேற்று நடந்த விஷயங்களை கணித்துவிட்ட பாட்டிக்கு தான் முகம் விடியவில்லை.

"இந்தாங்கக்கா இனிப்பு செஞ்சேன். அதான் புது மாப்பிள்ளைக்கும், பொண்ணுக்கும் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்" என்று தான் கொண்டு வந்ததை கொடுத்த கீதா, "மதியம் நம்ம வீட்ல தான் மறு வீடு விருந்து ரெடி பண்ண போறோம். புள்ளைங்கள அங்க அழைச்சிட்டு வந்துருங்கக்கா" என்ற தகவலையும் கூறிவிட்டு சென்றார்.

அவரின் வார்த்தையில் வள்ளி சங்கடமாய் செந்நிலாவைப் பார்க்கவும்.

அவளின் முகத்திலோ எந்த ஒரு உணர்வும் பிரதிபலிக்கவில்லை. நிர்மலமாக தான் நின்றாள்.

அறையிலிருந்து வெளியே வந்த பொற்செல்வன், "நிலா, உன் போன் ரிங் ஆகுது பாரு".

"இதோ பாக்குறேன்" என்றவள் மீண்டும் அறைக்குள் செல்ல.

"இன்னைக்கு மறு வீடு வைக்கணும் செல்வா. ஆனா, அவங்க பாட்டி வீட்டுக்கு போறது சரிவருமானு தெரியல. அதான் கீதா அவங்க வீட்ல வச்சுக்கலாம்னு சொன்னா" என்று தயங்கி தயங்கி கூறினார் வள்ளி.

"கல்யாணத்தையே பண்ணியாச்சு, எல்லா சம்பிரதாயமும் வேற நடந்து போச்சு. இப்ப இந்த மறு வீடு தான் ரொம்ப முக்கியம்" என்று தன் முகத்தை திருப்பியவாறு வெற்றிலையை இடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் காமாட்சி.

"நிலாகிட்ட பேசிட்டீங்களாமா?".

"அந்த புள்ள இருக்கும்போது தான் கீதா சொல்லிட்டு போச்சு, அந்த புள்ள முகத்துல எந்த ஒரு விஷயமும் கண்டுபிடிக்க முடியலய்யா. எதுக்கும் நீ போய் ஒரு வார்த்தை கேளு செல்வா".

"சரிமா" என்றவன் அறைக்குள் செல்ல, அங்கே தன் பாட்டியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள் செந்நிலா.

"இன்னைக்கு மறு வீடு சாங்கியம் எல்லாம் செய்யணுமே கண்ணு".

"பாட்டி அதெல்லாம் எதுவும் வேண்டாம். நான் இங்கேயே இருந்துக்கிறேன், அப்பப்போ வந்து உன்ன பார்த்துக்கிறேன் இந்த அழைப்பு, மறு வீடு இதெல்லாம் வேண்டாம் பாட்டி. தேவையில்லாம சங்கடமா போயிடும்".

"நீ அங்க சந்தோஷமா தானே இருக்க கண்ணு" என்று தயங்கி தயங்கி கேட்டவருக்கோ எப்படி வெளிப்படையாய் அவளிடம் கேட்க என தெரியவில்லை.

"அடி யாருடி இவ, நேத்திக்கு சடங்கெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதான்னு கேளு" என்று பக்கத்தில் நின்ற கனகம் செங்கேணியிடம் காய்வதும் இவளுக்கு கேட்க. மெல்லிய வெட்கப் புன்னகை தவழ்ந்தது அவள் இதழில்.

"பாட்டி இங்க எல்லாம் ஓகே தான். நான் பாத்துக்குறேன். நீ உன் உடம்ப பாத்துக்கோ. தனியா வேற இருக்க அங்க நீதான் உன்ன பாத்துக்கணும். நான் கூட பக்கத்துல இல்ல. அப்பப்போ வந்து பார்க்கிறேன். ஏதாவது அவசரம்னா உடனே போன் பண்ணு. எப்படி கேட்கிறது, பேசுறதுன்னு தயங்கிகிட்டு இருக்காத" என்றாள் அதட்டல் போல்.

மேலும், சற்று நேரம் அவரிடம் பேசிவிட்டு அவள் அணைப்பைத் துண்டிக்கவும். அவளின் பின்னே கையைக் கட்டிக் கொண்டு நின்றான் பொற்செல்வன்.
 

Gowri Karthikeyan

Well-known member
இவளோ புரிஞ்சி எல்லாம் செய்யறவன்....இப்ப மறுவீடு மட்டும் போன என்ன ஆக போகுது?????
அவளுக்கும் ஆசை இருக்கும் இல்ல????
 
Top Bottom