• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பனி இரவும் கனல் மழையும் - 31

Vishakini

Moderator
Staff member
மழை - 31

"அத்த பாட்டிக்கு உடம்பு முடியலன்னு பக்கத்து வீட்டுக்காரங்க போன் பண்ணாங்க. நான் போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடறேன்" என்று பதட்டமும் பரிதவிப்புமாய் கண்கள் கலங்க கூறியவளை, "சரிமா, நீ போய்ட்டு வா. நான் வேணும்னா கூட வரவா?" என்றார் வள்ளி.

"இல்லத்த, நான் பாத்துக்குறேன்".

"அம்மா அதான் நான் கூட போறேன்ல நான் பாத்துக்குறேன்மா" என்றான் பொற்செல்வன்.

"ஏய் நில்லுடி! எங்கிட்டு போறவ? உம்பாட்டிக்கு மேலுக்கு சுகமில்லன்னா ரொம்பத்தேன் துடிக்கிற. எம்புள்ள சம்பாத்தியம் ஒன்னும் இப்படி எவ எவளுக்கோ அழிக்கிறதுக்கு கிடையாது. இங்கன கெடக்க பணமெல்லாம் இப்படித்தேன் செலவாகுதோ.. கட்டிக்கிட்டு வந்தது பெரிய வீடு, எங்க வீட்டு காசுலருந்து ஒத்த பைசா அவளுக்கு செலவழிக்க கூடாது. ஆமா, சொல்லிட்டேன்".

"அப்பத்தா என்ன பேசுறீங்க நீங்க?" என்று அதட்டினான் பொற்செல்வன்.

"என்ன செல்வா, இந்த விசயத்துல யாரு என்ன சொன்னாலும் நான் கேக்க மாட்டேன்யா. அவளுக்கு நம்ம வீட்டுலருந்து ஒத்த பைசா செலவழிக்க கூடாது".

"அப்பத்தா, இவ ஒன்னும் யாரோ கிடையாது. இந்த வீட்டோட மருமக. இந்த வீட்ல எனக்கு என்ன உரிமை இருக்கோ அதே உரிமை அவளுக்கும் இருக்கு. என் மாமியார் வீட்டு ஆளுங்களுக்கு செலவு பண்ண எனக்கும் உரிமை இருக்கு. அவங்க ஒன்னும் யாரோ கிடையாது. என் பொண்டாட்டியோட பாட்டி, என்ன பேசுறீங்க நீங்க?" என்று அதட்டினான்.

"நீ என்னத்த வேணாலும் சொல்லிட்டு போ செல்வா. இதுக்கு நான் ஒத்துக்கிடவே மாட்டேன். இவ இந்த வீட்டுக்கு வந்து மருமகளா கெடக்குறதே எனக்கு ஒப்பல. நானும் போய் தொலையுதுன்னு விட்டுட்டேன். அதுக்காக அவ பாட்டிக்கு நீங்க செய்யுறத எல்லாம் என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியாது. என் வாழ்க்கைய பங்கு போட்டவ, அவ இருந்தா எனக்கு என்ன செத்தா எனக்கு என்ன" என்றவரின் வார்த்தையில் செந்நிலாவிற்கோ அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

பேசும் நிலையிலோ, சண்டையிடும் நிலையிலோ அவள் இல்லை. பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்தது முதலே அவளின் இதயம் அப்படி துடித்துக் கொண்டிருக்கிறது.

அவரைப் பார்த்தால் தான் அடங்கும் வேகத்தில் அடித்துக் கொண்டிருக்கிறது. இதில், இவருடன் பொறுமையாய் விவாதிக்கவோ, வாக்குவாதம் செய்யவோ அவளின் மனநிலை இல்லை என்பதை உணர்ந்தவள்.

வேகமாய் தன் அறைக்குள் நுழைந்து கொஞ்சம் பணத்தையும், டெபிட் கார்டையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள்.

காமாட்சியின் முகத்தின் முன்பு அதை நீட்டி, "இந்த வீட்டோட பணத்திலிருந்து ஒரு பைசா கூட என் பாட்டியை குணப்படுத்த எனக்கு தேவையில்ல. இது மொத்தமும் நான் சம்பாதிச்சது. என்னோட சுய சம்பாத்தியம். இதுல யாருக்கும் எந்த பங்கும் கிடையாது. இத வச்சு என் பாட்டிய என்னால காப்பாத்த முடியும். இனி அவங்கள பத்தி ஒரு வார்த்தை பேசாதீங்க" என்று கண்கள் சிவக்க கோபமாய் கூறிவிட்டு விறுவிறுவென வெளியேறிவிட்டாள்.

பொற்செல்வனும் அவளின் பின்னோடு வெளியேற.

இங்கே நடக்கும் பேச்சுவார்த்தையின் சத்தத்திலேயே கீதாவும் அவ்விடம் வந்து சேர்ந்தார்.

