• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பனி இரவும் கனல் மழையும் - 27

Vishakini

Moderator
Staff member
மழை - 27

வாசலில் நின்றிருக்கும் தன் மாமியாரை சற்றும் சட்டை செய்யாமல் சமையலறைக்குள் நுழைந்த கீதா, "அக்கா உங்களுக்கு விஷயம் தெரியுமா, பக்கத்து தெரு லட்சுமி இருக்கால. அவளும் அவ மருமகளும் அம்புட்டு ஒத்துமையா இருந்தாய்ங்க. என்னன்னு தெரியல ஒரு வாரமா அவங்க வீட்டுக்குள்ள ஒரே சண்டை சச்சரவு. என்ன, ஏதுன்னு பார்த்தா அவங்க வீட்ல ஒரு கிழவி இருக்கும்ல அவங்க மாமியாரு, சும்மா இல்லாம லட்சுமிக்கு இல்லாததை பொல்லாததை எல்லாம் சொல்லிக் கொடுத்து மாமியாருக்கும் மருமகளுக்கும் நடுவுல சண்டைய மூட்டி விட்டுட்டாங்களாம். மண்டைய போடுற வயசுல எதுக்கு இந்த கிழவிக்கு இந்த தேவையில்லாத வேலையோ" என்று தன் மாமியாரை ஓரப்பார்வைப் பார்த்துக்கொண்டே குத்தலாய் கூறினார்.

அதில், காமாட்சி பாட்டிக்கு பொசபொசவென வர.

"ஏட்டி உனக்கு எம்புட்டு தைரியமிருந்தா ஜாடை பேசுறியோ".

"நான் ஏன் ஜாடை பேசப்போறேன். எனக்கு பேசணும்னா நேருக்கு நேராவே பேசுவேன். நடந்த விஷயத்த சொன்னேன், ஏன் உங்களுக்கு சுட்டுக்கிடுச்சோ" என்று எதுவும் அறியாதது போல் கேட்டவரை முறைத்து விட்டு அங்கிருந்து வேகமாய் சென்று விட்டார் காமாட்சி.

"விடு கீதா, ஏதும் நெனச்சுக்க போறாங்க"

"பின்ன, இப்படி நிலா இல்லாத நேரம் உங்களுக்கு சொல்லிக் கொடுக்குறது எம்புட்டு பெரிய தப்பு. இதுல நெனச்சுப்பாங்களோ, நெனச்சிட்டு போகட்டும் என்ன இப்போ" என்றார் அசட்டையாய்.

*****
கட்டிலில் சாய்ந்த அமர்ந்து நெற்றிலும், பாதத்திலும் தையலத்தை தேய்த்துக் கொண்டிருந்தாள் செந்நிலா.

அப்பொழுதுதான் வேலையை முடிந்து அறைக்குள் வந்த பொற்செல்வன் தன் சட்டையைக் கழட்டி ஹேங்கரில் மாட்டியவாறு, "என்னாச்சு நிலா தலைவலியா?" என்றவாறு அவளுக்கு எதிரே வந்தமர்ந்தான்.

"ம்ம். ஆமா, இன்னைக்கு ஒரு ப்ரொபசர் வரல. கிளாசஸ் நிறைய இருக்கேன்னு எக்ஸ்ட்ரா கிளாஸ் எடுத்துட்டேன். அதான் செம கால் வலி. கூடவே தலைவலி வேற வந்துருச்சு".

அவளுக்கு எதிரே அமர்ந்தவன், அவளின் காலை எடுத்து தன் மடியின் மீது வைத்துக் கொண்டவன் இதமாய் அவளுக்கு பிடித்துவிட்டவாறு, "எதுக்கு இவ்வளவு ஸ்ட்ரெயின் பண்ணிக்கிற நிலா".

"எக்ஸாம் வருதுங்க. அதுக்குள்ள போஷன் கம்ப்ளீட் பண்ணனும்ல. கல்யாண டைம்ல நிறைய பெண்டிங் ஆயிடுச்சு. நம்ம மேல எந்த தப்பும் வந்துடக்கூடாதுல நம்மளால பசங்களுக்கு மார்க் குறைஞ்சதுன்ற பெயரும் வரக்கூடாது அதான்" என்றவள் பேசிக்கொண்டே மெதுவாய் அவனிடமிருந்து தன் காலை உருவ முற்படவும்.

அவனின் பிடி வலுவானதோடு கண்களும் தன் பார்வையை முறைப்பாய் மாற்றியது.

"சரி சரி, உடனே நெத்திக் கண்ண திறந்துடாதீங்க. கால் வலி சரியா போச்சு போதுமா" என்றதும்.

