• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பரிதியின் பவித்ரமே - 1

நிதனிபிரபு

Administrator
Staff member
பரிதியின் பவித்ரமே -01

அந்த திருமண மண்டபத்தின் அலங்காரம் எல்லாம் ஒவ்வொன்றாய் கலைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நேற்று மதியம் துவங்கிய அலங்காரம் இரவு பெண் வீட்டார் வரும் வரையிலுமே நடந்து கொண்டிருக்க மறுபக்கம் வந்த உறவினர்களுக்கு விருந்து உபசாரம் வேறு நடந்து கொண்டிருந்தது.

"மாப்ள சும்மா தகதகன்னு மின்னுறீரு போங்க"என்று மணமகனுக்கு மாமன் முறையுள்ள ஒருவர் சொல்லிச் செல்ல மணமகன் முகத்தில் பளிச்சென்று ஒரு புன்னகை.


"இந்த பேண்ட் சட்டை எல்லாம் வேணாம் தம்பி வேட்டி கட்டு. அப்போ தான் தனியா தெரிவ"என்று மணமகனின் சித்தப்பா வேஷ்டியை கொடுக்க மறுக்காமல் கட்டிக் கொண்டு திருமண வேலைகளை மேற்பார்வை இட்டான் மணமகன்.

"பொண்ணு வீடு வரும் போது இப்படி அழுக்கு வேட்டியோட நிப்பியாய்யா போயி துணியை மாத்து. அவக கோவிலுக்கு வாரையில நீயும் வந்து நிற்கணும்"என்று அவனின் பெரியம்மா சத்தமிட்டதில் மீண்டும் ஒரு ஆடை மாற்றம்.


"அண்ணே பொண்ணு வந்ததும் நாலு வார்த்தை பேசுற. சும்மா அவங்க பேச விடலை இவங்க விடலைனு காரணம் சொல்லக் கூடாது. அவனவன் நிச்சயம் முடிச்சதுமே சினிமா கோவிலுனு இழுத்துட்டு சுத்துறான் நீ என்னம்மோ இப்படி பயந்துகிட்டு கெடக்கற"மணமகனின் சித்தப்பா மகள் அறிவுரை வழங்க அதற்கும் புன்சிரிப்புடன் தலையாட்டிக் கொண்டான் அவன்.

இருபத்தி ஏழு வயது கட்டிளங்காளை. வீடு நிறைக்க சொந்தங்கள் இருக்க தன் பெற்றோர் பேச்சு மீறாது வளர்ந்தவன். இருபத்தி ஐந்து வயதிலேயே தந்தை அவனுக்கு பெண் பார்க்க,' இப்போது திருமணம் செய்ய வேண்டுமா இன்னும் இரண்டொரு வருடம் போகட்டும்' என்றவனிடம், "இப்பத்திலிருந்து பாத்தா தான் ராசா நல்ல வரனா பாக்க முடியும். பொம்பளைப்பிள்ளை கெடைக்கறதே செரமமா இருக்கு. நாங்க என்ன இன்னைக்கே பொண்ணு பாத்து நாளைக்கே மேடை போட்டு தாலி கட்டுன்னா சொல்லுறோம். அமையும் போது அமையட்டும் யா"என்றிருந்தார் அவனின் அம்மா.


"சரி தான் மா பாருங்க"என்றவன், பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. 'எப்படியும் வீட்டில் பார்க்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்ய போகிறோம். எப்போது பார்த்தால் என்ன?' என்ற எண்ணத்தில் அவனும் அதன் பிறகு மறுத்து பேசவில்லை. இதோ அதோவென பெண் பார்ப்பதிலேயே இரண்டு வருடங்கள் ஓடிப் போக இருபத்தி ஏழில் அவனுக்கு ஏற்ற பெண் என்று அவர்கள் திருப்தி பட்டுக் கொண்ட வகையில் இந்த வரனை பேசி முடித்து சொந்தங்கள் சூழ நிச்சயம் செய்து விட்டு வந்திருக்க, இதோ காலம் யாருக்கும் தேங்கி நிற்காது என்ற ரீதியில் ஓடிப் போக அவனின் திருமண நாளும் வந்துவிட்டது.

அண்ணன் தம்பி என்று இளசுகள் இணைந்து திருமண பேனர் முதற்கொண்டு தயார் செய்து ஊர் முழுக்க ஆங்காங்கே வைத்து விட்டனர்.

