• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பனி இரவும் கனல் மழையும் - 3

நிதனிபிரபு

Administrator
Staff member
மழை - 3


"என்னத்த அப்படியே வாயடைச்சு போய் நிக்கீங்க. பேத்தி பெரிய மனுசி ஆனதும் சந்தோஷத்துல பேச்சு வரலையோ.. டேய் அசோக்கு, அம்மா அப்பா இல்லாத புள்ள டா. நாம தான் எல்லாத்தையும் முன்னாடி இருந்து எடுத்து செய்யணும். நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரிஞ்சுதுல.. பொறவு உன்ன கட்டிக்கப் போறவ தான.. நாம தான் மொறப்படி இது எல்லாத்தையும் செய்யணும் புரியுதா" என்ற லலிதாவை அரண்டுப் பார்த்த செங்கேணி, "இல்ல தாயி, நான் சொல்றேன்னு வெசனப் பட்டுக்காதீங்க. இதெல்லாம் சரிவராது" என்றார் தயக்கத்தோடு.


"சரி வராதா.. என்னத்த சொல்றீங்க? என்ன சரி வராது? என் அண்ணன் மக தான இவ.. இவளுக்கு மொறசெய்ய என் பையன விட வேற யாருக்கு தகுதி இருக்கு. இல்ல, உங்க பொண்ணுக்கு கூட பொறந்த அண்ணன், தம்பினு யாராவது இருக்காங்களா? உங்களுக்கு உங்க பொண்ணு ஒரே பொண்ணு தான.. அப்போ எப்படி பார்த்தாலும், என் பையனுக்கு மட்டும் தான முறை செய்யுற முழு உரிமையும் இருக்கு".


லலிதாவின் குடும்பமே இப்படித்தான். தாய், மகன் என்று யாருமே சரி கிடையாது.


லலிதாவின் கணவர், குடும்பத்தில் என்ன நடக்கிறது என்றெல்லாம் எதைப் பற்றியும் பார்க்க மாட்டார்.


அவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டாம் மனைவியின் வீட்டிலேயே தான் குடியிருப்பார்.


இதனாலேயே அவர்களின் குடும்பத்தில் எப்பொழுதும் சண்டை சச்சரவுக்கு பஞ்சமின்றி இருக்கும்.


லலிதா ஒன்றும் சாதாரண ஆள் கிடையாது. அக்கம் பக்கம் தொடக்கம், அனைவரிடத்திலும் சண்டை தான்.


மகன் ஒருபுறம் ஊதாரித்தனமாக சுற்றுகிறான் என்றால், இவரோ எதைப் பற்றியும் கவலையின்றி எந்த காரணம் கிடைத்தாலும் அக்கம் பக்கத்தில் சண்டையை இழுத்து விட்டு விடுவார்.


செங்கேணி பாட்டிக்கு இவர்களை எல்லாம் கண்டால் ஆரம்பம் முதலே அச்சம் தான். தெரியாத்தனமாக மகளுக்கு லலிதாவின் அண்ணன் பச்சையப்பனை மனம் முடித்து வைத்து விட்டார்.


தெரிந்தவர்கள் மூலம் வந்த சம்பந்தம் தான் அது. செங்கேணிக்கும் வேறு வழியில்லாமல் தான் ஈஸ்வரியை பச்சையப்பனுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்.


செங்கேணி வீரய்யாவின் இரண்டாம் தாரம். இரண்டாம் தாரத்தின் மகள் என்ற காரணத்தினாலேயே ஈஸ்வரிக்கு திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது.


பச்சையப்பனின் குடும்பம் அவர்களாக முன்வந்து விரும்பி ஈஸ்வரியை மணமுடித்துக் கொடுக்க கேட்கவும். செங்கேணியும் வேறு வழி இன்றி ஒப்புக்கொண்டார்.


அந்த சமயம் வீரய்யா உயிருடன் இருக்கவில்லை. எனவே, மகளின் திருமணத்தை எடுத்து செய்யவும் ஆளில்லை. தானே அனைத்தையும் தனித்து செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்ட செங்கேணிக்கு, இதை விட வேறு சம்பந்தம் தன் மகளுக்கு அமையும் என்ற நம்பிக்கையும் இல்லாமல் போய்விட்டது.