"ஓ" என்றவாறு அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

"உங்க அப்பத்தா மட்டும் இதை பார்த்தாங்கன்னா பாவம், அவங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துரும்" என நகைக்கவும்.

"அப்போ அவங்களுக்கு காட்ட வேண்டாம். இன்னும் கொஞ்ச நாள் இருந்து கொள்ளுப்பேரன், பேத்தியை எல்லாம் பார்க்கட்டும்" என்று கூறிக்கொண்டே அவளின் பாதத்தில் தன் இதழைப் பதித்தவன் குட்டி குட்டி முத்தங்களையும் இட துவங்கினான்.

குறுகுறுப்பில் கால்களை கூசி சிலிர்க்க நகர்த்தியவள், "போதும், இன்னும் சாப்பாட்டு வேலை முடியல. அதுக்குள்ள ஆரம்பிச்சிடாதீங்க" என்றாள் கன்னங்கள் சிவக்க.

"அப்போ முடிஞ்சதும் ஆரம்பிக்கலாம்னு சொல்றியா" என்றான் அவளைப் பார்த்து தன் ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி.

"ஆனா, நீங்க இப்படி எல்லாம் இருப்பீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல தெரியுமா" என்றவளின் கையைப் பிடித்து இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டவன்.

"எப்படி எல்லாம் இருப்பேன்னு நினைச்சு பாக்கல" என்றான் ராகமாய்.

"இதோ இப்படித்தான்" என்றவள் விழிகளால் தங்கள் இருப்பைக் காண்பித்து, "வழியில எங்கயாவது பார்த்தா கூட முகம் பார்த்து பேச மாட்டீங்க. யாரோ போல போயிடுவீங்க. ஆனா, இப்போ இப்படி.." என்றாள் அவனின் தோளில் சாய்ந்து கொண்டே முகத்தை நிமிர்த்தி அவனை பார்த்தவாறு.

கரம் கொண்டு அவளை சுற்றி வளைத்திருந்தவன், "அப்போ எல்லாம் நீ என் பொண்டாட்டி இல்லயே. என்னமோ தெரியல, அப்போ எல்லாம் உன் மேல ஏதோ ஒரு ஃபீலிங்ஸ் இருந்தாலும் ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ற மாதிரியே இருந்துச்சு. எப்ப உனக்கு தாலி கட்டினேனோ, ஏதோ நீ மொத்தமா எனக்கு மட்டும்தான் சொந்தம்ன்ற மாதிரி ஒரு உரிமை. உன் மேல எல்லா உரிமையும் எனக்கு மட்டும் தான்ன்ற மாதிரி என்னமோ ஒரு ஃபீல். கல்யாணத்துக்கு முன்னாடி நான் இப்படி எல்லாம் உன்கிட்ட பேசி இருந்தா உடனே மேடம் பதிலுக்கு பேசி சிரிச்சிருப்பீங்க இல்ல" என்றவாறு அவளின் நெற்றி முட்டியவன்.

"இப்போ சரின்னு மட்டும் சொல்லு எல்லா பொண்ணுங்க கிட்டயும் உன்கிட்ட பேசுற போலவே பேசுறேன்" என்றான் விளையாட்டாய்.

அவனின் தலையில் எக்கி கொட்டு வைத்தவள், "அந்த நினைப்பெல்லாம் வேற இருக்கா தொலைச்சிருவேன்" என்றாள் தன் கண்களை உருட்டி மிரட்டலாய்‌

"டீச்சர் அம்மாவுக்கு கோவம் எல்லாம் வருதே".

"வராதா பின்ன, இப்படி எல்லாம் பேசினா கோபம் வரும் தான். அப்புறம் பனிஷ்மென்ட் பயங்கரமா இருக்கும்".

"பனிஷ்மென்ட் தானே எங்க கொடுக்கலாம் இங்க குடுக்கலாமா" என்று அவன் தன் நெற்றி, கன்னம், தாடை என ஒவ்வொரு இடமாய் கை காண்பித்தான்.

"ஹலோ சார், நான் கொடுக்க போறேன்னு சொன்னது பனிஷ்மென்ட் வேற எதுவும் கிடையாது".

"யார் அப்படி சொன்னது. கிஸ்ஸ கூட பனிஷ்மென்டா நினைச்சு நீ குடு நான் தாராளமா ஏத்துப்பேன். நீ எத்தன கொடுத்தாலும், எவ்வளவு கொடுத்தாலும் வேண்டாம்னு மறுக்காம மொத்தமா வாங்கிப்பேன்" என்றவனின் வார்த்தையில் கிறங்கித்தான் போய் நின்றாள் செந்நிலா.