பேனரைப் பார்க்கும் போதே அவனுள் ஆயிரம் வெட்க பூ மலர கண்டும் காணாமல் புன்னகை சிந்திக் கொண்டான்.


வீடே திருமண மண்டபம் போல் தான் சொந்தங்களால் நிறைந்திருந்தது.


" இந்நேரம் கெளம்புனா தான் சரியாக இருக்கும் எல்லாம் வண்டியில ஏறுங்க" என்று அவனின் தந்தை அனைவரையும் வேனில் ஏற்றிக் கொண்டு இருந்தார். முகத்தில் மகனின் திருமணம் நடைபெறப் போகும் பூரிப்பு. அதிலும் ஒவ்வொரு சொந்தத்தின் வீட்டிற்கும் உணவருந்த அனுப்பி விட்டு அவர்கள் வைத்து கொடுக்கும் ஆடைகளை விதவிதமாக தினத்திற்கு ஒன்றாய் அணிந்தவனைக் காணத் திகட்டவில்லை பெற்றவருக்கு.

"சம்பூர்ணம் பயலுக்கு தினமும் திஷ்டி சுத்தி போடு. நானே என் மகன் மேல கண்ணு வைக்கிறேன்"என்றவர் "யய்யா பொழுது வரைக்கும் வெளியே போயிட்டு வா. ஆனா பொழுதோட வீடுக்கு வந்து சேரணும்"என்று மகனிடமும் சொல்லிக் கொண்டார்.


"பத்திரிக்கை எல்லாம் வைக்க போனா நேரம் ஆகிடும் ப்பா"என்றவனிடம் "தம்பிக இருக்கானுங்க வைப்பாங்க நீ அலையாதய்யா"என்றிருந்தார்.

எல்லாம் கூடி வந்து இதோ காலையில் திருமணம் என்று அனைவரும் தயாராகி நிற்க யார் யாரோ ஏதேதோ பேசி இறுதியில் மணமகன் வரதட்சணை கேட்கிறார் புகார் தலை தூக்கியது.


"இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம்"என்று மணமகள் நவ்யா விடாப்பிடியாக நின்றாள்.

"ம்மா என்னம்மா அபசகுனமா பேசிட்டு..."என்று பதறிய தந்தையை முறைத்தவள் "இப்ப இந்த கல்யாணம் நடந்தா நான் போலீஸ் ல கம்ப்ளைன்ட் தந்திடுவேன் ப்பா. இதோட விட்டு வாங்க எனக்கு என்ன மாப்பிள்ளை கிடைக்காதா. இப்படி விற்கற மாதிரி பேரம் பேசுறீங்க"என்று கொதித்தாள் மணப்பெண்.


"ஏன் மா பையன் வீட்டில் எதையுமே எதிர்பார்க்கலை‌ நீங்க செய்றதை செய்யின்னு தானே சொன்னாங்க‌. மறைமுகமா எதுவும் கேட்டாங்களா...?"என்று உறவினர் ஒருவர் வினவ


"கேட்டா தானா...?,இதோ அவங்க சொந்தக்காரங்க இவ்வளவு தான் சீரா? இவ்வளவு தான் நகை போடுறீங்களா? ஒரு வண்டி கூட வாங்கலையானு? பேசுறாங்க இதுக்கு மேல நான் அங்கே போய் வாழணுமா??"என்று அவள் குதிக்க


சம்பூர்ணமோ "நாங்க எதுவும் சொல்லலையே மா. நீ எங்க வீட்டில் தானே வாழ போற.. சம்மந்தி சொல்லுங்க"என்று இறைஞ்சுதலாய் கேட்க

"ப்ப்ச் அவரை என்ன கேட்கறது, சரி வராதுன்னா வராது. எனக்கு கல்யாணம் பிடிக்கலை"எனும் போதே மணமகன் இளம்பரிதி உள்ளே வந்தான்.


"முகூர்த்த நேரம் ஆகிடுச்சு. நவ்யா ஏன் இங்கே நிற்கறீங்க ரெடி ஆகலையா?"என்று கேட்டவன் "ம்மா என்னாச்சு? ஏன் எல்லாம் ஒரு மாதிரி இருக்கீங்க?"என்று புரியாமல் கேட்க சம்பூர்ணம் அழத் துவங்கி விட்டார்.