"ஏன்த்த வயசாக ஆக உங்களுக்கு அறிவு மங்கி போச்சா என்ன.. இப்படித்தான் நொந்து போய் கிடக்குற புள்ள முன்னாடி பேசுவீங்களா? ஏற்கனவே, பாட்டிக்கு என்னமோ ஏதோனு பதறிக்கிட்டு இருக்கா. இதுல நீங்க வேற இப்படி எல்லாம் பேசி இன்னும் நோக்கடிக்கிறீங்க. ஒரு உயிர் போறது என்ன அம்புட்டு சாதாரண விஷயமா.. வார்த்தைய பார்த்து பேசுங்க. வர வர உங்க பேச்சு வார்த்தையே சரியில்ல" என்று வள்ளியே வாயைத் திறந்து கூறி விடவும்.

காமாட்சி திடுக்கிட்டு விழித்தார் வள்ளியா இது என்பது போல்.

"அப்படி சொல்லுங்கக்கா, அவங்க என்ன பேசினாலும் நீங்க வாய மூடிக்கிட்டு தலையாட்டி பொம்மை மாதிரி அமைதியா இருக்கிறதால தான் இவங்க இஷ்டத்துக்கு ஏச்சு பேச்செல்லாம் இங்க எடுபடுது. எதிர்த்து இப்படி கேட்டா தான் வாயை அடக்குவாங்க. வாங்க நாமளும் போய் ஒரு எட்டு அவ பாட்டிய பார்த்துட்டு வந்துருவோம்".

"அடியேய்! எவளாவது அவள பார்க்க போனீங்க கால ஒட்ட நறுக்கி புடுவேன். எவளும் அதோட இந்த வீட்டு வாசப்படிய மிதிக்கக்கூடாது".

"அத நீங்க சொல்லாதீங்க எங்க புருஷங்க வந்து சொல்லட்டும். வாங்கக்கா, இவங்க கடக்காங்க" என்று வள்ளியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்று விட்டார் கீதா.

தன் பேச்சிற்கான மதிப்பு சரிய ஆயாசமாய் அமர்ந்து விட்டார் காமாட்சி. ஆனாலும், அவரின் மனகொதிப்பு அடங்கிய பாடில்லை. அவளுக்காக இவர்கள் அனைவரும் இப்படி ஓடுவது அவருக்குள் அத்தனை கோபத்தைக் கொடுத்தது.

"வரட்டும் தேவா, இன்னைக்கு பேசிக்கிடுதேன்" என்று பொறுமையவாரே அமர்ந்திருந்தார்.

மருத்துவமனையின் வராண்டாவில் அழுது கொண்டு அமர்ந்திருந்தாள் செந்நிலா. இத்தனை நாட்களில் அவளை இத்தனை உடைந்து போய் யாரும் பார்த்ததே கிடையாது.

இன்று தான் முதல் முறை அவளை இப்படி உடைந்து போய் பார்க்கின்றனர். அனைவருக்குமே அத்தனை வருத்தமாய் இருந்தது.

"இந்தாத்தா இப்ப என்னத்துக்கு அழுவுறவ. அதெல்லாம் உம்பாட்டிக்கு ஒன்னும் ஆகாது. இரும்பு மனுசி, எப்பிடி எழுந்து வர போறாங்கன்னு பாரு. இதுக்கு போய் கண்ணுல தண்ணிய வச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கவ" என்று அவளை சமாதானம் செய்தார் கீதா.

பொற்செல்வன் அவள் அருகில் வரவும், கீதா எழுந்து சற்று தள்ளி நின்றார்.

"நிலா பாட்டிக்கு சரியாகிடும் டா. இப்பதான் டாக்டர பார்த்து பேசிட்டு வரேன். பயப்படுறதுக்கு எதுவுமே இல்லன்னு சொல்லி இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிடுவாங்களாம். பிபி ரைஸ் ஆகி மயக்கம் வந்திருக்கு. வேற ஒன்னும் பிரச்சனை இல்ல அழாதடா" என்றான் அவளின் கையை அழுத்தமாய் பற்றிக் கொண்டு.

எதுவுமே பேசும் நிலையில் அவள் இல்லை. சிறு வயது முதல் அன்னைக்கு அன்னையாய், தந்தைக்கு தந்தையாய் தன்னை பார்த்துக்கொண்ட பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்பதைக் கேட்டவளிற்கு அத்தனை வருத்தமாய் போனது.

வருத்தத்தையும் மீறிய குற்ற உணர்வு. தான் திருமணம் செய்து கொண்டு அவரை விட்டு தனித்து வந்ததால் தான் அவருக்கு இப்படி ஆகிவிட்டதோ என்று தேவையற்ற குற்ற உணர்வு அவளை அரித்துக் கொண்டிருந்தது.