பச்சையப்பன் ஒன்றும் லலிதாவை போல் எல்லாம் கிடையாது. இவர்களின் ஊரிலேயே சர்க்கரை ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.


இவர்களின் வீட்டிற்கு வீட்டோடு மாப்பிள்ளையாய் வந்துவிட்டார். செந்நிலாவின் அன்னை ஈஸ்வரியை மணம் முடித்த பிறகு, மிகவும் பொறுப்பானவராக மாறி நல்ல விதமாக தான் மனைவி, குழந்தை என குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார்.


ஆனால், எதிர்பாராத விபத்து அவர்கள் இருவரையும் செந்நிலாவிடமிருந்து முற்றிலுமாக நிரந்தரமாக பிரித்து விட்டது.


ஈஸ்வரியை மணம் முடித்த பிறகு தன் அண்ணன் முற்றிலுமாக மாறிப் போய்விட்டார் என்று லலிதா அவரை குற்றம் சாட்டிக் கொண்டே இருப்பார்.


அவருக்கு ஏனோ ஈஸ்வரியை கண்டாலே ஆகாது. சிறுவயதில் செந்நிலாவின் மீதும் அவருக்கு பாசம் என்றெல்லாம் எதுவும் இருந்தது கிடையாது.


இப்பொழுதும் அவர் செந்நிலாவை தன் மகனுக்கு மணம் முடிக்க நினைக்க இரண்டு காரணங்கள் தான் உள்ளது.


ஒன்று, படிப்பறிவின்றி பல கெட்ட சகவாசங்களுடன், பொறுப்பற்று ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் தன் மகனுக்கு வெளியே தேடினால் பெண் கிடைக்காது.


மற்றொன்று, அவர்கள் இருக்கும் வீடு..


இந்த வீடு மட்டும் தான் வீரய்யா செங்கேணிக்கு என கொடுத்து விட்டுச் சென்ற சொத்து.


எங்கே தன் மருமகன் தங்கையின் பேச்சைக் கேட்டு வீட்டை விற்று தன் மகளை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவானோ என்ற பயத்தில், அதை செங்கேணி தன் பேத்தியின் பெயரில் எழுதி வைத்து விடவும்.


இப்பொழுது அந்த வீட்டிற்காக தான் தன் மகன் அசோக்கை செந்நிலாவிற்கு மணமுடிக்க முன் வந்திருக்கிறார் லலிதா.


வீரய்யா அந்த ஊரிலேயே பெரிய தலைக்கட்டு. சொந்த பந்தங்கள் மிகவும் அதிகம். அதே போல் சொத்துக்களும் மிகவும் அதிகம்.


ஊருக்குள் பெரிய மனிதராக இருப்பவர். அவரின் வயலுக்கு வெளியூரிலிருந்து தாய், தந்தை, சொந்த பந்தம் என யாரும் அற்றவராக வேலைக்கு வந்த செங்கேணியை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.


அதன் விளைவு, பதின் வயதில் இருந்தவரிடம் ஆசை வார்த்தைகள் பேசி அவரை இரண்டாம் தாரமாக மணந்துக் கொண்டார்.


செங்கேணிக்கு அப்பொழுது பெரிதாக சரி, தவறு பற்றி பிரித்தறியும் அறிவெல்லாம் கிடையாது. யாரும் இன்றி இருந்தவருக்கு வீரய்யாவின் ஆசை வார்த்தைகள் கரும்பாய் இனித்துவிட்டது.


ஏற்கனவே, திருமணம் முடிந்தவர் என்பதைக் கூட அறியாமல் அவரை மணந்துக் கொண்டார்.


அவரை மணந்துக் கொண்டு ரகசியமாகவே குடும்பம் நடத்தி வந்த வீரய்யாவுக்கும், செங்கேணிக்கும் ஈஸ்வரி பிறந்த பிறகு தான் செங்கேணிக்குத் தெரியவந்தது வீரய்யாவிற்கு ஏற்கனவே முதல் தாரம் இருக்கும் விஷயம்.


வீரய்யாவின் முதல் மனைவி தான் காமாட்சி. யாருடனும் அனுசரணையாக இருக்க மாட்டார். எதற்கெடுத்தாலும் சிடுசிடுப்பாக தான் நடந்துக் கொள்வார்.


