• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பனி இரவும் கனல் மழையும் - 30

Vishakini

Moderator
Staff member
மழை - 30

"அடி கூறுகெட்டவளே, செத்த வாய பொத்துறியா. இப்போ உன்னய கட்டி கொடுக்க உன் அம்மாவும் அப்பாவும் எம்புட்டு சேர்த்து வச்சிருக்காங்கன்னு கேளு. ஒத்த பைசாவுக்கு பிரயோசனம் கிடையாது. அதுக்குதேன் தேவா கிட்ட பேசி வச்சிருக்கேன். நக, பணம், சீர்சனத்தி எல்லாம் செஞ்சு எம்மகன் உன்னய எந்த குறையும் இல்லாம கட்டிக் கொடுப்பான். அதுக்குதேன் அவன்கிட்ட போய் நிக்கிறேன்".

அவர் கூறியதை சிந்தித்த இந்திராவும் அதற்கு மேல் எதுவும் கூறாமல், "அதெல்லாம் சரிதான் அம்மாச்சி, அதுக்காக நாளைக்கு அவங்கள அங்க வரவச்சு ஏதாவது தேவையில்லாத பேச்செல்லாம் பேசி அவமானம் ஆகிப்போச்சுன்னா".

"நீங்க ரெண்டு பேரும் செஞ்சிருக்க காரியத்த விடவா அவமானம் ஆகிட போகுது. அந்த பையன் கிட்ட சொல்லி அவங்க குடும்பத்தோட நாளைக்கு வர சொல்லுடி. உனக்கு நகை நட்டு போட்டு கட்டி கொடுக்க போறது உம்மாமன்தேன். இந்த கல்யாணம் வரைக்கும் நாம கொஞ்சம் தணிஞ்சுதேன் போவணும். நமக்கு வேற வழி இல்ல" என்று அவளை அடக்கி விட்டு அங்கிருந்து சென்றார்.

உடனே, இந்திரா அசோக்கிற்கு தொடர்பு கொண்டு தன் பாட்டி கூறியதை அப்படியே கூறவும். அவனுக்கும் சரி எனப்பட்டது. அதிலும், நகை, பணம் என்று வேறு அவள் உளறி வைக்கவும்.

'அப்போ நிறைய கேட்கலாம் போலருக்கே' என்றும் நினைத்துக் கொண்டவன். தன் தாயிடமும் குறிப்பாய் அதைப்பற்றி கூறியே மறுநாள் அழைத்துச் சென்றான்.

யாரோ வரப்போகிறார்கள் என்று எண்ணிய பொற்செல்வனின் குடும்பத்தார் அசோக்கை சற்றும் அங்கே எதிர்பார்க்கவில்லை.

அசோக் தன் தாயுடனும் தன் குடும்பத்தாருடனும் வீட்டிற்குள் நுழைவதை அவர்கள் அதிர்ந்து பார்க்க.

"டேய், உனக்கு இங்க என்ன வேலை?" என்றான் பொற்செல்வன் தன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு.

"நான்தான் இந்திராவோட குழந்தைக்கு அப்பா" என்றதும் அனைவருமே அதிர்ந்து போய் அவனைப் பார்த்தனர்.

சட்டென எகிறிப் பாய்ந்து போய் அவனின் சட்டையின் காலரைப் பற்றி இழுத்த பொற்செல்வன் அவனின் கன்னத்திலேயே இரண்டு அடி போட்டவாறு, "உனக்கு எவ்வளவு தைரியம் இருந்திருந்தா ஒரு பொண்ண காதலிச்சு கர்ப்பம் ஆக்கிட்டு, இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்க மண்டபத்துக்கு வந்து நாங்க காதலிக்கிறோம்னு வேற கதை கட்டிவிட்டிருப்ப" என்று கேட்டு கேட்டு அவனின் வாயின் மேல் மேலும் இரண்டு அடி போட்டான்.