அதன் பிறகு அவள் கேட்காமலேயே அவளுக்கு பனிஷ்மெண்டை வாரி வழங்கினான். பொற்செல்வன் திகட்ட திகட்ட புகட்டும் காதலில், அவனின் அருகாமையில் சிலிர்த்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.

கதவு தட்டும் ஓசையில் தன்னிலை அடைந்தவர்கள், இரவு உணவுக்காக வள்ளி அழைத்ததும் வெளியே சென்றிருந்தினர்.

எத்தனை மறைக்க முயன்றும் ஒருவித வெட்கச்சிரிப்பு செந்நிலாவின் இதழில் அழையா விருந்தாளியாய் ஆணி அடித்தார் போல் அமர்த்தலாய் அமர்ந்து கொண்டது‌.

காமாட்சி பாட்டியின் விழிகள் அவளின் பொலிவான சிரிப்பில் படிய, பொசபொசவென முகம் சிவக்க அமர்ந்திருந்தவருக்கோ தன் மகனின் முன்பு எதுவும் பேசக்கூட முடியாத நிலை.

வள்ளியும் தன் மருமகளின் முகத்தை வைத்தே அவளின் மனநிலையைக் கண்டு கொண்டவர். எதுவும் கேட்டு அவளை சங்கடப்படுத்தவில்லை.

"அதான் எல்லாருக்கும் பரிமாறியாச்சே அத்த, நீங்களும் உட்காருங்க. நான் தோசை சுட்டு கொண்டு வந்துட்டு அப்படியே நானும் உட்கார்ந்துடுறேன்".

"சரி மா" என்றவர் தன் கணவரும், மகனும் சாப்பிட்டு எழுந்து சென்று அருகில் இருக்கும் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கவும், தான் டைனிங் டேபிளில் அமர்ந்தார் வள்ளி.

செந்நிலாவும் தனக்கான தோசையை ஊற்றி எடுத்துக்கொண்டு அவர் அருகில் வந்து அமர்ந்தவள் பேசிக்கொண்டே உணவை உட்கொண்டாள்.

"அச்சோ என்ன செந்நிலா ஒரு தோசை தான் இருக்கு. உனக்கு எப்படி பத்தும் இரு நான் போய் தோசை ஊத்துறேன்" என்று அவர் எழ முற்படவும்.

அவரின் கையைப் பிடித்த செந்நிலா, "பாதி சாப்பாட்டுல இதுக்காக எழுந்து போவீங்களாத்த. நான் ஊத்திக்குறேன் நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க".

"நீ இப்போதான் உட்கார்ந்த உடனே எழுந்துப்பியா. நான் ஊத்துறேன்னு சொல்றேன்ல நீ சாப்பிடுமா".

"ஆமா, உம்மருமவ பச்ச புள்ள பாரு தொட்டியில போட்டு வாயில பால்புட்டிய வச்சு தாலாட்டு பாடி ஆட்டிவிடு. பசிச்சா போய் ஊத்தி திங்கறா கொஞ்சிக்கிட்டு இருக்கவ. ஏட்டி, வரும்போதே ஆளுக்கு எத்தன தோசை வேணும்னு சரியா பாத்து சுட்டுகிட்டு வந்து உட்கார தெரியாதா.. நீ எல்லாம் என்னத்த டீச்சர் படிப்பு படிச்சியோ.. உனக்கே கணக்கு தெரியல நீ சொல்லிக் கொடுத்து என்னத்த புள்ளைங்க படிக்குதுங்களோ" என்று கிடைத்த சந்தர்ப்பத்தில் சரியாய் அவளுக்கு கொட்டு வைத்தார் பாட்டி.

இவர்களின் பேச்சு வார்த்தையை கவனித்துக் கொண்டே அவ்விடம் வந்த பொற்செல்வன், "என்னாச்சும்மா?".

"இல்லய்யா, நிலா நான் தோசை ஊத்துறேன்னு சொல்லி என்னைய அனுப்பிடுச்சு. இப்ப பார்த்தா தோசை குறையுது அதான் நான் நிலாவுக்கு ஊத்தலாம்னு பாத்தா விட மாட்டேங்குறா".

"இப்ப என்ன தோசை தான என் பொண்டாட்டிக்கு நான் ஊத்தி கொடுக்குறேன். நீங்க சாப்பிடுங்க" என்ற பொற்செல்வனின் வார்த்தையில் வாயைப் பிளந்துக் கொண்டு அவனைப் பார்த்தார் வள்ளி.