வீரய்யா மற்றும் காமாட்சிக்கு மூன்று பிள்ளைகள். முதல் மகன் தேவராஜ், இரண்டாம் மகன் காமராஜ், மூன்றாவது பெண் பிள்ளை உமா.


இரண்டு ஆண் பிள்ளைகளை காமாட்சி பெற்றெடுத்த பிறகு தான் வீரய்யா செங்கேணியை மணம் முடித்தார். உமாவிற்கும், ஈஸ்வரிக்கும் ஒத்த வயது தான்.


வீரய்யா செங்கேணியை மணம் முடித்த விஷயம் கேள்விப்பட்டதும் காமாட்சி, செங்கேணியின் வீடு தேடி வந்து அனைவரின் முன்பும் அசிங்கமான திட்டித் தீர்த்துவிட்டார்.


அவருக்கு விஷயம் தெரிந்தது முதல் தன்னால் முடிந்த மட்டும் கணவரை செங்கேணியின் வீட்டிற்கு அனுப்புவதையும் நிறுத்திக் கொண்டார்.


அவருக்கு பயந்து வீரய்யாவும் செங்கேணியின் வீட்டிற்கு செல்வதைக் குறைத்துக் கொண்டார். இதில், செங்கேணி மிகவும் மனமுடைந்து போய்விட்டார்.


வீரய்யாவின் ஆசை வார்த்தைகளை எல்லாம் கேட்டு முட்டாள்தனமாக அவரை நம்பிய தன் முட்டாள்தனத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தவருக்கு மிஞ்சியது என்னவோ வருத்தம் மட்டும் தான்.


அவரால் பெரிதாக வேறு என்ன செய்து விட முடியும். தன் வாழ்க்கைக்காக உரிமைப் போராட்டம் நடத்தவெல்லாம் அவருக்கு சற்றும் தெம்பில்லை.


அதிலும், காமாட்சியின் வாய் ஊர் எல்லை வரை நீளும். அவரிடம் வாயைக் கொடுத்துவிட்டால் அவரின் பேச்சுகளை காது கொடுத்து கேட்க முடியாது. நாக்கை தேள் கொடுக்காக்கி நஞ்சை கக்கிவிடுவார்.


அதனாலேயே செங்கேணி வீரய்யாவிடமிருந்து ஒதுங்கிக் கொள்ள துவங்கி விட்டார்.


வீரய்யாவும் இவர்களுக்கு என பெரிதாக எதுவும் செய்தது கிடையாது. அப்படியே அவர் செய்ய நினைத்தாலும், காமாட்சி விட்டது கிடையாது.


அவர் இவர்களுக்காக செய்தது என்றால் ஒன்றே ஒன்று தான். அதுதான் இந்த வீடு..


இருக்க வீடாவது இருக்கின்றதே அதுவே போதும் என்று தனித்து தன் மகளுடன் வாழத் துவங்கி விட்டார் செங்கேணி.


எதற்கும் அவர் வீரய்யாவின் துணையை நாடி நின்றது கிடையாது. இந்நிலையில் தான் ஈஸ்வரி திருமண வயதை அடைந்ததும், வீரய்யா ஒரு நாள் உறக்கத்திலேயே தன் உயிரைத் துறந்திருந்தார்.


அப்பொழுது கூட காமாட்சி இறுதியாக செங்கேணி வீரய்யாவின் முகத்தைக் காண விரும்பியும் பார்க்க அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.


இப்பொழுது எங்கே தான் செய்த முட்டாள் தனத்தினால் தன் பேத்தியின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடுமோ என்று தவித்துப் போய் நிற்கிறார் செங்கேணி.


"என்னத்த நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன். நீங்க பாட்டுக்கு இப்படியே அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல சொல்லிட்டேன். செந்நிலாவ நாளைக்கு கல்யாணம் கட்டிக்க போறது எம்மகன் தான. அவனுக்கு இல்லாத உரிமையா அவ மேல.. டேய், நீ போய் குடிசை கட்ட தேவையான ஏற்பாட்டை எல்லாம் பண்ணுடா.. யார் தடுக்குறாங்கன்னு நான் பாக்குறேன்" என்று தன் மகனை ஏவவும்.


அவனோ வாயெல்லாம் பல்லாக கிளம்பிச் சென்றுவிட்டான்.