மணப்பெண்ணோ,"இந்த மேரேஜ்ல இஷ்டம் இல்லை நீங்க இப்போ என்னை விடலைனா நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் தருவேன்"என்று மிரட்ட அதிர்ந்து நின்றான் இளம்பரிதி.


"இதென்னம்மா சின்னப் பிள்ளை தனமா பண்ணிட்டு இருக்க... இவ்வளவு தூரம் மண்டபம் வரைக்கும் வந்துட்டு கல்யாணம் வேண்டாம்னா என்ன அர்த்தம்?"என்று அவளை ஆளாளுக்கு சத்தமிட்டு திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைக்கப் பார்க்க, அவளோ பிடித்த பிடிவாதமாய் நின்றாள்.

"வேணாம்னா விட்டுடுங்க ப்பா"என்று முடித்துக் கொண்டான் இளம்பரிதி.

"என்ன தம்பி நீ?"என்றவருக்கு மனதே ஆறவில்லை. அவனுக்குமே மனது தாளவில்லை தான். அதற்காக பிடிக்காத பெண்ணை திருமணம் செய்து என்ன செய்ய... எத்தனை பேசியும் மன்னிப்பு கேட்டும் திருமணம் செய்ய முடியாது என்று மறுப்பவளை கட்டாயமா படுத்த முடியும் அதனால் விட்டு விட்டான். திடீர் மணப்பெண் அமையும் வாய்ப்பும் அவனுக்கு இல்லை.‌ அவன் சொந்தத்தில் பெரிதாக பெண் இல்லை என்று தான் தூரத்து உறவினர் மூலம் வந்த பெண்ணை பேசி முடித்து இருந்தனர். இப்போது அந்த உறவினருக்கும் இது தலையிறக்கம் தான் அவரும் மணப்பெண் வீட்டினரோடு எவ்வளவோ பேசியும் பலனளிக்காது போகவே, "உங்களை பத்தி இங்கே நான் சொல்லி இருக்கவே கூடாது"என்று சொல்லி விட்டு நொந்து கொண்டார்.

இளம்பரிதியிடம் மன்னிப்பு கேட்க அவனோ "விடுங்க மாமா"என்றதோடு இறுகிப் போனான்.


திருமணம் நின்று போனது. பெண் வீட்டார் அனைவரும் கிளம்பி சென்றிருக்க மண்டபத்தில் செய்யப்பட்ட உணவுகளை வந்தவர்களுக்கு போட்டு விட்டு மிச்ச மீதி உணவுகளை எல்லாம் வேறு எங்காவது தர முடியுமா என்று பார்க்க, சமைத்த கேட்டரரே முதியோர் இல்லம் ,குழந்தைகள் இல்லம் என்று கொடுத்து விட ஏற்பாடு செய்து கொடுத்தார்.


திருமணம் ஆகாமலேயே அதற்கான வேலைக்கு வந்தவர்களுக்கு உரிய பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தவன், மண்டப அலங்காரத்தை கலைக்கும் வேலையை மேற்பார்வை செய்து கொண்டு நின்றான். வீட்டிற்கு போக மனதில்லை. தன் பெற்றோரை நேரடியாக நண்பனின் வீட்டிற்கு திருநெல்வேலி அனுப்பி இருந்தான்.


ஊரார் ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் இன்னும் அவர்களை மன வருத்தத்திற்கு ஆளாக்கி விடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக அனுப்பி இருந்தான்.


"யாரும் கேட்டா என்னத்தப்பா சொல்வேன் நானு?"என்று சம்பூர்ணம் அழ

"அண்ணி பேசாம கெளம்புங்க நாங்க இருந்து அதெல்லாம் பாத்துக்கிறோம். இளா நீயும் இதெல்லாம் முடிச்சுட்டு மாமேன் வீட்டுக்கு பொறப்படு. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்"என்று அவனின் சித்தப்பா தனபால் சொல்ல தலையை மட்டும் அசைத்தான்.


அவனின் ஊருக்குள்ளோ அதற்குள் வரதட்சணை அதிகம் கேட்டதால் தான் திருமணம் நின்று போனது என்று கிளப்பி விட்டிருந்தார்கள் திருமணத்திற்கு வந்து சென்றவர்கள்.