கீதா, காமராஜர், ரகு, அனிதா என அனைவரும் அப்பொழுதுதான் வீட்டிற்குள் நுழைந்தவர்களும் இந்த வார்த்தையைக் கேட்டு, "அண்ணா! எங்க செல்வாண்ணாவா இது?" என்று பொற்செல்வனை நன்கு கிண்டல் செய்து விட்டனர் ரகுவும், அனிதாவும்.

"எலேய்! என்ன பேச்சு பேசுத நீயி, நம்ம குடும்பத்து ஆம்பளைங்க யாரும் அடுக்கன பக்கம் கூட எட்டிப் பார்த்தது கிடையாது. உம்பொண்டாட்டிக்காக தோசை ஊத்த போறியோ.. ஏன் அவளுக்கு கை இல்ல பசிச்சா சுட்டு திங்கறா. ஆம்பள பிள்ளையா லட்சணமா இருக்க பாரு, பொண்டாட்டி முந்தானைய பிடிச்சுக்கிட்டே சுத்துறது" என்றார் முணுமுணுப்பாய்.

யாரின் வார்த்தையையும் காதில் வாங்காதவன் செந்நிலாவிற்காக தோசையை ஊற்றிக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான்.

அவளுக்கோ அப்படி ஒரு ஆனந்தம். இவர்களின் குடும்பத்தில் பழக்கம் இல்லாத ஒன்றுதான் இது. ஆண்கள் யாருமே பெரும்பாலும் சமையலறையின் பக்கமே வர மாட்டார்கள்.

அப்படி இருக்கும் பொழுது தனக்காக தன்னவன் தோசை வார்த்துக் கொடுக்கிறான் என்பதை என்னும் பொழுது மகிழாமல் இருக்க முடியுமா என்ன..

"பாருடா அதிசயத்த, நம்ம செல்வாக்கு வட்டமா தோசையெல்லாம் சுட வருது" என்று கீதா வேறு தன் தாடையில் கையை வைத்துக்கொண்டு அவனைக் கிண்டல் செய்தார்.

"சித்தி நீங்களும் சாப்பிடுறீங்களா உட்காருங்க உங்களுக்கும் தோசை ஊத்துறேன்".

"நாங்க எல்லாம் இப்பதான் சாப்பிட்டு வந்தோம். நீங்க உங்க பொஞ்சாதிய கவனிங்க".

"அம்மா உங்க தட்டுலயும் தோசை இல்லயே. இருங்க, உங்களுக்கும் ஒன்னு ஊத்துறேன்" என்று அவன் சமையலறையை நோக்கி செல்ல முற்படவும்.

தண்ணீர் குடிப்பதற்காக அவ்விடம் வந்த தேவராஜ், "இரு செல்வா, எம்பொண்டாட்டிக்கு நான் ஊத்துறேன்".

"என்னாது!" என்ற பாட்டி ஆவென வாயைப் பிளந்து விட்டார் தன்மகன் தேவராஜன் வார்த்தையில்.

அனைவருமே ஒருவித அதிர்ச்சியோடு தான் தேவராஜை பார்த்தனர்.

"இப்போ என்னத்துக்கு எல்லாரும் அப்படி பாக்குறீங்க. அவன் பொண்டாட்டிக்கு அவன் ஊத்தலாம். எம்பொண்டாட்டிக்கு நான் தோசை ஊத்த கூடாதா?" என்றதும் அனைவரின் தலையும் தானாய் சம்மதமாய் ஆடி வைத்தது.

மாற்றி மாற்றி கணவன்கள் மனைவிகளுக்கு தோசையை வார்க்க, அதைப் பார்த்த கீதாவும் ஒரு தட்டுடன் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்து விட்டார்.

தனக்கும் தன் கணவனின் கையால் சுட்ட தோசை வேண்டும் என்று கூறிவிட. காமராஜிற்கு வட்ட வடிவில் வராமல் வட்டத்தைத் தவிர மற்ற அனைத்து வடிவங்களிலும் தோசை வந்து தொலைத்தது. கிண்டலும், கேலியும், சிரிப்பும் என அன்றைய இரவே அத்தனை மகிழ்ச்சியோடு கலகலப்பாய் சென்றது.

செந்நிலாவின் விழிகளோ காதலோடு தன் கணவனை வட்டமடித்தது. என்ன தான் சுற்றி அத்தனை பேர் இருந்தாலும் இருவரும் விழிகளால் மொழி பேசிக் கொண்டிருந்தனர்.
 
Top Bottom