"ரெடியா இருங்கத்த, எங்க சொந்தக்காரங்கள எல்லாம் அழைச்சிட்டு வரேன். எம்மருமகளுக்கு என் கையால தலைக்கு தண்ணி ஊத்தி, என் மகன் கையால கட்டுற ஓல குடிசையில தான் உக்காத்தி வைக்க போறோம்" என்று அதிகாரமாக கூறினார் லலிதா.


"அம்மாடி, கொஞ்சம் பொறுமையா பேசுமா. அவளுக்கு ஒன்னுக்கு ரெண்டு தாய் மாமங்க இருக்காங்க. அவங்களுக்கும் பசங்க இருக்காங்க. அவங்களுக்கும் இவளுக்கு முறை செய்ய எல்லா உரிமையும் இருக்கு. இந்த முறைய எல்லாம் அவங்க தான் செய்யணும்னு நாங்க விருப்பப்படுறோம்".


ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து வாயை திறந்து விட்டார் செங்கேணி. இல்லாவிட்டால், தன் பேத்தியின் வாழ்க்கையும் தன்னைப் போன்றும், தன் மகளைப் போன்று ஆகிவிடுமே..


இவர் கூறுவதை கேட்ட லலிதா சத்தமாக நகைத்துக் கொண்டே, "என்னத்த சொல்றீங்க, தாய் மாமாவா.. அந்த உறவெல்லாம் அந்து போயி பல வருஷமாகுதே.. இன்னும் உங்களுக்கு அந்த நெனப்பு வேற இருக்கா. அதுவும், பெரிய வீட்டுக்காரங்க உங்க பேத்திக்கு வந்து சீர் செய்வாங்கன்னு நெனக்கீங்களா.. அதுக்கு அந்த காமாட்சிம்மா ஒத்துக்கிடும்னு நெனக்கீங்களா? அந்த அம்மா காதுல மட்டும் நீங்க சொன்ன வார்த்த விழுந்துச்சு சாமி ஆடிடும் பாத்துக்கிடுங்க" என்று மிரட்டுவது போல கூறினார்.


"அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம்மா. சாயந்திரம் சீர் எடுத்து வந்து நீங்க அவமானப்படக் கூடாதுன்றதுக்காக தான் இப்போவே உங்கிட்ட சொல்லி வைக்கேன்".


"ரொம்ப ஆசைப் படாதீங்க, அதெல்லாம் இந்த சென்மத்துக்கும் நடக்காது. உங்க பேத்தி எம்மவனுக்கு தான். சாயந்திரம் சீர் எடுத்துட்டு வாரேன் ரெடியா இருங்க" என்று அடாவடியாக கூறியவர்.


"தொடப்பக்கட்டைக்கு பட்டுக்குஞ்சம் கேக்குதா?" என்று அவர்களின் காதில் விழும்படியே முணுமுணுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்துச் சென்றார்.


இவர்களின் பேச்சு வார்த்தை எல்லாம் வீட்டிற்குள் இருந்த செந்நிலாவின் காதுகளையும் தெளிவாக சென்றடைந்தது.


ஆனாலும், அவளால் என்ன செய்ய முடியும். அமைதியாக தன் புத்தகத்தை கையில் வைத்துப் படித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். இதை எல்லாம் பெரிதாக அவள் தன் மண்டைக்குள் ஏத்திக்கொள்ள தயாராக இல்லை.


அவளின் எண்ணம் முழுவதும் நன்கு படித்து, நல்ல வேலைக்கு சென்று தன் பாட்டியை தன் சம்பாத்தியத்தில் கௌரவமான ஒரு வாழ்க்கையை வாழ வைக்க வேண்டும் என்பது மட்டும் தான்.


சிறு வயதிலேயே பெரிய கனவுகளை சுமந்துக் கொண்டு அதன் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறாள்.


சிறு பெண் தான் என்றாலுமே, மற்றவர்களின் பேச்சை வைத்தே தன் பாட்டியின் வாழ்க்கையில் நடந்திருக்கும் விஷயம் அவளுக்கும் நன்கு விளங்கியது. ஆனால், அதைப் பற்றி எல்லாம் அவள் எதுவும் அவளின் பாட்டியிடம் விளக்கமாக கேட்டுக் கொண்டது கிடையாது.
 
Last edited:
Top Bottom