"என்னால தான் பாட்டிக்கு இப்படி ஆயிடுச்சோனு ரொம்ப கஷ்டமா இருக்குங்க" என்றவாறு அவனின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

"என்னடா பேசுற உன்னாலயா.. நீ என்ன பண்ண? நீ தேவையில்லாம யோசிக்கிற டா நிலா".

"இல்லங்க, நான் கல்யாணம் பண்ணிட்டு போனாலும் பாட்டிய என்னோடவே வச்சுப்பேன்னு தான் எப்பவுமே பாட்டி கிட்ட சொல்லிட்டு இருப்பேன். வெளியில கல்யாணம் பேசினப்பவும் அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட பாட்டியும் என்னோட இருப்பாங்கன்னு சொல்லிட்டேன். ஆனா, நம்ம கல்யாணம் நடந்த பிறகு அப்படி செய்ய முடியாதுல்ல. பாட்டிய வர வச்சு அங்க வச்சிருக்கிறது நல்லா இருக்காதுன்னு தான் பாட்டிய தனியா விட்டுட்டு வந்தேன். ஆனா, அதான் பெரிய தப்பு. நான் பாட்டிய அப்படி தனியா விட்டுட்டு வந்திருக்க கூடாது. நான் தனியா விட்டு வந்ததால தான் பாட்டிக்கு இப்படி ஆகிடுச்சு" என்று தேம்பி தேம்பி அழுபவளிடம் என்ன கூறி சமாதானம் செய்வது என்று அவனுக்கு புரியவில்லை.

அவளின் உச்சந்தலையில் அழுத்தமாக தன் கரம் பதித்தவன், "ஓகே ரிலாக்ஸ் எல்லாம் சரியாகிடும்".

சற்று நேரத்தில் செவிலியர் வந்து செங்கேணியை பார்க்கலாம் என்று கூறவும் தான் அவளுக்கு நிம்மதியே பிறந்தது.

வேகமாய் முதல் ஆளாய் அறைக்குள் நுழைந்தவள், "பாட்டி" என்ற கேவலுடன் ஓடிச்சென்று அவரை அணைத்துக் கொண்டாள்.

"இப்ப என்னத்துக்கு இப்படி அழுது மாயுற. பாட்டி மயக்கம் போட்டு விழுந்துட்டான்னு தானே சொன்னேன். ஏதாவது ஆகிப்போச்சுனா சொன்னேன். இப்படி அழுது அழுது அவளையும் பாடாபடுத்திடாத. அவளுக்கு தான் இப்ப எதுவும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்கல்ல" என்று அவளைத் திட்டினார் கனகவள்ளி.

மெதுவாய் செந்நிலாவின் உதவியோடு எழுந்தமர்ந்தார் செங்கேணி.

"எனக்கு ஒன்னும் இல்ல கண்ணு. காலையிலருந்து வயிறு ஒரு மாதிரி இருக்கு பசி இல்லனு சாப்பிடாம விட்டுட்டேன். இந்த பிபி மாத்திரை வேற போட மறந்துட்டேன் போலருக்கு. அதான் தல கிறுகிறுன்னு வந்துருச்சு. இதுக்கு போயா சின்ன பிள்ளையாட்டம் இம்புட்டு அழுவ".

"என்னது பிபி மாத்திரை போட மறந்துட்டியா.. இதெல்லாம் உனக்கு விளையாட்டா போச்சா.. உன்கிட்ட படிச்சு படிச்சு சொல்லி இருக்கேன்ல மறக்காம டெய்லி போடணும்னு".

"ஆமா கண்ணு, ஏதோ மறதியில போடாம விட்டுட்டேன். அது இம்புட்டு பெரிய வேலைய பார்த்து விட்டுடுச்சு. சரி விடு, அதான் எல்லாம் சரியா போச்சுல்ல. இனிமே, ஞாபகமா போட்டுக்குறேன்".

"ம்கூம்.. அதெல்லாம் சரி வராது. உனக்கு உடம்பு சரி ஆகுற வரைக்கும் நான் உன்னோடவே இருக்கேன்" என்றாள் பிடிவாதமாய்.

"என்ன கண்ணு பேசுற நீயி, மாப்பிள்ளைய விட்டுட்டு நீ தனியா என் கூட வந்து இருப்பியா.. அதெல்லாம் சரி வராது. ஒழுங்கா உன் வீட்டுக்கு போ என்னைய நான் பாத்துக்கிடுவேன்".

"நீ பார்த்த லட்சணம் தான் நல்லா தெரியுதே. நீ எதுவும் பேசாத சொல்லிட்டேன். எனக்கு வர கோபத்துக்கு அப்புறம் ஏதாவது பேசிடுவேன். அமைதியா இரு, என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்" என்றாள் அழுத்தமாய்.