பதறி அவனை நெருங்கிய இந்திரா பொற்செல்வனை விலக்கிவிட்டவாறு, "மாமா என்ன பண்றீங்க நீங்க? அவரை நான் கட்டிக்க போறேன். எல்லார் முன்னாடியும் இப்படி அடிக்கிறீங்க. இப்படி மரியாதை குறைவா நடத்த தான் அவரை கூப்பிட்டீங்களா".

"உன்ன கர்ப்பம் ஆக்கிட்டு அன்னைக்கு கல்யாணத்துல வந்து இவன் எவ்வளவு பிரச்சனை பண்ணான்னு உனக்கு தெரியுமா?".

"எல்லாம் எனக்கு தெரியும். அதுக்கும் நான் தான் காரணம். நான் பிரேக்அப் பண்ணிட்டேன்ற விரக்தியில தான் அவர் இவளை கட்டிக்கலாம்னு நினைச்சிருக்காரு. நான் திரும்ப வருவேன்னு அவருக்கு தெரியாதுல. தெரிஞ்சிருந்தா அவர் நிச்சயம் எனக்காக காத்துக்கிட்டு இருந்திருப்பார்".

அங்கே சுற்றி நின்றிருந்த அனைவருமே அவளை லூசா என்பது போல் தான் பார்த்து வைத்தனர்.

"செல்வா கொஞ்சம் அமைதியா இரு. எதுவா இருந்தாலும் பேசிப்போம். உட்காரு" என்ற தேவராஜன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவன் இருக்கையில் அமர்ந்தான்.

"இங்க பாருங்கய்யா, ஏதோ சின்னஞ்சிறுசுங்க காதலிச்சு வயசு கோளாறுல தெரியாம இப்படி ஒரு தப்ப பண்ணிட்டாங்க. அந்த புள்ளயும் இப்போ வயித்துல புள்ளயோட நிக்குது. அதை அப்படியே அம்போனும் விட்டுட முடியாது. என் பையன் அவளுக்கு வாழ்க்கை கொடுப்பான். ஆனா, எங்களுக்கு சில நிபந்தனைகள் இருக்கு" என்றதும்.

தேவராஜன் புருவம் சுருங்க அவரை 'என்ன' என்பது போல் பார்த்தார்.

"எங்களுக்கு 60 பவுன் நகை பொண்ணுக்கு போடணும். மாப்பிள்ளைக்கு கழுத்துக்கும் கைக்கும் சங்கிலி போடனும், அப்படியே ஒரு கார் வாங்கி கொடுக்கணும். பொண்ணு பேருல ஒரு வீட்டுமனை எழுதி வைக்கணும். அப்புறம் பொறக்க போற பிள்ளைக்கு அஞ்சு பவுன்ல செயின் செஞ்சு போட்டுடுங்க. இப்போதைக்கு அம்புட்டுதேன்" என்று லலிதா நீட்டி முழக்கி கூறி முடிக்கவும்.

இந்திரா கண்கள் மின்ன அவர் கூறியதைக் கேட்டுக்கொண்டே நின்றிருந்தாள்.

காமாட்சி பாட்டிக்கு அவர்கள் கேட்பது சற்று அதிகப்படியாய் தோன்றினாலும், தன் பேத்திக்கு எப்படியாவது செய்ய வைத்து விட வேண்டும் என்ற ஆவல் தான் அவருக்குள்ளம் இருந்தது.

"நல்லா யோசிச்சுக்கிட்டீங்களா வேற எதுவும் வேண்டாமே" என்றார் தேவராஜன் எள்ளலாக.

"அண்ணே, என்னண்ணே பேசுறீங்க நீங்க. அவங்க தான் ஏதோ புத்தி கெட்டு போய் பேசுறாங்கன்னா, நீங்களும் இப்படி கேக்குறீங்க?".

"கொஞ்சம் பொறு ராஜா. பொண்ண கட்டி கொடுக்க போறோம், அவங்க பக்கம் வேற என்ன கேக்குறாங்கன்னு தெரிஞ்சுக்கணும்ல".