தனபால் வந்து கேட்டவர்களிடம் "அந்த பெண் வேற யாரையோ விரும்பி இருக்கும் போல கல்யாணம் வேணாம்னு ஆர்பாட்டம் பண்ணி நிறுத்திடுச்சு அவங்க அம்மா அப்பா பேச்சையே கேட்கலை"என்று சொல்லி இருக்க சிலர் நம்பியும் பலர் நம்பாமலும் கேட்டு விட்டு சென்றனர்.

எல்லாம் முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்த இளம்பரிதியை பெருசுகள் சூழ்ந்து ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் இன்னும் அவனை வருந்த தான் செய்தனர்.


அவனைக் கண்டதும் ஆறுதலும் காணாத பொழுதில் "சம்பூர்ணம் கேட்டு இருக்கும். இவங்க எல்லாம் மறைக்கிறாங்க நெருப்பு இல்லாமல் பொகையுமா...? ஒரு கிளாஸ் சர்க்கரை கடனா குடுத்தாலே கறாரா வாங்குற ஆளு. ஒத்த மகன் கல்யாணம் அதுவும் நல்ல பவுசான அந்தஸ்துல சொத்தும் சொகமுமா இருக்கவனுக்கு கேட்காம இருந்திருக்குமா. எல்லாம் கேட்டு இருப்பாங்க இல்லாட்டி மண்டபம் வரைக்கும் வந்துட்டு கல்யாணம் முடிக்காமல் போவறதுக்கு அந்த புள்ளைக்கு கிறுக்கா புடிச்சு இருக்கு."


"அதானே. அதுவும் பொண்ணே கல்யாணத்தை நிறுத்தி இருக்குன்னா விஷயம் இல்லாம இருக்காது."என்று ஆளாளுக்கு ஒரு கதை பேசினர்.

இதை எல்லாம் கேட்ட பரிதிக்கு மனதே வெறுத்து போனது.

'இப்படி எல்லாம் பேசுவார்களா?' என்று தான் தோன்றியது அவனுக்கு.

'பேசினார்களே அவ்வளவு பேசினார்கள் காவல் துறை வந்து கைது செய்தது பணத்தை கொடுத்து மறைத்து விட்டார்கள்' என்ற அளவிற்கு பேசினார்கள். எத்தனை பேருக்கு விளக்கம் கொடுக்க, இல்லை யாரிடம் சென்று தான் விளக்கமாய் பேச. அவமானமாகவும் ஆயாசமாகவும் உணர்ந்தான் பரிதி.

நவ்யாவின் கைபேசி எண்ணை அழித்து விட்டான் முதல் வேலையாக. பின்னர் நிச்சயத்திற்கு அவர்கள் அளித்த செயின் மோதிரம் இரண்டையும் துணியோடு சேர்த்து திருப்பி அனுப்பி இருந்தான்.

நகையை எடுத்துக் கொண்டவர்கள் துணியை கொண்டு சென்றவரின் கண் முன்னேயே குப்பைத் தொட்டியில் போட்டார்கள் என்று சொல்லி கேட்க, இன்னும் மனது வெறுத்து விண்டு போனது.


ஊரை விட்டு செல்லலாம் என்று முடிவு செய்தவனுக்கு அடுத்த நிமிடமே நான் என்ன தவறு செய்தேன் ஊரை விட்டு செல்வதற்கு என்ற வீம்பு பிறக்க உடனடியாக முடிவை மாற்றிக் கொண்டான்.


அங்கேயே தான் தன் பெற்றோருடன் வசித்து வந்தான்.

காலங்கள் தான் கடந்ததே தவிர அவனுக்கென்று ஒரு திருமண வாழ்க்கை அமையவே இல்லை. ஆரம்பத்தில் ஆறுதலாய் இருந்த சொந்தங்கள் கூட அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு ஒதுங்கிக் கொண்டனர். இவனும் அவர்களை விட்டு ஒதுங்கி இருந்தான். ஏதாவது விசேஷம் என்றால் செல்வதும் தெரியாது அங்கிருந்து வருவதும் தெரியாது அத்தனை சுருக்கமாக நடந்து கொண்டான். அடுத்தடுத்து பெண் தேடினாலும் அவனின் முதல் திருமணம் நின்றதில் தான் வந்து நின்றது அத்தனை பேச்சுக்களும்.


வருடங்கள் பத்து கடந்த நிலையில் அவனது பெற்றோரும் ஒவ்வொருவராய் இயற்கை எய்தி இருக்க தனிமையில் விடப்பட்டான் இளம்பரிதி.

..... தொடரும்.
 
Top Bottom