"ஆமாங்க வேணாம்னு சொல்லாதீங்க. உங்களுக்கு உடம்பு முடியலன்னு அந்த புள்ள தவிச்சு போச்சு. உங்களுக்கு குணமாகுற வரைக்கும் அது உங்களோடவே இருந்து உங்கள பாக்கட்டும். அந்த புள்ளைக்கும் நிம்மதியா இருக்கும். என்ன செல்வா" என்றார் தேவராஜன்.

"சரிதான் பா, நானும் அப்பப்ப போய் அவள பாத்துப்பேன்".

சற்று நேரத்தில் செவிலியர் பணத்தை கட்ட கூறிவிட்டு செல்லவும், தன் கைபையுடன் சென்றாள் செந்நிலா.

"என்னய்யா இதெல்லாம், அந்த புள்ளைய போய் பணம் கட்ட சொல்லிக்கிட்டு, நீ போய் கட்டிட்டு வா" என்றார் தேவராஜன்.

"இல்லப்பா அவளே பண்ணட்டும். இது அவளோட சம்பாத்தியத்துல அவ பாட்டிக்கு அவ செய்யணும்னு நினைக்கிறா" என்றான் மென்புன்னகையுடன்.

"என்ன பேசுற நீ, என்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சோ அப்புறம் என்ன உன் பணம் என் பணம்னு பிரிச்சு பேசிகிட்டு".

"இது அப்படி இல்லப்பா. அவளோட மரியாதையும், கௌரவமும் இதுல இருக்குனு அவ நம்புறா. அதுவும் சரிதான, கிளம்பும்போதே அப்பத்தா அம்புட்டு பேச்சு பேசிட்டாங்க" என்றவனோ வீட்டில் நடந்தவற்றை தன் தந்தையுடன் பகிர்ந்து கொண்டான்.

"அதனால இந்த விஷயத்துல நிச்சயமா விட்டுக்கொடுக்க மாட்டா, பின் வாங்கவும் மாட்டா. இது வெறும் பணம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் இல்ல. அவளோட அவ பாட்டியோட மரியாதை, கௌரவம் சம்பந்தப்பட்ட விஷயம். அவ சம்பாத்தியத்துல அவ பாட்டிக்கு செய்யணும்னு நினைக்கிறா. சின்ன வயசுலருந்து வளர்த்தவங்க அவ நினைக்கிறதும் சரிதானே. அதோட இதால அவளோட மரியாதை மீளுதுன்னா எனக்குமே சந்தோஷம்தான். நீங்க சொன்ன போல என் பணம், அவ பணம்னு பிரிச்சு நான் பார்க்கல. அவளோட சம்பாத்தியமும் எனக்கு உரிமைப்பட்டது தான. எங்க பணத்திலிருந்து தான் அவ செலவு பண்றா, எனக்கும் அதுல சந்தோஷம்தான்".

அவன் கூற வருவது புரியவும் மெல்லிய புன்னகையோடு அவனின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் தேவராஜன்.

இப்படியே புரிதலோடும் உணர்வுகளின் சங்கமத்தோடும் ஒருவரை ஒருவர் மற்றவருக்கு விளக்காமலேயே புரிந்து கொண்டு தெளிந்த நீரோடையாய் அவர்களின் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர்.

யாருமே அங்கே செங்கேணியை பேசவிடவில்லை. அனைத்து முடிவுகளையும் மலமலவென எடுத்து அவரை டிஸ்டார்ஜ் செய்து வீட்டிற்கும் அழைத்து சென்று விட்டனர்.

அடுத்த ஒரு வாரம் செந்நிலா அவளின் வீட்டில் தான் விடுப்பு எடுத்துக்கொண்டு தன் பாட்டியை கவனித்துக் கொண்டாள்.

பாவம், பொற்செல்வன் தான் அவளின் அருகாமை கிடைக்காமல் அல்லாடிப் போய்விட்டான். அனுதினமும் ஒரு முறையாவது அவளைப் பார்க்க வேண்டி அவளின் வீட்டிற்கு சென்று விடுவான்.

அவன் வரமாட்டான் என்று எண்ணியவளுக்கு முதலில் அவன் வந்து நின்றது அத்தனை அதிர்ச்சி. தங்களின் வீட்டிற்கெல்லாம் அவன் வரமாட்டான் என்று நினைத்தவள் அவனை கூப்பிடவும் இல்லை. யாரையுமே அழைக்கவில்லை.

தான் அழைத்து அவர்கள் மறுக்க முடியாமல் சங்கடமாய் உணர்வார்கள் என்று எண்ணியவள், யாரையும் வீட்டிற்கு வருமாறு அழைக்கவில்லை.

அவளின் மனநிலை அனைவருக்கும் புரிந்ததால் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவும் இல்லை.
 
Top Bottom