"நீங்க எப்படியும் பெரிய இடத்து ஆளுங்க. இதுவே உங்களுக்கு கம்மி தான். இருந்தாலும், எங்களுக்கு இப்போதைக்கு இது போதும். மேற்கொண்டு, பொங்க சீரு, தீபாவளி சீரு எல்லாம் அப்பப்போ சிறப்பா செஞ்சு முடிச்சிட்டா போதும்" என்று தான் கேட்பது அனைத்தையுமே அவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்ற நப்பாசையோடு தன் 32 பற்களையும் காட்டிக்கொண்டே பேசினார் லலிதா.

அங்கே சற்று தள்ளி தான் நின்றிருந்தாள் செந்நிலா.

"நல்லவேளை, இவள கட்டல. இம்புட்டுக்கெல்லாம் இவ தேறமாட்டா" என்று அவளைப் பார்த்து நினைத்துக் கொண்டார் லலிதா.

"ராஜா போலீஸ்க்கு போன் போடு" என்று அசராமல் கூறிய தேவராஜை திடுக்கிட்டு பார்த்த லலிதா, "ஏன், என்னத்துக்கு.. என்னத்துக்கு இப்ப போலீஸ்க்கு" என்றார் வார்த்தைகள் தந்தியடிக்க.

"அப்படி போடுங்க. நான் கூட மாமா வேற ஏதும் வேணுமானு கேட்கவும் ஒரு நிமிஷம் பதறிப் போயிட்டேன். எம்புட்டு பெரிய தப்பு பண்ணி இருக்காங்க. வாய் கூசாம எப்படி பேசுறாங்கன்னு பாத்தீங்களாக்கா" என்று கீதா பொறுக்க மாட்டாமல் வள்ளியிடம் கிசுகிசுக்க.

"எனக்குமே அவங்க இப்படி கேட்டது அதிர்ச்சியா தான் இருக்கு கீதா".

"இங்க பாருமா, உன் பையன் எங்க பொண்ணுடைய வாழ்க்கையவே வீணாக்கி இருக்கான். செஞ்ச தப்புக்கு அவனுக்கு வேற வழியே இல்ல, எங்க பொண்ண கட்டியே ஆகணும். இதுல 60 பவுன் நகை, மாப்பிள்ளைக்கு நகை, வீடு கார்னு எம்புட்டு கேக்குறீங்க. இதுக்கெல்லாம் உங்க பையன் கொஞ்சமும் தகுதியில்ல" என்று முகத்தில் அடித்தார் போல் கூறிவிட்டார் தேவராஜ்.

"ஐயா தேவா! என்ன இருந்தாலும் அவங்க மாப்பிள்ளை வீட்டு ஆளுக. நாம பொண்ண பெத்தவங்க சத்த தணுஞ்சுதேன் போவணும். இப்படி பொசுக்கு பொசுக்குன்னு கோவப்படாதய்யா. அப்புறம் நம்ம பொண்ணு வாழ்க்கை தான் நட்டாத்துல நிக்கும். அவங்க கேக்குறத செஞ்சு கட்டி கொடுத்துடுவோம். அப்புறம் அவ பாடு அவன் பாடு".

"பாத்தீங்களாக்கா இவங்களுக்கு ஏத்தத்த. இது அம்புட்டயும் செஞ்சு அந்த மகாராணிய சீராட்டி பாராட்டி கட்டி கொடுக்க, அவங்க அப்படியே நல்ல முறையில கட்டிக்கிட்டு போறாங்க பாருங்க".

"இவங்க ரெண்டு பேரும் பண்ண தப்புக்கு ஒத்த பைசா கூட இவங்க கல்யாணத்துக்கு நான் செலவு பண்ண மாட்டேன். என் தங்கச்சிக்காக வேணும்னா போய் தொலையுதுன்னு இவ கல்யாணத்த எடுத்து நடத்துறேன். மத்தபடி, நகை, பணம்னு ஒத்த பைசா கூட என்கிட்டருந்து எதிர்பாக்காதீங்க. 60 பவுன் உங்க மாப்பிள்ளையால போட முடியும்னா போட்டு அவன் மகள கட்டி கொடுக்க சொல்லுங்க. கல்யாணமாகி எத்தன வருஷம் ஆகுது, என்னத்த சேர்த்து வச்சிருக்கான். மொத்தத்தையும் அவன் பொண்ணுக்கு போட்டு கட்டி கொடுக்க சொல்லுங்க. ரதிக்கு கூட நான் நகை செஞ்சு போட்டு கட்டி வைக்கிறேன்".

"என்ன தேவா இப்படி பேசுத, அவிங்க கிட்ட எங்கிட்டிருந்து அம்புட்டு பணம் இருக்கு".

"இல்லல்ல. அப்ப நான் சொல்ற மாதிரி கேளுங்க. அடுத்த முகூர்த்தத்துல இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம். எங்களால என்ன செய்ய முடியுமோ, என்ன போட முடியுமோ அதை மட்டும்தான் செய்வோம். மேற்கொண்டு எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு உங்க வாயிலிருந்து ஒத்த வார்த்தை வந்துச்சு அடுத்த நிமிஷம் உங்க பையன் போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார்ந்து கம்பி எண்ணிட்டு இருப்பான் சொல்லிட்டேன்" என்று மிரட்டலாகவே உருமினார் தேவராஜன்.

"இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லங்க. பேசுறதுக்கு வரவச்சுட்டு எங்கள மிரட்டி பாக்குறீங்களா.. நாள பின்ன, உங்க பொண்ணு எங்க வீட்ல தான் வந்து குடும்பம் நடத்தணும். அதை ஞாபகம் வச்சுக்கோங்க".

"வயித்துல புள்ளய வாங்கிக்கிட்டு வர திறமை இருக்க எங்க பொண்ணுக்கு குடும்பம் நடத்த திறமை இல்லாமலா போயிடும். அதெல்லாம் எங்க பொண்ணு பாத்துக்கும். எங்களுக்கு அவ மேல நம்பிக்கை இருக்கு. என்ன இந்திரா நீ பாத்துக்க மாட்ட".

அத்தனை பேரின் மத்தியிலும் காமராஜ் ஏதோ அவளை பெருமை பேசியதை போல் நினைத்துக் கொண்டவள், "அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் மாமா. எனக்கு கல்யாணம் மட்டும் பண்ணி வச்சா போதும். அதுக்கு அப்புறம் என் வாழ்க்கைய நான் பார்த்துப்பேன்" என்று அத்தனைத் திடமாய் தெனாவட்டாய் கூறினாள்.

"லூசு.. லூசு.. எவ்வளவு கஷ்டப்பட்டு பேசிட்டு இருக்காங்க எப்படி உளறி கொட்டுறா" என்று அசோக்கிற்கும் அத்தனை கோபமாய் வந்தது.

ஆனாலும், வாய் திறந்து பதில் பேச முடியவில்லை. பொற்செல்வன் தான் அவனின் வாயை வீங்க வைத்து விட்டானே.. வாய் திறக்க முடியாமல் பயந்து கொண்டு நின்றான்.

அதன்படி அடுத்த முகூர்த்தத்திலேயே இந்திரா மற்றும் அசோக்கின் திருமண தேதியும் முடிவு செய்யப்பட. இனிதே அவர்களின் திருமணமும் தேவராஜன் தலைமையில் அரங்கேறி முடிந்தது.

இடைப்பட்ட நாட்களில் என்ன தான் தன் பாட்டியை செந்நிலா சென்று பார்த்து வந்த வண்ணம் இருந்தாலும், தன் கணவனை அங்கே அழைத்ததே கிடையாது. தன் பாட்டியையும் தங்கள் வீட்டிற்கு அழைத்தது கிடையாது.

இப்படியே நாளொரு வண்ணமாய் சென்று கொண்டிருக்கும் பொழுது தான் அந்த அழைப்பு அவளுக்கு வந்தது.

அவளின் பாட்டி உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாய் அவரின் பக்கத்து வீட்டு கனகவள்ளி செந்நிலாவை தொடர்பு கொண்டு கூறவும். பதறி அடித்து மருத்துவமனையை நோக்கி புறப்பட்டிருந்தாள் செந்நிலா.
 
Top Bottom